இலங்கையின் புதிய ஜனாதிபதியாக ஜே.வி.பி./தே.ம.ச. தலைவர் தேர்ந்தெடுக்கப்பட்டார்

இந்த மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கு காணலாம்.

மக்கள் விடுதலை முன்னணியின் (ஜே.வி.பி.) தலைவர் அனுரகுமார திசாநாயக்க, இலங்கையின் புதிய நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியாக நேற்று தெரிவு செய்யப்பட்டமை, 2022 இல் நாடு கடன் தவணை தவறிய பின்னரும் அதைத் தொடர்ந்து முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய இராஜபக்ஷவை தீவை விட்டு வெளியேறி பதவி விலக நிர்ப்பந்தித்த வெகுஜன எழுச்சியின் பின்னரும், நாட்டைப் பாதித்த ஆழமான பொருளாதார, சமூக, அரசியல் நெருக்கடியின் தாக்கத்தின் வெளிப்பாடாகும்.

ஜே.வி.பி. தலைவர் அனுரகுமார திசாநாயக்க, இலங்கை ஜனாதிபதித் தேர்தலில் வெற்றி பெற்ற பின்னர் 22 செப்டம்பர் 2024 அன்று, இலங்கையின் கொழும்பில் தேர்தல் ஆணைய அலுவலகத்திலிருந்து வெளியே வந்தபோது [AP Photo/Eranga Jayawardena]

ஜே.வி.பி. மற்றும் அதன் தேர்தல் முன்னணியான தேசிய மக்கள் சக்தி (தே.ம.ச.), இதற்கு முன்னர் ஜனாதிபதி பதவியை வகித்திருக்கவில்லை, மற்றும் ஜே.வி.பி. ஒரே ஒருமுறை மட்டுமே அரசாங்கத்தின் கனிஷ்ட பங்காளியாக இருந்திருக்கிறது என்ற உண்மை, அரசியல் மாற்றத்தின் அளவை சுட்டிக்காட்டுகிறது. 2019 ஜனாதிபதித் தேர்தலில், திசாநாயக்க 3 வீத வாக்குகளைப் பெற்றிருந்த நிலையில், சனிக்கிழமை தேர்தலில் 42 வீத வாக்குகளைப் பெற்றார்.

முடிவைத் தீர்மானிக்க இரண்டாவது விருப்பத் தேர்வுகளை எண்ணவேண்டி இருந்தமை, சமீபத்திய ஆண்டுகளில் பெரும் பொருளாதார மற்றும் அரசியல் அழுத்தங்களின் கீழ் கொழும்பு அரசியல் ஸ்தாபகத்தின் சிதைவை அடிக்கோடிட்டுக் காட்டுகிறது. 1948 இல் உத்தியோகபூர்வ சுதந்திரம் பெற்றதிலிருந்து இலங்கையை ஆண்ட ஐக்கிய தேசியக் கட்சி, ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி ஆகிய இரண்டும் அவற்றின் கடந்த கால வடிவத்தில் இல்லை.

இராஜபக்ஷவுக்குப் பதிலாக பாராளுமன்றத்தால் ஜனநாயக விரோதமாக பதவியில் அமர்த்தப்பட்ட முந்தைய ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, பிளவுபட்ட ஐக்கிய தேசியக் கட்சிக்கு தலைமை தாங்குகிறார். 2020 இல் ஒரு குழு ஐக்கிய தேசியக் கட்சியில் இருந்து பிரிந்து சென்று ஐக்கிய மக்கள் சக்தியை உருவாக்கியது. சனிக்கிழமை, விக்கிரமசிங்க வெறும் 17 சதவீத வாக்குகளைப் பெற்ற அதேவேளை, ஐக்கிய மக்கள் சக்தி தலைவரும் வேட்பாளருமான சஜித் பிரேமதாச 33 சதவீத வாக்குகளைப் பெற்றுள்ளார்.

சர்வதேச நாணய நிதியம் (IMF) கட்டளையிட்டுள்ள கொடூரமான சிக்கன நடவடிக்கைகளை திணிப்பதில் கருவியாக இருந்த விக்கிரமசிங்க, ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியில் இருந்து பிரிந்து அமைக்கப்பட்ட ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் (ஸ்ரீ.ல.பொ.ஜ.மு) ஆதரவுடன் ஆட்சி செய்து வந்தார். சனிக்கிழமையன்று ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் வாக்குகள் பிளவுபட்டன. சிலர் விக்கிரமசிங்கவை ஆதரித்தனர். மற்றவர்கள் வெறும் 2.6 சதவீத வாக்குகளைப் பெற்ற அதன் வேட்பாளர் நாமல் இராஜபக்ஷவை ஆதரித்தனர்.

ஜே.வி.பி./தேசிய மக்கள் சக்திக்கான வாக்குகளில் வியத்தகு அதிகரிப்பானது ஒன்றோடொன்று தொடர்புடைய இரு நிகழ்ச்சிப்போக்குகளின் விளைவாகும் —  ஒருபுறம் தொடர்ந்து மோசமாகி வரும் பொருளாதார, சமூக நெருக்கடியின் மீதான வெகுஜனங்களின் பரந்த தட்டினரின் வெறுப்பினதும் கோபத்தினதும் விளைவாகும்; மறுபுறம் 2022 எழுச்சியின் எந்தவொரு மறுமலர்ச்சியும் புரட்சிகரப் பாதையில் செல்வதைத் தடுப்பதற்கான வழிமுறையாக, ஆளும் வர்க்கத்தின் பிரிவுகள் ஜே.வி.பி./தேசிய மக்கள் சக்திக்கு கொடுத்த குறிப்பிடத்தக்க ஆதரவின் பெறுபேறாகும்.

விக்கிரமசிங்க, இராஜபக்ஷ, பிரேமதாசா போன்ற பிரமுகர்களும் குடும்பங்களும் நீண்டகாலமாக மேலாதிக்கம் செலுத்திவந்த அரசியல் ஸ்தாபகத்திற்கு எதிரான வெகுஜன எதிர்ப்பை, ஜே.வி.பி. மற்றும் திசாநாயக்கவால் சுரண்டிக்கொள்ள முடிந்ததுடன், ஒரு தீவிர மாற்றீடாக காட்டிக்கொண்டு, மக்களின் துன்பங்களை போக்குவதாக பொய் வாக்குறுதிகளை வழங்கி அவர்கள் தேர்தலில் வாக்குகளை வென்றனர். ஜே.வி.பி., முதலாளித்துவத்தின் பூகோள நெருக்கடியினால் மில்லியன் கணக்கானவர்கள் எதிர்கொள்ளும் அவலத்தின் மூல காரணத்தை மூடி மறைப்பதற்காக, முந்தைய அரசாங்கங்களின் பேராசை மற்றும் ஊழலை அதன் தேர்தல் வாய்ச்சவடாலில் கண்டித்தது.

ஊடகங்களில் அடிக்கடி 'மார்க்சிஸ்ட்' அல்லது 'இடதுசாரி' என்று குறிப்பிடப்பட்டாலும், ஜே.வி.பி. நீண்ட காலத்திற்கு முன்பே அதன் சோசலிச பாசாங்குகளையும் வாய்ச்சவடால்களையும் கைவிட்டு விட்டது. மாவோவாதம், காஸ்ட்ரோவாதம் மற்றும் சிங்கள ஜனரஞ்சகவாதத்தின் கலவையின் அடிப்படையில் 1966 இல் உருவாக்கப்பட்ட ஜே.வி.பி., கிராமப்புற சிங்கள இளைஞர்களின் இரண்டு பேரழிவுகரமான எழுச்சிகளை வழிநடத்தியது. இதன் விளைவாக பல்லாயிரக்கணக்கானோர் படுகொலை செய்யப்பட்டனர். அதன் பின்னர் அது பாராளுமன்றத்தில் ஆசனங்களையும் அரசியல் ஸ்தாபகத்தில் ஒரு இடத்தையும் பெறுவதன் பேரில், ஆயுதங்களைக் கைவிட்ட போதிலும், சந்தேகத்திற்கு இடமின்றி ஒரு நிச்சயமான தீவிரவாத ஆரவாரத்தை தக்க வைத்துக் கொண்டுள்ளது.

ஊழல் மற்றும் ஆளும் உயரடுக்கிற்கான சலுகைகளை ஒழிப்பதன் மூலம் பொருளாதாரத்தை மீளக் கட்டியெழுப்புவதற்கும், மக்களின் வாழ்க்கை நிலைமைகளை உயர்த்துவதற்கும் திசாநாயக்க கொடுத்துள்ள வாக்குறுதிகளின் அடிப்படையே பொய்யாகும். ஜே.வி.பி./தேசிய மக்கள் சக்தி, 3 பில்லியன் அமெரிக்க டாலர் பிணை எடுப்பு கடனுக்கு ஈடாக சர்வதேச நாணய நிதியத்தின் திட்ட நிரலை அமுல்படுத்துவதாக வலியுறுத்தியுள்ளது. இதன் அர்த்தம், அரசுக்குச் சொந்தமான நிறுவனங்களை நெருப்பு வேகத்தில் விற்றுத் தள்ளுவது, அரை மில்லியன் அரசு தொழில்களை அழிப்பது, சுகாதாரம் மற்றும் கல்வி போன்ற அத்தியாவசிய சேவைகளை ஆழமாக வெட்டிக் குறைப்பது மற்றும் விலை மானியங்கள் அகற்றப்படும் நிலையில் பணவீக்கம் தொடர்வதுமாகும்.

திசாநாயக்க, கடனுக்கான நிபந்தனைகள் குறித்து மீண்டும் பேச்சுவார்த்தை நடத்தப் போவதாக அறிவித்த போதிலும், மாற்றங்களுக்கு இடமில்லை என்பதை சர்வதேச நாணய நிதியம் ஏற்கனவே தெளிவுபடுத்தியுள்ளது. உண்மையில், சர்வதேச நாணய நிதிய தூதுக் குழு அடுத்த இரண்டு வாரங்களில் கொழும்பு திரும்பும். கடந்த மாதம், தூதுக் குழுவின் தலைவர் பீட்டர் ப்ரூயர், 'இலங்கையை கத்தி முனையில் இருந்து மீட்கும் நடவடிக்கை ஒரு தீர்க்கமான கட்டத்தில் உள்ளதுடன்' 'பொருளாதாரத்தை ஒரு உறுதியான பாதையில் வைப்பதற்கு… அனைத்து வேலைத்திட்ட அர்ப்பணிப்புகளையும் சரியான நேரத்தில் செயல்படுத்துவது மிகவும் முக்கியமானதாகும்' என்று வெளிப்படையாகக் கூறினார்.

உழைக்கும் மக்களுக்கு சமூக முன்னேற்றத்தை உறுதியளிக்கும் அதேவேளை, ஜே.வி.பி. ஆளும் வர்க்கத்தின் நலன்களுக்காக செயல்படும் என்று உறுதியளித்து வருகிறது. செப்டம்பர் 4 அன்று தேசிய மக்கள் சக்தியின் வர்த்தக மன்றத்தால் கூட்டப்பட்ட தொழிலதிபர்கள் மற்றும் வணிகர்களின் கூட்டத்தில் உரையாற்றிய திசாநாயக்க, தனது அரசாங்கத்தின் கீழ், உள்ளூர் மற்றும் வெளிநாட்டு முதலீட்டாளர்களின் இலாப நலன்களை முழுமையாகப் பாதுகாப்பதாக உறுதியளித்துடன், தேசிய மக்கள் சக்தி/ஜே.வி.பி. அரசாங்கம், சர்வதேச நாணய நிதிய வேலைத்திட்டத்தை நிராகரிக்காது என அவர்களுக்கு வாக்குறுதியளித்தார்.

ஜே.வி.பி.க்கு ஆளும் வர்க்கத்தின் சில பிரிவுகளின் ஆதரவு உள்ளது என்பதற்கான மற்றொரு அடையாளமாக, வெளியேறும் ஜனாதிபதி விக்கிரமசிங்க, திசாநாயக்கவை வாழ்த்தினார். திசாநாயக்கவை 'எனது ஜனாதிபதி' என்று சுட்டிக்காட்டிய விக்கிரமசிங்க, அவர் “இலங்கையை தொடர்ச்சியாக வளர்ச்சி மற்றும் ஸ்திரத்தன்மை பாதையில் முன்நகர்த்துவார்” என்ற 'நம்பிக்கை' தனக்கு இருப்பதாக அறிவித்தார். தேர்தல் பிரச்சாரத்தின் போது, தேசிய மக்கள் சக்தி தலைமையிலான அரசாங்கம், பொருளாதாரத்தை சீர்குலைத்துவிடும் என்று விக்கிரமசிங்க எச்சரித்த போதிலும், அதன் பின்னர் அவர் திசாநாயக்கவை வெளிப்படையாக அங்கீகரித்திருப்பது, சர்வதேச நிதி மூலதனத்தின் கோரிக்கைகளுடன் முரண்படும் எந்தவொரு தேர்தல் வாக்குறுதிகளையும் ஜே.வி.பி. அரசாங்கம் விரைவில் கைவிட்டுவிடும் என்பதை ஒப்புக்கொள்வதாகும்.

அதே நேரம், நீண்ட காலத்திற்கு முன்பே அதன் 'ஏகாதிபத்திய-எதிர்ப்பு' வாய்வீச்சைக் கைவிட்ட ஜே.வி.பி./தேசிய மக்கள் சக்தி, சீனாவிற்கு எதிரான அமெரிக்கத் தலைமையிலான மோதல் மற்றும் போர் உந்துதலில் தீவை ஒருங்கிணைப்பதைத் தொடரும். திசாநாயக்க அமெரிக்கத் தூதுவர் ஜூலி சாங்கை பல தடவைகள் சந்தித்துள்ளார். ஜூலி சாங், 2022 ஆம் ஆண்டு எழுச்சியின் மத்தியில் ஜே.வி.பி. அலுவலகங்களுக்குச் சென்று ஒரு விடயத்தை குறிப்பிட்டார். அமெரிக்க நலன்களுக்கு ஆதரவு கிடைக்கும் என்று வெளிப்படையாக உறுதிப்படுத்திய சாங், ஜே.வி.பி. பொதுமக்கள் மத்தியில் எதிரொலிக்கும் 'ஒரு குறிப்பிடத்தக்க கட்சி' என்று அறிவித்தார்.

ஜே.வி.பி.யின் வெளியுறவுக் கொள்கையின் மற்றொரு அடையாளமாக, வலதுசாரி இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியும் திசாநாயக்கவை வாழ்த்தினார், இலங்கையின் மூலோபாய முக்கியத்துவத்தை வலியுறுத்தினார் மோடி, தீவுடனான ஒத்துழைப்பை வலுப்படுத்த எதிர்பார்த்திருப்பதாக அறிவித்தார். தேர்தலுக்கு முன்னதாக, சீனாவிற்கு எதிரான அமெரிக்காவின் போர் உந்துதலில் ஒரு முக்கிய மூலோபாய பங்காளியான இந்தியாவிற்கு விஜயம் செய்த திசாநாயக்க, ஜே.வி.பி. ஒன்றாகப் பயணிக்கின்றது என்பதை புது டெல்லிக்கு உறுதிப்படுத்தினார்.

ஞாயிற்றுக்கிழமை மாலை நாட்டு மக்களுக்கு ஆற்றிய உரையில், ஜே.வி.பி.யின் வணிக சார்பு மற்றும் ஏகாதிபத்திய சார்பு நோக்குநிலையையும் அதன் முதலாளித்துவ சார்பு கொள்கைகளுக்கு எதிரான எந்தவொரு எதிர்ப்பையும் சட்டவிரோதமாக்குவதையும் மூடிமறைக்க, தேசிய ஐக்கியத்திற்கு திசாநாயக்க அழைப்பு விடுத்தார். 'எனக்கு வாக்களித்த மற்றும் வாக்களிக்காத அனைவருக்கும் - இந்த நாட்டை முன்னோக்கி கொண்டு செல்லும் பொறுப்பு எங்களுக்கு உள்ளது,' என்று அவர் அறிவித்தார்.

குறிப்பிடத்தக்க வகையில், தீவின் தமிழ் மற்றும் முஸ்லிம் சிறுபான்மையினர் ஜே.வி.பி./தேசிய மக்கள் சக்தியை ஆழமான சந்தேகம் மற்றும் வெளிப்படையான குரோதத்துடன் பார்த்தனர். ஜே.வி.பி. சிங்கள பேரினவாதத்தில் மூழ்கியுள்ளதுடன் பிரிவினைவாத தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு எதிரான அழிவுகரமான 26 ஆண்டுகால இனவாதப் போரின் தீவிர ஆதரவாளராக இருந்தது. 2009 போரின் இறுதி மாதங்களில் பல்லாயிரக்கணக்கான தமிழ் பொதுமக்கள் கொல்லப்பட்டது உட்பட இராணுவத்தின் போர்க்குற்றங்களை அது நியாயப்படுத்தியது. தீவின் வடக்கு மற்றும் கிழக்கில் தமிழர்கள் பெரும்பான்மையாக உள்ள பகுதிகளில் 10 சதவிகிதம் அல்லது அதற்கும் குறைவான வாக்குகளையே திசாநாயக்க பெற்றார்.

மேலும், தீவின் மற்ற பகுதிகளில் ஜே.வி.பி./தேசிய மக்கள் சக்திக்கான பரவலான ஆதரவு, வாழ்க்கை நிலைமைகள் மோசமடையும் போது திசாநாயக்கவின் வாக்குறுதிகள் பொய்களின் பொதி என்பதை உழைக்கும் மக்கள் உணர்ந்துகொள்ளும் நேரம் விரைவில் ஆவியாகிவிடும். ஜே.வி.பி./தேசிய மக்கள் சக்தி, விக்கிரமசிங்கவைப் போலவே, வேலைநிறுத்தங்கள் மற்றும் எதிர்ப்புக்கள் தவிர்க்க முடியாது மீண்டும் தலைதூக்கும் போது அதை நசுக்க பொலிஸ்-அரசு நடவடிக்கைகளை மேற்கொள்ளும் என்று சோசலிச சமத்துவக் கட்சி எச்சரித்துள்ளது. தேசிய மக்கள் சக்தி, தனது அரசாங்கத்தின் கீழ் அடக்குமுறை நடவடிக்கைகளுக்குத் தயாராகும் வகையில், ஓய்வுபெற்ற இராணுவ மற்றும் பொலிஸ் அதிகாரிகளின் கூட்டுக்களை உருவாக்கி வருகிறது.

1980களின் பிற்பகுதியில், இந்திய-இலங்கை ஒப்பந்தத்திற்கு எதிரான அதன் பிற்போக்கு தேசியவாத பிரச்சாரத்தை தூக்கிப்பிடிக்க, நூற்றுக்கணக்கான அரசியல் எதிரிகள், தொழிற்சங்கவாதிகள் மற்றும் தொழிலாளர்களை ஜே.வி.பி. படுகொலை செய்ததை தொழிலாளர்கள் மற்றும் இளைஞர்கள் நினைவுகூர வேண்டும். 'இந்திய ஏகாதிபத்தியத்தை' கண்டிக்கும் அடிப்படையில் இந்திய-இலங்கை ஒப்பந்தத்தை ஜே.வி.பி. எதிர்த்தது. அது இப்போது அதை கைவிட்டவிட்டது. எவ்வாறாயினும், தனது அரசாங்கத்தின் கொள்கைகளுக்கு எதிரான எந்தவொரு வெகுஜன இயக்கத்தையும் பிளவுபடுத்துவதற்கும் சிதைப்பதற்கும், ஜே.வி.பி.யின் அரசியல் மூலத்தில் ஆழமாகப் பதிந்துள்ள தமிழர்-விரோத பேரினவாதத்தை நாடுவதற்கு திசாநாயக்க தயங்கமாட்டார்.

தான் பதவியேற்கத் தயாராகும் போது, திசாநாயக்க தான் “மக்கள் ஆணையுடன்' ஒரு அரசாங்கத்தை அமைக்க விரும்புவதால், விரைவில் பாராளுமன்றத்தைக் கலைத்து, பாராளுமன்றத் தேர்தலை நடத்தப் போவதாகச் சுட்டிக்காட்டினார். தற்போது, 225 ஆசனங்களைக் கொண்ட பாராளுமன்றத்தில் ஜே.வி.பி./தேசிய மக்கள் சக்தி, மூன்று ஆசனங்களை மட்டுமே பெற்றுள்ளது. சர்வதேச நாணய நிதியத்தின் சிக்கன செயற்பட்டியலை ஈவிரக்கமின்றி அமுல்படுத்துவதற்கு முன்னர், தனது நிலையை வலுப்படுத்த ஒரு முன்கூட்டிய தேர்தலை திசாநாயக்க தெளிவாக விரும்புகிறார்.

திசாநாயக்க தேர்வு செய்யப்பட்டமை, தீவு ஒரு பாரிய அரசியல் ஸ்திரமின்மையில் இருப்பதை எடுத்துக்காட்டுகிறது. 2022 எழுச்சியில் எழுப்பப்பட்ட பிரச்சினைகள் எதுவும் தீர்க்கப்படவில்லை, அல்லது ஜே.வி.பி தலைமையிலான அரசாங்கத்தின் கீழ் அவற்றை தீர்க்க முடியாது. உண்மையில், சர்வதேச நாணய நிதிய சிக்கனக் கொள்கைகளுக்கு எதிரான வேலைநிறுத்தங்கள் மற்றும் எதிர்ப்புக்களில் வெகுஜனக் கோபம் மீண்டும் மீண்டும் பெருகியுள்ளது. எதிர்ப்பை கட்டுப்படுத்துவதிலும் அடக்குவதிலும் முக்கிய பங்கு வகிக்கின்ற ஜே.வி.பி. மற்றும் அதன் தொழிற்சங்கங்களின் வகிபாகம், சந்தேகத்திற்கு இடமின்றி ஆளும் வர்க்கம் திசாநாயக்க பக்கம் திரும்பியதற்கான ஒரு காரணம் ஆகும்.

எவ்வாறாயினும், மில்லியன் கணக்கான உழைக்கும் மக்கள் இராஜபக்ஷ அரசாங்கத்தை மீண்டும் மீண்டும் எதிர்த்த 2022ஆம் ஆண்டைப் போலவே, வெகுஜனங்கள் வெகு தாமதமின்றி விரைவில் திசாநாயக்க அரசாங்கத்துடன் மோதலுக்கு வருவார்கள். ஒரு உண்மையான புரட்சிகர சோசலிச மற்றும் சர்வதேச வேலைத்திட்டத்தின் அடிப்படையில் தொழிலாள வர்க்கத்தை வரவிருக்கும் வர்க்கப் போர்களுக்குத் தயார்செய்வதன் பேரில், சோசலிச சமத்துவக் கட்சி தனது வேட்பாளரான பாணி விஜேசிறிவர்தனவை ஜனாதிபதித் தேர்தலில் நிறுத்தியது.

விஜேசிறிவர்தன, தொழிலாளர்கள் மற்றும் இளைஞர்களின் அவசரத் தேவைகள் அல்லது வளர்ந்து வரும் உலகப் போரின் ஆபத்துகள் எதுவும் முதலாளித்துவ கட்டமைப்பிற்குள் அல்லது பாராளுமன்றத்தின் மூலம் தீர்க்கப்பட முடியாது என்று அவர்களை எச்சரித்ததோடு, தொழிலாள வர்க்கத்திற்கான ஒரு மூலோபாயத்தை விரிவுபடுத்தினார். அவர் அனைத்து வகையான தேசியவாதம் மற்றும் இனவாதத்தையும் உறுதியாக நிராகரித்ததோடு, சோசலிசத்திற்காகப் போராடுவதற்கு இலங்கையிலும் தெற்காசியா முழுவதிலும் சர்வதேச அளவிலும் தொழிலாள வர்க்கத்தின் ஒரு சுயாதீனமான ஐக்கியப்பட்ட இயக்கத்தை கட்டியெழுப்ப வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தினார்.

சோசலிச சமத்துவக் கட்சி ஒவ்வொரு தொழிற்சாலையிலும், வேலைத் தளத்திலும், பெருந்தோட்டங்களிலும், சுற்றுப்புறங்களிலும் மற்றும் கிராமப்புற ஏழைகள் மத்தியிலும் அனைத்து முதலாளித்துவக் கட்சிகள் மற்றும் அவற்றின் தொழிற்சங்கங்களில் இருந்து சுயாதீனமான, தொழிலாளர்களின் நடவடிக்கைக் குழுக்களைக் கட்டியெழுப்ப அழைப்பு விடுக்கின்றது. சோசலிச சமத்துவக் கட்சி இந்த நடவடிக்கைக் குழுக்களின் பிரதிநிதிகளை அடிப்படையாகக் கொண்ட ஜனநாயகத்திற்கும் சோசலிசத்திற்குமான இலங்கை தொழிலாளர்களினதும் கிராமப்புற வெகுஜனங்களினதும் மாநாட்டை பரிந்துரைக்கிறது. இது தொழிலாள வர்க்கத்தின் ஒரு சுயாதீனமான அரசியல் இயக்கத்தை அபிவிருத்தி செய்து, கிராமப்புற ஏழைகளையும் அணிதிரட்டிக்கொண்டு, முதலாளித்துவ ஆட்சியைத் தூக்கியெறிந்து, சோசலிசக் கொள்கைகளைச் செயல்படுத்த தொழிலாளர்கள் மற்றும் விவசாயிகளின் அரசாங்கத்தை நிறுவுவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.

38 ஜனாதிபதி வேட்பாளர்கள் போட்டியிட்ட களத்தில், விஜேசிறிவர்தன 4,410 வாக்குகளைப் பெற்றார். வாக்காளர்கள் பிரதான வேட்பாளர்களையும், பல்வேறு போலி-இடது அமைப்புகளின் வேட்பாளர்களையும் நிராகரித்தே சோசலிச சமத்துவக் கட்சிக்கு வாக்களிக்க முடிவெடுத்துள்ளனர் என்பதே உண்மை. தொழிலாளர்களும் இளைஞர்களும் கட்சியின் சோசலிச மற்றும் சர்வதேச முன்னோக்கின் மீதான ஈர்ப்பின் அடிப்படையில் வர்க்க உணர்வுடன் இந்த முடிவை எடுத்துள்ளனர். எவ்வாறாயினும், அந்த வாக்காளர்கள் ஒவ்வொருவரும் மற்றவர்களும், தற்போதைய அரசியல் நெருக்கடியின் அளவை தீவிரமாகப் பரிசீலிப்பதும், உழைக்கும் மக்கள் எதிர்கொள்ளும் பேரழிவுகளுக்கு சோசலிச தீர்வு காண்பதற்காகப் போராடுவதற்கான வழிமுறையாக, நடவடிக்கைக் குழுக்களைக் கட்டியெழுப்புவதற்கும் கட்சியில் இணைவதற்கும் சோசலிச சமத்துவக் கட்சி விடுத்த அழைப்பை ஏற்றுக்கொள்வதும் இப்போது அவசியமானதாகும்.

Loading