லெபனானில் நடந்து வரும் காட்டுமிராண்டித்தனமான விமான குண்டுவீச்சுக்கு மத்தியில் இஸ்ரேல் தரைப்படை நடவடிக்கைகளைத் தொடங்கவுள்ளது

மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம். 

திங்கட்கிழமை மாலை, லெபனானுக்குள் இஸ்ரேலின் ஒரு பெரிய தரைப்படை ஊடுருவல் நெருங்கி வருவதாகத் தோன்றியது, ஏனெனில் தனித்துவமான சிறப்பு நடவடிக்கைகள் ஏற்கனவே நடைபெற்று வருவதாக செய்திகள் வெளியாகின. தீவிரமடைந்து வரும் பிராந்திய அளவிலான போரில் அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் முக்கிய பங்களிப்பை வெளிப்படுத்தும் வகையில், அமெரிக்க வெளியுறவுத்துறை செய்தித் தொடர்பாளர் மாத்யூ மில்லர், வாஷிங்டன் இஸ்ரேலிய இராணுவத்துடன் அதன் படையெடுப்பு குறித்து “தொடர்ச்சியான உரையாடலில்” இருப்பதாகத் தெரிவித்தார். அதே வேளையில், பொது ஒளிபரப்பு நிறுவனமான கான், ஈரானின் தாக்குதலை எவ்வாறு கையாள்வது என்பது குறித்து இஸ்ரேலுக்கும் அமெரிக்காவுக்கும் இடையே “தீவிர ஒருங்கிணைப்பு” நடைபெறுவதாகக் குறிப்பிட்டது.

செவ்வாய்க்கிழமை, அக்டோபர் 1, 2024 அன்று லெபனானின் தெற்கு புறநகர்ப் பகுதியான பெய்ரூட்டில் இஸ்ரேலிய வான்வழித் தாக்குதலில் இருந்து புகை எழுகிறது. [AP Photo/Hussein Malla]

திங்கள் மாலை ரொய்ட்டர்ஸ் செய்தி நிறுவனம் தெரிவித்ததன்படி, லெபனான் இராணுவப் பிரிவுகள் லெபனான்-இஸ்ரேல் எல்லையிலுள்ள தங்கள் நிலைகளை விட்டு வெளியேறி, லெபனான் எல்லைக்குள் 5 கிலோமீட்டர் தூரம் பின்வாங்கியதைக் காண முடிந்தது. இஸ்ரேல் பாதுகாப்புப் படைகள் (IDF) எல்லையோரத்தில் உள்ள பல வடக்கு சமூகங்களை உள்ளடக்கிய ஒரு “மூடப்பட்ட இராணுவ மண்டலத்தை” அறிவித்தது, இப்பகுதிக்குள் நுழைவது தடைசெய்யப்பட்டுள்ளதை வலியுறுத்தியது. டைம்ஸ் ஆஃப் இஸ்ரேல் பத்திரிகையிடம் ஒரு அதிகாரி, இந்த நடவடிக்கையின் ஒரு நோக்கம் எல்லையோரத்தில் உள்ள ஹிஸ்புல்லா நிலைகளை அழிப்பது என்று தெரிவித்தார். திங்கள் மாலை நடைபெற்ற பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவின் பாதுகாப்பு அமைச்சரவைக் கூட்டம் இந்த நடவடிக்கையை முன்னெடுக்க முடிவு செய்தது.

எல்லையில் பல இடங்களை குறிவைத்து கடும் ஷெல் மற்றும் வான்வழித் தாக்குதல்கள் நடத்தப்பட்டன. இஸ்ரேலிய பாதுகாப்புப் படை பெய்ரூட்டின் தெற்கு புறநகர் மற்றும் மரபார்ந்த ஹிஸ்புல்லா கோட்டையான டாஹியேவில் வசிப்பவர்களை தங்கள் வீடுகளை விட்டு வெளியயேறுமாறு உத்தரவிட்டது. செவ்வாய்க்கிழமை நள்ளிரவுக்குப் பின்னர் குறைந்தது எட்டு தாக்குதல்கள் நடந்தபோது பெரிய குண்டுவெடிப்புகள் கேட்டன என்று லெபனான் செய்தி நிறுவனமான என்என்ஏ தெரிவித்துள்ளது, இதில் பல குடியிருப்பு கட்டிடங்கள் அழிக்கப்பட்டன.

தெற்கு லெபனான் மீதான படையெடுப்பு ஒரு வார இறுதியில் சியோனிச ஆட்சியின் கட்டுப்பாடற்ற வன்முறையை தொடர்ந்து வந்துள்ளது. இதில் நாடு முழுவதும் விமானத் தாக்குதல்கள் மூலம் நூற்றுக்கணக்கான குடிமக்கள் படுகொலை செய்யப்பட்டதும் அடங்கும். ஹிஸ்புல்லா தலைவர் ஹசன் நஸ்ரல்லா வெள்ளியன்று இலக்கு வைத்து படுகொலை செய்யப்பட்டதில் கிட்டத்தட்ட 300 குடிமக்கள் உயிரிழந்தனர்; பெய்ரூட்டின் தெற்கு புறநகர்ப் பகுதியில் ஆறு பல மாடிக் கட்டிடங்கள் தரைமட்டமாயின. திங்கட்கிழமை வரையிலான 24 மணி நேரத்தில், இஸ்ரேலிய தாக்குதல்களால் 136 பேர் கொல்லப்பட்டதாக கூறப்படுகிறது. ஞாயிறு இரவு மத்திய பெய்ரூட்டில் நடந்த முதல் தாக்குதலை உள்ளடக்கிய தீவிர குண்டுவீச்சு கிட்டத்தட்ட 100,000 மக்களை அண்டை நாடான சிரியாவிற்கு ஓடச் செய்துள்ளது. அங்கு அமெரிக்க ஏகாதிபத்தியத்தால் ஒரு தசாப்தத்திற்கும் மேலாக தூண்டிவிடப்பட்ட சகோதரத்துவ மோதல் நடந்து கொண்டிருக்கிறது.

ஞாயிறன்று இஸ்ரேல் அதன் எல்லையில் இருந்து சுமார் 2,000 கிலோமீட்டர் தொலைவில் யேமனில் உள்ள ஹொடெய்டா மற்றும் ராஸ் இசா துறைமுகங்களையும் தாக்கியது. எண்ணெய் இறக்குமதிக்கு ஹவுத்தி கிளர்ச்சியாளர்கள் பயன்படுத்தும் மின் உற்பத்தி நிலையங்கள் மற்றும் வசதிகளை குறிவைத்து நடத்தப்பட்ட இந்த தாக்குதல்களில் 6 பேர் கொல்லப்பட்டனர் மற்றும் 57 பேர் காயமடைந்தனர்.

ஹிஸ்புல்லா தொடர்ந்து வடக்கு இஸ்ரேலுக்குள் ராக்கெட்டுகளை ஏவி வந்தாலும், கடந்த இரண்டு வாரங்களாக நடைபெற்ற தொடர் தாக்குதல்கள் அதன் திறன்களை கடுமையாக பாதித்துள்ளதாகத் தெரிகிறது. பிரஸ்ஸல்ஸை தளமாகக் கொண்ட இராணுவ ஆய்வாளர் எலிஜா மாக்னியர் அல் ஜசீராவிடம் கூறுகையில், இஸ்ரேல் குறைந்தது 3,000 முதல் 3,500 ஹிஸ்புல்லா ஏவுகணை அலகுகளைத் தாக்கியுள்ளதாகத் தெரிவித்தார். “ஆயிரக்கணக்கான ஹிஸ்புல்லா உறுப்பினர்கள் தங்கள் கைகளை அல்லது பார்வையை இழந்துள்ளனர், அவர்கள் சிரியா மற்றும் ஈரானில் உள்ள மருத்துவமனைகளுக்கு அனுப்பப்பட்டுள்ளனர். எனவே, இந்தப் போராளிகள் இனி களத்திலிருந்து வெளியேற்றப்பட்டுள்ளனர், எதிர்காலத்தில் நடக்கக்கூடிய எந்தப் போரிலும் பங்கேற்க முடியாது” என்று அவர் மேலும் கூறினார். செப்டம்பர் 17 அன்று நூற்றுக்கணக்கான தொடர்பு சாதனங்கள் வெடித்த இஸ்ரேலின் பயங்கரவாதத் தாக்குதலின் விளைவுகளை இது குறிக்கிறது. நஸ்ரல்லாவைத் தவிர, பல உயர்மட்ட ஹிஸ்புல்லா தளபதிகளும் கொல்லப்பட்டுள்ளனர்.

இத்தாக்குதலின் பொறுப்பற்ற தன்மையின் அடையாளமாக, காஸாவில் பாலஸ்தீனியர்கள் படுகொலை செய்யப்படுவது போலவே, ஞாயிறு வரை இரு நாட்கள் குண்டுவீச்சில் 14 லெபனிய துணை மருத்துவர்கள் கொல்லப்பட்டனர். திங்களன்று சுகாதார அமைச்சரகம் புதுப்பிக்கப்பட்ட விமானத் தாக்குதல்களில் மேலும் ஆறு துணை மருத்துவர்கள் இறந்துவிட்டதாக அறிவித்தது.

ஒரு பத்திரிகையாளர் கூட்டத்தில் தரைப்படை ஆக்கிரமிப்பு பற்றிய செய்திகள் பற்றி கேட்கப்பட்டபோது, போரின் பெரும் விரிவாக்கத்தில் அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் நெருக்கமான ஈடுபாட்டை மில்லர் உறுதிப்படுத்தினார். “அவர்கள் பல நடவடிக்கைகள் குறித்து எங்களுக்குத் தெரிவித்துள்ளனர்” என்று மில்லர் இஸ்ரேலைக் குறிப்பிட்டு கூறினார். “இந்த நேரத்தில், அவை எல்லைக்கு அருகிலுள்ள ஹிஸ்புல்லா உள்கட்டமைப்பை மையமாகக் கொண்ட மட்டுப்படுத்தப்பட்ட நடவடிக்கைகள் என்று அவர்கள் எங்களிடம் கூறியுள்ளனர், ஆனால் நாங்கள் அதைப் பற்றி தொடர்ச்சியான உரையாடல்களில் இருக்கிறோம்.” மூச்சடைக்க வைக்கும் சிடுமூஞ்சித்தனத்துடன், “இராணுவ அழுத்தம் சில சமயங்களில் இராஜதந்திரத்தை செயல்படுத்த முடியும்,” என்பதையும் அவர் சேர்த்துக் கொண்டார்.

அன்றைய நாளின் முற்பகுதியில், அமெரிக்க வெளியுறவுச் செயலாளர் ஆண்டனி பிளிங்கன், வெகுஜனப் படுகொலையில் களிப்படைந்த சமீபத்திய அமெரிக்க அதிகாரியாக, நஸ்ரல்லாவின் படுகொலையைப் போற்றினார். ஹிஸ்புல்லா தலைவர் ஒரு “கொடூரமான பயங்கரவாதி” என்றும், “அவர் இல்லாமல் பிராந்தியமும் உலகமும் பாதுகாப்பாக உள்ளன” என்றும் அவர் கூறினார்.

“வரையறுக்கப்பட்ட” நடவடிக்கை குறித்த போலியான பொது அறிக்கைகளின் பின்னணியில், இஸ்ரேலின் தீவிர வலதுசாரி ஆட்சி, 2006ஆம் ஆண்டு லெபனான் மீதான ஒரு மாத கால போரின்போது தான் அடைந்த பின்னடைவுக்குப் பழிவாங்கும் வகையில் ஒரு பெரும் தாக்குதலைத் தெளிவாகத் தொடங்கியுள்ளது. அப்போது, இஸ்ரேல் பாதுகாப்புப் படையின் படையெடுப்புக்கு எதிராக ஹிஸ்புல்லா பரந்த மக்கள் ஆதரவைத் திரட்டியிருந்தது. 2006 போரை முடிவுக்குக் கொண்டுவந்த போர் நிறுத்த ஒப்பந்தத்தைக் கண்காணிக்கும் பொறுப்பு வகித்த, லெபனானில் உள்ள 10,000 படைகளைக் கொண்ட ஐ.நா. இடைக்கால படை (UNIFIL), போரின் தீவிரம் காரணமாக இனி ரோந்துப் பணிகளை மேற்கொள்ள இயலாத நிலையில் உள்ளதாக ஐக்கிய நாடுகள் சபை உறுதிப்படுத்தியுள்ளது.

வடக்கு இஸ்ரேலில் துருப்புக்களிடம் உரையாற்றும்போது, பாலஸ்தீனியர்களுக்கு எதிரான இஸ்ரேலின் இனப்படுகொலை தொடங்கியபோது காஸா குடிமக்களை “மனித மிருகங்கள்” என்று கொடூரமாக வர்ணித்த பாதுகாப்பு அமைச்சர் யோவ் கேலண்ட், “நஸ்ரல்லாவை ஒழித்துக்கட்டுவது மிக முக்கியமான படி, ஆனால் அது மட்டுமே எல்லாம் அல்ல” என்று அறிவித்தார்.

“நம்மிடம் உள்ள அனைத்து ஆற்றல்களையும் நாம் பயன்படுத்துவோம். எதிர்த்தரப்பில் உள்ள யாராவது இந்த ஆற்றல்களின் பொருள் என்னவென்று புரிந்து கொள்ளவில்லை என்றால், அவை அனைத்தும் ஆற்றல்கள்தான், மேலும் நீங்கள் இந்த முயற்சியின் ஒரு பகுதியாக இருக்கிறீர்கள்.”

நெதனியாகுவின் அதிவலது ஆட்சி, ஒட்டுமொத்த மத்திய கிழக்கையும் மறுகட்டமைப்பு செய்வதற்கான அதன் அமெரிக்க-ஆதரவிலான முனைவின் பாகமாக, காஸா மற்றும் மேற்குக் கரையுடன் சேர்த்து லெபனானின் சில பகுதிகளை இணைத்துக்கொள்ள உத்தேசித்துள்ளது. நெதன்யாகுவும் பிற முக்கிய அதிகாரிகளும் இந்த செயற்பட்டியலை அப்பட்டமாக முன்வைத்துள்ளனர் இதில் ஜூலையில் அமெரிக்க காங்கிரஸ் மற்றும் கடந்த வாரம் ஐ.நா. பொதுச் சபையில் ஆற்றிய உரைகளும் அடங்கும்.

மத்திய கிழக்குத் தழுவிய போரின் பரிமாணங்களை விரைவாக எடுத்து வருகின்ற மோதலில் இஸ்ரேலின் ஆக்கிரோஷமான விரிவாக்கம், அமெரிக்க ஏகாதிபத்தியத்திடம் இருந்து அது பெற்றுள்ள அசைக்க முடியாத ஆதரவால் சாத்தியமாகியுள்ளது. காஸா மீதான அதன் அழிவை இஸ்ரேல் தொடங்கி சில நாட்களுக்குள்ளாக உலக சோசலிச வலைத் தளம் விளக்கியதைப் போல, வாஷிங்டன் அந்த இனப்படுகொலையை ஆமோதித்தது ஏனென்றால் ஈரானுடனான ஒரு பிராந்தியந் தழுவிய போருக்கான தயாரிப்புகளின் ஒரு இன்றியமையாத கூறுபாடாக அதை அது பார்த்தது. காஸா மீதான இஸ்ரேலின் தாக்குதல் தொடங்கியதைத் தொடர்ந்து அப்பிராந்தியத்திற்கு அமெரிக்கா துருப்புகளையும் கடற்படை கப்பல்களையும் அதிகரித்திருப்பதைக் குறிப்பிட்டு, அக்டோபர் 23, 2023 முன்னோக்கில், WSWS பின்வருமாறு எழுதியது,

பைடென் நிர்வாகமானது மத்திய கிழக்கில் போரை தீவிரப்படுத்தி வருவதுடன், கிழக்கு ஐரோப்பாவிலிருந்து மத்திய கிழக்கு மற்றும் பசிபிக் வரை பரவியுள்ள உலக மேலாதிக்கத்திற்கான ஒரு உலகளாவிய மோதலின் ஒரு பகுதியாக ஈரானை நேரடியாகத் தாக்க அச்சுறுத்துகிறது. சீனாவின் பொருளாதார எழுச்சியையும் அமெரிக்கப் பொருளாதாரத்தின் உலகளாவிய சரிவையும் எதிர்கொண்டுள்ள அமெரிக்க ஏகாதிபத்தியம், உலக மேலாதிக்கத்தை நிலைநாட்டுவதற்கான வழியாக போரைக் கருதுகிறது.

கடந்த ஆண்டில், வாஷிங்டன் இஸ்ரேலுக்கு பல பில்லியன் டாலர் மதிப்புள்ள ஆயுதங்களை வழங்கியுள்ளது. இதில் 2,000 பவுண்டு எடையுள்ள குண்டுகளும் அடங்கும். இக்குண்டுகள் காஸாவை பாழ்நிலமாக மாற்றியுள்ளதுடன், தற்போது பெய்ரூட், லெபனானின் தெற்கு மற்றும் கிழக்குப் பகுதிகளையும் பேரழிவுக்கு உள்ளாக்கி வருகின்றன.

பென்டகன் திங்கட்கிழமை அறிவித்தபடி, வாஷிங்டன் அப்பிராந்தியத்திற்கு “இன்னும் சில ஆயிரம்” அமெரிக்க படையினர்களை அனுப்பும். இது மத்திய கிழக்கில் அமெரிக்க படைகளின் எண்ணிக்கையை 43,000 ஆக உயர்த்தும் என அசோசியேட்டட் பிரஸ் தெரிவிக்கிறது. புதிய படைகளில் பெரும்பாலானவை போர் விமானங்கள் மற்றும் தாக்குதல் விமானங்களின் படைப்பிரிவுகளைக் கொண்டுள்ளன. பாதுகாப்புச் செயலாளர் லாயிட் ஆஸ்டின் ஞாயிற்றுக்கிழமை, யு.எஸ்.எஸ். ஆபிரகாம் லிங்கன் விமானந்தாங்கி போர்க்கப்பல் தாக்குதல் குழுவின் நிலைநிறுத்தலை மத்திய கிழக்கில் ஒரு மாதம் நீட்டித்துள்ளதாகத் தெரிவித்தார். இரண்டாவது விமானந்தாங்கி போர்க்கப்பல் தாக்குதல் குழுவான யு.எஸ்.எஸ். ஹாரி ட்ரூமன், சமீபத்தில் வர்ஜீனியாவிலிருந்து புறப்பட்டது, மேலும் ஒரு வாரத்தில் அப்பிராந்தியத்தை அடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

தங்களின் தொடர்ச்சியான தீவிரப்படுத்தும் நடவடிக்கைகள் மூலம், இஸ்ரேலும் அதன் அமெரிக்க நிதி வழங்குநரும் ஈரானை ஏதோ ஒரு வகையான பதிலளிப்பிற்குத் தூண்ட முயல்கின்றனர், இதனைப் பின்னர் தெஹ்ரான் மீது கொடூரமான தாக்குதலைத் தொடுக்கப் பயன்படுத்தலாம். ஏற்கனவே இந்த ஆண்டில், இஸ்ரேல் டமாஸ்கஸில் ஏழு ஈரானிய புரட்சிகர பாதுகாப்புப் படை உறுப்பினர்களைக் கொலை செய்ததுடன், ஈரானிய ஜனாதிபதி மசூத் பெஜேஷ்கியானின் பதவியேற்பு விழாவில் விருந்தினராக தெஹ்ரானுக்கு வருகை தந்திருந்த ஹமாஸ் அரசியல் தலைவர் இஸ்மாயில் ஹனியேவைக் கொன்றதன் மூலம் ஈரானின் முதலாளித்துவ-மதகுரு ஆட்சியை அவமானப்படுத்தியது. தங்கள் பங்கிற்கு, ஈரானிய ஆட்சியும் அப்பிராந்தியம் முழுவதும் உள்ள அதன் முதலாளித்துவ-தேசியவாத கூட்டாளிகளும், ஏகாதிபத்திய சக்திகளுடன் ஒரு சமரசத்திற்கான பயனற்ற வேண்டுகோள்களைத் தவிர, இந்த ஏகாதிபத்திய தலைமையிலான தாக்குதலை எதிர்கொள்ள வேறு எதையும் வழங்கவில்லை.

முழு மத்திய கிழக்கும் அதன் நீண்டகாலமாக துன்பப்படும் மக்களுக்கு கணக்கிட முடியாத விளைவுகளுடன் ஒரு இரத்தக்களரியில் மூழ்குவதைத் தடுக்கும் திறன் கொண்ட ஒரே சமூக சக்தி, ஏகாதிபத்திய போருக்கு எதிரான போராட்டத்தில் அணிதிரட்டப்பட்ட சர்வதேச தொழிலாள வர்க்கம் மட்டுமே. பிற்போக்குத்தனமான சியோனிசத்தையும் திவாலான முதலாளித்துவ தேசியவாதத்தையும் நிராகரித்து, மத்திய கிழக்கின் தொழிலாளர்கள், அவர்கள் அரபு, பாரசீகராக அல்லது யூதராக இருந்தாலும், முதலாளித்துவ இலாப அமைப்புமுறை மற்றும் போருக்கு முற்றுப்புள்ளி வைக்க, ஏகாதிபத்திய மையங்களில் உள்ள அவர்களின் வர்க்க சகோதர சகோதரிகளுடன் கூட்டணி வைத்து, சோசலிசத்திற்கான போராட்டத்தின் அடிப்படையில் ஒன்றிணைய வேண்டும்.

Loading