முன்னோக்கு

கிழக்கு மற்றும் வளைகுடா கடற்கரை துறைமுக வேலைநிறுத்தம் தொழிலாள வர்க்கத்தில் வளர்ந்து வரும் கிளர்ச்சியின் ஒரு பகுதியாகும்

மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம். 

ஹூஸ்டனில் உள்ள பேபோர்ட் கொள்கலன் முனையத்தில் ILA உறுப்பினர்களின் வேலைநிறுத்தத்தின் போது, வழக்கமாக இரவும் பகலும் இயங்கும் கிரேன்கள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. அக்டோபர் 1, 2024 செவ்வாய்க்கிழமை [AP Photo/Annie Mulligan]

கடந்த செவ்வாயன்று 45,000ம் துறைமுகத் தொழிலாளர்களால் தொடங்கப்பட்ட வேலைநிறுத்தமானது, தொழிலாள வர்க்கத்தின் வளர்ந்து வரும் தாக்குதலில் ஒரு முக்கிய மைல்கல் ஆகும். இந்த வேலைநிறுத்தம், கிழக்கு மற்றும் வளைகுடா கடற்கரைகளில் உள்ள 36 துறைமுகங்களை மூடியுள்ளது. இதில் நியூயோர்க்-நியூ ஜெர்சி, ஹூஸ்டன், சவன்னா மற்றும் சார்லஸ்டன் போன்ற முக்கிய துறைமுகங்களும் அடங்கும்.

இந்த வெளிநடப்பானது, நாடு தழுவிய கிளர்ச்சி வளர்ந்து வருவதன் பாகமாக இருக்கிறது. விற்றுத்தள்ளப்பட்ட ஒப்பந்தம் நிராகரிக்கப்பட்டதைத் தொடர்ந்து இரண்டு வாரங்களுக்கும் மேலாக வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ள 33,000 போயிங் தொழிலாளர்களுடன் துறைமுகத் தொழிலாளர்களும் இணைந்துள்ளனர். இவர்களுடன் டெக்ஸ்ட்ரான் மற்றும் ஈட்டனை சேர்ந்த ஆயிரக் கணக்கான வான்வெளித்துறை தொழிலாளர்களும் இணைந்துள்ளனர். மொத்தத்தில், அமெரிக்காவில் முக்கிய மூலோபாய வேலைத்தளங்களில் குறைந்தபட்சம் 85,000 தொழிலாளர்கள் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர்.

இது, ஒரு உலகளாவிய இயக்கத்தின் பாகமாகும். மொன்ட்ரீயலில் உள்ள கனேடிய துறைமுகத் தொழிலாளர்கள் 72 மணி நேர வேலைநிறுத்தத்தைத் தொடங்கியுள்ளனர், இது ஒரு கண்டந்தழுவிய இயக்கத்திற்கான சாத்தியக்கூறை உயர்த்தியுள்ளது.

தொழிற்சங்க அதிகாரத்துவம் பொதுவாக ஒரு நடைமுறை வேலைநிறுத்தத் தடையை விதிக்கும் அதே வேளையில், இந்த வேலைநிறுத்த அலை நவம்பர் ஜனாதிபதித் தேர்தலுக்கு சில வாரங்களுக்கு முன்பு வெடித்துள்ளது.

உத்தியோகபூர்வ அரசியல் அமெரிக்க முதலாளித்துவத்தின் நிலையை உயர்த்துவதற்கான பெருகிய முறையில் அவநம்பிக்கையான முயற்சிகளால் உந்தப்படுகிறது. இது, மத்திய கிழக்கிலும் ரஷ்யாவிற்கும் எதிராக பாரிய இராணுவ விரிவாக்கங்கள் மூலம் ஆழத்தை உறிஞ்சி வருகிறது. ட்ரம்ப்பின் தேர்தல் பிரச்சாரம் அமெரிக்காவில் ஒரு பாசிச சர்வாதிகாரத்தை நிறுவுவதற்கான ஒரு குறிப்பிடத்தக்க முயற்சியை பிரதிநிதித்துவம் செய்கிறது.

ஆனால், இதற்கு முற்றிலும் மாறுபட்ட, முற்போக்கான சமூக சக்தி எதிர்ப்பில் எழுந்து கொண்டிருக்கிறது: அது தொழிலாள வர்க்கம் ஆகும். இந்த வேலைநிறுத்த அலையானது ஒட்டுமொத்த முதலாளித்துவ இலாப அமைப்புமுறைக்கு எதிராக இயக்கப்படும் ஒரு சுயாதீனமான வர்க்க இயக்கத்தின் அவசரத் தேவை மற்றும் சாத்தியக்கூறு ஆகிய இரண்டையும் முன்வைக்கிறது.

துறைமுகத் தொழிலாளர்கள் போராடி வரும் நிலைமைகள், இலாப உந்துதல் கொண்ட பாதுகாப்பு மீதான அலட்சியம், தேக்கமடைந்து வரும் மற்றும் வீழ்ச்சியடைந்து வரும் நிஜமான ஊதியங்கள் மற்றும் பாரிய அதிக வேலைகள் வரையிலான பிரச்சனைகள் உலகளாவியவை. எல்லாவற்றிற்கும் மேலாக, துறைமுகத் தொழிலாளர்கள் தங்கள் வேலைகளை தானியங்கிமயமாக்கலின் புதிய வடிவங்களுக்கு எதிராக பாதுகாக்க போராடுகின்றனர். தொழிலாள வர்க்கத்தின் ஒட்டுமொத்த பிரிவுகளையும் வறுமைக்குள் தள்ள இவை புவியெங்கிலும் பெருநிறுவனங்களால் ஆயுதங்களாக பயன்படுத்தப்பட்டு வருகின்றன. அமெரிக்காவில் மட்டும், வாகன உற்பத்தித் துறையிலும், UPS, தொழில்நுட்பத் துறை மற்றும் பிற வேலையிடங்களிலும் இவ்விதத்தில் இந்தாண்டு ஏற்கனவே பத்தாயிரக் கணக்கான வேலைகள் அழிக்கப்பட்டுள்ளன.

வேலைகளைக் குறைக்க ஆளும் வர்க்கம் உழைப்பை மிச்சப்படுத்தும் தொழில்நுட்பங்களைப் பயன்படுத்துவதற்கு இந்த துறைமுகங்கள் நீண்டகாலமாக மையமாக இருந்து வந்துள்ளன. 1960 களில் அறிமுகப்படுத்தப்பட்டு தொடங்கப்பட்ட கொள்கலன்மயமாக்கல் பல்லாயிரக்கணக்கான துறைமுக வேலைகளை அழித்தது மட்டுமல்லாமல், கப்பல் போக்குவரத்துச் செலவுகளையும் பாரியளவில் குறைத்தது. மேலும் இது, முதலாளித்துவ உற்பத்தியின் பூகோளமயமாக்கத்திற்கும், மற்றும் முன்னெப்போதிலும் பார்க்க வளர்ந்து வரும் சர்வதேச தொழிலாள வர்க்கத்தின் அதிகமான இடைத்தொடர்புக்கும் முக்கிய பங்கு வகித்து வருகிறது. இலாபத்தால் ஆதிக்கம் செலுத்தப்படாத ஒரு வேறுபட்ட சமூக அமைப்பில், இந்த தொழில்நுட்ப அபிவிருத்திகள் வேலைச் சுமைகளை குறைக்கவும் வாழ்க்கைத் தரத்தை கூர்மையாக முன்னேற்றவும் பயன்படுத்தப்படும்.

இந்த புதிய தொழில்நுட்பங்களை யார் கட்டுப்படுத்துகிறார்கள்: தொழிலாள வர்க்கமா அல்லது பெருநிறுவன உயரடுக்கா என்பது குறித்து ஒரு போர் நடந்து கொண்டிருக்கிறது. ஜெஃப் பெஸோஸுக்கு சொந்தமான வாஷிங்டன் போஸ்டில் நேற்று வெளியான ஒரு கருத்துரை, துறைமுக வேலைநிறுத்தம் “மேம்பட்ட தானியங்கிமயமாக்கலுக்கு எதிராக நல்ல ஊதியம் பெறும் தொழிலாளர்களின் ஒரு ஆரம்பகால போராட்டம் மட்டுமே, இதில் இன்னும் பலர் இணைவார்கள்” என்று பதட்டத்துடன் எச்சரித்தது.

இந்த வேலைநிறுத்தமானது, விட்டுக்கொடுப்புகளை தொழிலாளர்களின் தொண்டைக்குள் திணிக்க பல தசாப்தங்களாக உதவியுள்ளதும், முதலாளித்துவ அரசுடன் முற்றிலும் தொடர்புபட்டுள்ளதுமான பெருநிறுவன-சார்பு தொழிற்சங்க எந்திரத்திற்கு எதிராக அதிகரித்து வரும் கிளர்ச்சியின் பாகமாகவும் உள்ளது. தற்போதைய வேலைநிறுத்த அலையானது, சர்வதேச இயந்திர வல்லுநர்கள் சங்கத்தின் அதிகாரத்துவத்தால், போயிங்கை விற்றுத் விற்றுத்தள்ளும் முயற்சியை பாரியளவில் நிராகரிப்பதன் மூலம் தொடங்கியது, இதை தொழிலாளர்கள் மலைப்பூட்டும் வகையில் 95 சதவீத வாக்குகளால் நிராகரித்தனர்.

இது நாடெங்கிலும் தொழிற்சங்க அதிகாரத்துவத்தினர் தங்கள் சொந்த விற்றுத்தள்ளல்களை திணிக்கும் முயற்சிகளை கடுமையாக சிக்கலாக்கியுள்ளது. சர்வதேச நீண்ட கரையோர மக்கள் சங்கத்தின் கோபமான மற்றும் கொச்சையான வாய்வீச்சு ஒருபுறம் இருக்க, தொழிற்சங்க அதிகாரத்துவம் நெருக்கடிக்குள் தள்ளப்பட்டுள்ளது. இந்த வேலைநிறுத்தத்தின் நிஜமான உந்துசக்தியாக இருப்பது தொழிற்சங்கத் தலைவர் ஹரோல்ட் டாக்கெட் அல்ல, மாறாக சாமானிய தொழிலாளர்களே ஆவர்.

இந்த வேலை நிறுத்தம் பைடெனின் வெள்ளை மாளிகைக்கும் பேரிடியாக அமைந்துள்ளது. பல ஆண்டுகளாக, “அமெரிக்க வரலாற்றில் மிகவும் தொழிலாளர்-சார்பு ஜனாதிபதி” என்று தன்னைத்தானே விவரித்துக் கொண்ட இவர், வேலைநிறுத்தங்களைத் தடுக்க அல்லது மட்டுப்படுத்தவும், வேலை வெட்டுக்களுக்கு பச்சைக்கொடி காட்டும் மற்றும் பணவீக்கத்திற்கு குறைவான ஊதியங்களைத் திணிக்கும் ஒப்பந்தங்களைத் திணிக்கவும் அதிகாரத்துவத்தின் சேவைகளைப் பயன்படுத்தி வந்துள்ளார். வெள்ளை மாளிகை உள்நாட்டுப் போருக்குத் தயாராகும்போது அதிகாரத்துவத்தை முக்கியமாகக் கருதுகிறது, மேலும் AFL-CIO தொழிற்சங்கத்தை தனது உள்நாட்டு நேட்டோ என்று பைடெனின் சமீபத்திய அறிவிப்பிலும் சுருக்கமாகக் கூறப்பட்டுள்ளது.

ILA அதிகாரத்துவம் வேலைநிறுத்தத்திற்கு உட்பட்டுள்ள துறைமுகங்கள் வழியாக இராணுவ தளவாடங்களை தொடர்ந்து நகர்த்துவதாக உறுதியளித்துள்ளது. இவை காஸாவில் இஸ்ரேலின் அமெரிக்க-ஆதரவிலான இனப்படுகொலையிலும் மற்றும் ஈரானுக்கு எதிரான போரை விரிவுபடுத்துவதிலும், அணுஆயுத நிர்மூலமாக்கலைக் கொண்டு மனிதயினத்தை அச்சுறுத்தும் ரஷ்யாவுக்கு எதிரான ஒரு பினாமிப் போரை ஆதரிப்பதற்கும் பயன்படுத்தப்பட்டு வருகின்றன. வோல் ஸ்ட்ரீட் மற்றும் அமெரிக்க முதலாளித்துவத்தில் இருந்து கவனத்தை திசைதிருப்பும் முயற்சியில் வேலைநிறுத்தத்தைத் தூண்டியதற்காக “வெளிநாட்டு” கப்பல் வழித்தடங்களை குற்றஞ்சாட்டி பைடென் ஓர் அறிக்கையை வெளியிட்டுள்ளார்.

ஆனால், அமெரிக்க ஏகாதிபத்தியம் மத்திய கிழக்கிலும் ரஷ்யாவுக்கு எதிராகவும் அதன் போர்களைத் தீவிரப்படுத்தி வருகின்ற அதேநேரத்தில், பாதுகாப்பு ஒப்பந்த நிறுவனமான போயிங் மற்றும் துறைமுகங்களில் வேலைநிறுத்தங்கள் வெடித்திருப்பது, அமெரிக்க தேசியவாதம் மற்றும் இராணுவவாதத்திற்கு முறையீடு செய்வதைக் கொண்டு வர்க்கப் போராட்டத்தை ஒடுக்குவதற்கான முயற்சிகள் முறிந்து வரத் தொடங்கி உள்ளன என்பதைக் காட்டுகிறது. தனது வேலைத்திட்டத்தை திணிக்க தொழிற்சங்க அதிகாரத்துவத்தை பயன்படுத்துவதற்கான பைடெனின் முயற்சிகள் தொழிலாள வர்க்கத்தின் பார்வையில் இரண்டையும் பெருகிய முறையில் மதிப்பிழக்கச் செய்துள்ளன.

ஏனென்றால், ஏகாதிபத்தியப் போருக்குப் பின்னால் உள்ள அதே இலாப நலன்கள் (மூலப்பொருட்கள், சந்தைகள் மற்றும் மலிவு உழைப்புத் தளங்களைக் கட்டுப்படுத்துவதற்கான போராட்டம்) உள்நாட்டில் தொழிலாளர்களின் வேலைகள் மற்றும் வாழ்க்கைத் தரங்கள் மீதான போருக்குப் பின்னால் உள்ளன. ஜனாதிபதி தேர்தலில் யார் வெற்றி பெற்றாலும், இரு கட்சிகளுமே இப்போர்களுக்கு தொழிலாள வர்க்கம் விலை கொடுக்க வேண்டும் என்பதில் உறுதியாக உள்ளன.

வேலைநிறுத்தத்தை முடிவுக்குக் கொண்டுவர கட்டாயப்படுத்த டாஃப்ட்-ஹார்ட்லி (Taft-Hartley) தடையுத்தரவை பயன்படுத்த அவருக்கு எந்த உத்தேசமும் இல்லை என்று பைடென் கூறி வருகிறார். ஆனால், இரயில் பாதைகளில் 2022 இல் இருகட்சிகளினால் மேற்கொள்ளப்பட்ட வேலைநிறுத்தத் தடை, தொழிற்சங்க அதிகாரத்துவத்தின் மூலமாக வேலைநிறுத்தத்தை கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவர முடியாவிட்டால் அதை முடிவுக்கு கொண்டுவருவதற்கு பலத்தைப் பயன்படுத்த அரசாங்கம் முற்றிலும் தயாராக உள்ளது என்பதை நிரூபிக்கிறது.

துறைமுகத் தொழிலாளர்கள் எதிர்கொள்ளும் முக்கிய பிரச்சினை, அவர்களது வேலைநிறுத்தத்தை தொழிலாள வர்க்கத்தின் பரந்த, அடிப்படையிலான சுயாதீனமான இயக்கமாக அபிவிருத்தி செய்வதாகும். குறிப்பாக, குறிப்பாக, அவர்கள் இரண்டு அழுத்தமான பணிகளை எதிர்கொள்கின்றனர்: முதலாவது, அனைத்து வருங்கால ஒப்பந்த பேச்சுவார்த்தைகள் மீதும் கட்டுப்பாடு மற்றும் அவர்களின் விருப்பத்தை மீறும் முடிவுகளை எதிர்க்கும் திறன் உட்பட அவர்களின் சொந்த போராட்டத்தின் மீது ஜனநாயக கட்டுப்பாட்டை செயல்படுத்துவது; இரண்டாவதாக, நாடெங்கிலும் மற்றும் உலகெங்கிலுமான சாமானிய தொழிலாளர்களுடன் நிஜமான தகவல்தொடர்பு வழிகளை ஸ்தாபிப்பது.

இதற்கு சாமானிய தொழிலாளர்களின் வேலைநிறுத்தக் குழுக்களின் வளர்ச்சி தேவைப்படுகிறது. மேலும் ILA அதிகாரத்துவத்திலிருந்து சுயாதீனமான மற்றும் நம்பகமான தொழிலாளர்களை மட்டுமே இதில் தேவைப்படுகிறது.

இதற்கு ILA அதிகாரத்துவத்தில் இருந்து சுயாதீனமான மற்றும் நம்பகமான சாமானிய தொழிலாளர்களை மட்டுமே கொண்ட வேலைநிறுத்தக் குழுக்களின் வளர்ச்சி தேவைப்படுகிறது. போயிங் தொழிலாளர்கள் ஏற்கனவே இந்த நடவடிக்கையை எடுத்துள்ளனர், அதேபோல் இரயில்வே தொழிலாளர்களும் மற்றும் உலகெங்கிலுமான தொழில்துறை எங்கிலுமான ஏனையவர்களும் உள்ளனர். சாமானிய தொழிலாளர் குழுக்களின் சர்வதேச தொழிலாளர் கூட்டணி (IWA-RFC) மூலமாக, அவர்களால் உலகெங்கிலுமான தொழிலாளர்களுடன் ஒருங்கிணைக்கவும் ஒத்துழைக்கவும் முடியும்.

ILA ஏற்கனவே மறியல் அணிவகுப்புகளையும் சமூக ஊடகங்களையும் பலமாக கண்காணிப்பதன் மூலம் துறைமுகத் தொழிலாளர்களை தனிமைப்படுத்த முயன்று வருகிறது. இதற்கிடையில், டாக்கெட்டும் ILA அதிகாரத்துவத்தினரும் மேற்கு கடற்கரையில் உள்ள சர்வதேச லாங்ஷோர் மற்றும் கிட்டங்கி சங்கத்தில் (ILWU) இருந்து தங்கள் சகாக்களுடன் இணைந்து வருகின்றனர். அது, அதன் உறுப்பினர்களை திசைதிருப்பப்பட்ட சரக்குகளைக் கையாள்வதன் மூலம் வேலைநிறுத்தத்தில் கருங்காலியாக இருக்க கட்டாயப்படுத்துகிறது.

வேலைநிறுத்தம் செய்யும் துறைமுகத் தொழிலாளர்கள் கடலோரப் பிளவை உடைத்துக் கொண்டு, தங்கள் போராட்டத்திற்கு ஆதரவு கொடுக்கும் மேற்குக் கடற்கரை தொழிலாளர்களுடன் இணைய வேண்டும். திசைதிருப்பப்பட்ட சரக்குகளை மீண்டும் கிழக்கு கடற்கரைக்கு நகர்த்துவதற்கான திட்டங்களுக்கு முக்கியமான, புதிய விற்றுத்தள்ளப்பட்ட ஒப்பந்தங்களுடன் போராடும் இரயில்வேக்காரர்களையும் அவர்கள் அணுக வேண்டும்.

சரக்குகள் மெக்சிகோ மற்றும் கனடாவுக்கு திருப்பி விடப்படுவதைத் தடுக்க வட அமெரிக்கா மற்றும் உலகெங்கிலும் உள்ள தொழிலாளர்களையும் அவர்கள் அணுக வேண்டும். கடந்த ஆண்டு, மெக்சிக்கன் சரக்கு ஊர்தி ஓட்டுநர்கள் துறைமுகங்களை முடக்கினர். எல்லைக்கு கீழே உள்ள தொழிலாளர்கள் தங்களை ஒடுக்கும் பன்னாட்டு பெருநிறுவனங்களை எதிர்த்துப் போராட வடக்கில் உள்ள அவர்களின் வர்க்க உறவுகளுடன் இணைய ஆர்வமாக உள்ளனர்.

பூகோள மேலாதிக்கத்திற்கான அமெரிக்காவின் போர்களுக்கு ஆதரவளித்தவரும் ILA அதிகாரத்துவத்துக்கு எதிராக, சாமானிய தொழிலாளர்கள் போரை நிறுத்துவதற்கு செயலூக்கமான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். குறிப்பாக, இஸ்ரேலுக்கு இராணுவ உபகரண சரக்குகளை ஏற்றி இறக்க மறுப்பதன் மூலம் இனப்படுகொலையை நிறுத்துமாறு உலகெங்கிலும் உள்ள தொழிலாளர்களை வலியுறுத்தியுள்ள பாலஸ்தீனிய தொழிற்சங்கங்களின் அழைப்பை அவர்கள் கவனத்தில் எடுக்க வேண்டும்.

துறைமுகத் தொழிலாளர்கள் துறைமுக உரிமையாளர்களுக்கு எதிராக மட்டுமல்ல, ஒட்டுமொத்த சமூக அமைப்புமுறைக்கு எதிராகவும் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். சோசலிசம், அரசியல் அதிகாரத்தை தொழிலாள வர்க்கத்திற்கு மாற்றுதல், இலாப நோக்கத்தை ஒழித்தல் மற்றும் மனித தேவைக்காக சமூகத்தை இயக்குதல் ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டது. முதலாளித்துவமானது, சுரண்டல் மற்றும் சமத்துவமின்மையை அடிப்படையாகக் கொண்டது. முதலாளித்துவ ஆளும் வர்க்கத்திற்கு எதிராக, தொழிலாளர்கள் தங்கள் சொந்த அரசியல் வேலைத்திட்டத்தை முன்வைக்க வேண்டும்.

Loading