முன்னோக்கு

துறைமுகங்களில் துரோகம்: ILA தொழிற்சங்கம் துறைமுகத் தொழிலாளர்களின் வேலைநிறுத்தத்தைக் காட்டிக்கொடுக்கிறது

மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம்.

அமெரிக்கா ஹூஸ்டன், டெக்சாஸிலுள்ள துறைமுகத் தொழிலாளர்கள் பார்பர்ஸ் கட் கொள்கலன் முனையத்தில் (Barbours Cut Container Terminal) வேலைநிறுத்தத்தின் முதல் நாளில் மறியல் எதிர்ப்பு போராட்டத்தில் நடந்து செல்கின்றனர், செவ்வாய்க்கிழமை, அக்டோபர் 1, 2024 [AP Photo/Annie Mulligan]

பெரும் துரோகச் செயலாக, சர்வதேச நெடுங்கரையோர தொழிலாளர் சங்கமானது (ILA) 45,000 துறைமுகத் தொழிலாளர்களின் வலுவான வேலைநிறுத்தத்தை வியாழக்கிழமை மாலை முடிவுக்குக் கொண்டு வந்தது.

நெடுங்கரையோர துறைமுகத் தொழிலாளர்கள் தங்கள் போராட்டத்தைச் சீர்குலைக்கும் இந்த முயற்சியை நிராகரிக்க வேண்டும். இந்த வேலைநிறுத்தம் தொழிலாள வர்க்கத்தின் பெரும் சக்தியை வெளிப்படுத்தியது, பெருநிறுவனங்களின் செயல்பாடுகளை நிறுத்தும் அச்சுறுத்தலையும், அமெரிக்காவின் உலகளாவிய போரை நடத்துவதற்கு அச்சுறுத்தலையும் ஏற்படுத்தியது. ஆனால் வேலைநிறுத்தம் எவ்வளவு சக்திவாய்ந்ததாக இருந்ததோ, அவ்வளவு விரைவாக தொழிற்சங்க அதிகாரத்துவம் அதை முடிவுக்குக் கொண்டு வர வேண்டும் என உணர்ந்தது.

ILA தொழிற்சங்க அதிகாரத்துவமானது பைடென் நிர்வாகத்தின் உதவிக்குச் செல்ல நிர்ப்பந்திக்கப்பட்டதாக உணர்ந்தது, மேலும் அமெரிக்காவின் உலகளாவிய போர்களுக்கான ஆயுதங்களின் பாய்ச்சல் தொடர்வதை உறுதி செய்தது. வேலைநிறுத்தத்தின் போது இராணுவ உபகரணங்களைத் தொடர்ந்து நகர்த்துவதாக ஏற்கனவே உறுதியளித்திருந்த தொழிற்சங்க இயந்திரமானது, “உள்நாட்டு முன்னணியில்” ஒழுங்கை நிலைநாட்ட தன்னை நம்பலாம் என்பதை அரசியல் நிறுவனத்திற்கு நிரூபிக்க ஆர்வமாக உள்ளது.

வலதுசாரி ஃப்ளோரிடா ஆளுநர் ரான் டிசாண்டிஸ் வியாழக்கிழமை மாலை அறிவித்த அறிவிப்பைத் தொடர்ந்து, வேலைநிறுத்தம் முடிவுக்குக் கொண்டு வரப்பட்டது. அவர் வேலைநிறுத்தத்தை முறியடிக்க ஃப்ளோரிடா துறைமுகங்களுக்கு தேசிய காவல்படையை அனுப்புவதாகக் கூறினார். மேலும், ஹெலென் சூறாவளிக்குப் பிந்தைய நிவாரண முயற்சிகளில் வேலைநிறுத்தம் தலையிடுவதாக பொய்யாகக் கூறினார்.

வேலைநிறுத்தத்தை முடிவுக்குக் கொண்டு வரும்போது, சர்வதேச நெடுங்கடலோர தொழிலாளர் சங்கத்தின் (ILA) அதிகாரிகள் ஊதியங்கள் குறித்து மட்டுமே ஒரு “தற்காலிக ஒப்பந்தத்தை” அறிவித்தனர். ஆனால், முழு ஒப்பந்தம் எதுவும் இல்லை. ஜனவரி 15 அன்று காலாவதியாகும் தற்போதைய ஒப்பந்தத்திற்கு 90 நாள் நீட்டிப்பின் கீழ் தொழிலாளர்கள் திரும்ப அனுப்பப்படுகின்றனர்.

ஊதியங்கள் குறித்த ஒப்பந்தம் ஆறு ஆண்டுகளில் 61 சதவீத உயர்வுக்கானது என்று வதந்திகள் உள்ளன. ஆனால் தானியங்கி முறைமையால் (automation) ஏற்படும் வேலை இழப்புகளிலிருந்து பாதுகாப்பு உள்ளிட்ட பிற அம்சங்களில் ஒப்பந்தம் எதுவும் இல்லை. இதுவே முதலில் வேலைநிறுத்தத்திற்கான மிகப்பெரிய பிரச்சினையாக இருந்தது.

தொழிற்சங்க அதிகாரிகள், மூன்று மாத நீட்டிப்பு பேச்சுவார்த்தையாளர்களுக்கு இந்த மற்றும் பிற விதிமுறைகளை விவாதிக்க “அவகாசம்” கொடுக்கும் என்று கூறுகின்றனர். இந்தப் பேச்சுவார்த்தைகள் தொடங்குவதற்கு முன்பே வேலைநிறுத்தத்தை முடித்து, தொழிலாளர்களின் பேரம்பேசும் சக்தியை தாமாகவே கைவிட்டுள்ள நிலையில், இது அபத்தமானதாகும்.

கடந்த ஆண்டு ஐக்கிய வாகனத்துறை தொழிற்சங்கத் தொழிலாளர்களின் வரையறுக்கப்பட்ட “திடீர் வேலைநிறுத்தம்” மற்றும் டீம்ஸ்டர்ஸ் தொழிற்சங்கத்தின் “வேலைநிறுத்தத்திற்குத் தயார்” என்ற வெற்றுப் பிரச்சாரம், மேலும் UPS நிறுவனத்தில் நடந்தது போல, பெரிய அளவிலான தானியங்கி முறைமை சார்ந்த வேலை நீக்கங்களுக்கான களம் அமைக்கப்படுகிறது. ஒவ்வொரு தொழிற்சங்கத்தின் அதிகாரிகளும் ஊதியங்கள் மற்றும் பிற விஷயங்களில் “வரலாற்று வெற்றிகள்” பெற்றதாகக் கூறினர். ஆனால், ஒப்புதல் அளித்த வாரங்களுக்குள்ளேயே ஆயிரக்கணக்கானோர் தங்கள் வேலைகளை இழக்கத் தொடங்கினர்.

கடந்த இரண்டு நாட்களாக, வேலைநிறுத்தத்திற்கு எதிராக பெருநிறுவன ஊடகங்களில் பெரும் பிரச்சாரம் நடந்து வருகிறது. வோல் ஸ்ட்ரீட் ஜேர்னல் (Wall Street Journal)  மற்றும் நேஷனல் ரிவ்யூ (National Review) உள்ளிட்டவை, பைடென் டாஃப்ட்-ஹார்ட்லி (Taft-Hartley) தடையாணையை பிறப்பிக்க வலியுறுத்தியுள்ளன. பிசினஸ் இன்சைடர் (Business Insider)  ஆனது, இந்த வேலைநிறுத்தத்தை ஹாரிஸ் பிரச்சாரத்தைக் கவிழ்க்கும் அச்சுறுத்தலாக “மூன்று நெருக்கடிகளில்” ஒன்றாகக் குறிப்பிட்டுள்ளது.

நியூயோர்க் டைம்ஸ் போன்ற “தாராளவாதம்” என அழைக்கப்படும் பத்திரிகைகள் உட்பட பல ஊடகங்கள், ILA தொழிற்சங்கத்தின் தலைவர் ஹரோல்ட் டாகெட்டின் சுமார் 1 மில்லியன் டாலர் தொழிற்சங்க ஊதியம் பற்றிய கட்டுரைகளை வெளியிட்டு, அவருக்கு எந்தப் பக்கம் சாதகமானது என்பதை நினைவூட்டின.

இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு இரயில்வே துறையில் வேலைநிறுத்தத்தைத் தடை செய்த பைடென், புதன்கிழமையன்று துறைமுக வேலைநிறுத்தத்தை “மனிதனால் உருவாக்கப்பட்ட பேரழிவு” என்று குறிப்பிட்டு, தொழிற்சங்கம் மற்றும் துறைமுக நிர்வாகிகளை “இந்த வேலைநிறுத்தத்தை முடிவுக்குக் கொண்டு வரும்படி” கேட்டுக் கொண்டார். இது உண்மையில் ILA அதிகாரிகளுக்கு வேலைநிறுத்தத்தை இனி தொடர அனுமதிக்க முடியாது என்ற உத்தரவாக அமைந்தது.

டிசாண்டிஸின் (DeSantis) வேலைநிறுத்தத்தை முறியடிக்கும் அச்சுறுத்தல், ட்ரம்ப் மற்றும் குடியரசுக் கட்சியினரின் ஜனரஞ்சகவாத பாசாங்குத்தனங்களை கோரும் போலித்தனத்தை அம்பலப்படுத்துகிறது. இவர்கள் ஜனநாயகக் கட்சியினரின் போர் வெறி மற்றும் தொழிலாளர்கள் எதிர்கொள்ளும் சமூக நெருக்கடி குறித்த அலட்சியத்தை சாதகமாக்கிக் கொண்டுள்ளனர். புலம்பெயர்ந்தவர்களுக்கு எதிரான இனவெறி தூண்டுதல் மூலம் பாசிச இயக்கத்தை உருவாக்க முயல்வது, பெருநிறுவன இலாப நோக்கம் மற்றும் ஏகாதிபத்திய போருக்கு எதிரான அனைத்து எதிர்ப்புகளையும் நசுக்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.

பல மாதங்களாக, டகெட்டும் (Daggett) மற்றவர்களும், துறைமுக நிர்வாகிகளுக்கு எதிராக நீண்ட, கேவலமான கண்டனங்களுடன் நடித்து வந்தனர். ஆனால் இது வேலைநிறுத்தத்தின் உண்மையான இயக்கு சக்தியான, சாமானிய உறுப்பினர்களின் பெரும் கோபத்திற்கு முன்னால் செல்வதற்காக மட்டுமே செய்யப்பட்டது. WSWS எச்சரித்தபடி, முதல் சந்தர்ப்பத்திலேயே அவர்கள் வேலைநிறுத்தத்தை முடிவுக்குக் கொண்டு வந்துவிட்டனர்.

துறைமுக வேலைநிறுத்தமானது, போரை நிறுத்துவதற்கும் சமூகத்தை மறுவடிவமைப்பதற்கும் தொழிலாள வர்க்கத்தின் திறனை, செல்வந்தர்கள் சிலருக்காக அல்ல, பரந்த பெரும்பான்மை மக்களின் நலன்களுக்காக வெளிப்படுத்தியது. வெளிநாடுகளில் போர்களை நடத்தும் அதே இலாப நோக்கங்கள்தான் தானியங்கி முறைமை, கட்டாய மிகை நேர வேலை மற்றும் ஊதியத் தேக்கம் ஆகிய வடிவங்களில் தொழிலாள வர்க்கத்தின் மீதான தாக்குதல்களுக்கும் பின்னால் உள்ளன.

கப்பல் தொழில்துறையில் பூகோள நிறுவனங்களால் பணியமர்த்தப்பட்ட, ஒவ்வொரு கண்டத்திலிருந்தும் வரும் தொழிலாளர்களை உள்ளடக்கிய சர்வதேச தொழிலாளர் சக்தி, தொழிலாள வர்க்கத்தின் உலகளாவிய ஐக்கியத்தின் சிறு பிரதிபலிப்பாகும். இது ஆக்கிரமிப்பு போர்களில் தனக்கு எதிராகவே மோதுவதில் எந்த நாட்டமும் கொண்டிருக்கவில்லை.

ஆனால், வேலைநிறுத்தத்தின் துரோகம், தொழிலாள வர்க்கத்தின் சக்தியை பெருநிறுவன ஆதரவு தொழிற்சங்க அதிகாரத்துவத்திற்கு எதிரான இடைவிடாத போராட்டத்தின் மூலமே ஒழுங்கமைக்க முடியும் என்பதைக் காட்டுகிறது. தொழிலாளர்களின் பணி என்பது இந்த இயந்திரத்திற்கு எதிரான கிளர்ச்சியும், ஜனநாயகக் கட்டுப்பாட்டை உறுதிப்படுத்தவும் உலகெங்கிலும் உள்ள தொழிலாளர்களுடன் பரந்த தொடர்பு வழிகளை நிறுவவும் புதிய போராட்ட அமைப்புகளான சாமானியர் குழுக்களை உருவாக்குவதுமாகும்.

டெட்ராய்ட்டில், UAW அதிகாரத்துவத்தால் அங்கீகரிக்கப்பட்ட பெரும் வேலை நீக்கங்களை எதிர்கொள்ளும் சாமானிய வாகனத் தொழிலாளர்கள், அடுத்த வாரம் வாரன் டிரக் ஆலையில் 2,400 பேர் உட்பட, துறைமுகத் தொழிலாளர்களின் தலைமையைப் பின்பற்றி வேலைகளைப் பாதுகாக்க வேலைநிறுத்தம் செய்ய வேண்டும் என்று தெரிவித்தனர். 

பொதுவான கோரிக்கைகளுக்காக அழுத்தம் கொடுக்க கூட்டுப் போராட்டத்தில் இணைய விரும்பிய நாடு முழுவதும் உள்ள தொழிலாளர்களிடமிருந்து வேலைநிறுத்தம் பரவலான ஆதரவைப் பெற்றது. வியாழக்கிழமை மாலை, போயிங் தொழிலாளர் சாமானியர் குழு “வேலைகளைப் பாதுகாக்கவும் உலகப் போரை நிறுத்தவும்” துறைமுகத் தொழிலாளர்களுடன் ஒற்றுமைக்கு அழைப்பு விடுத்து அறிக்கை ஒன்றை வெளியிட்டது.

“நமது சாதகமான நிலையை நாம் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்,” என்று அந்த அறிக்கை கூறியது. “பல ஆண்டுகளாக உயரும் பணவீக்கம், சரிந்து வரும் சுகாதார சேவை மற்றும் தீர்க்கப்படாத மற்றும் உயிருக்கு ஆபத்தான பாதுகாப்பு பிரச்சினைகள் காரணமாக சாமானிய உறுப்பினர்களின் கோபத்தின் அளவு காரணமாக எல்லா இடங்களிலும் தொழிற்சங்க அதிகாரிகள் பின்னடைவில் உள்ளனர்.”

துறைமுகத் தொழிலாளர்கள் இந்தத் துரோகத்தை எதிர்க்க தங்களை ஒழுங்கமைத்துக் கொள்ள வேண்டும். துறைமுக நிர்வாகிகள் மற்றும் முதலாளித்துவக் கட்சிகளுக்கு எதிராக, தொழிற்சங்க இயந்திரத்தில் உள்ள அவர்களின் எடுபிடிகளுக்கும் எதிராகவும், உண்மையான போராட்டத்தை நடத்த சாமானியக் குழுக்களை உருவாக்க வேண்டும்.

அடிப்படையில், இது தொழிற்சங்க அதிகாரத்துவத்திற்கும் தொழிலாள வர்க்கத்திற்கும் இடையிலான வளர்ந்து வரும் மோதலின் மற்றொரு கட்டமாகும். தொழிற்சங்க அதிகாரிகள் எவ்வளவு வெட்கமின்றி சாமானிய உறுப்பினர்களின் விருப்பத்திற்கு எதிராக செயல்படுகிறார்களோ, அவ்வளவு அதிகமாக தொழிலாளர்கள் புதிய மூலோபாயம் தேவை என்ற முடிவுக்கு வருவார்கள். அவர்கள் வளர்ந்து வரும் சாமானியக் குழு இயக்கத்தில் சேர முடிவு செய்ய வேண்டும், உண்மையான போராட்டத்தை ஒழுங்கமைக்க தொழிலாளர்களின் கட்டுப்பாட்டில் கொண்டுவருவதற்கு, அமெரிக்கா முழுவதும் மற்றும் உலகம் முழுவதும் உள்ள தொழிலாளர்களை ஒன்றிணைக்க வேண்டும்.

Loading