இந்த மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கு காணலாம்.
இலங்கையின் புதிய ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க, தனது மக்கள் விடுதலை முன்னணி/தேசிய மக்கள் சக்தி (ஜே.வி.பி./தே.ம.ச.) அரசாங்கம் கொடூரமான சிக்கன நடவடிக்கைகளையும் தனியார்மயமாக்கலையும் அமுல்படுத்தும் என உயர் அதிகாரம் கொண்ட சர்வதேச நாணய நிதியத்தின் பிரதிநிதிகளுக்கு உறுதியளித்துள்ளார்.
கடந்த வியாழன் மற்றும் வெள்ளியன்று, திசாநாயக்க, ஆசிய பசுபிக் பிரிவின் பணிப்பாளர் கிருஷ்ண ஸ்ரீனிவாசன் மற்றும் சிரேஷ்ட தூதுவர் பீட்டர் ப்ரூயர் தலைமையிலான சர்வதேச நாணய நிதிய பிரதிநிதிகளை சந்தித்தார்.
பேச்சுவார்த்தைகளின் முடிவில், சர்வதேச நாணய நிதியம் 'ஆக்கப்பூர்வமானது' என்று அறிவித்து ஒரு அறிக்கையை வெளியிட்டது. 'மறுசீரமைப்பு முயற்சிகளை அமுல்படுத்துவதில் அதிகாரிகளின் அர்ப்பணிப்பால் நாங்கள் ஊக்குவிக்கப்படுகிறோம்' என்று அது மேலும் கூறியது.
'மறுசீரமைப்பு முயற்சிகள்' என்பதன் மூலம், 2022 இல் இலங்கைக்கு வழங்கவிருந்த 2.9 பில்லியன் அமெரிக்க டொலர் அவசரகால பிணையெடுப்புக்காக அது கட்டளையிட்ட பொருளாதார 'மறுசீரமைப்பு' திட்டத்தை செயல்படுத்த வேண்டும் என்பதையே சர்வதேச நாணய நிதியம் அர்த்தப்படுத்துகிறது. அந்த வேலைத்திட்டம் இலங்கை முதலாளித்துவத்தின் இலாபத்தை வியத்தகு முறையில் அதிகரிப்பதையும், பூர்வீக ஆளும் வர்க்கம் பெற்ற கடன்களுக்கு உழைக்கும் மக்களை விலைகொடுக்க வைப்பதையும் இலக்காகக் கொண்டுள்ளது.
இது ஏற்கனவே ஒரு தண்டனைக்கு சமமான மின்சாரக் கட்டண அதிகரிப்பு, வருமான வரி மற்றும் விற்பனை வரி அதிகரிப்பு, அரச நிறுவனங்கள் துரித விற்பனை மற்றும் அரை மில்லியனுக்கும் அதிகமான அரச வேலைகளை அழிப்பதற்குமான கோரிக்கைகளை விளைவாக்கியுள்ளது.
ஜே.வி.பி. ஒரு ஏகாதிபத்திய சார்பு, இனவாதக் கட்சியாகும். பல தசாப்தங்களாக அரசியல் ஸ்தாபனத்தில் தன்னை ஒருங்கிணைக்க முயன்று வரும் ஜே.வி.பி. அதன் பாகமாக வலதுசாரி அரசாங்கங்களில் பங்குபற்றியதோடு ஆதரித்தும் வந்துள்ளது. 2022ல் ஜனாதிபதி கோட்டாபய இராஜபக்ஷவை அதிகாரத்தில் இருந்து விரட்டியடித்த, தொழிலாள வர்க்கத்தின் தலைமையிலான பாரிய மக்கள் எழுச்சியை அரசியல் ரீதியில் தடம் புரட்டுவதில் ஜே.வி.பி. ஒரு முக்கிய பங்கைக் கொண்டிருந்தது. எவ்வாறாயினும், இலங்கை மற்றும் சர்வதேச ஊடகங்கள் ஜே.வி.பி.யை 'இடதுசாரி' என்று பொய்யாக விளம்பரப்படுத்தி வந்துள்ளன. திசாநாயக்க கடந்த மாதம் ஜனாதிபதியாக தேர்ந்தெடுக்கப்பட்ட பின்னர் இவை அடிக்கடி அவரை 'சோசலிஸ்ட்' என்றும் 'மார்க்சிஸ்ட்' என்றும் கூட வருணித்தன.
திசாநாயக்க, பாரம்பரிய முதலாளித்துவக் கட்சிகள் மற்றும் நீண்டகாலமாக ஆதிக்கம் செலுத்திய சில ஊழல்மிக்க முதலாளித்துவக் குடும்பங்கள் மீதான வெகுஜன எதிர்ப்புக்கு அழைப்பு விடுத்ததன் மூலம் ஜனாதிபதி பதவியை வென்றார். அதே நேரம், அவர் சர்வதேச நாணய நிதிய சிக்கன திட்டத்தை செயல்படுத்த உறுதியளித்ததுடன், மறுபக்கம், அவர் ஜே.வி.பி./தே.ம.ச. அரசாங்கம் சர்வதேச நாணய நிதிய உடன்படிக்கை மீது 'மீண்டும் பேச்சுவார்த்தை நடத்தி' அது வெகுஜனங்களுக்கு, குறிப்பாக மிகவும் ஏழைகளுக்கு நன்மை பயக்கக் கூடியதாக ஆக்குவதாகவும் பொய் வாக்குறுதி கொடுத்தார்.
சர்வதேச நாணய நிதியம் தேர்தலுக்கு முன்னரும் பின்னரும் இலங்கை முதலாளித்துவத்தின் ஆபத்தான நிலை பற்றி எச்சரிக்கை விடுத்து, 2025 வரவு செலவுத் திட்டத்திலும் அதன் பின்னரும் வருமான மீதியை பாரியளவில் அதிகரிக்க வேண்டியதன் அவசியம் குறித்து வலியுறுத்தியதன் மூலம், எந்தவொரு மாற்றமும் முற்றிலும் சோடனையாக மட்டுமே இருக்கும் என்பதை சர்வதேச நாணய நிதியமும் உலக நிதி மூலதனமும் ஏற்கனவே வெட்டவெளிச்சமாக தெளிவுபடுத்தியுள்ளன.
கடந்த வியாழன் அன்று, வாஷிங்டனில் இருந்து பேசிய சர்வதேச நாணய நிதியத்தின் தலைமை செய்தித் தொடர்பாளர் ஜூலி கோசாக், 'முக்கியமான பாதிப்புகள் மற்றும் நிச்சயமற்ற தன்மைகள் அப்படியே உள்ளன, இதன் அர்த்தம் மறுசீரமைப்பு நடவடிக்கையை தொடர்வது மிகவும் முக்கியமானது,' என்றார்.
திசாநாயக்க மற்றம் ஏனைய இலங்கை அதிகாரிகளுடனுமான அதன் பேச்சுவார்த்தைகள் பற்றிய அதன் அக்டோபர் 4 அறிக்கையில், 'இலங்கையை பொருளாதார மீட்சிக்கான பாதையில் கொண்டு செல்ல உதவிய கடின வெற்றிகளைப் பாதுகாப்பது மற்றும் கட்டியெழுப்புவதன் முக்கியத்துவத்தை அவர்கள் ஒப்புக்கொண்டுள்ளனர்' என்று சர்வதேச நாணய நிதியம் கூறியது,
இந்த 'சிரமப்பட்டு வென்ற நன்மைகள்' எனப்படுபவை, மானிய வெட்டுக்கள், வேலை வெட்டுக்கள், விலைவாசி அதிகரிப்பு மற்றும் பெறுமதி சேர் வரி மற்றும் விற்பனை வரி அதிகரிப்புகள் மூலம் மக்கள் மீது திணிக்கப்பட்ட சுமைகளே தவிர வேறொன்றுமில்லை.
ஜனாதிபதி ஊடகப் பிரிவின்படி, 'இந்த வேலைத்திட்டத்தின் இலக்குகளை நிறைவேற்றுவதற்கு ஜனாதிபதி திசாநாயக்கவின் விருப்பத்தை சர்வதேச நாணய நிதியம் பாராட்டியதுடன், இலங்கை அரசாங்கத்தால் முன்மொழியப்பட்ட மாற்று அணுகுமுறைகள் குறித்து கலந்துரையாடவும் ஒப்புக்கொண்டது.'
இந்த 'மாற்று அணுகுமுறைகளை' பற்றி ஜனாதிபதி ஊடகப் பிரிவு விவரிக்கவில்லை என்றாலும், அவை சர்வதேச நாணய நிதிய வேலைத் திட்டத்தை பற்றி “மீண்டும் பேச்சுவார்த்தை நடத்துவதாக” ஜே.வி.பி./தே.ம.ச. கொடுத்த போலி வாக்குறுதிகளையே சுட்டிக் காட்டுகிறது.
இந்த 'மாற்று அணுகுமுறைகள்' பற்றிய பேச்சுவார்த்தைகள், சர்வதேச நாணய நிதியம் வழங்கவுள்ள பிணை எடுப்புப் பொதிக்கான மூன்றாவது மதிப்பாய்வின் ஒரு பகுதியாகவே எடுத்துக்கொள்ளப்படும் என்று, இரு தரப்பும் ஒப்புக்கொண்டன. சுமார் 350 மில்லியன் டொலர் பிணையெடுப்புக் கடனின் நான்காவது தவணையை விடுவிப்பதற்கான நிபந்தனைகளை இலங்கை அரசாங்கம் பூர்த்திசெய்துள்ளதா என்பதை தீர்மானிப்பதற்காகவே அந்த மீளாய்வு அமையும்.
மூன்றாவது ஆய்வு உடனடியாக தொடங்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனாலும், அமெரிக்க ஏகாதிபத்தியமானது திசாநாயக்க மற்றும் ஜே.வி.பி./தே.ம.ச.. அரசாங்கத்துடன் இணைந்து பணியாற்றத் தயாராக உள்ளது என்பதை அடிக்கோடிட்டுக் காட்டும் வகையில், இந்த ஆய்வை இந்த மாத இறுதி வரை அல்லது இலங்கையில் நவம்பர் 14 நடக்கும் பாராளுமன்றத் தேர்தலுக்குப் பின்னர் வரை ஒத்திவைக்க ஒப்புக்கொண்டுள்ளது.
செப்டம்பர் 23 அன்று பதவியேற்ற சில மணி நேரங்களிலேயே, இலங்கையின் நிறைவேற்று ஜனாதிபதி முறையின் எதேச்சாதிகார அதிகாரங்களைப் பயன்படுத்திக்கொண்ட திசாநாயக்க, பாராளுமன்றத்தின் பதவிக்காலம் முடிவடைவதற்கு ஆறு மாதங்களுக்கு முன்னரே அதைக் கலைத்தார்.
முன்கூட்டியே தேர்தல்களை நடத்துவதன் மூலம், ஜே.வி.பி./தே.ம.ச. அதன் தொழிலாள வர்க்க விரோத நிறம் அப்பட்டமாக வெளிப்படுத்துவதற்கு முன்னதாக தன் கையைப் வலுப்படுத்திக்கொள்ளவும், வெகுஜனங்களின் எதிர்ப்புக்கு முகங்கொடுத்து, சர்வதேச நாணய நிதிய சிக்கன நடவடிக்கைகளை தீவிரப்படுத்தவும் எதிர்பார்க்கின்றது. 2020 இல் தேர்ந்தெடுக்கப்பட்ட வெளியேறும் பாராளுமன்றத்தில், ஜே.வி.பி./தே.ம.ச. 225 ஆசனங்களில் 3.8% வாக்குகளை மட்டுமே பெற்றிருந்தது.
திசாநாயக்க, வெகுஜன அதிருப்தியை சந்திப்பதற்காக தனது அரசாங்கத்தை பலப்படுத்திக்கொள்கிறார் என்பது, ஜே.வி.பி./தே.ம.ச. இராணுவ-பாதுகாப்பு எந்திரத்தைத அரவனைத்துக்கொள்வது, அதன் 'பொருளாதார அபிவிருத்தி' வேலைத்திட்டத்தில் 'சட்டம் மற்றும் ஒழுங்கை' முன்னிறுத்துவதை மீண்டும் மீண்டும் பிரகடனப்படுத்துவது மற்றும் நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறையை ஒழிப்பதாக கூறிய அதன் முந்தைய வாக்குறுதிகளை எதுவும் கூறாமல் இருப்பதன் மூலம் மேலும் நிரூபிக்கப்பட்டுள்ளது.
சர்வதேச நாணய நிதியம் தனது மூன்றாவது மதிப்பாய்வை ஒத்திவைத்தமைக்கு நன்றி தெரிவித்த ஜனாதிபதி ஊடகப் பிரிவின் அறிக்கை, 'வரவிருக்கும் பொதுத் தேர்தல்கள் காரணமாக தாமதங்கள் ஏற்பட்டாலும், ஜனாதிபதி திசாநாயக்க, இந்த திட்டத்தை இடையூறு இல்லாமல் தொடரவும், மூன்றாவது மறுஆய்வு செயல்முறையை எளிதாக்கவும்,' சர்வதேச நாணய நிதியத்துக்கு உறுதியளித்துள்ளார், எனத் தெரிவித்தது.
ஜனாதிபதித் தேர்தலுக்கு முன்னதாக, சர்வதேச நாணய நிதிய தூதுக் குழுத் தலைவர் ப்ரூயர், நான்காவது தவணையை வெளியிடுவதற்கு அங்கீகாரம் அளிப்பதற்கான வரவிருக்கும் மூன்றாவது மதிப்பாய்வின் முன்நிபந்தனையானது, 2025 ஆம் ஆண்டில் வரவு செலவுத் திட்ட உபரியை 2023 இலிருந்து கிட்டத்தட்ட நான்கு மடங்கு அதிகரிப்பதற்கான, அதாவது மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 0.6 சதவீதத்தில் இருந்து 2.3 சதவீதம் அல்லது டொலர் 1.5 பில்லியனுக்கும் அதிகமாக.அதிகரிப்பதற்கான சாத்தியமான திட்டம் அவசியம் என்பதாகும் என்று கூறினார்.
இந்த இலக்கை அடைவதை உறுதிசெய்ய, 'பொருத்தமான வருவாய் நடவடிக்கைகள், தொடர்ச்சியான செலவினக் கட்டுப்பாடு ஆகியவற்றால்' அது ஊக்குவிக்கப்பட வேண்டும் என்று புரூயர் கூறினார்.
ஜே.வி.பி./தே.ம.ச. அரசாங்கத்தின் 'மறுசீரமைப்பு முயற்சிகளைத் தொடர்வதற்கான அர்ப்பணிப்பின்' மீதான நம்பிக்கையை வெளிப்படுத்தும் சர்வதேச நாணய நிதியத்தின் அறிக்கையானது, மேலதிக வரி அதிகரிப்புகளை சுமத்துதல், தனியார்மயமாக்கலையும் அரசாங்க தொழில் வெட்டுக்களையும் விரைவுபடுத்துதல், இலவச சுகாதார சேவைக்கும் இலவச கல்விக்குமான ஒதுக்கீடுகளை மேலும் வெட்டிக் குறைத்தல் ஆகிய நடவடிக்கைகள் மீதான நம்பிக்கையின் வெளிப்பாடாகும்.
கடந்த வார ஆலோசனைகளின் போது, சர்வதேச நாணய நிதியம், இலங்கை பெருவணிகத்தின் பேராசைமிக்க பிரதிநிதியும், பேர் போன அமெரிக்க-சார்பு கைக்கூலியுமான முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுடன் பேச்சுவார்த்தை நடத்தியே கடன் மறுசீரமைப்பு திட்டத்தையும் வெளிச்சம் போட்டுக் காட்டியது. இந்தத் திட்டத்தின் கீழ், 2022 வசந்த காலத்தில் கடனைத் திருப்பிச் செலுத்தத் தவறிய இலங்கை, சுமார் 12 பில்லியன் டொலர் சர்வதேசக் கடனைத் திருப்பிச் செலுத்துவது குறித்து மீண்டும் பேச்சுவார்த்தை நடத்தி, உலக மூலதனத்தின் கடன் சுறாக்களிடமிருந்து புதிய கடன்களைப் பெறுவதற்கான கதவைத் திறக்கும்.
சர்வதேச நாணய நிதியம் மற்றும் உத்தியோகபூர்வ கடன் வழங்குநர்கள் குழுவின் உடன்பாட்டுடன், இலங்கையின் புதிய சர்வதேச இறையாண்மை பத்திர பரிமாற்றத்தை நிர்வகிக்க அமெரிக்காவின் மூன்றாவது பெரிய வங்கியான சிடிபேங்க் நியமிக்கப்பட்டுள்ளது.
வெள்ளியன்று, திஸாநாயக்க, ஜே.வி.பி./தே.ம.ச. பிரதமர் ஹரினி அமரசூரியவும் வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத்தும், செப்டம்பர் 21 திசாநாயக்க தேர்வு செய்யப்பட்ட பின்னர் தீவுக்கு விஜயம் செய்த முதல் சிரேஷ்ட வெளிநாட்டு அதிகாரியான இந்தியாவின் வெளிவிவகார அமைச்சர் எஸ். ஜெய்சங்கருடன் பேச்சுக்களை நடத்தினர்.
இலங்கை ஊடகங்களின்படி, 'இந்தியாவின் தேசிய பாதுகாப்பு நலன்களுக்கு' முரணாக எதையும் செய்ய மாட்டோம் என்று ஜே.வி.பி./தே.ம.ச. இப்போது அடிக்கடி கூறி வரும் பொது உறுதிமொழியை ஜெய்சங்கரிடம் திசாநாயக்க மீண்டும் வலியுறுத்தினார்.
இது புதுடெல்லிக்கு மட்டுமான அர்ப்பணிப்பு அல்ல. மாறாக, இந்து சமுத்திரத்தின் பிரதான கப்பல் பாதைகளுக்கு நெருக்கமாக அமைந்துள்ள இலங்கையை, அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் சீனாவிற்கு எதிரான இராணுவ மூலோபாயத் தாக்குதலுடன் மேலும் ஒருங்கிணைக்க ஜே.வி.பி./தே.ம.ச. அரசாங்கத்தின் தயார்நிலையை வெளிப்படுத்துவதுமாகும்.
தெற்கு மற்றும் தென்கிழக்கு ஆசியாவில் வாஷிங்டனின் மிக முக்கியமான நட்பு நாடாக இந்தியா உள்ளது. அவற்றுக்கு இடையிலான சீன-விரோத கூட்டணி, கடந்த 15 ஆண்டுகளில் புது தில்லியின் வெளியுறவுக் கொள்கை மற்றும் உலகளாவிய புவிசார் அரசியல் மூலோபாயத்தின் அடிக்கல்லாக மாறியுள்ள இந்திய-அமெரிக்க 'உலகளாவிய மூலோபாய கூட்டாண்மை'யின் இன்றியமையாத அம்சமாகும்.
ஜப்பான் மற்றும் ஆஸ்திரேலியாவுடனான சீன-விரோத குவாட் உட்பட இந்திய-அமெரிக்க கூட்டணியை வலுப்படுத்துவது பற்றி வாஷிங்டனில் அமெரிக்க இராஜாங்கச் செயலாளர் அண்டனி பிளிங்கன் மற்றும் இதர அமெரிக்க அதிகாரிகளுடன் விரிவான பேச்சுவார்த்தைகளை நடத்தியதன் பின்னணியிலேயே ஜெய்சங்கரின் கொழும்பு பயணம் இடம்பெற்றது. ஜெய்சங்கரும் பிளிங்கனும் அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் உலகப் போரில் ஏனைய இரண்டு முனைகளில் -அதாவது அமெரிக்கா-நேட்டோ ரஷ்யாவிற்கு எதிராக தூண்டிவிட்ட போர் மற்றும் மத்திய கிழக்கை மீண்டும் பிரிப்பதற்கான இஸ்ரேலிய உந்துதலும்- இந்தியாவின் அணுகுமுறை மற்றும் வகிபாகம் பற்றி கலந்துரையாடினர்.
அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடனின் வாழ்த்துச் செய்திக்கு பதிலளிக்கும் வகையில், ஜே.வி.பி./தே.ம.ச. தலைவர் திசாநாயக்க, வாஷிங்டனின் கொள்ளையடிக்கும் திட்ட நிரலுக்கு தனது விசுவாசத்தை அறிவித்தார் என்பதையும் கவனத்தில் கொள்ள வேண்டும். போர், உலகின் அதிக மக்கள்தொகை மற்றும் வேகமாக வளந்து வரும் பிராந்தியங்களில் ஆதிக்கம் செலுத்துவது உட்பட அனைத்து வழிகளிலும் அதன் லட்சியத்தை தக்கவைத்துக்கொள்வதைப் பற்றி பேசும்போது, வாஷிங்டன் பயன்படுத்தும் வஞ்சத்தனமான சூத்திரத்தைப் பயன்படுத்திய திசாநாயக்க, 'அமைதியான, பாதுகாப்பான மற்றும் செழிப்பான இந்தோ-பசிபிக் பிராந்தியத்திற்காக' அமெரிக்காவுடன் இணைந்து பணியாற்றுவதற்கு இலங்கையின் புதிய அரசாங்கம் அர்ப்பணிப்புடன் இருப்பதாக கூறினார்.
மேலும் படிக்க
- ஜனாதிபதி திசாநாயக்க தேசத்திற்கு ஆற்றிய உரை - பூகோள மூலதனத்திற்கும் இலங்கை பெருவணிகத்திற்குமான ஒரு அர்ப்பணிப்பு
- இலங்கை தேர்தல்: ஆழமடைந்து வரும் புரட்சிகர நெருக்கடிக்கு மத்தியில் முதலாளித்துவத்தை பாதுகாக்கும் பொறுப்பை ஜே.வி.பி. ஏற்றுக்கொண்டுள்ளது
- சர்வதேச நாணய நிதிய குழு அடுத்த இலங்கை ஜனாதிபதிக்கு கட்டளை விதிக்கின்றது
- இலங்கையில் ஜே.வி.பி./தே.ம.ச. தலைவர் சர்வதேச நாணய நிதியத்தின் சிக்கன நடவடிக்கைகளை அமுல்படுத்துவதாக உறுதியளிக்கிறார்
