மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம்
சாமானிய தொழிலாளர்களின் கட்டுப்பாட்டிற்கான போராட்டத்தை முன்னெடுக்கவும்! (406) 414-7648 க்கு குறுஞ்செய்தி அனுப்புவதன் மூலமோ, boeingworkersrfc@gmail.com மின்னஞ்சல் செய்வதன் மூலமோ அல்லது இந்த கட்டுரையின் முடிவில் படிவத்தை நிரப்புவதன் மூலமோ போயிங் தொழிலாளர்கள் சாமானிய தொழிலாளர் குழுவில் இணைய முடியும்.
போயிங் மற்றும் சர்வதேச இயந்திரவியலாளர் சங்கம் (IAM) ஆகிய இரு தலைமைக்கும் இடையிலான அரசாங்க மத்தியஸ்தத்துடனான சமீபத்திய சுற்றுப் பேச்சுவார்த்தைகள் செவ்வாய்க்கிழமையன்று முறிந்தன. செப்டம்பர் 23 அன்று நிறுவனம் நேரடியாக உறுப்பினர்களுக்கு அனுப்பிய முன்மொழிவை திரும்பப் பெற்றதுடன் இது முடிவடைந்தது. வாஷிங்டன், ஓரிகான் மற்றும் கலிபோர்னியாவில் சுமார் 33,000 இயந்திரவியலாளர்கள் வேலைநிறுத்தத்தில் தங்களது நான்காவது வாரத்தை நிறைவு செய்ய உள்ளனர்.
ஒருவரை ஒருவர் குற்றம் சாட்டும் நிலையில், IAM “எங்கள் முன்மொழிவுகளை தீவிரமாகப் பரிசீலிக்கவில்லை” என்று போயிங் கூறியது. அதே வேளையில், அந்த விமானத் தொழிற்துறை பெருநிறுவனமானது “ஊதிய உயர்வுகள், விடுமுறை/மருத்து விடுப்பு நேரத்திரட்டல், பதவி உயர்வு, ஒப்புதல் ஊக்கத்தொகை” ஆகியவற்றை முன்மொழியவோ அல்லது நிறுவன ஓய்வூதியங்களை மீண்டும் அறிமுகப்படுத்தவோ மறுத்துவிட்டது என்று தொழிற்சங்கத் தலைமை தெரிவித்தது.
போயிங் திரும்பப் பெற்ற முன்மொழிவு தொழிலாளர்களின் உறுதிப்பாட்டைச் சோதிக்க வடிவமைக்கப்பட்ட ஒரு சோதனை முயற்சியாகும். இது 30 சதவீத ஊதிய உயர்வை உள்ளடக்கியது, இது தொழிலாளர்கள் கோரும் 40 சதவீத ஊதிய உயர்வைவிடக் குறைவானது. 2014இல் IAM ஆனது வலுக்கட்டாயமாக நிறைவேற்றிய 10 ஆண்டு ஒப்பந்த நீட்டிப்பில் தங்களிடமிருந்து பறிக்கப்பட்ட ஓய்வூதியங்களை மீண்டும் வழங்க வேண்டும் என்றும் தொழிலாளர்கள் கோரி வருகின்றனர்.
முக்கிய பாதுகாப்பு ஒப்பந்ததாரர் மீதான வேலைநிறுத்தத்தை முடிவுக்குக் கொண்டுவர IAM தொழிற்சங்க இயந்திரத்துடன் இணைந்து செயல்பட்டு வரும் மாளிகையையும் அது நம்பியிருக்கலாம் என்பது போயிங் நிறுவனத்திற்கும் தெரியும். கடந்த வாரம், மூன்று நாட்களுக்குப் பின்னர், கிழக்குக் கடற்கரை துறைமுக வேலைநிறுத்தத்தை முடிவுக்குக் கொண்டுவர சர்வதேச நெடுங்கடலோர தொழிலாளர் சங்கத்துடன் (ILA) இணைந்து செயல்பட்டது. இந்த நகர்வை “பைடென் நிர்வாகத்தை மீட்பதற்கும், அமெரிக்காவின் உலகளாவிய போர்களுக்கான ஆயுதப் பாய்ச்சலை உறுதி செய்வதற்காகவும் தொழிற்சங்கம் [விரைந்தது]” என உலக சோசலிச வலைத் தளம் விவரித்தது.
ஒரு போயிங் தொழிலாளி WSWS-க்குக் கூறுகையில், “இது வெறும் பைத்தியக்காரத்தனம், அவர்களால் முடிந்தவரை இதை நீட்டித்துக் கொண்டிருக்கிறார்கள். அவர்கள் வணிகத்திற்குத் திரும்ப விரும்புவார்கள் என்று நீங்கள் நினைக்கலாம். ஆனால் மாறாக, குழந்தைகள் விளையாட்டு விளையாடி பணத்தை இழக்கிறார்கள்!
“இது அவர்களின் முதல் அனுபவம் அல்ல! தொழிற்சங்கம் முதல் நாளிலேயே 40 சதவீத ஊதிய உயர்வைக் கோரியிருக்க வேண்டும் என்று நான் நினைக்கிறேன். தற்போதைய பணவீக்கத்தை ஈடுகட்ட நான்கு ஆண்டுகள் போதாது! நான்கு ஆண்டுகளுக்குப் பிறகு இது இன்னும் அதிகமாக இருக்கக்கூடும்!”
வேலைநிறுத்தத்தின் விளைவாக போயிங் ஒரு மாதத்திற்கு சுமார் 3.5 பில்லியன் டாலர் இழப்பை எதிர்கொள்கிறது. அதே நேரத்தில், S&P குளோபல் ரேட்டிங்ஸ் நிறுவனத்தின் கடன் மதிப்பீட்டை மதிப்பற்ற நிலைக்குக் குறைக்க பரிசீலித்து வருகிறது. கடந்த மாதம் 33 விமானங்களை மட்டுமே வழங்க முடிந்தது, அவற்றில் 10 ஏற்கனவே வேலைநிறுத்தத்திற்கு முன்னரே தயாராக இருந்தன.
எனினும், போயிங் நிர்வாகிகள் தொழிலாளர்களை விட நீண்ட காலம் தாக்குப்பிடிக்க முடியும் என்று நம்புவதாகத் தெரிகிறது. வேலைநிறுத்தம் நடைபெறும் ஆலைகளில் உள்ள பொறியியல் பணியாளர்களை தற்காலிக விடுப்பில் அனுப்புவது, மேலும் பணம் திரட்ட 10 பில்லியன் டாலர் மதிப்புள்ள பங்குகளை விற்பதை பரிசீலிப்பது என்பன உள்ளிட்ட பண இருப்பைப் பராமரிக்க அவர்கள் ஏற்கனவே நடவடிக்கைகள் எடுத்துள்ளனர்.
இஸ்ரேலிய இனப்படுகொலை மற்றும் உக்ரேனில் பினாமிப் போர் ஆகியவற்றிற்கு வெள்ளை மாளிகை உதவியால் பெருகியுள்ள அதன் பாரிய பாதுகாப்பு ஒப்பந்தங்களில் இருந்து வரும் பணத்தையும் நிறுவனமானது நம்பியிருக்கு முடியும். போயிங்கின் பாதுகாப்பு ஒப்பந்தத்தின் மதிப்பு 34 பில்லியன் டாலராக உயர்ந்துள்ளது. இது விமானம் மற்றும் குண்டுகளின் விற்பனையின் விளைவாக கடந்த ஆண்டை விட ஏறத்தாழ இரட்டிப்பாகியுள்ளது என்பதை பாதுகாப்புத் துறையின் தரவுகள் சுட்டிக்காட்டுகின்றன.
வேலைநிறுத்த கொடுப்பனவை வாரத்திற்கு $750 ஆக மும்மடங்காக்கும் கோரிக்கை!
இந்த நாடுகடந்த பெருநிறுவனத்தை எதிர்த்துப் போராட அவர்களை அனுமதிக்கும் வகையில் வேலைநிறுத்தத்தை போதுமான அளவு ஏற்பாடு செய்வதை தொழிலாளர்கள் கோர வேண்டும். குறிப்பாக, வேலைநிறுத்த கொடுப்பனவை வாரத்திற்கு 750 டாலராக உடனடியாக உயர்த்துமாறு அவர்கள் கோர வேண்டும்.
IAM அதிகாரத்துவமானது நனவுபூர்வமாக வேலைநிறுத்த கொடுப்பனவான 250 டாலர் வேலைநிறுத்த கொடுப்பனவால் தொழிலாளர்களைப் பட்டினி போட முயன்று வருகிறது. செப்டம்பர் மாத இறுதியில் முடிவடைந்த உறுப்பினர்களின் சுகாதாரக் காப்பீட்டிற்கு அவர்கள் எந்த நேரடி ஆதரவையும் வழங்கவில்லை. அற்பமான வேலைநிறுத்த கொடுப்பனவின் காரணமாக வேலைநிறுத்தத்தின் போது பலர் தங்களைத் தாங்கிக்கொள்ள இரண்டாவது வேலைகளைப் பெற வேண்டியிருந்தது என்று சமூக ஊடகங்களில் தொழிலாளர்கள் பரவலாகக் கருத்து தெரிவித்துள்ளனர்.
மாவட்டம் 751-ல் 79 மில்லியன் டாலர் சொத்துக்கள் உள்ளன, மேலும் தொழிலாளர்களின் சந்தாப் பணத்திலிருந்து நிதியளிக்கப்பட்ட 300 மில்லியன் டாலரை சர்வதேச இயந்திரவியலாளர் சங்கம் (IAM) வைத்துள்ளது என்ற உண்மை இருந்தபோதிலும் இந்நிலை நிலவுகிறது. இது ஒவ்வொரு போயிங் வேலைநிறுத்தக்காரருக்கும் வாரத்திற்கு 750 டாலர் வீதம் 15 வாரங்களுக்கு வேலைநிறுத்த கொடுப்பனவாக வழங்கப் போதுமானதாகும்.
வேலைநிறுத்தக்காரர்கள் பிழைப்புக்காக ஊபர் ஓட்டுநர்களாக வேலை செய்ய வேண்டியிருக்கும் அதேவேளையில், மாவட்டம் 751 இன் தலைவர் ஜோன் ஹோல்டன் தொடர்ந்து தனது ஆடம்பரமான 225,000 டாலர் ஊதியத்தைப் பெறுகிறார். கூட்டாட்சி அரசின் பதிவுகளின்படி, தொழிற்சங்க சர்வதேச தலைவர் பிரையன் பிரையன்ட்டின் முன்னோடியான ராபர்ட் மார்டினெஸ் கடந்த ஆண்டு 668,000 டாலர் சம்பாதித்துள்ளார்.
மொத்தத்தில், கடந்த ஆண்டு IAM இன் தேசிய தலைமையகம் மட்டும் 214 மில்லியன் டாலருக்கும் அதிகமாக செலவிட்டுள்ளது. இதில் 55 மில்லியன் டாலர் “பிரதிநிதித்துவ நடவடிக்கைகளுக்கு” (ஊதியங்கள்), 3.3 மில்லியன் டாலர் “அரசியல் நடவடிக்கைகள் மற்றும் பரப்புரை செய்தலுக்கு”, 17.9 மில்லியன் டாலர் “பொதுவான மேல்நிலைச் செலவுகளுக்கு”, 30.5 மில்லியன் டாலர் “தொழிற்சங்க நிர்வாகத்திற்கு” மற்றும் வெறும் 556,786 டாலர் மட்டுமே வேலைநிறுத்தப் கொடுப்பனவுகளுக்காக செலவிடப்பட்டுள்ளது.
போயிங் வேலைநிறுத்தத்தின் நான்காவது வார முடிவில், தொழிற்சங்கமானது வேலைநிறுத்த கொடுப்பனவாக வெறும் 16.5 மில்லியன் டாலர் மட்டுமே செலவிட்டிருக்கும். இது கடந்த ஆண்டு தொழிற்சங்க சர்வதேச அமைப்பு தனது சிறிய அளவிலான அதிகாரிகளுக்கு வழங்கியதில் மூன்றில் ஒரு பங்கிற்கும் குறைவாகும்.
போயிங் தொழிலாளர்கள் தங்கள் பணமானது வேலைநிறுத்தத்திற்கு பயன்படுத்தப்பட வேண்டும் என்று கோர வேண்டும்! கடந்த மாதம், போயிங் தொழிலாளர்களின் சாமானியத் தொழிலாளர் குழு வெளியிட்ட ஒரு அறிக்கை பின்வருமாறு அறிவித்தது:
IAM கட்டுப்பாட்டிலுள்ள 300 மில்லியன் டாலர் சொத்துக்கள் உறுப்பினர்களுக்குச் சொந்தமானவை ஆகும். அந்தப் பணம் தொழிற்சங்க அதிகாரிகளுக்கு உயர் ஊதியம் வழங்கவோ, போயிங்கின் கைக்கூலிகளான அரசியல்வாதிகளின் பிரச்சாரங்களுக்கு நிதியளிக்கவோ அல்லது புதிய தொழிற்சங்கத் தலைமையகங்களுக்குப் பணம் செலுத்தவோ பயன்படுத்தப்படக் கூடாது.
உயர்மட்ட IAM அதிகாரிகளின் ஊதியங்கள் வேலைநிறுத்தம் செய்யும் தொழிலாளர்கள் பெறும் அளவிற்கு உடனடியாகக் குறைக்கப்பட வேண்டும் என்று நாங்கள் பரிந்துரைக்கிறோம். இதில் அடங்குபவை: IAM இன் சர்வதேசத் தலைவர் ராபர்ட் மார்டினெஸ் (2023இல் 668,000 டாலர் ஊதியம் பெற்றதாக அறிவிக்கப்பட்டது) மற்றும் ஹோல்டனின் 225,000 டாலர் ஊதியம் பெற்றார். மேலும், IAM தனது நூற்றுக்கணக்கான மில்லியன் டாலர் மதிப்புள்ள அசையாச் சொத்துக்கள் மற்றும் பங்குச் சந்தை முதலீடுகளைப் பிணையமாகப் பயன்படுத்தி, நமக்குத் தேவையான அளவு பணம் செலுத்தப் போதுமான அளவு கடன் பெற முடியும்.
போயிங் தொழிலாளர்கள் தங்கள் போராட்டத்திற்குப் போதிய ஆதரவு வேண்டும் என்று கோருவதோடு, தொழிலாளர்களின் பிற முக்கியப் பிரிவுகளுடன் போராடும் ஒற்றுமையை உருவாக்க வேண்டும். கிழக்குக் கடற்கரை துறைமுகத் தொழிலாளர்களுக்கு மேலதிகமாக, கடந்த மாத அறிக்கை குறிப்பாகப் பின்வருவனவற்றைச் சுட்டிக்காட்டியது: அதாவது “கடந்த மாதம் தங்கள் தொழிற்சங்கம் கொண்டுவந்த ஒப்பந்தத்தை நிராகரிக்க வாக்களித்த அலாஸ்கா ஏர்லைன்ஸ் விமானப் பணியாளர்கள், நமது ஒப்பந்தத்தைப் போன்ற IAM ஆதரவு ஒப்பந்தத்தை நிராகரித்து வாக்களித்த கன்சாஸில் வேலைநிறுத்தம் செய்யும் டெக்ஸ்ட்ரான் ஏவியேஷன் தொழிலாளர்கள், வேலை இழப்பு மற்றும் ஒற்றை நபர் குழுக்களுக்கு எதிராகப் போராடும் இரயில்வே தொழிலாளர்கள், பள்ளி மூடல்களுக்கு எதிராகப் போராடும் சியாட்டிலுள்ள ஆசிரியர்கள் [மற்றும்] சியாட்டில் மற்றும் டகோமாவில் போயிங் உதிரிப்பாகங்கள் கொண்ட கொள்கலன்களைக் கையாள்வதை நிறுத்தத் துறைமுகத் தொழிலாளர்கள் விரும்புகின்றனர்.”
குறிப்பாக, போயிங் தொழிலாளர்கள், இரயில்வே தொழிலாளர்களின் சாமானியக் குழு (RWRFC) மூலமாக இரயில்வே தொழிலாளர்களுடன் கூட்டு நடவடிக்கையை ஒழுங்கமைக்க வேண்டும். இக்குழுவானது இரயில்வே தொழிற்சங்கங்கள் திணிக்க முயலும் துரோக ஒப்பந்தங்களுக்கு எதிராகப் போராடி வருகிறது. புதன்கிழமையன்று ஒரு அறிக்கையில், RWRFC ஆனது பின்வருமாறு அறிவித்தது: “தொழிலாள வர்க்கத்தின் வலிமையானது நமது எண்ணிக்கையின் பலத்தில் உள்ளது. நமது பலத்தை அதிகபட்சமாக்க, நாம் இரயில்வேத் துறை முழுவதும் மட்டுமல்லாமல், அமெரிக்கா மற்றும் உலகெங்கிலும் உள்ள பிற தொழில்துறைகளின் தொழிலாளர்களுடனும் ஒன்றிணைய வேண்டும், அவர்களும் துரோகங்களுக்கு எதிராகப் போராடி வருகின்றனர்.”
முன்முயற்சி எடுக்கும் வரை தொழிலாளர்கள் காத்திருக்க முடியாது. IAM அதிகாரத்துவமானது வேலைநிறுத்தத்தின் கட்டுப்பாட்டைத் தொடர்ந்தால், அது இரண்டு வழிகளில் ஒன்றில் முடிவடையும்: ஒன்று, அதிகாரத்துவமானது தொழிலாளர்களை சோர்வடையச் செய்து, கடந்த மாதம் தொழிலாளர்கள் நிராகரித்த ஒப்பந்தத்திற்கு மிக ஒத்த ஒரு ஒப்பந்தத்தை வலுக்கட்டாயமாக ஏற்க வைக்கும்; அல்லது பைடென் நிர்வாகம் ஒரு நீதிமன்றத் தடை உத்தரவு மூலமாகவோ அல்லது உண்மையில் தடை உத்தரவுக்குச் சமமான மத்தியஸ்தம் மூலமாகவோ அதை முடிவுக்குக் கொண்டுவர நிர்பந்திக்கும்.
பெருநிறுவனம் என்ன செய்ய முடியும் என்று கூறுகிறதோ அதைத் திணிப்பதற்கு மாறாக, பெருநிறுவன அடிமைத்தனத்திற்கு எதிராக தொழிலாள வர்க்கத்தின் வலிமையை அணிதிரட்டுவதன் அடிப்படையில், போயிங் சாமானிய தொழிலாளர் குழுவை ஒரு மாற்றுத் தலைமையாக அபிவிருத்தி செய்வதே அவசியாமாக இருக்கிறது.