மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம்.
கடந்த புதன்கிழமையன்று போயிங் தொழிலாளர்களில் 64 சதவீதம் பேர், விற்றுத்தள்ளப்பட்ட ஒப்பந்தத்தை நிராகரித்தது என்பது வர்க்கப் போராட்டத்தில் ஒரு முக்கிய மைல் கல்லாகும். 33,000 க்கும் அதிகமான தொழிலாளர்கள், அவர்களின் சக்திவாய்ந்த ஆறு வார வேலைநிறுத்தத்தை முடிவுக்குக் கொண்டுவருவதற்காக, அரசாங்கத்தால் மத்தியஸ்தம் செய்யப்பட்ட உடன்படிக்கையை ஏற்றுக்கொள்வதற்கு, மிரட்டலுக்கு மத்தியில் அடிபணிய மறுத்துள்ளனர்.
இந்த ஒப்பந்த முன்மொழிவு, ஒரு பெருநிறுவன சர்வாதிகாரத்திற்கு ஒப்புதல் கொடுப்பதற்கு ஒப்பானதாகும். பணவீக்கத்தை ஈடுசெய்யாத தரமற்ற ஊதிய உயர்வுகள் மற்றும் ஒரு தசாப்தகால ஊதியம் முடக்கம் ஆகியவற்றுடன் கூடுதலாக, 2014 ஒப்பந்த நீட்டிப்பில் தொழிலாளர்களிடமிருந்து திருடப்பட்ட ஓய்வூதியங்களையும் இது மீட்டெடுக்கவில்லை. எல்லாவற்றையும் விட மோசமானது என்னவென்றால், 17,000 ம் அறிவிக்கப்பட்ட பணிநீக்கங்கள் மற்றும் அதன் 737 ரக விமானத்தின் மீதான பாரிய பாதுகாப்பு நெருக்கடியின் செலவை, தொழிலாளர்களின் முதுகில் சுமத்த முயற்சிப்பதாகும். இது போயிங் நிறுவனத்தால் திட்டமிடப்பட்ட இன்னும் அதிகமான தாக்குதல்களுக்கு அனுமதி வழங்கியிருக்கும்.
இந்த வாக்களிப்பு போயிங் நிர்வாகத்திற்கும், அத்துடன் எந்திரவியலாளர்களின் சர்வதேச சங்கத்தின் (IAM) அதிகாரத்துவத்திற்கும் ஒரு அதிர்ச்சியூட்டும் அடியாகும். IAM அதிகாரிகள் முதலில் ஒரு வேலைநிறுத்தத்தை விரும்பவில்லை. அப்போதிருந்து, அவர்கள் அற்ப வேலைநிறுத்த ஊதியத்தைக் கொண்டு தொழிலாளர்களின் பலத்தை உறிஞ்ச முயன்றுள்ளனர். அதேவேளையில், மறியல் அணிவகுப்புகளில் போதுமான பணியாளர்களை நியமிக்க மறுத்ததுடன், டெக்ஸ்ட்ரான் ஏவியேஷனில் நடந்த ஒரு இணையான வேலைநிறுத்தத்தை முடிவுக்குக் கொண்டு வந்தனர்.
ஒரு முக்கிய பாதுகாப்பு ஒப்பந்தக்காரருக்கு எதிரான வேலைநிறுத்தத்தை முடிவுக்குக் கொண்டுவர தொழிற்சங்க அதிகாரிகளை நம்பியிருந்த பைடென் நிர்வாகத்திற்கும் இந்த வாக்களிப்பு ஒரு அடியாகும். ஆளும் வர்க்கம் வேலைநிறுத்தத்தை ஒரு 'தேசிய பாதுகாப்பு' பிரச்சினையாக பார்க்கிறது என்ற உண்மையை இரகசியமாக வைக்கவில்லை. அமெரிக்க ஏகாதிபத்தியம் ஈரானுடன் ஒரு புதிய, செல்வாக்கற்ற மற்றும் பேரழிவுகரமான போரைத் தொடங்கும் விளிம்பில் இருப்பதால், தேர்தலுக்குப் பிறகு இன்னும் கூடுதலான போர்த் திட்டங்களைத் தொடங்கும் நிலையில், விநியோகச் சங்கிலிகளை விடுவிப்பதற்கும் உள்நாட்டு எதிர்ப்பைச் சமாளிப்பதற்கும் அதற்கு உள்நாட்டில் 'தொழிலாளர் அமைதி' தேவை.
இப்போது, போயிங் வேலைநிறுத்தத்தைப் பாதுகாக்க, உலகெங்கிலுமான தொழிலாளர்கள் இணைய வேண்டிய கடமையாகும். தொழிலாளர்கள் வெகுஜன நடவடிக்கைகள், மறியல் போராட்டங்கள் மற்றும் ஆர்ப்பாட்டங்களை உள்ளடக்கிய ஒரு பரந்த பிரச்சாரத்தை ஒழுங்கமைக்க வேண்டும். அமெரிக்காவிலும் சர்வதேச அளவிலும், பெருநிறுவன செல்வந்த தட்டுக்களுக்கு ஒரு பாரிய தோல்வியை வழங்குவதற்காக தொழிலாள வர்க்கத்தின் பிரம்மாண்டமான சமூக சக்தி செயலூக்கப்படுத்தப்பட வேண்டும்.
இது பெருநிறுவன-சார்பு தொழிற்சங்க அதிகாரத்துவத்திற்கு எதிரான ஒரு நனவான கிளர்ச்சியின் மூலமாக மட்டுமே ஒழுங்கமைக்கப்பட முடியும். 'கடந்த மாதத்தில் ஏதாவது நிரூபிக்கப்பட்டிருக்கிறது என்றால், அது தொழிற்சங்கங்களில் உள்ள அதிகாரத்துவத்தின் சர்வாதிகாரமே நமது ஐக்கியத்திற்கான முக்கிய தடையாக உள்ளது' என்று போயிங் தொழிலாளர்களின் சாமானிய தொழிலாளர் குழு விடுத்த அதன் அறிக்கையில், ஒப்பந்தத்தை நிராகரிக்குமாறு தொழிலாளர்களை வலியுறுத்தியது. 'தொழிற்சங்க எந்திரத்தில் இருந்து தொழிலாளர்களுக்கு நாமே அதிகாரத்தை மாற்றுவதற்கான ஒரு பரந்த முறையீட்டை சாமானிய தொழிலாளர் கிளர்ச்சியுடன் இணைக்க வேண்டும்.'
சாமானிய தொழிலாளர் குழுக்களின் சர்வதேச தொழிலாளர் கூட்டணியை (IWA-RFC) கட்டியெழுப்புவதன் மூலம், தொழிலாள வர்க்கத்தின் சுயாதீனமான பலத்தை அணிதிரட்ட வேண்டும். பொறுப்பற்ற பெருநிறுவன-அரசு தொழிற்சங்க எந்திரத்தின் பிடியை உடைத்து, தொழிலாள வர்க்கத்தின் மிகப்பெரிய சமூக சக்தியை கட்டவிழ்த்துவிட, சாமானிய தொழிலாளர்களின் உலகளாவிய கிளர்ச்சி அவசியமாகும். உலகெங்கிலும் உள்ள தொழிலாளர்கள், பெருமளவிலான வேலை வெட்டுக்களை எதிர்கொள்ளும் வாகனத் தொழிலாளர்கள் முதல் இரயில் பாதைகள், அஞ்சல் மற்றும் தளவாடத் தொழிலாளர்கள் வரை தங்கள் சொந்த விற்றுத்தள்ளும் ஒப்பந்தங்களை எதிர்த்துப் போராடி வருகின்றனர்.
குறிப்பாக, விற்றுத்தள்ளப்பட்ட ஒப்பந்தத்தை சமீபத்தில் நிராகரித்துள்ள பிரேசிலில் உள்ள எம்ப்ரேயர் தொழிலாளர்கள், பாரிய வேலைநீக்கங்களுக்கு எதிராக போராடும் எயர்பஸ் தொழிலாளர்கள் மற்றும் அமெரிக்கா மற்றும் பிரிட்டனில் வேலைநிறுத்தங்களில் ஈடுபட்டுள்ள ஒரு பிரதான போயிங் விநியோகஸ்தர் நிறுவனமான ஈட்டன் இல் விமானத்துறை தொழிலாளர்கள் உட்பட உலகளாவிய விமானத்துறை தொழிலாளர்களுக்கு வேண்டுகோள் விடுக்கப்பட வேண்டும்.
தொழிலாளர்களின் பரந்த பிரிவுகளின் ஒரு ஐக்கியப்பட்ட இயக்கத்திற்கான சாத்தியக்கூறு கடந்த வியாழன் இரவு எடுத்துக்காட்டப்பட்டது. ஐந்து வாரங்களுக்கும் மேலாக வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ள மிச்சிகனில் 500 க்கும் அதிகமான ஈட்டன் தொழிலாளர்கள், UAW ஆல் மீண்டும் கொண்டு வரப்பட்ட ஒரு விற்றுத்தள்ளப்பட்ட ஒப்பந்தத்தை, அவர்கள் முதல் ஒப்பந்தத்தை நிராகரித்ததை விட இன்னும் அதிக வித்தியாசத்தில் நிராகரித்தனர். IAM இன் உறுப்பினர்களாக இருக்கும் மற்றொரு 400 ஈட்டன் தொழிலாளர்கள் இந்த வார தொடக்கத்தில் இல்லிநோய்ஸில் வெளிநடப்பு செய்தனர்.
போயிங் வேலைநிறுத்தம் மிக சமீபத்திய அறிகுறி மட்டுமே என்ற நிலையில், அமெரிக்காவில் வர்க்க போராட்டத்தின் வளர்ச்சியானது உலகளாவிய தாக்கங்களைக் கொண்டுள்ளது. அமெரிக்கத் தொழிலாள வர்க்கத்திடையே பெருகிவரும் விட்டுக்கொடுக்காத தன்மை, உறுதிப்பாடு மற்றும் நம்பிக்கை ஆகியவை, ஒவ்வொரு நாட்டிலும் உள்ள தொழிலாளர்களுக்கும், அடக்குமுறைக்கு எதிராகப் போராடும் அனைவருக்கும் ஆதரவான சக்திகளின் சமநிலையை மாற்றும்.
குறிப்பாக, ஒரு பாதுகாப்பு ஒப்பந்த நிறுவனம் மூடப்பட்டமையானது, தொழிலாள வர்க்கத்தை போருக்கு எதிராக எவ்வாறு அணிதிரட்ட முடியும் என்பதைக் காட்டுகிறது. காஸாவில் தீவிரமடைந்து வரும் இனப்படுகொலை மற்றும் மத்திய கிழக்கு முழுவதிலும் போரை நடத்த இஸ்ரேலிய இராணுவத்திற்கு செல்லும் தளவாடங்களை நகர்த்த கிரேக்கத்தில் துறைமுகத் தொழிலாளர்கள் மறுத்த சில நாட்களுக்குப் பின்னர் போயிங் வாக்கெடுப்பு வந்துள்ளது.
முன்னொருபோதும் இல்லாத வர்க்க ஆட்சியின் நெருக்கடியால் குணாம்சப்படுத்தப்பட்ட அமெரிக்க ஜனாதிபதித் தேர்தலுக்கு இரண்டு வாரங்களுக்கும் குறைவான காலத்திற்கு முன்னர் போயிங் வாக்கெடுப்பு நடந்துள்ளது. ட்ரம்பும் குடியரசுக் கட்சியினரும் தங்களுக்கு சாதகமாக இல்லாத எந்தவொரு முடிவையும் நிராகரிக்க சதி செய்கின்ற அதேவேளையில், பாசிசவாத வன்முறையையும் தூண்டி வருகின்றனர். இதற்கிடையில், ஜனநாயகக் கட்சியினர் முதன்மையாக உலகப் போரைத் தீவிரப்படுத்துவதில் கவனம் செலுத்துகின்றனர், இதில் ஈரானுக்கு எதிரான இராணுவத் தாக்குதல்கள் தேர்தல் நாளுக்கு முன் ஏற்படக்கூடும்.
தொழிலாள வர்க்கத்தை அதன் சொந்த சுயாதீனமான நலன்களின் அடிப்படையில் அணிதிரட்டுவதுதான் முதலாளித்துவ பிற்போக்குத்தனத்திற்கு எதிரான ஒரே தீர்வு என்பதை போயிங் வாக்குப்பதிவு காட்டுகிறது.
ஓய்வூதியங்களை மீட்டமைப்பது போயிங் தொழிலாளர்களின் ஒரு மத்திய கோரிக்கையாக ஆகியிருக்கிறது என்பது மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாகும். எல்லா இடங்களிலும் உள்ள தொழிலாளர்களுக்கு பாதுகாப்பான ஓய்வுக்காலம், கெளரவமான வாழ்க்கைத் தரம் ஆகியவற்றிற்கான உரிமை உண்டு என்ற கொள்கைக்காக அவர்கள் போராடி வருகின்றனர்.
போயிங் இயக்கத்தின் பின்னணியில் உள்ள இயக்கம், பாதுகாப்பான ஓய்வுக்காலத்திற்கான உரிமை, வேலை மற்றும் வாழ்வதற்கு ஏற்ற வருமானத்திற்கான உரிமை, கண்ணியமான மற்றும் கட்டுபடியாகக்கூடிய வீட்டுவசதி, போதுமான ஓய்வு நேரம், உயர்தர சுகாதாரப் பாதுகாப்பு மற்றும் பிறவற்றிற்கான உரிமை உட்பட தொழிலாளர்களுக்கு பிரிக்க முடியாத சமூக உரிமைகள் உள்ளன என்ற கொள்கைக்கான நனவான போராட்டத்தின் வடிவத்தை எடுக்க வேண்டும்.
மறுபுறம், போயிங் நிர்வாகமோ, தொழிலாளர்களை வரம்பின்றி சுரண்டுவதற்கான நிர்வாகத்தின் 'உரிமைக்காக' ஒட்டுமொத்த முதலாளித்துவ ஆளும் வர்க்கத்தின் சார்பாக போராடி வருகிறது. 'இந்த அல்லது வேறு எந்த மக்களுக்கும் வரையறுக்கப்பட்ட-நன்மை ஓய்வூதியத்தை நிறுவனம் மீண்டும் செயல்படுத்துவதற்கான எந்த சூழ்நிலையும் இல்லை' என்று நிறுவனம் கடந்த வியாழனன்று அறிவித்தது.
வோல் ஸ்ட்ரீட் மற்றும் அரசாங்கத்தால் ஆதரிக்கப்படுவதால் போயிங் நிறுவனம் பிடிவாதமாக உள்ளது. பைடென் நிர்வாகத்தால் தொழிற்சங்க ஆதரவிலான விற்றுத்தள்ளல் மூலமாக வேலைநிறுத்தத்தை முடிவுக்கு கொண்டுவர முடியவில்லை என்றால், பின்னர் அது ஒடுக்குமுறை முறைகளைப் பயன்படுத்த நகரும். 2022 இல் ஒரு தேசிய இரயில் வேலைநிறுத்தத்திற்கு எதிரான தடை போயிங் தொழிலாளர்களுக்கு ஒரு படிப்பினையாகவும் எச்சரிக்கையாகவும் உள்ளது.
அரசாங்கத் தலையீடு பற்றிய அச்சுறுத்தலுக்கு வேலைநிறுத்தத்தின் பின்னணியில் பாரிய அணிதிரட்டல் மூலம்தான் விடையிறுக்க முடியும். இது பெருநிறுவனக் கட்சிகள் மற்றும் தொழிற்சங்க அதிகாரத்துவத்தில் உள்ள அவற்றின் அடிவருடிகளிடம் இருந்து முற்றிலும் சுயாதீனமாக இருக்க வேண்டும்.
இந்த வேலைநிறுத்தம் சமூகத்தில் சமரசப்படுத்த முடியாத வர்க்கப் பிளவுகளை முன்னுக்குக் கொண்டு வந்துள்ளது. ஒருபுறம், ஆளும் வர்க்கம் சமூகத்தின் அனைத்து ஆதாரவளங்களையும் போருக்காக ஒழுங்குபடுத்த விரும்புகிறது. மறுபுறம், தொழிலாளர்கள் அரசியல் அதிகாரத்தை தங்கள் சொந்தக் கரங்களில் எடுத்து, உலக மக்களின் வாழ்க்கைத் தரங்களை பெரிதும் மேம்படுத்தவும், சமூக சமத்துவமின்மை, போர் மற்றும் சர்வாதிகார அச்சுறுத்தலை முடிவுக்குக் கொண்டுவரவும், சமூகத்தின் ஆதாரவளங்களை ஒழுங்குபடுத்தினால் மட்டுமே அவர்களின் அபிலாஷைகளை பூர்த்தி செய்ய முடியும்.
ஆகவே போயிங்கில் இடம்பெற்றுவரும் போராட்டம், தொழிலாள வர்க்கத்தில் அதன் சொந்த சுயாதீனமான மற்றும் புரட்சிகர நலன்களின் அடிப்படையில் ஒரு அரசியல் இயக்கத்தை அபிவிருத்தி செய்வதுடன் இணைக்கப்பட வேண்டும். உலகப் பொருளாதாரம் பெருநிறுவன இலாபத்திற்காக அல்லாமல் மனிதயின தேவைகளைப் பூர்த்தி செய்வதற்காக சோசலிச மறுஒழுங்கமைப்பின் பாகமாக, போயிங் மற்றும் ஏனைய பிரதான பெருநிறுவனங்கள் பொது உடைமையின் கீழ் கொண்டு வரப்பட வேண்டும். மேலும், அனைவரது நலனுக்காக தொழிலாளர்களாலேயே ஜனநாயகரீதியில் அவை நடத்தப்பட வேண்டும்.