இலங்கை அரசாங்கம் 1.4 மில்லியன் அரச ஊழியர்களின் சம்பள அதிகரிப்பை இடைநிறுத்துவதை எதிர்த்திடு!

இந்த மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கு காணலாம்.

அனுரகுமார திசாநாயக்கவின் இலங்கை அரசாங்கம், 1.4 மில்லியனுக்கும் அதிகமான அரச ஊழியர்களுக்கு, 2025 ஜனவரியில் இருந்து வழங்கப்படவிருந்த, முன்னாள் விக்கிரமசிங்க அரசாங்கத்தினால் அறிவிக்கப்பட்ட குறைந்த சம்பள உயர்வை இடைநிறுத்தியுள்ளது.

இலங்கை அமைச்சரவை அமைச்சரும் ஜே.வி.பி.யின் அரசியல் குழு உறுப்பினருமான விஜித ஹேரத் [Photo: Facebook/jvpvijithaherath]

விக்கிரமசிங்க வாக்குறுதியளித்த சம்பள அதிகரிப்பு மீள்பரிசீலனை செய்யப்பட வேண்டும் என்று அமைச்சரவை அமைச்சரும், மக்கள் விடுதலை முன்னணியின் (ஜே.வி.பி.) அரசியல் குழு உறுப்பினருமான விஜித ஹேரத், அக்டோபர் 15 அன்று ஊடகங்களுக்கு தெரிவித்தார்.

முந்தைய முடிவு, நிதியமைச்சுடன் எந்த ஆலோசனையும் இன்றி எடுக்கப்பட்டதாகவும், நாட்டின் நிதி நிலைமையை கணக்கில் கொள்ளவில்லை என்றும் ஹேரத் கூறினார். 'நாங்கள் நிதி நிலைமையை ஆராய்ந்த பின்னரே ஒரு முடிவை எடுக்க வேண்டும்,' என்று அவர் கூறினார்.

எளிமையான மொழியில் கூறுவதெனில், புதிய ஜே.வி.பி/தேசிய மக்கள் சக்தி (தே.ம.ச.) அரசாங்கம், கடந்த நான்கு வருடங்களாக வாழ்க்கைச் செலவில் ஏற்பட்டுள்ள பாரிய அதிகரிப்பை சமாளிக்க தீவிர முயற்சியில் ஈடுபட்டுள்ள தொழிலாளர்களுக்கு, ஏற்கனவே ஒப்புக்கொள்ளப்பட்ட சம்பள உயர்வை கைவிட முடிவு செய்துள்ளது.

ஜே.வி.பி./தே.ம.ச. அரசாங்கத்தின் முடிவை எதிர்க்குமாறும் இந்தத் தாக்குதலை எதிர்த்து போராட நடவடிக்கை எடுக்கத் தயாராகுமாறும் இலங்கையில் உள்ள நடவடிக்கைக் குழுக்களின் கூட்டு, தொழிலாள வர்க்கத்திற்கு அழைப்பு விடுக்கிறது. நடவடிக்கைக் குழுக்களின் கூட்டானது பெருந்தோட்டங்கள், ஆடைத் துறை, புகையிரதம், துறைமுகங்கள், சுகாதாரம், கல்வி மற்றும் புலம்பெயர்ந்தோர் மத்தியிலும் அமைக்கப்பட்டுள்ள தொழிலாளர்களின் நடவடிக்கைக் குழுக்களின் கூட்டணியாகும்.

தெளிவான எச்சரிக்கை விடுக்கப்பட வேண்டும். 'நிதி நிலைமை' மேம்படும் வரை அரச துறை ஊழியர்கள் சம்பள உயர்வை எதிர்பார்க்கக் கூடாது என்ற ஹேரத்தின் பிரகடனம், சர்வதேச நாணய நிதியம் (IMF) மற்றும் இலங்கை பெருவணிகத்தின் சிக்கனக் கோரிக்கைகளுடன் நேரடியாக ஒத்துப்போகிறது. மேலும், இந்த தாக்குதல் அரச ஊழியர்களுக்கு மட்டுமன்றி, தனியார் துறை ஊழியர்கள் மீதும் சுமத்தப்படும்.

பதவியில் இருந்தபோது, ​​விக்கிரமசிங்க ஆட்சியானது சர்வதேச நாணய நிதியத்தின் கொள்கைகளை இரக்கமின்றி நடைமுறைப்படுத்தி, சமூக நலனுக்கான அரச நிதி ஒதுக்கீட்டைக் குறைத்து, தண்டனைக்கு சமமான வரிகளை விதித்ததுடன் அரசுக்கு சொந்தமான நிறுவனங்களை தனியார்மயமாக்குவதை நோக்கி நகர்ந்தது. தொழிலாளர்கள் சம்பள அதிகரிப்பிற்காகவும் வேலைகளைப் பாதுகாப்பதற்காகவும் தொழில்துறை போராட்ட நடவடிக்கைகளை எடுப்பதைத் தடுக்க, விக்கிரமசிங்க பொலிஸ் மற்றும் இராணுவத்தை அணிதிரட்டியதோடு கடுமையான அத்தியாவசிய பொதுச் சேவைகள் சட்டங்களை நடைமுறைப்படுத்தினார்.

இலங்கை முதலாளித்துவ வர்க்கத்தின் பிரதான பிரிவினரின் ஆசீர்வாதத்துடன் ஆட்சிக்கு வந்துள்ள புதிதாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட ஜனாதிபதி திசாநாயக்க, விக்கிரமசிங்கவின் பிற்போக்கு திட்ட நிரலைத் தொடரப் போவதைத் தெளிவுபடுத்துகிறார்.

தனது அரசாங்கம், ஒப்புக்கொள்ளப்பட்ட சம்பள உயர்வை வழங்க மறுப்பதை நியாயப்படுத்த முயற்சித்த ஹேரத், அந்த அதிகரிப்பு முந்தைய அமைச்சரவையால் '[ஜனாதிபதி] தேர்தல் நெருங்கியபோது' வாக்குறுதி அளிக்கப்பட்டது என்று கூறி, விக்கிரமசிங்க வாக்குகளை சேகரிக்க முயற்சித்ததாக அர்த்தப்படுத்தினார். “நாங்கள் [ஜே.வி.பி/தே.ம.ச.] இது போன்ற எதையும் கூறவில்லை,” என்று ஹேரத் கூறினார்.

விக்கிரமசிங்க வாக்குகளைப் பெற தீவிர முயற்சியில் ஈடுபட்டிருந்த வேளை, ஜூலை 8-9 திகதிகளில் இரண்டு நாள் சுகயீன விடுமுறை வேலைநிறுத்தத்தில் ஒரு மில்லியன் அரச ஊழியர்கள் வெளிநடப்பு செய்ததை அடுத்தே, அவர் அந்த போதாத சம்பள உயர்வை அறிவிக்க நிர்ப்பந்திக்கப்பட்டார். அதிக மாதாந்திர சம்பளம் மற்றும் மேம்பட்ட நிலைமைகளுக்கான அவர்களின் கோரிக்கையானது 2023 ஆம் ஆண்டின் தொடக்கத்தில் இருந்து தொடர்ச்சியாக நடந்த வேலைநிறுத்தங்கள் மற்றும் போராட்டங்களில் மிகச் சமீபத்தியதாகும்.

ஜூலை 8-9 நடவடிக்கை, அபிவிருத்தி அலுவலர்கள், அளவையாளர்கள், கிராம சேவையாளர்கள், அரச நிர்வாக அலுவலக ஊழியர்கள், தபால் ஊழியர்கள், பண்ணை ஆய்வாளர்கள் மற்றும் சுகாதாரப் பணியாளர்களும் பங்குபற்றிய இந்த நடவடிக்கையால், பெரும்பாலான அரச அலுவலகங்கள் மற்றும் பாடசாலைகளில் அன்றாட நடவடிக்கைகள் நிறுத்தப்பட்டன. இதில் ஓய்வு பெற்றவர்களும் பங்கெடுத்துக்கொண்டனர்.

விக்கிரமசிங்க ஆட்சியால் ஆகஸ்ட் 14 வெளியிடப்பட்ட அறிக்கையின்படி, 2025 ஜனவரி முதல் அரச துறை ஊழியர்களுக்கான அடிப்படை சம்பளம் 24 முதல் 50 சதவீதம் வரை அதிகரிக்கப்படும். இதன் பொருள், குறைந்தபட்ச மாதாந்திர மொத்த சம்பளம் 55,000 ரூபாயாகவும் (187 அமெரிக்க டொலர்), வாழ்க்கைச் செலவுக் கொடுப்பனவு 25,000 ரூபாயாகவும் இருப்பதோடு வருடாந்த சம்பள உயர்வு இரட்டிப்பாகும்.

ஆனால் முன்மொழியப்பட்ட சம்பள அதிகரிப்பு வழங்கப்பட்டாலும் கூட, 2022 முதல் வாழ்க்கைச் செலவில் ஏற்பட்டுள்ள பிரமாண்டமான அதிகரிப்பின் காரணமாக உண்மையான ஊதியத்தில் ஏற்பட்டுள்ள பாரிய வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது. அதனால் இந்த அதிகரிப்பு தொழிலாளர்களுக்கு ஈடுகொடுக்காது.

பண வீக்கம் காரணமாக தொழிலாளர்களின் உண்மையான ஊதியமானது 2022 இல் 27 சதவிகிதமும் 2023 இல் 22 சதவிகிதம் குறைந்துள்ளது. இந்த பின்னணியிலேயே 2022 ஏப்ரல்-ஜூலையில் இராஜபக்ஷ ஆட்சிக்கு எதிராக வெகுஜன எழுச்சி வெடித்தது.

இலங்கையின் மத்திய வங்கியின் கூற்றுப்படி, 2022 இல் நான்கு பேர் கொண்ட ஒரு குடும்பத்திற்கு வாழ்வதற்கு மாதாந்தம் 88,704 ரூபாவும், 2023 இல் 103,283 ரூபாவும் தேவைப்பட்டது.

இந்த பாரிய சமூக தாக்குதலுக்கு ஜே.வி.பி. தொழிற்சங்கங்கள் உட்பட தொழிற்சங்க தலைமையின் பிரதிபலிப்பு என்ன?

தொழிலாள வர்க்கத்தின் கொதித்தெழுந்த கோபத்தைக் கட்டுப்படுத்த இரண்டு வரையறுக்கப்பட்ட ஒரு நாள் பொது வேலைநிறுத்தங்களுக்கு அவர்கள் அழைப்பு விடுத்தன. பின்னர் இதை ஜே.வி.பி./தே.ம.ச. மற்றும் ஐக்கிய மக்கள் சக்தி (ஐ.ம.ச.) முன்னிலைப்படுத்திய இடைக்கால நிர்வாகத்திற்கான அழைப்புகளாக மாற்றின.

வெகுஜன எதிர்ப்புக்கள் கோட்டாபய இராஜபக்ஷவை நாட்டை விட்டு வெளியேற நிர்ப்பந்தித்த போதிலும், தொழிற்சங்கங்கள், ஒரு சோசலிச வேலைத்திட்டத்தின் அடிப்படையில் தொழிலாள வர்க்கத்தை எந்தவகையிலும் சுயாதீனமாக அரசியல் ரீதியில் அணிதிரட்டுவதைத் தடுத்தன. இதன் மூலம், மதிப்பிழந்த பாராளுமன்றத்தால் அமெரிக்க கைக்கூலியான விக்கிரமசிங்க ஜனாதிபதி பதவிக்கு உயர்த்தப்படுவதற்கு வழி வகுத்தன.

ஜே.வி.பி./தே.ம.ச. தனது உண்மையான நிறத்தை வெளிப்படுத்தி, இந்த ஆண்டு ஜனாதிபதித் தேர்தல் பிரச்சாரத்தின் போது சம்பள உயர்வுக்கான அனைத்து வேண்டுகோள்களையும் எதிர்த்தது.

செப்டம்பர் 4 அன்று, தொழிலதிபர்கள் மற்றும் வணிகர்களின் கூட்டத்தில் உரையாற்றிய திசாநாயக்க, அரச ஊழியர்களின் சம்பள அதிகரிப்புக்கு விக்கிரமசிங்க வாக்குறுதி அளித்ததற்காகவும், ஐ.ம.ச. தலைவர் சஜித் பிரேமதாசவும் இதேபோன்ற உறுதிமொழிகளை வழங்கியதற்காகவும் கண்டனம் செய்தார்.

திசாநாயக்க, தனது கட்சி எந்தவொரு 'கவனயீனமான' நடவடிக்கைகளை எடுக்காது என்றும், 'பொருளாதாரத்தை சீர்குலைக்கும் வகையில் எதையும் செய்யாமல்' சர்வதேச நாணய நிதியத்தின் வேலைத்திட்டத்தை அமுல்படுத்துவதில் திங்கியிருக்க முடியும் என்றும் வலியுறுத்தினார்.

வாக்குறுதியளிக்கப்பட்ட சம்பள அதிகரிப்பு திசாநாயக்க ஆட்சியால் வழங்கப்படாது என ஹேரத் அறிவித்து ஒருவாரம் ஆகிறது. தொழிற்சங்கத் தலைமையின் பதில் மரண மௌனமாகும். இது ஒரு தற்செயல் சம்பவம் அல்ல.

அரச மற்றும் மாகாண பொதுச் சேவை சங்கங்களின் கூட்டு, தபால் தொழிற்சங்கங்களின் கூட்டு முன்னணி, சுகாதார ஊழியர்கள் சங்க கூட்டணி, இலங்கை ஆசிரியர் சங்கம் மற்றும் ஜே.வி.பி.யின் கட்டுப்பாட்டில் உள்ள சில தொழிற்சங்கங்கள், இந்த ஆண்டு ஜூலை 8-9 திகதிகளில் வேலைநிறுத்தங்களுக்கு அழைப்பு விடுத்த போதிலும், சர்வதேச நாணய நிதியத்தின் சிக்கன நடவடிக்கைக்கு எதிராக தொழிலாளர்களை அணிதிரட்ட மறுத்துவிட்டன. உண்மையில், தொழிற்சங்க அதிகாரத்துவங்கள் இந்த நடவடிக்கைகளை மட்டுப்படுத்தவும், சிதறடிக்கவும், தனிமைப்படுத்தவும் மற்றும் விக்கிரமசிங்க ஆட்சிக்கு வீன் வேண்டுகோள்களை விடுப்பதற்கு மட்டுப்படுத்தவும் வேலை செய்தன.

இந்த ஆண்டு இரண்டு நாள் பொதுத்துறை வேலைநிறுத்தத்திற்குப் பிறகு ஒரு பொதுக் கூட்டத்தில் உரையாற்றிய ஜே.வி.பி.யின் தேசிய தொழிற்சங்க மையத்தின் தலைவரான கே.டி. லால்காந்த, திசாநாயக்க ஜனாதிபதி ஆவதற்கு எடுக்கும் முயற்சிக்கு பாதகமாகும் என அறிவித்து, அனைத்து தொழில்துறை போராட்ட நடவடிக்கைகளையும் நிறுத்துமாறு அழைப்பு விடுத்தார். காந்தாவின் அழைப்பிற்கு இணங்கி, தொழிற்சங்கங்கள் இப்போது மௌனமாக ஜே.வி.பி./தே.ம.ச. அரசாங்கத்தின் சர்வதேச நாணய நிதிய சார்பு சிக்கனக் கொள்கைகளுக்கு தங்கள் ஆதரவை வெளிப்படுத்துகின்றன.

இந்த முதலாளித்துவ அரசாங்கம் எதிர்கொள்ளும் 'நிதி நிலைமை' மேம்படும் வரை தொழிலாளர்கள் ஏன் காத்திருக்க வேண்டும்?

இதன் பொருள், உண்மையான ஊதியங்கள் மீது சர்வதேச நாணய நிதியம் ஆணையிட்டுள்ள தாக்குதலை மேலும் தீவிரப்படுத்துவதும், அதைவிடக் கொடூரமான வரிகளைத் திணிப்பதும், மற்றும் மில்லியன் கணக்கான தொழிலாளர்கள் தங்கியுள்ள அரசு நிறுவனங்களை நெருப்பு வேகத்தில் விற்றுத் தனியார்மயமாக்குவதும் ஆகும். இதனால் இலட்சக் கணக்கான அரசாங்கத் தொழில்கள் அழிக்கப்படும்.

திசாநாயக்க ஆட்சியின் கொடூரமான சமூகத் தாக்குதலுக்கு எதிராகப் போராடுமாறு அனைத்து அரச துறை ஊழியர்களுக்கும் நாங்கள் அழைப்பு விடுக்கின்றோம். இந்த தாக்குதல்கள், அரச ஊழியர்களுக்கு எதிராக மட்டுமல்ல, முழு தொழிலாள வர்க்கம் மற்றும் கிராமப்புற மக்களுக்கும் எதிராக இலக்கு வைக்கப்பட்டுள்ளது. இந்தப் போராட்டத்தில் தனியார் துறை ஊழியர்களும் கலந்து கொள்ள வேண்டும்.

இந்தப் போராட்டத்தை முன்னெடுப்பதில், தொழிலாளர்கள் தொழிற்சங்கங்களை நம்பியிருக்க முடியாது, மாறாக, இந்த ஊழல், முதலாளித்துவ-சார்பு எந்திரங்களில் இருந்து சுயாதீனமாக தங்களை ஒழுங்கமைக்க வேண்டும்.

இதற்கு ஒவ்வொரு வேலைத் தளத்திலும், பெருந்தோட்டங்களிலும், ஏனைய ஒவ்வொரு பிரதான தொழிலாள வர்க்க மையங்களிலும் ஜனநாயக முறையில் தேர்ந்தெடுக்கப்பட்ட நடவடிக்கைக் குழுக்களை உருவாக்குவது அவசியமாகும். இந்த நடவடிக்கை குழுக்களில் தொழிற்சங்க எந்திரத்தின் எந்தவொரு பிரதிநிதியையும் இணைத்துக்கொள்ளக் கூடாது. நாங்கள் பின்வருமாறு கூறுகிறோம்:

* “அங்கீகரிக்கப்பட்ட சம்பள உயர்வு மீது கைவைக்காதே!” என்று தொழிலாளர்கள் கோர வேண்டும். கடந்த காலத்தில் அனைத்து தொழிலாளர்களுக்கும் வழங்கப்பட்ட உண்மையான ஊதியத்தின் வீழ்ச்சியை முழுமையாக ஈடுசெய்யும் ஊதிய உயர்வு வேண்டும். அனைத்து ஊதியங்களும் வாழ்க்கைச் செலவுக்கு ஏற்றதாக இருக்க வேண்டும்!

* சர்வதேச நாணய நிதியத்தின் சிக்கன நடவடிக்கை வேண்டாம்! அனைத்து வெளிநாட்டு கடன்களையும் நிராகரி!

* தனியார்மயத்தை எதிர்ப்போம்! தனியார்மயமாக்கலை எதிர்கொள்ளும் அனைத்து அரசு நிறுவனங்களும் தொழிலாளர்களின் ஜனநாயகக் கட்டுப்பாட்டின் கீழ் வைக்கப்பட வேண்டும்!

* அனைத்து இன மற்றும் வகுப்புவாத பிளவுகளையும் நிராகரி! தொழிலாள வர்க்கத்தின் சர்வதேச ஐக்கியத்துக்காக!

தொழிலாளர்கள் மற்றும் ஏழைகளின் அனைத்து சமூகத் தேவைகளையும் பூர்த்தி செய்வதற்கான சோசலிச சமத்துவக் கட்சியின் வேலைத்திட்டத்தை நடவடிக்கை குழுக்களின் கூட்டு ஆதரிக்கிறது. இதில் பின்வருவன அடங்கும்:

* செல்வந்த உயரடுக்கினரால் தொழிலாள வர்க்கத்தைச் சுரண்டுவதன் மூலம் குவிக்கப்பட்ட பெரும் செல்வத்தைக் கைப்பற்ற வேண்டும்.

* வங்கிகள், பெரிய நிறுவனங்கள் மற்றும் பெருந்தோட்டங்களை தொழிலாள வர்க்கத்தின் ஜனநாயகக் கட்டுப்பாட்டின் கீழ் வைக்க வேண்டும்.

இந்தப் போராட்டம், தொழிலாள வர்க்கத்தின் ஐக்கியப்பட்ட இயக்கத்தின் மூலமாகவும், தொழிலாளர்களின் நடவடிக்கைக் குழுக்கள் மற்றும் கிராமப்புற ஏழைகள் மத்தியிலான நடவடிக்கை குழுக்களில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகளை அடிப்படையாகக் கொண்ட, தொழிலாளர்களதும் கிராமப்புற வெகுஜனங்களதும் ஜனநாயகத்துக்கும் சோசலிசத்துக்குமான மாநாட்டைக் கட்டியெழுப்புவதன் மூலமாகவும் ஒழுங்கமைக்கப்பட வேண்டும்.

தங்கள் சமூக நிலைமைகள் மற்றும் ஜனநாயக உரிமைகளைப் பாதுகாக்கும் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்ற ஒவ்வொரு நாட்டிலும் உள்ள தொழிலாளர்கள், பேரழிவுகரமான அணுவாயுத மூன்றாம் உலகப் போரை நோக்கி பூமியை இட்டுச் செல்லும் ஏகாதிபத்திய சக்திகளுடன் மோதலுக்கு நிற்கின்றனர்.

நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவானது, உலக முதலாளித்துவத்தின் தாக்குதல், போருக்கான அதன் உந்துதல் மற்றும் சமூக சமத்துவமின்மைக்கும் எதிராக, சர்வதேச அளவில் இந்தப் போராட்டங்களை ஒருங்கிணைக்க, நடவடிக்கை குழுக்களின் சர்வதேச தொழிலாளர் கூட்டணியை துவக்கியுள்ளது. இந்த சர்வதேசப் போராட்டத்தை முன்னெடுப்பதற்கு இலங்கையில் உள்ள நடவடிக்கை குழுக்களும் இணைந்து சர்வதேச தொழிலாளர் கூட்டணியை உருவாக்க வேண்டும்.

உங்கள் வேலைத் தளத்தில் ஒரு நடவடிக்கைக் குழுவை எவ்வாறு ஒழுங்கமைப்பது என்பதை எங்களுடன் கலந்துரையாட, தொலைபேசி மூலமாகவோ அல்லது +94773562327 என்ற எண்ணில் வட்ஸ்அப் மூலமாகவோ எங்களைத் தொடர்புகொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம்.

Loading