இந்த மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கு காணலாம்.
(இந்த அறிக்கை தொழிலாளர் நடவடிக்கை குழுக்களின் கூட்டமைப்பினால் சனிக்கிழமை வெளியிடப்பட்டது)
டிசம்பர் 2 அன்று, ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்த பாடசாலை அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் மீது பொலிசார் நடத்திய கொடூரமான தாக்குதலை இலங்கையில் உள்ள தொழிலாளர் நடவடிக்கைக் குழுக்களின் கூட்டமைப்பு (CWAC) வன்மையாகக் கண்டிக்கின்றது.
இந்த போராட்டத்தில் ஈடுபட்டிருந்தபோது, பொலிசாரால் போலி குற்றச்சாட்டின் பேரில் கைது செய்யப்பட்ட நான்கு ஆசிரியர்களையும் விடுதலை செய்ய வேண்டும் என்று தொழிலாளர் வர்க்கத்தை தொழிலாளர் நடவடிக்கை குழுக்களின் கூட்டமைப்பு வலியுறுத்துகிறது.
தொழிலாளர் நடவடிக்கை குழுக்களின் கூட்டமைப்பு என்பது புகையிரதம், துறைமுகங்கள், தேயிலை பெருந்தோட்டங்கள், ஆடை தொழிற்சாலைகள், ஆசிரியர்கள் மற்றும் புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் மத்தியில் செயல்படும் நடவடிக்கை குழுக்களின் கூட்டமைப்பாகும். அரசாங்கம் மற்றும் முதலாளிகளின் தாக்குதல்களில் இருந்து தொழிலாளர்களின் வாழ்க்கை நிலைமைகளையும் சமூக நிலைமைகளையும் மற்றும் ஜனநாயக உரிமைகளையும் பாதுகாக்க நாங்கள் போராடுகிறோம். தொழிலாளர் நடவடிக்கை குழுக்களின் கூட்டமைப்பு, முதலாளித்துவ சார்பு தொழிற்சங்க அதிகாரத்துவங்களில் இருந்து சுயாதீனமாக, ஒரு பொதுவான போராட்டத்தில் தொழிலாளர்களை ஐக்கியப்படுத்த போராடுகிறது.
மக்கள் விடுதலை முன்னணி (ஜே.வி.பி.) தலைமையிலான தேசிய மக்கள் சக்தி (தே.ம.ச.) அரசாங்கத்தால் நிலைநிறுத்தப்பட்ட பொலிசாரின் இந்த அடக்குமுறை நடவடிக்கைகள், தொழிலாள வர்க்கத்தின் தொழில்கள், ஊதியங்கள் மற்றும் வேலை நிலைமைகளைப் பாதுகாக்க நடவடிக்கை எடுப்பதற்கான அடிப்படை ஜனநாயக உரிமையின் மீதான தாக்குதலாகும்.
அடுத்தடுத்து ஆட்சிக்கு வந்த அரசாங்கங்கள் இந்த தொழிலாளர்களை பாடசாலை அபிவிருத்தி உத்தியோகத்தர்களாக நியமித்திருந்தாலும், அவர்கள் உண்மையில் கடந்த நான்கு ஆண்டுகளாக அரச பாடசாலைகளில் கற்பித்தலில் ஈடுபட்டுள்ளனர். அவர்கள் அரசால் சுரண்டப்படுவதோடு அரச ஆசிரியர் சேவையில் இருப்பவர்களை விட குறைந்த சம்பளமே அவர்களுக்கு கொடுக்கப்படுகிறது.
ஆசிரியர்களாகச் செயற்படும் பாடசாலை அபிவிருத்தி உத்தியோகத்தர்கள், சமீப ஆண்டுகளில் தனித்தனியாகவும் ஏனைய தொழிலாளர்களுடன் கூட்டாகவும் பலமுறை வேலைநிறுத்தங்கள் மற்றும் போராட்டங்களில் ஈடுபட்டு, ஆசிரியர் சேவையில் தங்களை உள்வாங்கி அதே உரிமைகளை வழங்க வேண்டும் என்று கோரியுள்ளனர்.
டிசம்பர் 2 அன்று, பாடசாலை அபிவிருத்தி உத்தியோகத்தர்கள், பெலவத்தையில் அமைந்துள்ள இசுருபாயவில் உள்ள கல்வி அமைச்சுக்கு வெளியே தங்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இந்த ஆர்ப்பாட்டத்திற்கு ஒன்றிணைந்த பாடசாலை அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் சங்கம் (CSDOA) அழைப்பு விடுத்திருந்தது. ஜே.வி.பி./தே.ம.ச. தலைவர்கள் ஆட்சிக்கு வந்த பிறகு, பாடசாலை அபிவிருத்தி உத்தியோகத்தர்களின் பிரச்சினைகளை தீர்ப்பதாக உறுதியளித்த போதிலும், தொழிலாள வர்க்கத்தின் ஏனைய பிரிவினருக்கும் வழங்கப்பட்ட போன்ற ஏராளமான வாக்குறுதிகளைப் போல், இதுவும் அவர்களை ஏமாற்றி வாக்குகளைப் பெறுவதற்கான வாக்குறுதியே ஆகும்.
பாடசாலை அபிவிருத்தி உத்தியோகத்தர்களின் கோரிக்கைகளுக்கு செவிசாய்ப்பதற்குப் பதிலாக, அரசாங்கம் நீர்த்தாரை இயந்திரங்களுடன் ஆயுதபாணிக்கப்பட்ட நூற்றுக்கணக்கான பொலிசாரை அணிதிரட்டி அவர்களின் பிரச்சாரத்தை அடக்க உத்தரவிட்டது. போராட்டக்காரர்கள் மீது தடியடி நடத்திய பொலிஸ், அவர்களை உதைத்து, கை முஷ்டியால் குத்தியது.. பின்னர் நான்கு ஆசிரியர்களை கைது செய்த பொலிசார், அவர்களை கடுவலை நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தினர்.
கைது செய்யப்பட்டவர்கள் எல்.பி.எஸ். அபேவிக்ரம, எச்.வை.எல். பெரேரா, கே.எம்.ஜி. கொஸ்வத்த, எச்.டபிள்யூ. ஆராச்சிகே ஆகியோர் ஆவர். இவர்களை கடுவெல நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டதை அடுத்து, அவர்களுக்கு பிணை வழங்க மறுக்கப்பட்டு டிசம்பர் 10 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டனர்.
அவர்கள் செய்த குற்றம் என்ன? அவர்கள் தங்களை ஆசிரியர் சேவையில் இணைத்துக்கொள்ள வேண்டும் என்ற நியாயமான உரிமைகளைக் கோரத் துணிந்து நடவடிக்கையில் ஈடுபட்டனர். அவர்கள் சட்டவிரோத கூட்டத்தில் பங்கேற்றதாகவும், போக்குவரத்துக்கு இடையூறு விளைவித்ததாகவும், பொலிசாரை காயப்படுத்தியதாகவும் பொலிசார் குற்றம் சாட்டியுள்ளனர். இந்தக் குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்பட்டால், நான்கு ஆசிரியர்களுக்கும் மூன்று ஆண்டுகள் வரை சிறைத் தண்டனையும் அபராதமும் விதிக்கப்படலாம்.
கைது செய்யப்பட்ட இந்த நான்கு ஆசிரியர்களும் ஜனாதிபதி திசாநாயக்கவின் அரசாங்கத்தால் தொழிலாள வர்க்கத்திற்கு எதிராக தயாரிக்கப்பட்டு வரும் வர்க்கப் போரின் முதல் பலிகடாக்களாகும் என நாங்கள் பிரகடனம் செய்கிறோம்.
இத்தகைய தாக்குதல்களை தொழிலாள வர்க்கம் அனுமதிக்க கூடாது. சர்வதேச நாணய நிதியத்தின் ஈவிரக்கமற்ற சிக்கனத் திட்டத்தைச் செயல்படுத்துவதில் ஈடுபட்டிருக்கும் அரசாங்கம், தாமதமின்றி உங்கள் மீது விரைவில் பாயும். நமது வர்க்க சகோதர சகோதரிகளில் ஒரு பிரிவினர் மீதான தாக்குதல் நம் அனைவரின் மீதுமான தாக்குதலாகும்!
- நான்கு ஆசிரியர்களையும் உடனடியாக விளக்கமறியலில் இருந்து விடுவிக்கவும், அவர்கள் மீதான அனைத்து குற்றச்சாட்டுகளும் கைவிடப்பட வேண்டும்! என்றும் ஆசிரியர்களின் போராட்டத்தின் மீதான பொலிஸ் தாக்குதல் கண்டிக்கத்தக்கது என்றும்! குரல் கொடுத்திடுங்கள்.
- அறிக்கைகளை வெளியிடுவதோடு உங்கள் வேலைத் தளத்தில் மறியல் போராட்டம் போன்ற நடவடிக்கைகளை ஒழுங்கமைத்திடுங்கள்,
என்று தொழிலாளர்களை நாங்கள் கேட்டுக்கொள்கிறோம்.
இந்த பொலிஸ் நடவடிக்கை ஒட்டுமொத்த தொழிலாள வர்க்கத்திற்கும் ஒரு எச்சரிக்கையாகும். ஜே.வி.பி./தே.ம.ச. ஆட்சியானது, சர்வதேச நாணய நிதியத்தின் சிக்கன நடவடிக்கைகளை முழுமையாக அமுல்படுத்துவதற்கான அதன் வாக்குறுதியை சவால் செய்யும் தொழிலாளர்களின் எந்த நடவடிக்கையையும் நசுக்கத் தயங்காது.
கடந்த வாரம் ஒன்றிணைந்த பாடசாலை அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் சங்க ஆர்ப்பாட்டக்காரர்களுக்கு எதிரான பொலிஸ் அடக்குமுறை நடவடிக்கையைத் தொடர்ந்து, அவர்களின் பத்து பிரதிநிதிகள் பிரதிக் கல்வி அமைச்சர் மதுர சேனாரத்னவைச் சந்திக்க அனுமதிக்கப்பட்டனர். அவர்களின் விவகாரத்தை அமைச்சரவையின் முன் வைப்பதாக மட்டுமே அவர் 'வாக்குறுதி' கொடுத்தார்.
ஜனாதிபதி திசாநாயக்க, பிரச்சினையை ஆராய்வதற்காக பிரதமர் ஹரினி அமரசூரிய தலைமையில் அமைச்சரவை உபகுழுவொன்றை அமைத்தார். எவ்வாறாயினும், சிரேஷ்ட அமைச்சரும் அமைச்சரவைப் பேச்சாளருமான வைத்தியர் நலிந்த ஜயதிஸ்ஸ உண்மையான அணுகுமுறையை வெளிப்படுத்தினார். 'இவ்வாறான சிக்கலான மற்றும் நீண்டகால பிரச்சினைகளுக்கு அரசாங்கம் உடனடி தீர்வுகளை வழங்க முடியாது,' என்று அவர் அறிவித்தார்.
பாடசாலை அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் தங்கள் நியாயமான கோரிக்கைகளுக்கு எந்த தீர்வையும் பெற மாட்டார்கள் என்பதற்கான தெளிவான செய்தியே இதுவாகும். 'சிக்கலான மற்றும் நீடித்த பிரச்சினைகளுக்கு உடனடி தீர்வுகளை வழங்க முடியாது', என்பது அனைத்து தொழிலாளர்களுக்கும் அவர்களின் பிரச்சனைகளுக்கு தீர்வு கிடைக்காது என்ற செய்தியாகும்.
இது, சர்வதேச நாணய நிதியத்தின் சிக்கன நடவடிக்கைகள் மக்கள் மீது ஏற்படுத்தும் பாதிப்பைக் குறைப்பதற்கு அது பற்றி 'மீண்டும் பேச்சுவார்த்தை நடத்துவதாக' உறுதியளித்த, நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறையையும் பயங்கரவாதத் தடைச் சட்டம் உட்பட ஏனைய அனைத்து அடக்குமுறைச் சட்டங்களையும் நீக்குவதாகவும் வெகுஜனங்களுக்கான நலன்புரி மானியங்களைப் பேணுவதாகவும் உறுதியளித்த ஒரு அரசாங்கத்தின் நிலைப்பாடாகும்.
ஆனால் ஜனாதிபதி திசாநாயக்க நவம்பர் 21 அன்று பாராளுமன்றத்தில் தனது முதல் கொள்கை பிரகடனத்தில் பிரகடனப்படுத்தியது போல், பொருளாதார நெருக்கடி என்பது 'நாம் ஒரு நூலில் தொங்கிக்கொண்டிருக்கிறோம்... [மற்றும்] தவறுகளைச் செய்ய இடமில்லை' என்பதாகும். அரசாங்கத்தின் கவனம், சர்வதேச நாணய நிதியத்தின் திட்டத்தை செயல்படுத்துவதன் மூலம் 'பொருளாதார ஸ்திரத்தன்மையை உறுதிப்படுத்துவதும் சம்பந்தப்பட்ட பொருளாதார பங்குதாரர்களுடன் நம்பிக்கையை மீண்டும் உறுதிப்படுத்துவதுமாகும்' என்று அவர் வலியுறுத்தினார்.
நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறைமையை ஒழிப்பதாக உறுதியளித்ததை பற்றி திசாநாயக்க மௌனமாக இருக்கும் அதே வேளை, நாடு முழுவதிலும் உள்ள ஆயுதப்படைகளுக்கு கட்டளையிடுவது உட்பட அதன் பரந்த அதிகாரங்களைப் பயன்படுத்த ஆரம்பித்துள்ளார்.
ஜனாதிபதியின் சிரேஷ்ட பொருளாதார ஆலோசகர் துமிந்த ஹுலங்கமுவ, திறைசேரியில் பணம் இல்லாத காரணத்தால்,. “அரச துறையில் உள்ள 1.3 மில்லியன் ஊழியர்களை குறைந்தபட்சம் 750,000 ஆகக் குறைக்க” அரசாங்கம் நடவடிக்கை எடுக்கத் தொடங்கும் என்று அறிவித்தார். இதனால் 550,000 அரச தொழில்கள் அழிக்கப்படும்.
தனியார்மயமாக்கல் மற்றும் வணிகமயமாக்கல் மற்றும் சிலவற்றை மூடுவது உட்பட, நூற்றுக்கணக்கான அரசுக்கு சொந்தமான நிறுவனங்களை திட்டமிட்ட முறையில் 'மறுசீரமைப்பு செய்வது' தொடங்கப்பட்டுள்ளது. இந்த மறுசீரமைப்பு இன்னும் இலட்சக்கணக்கான தொழில்களை அழித்துவிடுவதோடு ஊதியங்கள் மற்றும் ஓய்வூதியங்களில் வெட்டுக்கள் அமுல்படுத்தப்படும்.
திசாநாயக்க தனது அரசாங்கம் ஐந்து பெரிய விசேட பொருளாதார வலயங்களை நிறுவவுள்ளதாக அறிவித்துள்ளார். இவை பூகோள முதலீட்டாளர்கள் மற்றும் இலங்கையில் உள்ள அவர்களது பெருவணிக வாடிக்கையாளர்களுக்கான மலிவு உழைப்புத் தளங்களாக இருக்கும்.
இவை அரசாங்கத்தால் செயல்படுத்தப்படும் கடுமையான தாக்குதல்களில் சிலவாகும். தேசிய வரம்புக்குள்ளும் முதலாளித்துவ அமைப்பிற்குள்ளும் தொழிலாளர்கள் எதிர்கொள்ளும் எரியும் பிரச்சனைகளுக்கு தீர்வு கிடையாது என்பதையே அவர்கள் நிரூபிக்கின்றனர்.
நமது பங்கிற்கு, பாடசாலை அபிவிருத்தி ஆசிரிய உத்தியோகத்தர்கள் மீதான தாக்குதல்களை ஒரு எச்சரிக்கையாக எடுத்துக்கொள்வதோடு அனைத்து முதலாளித்துவ கட்சிகள் மற்றும் முதலாளித்துவ சார்பு தொழிற்சங்கங்களில் இருந்து வெளியேறி சுயாதீனமாக ஒழுங்கமைவதன் மூலம் நமது உரிமைகளை பாதுகாக்க தயாராக வேண்டும்.
திசாநாயக்கவின் ஆட்சிக்கு இணங்க, ஜே.வி.பி. கட்டுப்பாட்டில் உள்ள தொழிற்சங்க அதிகாரத்துவங்களும் சுயாதீனமானவையாக காட்டிக்கொள்கின்ற ஏனைய தொழிற்சங்க அதிகாரத்துவங்களும் பாடசாலை அபிவிருத்தி உத்தியோகத்தர்களுக்கு எதிராக தங்களை ஒருங்கிணைத்துக் கொண்டன.
ஜே.வி.பி.யின் தொழிற்சங்கங்களைச் சேர்ந்த சில அதிகாரத்துவத்தினர் பாராளுமன்ற உறுப்பினர்களாகவும் அமைச்சர்களாகவும் மாறியுள்ளனர். பாடசாலை அபிவிருத்தி உத்தியோகத்தர்கள், பொலிசாரை காயப்படுத்தியதாக பிரதி தொழில் அமைச்சரும் ஆசிரியர் சேவைகள் சங்கத்தின் செயலாளருமான மஹிந்த ஜயசிங்க பகிரங்கமாக குற்றஞ்சாட்டியுள்ளார். அரசாங்கம் இப்போதுதான் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளதால் எல்லோரும் 'அரசாங்கத்திற்கு நேரம் கொடுக்க வேண்டும்' என அவர் அறிவிக்கின்றார்.
சுயாதீனமாக இருப்பதாகக் காட்டிக் கொள்ளும் இலங்கை ஆசிரியர் சங்கத்தின் தலைவர் ஜோசப் ஸ்டாலின், ஜே.வி.பி./தே.ம.ச. அரசாங்கத்தின் பக்கம் சாய்ந்துள்ளார். ஆசிரியர் சேவைக்கான சட்ட விதிகளை மீறுவதாகக் கூறிக்கொண்டு, பாடசாலை அபிவிருத்தி உத்தியோகத்தர்களை ஆசிரியர் பணியில் உள்வாங்குவதை தாம் கடுமையாக எதிர்ப்பதாக ஸ்டாலின் கூறியுள்ளார்.
தொழிலாளர்கள், தங்கள் உரிமைகளை பாதுகாக்க இந்த தொழிற்சங்க அதிகாரத்துவங்களை நம்பியிருக்க முடியாது. அரசாங்கத்திற்கு அழுத்தம் கொடுப்பதன் மூலம் பாடசாலை அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் தங்கள் கோரிக்கைகளை அடைய முடியும் என்று ஒன்றிணைந்த பாடசாலை அபிவிருத்தி உத்தியோகத்தர் சங்கம் பொய்யாகக் கூறுகிறது. இது ஒரு அரசியல் முட்டுக்கட்டையாக இருப்பதோடு தோல்விக்கே வழிவகுக்கும். இதனாலேயே, தொழிலாளர்கள் தங்கள் வேலைத் தளங்கள், தொழிலாளவர்க்க சுற்றுப்புறங்கள் மற்றும் பெருந்தோட்டங்களிலும் சுயாதீன நடவடிக்கைக் குழுக்களை ஸ்தாபிக்க வேண்டும். இந்தக் குழுக்களில் தொழிற்சங்க அதிகாரத்துவமும் முதலாளித்துவக் கட்சிகளும் அனுமதிக்கப்பட மாட்டாது.
கைது செய்யப்பட்டவர்களை விடுவிப்பதற்கும் உங்கள் ஜனநாயக உரிமைகளைப் பாதுகாப்பதற்கும் ஒரு போராட்டத்தைத் தொடங்க நடவடிக்கைக் குழுக்களை அமைக்குமாறு பாடசாலை அபிவிருத்தி உத்தியோகத்தர்களை நாங்கள் கேட்டுக்கொள்கிறோம்.
மிகவும் பரந்தளவிலும் அவசரமாகவும், பின்வரும் கோரிக்கைகளின் கீழ் தொழிலாளர் வர்க்கத்தை அணிதிரளுமாறு தொழிலாளர் நடவடிக்கை குழுக்களின் கூட்டமைப்பு அழைப்பு விடுக்கிறது:
- சர்வதேச நாணய நிதியத்தின் கொடூரமான சிக்கனத் திட்டம் வேண்டாம்!
- தனியார்மயமாக்கல் அல்லது மறுசீரமைப்பு வேண்டாம்! அனைத்து அரசுக்குச் சொந்தமான நிறுவனங்களையும் அவற்றின் தொழிலாளர்களின் ஜனநாயகக் கட்டுப்பாட்டின் கீழ் வைக்கப்பட வேண்டும்!
- வெளிநாட்டுக் கடன்களை திருப்பிச் செலுத்த வேண்டாம்!
நமது சர்வதேச வர்க்க சகோதர சகோதரிகளே இந்தப் போராட்டத்தில் நமது கூட்டாளிகள் ஆவர். அமெரிக்கா, இங்கிலாந்து, ஐரோப்பா முழுவதும், ஆஸ்திரேலியா, இந்தியா மற்றும் இன்னும் பரந்தளவில், தொழிலாள வர்க்கமானது பெருநிறுவனங்களதும் அரசாங்கங்களினதும் தாக்குதல்களில் இருந்து தங்கள் உரிமைகளைப் பாதுகாப்பதற்கான போராட்டத்தில் இறங்கியுள்ளது.
சர்வதேச தொழிலாள வர்க்கத்தின் பக்கம் திரும்புமாறு உங்களை நாம் வலியுறுத்துகிறோம்! தொழிலாளர் நடவடிக்கை குழுக்களின் சர்வதேச கூட்டணியில் இணைந்துகொள்வதன் ஊடாக உலகளவில் உங்கள் நடவடிக்கைகளை ஒருங்கிணைப்பதன் மூலம் இந்த சர்வதேச ஐக்கியத்தை அடைய முடியும்.
உங்கள் வேலைத் தளங்களில் நடவடிக்கைக் குழுக்களை அமைக்க தொழிலாளர் நடவடிக்கை குழுக்களின் கூட்டமைப்பு உங்களுக்கு உதவத் தயாராக உள்ளது.
நீங்கள் தொடர்புகொள்ள வேண்டிய தொலைபேசி எண்கள்: +94 773562327
வாட்ஸ்அப்: +94773562327
மின்னஞ்சல்: action.committees.sl@gmail.com
