இலங்கை ஜனாதிபதி பெருவணிக மன்றத்தில் சர்வதேச நாணய நிதியத்தின் சிக்கன நடவடிக்கைகளை அமல்படுத்துவதாக உறுதியளிக்கிறார்

இந்த மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கு காணலாம்.

இலங்கை வர்த்தகர் சம்மேளனம் (CCC) ஏற்பாடு செய்த வருடாந்திர நிகழ்வான இலங்கை பொருளாதார மாநாட்டில் உரையாற்றிய ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க, அரச துறையை பாரியளவில் தனியார்மயமாக்குதல், ஆட்குறைப்பு செய்தல் மற்றும் அதிக வெளிநாட்டு முதலீட்டை ஈர்ப்பதற்கான அர்ப்பணிப்பு பற்றிய தனது அரசாங்கத்தின் திட்டங்களை கோடிட்டுக் காட்டினார்.

இலங்கை ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க கொழும்பில் நடைபெற்ற 2025 பொருளாதார மாநாட்டில் உரையாற்றுகிறார் [Photo: X/Anura Kumara Dissanayake]

ஜனவரி 28 அன்று நடைபெற்ற நிகழ்வு “இலங்கையின் எதிர்காலத்தை வடிவமைத்தல்: சிறந்த பொருளாதாரக் கொள்கைகளில் வேரூன்றிய மாற்றத்தக்க வளர்ச்சி” என்ற தலைப்பில் இடம்பெற்றது. சுமார் 700 உயர் வணிக நிர்வாகிகள் இதில் பங்கேற்றனர்.

இலங்கை வர்த்தக சம்மேளனத்தின் தலைவர் துமிந்த ஹுலங்கமுவ ஜனாதிபதியின் சிரேஷ்ட பொருளாதார ஆலோசகர் ஆவார். முன்னாள் தலைவர் ஹான்ஸ் விஜேசூரிய இலங்கையின் டிஜிட்டல் மயமாக்கல் குறித்த திசாநாயக்கவின் ஆலோசகர் ஆவார். நாட்டின் மிகப்பெரிய நிறுவனங்களில் ஒரு குறிப்பிடத்தக்க பகுதியினர், இலாபங்களை அதிகரிப்பதை எதிர்பார்த்து புதிய வலதுசாரி ஆட்சிக்கு ஆதரவாக உள்ளனர்.

உச்சிமாநாட்டில் உரையாற்றிய திசாநாயக்க பெருவணிகங்களைப் பாராட்டினார்: “நீங்கள்தான் பொருளாதார வளர்ச்சிக்கான இயந்திரம்… பொருளாதாரத்தின் எதிர்காலம் உங்கள் கைகளில் உள்ளது. மாற்றத்தை ஏற்படுத்த உங்களுக்கு சக்தி, அறிவு மற்றும் அணுகுமுறைகள் உள்ளன.”

“வணிகக் குழுக்கள், முதலீட்டாளர்கள் மற்றும் சர்வதேச சமூகத்தின் சில உறுப்பினர்கள் மத்தியில்” தனது அரசாங்கம் குறித்த சந்தேகங்களை தான் நீக்கியதாக” திசாநாயக்க பெருமையாகக் கூறினார். “அரசாங்கத்தின் திட்டங்களில் நம்பிக்கையை வளர்க்க தன்னால் முடிந்தது...” என்றும் “கடந்த இரண்டு மாதங்களாக இந்த சாதனை எங்களுக்கு ஒரு குறிப்பிடத்தக்க மைல்கல் ஆகும்', என்றும் அவர் கூறினார்.

கடந்த செப்டம்பரில் அவர் தேர்ந்தெடுக்கப்படுவதற்கு முன்பு, திசாநாயக்க பெருவணிகத்திற்கும் சர்வதேச நிதி மூலதனத்திற்கும் தனது மக்கள் விடுதலை முன்னணி/தேசிய மக்கள் சக்தி (ஜே.வி.பி./தே.ம.ச.) சர்வதேச நாணய நிதியம் (IMF) கோரும் சிக்கனத் திட்டத்திற்கு முழுமையாக அர்ப்பணித்துக்கொண்டுள்ளதாக உறுதியளித்தார்.

நவம்பர் நடுப்பகுதியில் அரசாங்கத்தை அமைத்ததிலிருந்து, சர்வதேச நாணய நிதியம் அறிவுறுத்தியபடி, செலுத்தத் தவறிய கடன்களை இந்த ஆண்டு திருப்பிச் செலுத்துவதாக உறுதியளித்து, சர்வதேச கடன் வழங்குநர்களுடன் ஜே.வி.பி./தே.ம.ச. அரசாங்கம் கடன் மறுசீரமைப்பு ஒப்பந்தங்களில் கைச்சாத்திட்டது.

செயல்படுத்தலை எளிதாக்க சில திருத்தங்களுடன் அரசாங்கம் பொருளாதார மாற்றச் சட்டத்துடன் (ETA) முன்செல்லும் என்று திசாநாயக்க மாநாட்டில் தெரிவித்தார். முந்தைய ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் அரசாங்கத்தால் அங்கீகரிக்கப்பட்ட பொருளாதார மாற்றச் சட்டம், பிரதான நடவடிக்கைகளுக்கான இலக்குகளை நிர்ணயித்து, சர்வதேச நாணய நிதியத்தின் திட்டத்திற்கு ஏற்ப தயாரிக்கப்பட்ட ஒரு வரைபடமாகும்.

வெளிநாட்டு முதலீட்டில் தற்போதுள்ள கட்டுப்பாடுகள் வரும் நாட்கள் மற்றும் மாதங்களில் நீக்கப்படும் என்று திசாநாயக்க விளக்கினார். ஆரம்பத்தில், ஒப்புதல்களுக்கான காலத்தை அரசாங்கம் சுமார் அரை வருடமாகக் குறைக்கும்.' இந்த  செயல்முறையை இரண்டு வாரங்களுக்கும் குறைவாகக் குறைப்பதே எங்கள் குறிக்கோள்' என்று அறிவித்த ஜனாதிபதி, வெளிநாட்டு நேரடி முதலீட்டை ஈர்க்க முந்தைய அரசாங்கங்களின் இயலாமையை விமர்சித்தார்.

“சவாலானது என்றாலும்,” தனியார்மயமாக்கல் உட்பட அரசுக்குச் சொந்தமான நிறுவனங்களை (SOE) மறுசீரமைப்பதில் அரசாங்கம் ஏற்கனவே செயல்பட்டு வருவதாக திசாநாயக்க கூறினார். அவர் தெளிவுபடுத்தவில்லை என்றாலும், நிகழ்வில் இருந்த அனைவருக்கும் அது ஏன் “சவாலானது” என்பதை அவர் புரிந்துகொண்டனர்.

தனியார்மயமாக்கல் மற்றும் வேலை அழிப்பு மற்றும் நிலைமைகளை அழிப்பபதற்கு எதிரான தொழிலாள வர்க்கத்தின் பரவலான எதிர்ப்பை ஆட்சியில் இருந்த அரசாங்கங்கள் மீண்டும் மீண்டும் எதிர்கொண்டுள்ளன. கடந்த இரண்டு ஆண்டுகளில், தொழிற்சங்கங்கள் எதிர்ப்புகளைக் கட்டுப்படுத்தவும் தடம் புரட்டவும் முயற்சித்த போதிலும், விக்கிரமசிங்க தொடர்ச்சியான போராட்டங்களையும் வேலைநிறுத்தங்களையும் எதிர்கொண்டார்.

தற்போதைய அரசாங்கம், அரச நிறுவனங்களின் துரித விற்பனையை மேற்கொள்வதில் இன்னும் அதிகமாக முன்நகர விரும்புகிறது. அரச நிறுவனங்கள், அரசாங்க நிதிகளுக்கு அதிகப்படியான சுமையாக மாறியுள்ளதாக ஜனாதிபதி முறைப்பட்டுக்கொண்டார். “அரசுக்குச் சொந்தமான நிறுவனங்களின் குழுமம் ஒன்றை அமைப்பதைப் பற்றி அரசாங்கம் ஆராய்ந்து வருகின்றது. இதன் மூலம் அரச நிறுவனங்களின் குழு ஒன்றை அமைத்து, அதன் பங்குகளை பங்குச் சந்தையில் விநியோகிக்க முடியும்,” என்று அவர் கூறினார்.

அரசுக்குச் சொந்தமான நிறுவனங்கள் மற்றும் வாரியங்களை மட்டுமன்றி, ஏனைய அரசு நிறுவனங்களைப் பற்றியும் அரசாங்கம் பரிசீலித்து வருவதாக திசாநாயக்க கூறினார். “மூடப்பட வேண்டிய, தொகுக்கப்பட வேண்டிய மற்றும் மறுசீரமைக்கப்பட வேண்டிய” அரச நிறுவனங்களை அது தற்போது அடையாளம் கண்டு வருகிறது.

குறிப்பாக சிங்கப்பூர், மலேசியா மற்றும் வியட்நாமில் உள்ள எதேச்சதிகார, சந்தை சார்பு ஆட்சிகளை சுட்டிக்காட்டி, தென்கிழக்கு ஆசிய நாடுகளில் உள்ளதைப் போன்ற ஒரு அரசாங்கம் இலங்கைக்கும் தேவை என்று ஜனாதிபதி ஆலோசகர் ஹுலங்கமுவா வலியுறுத்தினார்.

“அரசியல் ஸ்திரத்தன்மை, கடன் மறுசீரமைப்பு நிறைவு மற்றும் இறையாண்மை கடன் மதிப்பீடு மேம்படுத்தல் ஆகியவற்றுடன், தென்கிழக்கு ஆசியா போன்ற நாடுகளில் நாம் கண்டதைப் போன்ற மாற்றத்தக்க வளர்ச்சிக்கு திட்டமிட வேண்டும்,” என்று அவர் கூறினார்.

அரச திறைசேரியால் ஊதிய செலவை தாங்க முடியாத காரணத்தால், 1.3 மில்லியனுக்கும் அதிகமான அரச ஊழியர்களை 750,000 ஆகக் குறைக்க வேண்டும் என்று ஹுலங்கமுவ டிசம்பர் மாதத்தில், கூறியதாக பதிவு செய்யப்பட்டுள்ளது. 85 வணிக நிறுவனங்கள் உட்பட 527 அரச நிறுவனங்களில் சுமார் 500,000 தொழிலாளர்கள் பணிபுரிகின்றனர்.

இந்தக் கருத்துக்கள் அனைத்தும் கடன் சுறாக்களுக்கு திருப்பி செலுத்தவும் இலாபத்தை அதிகரிப்பதற்கும் திட்டமிடப்பட்டுள்ள, பரிய அரசாங்க செலவின வெட்டுக்களை சுட்டிக்காட்டுகின்றன. வரவுசெலவுத் திட்ட உபரியை 2023 ஆம் ஆண்டில் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 0.6 சதவீதத்திலிருந்து 2025 ஆம் ஆண்டில் 2.3 சதவீதமாக நான்கு மடங்கு அதிகரிப்பதும், 2023 ஆம் ஆண்டில் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 9.8 சதவீதமாக இருநத வரவு செலவுத் திட்ட பற்றாக்குறையை பாதியாகக் குறைப்பதும் சர்வதேச நாணய நிதியம் விதித்த முதன்மை இலக்குகளில் அடங்கும்.

திசாநாயக்க அரசாங்கத்தைப் பொறுத்தவரை, சர்வதேச நாணய நிதிய கோரிக்கைகளை நிறைவேற்றுவது 3 பில்லியன் அமெரிக்க டாலர் பிணை எடுப்புக் கடனின் அடுத்த தவணையைப் பெறுவதற்கு இன்றியமையாதது.

முந்தைய அரசாங்கத்தால் அறிவிக்கப்பட்ட அரசு ஊழியர்களுக்கான திட்டமிடப்பட்ட 25 சதவீத ஊதிய உயர்வை இரத்து செய்த பின்னர், 2025 வரவு செலவுத் திட்டத்தில் அற்ப ஊதிய உயர்வை வழங்க திசாநாயக்க திட்டமிட்டுள்ளார். இது மாதம் சுமார் 7,500 ரூபாய் ($25) அதிகிப்பாக இருக்கும் என்று ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இது 2022 மற்றும் 2024 க்கு இடையில் அனைத்து தொழிலாளர்களதும் உண்மையான ஊதியத்தில் ஏற்பட்ட 49 சதவீதம் சரிவுடன் ஒப்பிடும்போது மிகக் குறைவான அதிகரிப்பாகும்.

திசாநாயக்க பெருவணிகம் மற்றும் சர்வதேச நிதி மூலதனத்தின் அன்புக்குரியவராக மாறிவிட்டார். நாட்டின் பங்குச் சந்தையான கொழும்பு பங்குச் சந்தை (CSE), ஜனவரி 23 அன்று முன்னெப்போதும் இல்லாத வகையில் 17,000 புள்ளிகளைத் தாண்டி அதிவேக வளர்ச்சியைக் கண்டுள்ளது.

தயாரிக்கப்பட்டு வரும் மேலதிக சிக்கன நடவடிக்கைகளின் துன்பத்தை சுமக்க உழைக்கும் மக்கள் நிர்ப்பந்திக்கப்பட்டுள்ளனர். ஜனத்தொகையில் கால் பகுதிக்கும் அதிகமானோர் ஏற்கனவே கடுமையான வறுமையில் வாழ்கின்றனர், மேலும் 60 சதவீதத்திற்கும் அதிகமானோர் உணவுக்காக சமாளிக்கும் உத்திகளைக் கையாள வேண்டியுள்ளது.

ஐக்கிய மக்கள் சக்தி (ஐ.ம.ச.) மற்றும் ஸ்ரீலங்கா பொதுஊன முன்னணி (ஸ்ரீ.ல.பொ.ஜ.மு.) உட்பட மதிப்பிழந்த எதிர்க்கட்சிகள், அரசாங்கம் தேர்தல் வாக்குறுதிகளை மீறியதை சுட்டிக்காட்டி, அதன் மீது அற்ப விமர்சனங்களைச் செய்கின்றன. உண்மையில், இந்தக் கட்சிகள் அனைத்தும் சர்வதேச நாணய நிதியத்தின் சிக்கன திட்ட நிரலை ஆதரிப்பதுடன் தாம் வித்தியாசமாக ஏதாவது செய்ய உள்ளதாக வாக்காளர்களை நம்ப வைக்க முயற்சிக்கின்றன.

ஜே.வி.பி./தே.ம.ச. அரசாங்கம், பெருவணிக மற்றும் சர்வதேச முதலீட்டாளர்களுடன், சுமார் ஒரு மில்லியன் தொழில்களை அழிப்பது, ஊதியங்கள் மற்றும் ஓய்வூதியங்களை வெட்டுவது மற்றும் இலாபங்களை அதிகரிப்பதற்கான நிலைமைகளை உருவாக்குவது எப்படி என்பது குறித்து வெளிப்படையாக கலந்துரையாடி வரும் நிலையில், தொழிற்சங்கங்கள் முழுமையான மௌனத்தை கடைப்பிடித்து வருகின்றன. தொழிற்சங்க அதிகாரிகளில் பலர் இப்போது ஜே.வி.பி./தே.ம.ச. அரசாங்கத்தில் உறுப்பினர்களாகவும் அமைச்சர்களாகவும் உள்ளனர். அவர்களின் அரசியல் சார்பு எதுவாக இருந்தாலும், நாட்டின் அனைத்து தொழிற்சங்க அதிகாரிகளும் சர்வதேச நாணய நிதிய திட்டத்தை ஆதரிக்கின்றனர்.

அரசாங்கமும் பெருவணிகமும் ஒரு சமூக எதிர் புரட்சியைத் தயாரிப்பதில் கூட்டுச் சேரும்போது, ​​தொழிலாள வர்க்கம் கிராமப்புற ஏழைகளையும் இளைஞர்களையும் அணிதிரட்டிக்கொண்டு ஜனநாயக மற்றும் சமூக உரிமைகளைப் பாதுகாக்க அதன் சொந்த மூலோபாயத்தைத் தயாரிக்க வேண்டும்.

தொழிலாள வர்க்கத்தின் சுயாதீனமான தொழில்துறை மற்றும் அரசியல் வலிமையை அணிதிரட்டுவதன் மூலம் மட்டுமே அரசாங்கத்தின் சிக்கன நடவடிக்கைகளைத் தோற்கடிப்பது சாத்தியமாகும். இதற்கு, தங்கள் உரிமைகள் மீதான இதேபோன்ற தாக்குதலுக்கு எதிராக போராட வரும் உலகெங்கிலும் உள்ள தொழிலாளர்களுடன் ஐக்கியத்தைக் கட்டியெழுப்புவது அவசியமாகும்.

தனியார்மயமாக்கலுக்கு எதிராக, தொழிலாளர்கள் பிரதான வங்கிகள் மற்றும் நிறுவனங்களை தொழிலாளர்களின் கட்டுப்பாட்டின் கீழ் தேசியமயமாக்கக் கோர வேண்டும்.

26 ஆண்டுகால பிற்போக்கு இனவாதப் போருக்கு நிதியளிப்பதற்கும், பெருவணிகங்களின் நலன்களை உறுதி செய்வதற்கும் ஆட்சியில் இருந்த அரசாங்கங்கள் வாங்கிய மிகப்பெரிய வெளிநாட்டுக் கடன்களுக்கு உழைக்கும் மக்கள் பணம் செலுத்தக்கூடாது. இந்தக் கடன்கள் நிராகரிக்கப்பட்டு, அந்த நிதியானது சுகாதாரம் மற்றும் கல்வி உட்பட அத்தியாவசிய சமூகத் திட்டங்களை அபிவிருத்தி செய்யப் பயன்படுத்தப்பட வேண்டும்.

தொழிலாளர்கள் முதலாளித்துவக் கட்சிகளிலிருந்து பிரிந்து, தொழிற்சாலைகள், தோட்டங்கள் மற்றும் ஏனைய வேலைத் தளங்களிலும் தொழிற்சங்க அதிகாரத்துவங்களிலிருந்து சுயாதீனமாக தங்கள் சொந்த அமைப்புகளை -நடவடிக்கைக் குழுக்களை- ஸ்தாபிக்க வேண்டும். இந்த நடவடிக்கைக் குழுக்கள் கிராமப்புறங்களில் உள்ள நடவடிக்கைக் குழுக்களுடன் ஒருங்கிணைக்கப்பட வேண்டும். சர்வதேச அளவில், அவர்கள் நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவால் கட்டியெழுப்பப்படும் தொழிலாளர் நடவடிக்கை குழுக்களின் சர்வதேச கூட்டணியுடன் இணைய வேண்டும்.

சோசலிச சமத்துவக் கட்சி (சோசக), ஜனநாயக ரீதியாக தேர்ந்தெடுக்கப்பட்ட நடவடிக்கைக் குழுக்களின் பிரதிநிதிகளைக் கொண்ட தொழிலாளர்களதும் கிராமப்புற மக்களினதும் ஜனநாயகத்துக்கும் சோசலிசத்துக்குமான மாநாட்டிற்கு அழைப்பு விடுக்கிறது. அத்தகைய ஒரு மாநாடு, சிக்கன நடவடிக்கைகளைத் தோற்கடிப்பதற்கான போராட்டத்தை ஒழுங்கமைத்து, சோசலிசக் கொள்கைகளை செயல்படுத்த தொழிலாளர்கள் மற்றும் விவசாயிகளின் அரசாங்கத்திற்காகப் போராடும்.