மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம்.
தமிழ் மொழியில் இருந்து பெறப்பட்ட நட்டாமி என்ற சொல், குறிப்பாக கொழும்பு துறைமுகம், களஞ்சியசாலைகள், தலைநகரின் பழமையான வர்த்தக மையமும் மிகப்பெரிய சந்தையுமான புறக்கோட்டைக்கு (Pettah) இடையில், பொருட்களை ஏற்றுதல், இறக்குதல் மற்றும் கொண்டு செல்வதில் பிரத்தியேகமாக ஈடுபட்டுள்ள உடலுழைப்பு தொழிலாளர்கள் அல்லது சுமை தூக்கும் தொழிலாளர்களை குறிக்கிறது. இவர்கள், நகரத்திலுள்ள தொழிலாள வர்க்கத்தில் அதிகம் அறியப்படாத பிரிவினராக இருந்து வருகின்றனர்.
அதிகாலையில் புகைப்படம் எடுக்கப்பட்ட பின்வரும் புகைப்படக் கட்டுரை, புறக்கோட்டையிலுள்ள சுமைதூக்கும் தொழிலாளர்களின் அன்றாட வேலை நாளைப் பற்றிய ஒரு பார்வையை வழங்குகிறது. அதிகாலையில், புறக்கோட்டை சந்தையில் அவர்கள் கூடும் அமைதியான தருணங்களில் இருந்து, ஒரு சில இடைவேளைகளுடன் அவர்கள் மணிக்கணக்கில் மேற்கொள்ளும் சரீர ரீதியான கடினமான பணிகள் வரை, பிரதான ஊடகங்கள் மற்றும் தொழிற்சங்கங்களால் ஏறத்தாழ முற்றிலும் புறக்கணிக்கப்பட்ட, சர்வதேச தொழிலாள வர்க்கத்தின் ஒரு பிரிவினரின் வாழ்க்கையை இந்தப் படங்கள் வெளிப்படுத்திக் காட்டுகின்றன.
கொழும்பின் வரலாற்று சிறப்புமிக்க மையத்தில் அமைந்துள்ள புறக்கோட்டை, தினசரி வேலை தேடி நட்டாமிகள் கூடும் முதன்மை மையங்களில் ஒன்றாக இருந்து வருகிறது. காலனித்துவ காலத்துக் கட்டிடங்கள், நவீன உயர்தர விடுதிகள், அழகு மற்றும் உடற்பயிற்சி மையங்களால் சூழப்பட்ட இந்த இடத்தில், நட்டாமிகள் ஒரே நேரத்தில் 40 முதல் 90 கிலோகிராம் வரையான எடையுள்ள, பெரும்பாலும் தங்கள் சொந்த உடல் எடையை விட அதிகமான எடையுள்ள சுமைகளை, அந்தப் பகுதியின் குறுகிய மற்றும் நெரிசலான தெருக்கள் வழியாகச் சுமந்து செல்கின்றனர்.
இலங்கையிலுள்ள நகர்ப்புற தொழிலாளர் தொகுப்பில், புறக்கோட்டை சுமைதூக்கும் தொழிலாளர்கள் ஒரு கணிசமான பகுதியினராக இருந்து வருகின்றனர். இவர்களின் தனிப்பட்ட உடல் உறுதிக்கு ஏற்ப பேரம் பேசப்பட்டு, மாறுபடும் ஊதியத்தை பெற்றுக்கொண்டு உயிர்வாழ்கின்றனர். சந்தையில் உள்ள வணிகங்கள் பெரிதும் சார்ந்திருக்கும் தலைநகரில், வர்த்தகம் மற்றும் தளவாடங்களின் ஒரு முக்கியமான அம்சத்துடன் தொடர்புடைய கடினமான பணிகளை இவர்கள் உண்மையில் மேற்கொண்டு வருகின்றனர்.
மத்திய காலத்திலிருந்தே உருவான நட்டாமி கைவினைத் தொழில், மூன்று தொடர்ச்சியான காலனித்துவ நிர்வாகங்களால் - போர்த்துகீசியம், டச்சு மற்றும் குறிப்பாக பிரித்தானியர் - இன்றுவரை கொழும்பில் உள்ள உள்ளூர் நிர்வாகங்களால் பராமரிக்கப்பட்டு விரிவுபடுத்தப்பட்டு வருகிறது.
கொழும்பு ஒரு நவீன மூலோபாய மற்றும் வர்த்தக துறைமுக நகரமாக மாற்றப்பட்டு வருகின்ற போதிலும், இதுபோன்ற வேலையின் தன்மை பல நூற்றாண்டுகளாக குறிப்பிடத்தக்க மாற்றங்களுக்கு உள்ளாகவில்லை. இது, பெருமளவில் ஒடுக்கப்பட்ட சிறுபான்மையினர் மற்றும் கிராமப்புற தொழிலாளர்களை உள்ளடக்கிய, இலங்கை தொழிலாள வர்க்கத்தில் மிகவும் சுரண்டப்படும் தட்டுக்களில் ஒன்றாக உள்ளது.
அதிகாலை முதல் பின்னிரவு வரை, சுமைதூக்கும் தொழிலாளர்கள் அரிசி, காய்கறிகள், கட்டுமானப் பொருட்கள் மற்றும் பிற பொருட்களை அதிக அளவில் சுமந்து செல்கின்றனர். அவர்கள் சுட்டெரிக்கும் வெயிலிலும், கொட்டும் பருவமழையிலும், கொழும்பின் பரபரப்பான தெருக்களின் தொடர்ச்சியான மற்றும் இடைவிடாத சலசலப்புக்கு மத்தியிலும் அவர்கள் வேலை செய்து வருகிறார்கள்.
தோராயமான மதிப்பீடுகளின்படி, ஒரு நட்டாமி ஒரு நாளைக்கு 1,500 முதல் 3,000 ரூபாய்கள் (சுமார் நான்கு முதல் எட்டு அமெரிக்க டாலர்கள்) வரை சம்பாதிக்கிறார். வாழ்க்கைச் செலவு தொடர்ந்து அதிகரித்து வரும் கொழும்பில், இது அடிப்படை வாழ்க்கைத் தேவைகளைப் பூர்த்தி செய்வதுக்கு போதுமானதாக இல்லை. குறிப்பாக, வீட்டுவசதிக்கான செலவுகள் அதிகமாக இருப்பதால், ஒரு சேரிக் குடிசைப் பகுதியில் இருக்கும் அவர்களின் வீட்டுச் செலவானது, அவர்களது சம்பளத்தின் பெரும் பங்கை உறிஞ்சிக் கொள்கிறது.
நட்டாமிகளுக்கு அவர்களுடைய வேலை நேரத்துக்கு ஏற்ப ஊதியம் கொடுக்கப்படுவதில்லை. மாறாக, அவர்கள் தங்களின் முதுகின் மீதோ அல்லது சாதாரண தள்ளுவண்டிகளிலோ கொண்டு செல்லும் சரக்குகளின் எடையைப் பொறுத்து, அவர்களுக்கு ஊதியம் வழங்கப்படுகிறது. இலங்கையில் தேயிலை தோட்டத் தொழிலாளர்கள் பறிக்கும் ஒரு கிலோ தேயிலை கொழுந்துக்கு ஊதியம் வழங்கப்படுகின்ற போதிலும், நட்டாமியைப் போலன்றி, அவர்கள் இன்னமும் கூலித் தொழிலாளர்களாகவே கருதப்படுகின்றனர். வாரத்தில் ஆறு நாட்களும் வேலை செய்துவரும் பெரும்பாலான நட்டாமிகள், இந்தக் கடுமையான நிலைமைகளின் கீழ், ஒரு நாளைக்கு சராசரியாக ஒன்பது மணி நேரத்திற்கும் மேலாக உழைக்கிறார்கள்.
சமீபத்திய மற்றும் அரிதான ஒரு ஆய்வின்படி, கொடூரமான இந்த வேலையின் உடல் ரீதியான உபாதைகளால் புறக்கோட்டை சுமை தூக்கும் தொழிலாளர்கள், தசைக்கூட்டு கோளாறுகள், நாள்பட்ட வலி மற்றும் பிற பலவீனப்படுத்தும் உடல்நலப் பிரச்சினைகளால் பாதிக்கப்படுகின்றனர்.
இவர்கள் “முறைசாரா தொழிலாளர் படை” [உத்தியோகபூர்வமாக பணியமர்த்தப்படாத அல்லது முறையான வேலைவாய்ப்பு அமைப்புகளால் அங்கீகரிக்கப்படாத தொழிலாளர்களைக் குறிக்கிறது] என்றழைக்கப்படுவதன் பாகமாக இருப்பதால், இவர்களின் வாழ்க்கை மற்றும் பணி குறித்த உத்தியோகபூர்வ புள்ளிவிபரங்கள் எதுவும் கிடைக்கவில்லை. ஆயிரக்கணக்கில் இருப்பதாக கருதப்படும் இந்த தொழிலாளர்கள், முக்கியமாக பதின்ம வயதினருக்கும் அறுபது வயதுகளின் முற்பகுதிக்கும் இடைப்பட்டவர்கள் என்று மதிப்பிடப்பட்டுள்ளது.
வேலையிடத்திற்கு அப்பால், மோசமான சுகாதாரம், சீரான மற்றும் சத்தான உணவை வாங்க முடியாததால் போதுமான ஊட்டச்சத்து இல்லாமை மற்றும் மருத்துவ பராமரிப்புக்கான குறைந்த அணுகல் போன்றவற்றை கொண்டிருக்கின்ற, நெரிசலான சேரிக் குடிசைப் பகுதிகளில் வாழ்ந்துவரும் இவர்களின் வாழ்க்கை நிலைமைகள், மோசமாக குறிக்கப்படுகின்றன.
காலனித்துவ காலங்களிலிருந்து வேரூன்றியுள்ள இந்த நிலைமைகள், இந்த தொழிலாளர்களின் ஆரோக்கியம், ஆயுட்காலம் மற்றும் ஒட்டுமொத்த நல்வாழ்வையும் தொடர்ந்து பாதித்து வருகின்றன. இவர்களில் பலர் தங்கள் அன்றாட வேலை வாழ்க்கையைத் தக்கவைத்துக்கொள்ளவும், தங்கள் குடும்பங்களை பராமரிப்பதற்கும் போராடிக் கொண்டிருக்கிறார்கள்.
தொடர்ந்தும் அதிகரித்து வரும் வாழ்க்கைச் செலவால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள உழைக்கும் ஏழைகளில் மிகவும் பாதிக்கப்படக்கூடிய பிரிவினராக, நட்டாமியும் இருக்கின்றனர். மில்லியன் கணக்கான இலங்கைத் தொழிலாளர்களைப் போலவே, ஜனாதிபதி திசாநாயக்கவின் ஜனதா விமுக்தி பெரமுனா தலைமையிலான தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தால், இப்போது திணிக்கப்படும் சர்வதேச நாணய நிதியத்தின் சிக்கன நடவடிக்கைகளின் பேரழிவு தாக்கத்தை, இவர்களும் இப்போது எதிர்கொண்டு வருகின்றனர்.