இந்த மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கு காணலாம்.
மக்கள் விடுதலை முன்னணி / தேசிய மக்கள் சக்தி (ஜே.வி.பி/தே.ம.ச.) அரசாங்கம், தங்களின் சில கொடுப்பனவுகளை வெட்டிக் குறைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து, இலங்கை முழுவதும் உள்ள அரசு மருத்துவமனைகளுக்கு வெளியே வியாழக்கிழமை பல ஆயிரம் தாதிமார் போராட்டத்தில் ஈடுபட்டனர். சில மருத்துவ உதவியாளர்களும் தாதிமாருடன் இணைந்து, மதிய உணவு நேரத்தில் அவர்களது மருத்துவமனைகளுக்கு வெளியே போராட்டத்தில் கலந்து கொண்டனர்.
பெப்ரவரி 17 அன்று, ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க 2025 ஆம் ஆண்டு வரவுசெலவுத் திட்டத்தை முன்வைத்தார். இதில், இலட்சக்கணக்கான தொழில்களை அழிக்கும் வகையில் அரச நிறுவனங்களை மறுசீரமைத்தல் அல்லது தனியார்மயமாக்கல் மற்றும் அத்தியாவசிய பொருட்கள் மீதான வரி உயர்வு உட்பட சர்வதேச நாணய நிதியம் கட்டளையிட்டுள்ள திட்டங்களும் அற்ப ஊதிய உயர்வும் அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த வரவு-செலவுத் திட்டத்தில் பல்வேறு கொடுப்பனவுகள் குறைக்கப்பட்டுள்ளதுடன் இதனால் தாதிமார், மருத்துவ உதவியாளர்கள், சுகாதார உதவியாளர்கள், மருத்துவர்கள் மற்றும் ஏனைய மருத்துவ பணியாளர்களின் மொத்த ஊதியம் கடுமையாகக் குறைக்கப்படும்.
சுகாதார ஊழியர்கள் அற்ப ஊதிய உயர்வினால் கோபமடைந்துள்ளதோடு, குறிப்பாக, தாதிமார் மேலதிக நேரம் மற்றும் பொது விடுமுறை நாட்களுக்கான ஊதிய விகிதங்கள் கடுமையாக குறைக்கப்பட்டுள்ளதாலும், பதவி உயர்வு காலக்கெடு நீட்டிக்கப்பட்டுள்ளதாலும் ஆத்திரமடைந்துள்ளனர். ஒரு தொழிற்சங்க தலைவரின் கூற்றுப்படி, புதிய விகிதங்களுக்கு ஏற்ப, ஒரு இளநிலை தாதி, சிரேஷ்ட தாதி, மேட்ரன் ஆகியோருக்கு முறையே மாதத்திற்கு ரூபா 13,000, 17,500 மற்றும் 22,000 என்ற தொகையில் மேலதிக நேர ஊதிய இழப்பு ஏற்படுகிறது.
திசாநாயக்காவின் வரவு-செலவுத் திட்டம், தாதிமாரின் பதவி உயர்வு காலத்தை, மூன்றாம் நிலையில் இருந்து இரண்டாம் நிலைக்கு உயர்வதற்கான காலத்தை ஐந்து வருடங்களில் இருந்து பத்து வருடங்காகவும், இரண்டாம் நிலையில் இருந்து முதல் நிலைக்கு உயர்வதற்கான காலத்தை, ஏழு வருடங்களில் இருந்து பதினொரு வருடங்காகவும் நீட்டித்துள்ளது. இதன் மூலம், தாதிமார் உயர் ஊதியம் பெறுவதற்கு அதிக காலம் எடுப்பதோடு அவர்களின் ஓய்வூதியத்தையும் பாதிக்கும்.
இலங்கையின் அரச வைத்தியசாலைகளில் சுமார் 30,000 தாதிமார் பணியாற்றுகின்றனர். ஆனால் போட்டி சுகாதார தொழிற்சங்கங்களின் அதிகாரத்துவ தலைமைகள் போராட்டத்தை கட்டுப்படுத்தவும், தாதிமாரை பிளவுபடுத்தவும் முழு முயற்சி எடுத்தன.
ஐக்கிய தேசியக் கட்சி ஆதரவு அரச தாதிமார் அதிகாரிகள் சங்கம் (GNOA) வியாழக்கிழமையின் போராட்டத்துக்கு அழைப்புவிடுத்த அதே வேளை, பௌத்த பிக்குவான முருத்தெட்டுவே ஆனந்தவால் வழிநடத்தப்படும் பொது சேவைகள் ஐக்கிய தாதிமார் சங்கம் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. மாறாக, சுகாதார அமைச்சர் நலிந்த ஜயதிஸ்ஸவுக்கு கடிதம் எழுதி, சுகாதார துறை தொடர்பான வரவு-செலவுத் திட்ட நடவடிக்கைகளை மாற்றுமாறு கோரியது.
சுகாதார தொழிலறிஞர்கள் சங்கத்தின் தலைவர் ரவி குமுதேஷ், வரவு-செலவுத் திட்டத்தில் மாற்றங்களை ஏற்படுத்தக் கோரி, சுகாதார அமைச்சருக்கு தான் எழுதிய கடிதத்திற்கு பதில் கிடைக்கும் வரை காத்திருப்பதாக தனது உறுப்பினர்களிடம் கூறினார். தனது உறுப்பினர்களுக்கு பணிபுரியும் போது கருப்பு பட்டிகள் அணியுமாறு குமுதேஷ் கேட்டுக்கொண்டார்.
போராட்டங்கள், அரசாங்கத்துடனும் சர்வதேச நாணய நிதியத்தின் கடுமையான சிக்கனத் திட்டத்துடனும் நேரடி மோதலாக வளரக்கூடும் என பீதியடைந்துள்ள இந்த தொழிற்சங்கங்கள், சுகாதார ஊழியர்களின் ஐக்கியப்பட்ட நடவடிக்கைகளை தடுக்க உறுதிபூண்டுள்ளன.
அரசாங்க தாதி உத்தியோகத்தர் சங்கத்தின் தலைவர் சமன் ரத்னப்ரிய, வரவுசெலவுத் திட்டமானது தாதிமார் மற்றும் மருத்துவ உதவியாளர் சேவைகளை கடுமையாக பாதித்துள்ளது என்றும், தாதிமாரின் மேலதிக நேர ஊதியத்தை மணிக்கு 65 ரூபாய் குறைத்துள்ளது என்றும் ஊடகங்களிடம் தெரிவித்தார். அவர் இந்த பிரச்சினைகளை தீர்க்குமாறு அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத் அதே நேரம், இந்த வரவுசெலவுத் திட்டத்தை 'சிறந்தது மற்றும் சாதகமானது' என்று பாராட்டினார்.
ரத்னப்ரிய, ஏனையத் தொழிற்சங்க தலைவர்களைப் போலவே, தொழிலாளர்களின் போராட்டங்களை தடம்புறளச் செய்து காட்டிக்கொடுத்த நீண்ட இழிந்த பதிவைக் கொண்டுள்ள அதே வேளை, அவரது துரோகத்துக்காக பல்வேறு அரசியல் பதவிகள் மற்றும் சலுகைகளை பரிசாகப் பெற்றவராவார். 2020 இல் அவர் ஆறு மாதங்களுக்கு ஐக்கிய தேசியக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினராக நியமிக்கப்பட்டார். பின்னர், ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் தொழிலாளர் ஆலோசகராக நியமிக்கப்பட்டார்.
வியாழக்கிழமை நடந்த மட்டுப்படுத்தப்பட்ட போராட்டங்களில் சில சுகாதார ஊழியர்கள் மட்டுமே பங்கேற்ற போதிலும், தொழில் நிலைமைகள் மற்றும் சமூக நிலைமைகள் மீதான தாக்குதல்கள் ஆழமடைந்து வருவதால், சுகாதார ஊழியர்கள் மற்றும் ஏனைய தொழிலாளர் பிரிவுகளிடையே கோபம் வளர்ந்து வருகிறது.
ஏனைய எல்லா தொழிற்சங்கங்களையும் போலவே, சுகாதார தொழிற்சங்கங்களும், சர்வதேச நாணய நிதியத்தின் கடுமையான சிக்கனத் திட்டத்தை எதிர்க்கும் வேலைநிறுத்தங்கள் மற்றும் போராட்டங்களை திட்டமிட்டு தடுத்து நிறுத்தியுள்ளன. திசாநாயக்காவின் தே.ம.ச. அரசாங்கத்தின் கொடூரமான சமூக தாக்குதல்களுக்கு எதிராக போராடுவதற்கு தொழிலாளர்கள் விடயங்களை தங்கள் கைகளில் எடுத்துக்கொண்டு, தொழிற்சங்க தலைமைகளுக்கு அப்பாற்பட்டு சுயாதீனமாக ஒன்றுபட வேண்டும். இதற்காக, அவர்கள் தங்கள் சொந்த சுயாதீன நடவடிக்கைக் குழுக்களை உருவாக்கிக்கொண்டு சோசலிச மற்றும் அனைத்துலகவாத முன்னோக்கை அடிப்படையாகக் கொண்ட ஒரு ஐக்கியப்பட்ட தொழில்துறை சார்ந்த மற்றும் அரசியல் பிரச்சாரத்தை அபிவிருத்திய செய்ய வேண்டும். வியாழக்கிழமை, சோசலிச சமத்துவக் கட்சியின் உறுப்பினர்கள், போராடும் சுகாதார ஊழியர்களுடன் கலந்துரையாடி, இந்த முன்னோக்கின் தேவையை விளக்கினர்.
தெற்கில் உள்ள கராபிட்டிய போதனா மருத்துவமனையில் பணியாற்றும் ஒரு சிரேஷ்ட அவசரப் பிரிவு தாதி, வரவுசெலவுத் திட்டத்தைக் கண்டித்து, திசாநாயக்காவின் வரவுசெலவுத் திட்டத்தால் தனது மாத ஊதியம் 'கடுமையாக குறைக்கப்படும்' என்று தெரிவித்தார். மேலதிக நேரம் உட்பட, அவரது தற்போதைய மாத ஊதியம், 130,000 ரூபாய் ஆகும். அரசு மருத்துவமனைகளில் ஊழியர் பற்றாக்குறையை சமாளிக்க தாதிமார் அதிக நேரம் வேலை செய்கின்றனர்.
'நாங்கள் அரசாங்கத்திடம் எதிர்பார்த்தது இதையல்ல. நாங்கள் எங்கள் பணியில் கடுமையான பொறுப்புகளை ஏற்றுக்கொண்டிருக்கிறோம், ஆனால் அரசாங்கம் எங்களை மிகவும் அநியாயமாக நடத்துகிறது. இந்த அநீதிக்கு எதிராக இன்று நாங்கள் தெருக்களில் இறங்கியுள்ளோம்,' என அவர் கூறினார்.
அவசரப் பிரிவு தாதி, அரசாங்க தாதி உத்தியோகத்தர் சங்க உறுப்பினர் அல்லாதவராக இருந்தாலும், தனது ஆதரவைக் காட்டுவதற்காக போராட்டத்தில் சேர முடிவு செய்தார். உண்மையில், தாம் தொழிற்சங்க தலைமைகளின் பிளவுபடுத்தும் செயல்களுக்கு எதிராக இருப்பதால், பல தாதிமார் தொழிற்சங்கங்களில் உறுப்பினர்களாக இல்லை.
கராபிட்டிய மருத்துவமனையின் மற்றொரு தாதி வரவுசெலவுத் திட்டத்தை கடுமையாக கண்டித்தார். 'எங்கள் மாத வருமானம் உண்மையில் குறைந்துள்ளதால் நான் இதைப் பற்றி கோபத்தில் இருக்கிறேன்' என்று அவர் கூறினார்.
'36 ஆண்டுகளாக தாதியாக பணியாற்றிய பிறகும், எங்களது அனுபவம் மற்றும் கடும் உழைப்புக்காக எங்களுக்கு கிடைத்திருப்பது இதுதான். அரசாங்கம் சுகாதார சேவைகளுக்கு எந்த தீவிர அக்கறையும் காட்டவில்லை. நாங்கள் எதிர்கொள்ளும் தாங்கமுடியாத வேலை நிலைமைகள் மற்றும் குறைபாடுகள் காரணமாக நான் ஒரு தாதியாக ஏமாற்றமடைகிறேன்,' என்றும் அவர் தெரிவித்தார்.
'அவை எங்களைப் பற்றி கவலைப்படாததால் தொழிற்சங்கங்களைப் பற்றி பேசுவது பயனற்றது,' என்று அவள் மேலும் கூறினாள்.
கொழும்புக்கு வடக்கே உள்ள றாகமை போதனா வைத்தியசாலையன் ஒரு தாதி கூறியதாவது: 'எங்கள் கொடுப்பனவுகளை குறைக்கும் வரவுசெலவுத் திட்டத்தை எதிர்க்கும் வகையில் இந்த மௌனப் போராட்டத்தில் சேர்ந்தோம். சுகாதார ஊழியர்களாகிய நாங்கள், ஊழியர் பற்றாக்குறை காரணமாக, விரும்பினாலும் விரும்பாவிட்டாலும், அதிக நேரமும் விடுமுறை நாட்களிலும் வேலை செய்ய நிர்ப்பந்திக்கப்பட்டுள்ளோம்.
'எங்களுக்கு ஒரு அநீதி இழைக்கப்பட்டுள்ளது, எனவே இதுவரை நாங்கள் அனுபவித்துவருவதை அரசாங்கம் பாதுகாக்க வேண்டும் என்று கோருகிறோம். எங்கள் கல்வித் தகுதிகளையும் புறக்கணிப்பது உட்பட பல அநீதிகளை நாங்கள் எதிர்கொண்டுள்ளோம்,' என்று அவள் மேலும் கூறினாள். இலங்கையின் நடப்பு பொருளாதார நெருக்கடியால் ஆயிரக்கணக்கான தாதிமார் இலங்கையை விட்டு வெளியேறியுள்ளனர்.
கண்டி போதனா வைத்தியசாலையில் சுமார் 2,000 தாதிமார் பணியாற்றினாலும், மதிய உணவு நேர போராட்டத்தில் சுமார் 40 தாதிமார் மற்றும் 12 மருத்துவ உதவியாளர்கள் மட்டுமே பங்கேற்றனர்.
'வியாழக்கிழமை போராட்டத்தில் பங்கேற்றவர்கள் உட்பட, இந்த மருத்துவமனையில் பணியாற்றும் பல சுகாதார ஊழியர்கள், திசாநாயக்க மற்றும் ஜே,வி,பி,/தே.ம.ச.க்கு வாக்களித்தனர். ஆனால் இப்போது அரசாங்கத்தை விமர்சிக்கின்றனர்,' என ஒரு தாதி அதிகாரி விளக்கினார்.
'நான் அனுர குமாரவுக்கு வாக்களித்து இந்த அரசாங்கத்தை ஆதரிக்க விரும்பினேன், ஆனால் எங்கள் சம்பளத்தை குறைப்பதை நாங்கள் எதிர்க்கிறோம். இந்த அரசாங்கம் சில மாற்றங்களை கொண்டு வரும் என்று நாங்கள் நம்பினோம், ஆனால் இது முந்தைய அரசாங்கங்களைப் போலவே செயல்படுகிறது,' என்று அவள் கூறினாள்.
தனது வேலைச்சுமை காரணமாக போராட்டத்தில் சேர முடியாத மற்றொரு சுகாதார ஊழியர், 'யார் அதிகாரத்திற்கு வந்தாலும், இந்த நாடு பெரும் வணிகர்கள் விரும்புவதைப் போலவே நிர்வகிக்கப்படுகிறது,' என்றார். மற்றொரு சுகாதார ஊழியர் கூறியதாவது: 'நாங்கள் இந்த அரசாங்கத்திற்கு வாக்களித்தோம். ஆனால், உண்மையில், தொழிலாளர்களை உண்மையாக பிரதிநிதித்துவப்படுத்தும் ஒரு அரசாங்கமே நமக்குத் தேவை. தொழிலாளர்கள் ஆளுகின்றவாறு ஒரு முறைமை மாற்றம் தேவை. அதற்காக, தொழிலாளர்களுக்கு கற்பிப்பது அவசியம்.'
மத்திய மாகாணத்தில் உள்ள கம்பளை மருத்துவமனையின் தாதியான நயனா கூறியதாவது: 'இன்று எங்கள் மருத்துவமனையில் எந்த போராட்டமும் நடக்கவில்லை. பல தாதிமார் சமீபத்தில் அரசாங்க தாதி உத்தியோகத்தர் சங்கத்தில் இருந்து விலகி ஜே.வி.பி. தொழிற்சங்கத்தில் சேர்ந்துகொண்ட போதிலும், இப்போது அவர்கள் ஜே.வி.பி. தொழிற்சங்கத்திற்கு விலகல் கடிதங்களை அனுப்புகிறார்கள். மருத்துவமனையில் சுமார் 200 தாதிமார் உள்ள போதிலும், அவர்களில் பாதிக்கும் மேற்பட்டவர்கள் எந்த தொழிற்சங்கத்திலும் இல்லை.'