மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம்.
ஒவ்வொரு பிரதான ஐரோப்பிய சக்தியும் இராணுவ மீள்ஆயுதமயமாக்கலின் ஒரு வெறித்தனமான திட்டத்தை தீவிரப்படுத்தி வருகின்றன.
ஐரோப்பிய ஒன்றியம் இராணுவத்திற்காக 800 பில்லியன் யூரோக்களை ஒதுக்குகிறது. கிறிஸ்தவ ஜனநாயக யூனியன் (CDU) தலைமையிலான பிரெடெரிக் மெர்ஸின் புதிய அரசாங்கம் பதவிக்கு வருவதற்கு முன்னரே, ஜேர்மனி பாதுகாப்புச் செலவினத்திற்காக நூற்றுக்கணக்கான கூடுதல் பில்லியன்களை அறிவித்துள்ளது.
பிரான்ஸ் தனது வருடாந்திர இராணுவச் செலவினங்களை இரட்டிப்பாக்க திட்டமிட்டுள்ளது. ஜனாதிபதி மக்ரோன் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 5 சதவீத இலக்கை முன்மொழிந்துள்ளார். ஐரோப்பிய கூட்டாளிகளை பிரான்சின் அணுஆயுத குடையின் கீழ் வைத்திருக்க தயாராக இருப்பதாக அவர் தெரிவித்துள்ளார்.
கெய்ர் ஸ்டார்மரின் தொழிற்கட்சி அரசாங்கத்தின் தலைமையிலான பிரிட்டன், பிரான்ஸ் மற்றும் பிற சக்திகளுடன் கூட்டணி அமைத்து “விருப்பமுள்ள நாடுகளின் கூட்டணியின்” ஒரு பகுதியாக, உக்ரேனுக்கு “தரையில் பிரிட்டிஷ் சிப்பாய்களையும், வானில் விமானங்களையும்” அனுப்ப முன்மொழிந்து வருகிறது.
ஒவ்வொரு அரசியல் கட்சியும், முக்கிய செய்தி நிறுவனங்களும், இந்த இராணுவவாத வெடிப்பை நியாயப்படுத்தி, உக்ரேனிய ஜனநாயகத்தையும், ஒட்டுமொத்த கண்டத்தையும் ரஷ்ய ஆக்கிரமிப்பிலிருந்தும், இன்னும் அபத்தமாக, படையெடுப்பிலிருந்தும் பாதுகாக்க வேண்டிய தார்மீக கட்டாயம் இருப்பதாக கூறி, பொய்களை பரப்பி வருகின்றன.
தொலைக்காட்சியில் நாட்டு மக்களுக்கு ஆற்றிய உரையில் மக்ரோன், “எமது சொந்தக் கண்டத்தில் இனி அமைதியை உறுதி செய்ய முடியாது என்று அறிவித்தார். … பிரான்சுக்கும் ஐரோப்பாவிற்கும் அச்சுறுத்தலாக ரஷ்யா மாறியுள்ளது, எனவே தொடர்ந்து அது அப்படியே இருக்கும்,” என்று குறிப்பிட்டார்.
ட்ரம்பின் “அமெரிக்கா முதலில்” வெளியுறவுக் கொள்கை, ரஷ்யாவுடனான அவரது ஒருதலைப்பட்ச கலந்துரையாடல்கள் மற்றும் உக்ரேனின் வளங்களை பிரத்தியேகமாக அணுகுவதற்கான அவரது கோரிக்கைகள் ஆகியவை, நேட்டோவின் போரின் கொள்ளைப் பொருட்களிலிருந்து தங்களைத் துண்டிக்க அச்சுறுத்துகின்றன என்பதை ஐரோப்பிய சக்திகள் உணர்ந்திருப்பதே உண்மையான உந்துதலாக உள்ளது.
உக்ரேன் மோதல், ஐரோப்பிய-அமெரிக்க கூட்டு ஸ்திரமின்மை பிரச்சாரத்தால் தயாரிக்கப்பட்டது. இது அந்நாட்டை நேட்டோ மற்றும் ஐரோப்பிய ஒன்றியத்தின் பிடியில் கொண்டு வருவதையும், ரஷ்யாவின் கணிசமான சொத்துக்களை உலக ஏகாதிபத்தியத்திற்குத் திறந்துவிடும் வகையில் மாஸ்கோவில் ஒரு ஆட்சி மாற்றத்தைக் கொண்டுவருவதையும் நோக்கமாகக் கொண்டது.
நேட்டோ சக்திகள் எதிர்பார்த்ததைப் போலவே, புட்டினின் அரசாங்கத்தால், உக்ரேன் மீதான பிற்போக்குத்தனமான படையெடுப்பைத் தவிர வேறு எந்த வழியிலும் இந்த அச்சுறுத்தலுக்கு பதிலளிக்க முடியவில்லை.
புட்டினுடனான தனது கலந்துரையாடல்களில் ஐரோப்பாவின் நலன்களைப் பாதுகாக்க ட்ரம்ப் ஒப்புக்கொண்டிருந்தால், பேர்லின், பாரிஸ் மற்றும் லண்டன் ஆகியவை வாஷிங்டனுடன் சமரசம் செய்ய முயன்றிருக்கும். இது, ஸ்டார்மர் மற்றும் மக்ரோனால் வெள்ளை மாளிகையில் பாசிசத்திற்கு தொடர்ந்து வழங்கப்பட்ட வேண்டுகோள்களால் நிரூபிக்கப்பட்டுள்ளது.
மீள்ஆயுதமயமாக்கலை நியாயப்படுத்த கட்டவிழ்த்து விடப்பட்ட பாசாங்குத்தனத்தின் பேரலையின் மத்தியில், ஜெலென்ஸ்கியின் வலதுசாரி ஆட்சிக்கு அவர்கள் தொடர்ந்து ஆதரவளிப்பதற்கான அடிப்படையாக, ஜூலை 2021 இல் “ஐரோப்பிய ஒன்றியத்திற்கும் உக்ரேனுக்கும் இடையிலான மூலப்பொருட்கள் மீதான மூலோபாய கூட்டாண்மை குறித்த புரிந்துணர்வு ஒப்பந்தத்தை” மீண்டும் உயிர்ப்பிக்க ஐரோப்பா பெரும்பிரயத்தனத்துடன் முயன்று வருகிறது.
கடந்த மாதம், இந்த புரிந்துணர்வு உடன்படிக்கையானது, “இருதரப்புக்கும் வெற்றி தரும் பங்காண்மையின்” பாகமாக, “ஐரோப்பாவிற்கு அவசியமான 30 முக்கிய பொருட்களில் 21” ஐ வழங்குவதாக தொழில்துறை மூலோபாயத்திற்கான ஐரோப்பிய ஆணையர் ஸ்டீபன் செஜோர்னே விவரித்தார். உண்மையில், ஐரோப்பா அமெரிக்காவை விட உக்ரேனின் மூலோபாய கனிமங்களின் சுரண்டலை அதிகம் சார்ந்துள்ளது. மேலும் இந்தக் கட்டத்தில் அதன் விநியோகத்திற்காக கிட்டத்தட்ட சீனாவை மட்டுமே நம்பியுள்ளது.
இந்த உண்மையான நலன்களை ஒப்புக் கொண்டு, பெயர் வெளியிட விரும்பாத ஒரு “ஒரு பெரிய ஐரோப்பிய நாட்டைச் சேர்ந்த தூதர்” ஒருவர், பிபிசியிடம் பேசுகையில், உக்ரேனுக்கு இராணுவ உதவியை ட்ரம்ப் நிறுத்தியது குறித்துக் கூறினார். “இது நிச்சயமாக நமது மனதையும் - நமது பணப்பையையும் ஒருமுகப்படுத்துவதற்கான ஒரு வழியாகும்! நாம் அந்த வழியில் பார்க்க விரும்பினால், டொனால்ட் ட்ரம்ப் நமக்கு ஒரு உதவி செய்கிறார்” என்று கூறினார்.
ஐரோப்பிய மற்றும் சர்வதேச தொழிலாள வர்க்கத்திற்கு எழுப்பப்பட்டுள்ள அபாயங்கள் கணக்கிட முடியாதவை. உக்ரேனில் ஐரோப்பிய படைகளை களத்தில் நிறுத்துவதும், விமானங்களை வானில் பறக்க விடுவதும், மேலும் பிரெஞ்சு அணுஆயுத குடையை ஜேர்மனி மற்றும் பிற நட்பு நாடுகளுக்கு விரிவுபடுத்துவதும் ஐரோப்பாவில் போர் ஆபத்தின் உண்மையான மூலமாக உள்ளன.
மக்ரோனின் போர்வெறி அறிக்கைகள் குறித்து ரஷ்ய வெளியுறவுத்துறை அமைச்சர் சேர்ஜி லாவ்ரோவ், “அவர் எங்களை ஒரு அச்சுறுத்தலாகக் கருதி, ஐரோப்பிய நாடுகள் மற்றும் பிரிட்டனின் தலைமைத் தளபதிகளின் கூட்டத்தைக் கூட்டி, அணு ஆயுதங்களைப் பயன்படுத்துவது அவசியம் என்று கூறி, ரஷ்யாவிற்கு எதிராக அணு ஆயுதங்களைப் பயன்படுத்தத் தயாராகினால், இது நிச்சயமாக ஒரு அச்சுறுத்தல்தான்” என்று தெரிவித்தார்.
ஐரோப்பிய சக்திகள் ஆயுத பலத்தின் மூலம் தங்கள் சொந்த ஏகாதிபத்திய நலன்களைப் பின்தொடர திரும்புவதற்குத் தயாராகி வருகின்றபோது, “சர்வதேச விதிகள் அடிப்படையிலான ஒழுங்கின்” முடிவைக் குறித்து பேசுகின்றனர். அவ்வாறு செய்வது ரஷ்யாவுடன் மட்டுமல்ல, அமெரிக்க ஏகாதிபத்தியத்துடனும் மோதலை உள்ளடக்கியது என்பதை அவர்கள் இப்போது முழுமையாக உணர்ந்துள்ளனர்.
மீள்ஆயுதமயமாக்கல் பந்தயத்தில் முன்னிலை வகிக்கும் ஜேர்மனி, இருபதாம் நூற்றாண்டில் அமெரிக்காவுக்கு எதிராக இரண்டு போர்களில் ஈடுபட்டது. அணுஆயுத திறன் மற்றும் சுயாதீன இராணுவ உளவுத்துறை கட்டமைப்புகளை வலியுறுத்துவது உட்பட, நேட்டோ மூலம் வாஷிங்டனுக்கு அடிபணிவதை பிரான்ஸ் ஒருபோதும் ஏற்றுக்கொண்டதில்லை. பிரிட்டன், அதன் பங்கிற்கு, இந்த விஷயத்தில் எப்போதும் எரிச்சலை உணர்ந்துள்ளது. 1956 சூயஸ் நெருக்கடியைத் தொடர்ந்து, ஆளும் உயரடுக்கின் குறிப்பிடத்தக்க பிரிவுகள் அமெரிக்காவை அதன் கட்டளைகளுக்குக் கீழ்ப்படிவதை உறுதி செய்ததற்காக ஒருபோதும் மன்னிக்கவில்லை.
ஐரோப்பாவின் அபிலாஷைகளின் அளவு, இராணுவ நோக்கங்களுக்காக தயாரிக்கப்பட்டு வரும் பிரமாண்டமான செலவுத் தொகைகளால் தெளிவாக்கப்படுகிறது. இது, உக்ரேனில் ஒரு இறுதி சமாதான தீர்வைக் கண்காணிப்பதற்காக கூறப்படும் முயற்சிகளுக்குத் தேவையானதை விட மிக அதிகமாகும். ஐரோப்பாவின் சொந்த செலவின் கீழ் ரஷ்யாவுடனான போர் விவாதத்தில் உள்ளது. ஐரோப்பா ரஷ்யாவிற்கு எதிராகவே ஒரு போரைத் தொடங்குவது குறித்து கலந்துரையாடி வருகிறது.
மேலும், இந்த நிகழ்ச்சி நிரல் ஒரு ஆரம்ப ஒருங்கிணைப்பு உந்துதலை வழங்கும் அதே வேளையில், அதன் முயற்சி தவிர்க்க முடியாமல் ஐரோப்பிய சக்திகளுக்கு இடையேயான போட்டி மற்றும் மோதல்களை தீவிரப்படுத்தும்.
மில்லியன் கணக்கான தொழிலாளர்கள் மற்றும் இளைஞர்கள் முன் எழும் எரியும் கேள்வி என்னவென்றால், இந்தப் பேரழிவை நோக்கிய பைத்தியக்காரத்தனமான பாய்ச்சலை எவ்வாறு நிறுத்துவது என்பதாகும். ஐரோப்பாவின் எதிர்க்கட்சிகள், அவை வலதுசாரியாக இருந்தாலும் சரி அல்லது பெயரளவிலான இடதுசாரியாக இருந்தாலும் சரி, அல்லது தொழிற்சங்கங்களை நம்பி இதைச் செய்வதற்கான எந்த அடிப்படையும் இல்லை.
உக்ரேனில் பினாமிப் போரைத் தொடர்வது மற்றும் நேட்டோவை குறைமதிப்பிற்கு உட்படுத்துவது தொடர்பாக மட்டுமே ட்ரம்புடன் ஜனநாயகக் கட்சிக்கு கருத்து வேறுபாடு உள்ள அமெரிக்காவைப் போலவே, அனைத்து பிரதான ஐரோப்பிய கட்சிகளும் ரஷ்யாவுக்கு எதிரான ஆக்கிரமிப்பை அதிகரிப்பதையும், அமெரிக்காவிலிருந்து இராணுவ சுதந்திரத்திற்கான உந்துதலையும் ஆதரிக்கின்றன. ஸ்டார்மரின் தொழிற் கட்சி, ஜனாதிபதி மக்ரோன் அல்லது ஜேர்மனியில் வரவிருக்கும் எந்தவொரு கூட்டணி அரசாங்கத்தின் வேலையாக இருந்தாலும், அவர்கள் ஒரு மூலோபாய இலக்கை பின்தொடர்ந்து கொண்டிருக்கிறார்கள்.
ஐரோப்பிய தொழிற்சங்கங்களின் ஒரே கவலை, அமெரிக்கா மற்றும் சீனாவிற்கு எதிரான பாதுகாப்புவாத நடவடிக்கைகள் மற்றும் தேசிய பாதுகாப்புத் தொழில்களின் விரைவான விரிவாக்கத்தை ஆதரிப்பது உட்பட, ஐரோப்பாவின் அதிகரித்து வரும் வர்த்தக மற்றும் இராணுவப் போரில் தங்கள் சொந்த ஆளும் வர்க்கத்தை எவ்வாறு சிறப்பாக ஆதரிப்பது என்பதுதான்.
தொழிலாளர்களும் இளைஞர்களும், போருக்கு எதிராகப் போராடுவதற்கு தங்களை அர்ப்பணித்து, தங்களின் சொந்த போராட்ட அழைப்புடன் பதிலளிக்க வேண்டும்.
இது, தற்போது நடந்து கொண்டிருக்கும் பரந்த தாக்கங்களைப் பற்றிய புரிதலின் அடிப்படையில் இருக்க வேண்டும். ஐரோப்பாவில் போர் என்பது கடந்த காலத்தில் நடந்த ஒரு விஷயம், அது 20 ஆம் நூற்றாண்டுக்குத் தள்ளிவிடப்பட்டுள்ளது என்ற அனைத்துக் கூற்றுகளும் ஒரு மோசடி என்பது அம்பலமாகியுள்ளது. ஒரு அழிந்துபோன எரிமலையாக சித்தரிக்கப்பட்ட ஐரோப்பிய இராணுவவாதம், மீண்டும் ஒருமுறை வெடித்துக் கொண்டிருக்கிறது. இரண்டு உலகப் போர்களில் கோடிக்கணக்கான உயிர்களைக் கொன்ற பேரழிவுகளை விடப் பெரிய பேரழிவுகளின் அச்சுறுத்தலை அது முன்வைக்கிறது.
போருக்கான வேலைத்திட்டமானது, பெயரளவிலான ஜனநாயக ஆட்சி வடிவங்களுடன் கூட முற்றிலும் பொருத்தமற்றதாகும். ஆளும் உயரடுக்குகள் பரந்த பெருந்திரளான மக்களால் எதிர்க்கப்படும் இராணுவவாத கொள்கைகளை நடைமுறைப்படுத்த மீண்டுமொருமுறை பாசிசம் மற்றும் சர்வாதிகார வேலைத்திட்டத்திற்கு திரும்பி வருகின்றன.
போருக்கான ஆயுத தளவாடங்களுக்காக செலவிடப்படும் பெரும் தொகைகள், கடந்த 80 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு தொழிலாள வர்க்கத்தின் மீதான தாக்குதலைக் குறிக்கின்றன. வேலைநிறுத்தங்கள், தொழில்துறை நடவடிக்கைகள் மற்றும் போராட்டங்கள் ஏற்கனவே வளர்ந்து வரும் சூழ்நிலையில், இது தொழிலாள வர்க்கத்தின் பாரிய போராட்டங்களைத் தூண்டும்.
சிக்கன நடவடிக்கைகளுக்கு எதிரான போராட்டம் போருக்கு எதிரான போராட்டத்துடன் இணைக்கப்பட வேண்டும். இந்த இரண்டு நடவடிக்கைகளும், வெளிநாட்டில் போர் மற்றும் உள்நாட்டில் வர்க்கப் போர் என்ற நிகழ்ச்சி நிரலை ஆணையிடும் பேராசை கொண்ட நலன்களைக் கொண்ட ஆளும் தன்னலக்குழுவை நேரடியாகத் தாக்குவதன் மூலம் மட்டுமே மேற்கொள்ளப்பட முடியும்.
ஏகாதிபத்திய போரின் ஒரு புதிய காலகட்டம் நடந்து கொண்டிருப்பதாக எச்சரித்து, நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழு பல தசாப்தங்களாக எச்சரிக்கை மணி அடித்து வந்துள்ளது. இந்த எச்சரிக்கைகள் முழுமையாக ஊர்ஜிதப்படுத்தப்பட்டுள்ளன. அதற்கேற்ப நாம் இப்போது செயல்பட வேண்டும். இதன் பொருள் போரையும் அதற்கு மூலாதாரமான முதலாளித்துவத்தையும் நிறுத்துவதற்கான ஒரே வழி சோசலிச மற்றும் புரட்சிகர வேலைத்திட்டத்தின் அடிப்படையில் ஐரோப்பா மற்றும் சர்வதேச அளவில் தொழிலாள வர்க்கத்தின் ஒரு ஐக்கியப்பட்ட இயக்கத்தைக் கட்டியெழுப்புவதாகும்.