மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம்.
ஏழு வாரங்களுக்கு முன்பு வெள்ளை மாளிகைக்குத் திரும்பியதிலிருந்து, டொனால்ட் ட்ரம்பும் அவரது பில்லியனர்கள் நிர்வாகமும் ஜனநாயக உரிமைகளை ஒழிக்கவும், அமெரிக்காவை ஒரு போலீஸ் அரசாக மாற்றவும் அயராது உழைத்து வருகின்றனர்.
அரசியலமைப்பின் கீழ் உத்தரவாதம் அளிக்கப்பட்டுள்ள உரிமைகள் - பேச்சு சுதந்திரம், சட்டவிரோத சோதனைகளுக்கும் பலாத்கார கைதுகளுக்கும் எதிரான பாதுகாப்பு, பிறப்புரிமை குடியுரிமை மீறப்படாமை மற்றும் ஆட்கொணர்வு உரிமை (அதாவது, அரசின் தன்னிச்சையான மற்றும் சட்டவிரோத தடுப்புக்காவலுக்கு எதிரான பாதுகாப்பு) - வெளிப்படையாக மறுக்கப்படுவது அச்சுறுத்தலுக்கு உள்ளாகிறது. அது உண்மையிலேயே நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.
ட்ரம்ப் “முதல் நாளிலிருந்தே ஒரு சர்வாதிகாரியாக” ஆட்சி செய்வதற்கான தனது வாக்குறுதியை நிறைவேற்றி வருகிறார். சர்வாதிகாரத்திற்கு எதிராக தற்போதுள்ள அனைத்து அரசியலமைப்பு பாதுகாப்புகளும் புறக்கணிக்கப்படுகின்றன. சட்டவிரோத நிர்வாக உத்தரவுகள் என்ற போர்வையின் கீழ், ட்ரம்ப் ஆணை மூலம் ஆட்சி செய்கிறார். அவரது உத்தரவின் பேரில், அதிகாரப்பூர்வமாக நிரந்தர வதிவிட அட்டை வைத்திருக்கும் கொலம்பியா பல்கலைக்கழக மாணவர் மஹ்மூத் கலீல், காசா இனப்படுகொலைக்கு எதிராக பகிரங்கமாக ஒரு சட்டபூர்வ போராட்டத்தில் ஈடுபட்டதற்காக கைது செய்யப்பட்டு காணாமல் ஆக்கப்பட்டுள்ளார்.
கலீல் கைது செய்யப்பட்டதைத் தொடர்ந்து, “பல” பாதிக்கப்பட்டவர்களில் அவர் முதன்மையானவர் மட்டுமே என்று ட்ரம்ப் பெருமைபீற்றினார். யாரும் பாதுகாப்பாக இல்லை.
ஜனநாயக உரிமைகளை மீறுவதானது தொழிலாள வர்க்கத்தின் வேலைகள், வாழ்க்கைத் தரங்கள் மற்றும் சமூக உரிமைகள் மீதான பரந்த தாக்குதலின் பாகமாகும். ட்ரம்பும் எலோன் மஸ்க்கும் நூறாயிரக் கணக்கான கூட்டாட்சி அரசுத் தொழிலாளர்களை பணிநீக்கம் செய்து வருவதுடன், சிறந்த சமூகம் மற்றும் புதிய ஒப்பந்தத்தின் சமூக வேலைத்திட்டங்களை திட்டமிட்டு அகற்றி வருகின்றனர். அவர்கள் சமூகப் பாதுகாப்பு, மருத்துவப் பாதுகாப்பு, மருத்துவ உதவி போன்ற அடிப்படை சமூகநலத் திட்டங்களை இலக்காகக் கொண்டு, பொதுக் கல்வியை அழிக்க நகர்கின்றனர்.
ட்ரம்பின் சர்வாதிகாரத்தின் மூன்றாவது கூறுபாடு —அரசியலமைப்பை மறுப்பு மற்றும் தொழிலாள வர்க்கத்தின் வறுமையுடன் பிரிக்க முடியாத வகையில் பிணைந்துள்ளது— போருக்கான தயாரிப்புகளாகும். ட்ரம்ப் அவரது ஈவிரக்கமற்ற ஏகாதிபத்திய திட்டநிரலை இரகசியமாக வைத்திருக்கவில்லை. பனாமாக் கால்வாய் மற்றும் கிரீன்லாந்தை கைப்பற்றும் தனது நோக்கத்தை அவர் அறிவித்தார். கனடாவை இணைப்பதற்கான ட்ரம்பின் திட்டங்கள், 1938 ஆம் ஆண்டு ஹிட்லர் ஜேர்மனியுடன் ஆஸ்திரியா மற்றும் செக்கோஸ்லோவாக்கியாவை இணைத்ததை முன்மாதிரியாகக் கொண்டுள்ளன.
அனைத்திற்கும் மேலாக, பல நாடுகளுக்கு எதிராக ட்ரம்ப் பாரிய சுங்கவரிகளைத் திணிப்பது பொருளாதாரப் போரின் ஒரு வடிவமாகும். இது தவிர்க்கவியலாமல் இராணுவ மோதலாக தீவிரமடையும்.
ட்ரம்பின் கொள்கைகள் ஒரு குறுகிய-கால பிறழ்ச்சி அல்ல, இவை தொடர்ந்து இயல்பாக்கப்படும். உண்மையில், அமெரிக்க மற்றும் உலக முதலாளித்துவத்தின் நெருக்கடியிலிருந்து ஒரு வீரியம் மிக்க மற்றும் பரவும் புற்றுநோய் கட்டியைப் போல வளர்ந்து, புதிய இயல்பாக பாசிசம் வெளிப்படுகிறது.
பாசிசத்திற்கு —அதன் மிகக் கொடூரமான வடிவத்தில் சர்வாதிகாரம்— திரும்புவது என்பது சில நூறு மெகா-மில்லியனர்கள் மற்றும் பில்லியனர்களைக் கொண்ட ஒரு தன்னலக்குழுவில் அபரிமிதமான அளவிலான செல்வம் குவிந்ததன் தவிர்க்க முடியாத அரசியல் விளைபொருளாகும். ட்ரம்பும், மஸ்க்கும் ஆளும் தன்னலக்குழுவின் கோரமான உருவகங்களாக உள்ளனர்.
அமெரிக்காவில் பெரும்பாலானவை அபிவிருத்தி அடைந்திருந்தாலும், பாரிய சமூக சமத்துவமின்மையை திணிக்கும் தன்னலக்குழு ஆட்சியின் சுமையின் கீழ் ஜனநாயகத்தின் முறிவு என்பது உலக முதலாளித்துவத்தின் ஒரு உலகளாவிய போக்காக உள்ளது.
பிரமைகளைக் கைவிட்டு யதார்த்தத்தை எதிர்கொள்வது அவசியமாகும். தற்போதைய அரசியல் நிலைமை பற்றிய சில அடிப்படை உண்மைகளை அடையாளம் காண்பது அவசியமாகும்.
முதலாவதாக, பாசிசம் வெறுமனே ஒரு அச்சுறுத்தல் மட்டுமல்ல. ஒரு பாசிச சர்வாதிகாரத்தை உருவாக்குவதே ட்ரம்ப் நிர்வாகத்தின் இன்றைய செயல்பாட்டு நிகழ்ச்சி நிரலாகும்.
இரண்டாவதாக, ஜனநாயகக் கட்சியிடம் இருந்து எதிர்ப்பை ஒழுங்கமைக்க எதிர்பார்ப்பது பயனற்றதும், தன்னைத்தானே ஏமாற்றிக் கொள்வதும் ஆகும். ட்ரம்பை எதிர்ப்பதற்குப் பதிலாக, ஜனநாயகக் கட்சி அவருடன் ஒத்துழைத்து வருகிறது. எதிர்ப்பு குறித்த அதன் வாய்மொழி அறிவிப்புகள் என்னவாக இருந்தாலும், முதலாளித்துவத்தைப் பாதுகாப்பதற்கு அர்ப்பணித்துக் கொண்டுள்ள மற்றும் அதே தன்னலக்குழுக்களால் நிதியாதாரம் வழங்கப்பட்டு அவற்றுக்கு அடிபணிந்து நடக்கும் ஜனநாயகக் கட்சி, ட்ரம்பின் திட்டநிரலின் பெரும் பகுதிகளைப் பகிர்ந்து கொள்கிறது.
மூன்றாவதாக, ட்ரம்புக்கு உண்மையான மற்றும் சக்திவாய்ந்த எதிர்ப்பு தொழிலாள வர்க்கத்திடம் இருந்து வரும். ஒரு பொலிஸ் அரசை ட்ரம்ப் திணிப்பதற்கு நூறு மில்லியன் கணக்கான உழைக்கும் மக்கள் சத்தமில்லாமல் செயலற்று அடிபணியப் போவதில்லை. அமெரிக்க வரலாற்றில் பொதிந்துள்ள மகத்தான ஜனநாயக மரபுகள் இன்னமும் தொழிலாள வர்க்கத்தின் நனவில் உயிர் வாழ்கின்றன. ஒடுக்குமுறைக்கு எதிராகக் கிளர்ச்சி செய்யும் உரிமையை ஜெபர்சன் பாதுகாத்ததும், மக்களுக்காகவும், மக்களால் மட்டுமே நடத்தப்படும் அரசாங்கத்தை ஆப்ராகாம் லிங்கன் உறுதிப்படுத்தியதும் மறக்கப்படவில்லை.
இந்த ஜனநாயகக் கொள்கைகள் புத்துயிர் பெற்று, சோசலிச முன்னோக்குடன் புதுப்பிக்கப்பட வேண்டும். ட்ரம்ப் மற்றும் முதலாளித்துவ தன்னலக்குழுவிற்கு எதிரான போராட்டத்தை சோசலிசத்திற்கான போராட்டமாக மட்டுமே வெற்றிகரமாக தொடுக்கப்பட முடியும். அனைத்திற்கும் மேலாக, இந்தப் போராட்டம் உலகளாவிய அளவில் தொழிலாள வர்க்கத்தை ஐக்கியப்படுத்தும் ஒரு சர்வதேச போராட்டமாக நனவுபூர்வமாக நடத்தப்பட வேண்டும்.
இந்தப் போராட்டத்தில், அமெரிக்காவில் சோசலிச சமத்துவக் கட்சி மற்றும் நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவின் குரலான உலக சோசலிச வலைத் தளம் (WSWS) ஒரு இன்றியமையாத ஆயுதமாக இருந்து வருகிறது. இந்தப் போராட்டத்தில், தொழிலாள வர்க்கம், இளைஞர்கள் மற்றும் ஜனநாயக உரிமைகளை சமரசத்திற்கு இடமின்றி பாதுகாப்பதற்கு உறுதிபூண்டுள்ள அனைவரின் எழுச்சி பெற்றுவரும் வெகுஜன இயக்கத்தின் அரசியல் ஈட்டிமுனையாக உலக சோசலிச வலைத் தளம் உள்ளது.
உலக சோசலிச வலைத் தளம் அதன் சமரசமற்ற செய்திகள், ஆழமான பகுப்பாய்வுகள், மற்றும் சாத்தியமான மிகப் பரந்த எதிர்ப்பை அணிதிரட்டுவதைத் தொடர முடியும் என்பதை உறுதிப்படுத்த உங்கள் நிதி உதவி இன்றியமையாததாகும்.
இன்றே சாத்தியமான மிகப்பெரிய பங்களிப்பைச் செய்யுங்கள். உலக சோசலிச வலைத் தளத்தை ஆதரித்து சோசலிசத்திற்கான போராட்டத்தில் இணைந்து கொள்ளுங்கள்.