மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை (ஜனவரி 17, 2025 அன்று வெளியிடப்பட்டது) இங்கே காணலாம்.
“மருத்துவம் என்பது ஒரு சமூக அறிவியலாகும், அரசியல் என்பது பெரிய அளவிலான மருத்துவத்தைத் தவிர வேறில்லை.”— “நவீன நோயியலின் தந்தை” என்று அறியப்படும் டாக்டர் ருடோல்ப் விர்சோ (Rudolph Virchow), ஜேர்மனியில் பொது சுகாதாரத்தின் தோற்றத்தில் முக்கிய மனிதராகக் கருதப்படுகிறார்.
“நான் ஒரு நிமிடத்தில் கிருமிகளை அழிக்கும் தொற்றுநீக்கியைக் கவனிக்கிறேன்... கிட்டத்தட்ட வைரஸைச் சுத்தம் செய்வதற்காக அதைப் போன்ற ஒன்றை, மனித உடலுக்குள் ஊசிமூலம் செலுத்த ஏதாவது வழிவகை இருக்கிறதா?... ஒருவேளை நாம் உடலை மிகச் சக்திவாய்ந்த ஒளியால் தாக்கினால் என்ன? அது புறஊதா கதிர்கள் அல்லது வெறும் மிகச் சக்திவாய்ந்த ஒளி இருந்தாலும் சரி... ஒருவேளை அந்த ஒளியை உடலுக்குள் கொண்டு வர முடியுமா, தோல் வழியாக அல்லது வேறு வழியில்.” — டொனால்ட் ட்ரம்ப், ஏப்ரல் 2020
***
2020 ஜனவரியில் கோவிட்-19 தொற்றுநோய் தொடங்கி ஐந்து ஆண்டுகளுக்குப் பிறகு, டொனால்ட் ட்ரம்ப் வெள்ளை மாளிகைக்குத் திரும்பியுள்ளார். வேறு எந்த நபரையும் விட, தொற்றுநோய்க்கான பேரழிவு தரும் அதிகாரப்பூர்வ பதிலுடன் அடையாளம் காணப்படும் ட்ரம்ப், வேண்டுமென்றே பெருந் தொற்று மற்றும் இறப்பு என்ற கொலைகார “கூட்டு நோய் எதிர்ப்பு சக்தி” (herd immunity) மூலோபாயத்தில் சுருக்கமாகக் கூறப்படும் அறிவியல் மற்றும் பொது சுகாதாரத்தின் மீதான போரைத் தொடங்கியுள்ளார்.
2020 ஆம் ஆண்டில், பொய்கள், மறுப்பு மற்றும் அறிவியல் எதிர்ப்பு தவறான தகவல்களின் அடிப்படை வடிவத்தை ட்ரம்ப் செயல்படுத்தத் தொடங்கினார். மீண்டும் ஆட்சிக்கு வந்துள்ள ட்ரம்ப், போலி அறிவியல் மற்றும் தடுப்பூசி எதிர்ப்பு போன்ற தவறான தகவல்களை வழங்குவதில் மோசமானவராகக் கருதப்படும் ரொபர்ட் எஃப். கென்னடியை, சுகாதாரம் மற்றும் மனிதவள சேவைகள் துறையின் (HHS) தலைவராக நியமித்துள்ளார்.
யேல் பொது சுகாதாரப் பள்ளியின் (Yale School of Public Health) தொற்றுநோயியல் நிபுணரான கிரெக் கோன்சால்வ்ஸ் (Gregg Gonsalves), சமீபத்தில் கென்னடி மனித சேவைகள் துறைக்குத் தலைமை தாங்குவதை, “பூமி தட்டையானது என்று நம்பும் ஒருவரை நாசாவின் பொறுப்பில் அமர்த்துவதற்கு” சமமானது என்று ஒப்பிட்டுள்ளார். 15,000க்கும் மேற்பட்ட மருத்துவர்கள் கையெழுத்திட்டு அமெரிக்க செனட்டிற்கு அனுப்பிய கடிதம் பின்வருமாறு எச்சரித்துள்ளது:
336 மில்லியன் அமெரிக்கர்களின் ஆரோக்கியமும் நல்வாழ்வும், அறிவியல், சான்றுகள் சார்ந்த மருத்துவமும், நமது பொது சுகாதார அமைப்பின் ஒருமைப்பாட்டை வலுப்படுத்துவதற்கு முன்னுரிமை அளிக்கும் சுகாதாரம் மற்றும் மனித சேவைகள் துறையின் தலைமையில் தங்கியுள்ளது. ரொபர்ட் எஃப். கென்னடி ஜூனியர் இந்த அத்தியாவசிய அமைப்பை வழிநடத்த தகுதியற்றவர் மட்டுமல்ல, அவர் மிகவும் ஆபத்தானவர்.
ஒவ்வொரு வாரமும் ஆயிரக்கணக்கான அமெரிக்கர்கள் இந்த நோயால் இறந்து கொண்டிருக்கும் நிலையில், மே 2021 இல் அனைத்து கோவிட்-19 எதிர்ப்பு தடுப்பூசிகளுக்கும் அதன் அங்கீகாரத்தை ரத்து செய்யுமாறு உணவு மற்றும் மருந்து நிர்வாகத்திடம் (FDA) கென்னடி ஒரு மனுவைத் தாக்கல் செய்ததாக ஜனவரி 10 அன்று, நியூயார்க் டைம்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது.
ட்ரம்பின் இதர பொது சுகாதாரத்துறையில் நியமிக்கப்பட்டவர்கள் மூலம் , பெருந்தொற்றுநோய் காலம் முழுவதும் முன்னணி அறிவியலுக்கு எதிராக வக்காலத்து வாங்கும் சிலரின் ஒரு முரட்டுத்தனமான காட்சியகமாக இருக்கிறது. குறிப்பாக, கிரேட் பாரிங்டன் (Great Barrington) பிரகடன இணை ஆசிரியர் ஜெய் பட்டாச்சார்யா (Jay Bhattacharya) தேசிய சுகாதார நிறுவனங்களின் (NIH) தலைவராகவும், டாக்டர் மெஹ்மெட் ஓஸ் (Mehmet Oz) மருத்துவக் காப்பீட்டுத் துறையின் தலைவராகவும், கருக்கலைப்பு எதிர்ப்பு வெறியர் டேவ் வெல்டன் (Dave Weldon) நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையங்களின் (CDC) தலைவராகவும், பொக்ஸ் நியூஸ் தொலைக்காட்சி மருத்துவர் ஜேனட் நெஷீவாட் (Janette Nesheiwat) அறுவை சிகிச்சை நிபுணராகவும், மார்டி மகரி (Marty Makary) உணவு மற்றும் மருந்து நிர்வாகத்தின் (FDA) தலைவராகவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.
இவர்கள் அனைவரும் கோவிட்-19 தடுப்பூசிகளை இழிவுபடுத்தியுள்ளனர் அல்லது அவற்றின் மீது சந்தேகம் எழுப்பியுள்ளனர். மேலும், உயிர்களைக் காப்பாற்றிய ஏறக்குறைய அனைத்து பொது சுகாதார நடவடிக்கையையும் கடுமையாக எதிர்த்துள்ளனர். அவர்களின் நோக்கம் அமெரிக்காவில் பொது சுகாதாரத்தினை சவப்பெட்டியில் வைத்து இறுதி ஆணியை அடிப்பதாகும். இது பரந்தளவில் உலகளவில் விளைவுகளை ஏற்படுத்தும்.
“அமெரிக்காவை மீண்டும் ஆரோக்கியமாக ஆக்குங்கள்” என்ற பதாகையின் கீழ், ட்ரம்ப், கென்னடி மற்றும் இந்தப் போலி மருத்துவக் கும்பல், முன்னர் அழிக்கப்பட்ட தட்டம்மை போன்ற நோய்க்கிருமிகள் மற்றும் H5N1 “பறவைக் காய்ச்சல்” போன்ற தற்போதிருக்கும் புதிய தொற்றுநோய்களின் அச்சுறுத்தல்கள் உட்பட, நோய் பரவுவதை எளிதாக்க தங்களால் முடிந்த அனைத்தையும் செய்வார்கள்.
“அறிவியலைப் பின்பற்றுவதாக” அளித்த வாக்குறுதிகளின் காரணமாக 2020 தேர்தலில் பெருமளவில் வெற்றி பெற்ற பைடென், பதவியில் இருந்த காலத்தில் நடைமுறையில் இருந்த ஒவ்வொரு வரையறுக்கப்பட்ட பொது சுகாதார நடவடிக்கைகளையும் படிப்படியாக அகற்றினார். கடந்த நான்கு ஆண்டுகளில், பைடெனும் ஜனநாயகக் கட்சியும் 1 மில்லியன் நெருங்கும் அளவுக்கு அமெரிக்கர்களின் அதிகப்படியான இறப்புகளை மேற்பார்வையிடும் இந்தச் செயல்முறையில், நிரந்தரமான பாரிய தொற்று, பலவீனப்படுத்துதல் மற்றும் இறப்பு என்ற இருகட்சிகளும் முன்னெடுத்த “என்றென்றும் கோவிட்” கொள்கையை நடைமுறைப்படுத்தியுள்ளனர்.
கோவிட்-19 பெருந்தொற்றின் ஐந்து ஆண்டுகளின் ஒட்டுமொத்த எண்ணிக்கை
முதலாளித்துவ அரசியல்வாதிகள் மற்றும் பெருநிறுவன ஊடகங்களின் பொய்களுக்கு முரணாக, இந்தத் தொற்றுநோய் எந்த விதத்திலும் முடிந்துவிடவில்லை. உண்மையில், அமெரிக்காவில் பாரிய நோய்த்தொற்றின் 10 வது அலைக்கு மத்தியில் ட்ரம்ப் மீண்டும் ஆட்சிக்கு வந்துள்ளார். கழிவு நீர் தரவுகள் ஒவ்வொரு நாளும் ஒரு மில்லியனுக்கும் அதிகமான அமெரிக்கர்கள் கோவிட்-19 நோயால் பாதிக்கப்படுவதாகவும் இந்த எண்ணிக்கை அதிகரித்து வருவதாகவும் காட்டுகிறது. இது பருவகால காய்ச்சல், சுவாச ஒத்திசைவு வைரஸ் (RSV) மற்றும் நோரோ வைரஸ் ஆகியவற்றின் தோற்றத்துடன் ஒத்துப்போகிறது. இது சுகாதார அதிகாரிகளால் “குவாட்-டெமிக்” என்று அழைக்கப்படுகிறது. இங்கிலாந்து மற்றும் ஐரோப்பா முழுவதும் இதேபோன்ற நிலைமைகள் உள்ளன.
அமெரிக்காவில் உள்ள பெருநிறுவன ஊடகங்கள் இந்த நெருக்கடி குறித்து மட்டுப்படுத்தப்பட்ட செய்திகளையே வழங்கியுள்ளன. கோவிட்-19 வகிக்கும் மையப் பங்கு அல்லது நாட்டின் மருத்துவமனை அமைப்புகளில் தற்போது நிலவும் கொடூரமான நிலைமைகள் குறித்து கிட்டத்தட்ட எந்தக் குறிப்பும் இல்லை.
2024 ஆம் ஆண்டின் கடைசி மூன்று மாதங்களில் மட்டும், நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையங்கள் (CDC) 9.3 மில்லியன் இன்ஃப்ளூயன்ஸா காய்ச்சல் சம்பவங்கள் இருப்பதாக மதிப்பிடுகிறது. இதன் விளைவாக, 140,000 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர் மற்றும் 13,000 பேர் இறந்துள்ளனர். அதேசமயம், 1.2 மில்லியன் சுவாச ஒத்திசைவு வைரஸ் (RSV) பாதிப்பு ஏற்பட்டதால் 60,000 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தனர் மற்றும் 3,100 பேர் இறந்துள்ளனர்.
போதுமான பரிசோதனைகள் இல்லாத காரணத்தால், கோவிட்-19 ஆல் அதிக எண்ணிக்கையிலான மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டவர்கள் மற்றும் இறப்புகள் கணக்கிடப்படாமல் போயிருக்கின்றன. ஆனால், அதே காலகட்டத்தில் குறைந்தபட்சம் 130,000 அமெரிக்கர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாகவும், 15,000க்கும் அதிகமானவர்கள் கோவிட்-19 ஆல் கொல்லப்பட்டதாகவும் நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையத்தின் (CDC) தரவு காட்டுகிறது. 2024 ஆம் ஆண்டில் 50,000 க்கும் மேற்பட்ட அமெரிக்கர்கள் கோவிட்-19 ஆல் இறந்ததாக அதிகாரப்பூர்வ புள்ளிவிவரங்கள் வெளிப்படுத்தினாலும், தி எகனாமிஸ்ட் பத்திரிகையின் கூற்றுப்படி அதிகப்படியான இறப்பு சுமார் 120,000 ஆக மதிப்பீடப்பட்டிருக்கின்றது. மொத்தத்தில், அமெரிக்கா இப்போது 1.5 மில்லியனுக்கும் அதிகமான இறப்புகளை சந்தித்துள்ளது. அதே நேரத்தில், உலகளவில் இறந்தவர்களின் எண்ணிக்கை 30 மில்லியனை நெருங்குகிறது.
உலகளவில் 20 மில்லியனுக்கும் அதிகமான அமெரிக்கர்கள் மற்றும் சுமார் 500 மில்லியன் மக்கள் இப்போது நெடுங் கோவிட் நோயால் (Long COVID) பாதிக்கப்பட்டுள்ளனர் என்று அறிவியல் ஆய்வுகள் குறிப்பிடுகின்றன. இது, உடலில் உள்ள ஒவ்வொரு உறுப்பையும் பாதிக்கக்கூடிய ஒரு பலவீனப்படுத்தும் நோயாகும். கோவிட்-19 உடன் மீண்டும் நோய்த்தொற்றுகள் நெடுங் கோவிட் உருவாகும் அபாயத்தை அதிகரிக்கின்றன என்று பல கடுமையான ஆய்வுகள் நிறுவியுள்ளன. சராசரியாக, ஒவ்வொரு அமெரிக்கரும் தொற்றுநோய் தொடங்கியதிலிருந்து குறைந்தது மூன்று முதல் நான்கு முறை கோவிட் நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
நெடுங் கோவிட் நரம்பியலுடன் தொடர்புடைய அறிவாற்றல் குறைபாடுகள் குறித்த சமீபத்திய ஆய்வில், அதிக சோர்வு, மனச்சோர்வு மற்றும் பதட்டத்தை வெளிப்படுத்தியிருப்பதாகவும், அறிவாற்றல் சோதனைகளில் மோசமாகச் செயல்பட்டதாகவும் கண்டறியப்பட்டுள்ளது. அவர்களின் மன நெகிழ்வுத்தன்மை, வாய்மொழி குறுகிய கால நினைவாற்றல், வேலை தொடர்பான நினைவாற்றல் மற்றும் செயலாக்க வேகம் ஆகியவற்றில் குறைபாடுகள் இருந்துள்ளன. இந்தக் கண்டுபிடிப்புகள் மில்லியன் கணக்கான தொழிலாளர்கள் மற்றும் தொழில் வல்லுநர்களின் நிஜ வாழ்க்கை அனுபவங்களில் ஒவ்வொரு நாளும் நிரூபிக்கப்படுகின்றன. அவர்களுக்கு ஏற்பட்ட நாள்பட்ட முடக்கு நோய் அவர்களின் வாழ்க்கையின் ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் குறிப்பிடத்தக்களவில் நாள்தோறும் இடையூறுகளை ஏற்படுத்தியுள்ளது.
மேலும், சமீபத்திய ஆய்வுகள் பொதுவான கோவிட் அல்லாத தொற்றுகளுக்கும், வயிற்றுப் புற்றுநோய் மற்றும் சிரோசிஸ் உள்ளிட்ட பிற்காலத்தில் தொற்றாத நோய்களுக்கும் இடையே உள்ள தொடர்பைக் கண்டறிந்துள்ளன. வாழ்க்கையின் ஆரம்பத்தில் பல நோய்த்தொற்றுகள் ஒட்டுமொத்த ஆரோக்கியத்தில் தீங்கு விளைவிக்கும் தாக்கங்களைக் வெளிப்படுத்தியுள்ளன. இது, தொற்றுநோய் தடுப்பின் முக்கியத்துவத்தை அடிக்கோடிட்டுக் காட்டுகிறது மற்றும் “என்றென்றும் கோவிட்” கொள்கையின் பரந்த சாத்தியமான சுகாதார விளைவுகளைக் குறிக்கிறது.
H5N1 “பறவைக் காய்ச்சல்” தொற்றுநோயின் வளர்ந்து வரும் ஆபத்து
தொற்றுநோயால் ஏற்பட்ட கடுமையான மற்றும் நீண்டகால உடலியல்ரீதியான சேதங்களுக்கு அப்பால், அதன் சமூக, அரசியல் மற்றும் உளவியல் பாதிப்புகளும் கூட நீண்டகால விளைவுகளைக் கொண்டுள்ளன. அனைத்திற்கும் மேலாக, இந்தத் தொற்றுநோய்க்கான முதலாளித்துவ விடையிறுப்பானது, பொது சுகாதாரம் மீதான ஆளும் வர்க்கம் கொண்டிருக்கின்ற வெறுப்பையும் தொழிலாள வர்க்கத்தின் ஆயுட் காலத்தைக் குறைப்பதற்கான உறுதியையும் அம்பலப்படுத்தியுள்ளது.
இந்த அணுகுமுறை, H5N1 “பறவை காய்ச்சல்” தொற்றுநோயின் வளர்ந்து வரும் அச்சுறுத்தலுக்குப் பைடென் நிர்வாகம் பதிலளிக்கத் தவறியதற்குக் காரணமாக அமைந்துள்ளதுடன், இது கூட்டுத் தோள்பட்டை அழுத்தத்திற்கும் உள்ளாகியுள்ளது. கடந்த மாதம் அமெரிக்காவில் பறவைக் காய்ச்சலால் ஏற்பட்ட முதல் மனிதரின் மரணம் குறித்த அறிவிப்பு, உலகம் மற்றொரு தொற்றுநோய்க்கு எல்லளவும் தயாராக இல்லை என்பதை அப்பட்டமாக நினைவூட்டுகிறது. வரலாற்று ரீதியாக, பறவைக் காய்ச்சலின் இறப்பு வீதம் சுமார் 50 சதவீதமாக இருப்பதாக தரவுகள் உள்ளன..
அமெரிக்காவில் பறவைக் காய்ச்சல் தொற்றுநோய்க்கான பதிலளிப்பை மேற்பார்வையிட்ட அமெரிக்க வேளாண்மைத் துறை (USDA) இயக்குநர் டாம் வில்சாக் (Tom Vilsack), விவசாய தொழில், இறைச்சி மற்றும் பால்பண்ணைத் தொழில்களுடன் நெருக்கமாக தொடர்புடையவர், மேலும் தனது அரசியல் வாழ்க்கை முழுவதும் இந்த தொடர்புகளிலிருந்து நேரடியாக இலாபம் அடைந்துள்ளார். வில்சாக்கின் தலைமையின் கீழ், கடந்த ஆண்டில் கால்நடைகளிடையே பறவைக் காய்ச்சலின் பரவலைத் தடுக்க பைடென் நிர்வாகம் எதுவும் செய்யவில்லை, இது நூற்றுக்கணக்கான விவசாயத் தொழிலாளர்களை பாதித்திருக்கலாம்.
அடுத்த தொற்றுநோய் பறவைக் காய்ச்சல், பெரியம்மை அல்லது வேறு ஏதேனும் நோயாக இருந்தாலும், இதற்கான பதில் மீண்டுமொருமுறை தீவிர தேசியவாதம் மற்றும் “கூட்டு நோய் எதிர்ப்பு சக்தி” (“herd immunity”) என்ற இனத்தூய்மைவாத, பாசிசவாத கொள்கையை ஊக்குவிப்பதாக இருக்கும்.
கோவிட்-19 தொற்றுநோய்க் காலத்தில் தவறான தகவல்களை பரப்பிய அதே நபர்களால் ஏற்கனவே கட்டுரைகள் வெளியிடப்பட்டுள்ளன. இதில் பிரவுன்ஸ்டோன் (Brownstone) நிறுவனமும், ஸ்டீவ் பானன் (Steve Bannon) நடத்தும் போர் அறை (War Room) பாட்காஸ்ட்டும் அடங்கும். இவர்கள் பறவைக் காய்ச்சல் ஒரு மோசடி அல்லது ஆண்டனி ஃபௌசி (Anthony Fauci) வடிவமைத்த மற்றொரு ஆய்வக கசிவு என்று பொய்யாகக் கூறுகின்றனர். இந்த சதிக் கோட்பாட்டை பானன் 2020 ஜனவரியில் வூஹான் ஆய்வகம் குறித்த பொய்யுடன் முன்னோடியாக உருவாக்கினார்.
மனிதர்களுக்கு பறவைக் காய்ச்சல் தொற்று அபாயத்தை அதிகரிக்கும் என்று நன்கு அறியப்பட்ட பச்சையான, பதப்படுத்தப்படாத பாலை உட்கொள்வதை ட்ரம்ப் மற்றும் கென்னடி தீவிரமாக ஊக்குவித்து வருவதால், பறவைக் காய்ச்சல் தொற்றுநோயின் ஆபத்து இன்னும் மோசமடையும்.
சோசலிச பொது சுகாதாரம் எதிர் முதலாளித்துவ காட்டுமிராண்டித்தனம்
பொது சுகாதாரத்தின் மீதான இருகட்சியினதும் (ஜனநாயகக் கட்சி மற்றும் குடியரசுக் கட்சி) தாக்குதல் பேரழிவுகரமான மற்றும் நீண்டகால விளைவுகளை ஏற்படுத்தியுள்ளது. உலக சோசலிச வலைத் தளத்துடனான பரவலாக வாசிக்கப்பட்ட சமீபத்திய நேர்காணலில், பிரபல கோவிட் ஆராய்ச்சியாளர் டாக்டர் அரிஜித் சக்கரவர்த்தி (Arijit Chakravarty), கோவிட்-19 தொற்றுநோயின்போது நடந்த பொது சுகாதாரத்தின் மீதான தாக்குதலின் பின்னணியை பின்வருமாறு சுருக்கமாக எடுத்துரைத்துள்ளார்:
தோல்வி இப்படித்தான் தெரிகிறது. நாங்கள் அதை எதிர்கொள்கிறோம். 19 ஆம் நூற்றாண்டில் பொது சுகாதாரம் என்ற கருத்து தோன்றியபோது, “இயற்கைகளிலிருந்து வெளிவரும் ஒவ்வொரு புதிதாக உருவாகும் நோய்க்கிருமிக்கும் பயிற்சிபெற்ற நிபுணராகப் பணியாற்ற உறுதிபூண்டுள்ள ஒரு அமைப்பு எங்களுக்கு உண்மையில் தேவை” என்று யாரும் கூறவில்லை. “புதிதாக உருவாகும் நோய்க்கிருமிகளை உள்ளூர் நோய்க்கிருமிகளாக மாற்ற வேண்டும் என்ற கருத்து, இது எந்தப் பொது சுகாதார பணி அறிக்கையிலும் இருந்ததில்லை”...
உண்மையில் இதற்கு வரலாற்று முன்னுதாரணம் இல்லை. உலகில் எந்தச் சமூகமும், “ஓ, நீங்கள் பாதிக்கப்பட்டிருக்கிறீர்களா? அது பரவட்டும்” என்று ஒருபோதும் சொன்னதில்லை. சின்னம்மை பாதிக்கப்பட்டவர்களின் குழுக்கள் (சின்னம்மை பாதிப்புகள் என்பது குழந்தைகள் இயல்பாகவே சின்னம்மை போன்ற தொற்று நோய்களுக்கு ஆளாக்கும் சமூக செயல்பாடுகளாகும்) ஒரு விடயமாக இருக்கும் என்ற இந்த முழுக் கருத்தும் நகைப்புக்குரியது. ஆனால் இன்று நாம் இருக்கும் இடம் அதுதான். 14 ஆம் நூற்றாண்டில் பிளேக் நோயால் தனிமைப்படுத்தல்கள் நடந்தன. தொற்று நோயை ஒரு வகையான ஆண்டவராகவும் மீட்பராகவும் விமர்சனமின்றி ஏற்றுக்கொள்வது புத்தம் புதியது.
உண்மையில், கடந்த ஐந்து ஆண்டுகளில் பொது சுகாதாரத்தின் மிக அடிப்படையான கொள்கைகளை வெளிப்படையாக நிராகரிப்பது, போலீஸ் அரசு மற்றும் பாசிச ஆட்சிகளின் கீழ் தவிர, நவீன வரலாற்றில் முன்னொருபோதும் இல்லாததாகும். காஸாவில் நடந்து வரும் இனப்படுகொலை, ரஷ்யாவுக்கு எதிரான அமெரிக்க-நேட்டோ போரில் அணுஆயுதங்களைப் பயன்படுத்துவதை இயல்பாக்கியமை, மற்றும் பாசிசவாத அரசியல்வாதிகளின் உலகளாவிய எழுச்சி ஆகியவற்றுடன் சேர்ந்து, ஒரு செயலூக்கமான தொற்றுநோயின் போது விஞ்ஞானம் மற்றும் பொது சுகாதாரம் மீதான தாக்குதல்கள் முதலாளித்துவ காட்டுமிராண்டித்தனத்திற்குள் நவீன வீழ்ச்சியை எடுத்துக்காட்டுகின்றன.
பொது சுகாதாரம் ஒரு துறையாக உருவாகியதற்கும் மார்க்சியத்தின் வளர்ச்சிக்கும் இடையிலான சந்திப்பு தற்செயலானது அல்ல. பிரெடெரிக் ஏங்கெல்ஸ் இங்கிலாந்தில் தொழிலாள வர்க்கத்தின் நிலைமை என்ற தன்னுடைய 1845 ஆம் ஆண்டு நூலை வெளியிட்ட மூன்றே ஆண்டுகளுக்குப் பின்னர், 1848ல் புகழ்பெற்ற ஜேர்மன் மருத்துவரும் முற்போக்கான தாராளவாதியுமான ருடோல்ப் விர்சோ (1821-1902) பேர்லினில் இருந்த மத்திய அரசாங்கத்தால் அப்போதைய பிரஷ்யாவில் வறுமை மற்றும் வறிய கிழக்கு மாகாணமான சிலேசியாவில் (Silesia) வெடித்திருந்த டைபஸ் (typhus) தொற்றுநோயை ஆராய நியமிக்கப்பட்டார்.
சிலேசிய விவசாயிகளைப் பாதித்த மோசமான வறுமை மற்றும் இழிந்த வாழ்க்கை நிலைமைகள் மீதான ஒரு குற்றச்சாட்டாக விர்சோவின் விசாரணை அறிக்கை இருந்தது. இந்தத் தொற்றுநோய் மிகவும் ஏழைகள் மற்றும் ஊட்டச்சத்துக் குறைபாடு உள்ளவர்கள் மத்தியில் குவிந்துள்ளது என்று குறிப்பிட்ட விர்சோ, டைபஸ் தொற்றுநோய் ஒரு மருத்துவ பிரச்சினையை விட ஒரு சமூக பிரச்சினை என்றும், “சமூக சமத்துவமின்மை” முடிவுக்கு வருவதன் மூலமாக மட்டுமே அதைத் தடுக்க முடியும் என்றும் வலியுறுத்தினார். அனைவருக்கும் “முழுமையான மற்றும் வரம்பற்ற ஜனநாயகம்” மற்றும் “கல்வி, சுதந்திரம் மற்றும் செழிப்பு” ஆகியவற்றிற்காக அவர் வாதிட்டார்.
கோவிட்-19 தொற்றுநோயின் மிக மோசமான ஆண்டில், 2021 இல் உலக சுகாதார இதழில் வெளியிடப்பட்ட விர்சோவின் பணிகள் பற்றிய ஒரு கட்டுரையில், கிளாஸ் டபிள்யூ. லாங்கே (Klause W. Lange) பின்வருமாறு எழுதினார்:
1848 ஜேர்மன் புரட்சியில், விர்சோ புரட்சிகர சமூக மாற்றத்திற்கு உறுதிபூண்ட ஒரு ஆர்வலராக ஆனார். புரட்சியின்போது, அவர் அரசியல்ரீதியாக மிகவும் சுறுசுறுப்பாக இருந்தார், பேர்லினில் தடுப்பரண்களை நிர்வகித்தவர்களில் ஒருவராக இருந்தார் மற்றும் ஒரு பரந்த வாசகர்களுக்காக எழுதப்பட்ட “மருத்துவ சீர்திருத்தம்” (Die Medicinische Reform) என்ற வாராந்திர செய்தித்தாளை நிறுவினார். விர்சோவின் சமூக நோய்க்காரணிகள் பற்றிய மருத்துவ ஆய்வுகள், அவரது அரசியல் தீவிரத்துடன் இணைந்து, தொழிலாள வர்க்கத்தின் நலனை மேம்படுத்தும் முதன்மை நோக்கத்துடன் தன்னை ஒரு சோசலிஸ்டாக உருவாக்கிக் கொள்ள இட்டுச் சென்றது.
சமூக சூழ்நிலைகள் மற்றும் சமத்துவமின்மையின் தாக்கம் நோய் பரவுவதற்கும் தொற்றுநோய்கள் தோன்றுவதற்கும் பங்களிப்பு செய்கிறது. மேலும், சமூகத்தின் வளங்களைச் சமமாகப் பகிர்ந்தளிப்பதன் மூலம் இந்தத் தொற்று நோய்களைக் குணப்படுத்தலாம் என்ற விர்சோவின் கருத்து, தீர்க்கதரிசனமாகவும் சரியானதாகவும் நிரூபிக்கப்பட்ட அடிப்படைக் கோட்பாடுகளில் ஒன்றாகும். விர்சோ கூறியது போல், மருத்துவம் என்பது நோய்க்கான சிகிச்சையைத் தாண்டி விரிவடைந்து, முழு மக்களின் ஆரோக்கியம் மற்றும் நல்வாழ்வை நிவர்த்தி செய்யும் நடவடிக்கைகளை உள்ளடக்கியதாக இருக்க வேண்டும்.
மருத்துவத்தை சீர்திருத்துவதற்கான விர்சோவின் நான்கு கொள்கைகள் பின்வருமாறு:
- மக்களின் ஆரோக்கியம் என்பது சமூக அக்கறை சம்பந்தப்பட்ட விஷயம்.
- பொருளாதார மற்றும் சமூக நிலைமைகள் உடல்நலம் மற்றும் நோய்களில் பெரும் விளைவுகளை ஏற்படுத்துகின்றன. அவை, அறிவியல் பூர்வமாக ஆய்வு செய்யப்பட வேண்டும்.
- ஆரோக்கியத்தை மேம்படுத்துதல் மற்றும் நோயை எதிர்த்துப் போராடுதல் ஆகியவை சமூக மற்றும் மருத்துவ நடவடிக்கைகளை உள்ளடக்கியதாக இருக்க வேண்டும்.
- மருத்துவ புள்ளிவிவரங்கள் அளவீட்டின் தரத்தை வழங்குகின்றன.
விர்சோ குழந்தை தொழிலாளர்களின் வேலை செய்யத் தடை விதிக்கவும், கர்ப்பிணி பெண்களை நச்சு பொருட்களின் தொழில்சார் பாதிப்புகளிலிருந்து பாதுகாக்கவும் வலியுறுத்தினார்.
விளாடிமிர் லெனின் மற்றும் லியோன் ட்ரொட்ஸ்கி தலைமையில் ஜாரிச எதேச்சதிகாரத்தை தூக்கியெறிந்த, அக்டோபர் 1917 ரஷ்ய புரட்சிக்குப் பிந்தைய காலத்தில், பொது சுகாதாரத்தை நோக்கிய விர்சோவின் புரட்சிகர முன்னோக்குகளில் பெரும்பாலானவை வளமான செயல்பாட்டைக் கண்டன. முதலாம் உலகப் போரை முடிவுக்குக் கொண்டு வந்ததன் மூலமும், அந்நாட்டின் புரட்சிகர ஜனநாயக மற்றும் சோசலிச உருமாற்றத்திற்கு ஆதாரவளங்களை திருப்பியதன் மூலமும், அவ்விதத்தில் குழந்தை மற்றும் மகப்பேறு இறப்பு விகிதங்களை நிவர்த்தி செய்ததன் மூலமும், போல்ஷிவிக் ஆட்சி ஒட்டுமொத்த மக்கள்தொகையின் ஆயுட்காலத்தை துரிதமாக அதிகரித்தது.
கடந்த நூற்றாண்டில் அடைந்த சமூக முன்னேற்றங்கள், அதாவது எண்ணற்ற வெகுஜன நோய்த்தடுப்பு பிரச்சாரங்கள், சுகாதாரம் மற்றும் உணவுத் தொழில்களில் பாரிய முன்னேற்றங்கள், பாதுகாப்பான குடிநீர், மற்றும் சுகாதார அறிவியல் ஆகியவை உலகெங்கிலும் ஆயுட்காலத்தை இரட்டிப்பாக்கியுள்ளது.
எனினும், சோவியத் ஒன்றியம் கலைக்கப்பட்டதற்குப் பிறகு, குறிப்பாகக் கடந்த இரண்டு தசாப்தங்களில், கடினமாக வென்றெடுத்த இந்தச் சமூக தேட்டங்கள் பெருநிறுவன மற்றும் நிதியியல் பிரபுத்துவத்தால் மீண்டும் பறிக்கப்படத் தொடங்கின. சமூகத்தின் செல்வந்த பிரிவினருடன் ஒப்பிடுகையில் உழைக்கும் மக்களின் ஆயுட்காலம் தொடர்ந்து சரிந்து வந்தது. கோவிட்-19 தொற்றுநோய் இந்த ஏற்றத்தாழ்வுகளை வெளிப்படையாக அதிகரித்து, ஆழமாக வேரூன்றச் செய்துள்ளது.
ஜூனியர் கென்னடியின் நியமனமும் இரண்டாவது ட்ரம்ப் நிர்வாகமும் இந்தத் தசாப்த கால செயல்முறைகளை விரைவாகத் துரிதப்படுத்தும். சர்வதேச அளவில் ஒரு சோசலிசப் புரட்சியின் மூலமாக இந்த அபிவிருத்திகளை தலைகீழாக மாற்றுவதற்கான வழிவகைகளும் புறநிலை நலன்களும் தொழிலாள வர்க்கத்திடம் மட்டுமே உள்ளன. பொது சுகாதாரத்தின் மீதான தாக்குதல் முதலும் முக்கியமானதுமாகத் தொழிலாள வர்க்கத்தின் மீதான ஒரு தாக்குதலாக இருக்கிறது.
மூலதனத்தின் முதல் தொகுதியில் , கார்ல் மார்க்ஸ் பின்வருமாறு குறிப்பிட்டார்:
எனவே, சமூகத்தின் கட்டாயத்தின் கீழ் இல்லாவிட்டால், தொழிலாளியின் உடல்நலம் மற்றும் ஆயுட்காலம் குறித்து மூலதனம் கவலைப்படுவதில்லை. உடல் மற்றும் மனச் சீரழிவு, அகால மரணம் மற்றும் அதிகப்படியான வேலையின் சித்திரவதை ஆகியவற்றைப் பற்றிய கூக்குரலுக்கு அது வெறுமனே பதிலளிக்கிறது: இவை நமது லாபத்தை அதிகரிக்கும்போது நம்மைத் தொந்தரவு செய்ய வேண்டுமா? ஆனால் விஷயங்களை ஒட்டுமொத்தமாகப் பார்க்கும்போது, இவையனைத்தும் உண்மையில் தனிப்பட்ட முதலாளியின் நல்ல அல்லது கெட்ட விருப்பத்தைப் பொறுத்தது அல்ல. சுதந்திரப் போட்டி, முதலாளித்துவ உற்பத்தியின் உள்ளார்ந்த விதிகளை, ஒவ்வொரு தனிப்பட்ட முதலாளிக்கும் அதிகாரம் கொண்ட வெளிப்புற கட்டாய சட்டங்களின் வடிவத்தில் வெளிப்படுத்துகிறது.
மார்க்ஸ் 150 ஆண்டுகளுக்கு முன்பு விவரித்த அதே வர்க்க சக்திகளும் லாப உந்துதல்களும், முதலாளித்துவம் நவீன காட்டுமிராண்டித்தனத்தில் வீழ்ச்சியடையும் நிலையில், 21ஆம் நூற்றாண்டில் மேலும் வலுப்பெற்றுள்ளன.
ட்ரம்ப், ஜூனியர் கென்னடி, அவர்களின் நெருங்கிய கூட்டாளி எலான் மஸ்க் மற்றும் முழு வரவிருக்கும் நிர்வாகத்தில் உருவாகியுள்ள தன்னலக்குழுக்களின் அப்பட்டமான ஆட்சி, அமெரிக்க மற்றும் சர்வதேச தொழிலாள வர்க்கத்தில் ஒரு சக்திவாய்ந்த சோசலிச இயக்கத்தின் அபிவிருத்தியால் எதிர்க்கப்பட வேண்டும் மற்றும் எதிர்க்கப்படும்.
இந்தத் தொற்றுநோய் காலம் முழுவதும், உலக சோசலிச வலைத்தளமும் நான்காம் அகிலத்தின் சர்வதேசக் குழுவும் மட்டுமே கோவிட்-19 பெருந்தொற்று பரவுவதைத் தடுக்கவும், தொழிலாள வர்க்கத்தின் உடல்நலம் மற்றும் உயிர்களையும் முழு மக்கள் தொகையையும் பாதுகாக்கவும் ஒரு புரட்சிகர மூலோபாயத்தை முன்னெடுத்து வந்தன. முதலாளித்துவ பிரச்சாரம் மற்றும் பல கோவிட்-விரோத வாதங்களுக்கு மத்தியில் முடக்கும் விதிவசத்தை உருவாக்கியுள்ள இந்தத் தொற்றுநோயை இயல்பாக்குவதற்கான முயற்சிகளுக்கு எதிராக, தொழிலாள வர்க்கத்திற்கு கல்வியூட்டுவதற்கும் ஒரு சோசலிச தலைமையைக் கட்டியெழுப்புவதற்குமான எங்கள் பரந்த முயற்சிகளின் பாகமாக, கோவிட்-19 தொற்றுநோய் குறித்த உலகளாவிய தொழிலாளர்களின் விசாரணை (Global Workers’ Inquest) மூலமாக உலக சோசலிச வலைத் தளம் இடைவிடாது தகவல்களைச் சேகரித்து வெளியிட்டு வருகிறது.
கோவிட்-19 ஐ நோக்கிய ஒரே சாத்தியமான கொள்கை உலகளவில் அதை ஒழிப்பதாகும். அதற்குக் கிடைக்கக்கூடிய அனைத்து பொது சுகாதார நடவடிக்கைகளையும் உலகளவில் பயன்படுத்த வேண்டும் மற்றும் அனைத்து உட்புற பொது இடங்களையும் உயர் செயல்திறன் துகள் வடிகட்டப்பட்டக் காற்றை (HEPA) சுவாசிக்கும் முகக் கவச வடிகட்டிகள் மற்றும் மக்கள் இருக்கும் இடங்களிலும் வான்வழி பரவும் கிருமிகளை நீக்கும் Far-UVC தொழில்நுட்பத்துடன் அனைத்து உட்புற பொது இடங்களையும் புதுப்பித்தல் ஆகியவை தேவைப்படுகின்றன. இந்த நடவடிக்கைகள் கோவிட்-19 தொற்றுநோயை நிறுத்துவது மட்டுமல்லாமல், எதிர்கால தொற்றுநோய்களைத் தடுக்க தேவையான பொது சுகாதார உள்கட்டமைப்பை உருவாக்கும் அதேவேளையில், மனிதகுலத்தை தேவையில்லாமல் பாதிக்கும் காய்ச்சல், சுவாச ஒத்திசைவு வைரஸ் (RSV) மற்றும் பிற நோய்க்கிருமிகளை அகற்றுவதற்கான அடித்தளத்தையும் அமைக்கும்.
உலக சோசலிச வலைத் தளமும் நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவும் தங்களது அழைப்பை மீண்டும் வலியுறுத்துகின்றன - கோட்பாட்டுரீதியான விஞ்ஞானிகளுக்கும் தொழிலாள வர்க்கத்திற்கும் இடையே ஒரு கூட்டணிக்கு அழைப்பு விடுக்கின்றன. இந்த இரண்டு சார்புடைய சக்திகளின் ஒருங்கிணைந்த வலிமையே பொது சுகாதாரம் மற்றும் அறிவியலுக்கு எதிரான முதலாளித்துவப் போரை முடிவுக்குக் கொண்டுவரவும், அறிவியல்பூர்வமான பொருளாதாரத் திட்டமிடலின் அடிப்படையில் உலக சமூகத்தை மீண்டும் கட்டமைக்கவும் ஒரே வழியாகும்.