முன்னோக்கு

ட்ரம்ப் அந்நிய எதிரிகள் சட்டத்தை அமுல்படுத்துகிறார்: பொலிஸ்-அரசு சர்வாதிகார ஆட்சியை நிறுவுவதில் ஒரு புதிய கட்டம்

மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம். 

எல் சால்வடோரின் ஜனாதிபதி பத்திரிகை அலுவலகம் வழங்கிய இந்த புகைப்படத்தில், சிறைக் காவலர்கள் அமெரிக்காவிலிருந்து நாடுகடத்தப்பட்டவர்களை எல் சால்வடோரின் டெகோலுகாவில் உள்ள பயங்கரவாத தடுப்பு மையத்திற்கு மார்ச் 16, 2025 ஞாயிற்றுக்கிழமையன்று மாற்றுகிறார்கள். [AP Photo]

கடந்த சனிக்கிழமையன்று, ட்ரம்ப் நிர்வாகம் 1798 அந்நிய எதிரிகள் சட்டத்தை (Alien Enemies Act) உத்தியோகபூர்வமாக கையிலெடுத்துள்ளது. இது, பொலிஸ்-அரசு சர்வாதிகாரத்தை நிறுவுவதில் ஒரு மிகப்பெரும் தீவிரப்படுத்தலாகும். எந்தவொரு நடவடிக்கையையும் ஒத்திவைக்க வேண்டும் என்ற நீதிமன்ற உத்தரவையும் மீறி, வெள்ளை மாளிகை உடனடியாக நூற்றுக்கணக்கான புலம்பெயர்ந்தோரை நாடுகடத்த நடவடிக்கை எடுத்துள்ளது.

1798 ஆம் ஆண்டு ஜனாதிபதி ஜோன் ஆடம்ஸின் (John Adams) கீழ் அந்நிய மற்றும் தேசத்துரோகச் சட்டங்களின் ஒரு பகுதியாக நிறைவேற்றப்பட்ட அந்நிய எதிரிகள் சட்டம், எதிரி நாடுகளின் குடிமக்களை உரிய நடைமுறை இல்லாமல் தடுத்து வைக்க அல்லது நாடு கடத்த ஜனாதிபதிக்கு தடையற்ற அதிகாரத்தை வழங்குகிறது. ஜப்பானிய புலம்பெயர்ந்தவர்கள் மற்றும் ஜப்பானிய அமெரிக்கர்களை பாரியளவில் அடைத்து வைப்பதை நியாயப்படுத்த 1812 ம் ஆண்டு போர், முதலாம் உலகப் போர் மற்றும், மிகவும் இழிவார்ந்த விதத்தில், இரண்டாம் உலகப் போரின் போது, இந்த சட்டம் மூன்று முறை மட்டுமே பயன்படுத்தப்பட்டுள்ளது.

இதற்கு முந்தைய ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும், இந்தச் சட்டம் முறையாக அறிவிக்கப்பட்ட போரின் போது பயன்படுத்தப்பட்டது. ஆனால் ட்ரம்ப், வெனிசுவேலா அரசாங்கத்துடன் தொடர்புடையதாக கூறப்படும் குண்டர்களுக்கு எதிரான முற்றிலும் கற்பனையான “போரை” நியாயப்படுத்த இந்தச் சட்டத்தை பயன்படுத்துகிறார். அவரது நிர்வாக உத்தரவு, வெனிசுலாவைச் சேர்ந்த ஒரு நாடுகடந்த குற்றவியல் அமைப்பான ட்ரென் டி அரகுவாவை (TdA) ஒரு “வெளிநாட்டு பயங்கரவாத அமைப்பு” என்று முத்திரை குத்துகிறது. இது அமெரிக்காவிற்குள் “ஒரு படையெடுப்பு மற்றும் சூறையாடும் ஊடுருவலைத்” நடத்த ஜனாதிபதி நிக்கோலா மதுரோவுடன் ஒத்துழைக்கிறது என்று கூறப்படுகிறது.

TdA உறுப்பினர் என்று குற்றம் சாட்டப்படும் எவரும் தற்போதுள்ள குடியேற்றச் சட்டங்களின் கீழ் சட்டப் பாதுகாப்பிற்கு தகுதியற்றவர் என்று அறிவிக்கப்படுவார்கள். இதுபற்றிய தொடர்புகளை தீர்மானிப்பது ஜனாதிபதியின் கோரிக்கைகளின் அடிப்படையில் மட்டுமே செய்யப்படுகிறது. அதாவது, எந்தவொரு குடியுரிமை அல்லாதவரையும் எந்த நீதித்துறை நடைமுறையும் இன்றி கைது செய்வதற்கும் நாடுகடத்துவதற்குமான ட்ரம்பின் உரிமையை அது வலியுறுத்துகிறது.

இந்த உத்தரவு வெளியாகி வெறும் சில மணி நேரங்களுக்குப் பின்னர் பிறப்பிக்கப்பட்ட நாடுகடத்தல்களைத் தடுக்கும் ஒரு நீதித்துறை உத்தரவை ட்ரம்ப் மீறியிருப்பது ஒருவேளை அந்த உத்தரவை விட இன்னும் முக்கியமானது. கூட்டாட்சி அரசு நீதிபதி ஜேம்ஸ் போஸ்பேர்க் அமெரிக்கா வெனிசுவேலாவுடன் போரில் இல்லை என்று தீர்ப்பளித்ததுடன், மேலும் சங்கிலியால் பிணைக்கப்பட்டு, கைகால்கள் ஒன்றாகக் கட்டப்பட்ட நூற்றுக்கணக்கான பயணிகளை ஏற்றிச் சென்ற விமானங்களைத் திருப்பி அனுப்புமாறு உத்தரவிட்டார்.

ட்ரம்ப் நிர்வாகம் இந்த உத்தரவைப் புறக்கணித்து, எல் சால்வடோரில் விமானங்களை தரையிறக்கியது. எல் சால்வடோரின் பாசிச ஜனாதிபதி நயிப் புக்கேலே இழிவார்ந்த சால்வடோர் சிறை அமைப்புமுறையைத் திறந்து விடவும், புலம்பெயர்ந்தவர்கள் மற்றும் அமெரிக்க குடிமக்கள் இருதரப்பினருக்கும் கட்டாய உழைப்பு முகாம்களைத் திறக்கவும் முன்வந்துள்ளார்.

ஆக்ஸியோஸ் இன் தகவல்படி, அந்த விமானங்கள் ஏற்கனவே சர்வதேச வான்வெளியில் இருந்தன. ஆகவே, நீதிபதியின் தீர்ப்பு பொருந்தாது என்ற அபத்தமான காரணத்தின் அடிப்படையில், உள்நாட்டு பாதுகாப்பு செயலர் கிறிஸ்டி நொயெம் உடன் சேர்ந்து, அந்த விமானங்களைத் திருப்பி அனுப்புவதில்லை என்ற முடிவை ட்ரம்பின் பாசிச துணை தலைமை அலுவலர் ஸ்டீபன் மில்லர் மற்றும் உள்நாட்டு பாதுகாப்பு செயலர் கிறிஸ்டி நொயெம் ஆகியோர் எடுத்தனர்.

வெள்ளை மாளிகை நீதிபதி போஸ்பேர்க்கின் தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்துள்ளது. அட்டர்னி ஜெனரல் பாம் போண்டி நீதிபதியை தேசத்துரோகி என்று திறம்பட குற்றஞ்சாட்டினார். அவர் “அமெரிக்கர்களின் பாதுகாப்பின் மீது பயங்கரவாதிகளை” நிறுத்தியதாக கூறினார். நீதிமன்றங்கள் இறுதியில் ட்ரம்புக்கு எதிராக தீர்ப்பளித்தாலும் கூட, அவரது நிர்வாகம் நீதித்துறை உத்தரவுகளுக்கு இணங்கி நடக்கும் நோக்கத்தை கொண்டிருக்கவில்லை.

ட்ரம்ப் நிர்வாகம், ஹிட்லரின் பாசிச ஆட்சியை முன்மாதிரியாகக் கொண்டு, சர்வாதிகாரத்திற்கான ஒரு தெளிவான வரைபடத்தைப் பின்பற்றி வருகிறது. ட்ரம்பும் அவரது பாசிச ஆதரவாளர்களின் உள்வட்டமும் சட்ட மற்றும் அரசியலமைப்பு கட்டுப்பாடுகளை திட்டமிட்டு தகர்த்து வருகின்றனர். ஒவ்வொரு அத்துமீறலும் முழுமையான அதிகாரத்தை இன்னும் திமிர்பிடித்த முறையில் வலியுறுத்துவதற்கு களம் அமைத்து வருகிறது.

கடந்த வார இறுதியில் நடைபெற்ற நிகழ்வுகள் கொலம்பியா பல்கலைக்கழக மாணவரான மஹ்மூத் கலீல் சட்டவிரோதமாக கடத்தப்பட்டதை தொடர்ந்து வந்தன. அவர் காஸா இனப்படுகொலையை எதிர்த்ததற்காக அவருடைய வீட்டில் இருந்து கைது செய்யப்பட்டு லூயிசியானாவில் உள்ள குடியேற்ற சிறைக்கு மாற்றப்பட்டார்.

ட்ரம்ப் நிர்வாகத்தின் ஒடுக்குமுறையானது, புலம்பெயர்ந்தவர்கள் மற்றும் நிரந்தர வதிவிட அட்டையை வைத்திருப்பவர்களுடன் மட்டும் நின்றுவிடாது. அடிப்படையில், இந்த நடவடிக்கைகள், பெருமளவிலான பணிநீக்கங்கள், சமூகநலத் திட்டங்களில் ஆழமான வெட்டுக்கள் மற்றும் அரசு ஊழியர்களின் பணிநீக்கத்திற்கு எதிரான பாரிய தொழிலாள வர்க்க எதிர்ப்பின் எதிர்பார்ப்பால் தூண்டப்படுகின்றன. ஜனநாயக உரிமைகளை முற்றிலுமாக ரத்து செய்வதற்கும், அனைத்து எதிர்ப்பாளர்களையும் வன்முறையில் அடக்கி ஒடுக்குவதற்கும் ட்ரம்ப் நிர்வாகம் சட்ட மற்றும் நிறுவன அடித்தளங்களை அமைத்து வருகிறது.

அந்நிய எதிரிகள் சட்டத்தை ட்ரம்ப் கையிலெடுப்பது, பதவியேற்பு நாளில் அவர் கையெழுத்திட்ட நிர்வாக உத்தரவுகளுடன் பிணைந்துள்ளது. இதே உத்தரவுகள்தான் கிளர்ச்சிச் சட்டத்தைப் பிரயோகிக்கப் போவதாக அச்சுறுத்தின. வரலாற்றுரீதியில் வேலைநிறுத்தங்கள் மற்றும் சமூக அமைதியின்மையை நசுக்குவதற்கு பயன்படுத்தப்பட்ட இந்தச் சட்டம், அமெரிக்க குடிமக்கள் உட்பட போராட்டக்காரர்கள், வேலைநிறுத்தக்காரர்கள் மற்றும் அரசியல் எதிர்ப்பாளர்களுக்கு எதிராக செயலில் உள்ள துருப்புக்களையும் தேசிய காவல்படையையும் அணிதிரட்ட ட்ரம்பை அனுமதிக்கும்.

ட்ரம்ப் அரசியல் ஸ்தாபகத்திற்குள் இருந்து எந்த தீவிர எதிர்ப்பையும் எதிர்கொள்ளப் போவதில்லை என்ற நம்பிக்கையுடன் செயல்பட்டு வருகிறார். உண்மையில், கடந்த வாரக் கடைசியில் செனட்டிலுள்ள ஜனநாயகக் கட்சியினர் அடுத்த ஆறு மாதங்களுக்கு அரசாங்கத்திற்கு முழுமையாக நிதியளிக்கும் செலவின மசோதாவை நிறைவேற்றுவதை உறுதி செய்தனர்.

உலக சோசலிச வலைத் தளம் எழுதியதைப் போல, இது ஒரு “செயல்படுத்தும் நடவடிக்கைக்கு” நிகரானதாகும். அந்த மசோதாவை நிறைவேற்றியதில், ஜனநாயகக் கட்சியினருக்கு அவர்கள் என்ன செய்து கொண்டிருந்தார்கள் என்பது துல்லியமாக தெரியும்: அதாவது, ட்ரம்ப் இப்போது எடுத்து வரும் நடவடிக்கைகளை எடுக்க அவருக்கு ஒரு வெற்றுக் காசோலையை ஜனநாயகக் கட்சியினர் வழங்கியுள்ளனர். இவர்கள் எதிர்க்கட்சியினர் அல்ல, கூட்டாளிகள், சதிகாரர்கள்.

ட்ரம்பின் செலவின மசோதாவை ஆதரித்ததற்கான பொய்யான நியாயங்களைத் தொடர்ந்து, செனட் சிறுபான்மைத் தலைவர் சக் ஷுமர் கடந்த ஞாயிற்றுக்கிழமை நியூ யோர்க் டைம்ஸுக்கு ஒரு விரிவான நேர்காணலை வழங்கினார். அதில் அவர் கலீல் கைது செய்யப்பட்டதை ஆதரித்து, இனப்படுகொலைக்கு எதிரான போராட்டங்களை யூத விரோதம் என்று சாடினார். “[கலீல்] சட்டத்தை மீறியிருந்தால்,” “அவர் நாடு கடத்தப்பட வேண்டும்” என்று சக் ஷுமர் குறிப்பிட்டார்.

என்ன ஒரு இழிவான மோசடி! கலீல் மீது ஒரு குற்றம் கூட சுமத்தப்படவில்லை. அவரது அரசியல் கருத்துக்கள் அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் நலன்களுக்கு முரணானவை என்ற அடிப்படையில் மட்டுமே அவரின் கைது நடவடிக்கை நியாயப்படுத்தப்பட்டு வருகிறது.

இந்தச் சூழலில், கோர்னெல் பல்கலைக்கழக மாணவர் மொமோடோ தால் —பேராசிரியர் மெகோமா வா என்ஜிகே மற்றும் மாணவர் ஸ்ரீராம் பரசுராமா ஆகியோருடன் சேர்ந்து— சனிக்கிழமையன்று தாக்கல் செய்த வழக்கு மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாகும். பிரிட்டிஷ்-காம்பியன் பட்டதாரி மாணவரான தால், காஸா இனப்படுகொலைக்கு எதிரான போராட்டங்களில் ஈடுபட்டதற்காக பைடென் நிர்வாகத்தின் இறுதி மாதங்களில் நாடு கடத்தப்படுவதற்கு இலக்கு வைக்கப்பட்டார். இப்போது, ட்ரம்பின் கீழ், அதே ஒடுக்குமுறை நடவடிக்கைகள் பாரியளவில் விரிவுபடுத்தப்பட்டுள்ளன.

வழக்கறிஞர் எரிக் லீ மற்றும் அமெரிக்க-அரபு பாகுபாடு எதிர்ப்புக் குழு தாக்கல் செய்த இந்த வழக்கு, பேச்சு சுதந்திரத்தை குறிவைக்கும் ட்ரம்பின் இரண்டு நிர்வாக உத்தரவுகள் சட்டவிரோதமானவை மற்றும் அரசியலமைப்பிற்கு விரோதமானவை என்று வாதிடுகின்றன. கலீல் மற்றும் பிறரின் கைது பற்றி குறிப்பிடுகையில், “ஒரு சர்வாதிகாரத்தால் மட்டுமே ஆட்சியாளர் தனது நிர்வாகத்தை விமர்சித்ததற்காக அரசியல் எதிரிகளை சிறையில் அடைத்து நாடு கடத்த அனுமதிக்க முடியும்” என்று இந்த வழக்கு அறிவிக்கிறது.

சோசலிச சமத்துவக் கட்சி இந்த வழக்கை வழிமொழிகிறது. எவ்வாறாயினும், ஜனநாயகத்தின் நெருக்கடிக்கு நீதிமன்றங்கள் ஒரு தீர்வை வழங்கும் என்ற மாயையில் யாரும் இருக்கக்கூடாது. நீதி அமைப்புமுறை முதலாளித்துவ அரசின் ஒரு கூறுபாடாக உள்ளதுடன், அதிகரித்தளவில் வலதுசாரி நீதிபதிகளால் நிரம்பி வழிகிறது. மேலும், ட்ரம்ப் சாதகமற்ற தீர்ப்புகளை மீறுவார் என்பதை இந்த நீதிபதி தெளிவுபடுத்தியுள்ளார்.

அரசியல் சர்வாதிகாரம் நிதியியல் செல்வந்த தட்டுக்களின் பொருளாதார சர்வாதிகாரத்துடன் பிரிக்கவியலாதவாறு பிணைந்துள்ளது. ட்ரம்ப் நிர்வாகம் ஒரு தன்னலக்குழுவின் அரசாங்கமாகும். இது, அரசியலமைப்பை வெளிப்படையாக அவமதித்து ஆட்சி செய்கிறது. இது, மருத்துவ உதவி, உணவு முத்திரைகள், சமூகப் பாதுகாப்பு, பொதுக் கல்வி மற்றும் பிற முக்கிய சமூகத் திட்டங்களுக்கு எதிராகப் போர் தொடுத்து வருகிறது. ட்ரம்ப் நிர்வாகம் 10,000ம் அஞ்சல் தொழிலாளர்கள் மற்றும் கூட்டாட்சி அரசு தொழிலாளர்களை பெருமளவில் பணிநீக்கம் செய்வதை தீவிரப்படுத்துவதையும், போருக்கும் பணக்காரர்களுக்கும் பிணை எடுக்க பணம் செலுத்துவதற்காக சுரண்டலில் பிரமாண்டமான அதிகரிப்பையும் தயாரித்து வருகிறது.

இந்தத் தாக்குதல் ட்ரம்புடன் தொடங்கவில்லை—அவர் அதை ஒரு புதிய மட்டத்திற்கு எடுத்துச் செல்கிறார். ஆனால், இது வோல் ஸ்ட்ரீட்டின் இரண்டு கட்சிகளாலும் பல தசாப்தங்களாக தயாரிப்பு செய்யப்பட்டு வந்திருக்கிறது. அனைத்திற்கும் மேலாக, உலகெங்கிலும் முதலாளித்துவ அரசாங்கங்கள் அவற்றின் சிக்கன நடவடிக்கைகள் மற்றும் போர் கொள்கைகளுக்கான எதிர்ப்புக்களை ஒடுக்க எதேச்சதிகார ஆட்சியை நோக்கி திரும்புகின்ற நிலையில், இது ஒரு உலகளாவிய நிகழ்வுபோக்காகும்.

தொழிலாள வர்க்கம் பாரிய எதிர்ப்பைக் கொண்டு இதற்கு பதிலளிக்க வேண்டும். ட்ரம்பின் சர்வாதிகாரம், ஜனநாயகக் கட்சியின் உடந்தை, மற்றும் வாழ்க்கைத் தரங்கள் மீதான பெருநிறுவன தாக்குதல்களுக்கு எதிராக தொழிலாளர்கள் மற்றும் இளைஞர்களை அணிதிரட்ட, வேலையிடங்களிலும் அண்டை பகுதிகளிலும் பெருநிறுவன-சார்பு தொழிற்சங்க எந்திரத்தில் இருந்து சுயாதீனமான சாமானிய தொழிலாளர் குழுக்களை உருவாக்க சோசலிச சமத்துவக் கட்சி அழைப்பு விடுக்கிறது.

தொழில்துறை நடவடிக்கையானது, ஒரு சோசலிச முன்னோக்கு மற்றும் வேலைத்திட்டத்தால் உயிரூட்டப்பட வேண்டும். சர்வாதிகாரத்திற்கு எதிரான போராட்டம் என்பது, அதை உருவாக்கிய முதலாளித்துவ அமைப்புமுறைக்கு எதிரான போராட்டத்தில் இருந்து பிரிக்கப்பட முடியாததாகும். நிதியியல் செல்வந்த தட்டுக்களின் சொத்துக்களைப் பறிமுதல் செய்வதற்கும், ஏகாதிபத்திய போர் எந்திரத்தைக் கலைப்பதற்கும், அரசியல் மற்றும் பொருளாதார அதிகாரத்தை அதன் சொந்தக் கரங்களில் வைக்கும் ஒரு தொழிலாளர் அரசாங்கத்தை ஸ்தாபிப்பதற்குமான போராட்டத்தை தொழிலாள வர்க்கம் முன்னெடுக்க வேண்டும்.

அதாவது, சர்வாதிகாரத்திற்கு எதிரான போராட்டம் என்பது அமெரிக்காவிலும் உலகெங்கிலும் சோசலிசத்திற்கான ஒரு போராட்டமாக மட்டுமே அபிவிருத்தி செய்யப்பட முடியும்.