முன்னோக்கு

அமெரிக்காவின் "விதிவிலக்கு நிலை"

மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம். 

அமெரிக்காவிலிருந்து நாடு கடத்தப்பட்டவர்கள் எல் சால்வடோரின் டெகோலூகாவில் உள்ள பயங்கரவாத தடுப்பு மையத்திற்கு (CECOT) சிறைக் காவலர்கள் மாற்றுகிறார்கள். மார்ச் 16, 2025, ஞாயிற்றுக்கிழமை. [AP Photo]

ஜனவரி 1933 இல், அடால்ஃப் ஹிட்லர் ஜேர்மனியின் சான்சலராக நியமிக்கப்பட்டார். அதற்கடுத்த 12 ஆண்டுகளில் நாஜிக்கள் கட்டவிழ்த்து விட்ட பயங்கரம், அவர்களின் இயக்கத்தை உலகெங்கிலும் மிகவும் சொல்லமுடியாத காட்டுமிராண்டித்தனம் மற்றும் சீரழிவுடன் ஒத்ததாக ஆக்கியது. ஹிட்லரின் எதிர்ப்புரட்சிகர சர்வாதிகாரம், யூதர்கள், ரோமாக்கள் மற்றும் பிற சிறுபான்மையினரின் ஒட்டுமொத்த மக்கள் உள்ளடங்கலாக பாரிய மக்களைச் சிறையிலடைத்தல், பாரிய நாடுகடத்தல் மற்றும் இறுதியில் பாரிய படுகொலை ஆகியவற்றைக் கொண்டு அனைத்து எதிர்ப்பையும் நசுக்கியது. தோல்வியுற்ற நாஜிப் போர் ஐரோப்பாவை அழிவுக்குள்ளாக்கி, மனிதக் கலாச்சாரம் மற்றும் நாகரிகம் முழுவதிலும் நிரந்தர வடுக்களை விட்டுச் சென்றுள்ளது.

இந்தக் குற்றங்கள் நடத்தப்பட்ட போலி-சட்ட கட்டமைப்பு, பாதுகாக்கப்பட்ட அடிப்படை உரிமைகள் மற்றும் சுதந்திரங்களை ரத்து செய்யும் அதிகாரத்தைப் பயன்படுத்தும் “விதிவிலக்கு நிலை” என்று அழைக்கப்படுகிறது. இது 1920 களில், ஒரு வழக்கறிஞரும் நாஜிக் கட்சி உறுப்பினருமான கார்ல் ஷ்மிட் (1888–1985) என்பரால் அறிமுகப்படுத்தப்பட்ட கருத்தாகும்.

ஒரு சலுகை பெற்ற கத்தோலிக்க பின்னணியில் இருந்து வந்த ஒரு பிற்போக்குத்தனமான சட்ட வல்லுனரான ஷிமித், முதலாம் உலகப் போருக்குப் பின்னர் வெய்மார் சகாப்தத்தில் தாராளவாத மற்றும் அரசியலமைப்பு சீர்திருத்தங்களுக்கு விரோதத்துடன் எதிர்வினையாற்றினார். புரட்டஸ்தாந்துவாதம், “காஸ்மோபாலிட்டனிசம்” மற்றும் குறிப்பாக யூத கலாச்சாரத்துடன் அவர் தொடர்புபடுத்திய எதையும் ஆழ்ந்த வெறுப்பின் அடிப்படையில் வெளிப்படுத்தினார்.

ஷிமித்தின் “விதிவிலக்கு நிலை” என்ற தத்துவத்தின்படி, ஒரு தேசிய அவசரகால நிலையின் “விதிவிலக்கான” சூழ்நிலையில், ஜனநாயக மற்றும் நாடாளுமன்ற விதிமுறைகள் பொருந்தாது. அத்தகைய அவசர கால சூழ்நிலையில், சட்ட ஒழுங்கின் உயிர்வாழ்வு ஒரு விதிமுறையைச் சார்ந்தது அல்ல. மாறாக, நிர்வாகத்தின் முடிவுகளைப் பொறுத்தது, “இது விதிவிலக்கு நிலையை தீர்மானிக்கும்” ஒன்றாகும் என்று ஷ்மிட் கூறுகிறார்.

1933 பிப்ரவரியில் கம்யூனிச-விரோத விஷமப் பிரச்சாரத்தைத் தூண்டுவதற்கு நாஜிக்களால் பயன்படுத்தப்பட்ட நாடாளுமன்ற தீ விபத்தைத் தொடர்ந்து, ஜனாதிபதி பௌல் வொன் ஹின்டென்பேர்க் அடிப்படை ஜனநாயக உரிமைகளை இடைநீக்கம் செய்து நாடாளுமன்ற தீ உத்தரவாணையை பிறப்பித்தார். ஒரு மாதத்திற்குப் பின்னர், ஜேர்மன் நாடாளுமன்றம் ஷிமித்தின் சட்ட உதவியுடன், அரசியலமைப்பு வரம்புகள் இல்லாமல் ஒருதலைப்பட்சமாக செயல்படுவதற்கான ஹிட்லரின் அதிகாரங்களை நெறிப்படுத்தும் சட்டத்தை நிறைவேற்றியது.

அதே மாதத்தில், டக்காவோ சித்திரவதை முகாமின் கட்டுமானமும் தொடங்கியது. புதிய கட்டமைப்பின் கீழ், ஜேர்மன் கம்யூனிஸ்ட் கட்சி (KPD) தடை செய்யப்பட்டு, அதன் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகள் அனைவரும் சிறையில் அடைக்கப்பட்டனர். மேலும், நாஜிக்கள் அனைத்து சோசலிச மற்றும் தொழிலாள வர்க்க எதிர்ப்பின் மீது ஒரு மூர்க்கத்தனமான ஒடுக்குமுறையைக் கட்டவிழ்த்து விட்டனர்.

அவசரகால நிலையிலிருந்து நாட்டைக் காப்பாற்றுவதற்கான ஆணையுடன் “மக்களின் விருப்பத்தின்” வெளிப்பாடாகவும், “தேசத்தின் விருப்பத்தின்” வெளிப்பாடாகவும் ஹிட்லர் இருந்ததாகக் கூறப்பட்டதால், சட்டம் என்பது “தலைவரின் திட்டம் மற்றும் விருப்பம்” என்பதைத் தவிர வேறில்லை என்று ஷ்மிட் கூறினார். இந்தக் கருத்தானது தலைவரது கொள்கை (Führer principle) என்று அறியப்பட்டது

ஜூன் 1934 இன் பிற்பகுதியில் இடம்பெற்ற நீண்ட அரிவாள்களின் இரவில், நாஜி இயக்கத்திற்கு உள்ளேயும் வெளியேயும் உள்ள தனது அரசியல் எதிரிகளை களையெடுப்பதற்கு ஹிட்லர் திட்டமிட்டார். நூற்றுக்கணக்கான உயர்மட்ட அரசியல் தலைவர்கள் இரகசியமாக, குற்றச்சாட்டுக்கள், ஆதாரங்கள் அல்லது விசாரணை எதுவுமின்றி படுகொலை செய்யப்பட்டனர். 1934 ஆகஸ்ட் மாதம் ஷிமித் எழுதிய ஒரு கட்டுரை ஒன்றில், “ஆபத்து ஏற்படும் நேரத்தில், மத்தியஸ்தம் இல்லாத நீதியை உருவாக்கி, மிகவும் ஆபத்தான துஷ்பிரயோகத்திலிருந்து சட்டத்தைப் பாதுகாக்கும் மிக உயர்ந்த நீதிபதி” ஹிட்லர் என்று கூறி ஷ்மிட் இந்தக் கொலைகளைக் கொண்டாடினார்.

நாஜிக்களே எடுத்துக்காட்டியதைப் போல, காலவரையற்ற “விதிவிலக்கு நிலை” மற்றும் “தலைவர் கோட்பாடு” ஆகியவை முற்றிலும் எதையும் நியாயப்படுத்த பயன்படுத்தப்படலாம். 2ம் உலகப் போரின் முடிவில் நூரெம்பேர்க் விசாரணைகளின் போது, அமெரிக்க உச்ச நீதிமன்ற நீதிபதி ரொபேர்ட் ஜாக்சன் நாஜி தலைவர்கள் “ஒரு சட்டம் இருப்பதைக் கண்டு ஆச்சரியப்படுகிறார்கள்... அவர்களின் திட்டம் அனைத்து சட்டங்களையும் புறக்கணித்து மீறியது” என்று குற்றம் சாட்டினார்.

எண்பது ஆண்டுகளுக்குப் பின்னர், அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் அவரது ஜனாதிபதி பதவியின் முதல் இரண்டு மாதங்களில் வழங்கிய தனிப்பட்ட உத்தரவாணைகளின் ஒரு மின்னல் வேக வடிவத்தில், ஷிமித்தின் வஞ்சகமான தத்துவங்கள் மீண்டும் உயிர்ப்பிக்கப்பட்டுள்ளன.

பதவியேற்ற உடனேயே, ட்ரம்ப் ஒரு “தேசிய அவசரகால நிலையை” அறிவித்ததுடன், “தெற்கு எல்லை வழியாக அமெரிக்கா மீதான ஒரு படையெடுப்பிலிருந்து” நாட்டின் “இறையாண்மையை” பாதுகாக்க அசாதாரண போர்க்கால அதிகாரங்களை வலியுறுத்தினார். இந்த அடிப்படையில், “ஜனாதிபதியால் கோரப்பட்ட நேரடிப் பணிகளை அமெரிக்க இராணுவப் படைகள் மேற்கொள்ள வேண்டும்” என்று ஒரு உத்தரவை அவர் பிறப்பித்தார்.

ஆவணமற்ற “அந்நியர்களின்” ஒரு “படையெடுப்பில்” இருந்து நாட்டைப் பாதுகாப்பது என்ற பேரில், தெற்கு எல்லைக்கு ஆயிரக் கணக்கான செயலிலுள்ள சிப்பாய்கள் ஏற்கனவே அனுப்பப்பட்டுள்ளனர். இரண்டாம் உலகப் போரின் போது, ஜப்பானிய அமெரிக்கர்களை சிறையில் அடைப்பதற்கு நியாயப்படுத்தப் பயன்படுத்தப்பட்ட அதே சட்ட வாதங்களை முன்வைத்த ட்ரம்ப், நகர்ப்புற மையங்களில் இராணுவமயமாக்கப்பட்ட தாக்குதல்களில் பிடிபடுவார்கள் என்று எதிர்பார்க்கப்படும் மில்லியன் கணக்கான அகதிகள் மற்றும் புலம்பெயர்ந்தோருக்கான அமெரிக்க இராணுவத் தளங்களை தடுப்புக்காவல் முகாம்களாக மாற்ற வேண்டும் என்று கோரினார்.

பிப்ரவரி 18 அன்று, “தலைவர் கோட்பாட்டை” நேரடியாகப் பின்பற்றும் வகையில், நிர்வாகப் பிரிவுக்கான சட்டத்தின் அதிகாரப்பூர்வ விளக்கங்களை வழங்குவதாகக் கூறி ட்ரம்ப் ஒரு நிர்வாக உத்தரவை பிறப்பித்தார். வெள்ளை மாளிகையின் அதிகாரப்பூர்வ தொலைக்காட்சிகள், “தனது நாட்டைக் காப்பாற்றுபவர் எந்த சட்டத்தையும் மீறுவதில்லை” என்ற ட்ரம்பின் அறிக்கையை ஒளிபரப்பின. துணை ஜனாதிபதி ஜே.டி. வான்ஸ், “நிர்வாகத்தின் சட்டபூர்வமான அதிகாரத்தை கட்டுப்படுத்த நீதிபதிகள் அனுமதிக்கப்படவில்லை” என்று எதிரொலித்தார்.

ட்ரம்புக்கு எதிரான பெடரல் நீதிபதிகளின் நீதிமன்ற உத்தரவுகள் “மக்களின் விருப்பத்தை முறியடிப்பதற்கான ஒரு முயற்சி” என்று ட்ரம்பின் வெள்ளை மாளிகை பத்திரிகைச் செயலர் கரோலின் லெவிட் பிப்ரவரி 12 அன்று அறிவித்தார். மார்ச் 5 அன்று, திட்டமிடப்பட்ட வரிவிதிப்புகள் குறித்து ஒரு நிருபர் கரோலினிடம் கேள்வி எழுப்பியபோது, “நீங்கள் ஜனாதிபதியா? முடிவெடுப்பது நீங்கள் அல்ல!” என்று அவர் சீறினார்.

ட்ரம்பின் நிர்வாக உத்தரவு ஒரு வன்முறையான நீடித்த தாக்குதலாகும். இது, குடியரசுக் கட்சியின் 2024 தேர்தல் பிரச்சாரங்களுக்கு 290 மில்லியன் டாலர்களை நிதியளித்த எலோன் மஸ்க், ஜனவரி 20 அன்று ட்ரம்பின் பதவியேற்பு விழாவில் போர்வெறிபிடித்த ஹிட்லர் வணக்கங்களை வழங்கியது தற்செயலானது அல்ல என்பதை தெளிவுபடுத்துகிறது.

அடிப்படை அரசியலமைப்பு அதிகாரப் பிரிவினையை காலில் போட்டு மிதித்து, “பணத்தின் அதிகாரத்தை” ஜனாதிபதிக்கு அல்ல, காங்கிரஸிடம் ஒப்படைத்து, சுற்றுச்சூழல் ஒழுங்குமுறை முதல் ஓய்வூதியப் பாதுகாப்பு, பொதுக் கல்வி மற்றும் பொது சுகாதாரம் வரை ஒரு நூற்றாண்டு சமூக சீர்திருத்தங்களை ரத்து செய்யும் நோக்கில் ட்ரம்ப் ஒரு பெரிய அளவிலான பணிநீக்க அலையை வழிநடத்துகிறார். இந்த நோக்கத்திற்காக, மஸ்க் தலைமையிலான “அரசு செயல்திறன் துறை” என்றழைக்கப்படுவதை அவர் உருவாக்கினார். மஸ்க் இப்போது நிதி மற்றும் கணினி அமைப்புகளை கடத்துவதன் மூலம் அரசாங்கத்தின் ஒவ்வொரு நிறுவனத்தையும், துறையையும் திறம்படக் கட்டுப்படுத்தியுள்ளார்.

மார்ச் 8 அன்று, கொலம்பியா பல்கலைக்கழக மாணவர் தலைவர் மஹ்மூத் கலீல் கடத்தப்பட்டு காணாமல் போனமை, அரசியலமைப்பைத் தூக்கியெறிந்து ஒரு போலிஸ் அரசை ஸ்தாபிப்பதற்கான ட்ரம்பின் முயற்சிகள் இன்னும் அதிகமாக தீவிரமடைந்து வருவதைக் குறிக்கிறது. கலீல் அமெரிக்காவில் சட்டபூர்வமாக வசிப்பவர் மற்றும் அவரை நாடுகடத்துவதை நியாயப்படுத்தும் எந்தக் குற்றத்திற்காகவும் அவர் தண்டிக்கப்படவில்லை. ட்ரம்ப் பாலஸ்தீனரான கலீலுக்கு எதிராக அரசாங்க பிரச்சார சாதனங்களில் இனவாத தூண்டுதலை அனைத்து எழுத்துக்களிலும் பிரசுரித்தது மட்டுமல்ல, அவர் போன்று “இன்னும் பலர் வரவிருக்கின்றனர்” என்றும் பெருமைபீற்றிக் கொண்டார்.

அடிப்படை ஜனநாயக நெறிமுறைகளுக்கு எதிரான ட்ரம்ப் ஆட்சியின் ஒவ்வொரு தாக்குதலும், முடிவில்லாத தொடர்ச்சியான தாக்குதல்களாக, மேலும் தாக்குதல்களுக்கு களம் அமைத்து, ஒரு முன்னுதாரணத்தை அமைக்க கவனமாக கணக்கிடப்படுகிறது. ட்ரம்பிற்கு எதிராக ஒவ்வொரு முறையும் நீதிமன்ற உத்தரவுகள் பிறப்பிக்கப்படும்போதும், அவர் அடிப்படை ஜனநாயக நெறிமுறைகளை மேலும் இரண்டு அப்பட்டமான மீறல்களுடன் பதிலளிக்கிறார்.

கடந்த வார இறுதியில், ட்ரம்ப் அந்நிய எதிரிகள் சட்டத்தை செயல்படுத்தி, ட்ரென் டி அரகுவா குண்டர்கள் மற்றும் வெனிசுலா அரசாங்கத்துடன் அமெரிக்கா “போரில்” ஈடுபட்டுள்ளது என்ற கற்பனையான அறிவிப்பின் அடிப்படையில், எந்தவொரு நீதிமன்ற நடவடிக்கையும் இல்லாமல் ஒருதலைப்பட்சமாக புலம்பெயர்ந்தவர்களை நாடு கடத்தும் அதிகாரத்தை பிரகடனம் செய்தார்.

எல் சால்வடாருக்கு புலம்பெயர்ந்தோரை கொண்டு செல்வதை தடை செய்யும் நீதிமன்ற உத்தரவை வெள்ளை மாளிகை நேரடியாக மீறியுள்ளது. அங்கு அதிதீவிர வலதுசாரி பலசாலி நயீப் புகேல், அரசாங்கத்தின் பரந்த மற்றும் கொடூரமான பயங்கரவாத தடுப்புக்காவல் மையத்தில் அவர்களை அடைத்து வைப்பதாக உறுதியளித்துள்ளார். அமெரிக்க குடிமக்களையும் அங்கு கொண்டு செல்ல முடியும் என்ற கருத்தை ட்ரம்ப் ஏற்கனவே முன்வைத்துள்ளார்.

கடந்த ஞாயிற்றுக்கிழமை தாக்கல் செய்த ஒரு மனுவில், ட்ரம்ப் நிர்வாகம், நாடுகடத்தல்கள் ஜனாதிபதியின் “போர் அதிகாரங்களின்” ஒரு பகுதியாக மேற்கொள்ளப்படுவதால் அவை “நீதித்துறை மறுஆய்வுக்கு உட்பட்டவை அல்ல” என்று வாதிட்டது.

இது “நீதிமன்றங்களுக்கு மட்டும் விடுக்கப்பட்ட சவால் அல்ல, அரசியலமைப்புச் சட்டத்திற்கு விடுக்கப்பட்ட சவால்” ஆகும். ஒரு நிர்வாகி, ஒரு தனிநபரின் அரசியலமைப்பு உரிமைகளை மீறினால், நீதிமன்றங்கள் ஒரு தீர்வை வழங்க வேண்டும். அதாவது நிர்வாக அதிகாரத்தை சரிபார்க்க வேண்டும். நிர்வாகம் முடிவைப் புறக்கணித்தால், அரசியலமைப்புச் சட்டம் புலம்பெயர்ந்தோருக்கு மட்டுமல்ல, ஒட்டுமொத்த மக்களுக்கும் ஒரு இறந்த காகிதமாக மாறும்.

திருநங்கைகளுக்கு எதிராக இப்போது நடந்து வரும் வெறுக்கத்தக்க பிரச்சாரமும் இதேபோல் நாஜி பாடப்புத்தகத்திலிருந்து நேரடியாக இழுக்கப்பட்டுள்ளது. மே 1933 இல், செயல்படுத்தல் சட்டத்தின் பின்னர், நாஜிக் குண்டர்கள் ஓரினச்சேர்க்கையாளர்கள் மற்றும் திருநங்கைகள் தொடர்பான ஆய்வுகளுக்கு முன்னோடியாக இருந்த பேர்லின் பாலியல் ஆராய்ச்சி நிறுவனத்தின் நூலகம் மற்றும் காப்பகங்களை தாக்கி எரித்தனர். இந்தத் தாக்குதல் நாஜி புத்தக எரிப்புகளின் இழிபுகழ்பெற்ற அலையின் தொடக்கத்தைக் குறித்தது.

கடந்த பிப்ரவரியில், ஜேர்மன் நவ-நாஜிக் கட்சித் தலைவர் அலிஸ் வைடெலை ஊக்குவிப்பதற்காக துணை ஜனாதிபதி வான்ஸ் ஐரோப்பாவிற்கு பயணித்தார். பின்னர் ஃபாக்ஸ் நியூஸில் அளித்த பேட்டியில், வான்ஸ், “எமது தேசிய சமூகத்தில் யார் இணைய வேண்டும் என்பதை அமெரிக்கர்களே தீர்மானிக்கிறார்கள்,” என்று அறிவித்தார். இந்த வார்த்தைகளின் தேர்வு சந்தேகத்திற்கிடமின்றி ஷ்மித் முன்னெடுத்த ஒரு “தேசிய சமூகம்” என்ற கருத்தாக்கத்தை தூண்டிவிடும் நோக்கம் கொண்டது. இதை அவர் அரசியல் வாழ்வில் இருந்து “ஆரியர்களல்லாதவர்களை” விலக்கி வைப்பதை நியாயப்படுத்த பயன்படுத்தியுள்ளார். “சீரழிந்த கலைக்கு” எதிரான நாஜி பிரச்சாரத்திற்கு புத்துயிரூட்டும் வகையில், ட்ரம்ப் தன்னைத்தானே வாஷிங்டன் டி.சி இல் உள்ள கென்னடி மையத்தின் தலைவராக நியமித்துக் கொண்டு, அதன் நிர்வாகக் குழுவில் ஒரு களையெடுப்பை நடத்தி வருகிறார்.

1930களில், ஜேர்மனியில் நடந்ததைப் போலவே, இன்று அமெரிக்காவில் ஒரு சர்வாதிகாரத்தை நிறுவும் முயற்சி, முதலாளித்துவத்தின் சமூக விளைபொருளாக உருவாகியதாகும். காசா மக்கள் மீது தொடர்ந்து நடத்தப்பட்டு வரும் படுகொலை, தற்போது அமெரிக்க அரசைக் கட்டுப்படுத்தும் சக்திகள் நாஜிக்களைப் போன்ற கொடூரத்தை செய்ய வல்லவை என்பதையும், மேலும் அதைவிட மோசமாக செய்ய வல்லவை என்பதையும் நிரூபிக்கிறது.

ஆயினும், 1933 இல் ஹிட்லரைப் போலன்றி, ட்ரம்ப் ஒரு பாரிய பாசிச இயக்கத்தின் ஆதரவை அனுபவிக்கவில்லை. அதற்கு நேரெதிராக, ஒரு சர்வாதிகாரத்தைத் திணிப்பதற்கான இப்போது நடந்து வருகின்ற முயற்சியானது, அமெரிக்கப் புரட்சி, அடிமைத்தனத்தை ஒழித்துக்கட்டுவதற்காக இடம்பெற்ற உள்நாட்டுப் போர், ஜிம் குரோவை அழித்த குடியுரிமை இயக்கம் மற்றும் அனைத்திற்கும் மேலாக, உலகெங்கிலுமான புலம்பெயர்ந்தவர்களைக் கொண்ட அமெரிக்க தொழிலாள வர்க்கத்தின் சக்திவாய்ந்த போராட்ட வரலாற்றில் வேரூன்றியுள்ள அமெரிக்காவின் சக்திவாய்ந்த ஜனநாயக பாரம்பரியங்களுடன் தவிர்க்கவியலாமல் மோதலுக்கு வரும்.

ஒரு சர்வாதிகாரத்தைத் திணிப்பதற்கான முயற்சியானது, 2000 தேர்தல்கள் திருடப்பட்டதற்கு ஜனநாயகக் கட்சியினர் உடன்பட்டது, “பயங்கரவாதத்தின் மீதான போர்” என்பதன் கீழ் சர்வாதிகார போர்க்கால அதிகாரங்களை வலியுறுத்தியது மற்றும் அடுத்தடுத்து வந்த ஜனநாயக மற்றும் குடியரசுக் கட்சி நிர்வாகங்களின் கீழ் சித்திரவதை, இராணுவ விசாரணைக் குழுக்கள், பாரிய கண்காணிப்பு மற்றும் படுகொலைகளை இயல்பாக்கியது ஆகியவை உட்பட ஒரு நீடித்த வரலாற்று நிகழ்ச்சிப்போக்கின் உச்சக்கட்டமாகும். இந்த நிகழ்ச்சிப்போக்கு முன்னாள் ஜனாதிபதி ஜோ பைடெனின் கீழ், காசா இனப்படுகொலைக்கு எதிரான பாரிய மாணவர் போராட்டங்களை குற்றகரமாக்குவதற்கான முயற்சிகளுடன் தீவிரப்படுத்தப்பட்டது.

ட்ரம்பின் “சர்வாதிகார நடவடிக்கை” அமெரிக்க அரசாங்கத்தின் அரசியல் கட்டமைப்பை, சமூக மற்றும் பொருளாதார வாழ்வில் அது ஏற்கனவே அனுபவித்து வரும் நடைமுறை சர்வாதிகாரத்துடன் இணைக்கத் தீர்மானித்த முதலாளித்துவ தன்னலக்குழுவின் நலன்களை வெளிப்படுத்துகிறது.

இந்த தன்னலக்குழுவின் நலன்கள் அமெரிக்காவின் இரண்டு அரசியல் கட்சிகளின் நடத்தையிலும் பிரதிபலிக்கின்றன. இது கடந்த வெள்ளிக்கிழமை ஜனநாயகக் கட்சியின் உயர்மட்டத் தலைவர்கள் காங்கிரஸிலிருந்து அனைத்து செலவின உத்தரவுகளையும் நீக்க வாக்களித்ததன் மூலம் வெளிப்படுத்தப்பட்டது. இது நடைமுறையளவில் மஸ்க் மற்றும் ட்ரம்பின் நடவடிக்கையைத் தீவிரப்படுத்த பச்சை விளக்கை காட்டியது.

இந்த நடவடிக்கையை நிறுத்தி, தலைகீழாக மாற்றுவதற்குத் தேவையான பாரிய இயக்கம், எல்லாவற்றிற்கும் மேலாக, அனைத்து எல்லைகளையும் கடந்து தொழிலாள வர்க்கத்தின் நலன்களை வெளிப்படுத்த வேண்டும். மேலும் அதன் மூலத்தில் உள்ள பாசிச அச்சுறுத்தலை - முதலாளித்துவ அமைப்புமுறையை - ஒழித்துக்கட்டுவதற்கான போராட்டத்தில் சமூகத்தின் அனைத்து முற்போக்கான கூறுகளையும் அதன் பின்னால் வழிநடத்த வேண்டும்.