மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம்.
ட்ரம்ப் நிர்வாகம் பதவியேற்று இரண்டு மாதங்களாகியுள்ள நிலையில், அது அனைத்து சட்டபூர்வத்தன்மையையும் முற்றிலுமாக முறித்துக் கொண்டிருக்கிறது என்பதில் எந்த கேள்விக்கும் இனி இடமில்லை. அமெரிக்காவில் நடப்பது அரசியலமைப்பு ஆட்சியை தூக்கியெறிந்து ஜனாதிபதி சர்வாதிகாரத்தை நிறுவுவதற்கான முயற்சி என்பதை முதலாளித்துவ ஊடகங்களே இப்போது ஒப்புக்கொள்கின்றன.
கடந்த சனிக்கிழமையன்று, அன்னிய எதிரிகள் சட்டம் கையிலெடுக்கப்பட்டதைத் தொடர்ந்து, நாடுகடத்தல்களை நிறுத்தக் கோரிய ஒரு பெடரல் நீதிமன்ற உத்தரவை ட்ரம்ப் பகிரங்கமாக மீறியதே விடயங்களை ஒரு உச்சக்கட்டத்திற்கு கொண்டு வந்துள்ளது. வாஷிங்டன் டி.சி மாவட்ட நீதிமன்ற நீதிபதி ஜேம்ஸ் போஸ்பெர்க்கின் தீர்ப்புக்கு பதிலளிக்கும் விதமாக, வெள்ளை மாளிகை அதிகாரிகளும் ட்ரம்ப்பும் போஸ்பெர்க்கை பதவி நீக்கம் செய்வதாக அச்சுறுத்தியுள்ளனர்.
பாசிச வலதுசாரிகளிடம் இருந்து வந்த பதிலில், “பைத்தியக்கார இடது” நீதிபதிகள் மீதான ட்ரம்பின் வெறித்தனமான கண்டனங்கள், காங்கிரஸில் ட்ரம்ப் மற்றும் குடியரசுக் கட்சியினர் இருவராலும் குரல் எழுப்பப்பட்ட பதவிநீக்க குற்றவிசாரணைக்கான கோரிக்கைகள் மற்றும் மறைமுகமான வன்முறை அச்சுறுத்தல்கள் ஆகியவை உள்ளடங்கி உள்ளன. புதனன்று பைனான்சியல் டைம்ஸ் கட்டுரையாளர் ஒருவர், “கருத்து வேறுபாடுகள் கொண்ட நீதிபதிகளின் தனிப்பட்ட வீடுகளுக்கு அநாமதேய பீட்சா உணவு வினியோகங்கள் செய்யப்படும் சம்பவங்களை எடுத்துக்காட்டினார் — இது ஒரு மாஃபியா திரைப்படத்திலிருந்து நேரடியாக எடுக்கப்பட்ட நடவடிக்கையாகும். இதன்மூலம், “நீங்கள் எங்கு வசிக்கிறீர்கள் என்பது எங்களுக்குத் தெரியும்” என்பது நீதிபதிகளுக்கு விடுக்கப்பட்ட மறைமுகமான செய்தியாகும்.
மஹ்மூத் கலீல் உட்பட தனிநபர்கள், அவர்களுடைய அரசியல் கருத்துக்களுக்காக கைது செய்யப்படும் சூழ்நிலையில் இது நடைபெறுகிறது. நேற்று, சட்ட அமுலாக்க முகவர்கள், ட்ரம்பின் நிர்வாக உத்தரவுகளை எதிர்த்து வழக்குத் தொடர்ந்த கார்னெல் பல்கலைக்கழக மாணவர் மொமோடூ தாலை கைது செய்ய முயன்றனர்.
கடந்த திங்களன்று இரவு, கலீலைக் கடத்த பயன்படுத்தப்பட்ட அதே மோசடி காரணங்களைப் பயன்படுத்தி, முகமூடி அணிந்த மத்திய கூட்டாட்சி அரசு முகவர்கள் ஜோர்ஜ் டவுன் பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர் பதர் கான் சூரியை அவரது வீட்டிற்கு வெளியே வைத்து கைது செய்தனர்,
ஜனாதிபதி பதவி என்பது சர்வாதிகாரத்தின் கட்டுப்பாட்டு மையமாகவும், திட்டமிடல் கூடாரமாகவும் மாறியுள்ளது. ஒரு அமெரிக்க ஜனாதிபதியின் இத்தகைய நடவடிக்கைகளுக்கு வரலாற்று முன்னுதாரணம் எதுவும் இல்லை. அல்லது, இன்னும் சரியாகச் சொல்வதானால், ஒரேயொரு முன்னுதாரணம்தான் உள்ளது. அது, ட்ரம்பின் முதல் பதவிக்காலத்தின் இறுதி வாரங்களில், ஒரு பாசிச சதி மூலம் தேர்தலை கவிழ்க்க முயன்றதில் இருந்து தொடங்குகிறது. ஜனவரி 6, 2021 அன்று ட்ரம்ப் சாதிக்கத் தவறியதை, அவர் இப்போது செய்து கொண்டிருக்கிறார்.
ட்ரம்பின் நடவடிக்கைகளின் முக்கியத்துவம் குறித்து பல சட்டப் பேராசிரியர்களின் கருத்துக்களை மேற்கோளிட்டு, புதனன்று, நியூ யோர்க் டைம்ஸ் “நாடுகடத்தல் விவகாரத்தில் மீறலும் அச்சுறுத்தல்களும் அரசியலமைப்பு நெருக்கடி குறித்த அச்சத்தைப் புதுப்பிக்கின்றன,” என்ற தலைப்பின் கீழ் ஒரு அசாதாரண கட்டுரையை வெளியிட்டது. கொலம்பியா பல்கலைக்கழக சட்டப் பேராசிரியரான ஜமால் கிரீன் இதனை மேற்கோள் காட்டுகிறார்:
நீதித்துறை மறுஆய்வு அல்லது உரிய நடைமுறை இல்லாமல் நிர்வாகம் தடுத்து வைக்க முடியும் என்று கூறி, யாராவது தடுத்து வைக்கப்பட்டாலோ அல்லது நாடு கடத்தப்பட்டாலோ, ஜனாதிபதி சர்வாதிகார அதிகாரத்தை ஏற்றுக்கொள்கிறார் என்பதை குறிக்கிறது. மேலும் “அரசியலமைப்பு நெருக்கடி” என்ற கருத்து, சூழ்நிலையின் தீவிரத்தை பிரதிபலிக்கவில்லை. [வலியுறுத்தல் சேர்க்கப்பட்டது.]
ஸ்டான்போர்ட் சட்ட பேராசிரியர் பமீலா கார்லன், “இந்த நிர்வாகத்தின் பிரச்சினை வெறுமனே நீதிபதி போஸ்பேர்க் மற்றும் வெனிசுவேலா நாட்டவர்கள் மீதான நாடுகடத்தல் விவகாரத்தில் நடப்பது போன்ற கடுமையான அத்தியாயங்கள் மட்டுமல்ல. இது, அரசியலமைப்பு விதிமுறைகள் மற்றும் அரசாங்கத்தின் பிற பிரிவுகளுக்கு ஒரு நீண்டகால அவமரியாதையாகும்” என்று எச்சரித்தார். மேலும் கார்லன், “ஒரு திருப்புமுனை என்பது திடீரென்று சரியாகாத வரை விஷயங்கள் நன்றாக இருக்கும் ஒரு உலகத்தைக் குறிக்கிறது. ஆனால், நாம் ஏற்கனவே முதல் புள்ளியைக் கடந்துவிட்டோம்” என்று கூறினார்.
இந்த “திருப்புமுனை” ஒரு பொருத்தமற்ற உருவகம் என்று கார்லன் சொல்வது சரிதான். ஒன்று ஜனநாயக உரிமைகள் முற்றிலுமாக வீழ்ச்சியடைவதை அதிகம் கையாள்வது. ஆனால், ட்ரம்ப் நிர்வாகம் வெறுமனே “அரசியலமைப்பு விதிமுறைகளை அவமதிக்கும்” வகையில் செயல்படவில்லை. இது அவற்றை அழிக்க, வேண்டுமென்றே செய்யப்பட்ட குற்றவியல் சதியாகும்.
“சரியான கேள்வி, நெருக்கடி இருக்கிறதா இல்லையா என்பது அல்ல, மாறாக அது எவ்வளவு சேதத்தை ஏற்படுத்தும் என்பதுதான்,” என்று குறிப்பிட்டு, டைம்ஸ் அதன் சொந்த வருணனையையும் சேர்த்துக் கூறுகிறது. சரி, அந்த பதிலைக் கொடுக்க முடியும். ட்ரம்பின் நடவடிக்கைகளின் தர்க்கம் அரசியல் எதிர்ப்பை சட்டவிரோதமாக்குவதாகும். தொழிலாளர்களின் உரிமைகள் பறிக்கப்படும். வெள்ளை மாளிகையின் கொள்கைகளை எதிர்ப்பவர்கள் துன்புறுத்தலுக்கு உட்படுத்தப்படுவர், கைது செய்யப்படுவர் அல்லது அதைவிட மோசமான நிலைக்கு உட்படுத்தப்படுவர்.
டைம்ஸிலோ அல்லது செய்தி ஊடகம் முழுவதிலும் அமெரிக்கா எப்படி இந்த நிலைக்கு வந்தது என்பது பற்றி எந்த தீவிர பகுப்பாய்வும் இல்லை. ஊடகங்களும் அரசியல் ஸ்தாபகமும் ட்ரம்பின் நடவடிக்கைகளை ஏதோ எங்கிருந்தோ திடீரென வெடித்ததைப் போல, ஒரு தனிநபரின் பிரமைகள் அல்லது வன்மத்தின் விளைபொருளைப் போல சித்தரிக்கின்றன. இது தவறானது.
2000ம் ஆண்டுத் தேர்தல்கள் திருடப்பட்டு கால் நூற்றாண்டுக்கும் மேலாகிவிட்டது, அந்த சமயத்தில் உச்ச நீதிமன்றம் தலையிட்டு வாக்கு எண்ணிக்கையை நிறுத்தி ஜனாதிபதி பதவியை ஜோர்ஜ் டபுள்யூ புஷ்ஷிடம் ஒப்படைத்தது. நீதிமன்ற தீர்ப்புக்கு முன்னதாகவே, உலக சோசலிச வலைத் தளம், இந்த முடிவு “அமெரிக்க ஆளும் வர்க்கம் பாரம்பரிய முதலாளித்துவ-ஜனநாயக மற்றும் அரசியலமைப்பு விதிமுறைகளுடன் முறித்துக் கொள்வதில் எந்தளவுக்கும் செல்ல தயாராக இருக்கும்” என்பதை வெளிப்படுத்தும் என்று எழுதியது.
புஷ் எதிர் அல்கோர் வழக்கில் தலைமை நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பும், ஜனநாயகக் கட்சியிடம் இருந்து எந்த எதிர்ப்பும் இல்லாத நிலையும், ஜனநாயக உரிமைகளை பாதுகாப்பதற்கு பெருநிறுவன மற்றும் அரசியல் ஸ்தாபனத்திற்குள் எந்த குறிப்பிடத்தக்க பிரிவினரும் இல்லை என்பதை ஸ்தாபித்துள்ளது.
திருடப்பட்ட 2000ம் ஆண்டு தேர்தலின் ஒரு வருடத்திற்குள், புஷ் நிர்வாகம் 9/11 தாக்குதல்களை “பயங்கரவாதத்திற்கு எதிரான போரை” தொடக்குவதற்கு ஒரு சாக்குபோக்காக பயன்படுத்தியது — அத்துடன் உள்நாட்டில் ஜனநாயக உரிமைகள் சிதைக்கப்படுவதுடன் சேர்ந்து, குவாண்டநாமோ வளைகுடாவை மையமாகக் கொண்ட சித்திரவதை முகாம்களின் உலகளாவிய வலையமைப்பை ஸ்தாபித்தது. விசாரணையின்றி அமெரிக்க குடிமக்களை படுகொலை செய்யும் அதிகாரம் இருப்பதாக கூறிய ஒபாமாவின் கீழ் இந்த சர்வாதிகார நடவடிக்கைகள் மேலும் ஆழப்படுத்தப்பட்டன.
ட்ரம்பின் முதல் பதவிக்காலம் அமெரிக்க ஜனநாயகத்தின் நெருக்கடியை ஒரு புதிய கட்டத்திற்கு கொண்டு வந்தது. ஜனவரி 6, 2021 அன்று அவரது தேர்தல் தோல்வியை முறியடிக்கும் நோக்கில் பாசிச ஆட்சிக் கவிழ்ப்பு முயற்சியில் உச்சக்கட்டத்தை அடைந்தது. பைடென் நிர்வாகத்தின் நான்காண்டுகள், ரஷ்யாவுக்கு எதிரான அமெரிக்க-நேட்டோ போர் மற்றும் காஸா இனப்படுகொலை உட்பட ஏகாதிபத்திய வன்முறையின் ஒரு பாரிய விரிவாக்கத்தால் குறிக்கப்பட்டன — இந்த பிரம்மாண்டமான குற்றத்தை ட்ரம்ப் இப்போது உள்நாட்டு எதிர்ப்பின் மீதான அவரது ஒடுக்குமுறையை நியாயப்படுத்த சுரண்டிக் கொண்டிருக்கிறார்.
சர்வாதிகாரத்தை நோக்கிய ட்ரம்பின் நகர்வுகள், அளவு மாற்றம் பண்பு மாற்றமாக மாறுவதைக் குறிக்கின்றன. இது வெறும் அச்சுறுத்தலோ அல்லது போக்கோ அல்ல. மாறாக, ஒரு சர்வாதிகாரத்தை நிறுவுவதற்கான ஒரு உண்மையான சதித்திட்டத்தை அரசின் உயர் மட்டங்களில் செயல்படுத்துவதாகும்.
ஜனநாயக ஆட்சி வடிவங்களின் வீழ்ச்சிக்கு இரண்டு ஒன்றோடொன்று இணைக்கப்பட்ட செயல்முறைகள் அடித்தளமாக உள்ளன. முதலாவதாக, ஒரு சிறிய தன்னலக்குழு உயரடுக்கின் கரங்களில் பாரியளவில் செல்வவளம் குவிந்திருப்பது ஜனநாயகத்துடன் முற்றிலும் பொருத்தமற்றதாகும். இப்படி அதிகாரக் குவிப்பு தொழிலாள வர்க்கத்தின் சமூக உரிமைகள் மீது ஈவிரக்கமற்ற தாக்குதலுக்கு எரியூட்டுகிறது. இது பாரிய பணிநீக்கங்களுக்கும், ஒரே இரவில் ஆயிரக்கணக்கான வேலைகள் அழிக்கப்படுவதற்கும், மற்றும் அனைத்து சமூக வேலைத்திட்டங்கள் மீதும் ஒருங்கிணைந்த தாக்குதலுக்கும் இட்டுச் செல்கிறது.
ட்ரம்ப் நிர்வாகம், எலோன் மஸ்க்கின் “அரசாங்க செயல்திறன் துறை”யுடன் சேர்ந்து, முக்கிய சமூக சேவைகளை வழங்கும் அரசு நிறுவனங்களை அகற்றி வருகிறது. அதே நேரத்தில், சமூகப் பாதுகாப்பு, மருத்துவ உதவி மற்றும் பிற திட்டங்களில் வரலாறு காணாதளவுக்கு வெட்டுக்களைத் தயாரிக்கிறது. இந்த மாத தொடக்கத்தில் ஏற்கனவே பாதியாகக் குறைக்கப்பட்ட கல்வித் துறையை ஒழித்துக் கட்டுவதற்கான நிர்வாக உத்தரவில் ட்ரம்ப் இன்று கையெழுத்திடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இரண்டாவதாக, அமெரிக்க சமுதாயத்தை ஏகாதிபத்திய ஆக்கிரமிப்பின் தேவைகளுக்கு முற்றிலும் கீழ்ப்படுத்துவதற்காக ஜனநாயக உரிமைகள் தகர்க்கப்பட்டு வருகின்றன. உள்நாட்டு நெருக்கடி மற்றும் நீண்டகால பொருளாதார வீழ்ச்சிக்கு முகங்கொடுக்கும் ஆளும் வர்க்கம், அதன் உள்நாட்டு முரண்பாடுகளை பூகோள அளவிலான இராணுவ விரிவாக்கத்தின் மூலம் ஈடுகட்ட முயற்சிக்கிறது. கனடா, பனாமா மற்றும் கிரீன்லாந்து போன்ற பிராந்தியங்களை இணைத்துக்கொள்வதற்கான ட்ரம்பின் நோக்கம் குறித்த அறிவிப்புகள், உள்நாட்டு சர்வாதிகாரத்தை ஏகாதிபத்திய வெற்றியுடன் இணைத்த ஹிட்லரின் ஜேர்மனியின் பாசிச அபிலாஷைகளை எதிரொலிக்கின்றன.
சர்வாதிகாரத்தை நோக்கிய ட்ரம்பின் முனைவை நிறுத்த தொழிலாள வர்க்கம் உடனடியாக தலையீடு செய்ய வேண்டும்! இந்தப் போராட்டத்தை, ஜனநாயகக் கட்சிக்கு அடிபணிய விடுவது மிகப்பெரும் அரசியல் தவறாக இருக்கும். ட்ரம்ப் பதவியேற்றதற்குப் பிந்தைய இரண்டு மாதங்களில், ஜனநாயகக் கட்சி அவரது எதேச்சதிகார நடவடிக்கைகளை எதிர்க்கப்போவதில்லை என்பதை தெளிவுபடுத்தி உள்ளது.
ட்ரம்ப்பின் தேர்தல் வெற்றிக்குப் பின்னர் உடனடியாக, ஜனாதிபதி பைடென் ட்ரம்பை வெள்ளை மாளிகைக்கு அழைத்ததுடன், புதிய நிர்வாகத்தின் “வெற்றி” குறித்த நம்பிக்கையை பகிரங்கமாக வெளிப்படுத்தினார். பேர்ணி சாண்டர்ஸ் உட்பட முன்னணி ஜனநாயகக் கட்சியினர், ட்ரம்புடன் “வேலை செய்ய” அவர்களின் விருப்பத்தை உடனடியாக சூளுரைத்தனர். தேர்தல் பிரச்சாரத்தின் போது சுருக்கமாக மேலெழுந்த பாசிசம் குறித்த குறிப்புகள் முற்றிலுமாக மறைந்து போயின.
கடந்த வாரம், அன்னிய எதிரிகள் சட்டத்தை ட்ரம்ப் கையிலெடுப்பதற்கு வெறும் சில மணி நேரங்களுக்கு முன்னர், பில்லியனர் எலோன் மஸ்க் தலைமையிலான வெள்ளை மாளிகை மற்றும் அதன் அரசு செயல்திறன் துறையின் சட்டவிரோத மற்றும் அரசியலமைப்பிற்கு முரணான நடவடிக்கைகளுக்கு நேரடியாக வசதியளிக்கும் வகையில், செப்டம்பர் வரையில் ட்ரம்ப் நிர்வாகத்திற்கு முழுமையாக நிதியாதாரமளிக்கும் குடியரசுக் கட்சியின் ஒரு செலவின மசோதா நிறைவேற்றப்படுவதை உறுதிப்படுத்த செனட்டிலுள்ள ஜனநாயகக் கட்சியினர் தீர்மானகரமான வாக்குகளை வழங்கினர். உலக சோசலிச வலைத் தளம் எச்சரித்ததைப் போல, இந்த சட்ட மசோதா, ஜேர்மனியில் ஹிட்லரின் சர்வாதிகாரத்தை சட்டபூர்வமாக்கிய 1933 சட்டத்தை நேரடியாக முன்மாதிரியாகக் கொண்ட ஒரு வழிவகை சட்டத்திற்கு நிகரானதாகும்.
ஜனநாயகக் கட்சி, ட்ரம்புக்கு ஒரு வெற்றுக் காசோலையை வழங்கியுள்ளது. ஏனென்றால், அதன் தந்திரோபாய வேறுபாடுகள் என்னவாக இருந்தாலும், ஜனநாயகக் கட்சி ட்ரம்ப் பகிரங்கமாக முன்னெடுக்கும் நலன்களைக் கொண்ட அதே நிதியியல் தன்னலக்குழுவை பிரதிநிதித்துவம் செய்கின்றது.
இந்தப் போராட்டம் தொழிலாள வர்க்கத்திற்குள் கொண்டு செல்லப்பட வேண்டும். தொழிலாள வர்க்கம்தான் ஜனநாயக உரிமைகளைப் பாதுகாப்பதற்கான தளமாக உள்ளது. ஆனால், இந்த உரிமைகள் பாரிய வெகுஜனப் போராட்டத்தின் மூலம்தான் பாதுகாக்கப்பட முடியும். ட்ரம்பின் சர்வாதிகாரத்தை நோக்கிய உந்துதலுக்கு எதிரான போராட்டங்களும் ஆர்ப்பாட்டங்களும் ஏற்கனவே தொடங்கிவிட்டன. ஆனால், இவை விரிவுபடுத்தப்பட்டு ஒருங்கிணைக்கப்பட வேண்டும்.
வேலைநிறுத்தங்கள் மற்றும் ஆர்ப்பாட்டங்கள் உட்பட பாரிய எதிர்ப்பை அணிதிரட்ட தொழிற்சாலைகள், வேலையிடங்கள், பல்கலைக்கழக வளாகங்கள் மற்றும் அண்டைப்பகுதிகளில் சாமானிய தொழிலாளர் குழுக்களைக் கட்டியெழுப்புமாறு சோசலிச சமத்துவக் கட்சி தொழிலாளர்களுக்கும் இளைஞர்களுக்கும் அழைப்பு விடுக்கிறது.
வளர்ந்து வரும் இந்த இயக்கத்தை ஒரு சோசலிச வேலைத்திட்டம் மற்றும் முன்னோக்குடன் இணைக்க சோசலிச சமத்துவக் கட்சி போராடுகிறது. சர்வாதிகாரத்திற்கு எதிரான போராட்டம் என்பது நிதிய தன்னலக்குழு மற்றும் முதலாளித்துவத்திற்கு எதிரான போராட்டத்தில் இருந்து பிரிக்க முடியாததாகும். இந்த தன்னலக்குழுவின் செல்வம் பறிமுதல் செய்யப்பட்டு, அமெரிக்காவிலும் சர்வதேச அளவிலும் சமூகத் தேவை மற்றும் சமத்துவத்தின் அடிப்படையில் சமூகம் மறுஒழுங்கமைக்கப்பட வேண்டும்.
இந்த முன்னோக்குடன் உடன்படும் அனைவரையும் இந்தப் போராட்டத்தை முன்னெடுக்குமாறும் சோசலிச சமத்துவக் கட்சியில் இணையுமாறும் நாங்கள் அழைப்பு விடுக்கின்றோம்.