இந்த மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கு காணலாம்.
ஸ்ராலினிச இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) அல்லது சிபிஎம் தலைமையிலான மாநில அரசாங்கம், தங்களுக்கு வாழ்க்கைக்கு ஏற்ற ஊதியம் மற்றும் ஓய்வு பெற்றவுடன் அடிப்படை ஓய்வூதியம் வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்துவதற்காக கேரளாவில் சுமார் 26,000 கிராமப்புற பொது சுகாதார ஊழியர்கள் பெப்ரவரி 9 முதல் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர்.
பிரபலமாக ASHA (Accredited Social Health Activist) தொழிலாளர்கள் என்று அழைக்கப்படும் இந்த தொழிலாளர்கள், மருத்துவர்கள் மற்றும் மருத்துவமனைகள் இல்லாத மற்றும் இதர சுகாதார வசதிகள் இல்லாத கிராமப்புற பகுதிகளில், முன்னின்று சுகாதார சேவைகளை செய்கின்றனர்.
நாடு முழுவதும் மில்லியன் கணக்கான ASHA தொழிலாளர்களில் அருதி பெரும்பான்மையானோர் மகளிரே ஆவர். தடுப்பூசி வழங்குதல், ஊட்டச்சத்து மற்றும் குடும்பக் கட்டுப்பாடு பற்றிய ஆலோசனைகளை வழங்குதல் மற்றும் கர்ப்பிணிகளை கண்காணிப்பதில் உதவுதல் உட்பட இன்றியமையாத செயல்பாடுகளைச் செய்தாலும், அனைவருக்கும் ஆகவும் வறிய ஊதியமே வழங்கப்படுகிறது. சுகாதார வசதிகள் மற்றும் பணியாளர்கள் இல்லாததால், அவர்கள் பெரும்பாலும் ஆரம்ப மருத்துவ நோயறிதல்களை மேற்கொள்ள நிர்ப்பந்திக்கப்பட்டுள்ளனர்.
ஆஷா தொழிலாளர்கள் இந்திய அதிகாரிகளால் மோசமாக நடத்தப்பட்டாலும், பெரிய சுகாதார நெருக்கடிகளை எதிர்த்துப் போராடுவதில், எல்லாவற்றுக்கும் மேலாக கோவிட்-19 தொற்றுநோய் மட்டுமன்றி நிபா வைரஸ் மற்றும் டெங்கு பரவல் காலத்திலும், கேரளாவின் வயநாடு மாவட்டத்தில் கடந்த ஆண்டு நடந்த நிலச்சரிவு போன்ற பேரழிவுகளின் போதும் அவர்களின் வகிபாகம் காரணமாக, சில சமயங்களில் ஊடகங்கள் மற்றும் அரசாங்க அதிகாரிகளால் அவர்கள் “முன்னணி வீரர்கள்” என்று பாராட்டப்பட்டனர்.
முன்னணி கலைஞர்கள் மற்றும் அறிவுஜீவிகளுடன் சேர்ந்து தொழிலாளர்களும் ஆதரவு குரல் எழுப்பியுள்ள நிலையில், கேரள ஆஷா தொழிலாளர்களின் வேலைநிறுத்தம் பரவலான ஆதரவை வென்றுள்ளது.
இதற்கிடையில், அவதூறு சுமத்தி பிரதிபலித்துள்ள சிபிஎம் தலைமையிலான மாநில அரசாங்கம், இப்போது வேலைநிறுத்தத்தை முறியடிக்கும் முயற்சியில் 1,500 “பயிலுனர்” சுகாதாரப் பணியாளர்களை வேலைக்கு அமர்த்துவதாக அச்சுறுத்துகிறது.
தற்போது, கேரள ஆஷா தொழிலாளர்கள் மாதாந்திர உதவித்தொகையாக வெறும் 7,000 ரூபாயும் (US$80) மேலும் 3,000 ரூபாய் கொடுப்பனவுகளையும் பெறுகின்றனர். இது ஒரு வேலை நாளுக்கு சுமார் 420 ரூபாய் அல்லது 4.80 டொலர் இழப்பீட்டுக்கு சமம் ஆகும் என எல்லோரும் கூறுகின்றனர்.
மாத ஊதியம் 21,000 ரூபாய், நிரந்தர வேலைவாய்ப்பு மற்றும் ஓய்வூதிய இழப்பீடு 500,000 ரூபாய் வேண்டும் என்பன வேலைநிறுத்தம் செய்யும் தொழிலாளர்களின் முதன்மைக் கோரிக்கைகள் ஆகும். உணவு, எரிசக்தி மற்றும் பிற அத்தியாவசியப் பொருட்களுக்கான விலைகள் அதிகரித்திருந்தாலும், சமீபத்திய ஆண்டுகளில் அவர்களின் சம்பளம் அதிகரிக்கப்படவில்லை.
இந்த வேலைநிறுத்தத்திற்கு “சுயாதீன” தொழிற்சங்கம் எனக் கூறிக்கொள்ளும் கேரள சுகாதார தொழிலாளர்கள் சங்கம் (KHWA) தலைமை தாங்குகிறது. மாநில சட்டமன்றத்தில் உத்தியோகபூர்வ எதிர்க்கட்சியான காங்கிரஸ் கட்சி மற்றும் கேரளாவின் சிபிஎம் தலைமையிலான இடது ஜனநாயக முன்னணி அரசாங்கத்தின் கணிஷ்ட பங்காளியாக இருக்கும் ஸ்ராலினிச இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (சிபிஐ) ஆகிய இரண்டின் ஆதரவையும், ஆலோசனையையும் தொழிற்சங்கம் பெற்றுள்ளது என்பதில் சந்தேகமில்லை.
வேலைநிறுத்தத்தின் ஆதரவாளர்களாகக் காட்டிக்கொள்வதன் மூலம், காங்கிரஸும் சிபிஐயும் சிபிஎம் செலவில் அரசியல் மூலதனத்தை உருவாக்க முயற்சிக்கின்ற அதே நேரம், ஆஷா தொழிலாளர்களின் போராட்டம் KHWA இன் கட்டுப்பாட்டின் கீழும் ஸ்தாபன அரசியலின் எல்லைக்குள்ளும் மற்றும் சிபிஎம் மிகவும் நியாயமானதாக இருக்க வேண்டும் என பரிதாபகரமாக வேண்டுகோள் விடுப்பதற்கு மட்டுப்பட்டு இருப்பதையும் உறுதிப்படுத்த வேலை செய்கின்றன.
இந்தியாவின் 28 மாநிலங்களில், கேரளா மட்டுமே தற்போது “இடது” என்று சொல்லிக்கொள்கின்ற சிபிஎம் தலைமையிலான அரசாங்கத்தைக் கொண்டுள்ளது. சிபிஎம் லாபத்தை விட மக்களுக்கு முன்னுரிமை அளிப்பதாகக் கூறினாலும், அதுவும் சிபிஐயும் பல தசாப்தங்களாக இந்திய அரசியல் ஸ்தாபனத்தின் ஒருங்கிணைந்த பகுதியாக செயல்பட்டு வருகின்றன. கேரளா, மேற்கு வங்கம், திரிபுரா ஆகிய அவை பதவி வகித்த மாநிலங்களில், “முதலீட்டாளர்-சார்பு” கொள்கைகள் என்று அவையே அழைத்துக் கொண்ட கொள்கையையே அமுல்படுத்தியுள்ளன. தேசிய அளவில், கடந்த மூன்று தசாப்தங்களாக, தீவிர வலதுசாரி இந்து பாஜகயை எதிர்ப்பது என்ற பெயரில், முதலாளித்துவத்தின் நவ-தாராளவாத திட்ட நிரலை திணித்து, அமெரிக்க ஏகாதிபத்தியத்துடன் ஒரு மூலோபாய கூட்டாண்மையை உருவாக்கிய வலதுசாரி அரசாங்கங்களின் வெற்றிக்கே அவை தொடர்ச்சியாக ஆதரவளித்து வந்துள்ளன.
சிபிஎம் சார்ந்துள்ள இந்திய தொழிற்சங்கங்களின் மையம் (CITU), சிபிஎம் ஆகியவற்றின் தலைவர்கள், வேலைநிறுத்தம் செய்யும் ASHA தொழிலாளர்களை கடுமையாகக் கண்டித்துள்ளனர். தொழிலாளர்களை அராஜகவாதிகள் என்றும், தொழிலாளர்கள் மத்தியில் “வேலைநிறுத்த தொற்றைப்” பரப்புவதற்கு முயல்வதாகவும் அவை குற்றம் சாட்டியுள்ளன.
வேலைநிறுத்தக்காரர்களை தனிமைப்படுத்தி, புருவம் அடிக்க முற்படும் கேரள சுகாதார அமைச்சரும், சிபிஎம் தலைவருமான வீணா ஜார்ஜ், கேரளாவின் ஆஷா தொழிலாளர்கள் நாட்டில் அதிக ஊதியம் பெறுபவர்கள் என்று வலியுறுத்தி, அவர்களை வறுமையில் வைத்திருக்கும் மாதாந்திர உதவித்தொகையில் அவர்கள் திருப்தி அடைய வேண்டும் என்பதை அர்த்தப்படுத்தியுள்ளார்.
ASHA தொழிலாளர் போராட்டத்தை இழிவுபடுத்தும் முயற்சியில் இந்து மேலாதிக்க பாஜக உட்பட எதிர்க்கட்சிகள் வேலைநிறுத்தத்திற்கு ஆதரவாக கூறிய போலி கருத்துக்களையும் சிபிஎம் ஸ்ராலினிஸ்டுகள் பயன்படுத்திக்கொள்கின்றனர். இந்தியாவின் ஒரே “இடது” அரசாங்கத்தை சீர்குலைக்க எதிர்க்கட்சி நடத்தும் சதி என்று அவர்கள் வேலைநிறுத்தத்தை கொச்சைப்படுத்துகிறார்கள்.
இவை வெளிப்படையான பொய்கள் ஆகும்.
அவர்களின் போர்க்குணமிக்க போராட்டம் தொழிலாள வர்க்கத்தின் பரந்த இயக்கத்திற்கு ஒரு ஊக்கியாக மாறும் என்று அது பீதியடைந்துள்ளதாலேயே ஸ்ராலினிச சிபிஎம், ஆஷா தொழிலாளர்களை தாக்குகிறது. இத்தகைய இயக்கம், கேரளாவை மலிவுத் தொழிலாளர் உற்பத்திக்கான புகலிடமாக ஊக்குவிப்பதன் மூலம் பூகோள முதலீட்டாளர்களை கவர்வதற்கு கேரள முதலமைச்சரும் சிபிஎம் அரசியல் குழு உறுப்பினருமான பினராயி விஜயன் மேற்கொள்ளும் முயற்சிகளுக்கு குழிபறிக்கும்.
பெப்ரவரி பிற்பகுதியில், விஜயன் “கேரளவில் முதலீடு செய்யும் பூகோள மாநாட்டை” இரண்டு நாள் நடத்தினர். இது 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பிரதிநிதிகளை ஈர்த்ததுடன் 374 வெளிநாட்டு மற்றும் உள்நாட்டு நிறுவனங்களிடமிருந்து 1.5 டிரில்லியன் ரூபாய் ($17.2 பில்லியன்) முதலீட்டு உறுதிமொழிகளைப் பெற்றதாகக் கூறப்படுகிறது. இந்த உச்சிமாநாட்டிற்கு முன்னும் பின்னும் இடது ஜனநாயக முன்னணி அரசாங்கம், “எளிதாக வணிகம் செய்வதை” மேம்படுத்துவதாக உறுதியளித்தது. இது சுற்றுச்சூழல் மற்றும் பிற விதிமுறைகளை அகற்றுவதற்கான சமிக்ஞை ஆகும். விஜயன், கிராமங்களுக்கும் குறைந்த வருமானம் பெறும் நகரவாசிகளுக்கும் ஒப்பீட்டளவில் குறைந்த விலையில் நகருக்குள் பஸ் போக்குவரத்தை வழங்கும், கேரள மாநில சாலைப் போக்குவரத்துக் கழகம் (KSRTC) உட்பட, அரசுக்குச் சொந்தமான நிறுவனங்களுக்கு “பொது-தனியார் கூட்டாண்மை” (PPP) மாதிரியை ஏற்றுக்கொண்டு, பொதுச் சொத்துக்களை விற்க முயல்கிறார்.
தங்கள் போராட்டத்தில் வெற்றிபெற வேண்டுமானால், ஆஷா தொழிலாளர்கள் போராட்டத்தை தங்கள் கைகளில் எடுத்துக் கொள்வதோடு ஸ்தாபனத்துடன் இணைந்த KHWA தொழிற்சங்க அதிகாரிகளின் பிடியில் இருந்து விடுபட வேண்டும். பொதுச் சேவைகளை அகற்றுதல் மற்றும் தனியார்மயமாக்குதல், ஒப்பந்தத் தொழிலாளர்களின் பெருக்கம் மற்றும் சமூக நலன்புரியை வெட்டிக் குறைத்தல் ஆகியவற்றுக்கு எதிராக தொழிலாள வர்க்கத்தை அணிதிரட்டுவதற்கான முன்னோடியாக தங்கள் போராட்டத்தை உருவாக்கப் போராடுவதன் மூலம் அவர்கள் அதை அவசரமாக விரிவுபடுத்த வேண்டும்.
தொழிலாளர்கள், கிராமப்புற ஏழைகள் மற்றும் விருது பெற்ற நாவலாசிரியர் அருந்ததி ராய், நடிகை கனி கஷ்ருதி, மலையாள எழுத்தாளர் பி. கீதா போன்றோரின் ஆதரவு செய்திகளில் சுட்டிக்காட்டப்பட்டது போல் நடுத்தர வர்க்கத்தின் பிரிவினரிடையேயும் வேலைநிறுத்தத்திற்கு வலுவான ஆதரவைத் திரட்டுவதை KHWA தலைமை கடுமையாக எதிர்க்கிறது
மற்ற மாநிலங்களில் உள்ள ஆஷா தொழிலாளர்களுக்கு வேலைநிறுத்தத்தை விரிவுபடுத்தவோ அல்லது பொது சுகாதாரத்தின் மோசமான நிலைக்கு எதிராக ஒரு பரந்த தொழிலாள வர்க்க சவாலுடன் இணைக்கவோ KHWA எந்த முயற்சியும் எடுக்கவில்லை. பல தசாப்தங்களாக, காங்கிரஸ் கட்சி மற்றும் பாஜக தலைமையிலான தேசிய அரசாங்கங்களின் கீழ், இந்திய அரசு அனைத்து மட்டங்களிலும் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 2 சதவீதத்திற்கு மேல் சுகாதார பராமரிப்புக்கு செலவிட்டதில்லை. இந்த இரண்டு வீதமானது பொதுவாக அது அதன் பாரிய அணு ஆயுத இராணுவத்திற்கு ஒதுக்குவதை விட குறைவானதாகும்.
சர்வதேச மகளிர் தினமான மார்ச் 8 அன்று, கேரளாவின் தலைநகரான திருவனந்தபுரத்தில் உள்ள மாநில அரசு செயலகத்திற்கு வெளியே தொழிற்சங்கம் ஒரு அடையாள போராட்டத்தை ஏற்பாடு செய்தது. வேலைநிறுத்தத்தின் 36 வது நாளைக் குறிக்கும் மார்ச் 17 திங்கட்கிழமை அதே இடத்தில் ஒரு பெரிய போராட்டத்திற்கு KHWA இப்போது அழைப்பு விடுத்துள்ளது. எவ்வாறெனினும், அதன் நோக்கம் பரந்த தொழிலாள வர்க்க ஆதரவைத் திரட்டுவது அல்ல, மாறாக பெருகிய முறையில் அமைதியின்றி இருக்கும் உறுப்பினர்களின் மீது கட்டுப்பாட்டைப் பேணுவதாகும்.
வேலைநிறுத்தம் செய்யும் ஆஷா தொழிலாளர்கள் KHWA தொழிற்சங்க எந்திரம், அதன் காங்கிரஸ் கட்சி மற்றும் ஸ்ராலினிச சிபிஐ கூட்டாளிகள் மற்றும் போட்டி முதலாளித்துவக் கட்சிகளினதும் அனைத்து பிரதிநிதிகள் மற்றும் அவர்களது தொழிற்சங்கப் முகவர்களிடம் இருந்தும் சுயாதீனமான தொழிலாளர் நடவடிக்கை குழுக்களை உருவாக்க வேண்டும்.
முழு முதலாளித்துவ அரசியல் ஸ்தாபனத்திலிருந்தும் விடுபட்டு, அதன் பல்வேறு பிற்போக்கு தேசியவாத, வகுப்புவாத மற்றும் இன-பிராந்தியவாத வேண்டுகோள்களை உணர்வுபூர்வமாக நிராகரித்தால் மட்டுமே, தொழிலாளர்கள் தங்கள் வர்க்க நலன்களை உறுதிப்படுத்தவும், தங்கள் சமூக அதிகாரத்தை அணிதிரட்டவும் முடியும்.
கேரளாவில் சிபிஎம் மற்றும் காங்கிரஸ் கட்சியும் ஒருவருக்கொருவர் குற்றச்சாட்டுகளை சுமத்திக்கொண்டாலும், நரேந்திர மோடி தலைமையிலான பாஜக அரசுக்கு எதிராக பெருகிவரும் சமூக கோபத்தை, எதிர்க்கட்சியான இந்தியா கூட்டணியுடன் கட்டிப்போட தேசிய அரங்கில் இணைந்து பணியாற்றி வருகின்றனர். காங்கிரஸ் கட்சியின் தலைமையில் மற்றும் பாசிச சிவசேனாவின் ஒரு பிரிவு உட்பட, இந்தியா கூட்டணியானது தற்போதைய அரசாங்கத்தை பதிலீடு செய்வதை இலக்காகக் கொண்டுள்ளது. அத்தகைய அரசாங்கம், நடப்பு பாஜக அரசாங்கத்தைப் போலவே, பெருவணிகக் கொள்கைகள் மற்றும் இந்தியா-அமெரிக்க சீனா-விரோத “உலகளாவிய மூலோபாய கூட்டாண்மை ஆகியவற்றுக்கான அர்ப்பணிப்பில் எந்தக் குறைவும் கொண்டிருக்காது.
ASHA தொழிலாளர்கள் நடவடிக்கை குழுவின் முக்கியமான பணி, போராட்டத்தை விரிவுபடுத்துவதும், தொழிலாளர்களிடம் இருந்து ஆதரவைப் பெறுவதும் கேரளா மற்றும் இந்தியா முழுவதும் பொது மற்றும் தனியார் துறையை உள்ளடக்கிய தொழிலாள வர்க்க எதிர்த் தாக்குதலை மேம்படுத்துவதும் ஆகும். நிரந்தர தொழில்கள் மற்றும் 21,000 ரூபாய் குறைந்தபட்ச மாத ஊதியம் உட்பட அனைவருக்கும் பொது நிபந்தனைகளுடனான தொழில் மற்றும் அம்பானிகள், அதானிகள் மற்றும் ஏனைய பில்லியனர்களதும் முறைகேடாக சேர்க்கப்பட்ட சொத்துக்களை கைப்பற்றுவதன் ஊடாக சுகாதார பராமரிப்புக்கான அரச நிதியை பரந்தளவில் விரிவாக்கும் ஒரு கூட்டுப் போராட்டத்தை நடத்துவதற்கு இந்தியா முழுவதும் ASHA தொழிலாளர்களுக்கு நேரடி அறைகூவல் விடுப்பதும் இதில் அடங்க வேண்டும். தொழிலாளர் நடவடிக்கை குழுக்களின் சர்வதேச கூட்டணியின் (IWA-RFC) ஊடாக உலகெங்கிலும் உள்ள சுகாதாரப் பராமரிப்புத் தொழிலாளர்கள் மற்றும் பிற தொழிலாளர்களுடன் போராட்ட உறவுகளை உருவாக்குவதும் இதில் உள்ளடக்கப்பட வேண்டும்.