மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம்.
ஐரோப்பிய நாடாளுமன்ற நிதியை மோசடி செய்ததற்காக தேசிய பேரணியின் (RN) கட்சியின் தலைவர் மரின் லு பென் மற்றும் கட்சியின் சுமார் இருபது செல்வாக்கு மிக்க உறுப்பினர்களை பிரெஞ்சு நீதிமன்றம் கடந்த செவ்வாயன்று குற்றவாளிகள் என்று தீர்ப்பளித்தது. நீதிமன்றம் வழக்கத்திற்கு மாறாக கடுமையான தண்டனைகளை விதித்தது. இதில் பகுதியளவு இடைநிறுத்தப்பட்ட நான்கு ஆண்டு சிறைத்தண்டனை மற்றும் லு பென்னுக்கு பதவிக்கு போட்டியிட ஐந்து ஆண்டுகள் தடை ஆகியவை அடங்கும். 2027 ஜனாதிபதித் தேர்தல்களில் ஒரு முன்னணி போட்டியாளரான லு பென், உடனடியாக நடைமுறைக்கு வரவிருக்கும் தேர்தல் தடை மற்றும் சிறைத் தண்டனை இரண்டிற்கும் மேல்முறையீடு செய்ய சூளுரைத்துள்ளார்.
இரண்டாம் உலகப் போரில் நாசிசத்துடனான பிரெஞ்சு ஒத்துழைப்பில் இருந்து பிறந்த முற்றிலும் பிற்போக்குத்தனமான கட்சியாக RN இருந்தாலும், இந்த தீர்ப்பு திவாலானது மற்றும் எந்த ஆதரவிற்கும் தகுதியற்றது. நீதிமன்றம் விதித்த தடைகளை ஆதரிப்பதன் மூலம் தொழிலாளர்கள் பாசிசம், இராணுவவாதம் மற்றும் பொலிஸ்-அரசு ஆட்சியை தடுத்து நிறுத்த முடியாது. தொழிலாள வர்க்கத்தை போராட்டத்திற்கு அணிதிரட்டுவதன் மூலம் மட்டுமே அதிதீவிர வலதுசாரிகளை அரசியல் ரீதியாக எதிர்த்துப் போராட முடியும்.
அதிதீவிர வலதுசாரிகளுக்கு எதிரான முதலாளித்துவ அரசின் தடைகள் இடதுசாரிகள் மற்றும் தொழிலாள வர்க்கத்தின் மீது இன்னும் கடுமையான அரசு தாக்குதல்களுக்கு களம் அமைத்துள்ளன என்பதை கசப்பான வரலாற்று அனுபவம் —எல்லாவற்றிற்கும் மேலாக, 1933 இல் ஹிட்லர் ஆட்சிக்கு வருவதற்கு முன்பு ஜேர்மன் அரசு நாஜி கட்சிக்கு எதிராக எடுத்த நடவடிக்கைகள் மூலம்— எடுத்துக்காட்டுகிறது.
தொழிலாளர்களின் தலைகளுக்கு மேலாக, தேசிய பேரணி கட்சியின் தலைவிதியை தீர்மானிக்க புறப்படுவதன் மூலம், நீதிமன்றங்கள் அதை பலப்படுத்துகின்றன. ஏகாதிபத்திய போரையும் பொலிஸ்-அரசு ஒடுக்குமுறையையும் ஆதரிக்கும் நவ-பாசிசவாதிகளை தொழிலாள வர்க்கத்தின் எதிரிகளாக அவை அம்பலப்படுத்தவில்லை. மாறாக, அரசு இயந்திரத்தால் வழக்கத்திற்கு மாறாக கடுமையான தண்டனைக்கு அதை இலக்காகி, பிரான்சின் மிகவும் செல்வாக்கற்ற ஜனாதிபதி இம்மானுவேல் மக்ரோனால் மேற்பார்வையிடப்படும் ஒரு ஆட்சிக்கு எதிராக அதன் வாக்காளர்களைப் பாதுகாக்கும் நோக்கத்துடன், பாதிக்கப்பட்ட கட்சியாக RN காட்டிக் கொள்ள அவை அனுமதிக்கின்றன.
ஒரு சட்ட நிலைப்பாட்டில் இருந்து பார்த்தால், குற்றச்சாட்டுக்கு உள்ளான தேசிய பேரணிக் கட்சி குற்றவாளி என்பதில் சிறிதும் சந்தேகம் இல்லை. நாடாளுமன்ற உதவியாளர்கள், நாடாளுமன்ற பிரச்சினைகளில் மட்டுமே வேலை செய்ய வேண்டும், அவர்களின் கட்சிக்காக அல்ல என்று ஐரோப்பிய ஒன்றியம் கண்டிப்பான நிபந்தனைகளைக் கொண்டிருந்தாலும், லு பென் தேசிய பேரணியின் கடன்களைத் திருப்பிச் செலுத்துவதற்கு நாடாளுமன்ற உதவியாளர்களின் சம்பளங்களைப் பயன்படுத்த முயன்றார். இதனால் தேசிய பேரணி பெரும்பாலும் வங்கி நிதியிலிருந்து துண்டிக்கப்பட்டது. ஐரோப்பிய ஒன்றிய நிதிகளில் சுமார் 2.9 மில்லியன் யூரோ இந்த விடயத்தில் சம்பந்தப்பட்டதாக கூறப்படுகிறது. இது, லு பென்னை வழக்கு விசாரணைக்கு உட்படுத்தும் என்று 2010 களில் தேசிய பேரணி கட்சியின் அதிகாரிகள் அவரை எச்சரித்திருந்தனர்.
2014 ஆம் ஆண்டில், கட்சியின் பொருளாளர் வாலராண்ட் டி செயிண்ட்-ஜஸ்ட், மரின் லு பென்னுக்கு ஒரு மின்னஞ்சல் அனுப்பினார். அதில் அவர், “ஐரோப்பிய பாராளுமன்றத்திற்கு நன்றி செலுத்துவதன் மூலமும், நாம் முக்கியமான சேமிப்புகளைச் செய்தால் மட்டுமே இந்தப் துளையிலிருந்து வெளியேற முடியும்” என்றும் கூறினார். ஐரோப்பிய ஒன்றிய நாடாளுமன்றத்தின் அதிவலதுசாரி அங்கத்தவரான ஜோன்-லூக் ஷாஃப்ஹௌசரை எச்சரித்த அவர், “மரீன் நம்மைக் கேட்பது கற்பனையான வேலைகளுக்கு கையெழுத்திடுவதற்கு ஒப்பானதாகும். … மரின் ஏன் இதைச் செய்கிறார் என்பது எனக்குப் புரிகிறது. ஆகவே, அதற்காக நாங்கள் சுட்டுக் கொல்லப்படப் போகிறோம்” என்று குறிப்பிட்டார்.
எவ்வாறிருப்பினும், இதேபோன்ற “கற்பனையான வேலைகளை” ஒழுங்கமைத்ததாக குற்றம் சாட்டப்பட்ட ஏனைய கட்சிகளுடன் ஒப்பிடுகையில், RN-க்கு விதிக்கப்பட்ட கடுமையான தண்டனைகளுக்கு இடையே ஒரு கூர்மையான வேறுபாடு உள்ளது.
உண்மையில், முதலாளித்துவ சோசலிஸ்ட் கட்சி (PS) மற்றும் தற்போதைய பிரதம மந்திரி பிரான்சுவா பேய்ரூவின் ஜனநாயக இயக்கம் (MoDem) ஆகிய இரண்டுமே கடந்த மூன்று ஆண்டுகளில் அத்தகைய குற்றச்சாட்டுக்களின் பேரில் குற்றவாளிகள் என்று கண்டறியப்பட்டுள்ளன. PS மற்றும் MoDem அதிகாரிகள் அதிகபட்சம் இடைநீக்கம் செய்யப்பட்ட சிறைத் தண்டனைகளுடன் தப்பித்தாலும், RN தலை துண்டிக்கப்படுவதற்கு இலக்கில் வைக்கப்பட்டுள்ளது.
லு பென் மின்னணு கண்காணிப்பு வளையலுடன் குறைந்தபட்சம் 2 ஆண்டுகள் வீட்டுக் காவலையும், இரண்டு ஆண்டுகள் இடைநிறுத்தப்பட்ட சிறைத்தண்டனையையும், அத்துடன் ஐந்தாண்டு தேர்தல் தடையையும் எதிர்கொள்கிறார். RN இன் துணைத் தலைவர் லூயிஸ் அலியட் மூன்று ஆண்டுகள் தேர்தல் தடை மற்றும் மின்னணு வளையலுடன் 6 மாத வீட்டுக் காவலையும் ஒரு வருடம் இடைநிறுத்தப்பட்ட சிறைத்தண்டனையையும் எதிர்கொள்கிறார். மேலும், முன்னாள் RN துணைத் தலைவர் புருனோ கோல்னிஷ் 2 ஆண்டுகள் வீட்டுக் காவல் உட்பட மூன்று ஆண்டுகள் சிறைத்தண்டனைக்கு முகங்கொடுக்கிறார். விசித்திரமாக, RN கணக்காளர் கிறிஸ்ட்ரோப் மோரோ வழக்கிலிருந்து விடுவிக்கப்பட்ட அதேவேளையில், லு பென்னின் மெய்க்காப்பாளர் தியெரி லெஜியர் ஓராண்டு இடைநீக்கம் செய்யப்பட்ட சிறைத் தண்டனையை எதிர்கொள்கிறார்.
குறிப்பிடத்தக்க வகையில், இந்தத் தீர்ப்பு குறித்து பிரெஞ்சு ஜனாதிபதியிடம் சந்தேகத்திற்கு இடமின்றி ஆலோசிக்கப்பட்டாலும், அரசாங்கம் அதைப் பகிரங்கமாகப் பாதுகாக்கவில்லை. கடந்த ஆண்டு, தனது கட்சி கற்பனையான வேலைவாய்ப்பு ஊழலில் இருந்து தப்பித்த பிறகு, தேசிய பேரணிக்கு எதிரான குற்றச்சாட்டுகள் “நியாயமற்றவை” என்று அறிவித்த பேய்ரூ, நேற்று லு பென்னுக்கு எதிரான “தீர்ப்பின் வாசகத்தால் தான் கலக்கமடைந்ததாகக்” கூறினார்.
நேற்றிரவு, லு பென் TF1 இல் ஒரு பிரதான நேர தொலைக்காட்சி நேர்காணலில் தோன்றி, தடையை எதிர்த்துப் போராட சூளுரைத்தார். “2027 தேர்தல்களில் இருந்து நான் நீக்கப்பட்டுள்ளேன், ஆனால் இன்று நீக்கப்பட்டது மில்லியன் கணக்கான பிரெஞ்சு மக்களின் குரல்தான்,” என்று அவர் கூறினார். தனக்கு எதிரான குற்றச்சாட்டுக்களை “ஐரோப்பிய நாடாளுமன்றத்துடனான நிர்வாக உடன்பாடின்மை” என்று அவர் நிராகரித்தார். இதில் தனிப்பட்ட முறையில் எந்த செழிப்பும் இல்லை” என்றார். தனது மேல்முறையீட்டில் தீர்ப்பு வழங்குவதற்கு நீதிமன்றங்கள் இரண்டு ஆண்டுகள் காத்திருக்கலாம் என்பதைக் குறிப்பிட்ட அவர், 2027 ஆம் ஆண்டு தேர்தலில் தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரு ஜனாதிபதியை RN வாக்காளர்கள் பார்க்க மாட்டார்கள் என்றும், அந்தத் தேர்தலில் தான் சட்டப்பூர்வமாக விலக்கப்பட்டிருப்பதாகவும் எச்சரித்தார்.
தடைக்கு எதிராக போராட்டங்களை ஒழுங்கமைக்க RN அச்சுறுத்தி வருகிறது. நேற்று, RN தலைவர் ஜோர்டான் பார்டெல்லா “பிரெஞ்சு ஜனநாயகம் நிறைவேற்றப்பட்டுவிட்டது” என்று கூறியதுடன், ஒரு “வெகுஜன மற்றும் அமைதியான அணிதிரட்டலுக்கு” அழைப்புவிடுத்து, கோபமடைந்துள்ள RN வாக்காளர்களுடன் பேச தானும் ஏனைய RN நிர்வாகிகளும் பிரான்ஸ் எங்கிலும் பயணிக்க இருப்பதாக சூளுரைத்தார்.
சோசலிஸ்ட் கட்சி மற்றும் பசுமைக் கட்சி நிர்வாகிகள் லு பென் மீதான தடையைப் பாராட்டி வருகின்றனர். தேர்ந்தெடுக்கப்பட்ட அதிகாரிகள் “முன்மாதிரியான நடத்தை” கொண்டிருக்க வேண்டும் என்ற கோட்பாட்டை அது பாதுகாப்பதாக சோசலிஸ்ட் கட்சி பிரதிநிதி ஜெரோம் குட்ஜ் கூறுகிறார். இந்த வாய்வீச்சு அதிவலதை நிறுத்தப் போவதில்லை.
சோசலிஸ்ட் கட்சி ஜனாதிபதி பிரான்சுவா ஹாலண்ட் மற்றும் அவருக்கு அடுத்து வந்த மக்ரோனின் அரசாங்கங்களின் பிற்போக்குத்தனமான வர்க்க இயக்கவியலின் காரணமாக 2012 முதல் RN மேலெழுச்சி பெற்றுள்ளது. போர் மற்றும் வங்கி பிணை எடுப்புகளுக்கு நிதியளிக்க தொழிலாள வர்க்கத்தைத் தாக்கி, வேலைநிறுத்தங்கள் மற்றும் போராட்டங்களை அடக்குவதற்கும், பாதுகாப்புப் படைகளுக்குள் அதிதீவிர வலதுசாரி அரசியலை ஊக்குவிப்பதற்கும் அவர்கள் பொலிஸ் மற்றும் பாதுகாப்புப் படைகளை அதிகளவில் நம்பியிருந்தனர்.
ஜனநாயக உரிமைகளை நசுக்கி, போராட்டங்களைத் தடை செய்யும் இரண்டு ஆண்டு அவசரகால நிலையை விதிக்க அல்ஜீரிய போர் சகாப்த சட்டத்தை ஹாலண்ட் மீண்டும் கொண்டு வந்த பிறகு, சமூக சமத்துவமின்மைக்கு எதிரான “மஞ்சள் சீருடை” போராட்டங்களைத் தாக்க கலகத் தடுப்பு போலீசாரை அனுப்பிய நாஜி ஒத்துழைப்பு சர்வாதிகாரி பிலிப் பெத்தானை மக்ரோன் பாராட்டினார்.
பிரெஞ்சு ஜனநாயகத்தின் நெருக்கடி மக்ரோனின் இரண்டாவது பதவிக்காலத்தில் முன்னொருபோதும் இல்லாத அளவுக்கு தீவிரமடைந்துள்ளது. 2023 இல், இராணுவ செலவுகளில் 100 பில்லியன் யூரோ அதிகரிப்புக்கு நிதியளிப்பதற்காக பிரெஞ்சு மக்களில் 91 சதவீதத்தினரால் இன்று எதிர்க்கப்படும் ஓய்வூதிய வெட்டை அவர் திணித்தார். இப்போது அவர் உக்ரேனில் ஒரு பிரெஞ்சு இராணுவத் தலையீட்டிற்கு அழுத்தமளித்து, ரஷ்யாவுடனான முழுமையான போருக்கு அச்சுறுத்துகிறார். இது, பிரெஞ்சு மக்களின் பரந்த பெரும்பான்மையினரால் நிராகரிக்கப்படுகிறது.
RN க்கு வழங்கப்பட்ட கடுமையான தண்டனைகள் முதலாளித்துவ அரசு எந்திரத்திற்குள் நவ-பாசிசவாதத்திற்கான எதிர்ப்பைப் பிரதிபலிக்கவில்லை. மாறாக ட்ரம்பின் சுங்கவரி மற்றும் உக்ரேனில் போர் தொடர்பாக அமெரிக்க மற்றும் ஐரோப்பிய ஏகாதிபத்தியத்திற்கு இடையே ஆழமடைந்து வரும் பதட்டங்களுக்கு மத்தியில் புவிசார் அரசியல் நோக்குநிலை தொடர்பாக ஆளும் வர்க்கத்தில் உள்ள கடுமையான மோதல்களை பிரதிபலிக்கின்றன. ஐரோப்பிய ஒன்றிய போர் எந்திரத்திற்காக 800 பில்லியன் யூரோ செலவிட மக்ரோன் ஜேர்மனியுடன் இணைந்து செயல்பட்டு வருகின்ற அதேவேளையில், லு பென் முன்னதாக அமெரிக்க இராணுவத்துடன் நெருக்கமான உறவுகளுக்கு அழைப்பு விடுத்துள்ளார்.
இந்த ஏகாதிபத்தியங்களுக்கு இடையிலான மோதல்கள் லு பென் தீர்ப்புக்குப் பின்னர் பகிரங்கமாக வெடித்து வருகின்றன. ட்ரம்ப் இதை “ஒரு பெரிய ஒப்பந்தம்” என்று அழைத்தார். அதே நேரத்தில், அவரது கூட்டாளியான பில்லியனர் எலோன் மஸ்க், இந்த தீர்ப்பை “நீதித்துறை அமைப்பின் துஷ்பிரயோகம்” என்று கண்டித்தார். அதிவலது இத்தாலிய பிரதம மந்திரி ஜோர்ஜியா மெலோனியும் பிரேசிலின் முன்னாள் பிரதம மந்திரி ஜெய்ர் போல்சொனாரோவும் லு பென்னை பாதுகாத்து அறிக்கைகளை வெளியிட்டனர்.
பாசிசம் மற்றும் போருக்கு தொழிலாளர்கள் மத்தியில் ஆழ்ந்த, வரலாற்றுரீதியில் வேரூன்றிய எதிர்ப்பு உள்ளது. ஆனால், அதை அணித்திரட்டுவதற்கு முதலாளித்துவ வர்க்கத்தின் ஐரோப்பிய ஒன்றிய-ஆதரவு மற்றும் ட்ரம்ப்-ஆதரவு கன்னைகள் இரண்டையுமே சமரசமின்றி எதிர்ப்பது அவசியமாகும்.
அடிபணியாத பிரான்ஸ் கட்சியின் (LFI) தலைவர் ஜோன்-லூக் மெலோன்சோன், லு பென் மீதான தடை குறித்த மக்களின் அவநம்பிக்கையை ஏற்றுக்கொள்ள முயன்றார். “தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரு அதிகாரி மீது குற்றவிசாரணை நடத்தும் முடிவு மக்களிடம் இருந்து வர வேண்டும்” என்று அவர் குறிப்பிட்டார். ஆனால், மெலன்சோன் ஜனநாயக விரோத அதிகாரிகளையோ அல்லது அரசாங்கங்களையோ தூக்கியெறிய தொழிலாள வர்க்கத்திற்காக போராடவில்லை.
மக்ரோனின் ஓய்வூதிய வெட்டுக்களுக்கு எதிரான வேலைநிறுத்தங்களை தொழிற்சங்க அதிகாரத்துவங்கள் விற்றுத்தள்ளியதை மறைமுகமாக ஆதரித்தும், உக்ரேனில் நேட்டோ-ரஷ்யா போர் இருந்தபோதிலும் கடந்த ஆண்டு தேர்தல்களில் மக்ரோனின் வேட்பாளர்களை ஆதரிப்பதன் மூலமும், பாசிசம் மற்றும் போருக்கு எதிரான தொழிலாள வர்க்கத்தின் போராட்டத்தைத் அவர் தடுத்தார்.
ஐரோப்பிய ஒன்றிய மீள்ஆயுதமயமாக்கலுக்கு நிதியாதாரமளிக்க அரசாங்கங்கள் சமூக செலவினங்களை வெட்டுகின்ற நிலையில், பிரான்சிலும் மற்றும் ஐரோப்பா எங்கிலும் வெடிப்பார்ந்த வர்க்க மோதல்கள் திட்டநிரலில் உள்ளன. நீதிமன்றங்கள் மூலம் லு பென்னை எதிர்த்துப் போராட முடியாது. மாறாக வர்க்கப் போராட்டத்தின் மூலமாகவும், தொழிற்சங்க அதிகாரத்துவங்கள் மற்றும் மக்ரோனின் அரசியல் உதவியாளர்களின் முட்டுக்கட்டையிலிருந்து இந்தப் போராட்டங்களை விடுவிப்பதன் மூலமாகவும், இவற்றை சர்வதேச அளவில் தொழிலாளர்கள் மற்றும் இளைஞர்கள் மத்தியில் பாசிசம் மற்றும் போருடன் அதிகரித்து வரும் எதிர்ப்புடன் தொடர்புபடுத்துவதன் மூலமாகவும் மட்டுமே போராட முடியும்.