பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கான அரசாங்கத்தின் ஊதிய உயர்வு: ஒரு ஏமாற்று வேலை

2026 ஆம் ஆண்டுக்கான வரவுசெலவுத் திட்டத்தை பாராளுமன்றத்தில் சமர்ப்பித்த ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக, தோட்டத் தொழிலாளர்களின் தினசரி ஊதியம் அடுத்த ஆண்டு ஜனவரியில் தற்போதைய 1,350 ரூபாயிலிருந்து 1,750 ரூபாயாக உயர்த்தப்படும் என்று அறிவித்தார். அதன்படி, பிராந்திய பெருந்தோட்டக் கம்பனிகள் 2026 ஜனவரி முதல் 200 ரூபா அதிகரித்து நாளொன்றுக்கு 1,550 ரூபாயை செலுத்த வேண்டும். இதற்கு மேலாக, அரசாங்கம் ஒரு நாளைக்கு வருகைக்கான ஊக்கத்தொகையாக 200 ரூபா படி, மாதத்திற்கு 25 வேலை நாட்களுக்கு 5,000 ரூபாய் வழங்கும்.

இதற்காக அரசாங்கம் 5,000 மில்லியன் ரூபாவை ஒதுக்கும் என்று அறிவித்த திசாநாயக, 'தோட்டத் தொழிலாளர்களுக்கு அவர்களின் வேலைக்கு ஏற்ப நியாயமான தினசரி ஊதியம் வழங்கப்பட வேண்டும் என்று நாங்கள் நம்புகிறோம்,' எனக் கூறினார்.

தொழிலாளர்கள் மாதத்திற்கு 25 நாட்கள் வேலை செய்ய வேண்டும் என்று அவர் கூறினார். 25 நாட்களும் சமூகமளிக்காவிட்டால், வருகைக்கான கொடுப்பனவு கிடைக்குமா என்பது தெளிவாகத் தெரியவில்லை. முன்னர், வருகை ஊக்கத்தொகையைப் பெற, தொழிலாளர்கள் மாத வேலை நாட்களில் 85 சதவீதம் கட்டாயம் வேலைக்கு வந்திருக்க வேண்டும்.

பெருந்தோட்டக் கம்பனிகள், 200 ரூபாய் அதிகரிப்பை வழங்க உடன்படவில்லை. தங்களுடன் கலந்தாலோசிக்காமலேயே இந்த முடிவை எடுத்தமைக்காக தோட்ட உரிமையாளர் சங்கம் அரசாங்கத்தை விமர்சித்திருந்தாலும், அது பற்றி உத்தியோகபூர்வ அறிக்கைகளை வெளியிடவில்லை.

ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவித்த பெருந்தோட்ட உரிமையாளர் சங்கத்தின் பேச்சாளர், இது 'ஆண்டுக்கு மேலதிகமாக 13 பில்லியன் ரூபாய் சுமையை' ஏற்படுத்தும், 'இப்போது நாம் மீண்டும் உற்பத்தித்திறன் மற்றும் வருகையின் அடிப்படையிலான ஒரு புதிய திட்டத்தை கொண்டு வருவதோடு சில சலுகைகளையும் சேர்க்க வேண்டும்,' எனத் தெரிவித்தார்.

மீண்டும் 'உற்பத்தித்திறன்' மற்றும் 'வருகை' அடிப்படையில் ஒரு புதிய திட்டத்தை கொண்டு வருவதற்கான பரிந்துரையின் அர்த்தம், ஊதிய உயர்வைப் பெற்றாலும், தொழிலாளர்கள் கடந்த காலங்களில் போல் வேலைச் சுமை அதிகரிப்பு உட்பட மேலும் கடுமையான வேலை நிலைமைகளை எதிர்கொள்ள நேரும் என்பதாகும்.

குறிப்பாக, 2020 இல் கோவிட்-19 தொற்றுநோய் தொடங்கியதிலிருந்தும் 2022 பொருளாதார மந்தநிலையில் இருந்தும் வாழ்க்கைச் செலவுகளில் ஏற்பட்ட கூர்மையான அதிகரிப்புடன் ஒப்பிடும் போது, இந்த 400 ரூபா அதிகரிப்பானது மிக அடிப்படையான வீட்டுச் செலவுகளை சமாளிக்கக் கூட போதுமானதல்ல.

2023 இல் அரசாங்கத்தின் தரவுகளின்படி, இரண்டு பிள்ளைகள் உட்பட நான்கு பேர் கொண்ட ஒரு குடும்பத்திற்கு, அத்தியாவசியத் தேவைகளைப் பூர்த்தி செய்ய மாதம் 92,000 முதல் 100,000 ரூபாய் வரை தேவைப்படுகிறது. இதற்கு நேர்மாறாக, 25 வேலை நாட்களுக்கு 1,750 ரூபா பெறும் ஒரு தொழிலாளி, மாதம் சுமார் 43,750 ரூபா மட்டுமே சம்பாதிக்கிறார். குடும்பத்தில் இருவரும் வேலை செய்தாலும், அவர்களின் கூட்டு வருமானமான 87,500 ரூபா வறுமைக் கோட்டுக்குக் கீழே உள்ளது.

அதனாலேயே வரவு-செலவுத் திட்ட அறிவிப்பு ஒரு ஏமாற்று வேலையாக இருக்கின்றது.

எதிர்க் கட்சிகளான ஐக்கிய மக்கள் சக்தி, ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணி மற்றும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசும் தனியார் நிறுவனங்களால் வேலைக்கு அமர்த்தப்பட்டுள்ள தோட்டத் தொழிலாளர்களுக்கு பாதீட்டில் நிதி ஒதுக்கியது சட்டவிரோதமானது என்றும், இது மற்ற தனியார் துறைகளின் தொழிலாளர்களையும் அத்தகைய கோரிக்கைகளை எழுப்ப ஊக்குவிக்கும் என்றும் கூறி எதிர்ப்பு தெரிவித்தன.

வாழ்க்கைச் செலவு அதிகரிப்பு மற்றும் ஊதியப் பற்றாக்குறை குறித்து புலம்பி, அரசாங்கத்தை போலியாக விமர்சிக்கும் இந்தக் கட்சிகளின் உண்மையான நிலைப்பாடு, எந்தவொரு ஊதிய உயர்வுக்கும் எதிர்ப்பு தெரிவிப்பதே ஆகும். அரசாங்கத்தைப் போலவே அவையும் சர்வதேச நாணய நிதியத்தின் சிக்கன வெட்டுக்களை ஏற்றுக்கொள்கின்றன.

இது தோட்டத் தொழிலாளர்கள் மத்தியில் கோபத்தைத் தூண்டியுள்ளதனால், நூற்றுக்கணக்கான தொழிலாளர்கள் இந்த தலைவர்களுக்கு எதிராக நகரங்களில் கண்டன ஆர்ப்பாட்டங்களை நடத்தி வருவதோடு சஜித் பிரேமதாச மற்றும் ரணில் விக்ரமசிங்வினதும் கொடும்பாவிகளையும் எரித்தனர்.

இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸ் (இ.தொ.கா.), தொழிலாளர் தேசிய சங்கம் (NWU), ஜனநாயகத் தொழிலாளர் காங்கிரஸ் (ஜ.தொ.கா.), மலையக மக்கள் முன்னணி (ம.ம.மு.) ஆகியவை இந்தப் போலி ஊதிய உயர்வை ஆதரித்துள்ளன. அவற்றின் பாராளுமன்ற உறுப்பினர்கள் அரசாங்கத்தைப் பாராட்டியதோடு பாதீட்டுக்கு ஆதரவாகக் குரல் கொடுத்தனர். இந்த அற்ப சம்பள அதிகரிப்பு, தொழிலாளர்களின் நிலைமைகளை எவ்வாறு உயர்த்தும் என்பதை அவர்கள் விளக்கவில்லை.

உண்மையில், இந்த தொழிற்சங்கங்கள் அவற்றின் வரலாற்றில், தோட்டத் தொழிலாளர்களின் ஊதியக் கோரிக்கைகளை மட்டுப்படுத்தி, ஒரு சிறிய தொகை சம்பள அதிகரிப்பை கொடுக்கவே வேலை செய்துவந்துள்ளன. உதாரணமாக: 2018 இல், தோட்டத் தொழிலாளர்கள் தங்கள் தினசரி அடிப்படை ஊதியத்தை 500 ரூபாயிலிருந்து 1,000 ரூபாயாக, 100 சதவீதம் உயர்த்தக் கோரினர். இருப்பினும், தொழிற்சங்கங்கள் 2018 டிசம்பரில் பிராந்திய பெருந்தோட்டக் கம்பனிகளின் ஊதிய முன்மொழிவை ஏற்றுக்கொண்டு, ஒன்பது நாள் வேலைநிறுத்தத்தை முடிவுக்குக் கொண்டு வந்தன. தொழிற்சங்கங்களுக்கும் தோட்டக் கம்பனிகளுக்கும் இடையே 2019 ஜனவரியில் கையெழுத்திடப்பட்ட ஒப்பந்தத்தின் கீழ், அடிப்படை நாள் சம்பளம் 700 ரூபாயாக 200 ரூபாவாலும், தேயிலை விலைக் கொடுப்பனவு 30 ரூபாயிலிருந்து 50 ரூபாயாகவும் உயர்த்தப்பட்டு, மொத்தம் 750 ரூபா நாள் சம்பளம் மட்டுமே நிர்ணயிக்கப்பட்டது.

தோட்டத் தொழிலாளர்கள் 2019 ஆம் ஆண்டு சம்பள உயர்வு கோரி போராடிய போது

அதற்கு முன்னதாக, மாதத்திற்கு 25 நாட்கள் வேலை செய்த தொழிலாளர்களுக்கு 140 ரூபா வருகை கொடுப்பனவுடன் 60 ரூபா உற்பத்தி ஊக்கத்தொகையும் வழங்கப்பட்டது. இந்த இரண்டையும் இரத்து செய்ய தொழிற்சங்கங்கள் ஒப்புக்கொண்டன.

உண்மையில், அரச பெருந்தோட்டங்கள் உட்பட, அரச நிறுவனங்களை மறுசீரமைத்தல் மற்றும் தொழிலாளர்களின் இலட்சக்கணக்கான தொழில்களை அழித்தல் உட்பட சர்வதேச நாணய நிதியத்தின் கொள்கைகளை செயல்படுத்துவதற்காக அர்ப்பணிக்கப்பட்டுள்ள அரசாங்கத்தின் பாதீட்டுக்கே தொழிற்சங்கங்கள் வாக்களித்துள்ளன.

ஒரு தசாப்த காலமாக, கம்பனிகள் உற்பத்தித்திறன் அடிப்படையிலான, வருமானப் பகிர்வு மாதிரியை அமுல்படுத்த முயற்சித்து வருகின்றன. இதன் கீழ், ஒவ்வொரு தொழிலாளர் குடும்பத்திற்கும் பராமரிப்புக்காக சுமார் 1,000 அல்லது அதற்கு மேற்பட்ட தேயிலை செடிகள் கொண்ட நிலங்கள் ஒதுக்கப்படுகின்றன. கம்பனிகள் தமது செலவுகளையும் இலாபத்தின் ஒரு பகுதியையும் கழித்துக்கொண்ட பின்னர், தேயிலை அறுவடையில் இருந்து கிடைக்கும் வருமானத்தில் ஒரு பங்கு மட்டுமே தொழிலாளர்களுக்கு கிடைக்கும். இந்த அமைப்பின் கீழ், ஊழியர் சேமலாப நிதி, ஊழியர் நம்பிக்கை நிதி மற்றும் பிற சலுகைகள் போன்ற தொழிலாளர்களின் அடிப்படை சமூக உரிமைகள் பறிக்கப்படுகின்றன.

தோட்டத் தொழிலாளர்கள் கொடூரமான வேலை நிலைமைகளின் கீழ் தாங்க முடியாத வேலைச் சுமையை எதிர்கொண்டுள்ளனர். 2021 இல் நாள் சம்பளம் 1,000 ரூபாயாக அதிகரிக்கப்பட்ட போது, ​தொழிலாளர்களின் தினசரி கொழுந்து பறிக்கும் இலக்கு 2 கிலோகிராமால் அதிகரிக்கப்பட்டது. அவர்கள் இலக்கை பறிக்கத் தவறினால், நாள் சம்பளத்தில் பாதி குறைக்கப்படும். நிர்வாகம் கொழுந்து நிறுக்கும்போது ஒவ்வொரு நாளும் ஈரப்பதத்திற்காக 3 முதல் 6 கிலோ கிராம் வரை வெட்டிக்கொள்கிறது. தோட்டத் தொழிலாளர்களுக்கு சம்பளத்துடன் கூடிய விடுமுறை இல்லை.

தேயிலை அல்லது இறப்பர் தொழிற்சாலைகளில் பணிபுரியும் தொழிலாளர்கள் ஆபத்தான சூழ்நிலையில் வேலை செய்கிறார்கள். வெவ்வேறு தொழிற்சாலைகளில் பணிபுரியும் இரண்டு தொழிலாளர்கள் இந்த மாத தொடக்கத்தில் வேலையின் போது ஏற்பட்ட தொழில்துறை விபத்தில் கொல்லப்பட்டனர்.

மவுசாக்கலை தேயிலைத் தொழிற்சாலை விபத்தில் மரணித்த விஜயகுமாரின் இறுதிச் சடங்கு

கொழும்பிலிருந்து சுமார் 75 கிலோமீட்டர் கிழக்கே உள்ள யட்டியந்தொட்டையில், கிரிபோருவ தோட்டத்தின் இறப்பர் பால் பதப்படுத்தும் தொழிற்சாலையில் ஒரு இயந்திரம் வெடித்ததில் முதல் மரணம் நிகழ்ந்தது. மத்திய மலையகத்தில் மஸ்கெலியாவில், மவுசாக்கலை தோட்ட தேயிலை தொழிற்சாலையில் ஒரு தொழிலாளியின் தலை தேயிலை அரைக்கும் இயந்திரத்தில் சிக்கியதால் இரண்டாவது மரணம் நிகழ்ந்தது.

கம்பனிகள், இந்தக் கடுமையான வேலை நிலைமைகளை பேணுவதற்கு, பொலிஸ் மற்றும் தொழிற்சங்கங்களின் ஆதரவுடன் தொழிலாளர்களின் ஜனநாயக உரிமைகளை ஈவிரக்கமின்றி நசுக்குகின்றன. 2021 மார்ச்சில், தோட்ட நிர்வாகத்தின் ஆத்திரமூட்டலுக்கு எதிர்ப்புத் தெரிவித்த மஸ்கெலியாவில் ஓல்டன் தோட்டத்தைச் சேர்ந்த 38 தொழிலாளர்கள், உடனடியாக வேலைநீக்கம் செய்யப்பட்டனர். அவர்களில் 22 தொழிலாளர்கள் மீது, தோட்ட முகாமையாளர் மற்றும் உதவி முகாமையாளரை அடித்ததாகவும், முகாமையாளரின் பங்களாவில் சொத்துக்களை சேதப்படுத்தியதாகவும் போலி குற்றச்சாட்டுக்களின் அடிப்படையில் வழக்குத் தொடரப்பட்டுள்ளது.

முன்மொழியப்பட்ட ஊதிய உயர்வால் தங்களுக்கு கூடுதலாக 13 பில்லியன் ரூபா செலவு ஏற்படும் என்றும், உரம் மற்றும் பிற செலவுகளை குறைக்க வேண்டி வரும் என்றும் தோட்டக் கம்பனிகள் முறைப்பாடு செய்தாலும், கடந்த ஆண்டில் அவற்றின் இலாபம் வியத்தகு அளவில் அதிகரித்துள்ளது.

தி மார்னிங் டெலிகிராஃப் விவரித்தபடி (https://themorningtelegraph.com/35436/), நாட்டின் முன்னணி பெருந்தோட்ட நிறுவனங்கள் கொழும்பு பங்குச் சந்தையில் சமர்ப்பித்த உத்தியோகப்பூர்வ வருடாந்த, சரிபார்க்கப்பட்ட அறிக்கைகளின்படி, 2024-2025 நிதியாண்டில் வரிக்குப் பின்னர் பில்லியன் கணக்கான இலாபத்தை ஈட்டியுள்ளன.

அகலவத்த பெருந்தோட்டம்: 781.49 மில்லியன் ரூபா
அகரபத்தன பெருந்தோட்டம்: 801.00 மில்லியன் ரூபா
பலாங்கொட பெருந்தோட்டம்: 741.00 மில்லியன் ரூபா
பொகவந்தலாவ பெருந்தோட்டம்: 1,042.94 மில்லியன் ரூபா
அல்பிட்டிய பெருந்தோட்டம்: 1,329.00 மில்லியன் ரூபா

ஹப்புகஸ்தென்ன பெருந்தோட்டம்: 339.51 மில்லியன் ரூபா
ஹட்டன் பெருந்தோட்டம்: 718.90 மில்லியன் ரூபா
ஹொரன பெருந்தோட்டம்: 180.63 மில்லியன் ரூபா
கஹவத்த பெருந்தோட்டம்: 948.41 மில்லியன் ரூபா
கேகாலை பெருந்தோட்டம்: 516.87 மில்லியன் ரூபா

களனிவெளி பெருந்தோட்டம்: 941.79 மில்லியன் ரூபா
கொட்டகலை பெருந்தோட்டம்: 377.31 மில்லியன் ரூபா
மடுல்சீம பெருந்தோட்டம்: 244.00 மில்லியன் ரூபா
மல்வத்தவெளி பெருந்தோட்டம்: 532.84 மில்லியன் ரூபா
மஸ்கெலியா பெருந்தோட்டம்: 958.37 மில்லியன் ரூபா

நமுனுகுல பெருந்தோட்டம்: 1,526.07 மில்லியன் ரூபா
தலவாக்கலை பெருந்தோட்டம்: 1,235.00 மில்லியன் ரூபா
உடபுஸ்ஸல்லாவ பெருந்தோட்டம்: 581.00 மில்லியன் ரூபா
மகாவலி பெருந்தோட்டம்: 140.39 மில்லியன் ரூபா
வட்டவல பெருந்தோட்டம்: 1,885.00 மில்லியன் ரூபா

பெருந்தோட்டக் கம்பனிகள் பில்லியன் கணக்கான இலாபங்களை ஈட்டி வரும் அதேவேளை, தொழிலாளர்கள் தொடர்ச்சியான வறுமை, வேலையின்மை விகித அதிகரிப்பு மற்றும் பரவலான ஊட்டச்சத்து குறைபாட்டை எதிர்கொள்கின்றனர். போதுமான வீட்டுவசதி, சுகாதாரம் மற்றும் கல்வி போன்ற அத்தியாவசிய சமூக சேவைகளும் அவர்களுக்கு கிடைப்பதில்லை.

இலங்கை புள்ளிவிவரத் திணைக்களத்தால் நடத்தப்பட்ட பொருளாதார நெருக்கடியின் தாக்கம் பற்றிய 2023 குடும்ப கணக்கெடுப்பின் தரவு, கோவிட்-19 தொற்றுநோய் தொடங்கியதிலிருந்து பெருந்தோட்டத் துறையில் உள்ளவர்களின் வீட்டுச் செலவுகள் 90.3 சதவீதம் அதிகரித்துள்ளதாகக் காட்டுகிறது.

திசாநாயக அரசாங்கத்தின் சம்பளத் திட்டத்தின் உண்மையான நோக்கம், தோட்டத் தொழிலாளர்களின் வாழ்க்கை நிலைமைகளை உயர்த்துவது அல்ல. மாறாக, வாழ்க்கைச் செலவு அதிகரிப்பு சம்பந்தமாக மக்கள் விடுதலை முன்னணி (ஜே.வி.பி.) தலைமையிலான தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் மீது வளர்ந்து வரும் வெகுஜனக் கோபத்தைக் கலைப்பதும், கடந்த உள்ளூராட்சித் தேர்தல்களில் குறைந்து போன அதன் வாக்குகளை அடுத்த ஆண்டு தொடக்கத்தில் நடைபெறவிருக்கும் மாகாண சபைத் தேர்தல்களில் மீண்டும் பெறுவதுமே அதன் நோக்கம் ஆகும்.

ஜே.வி.பி./தே.ம.ச., 2024 பாராளுமன்றத் தேர்தலில், பிரதான பெருந்தோட்டப் பகுதிகளான நுவரெலியா மற்றும் பதுளை மாவட்டங்களில் பெரும்பான்மையைப் பெறுவதற்காக தோட்டத் தொழிலாளர்கள் மத்தியில் நிலவிய அதிருப்தியை சுரண்டிக்கொண்டது. இருப்பினும், 2025 மே மாதம் நடந்த உள்ளூராட்சித் தேர்தலில், இந்தப் பகுதிகளில் அதன் ஆதரவு கடுமையாகக் குறைந்து, வாக்குகள் முறையே 13 சதவீதம் மற்றும் 16 சதவீதம் வீழ்ச்சியடைந்துவிட்டன.

தேர்தல் பிரச்சாரத்தின் போது சர்வதேச நாணய நிதியத்தின் சிக்கன நடவடிக்கை திட்டத்தை பற்றி மீண்டும் பேச்சுவார்த்தை நடத்துவதாக உறுதியளித்த போதிலும், திசாநாயக பதவியேற்ற பின்னர் அந்தத் திட்டங்களை தீவிரமாக முன்னெடுத்து வருகிறார். சர்வதேச நாணய நிதியம் தலைமையில், அரசுக்கு சொந்தமான நிறுவனங்கள் மற்றும் தொழில்துறைகளை மறுசீரமைத்தல் மற்றும் தனியார்மயமாக்குவதன் ஒரு பகுதியாக, அவர் அரச பெருந்தோட்டங்களையும் தனியார்மயமாக்கும் பணியில் ஈடுபட்டுள்ளார். இந்த நடவடிக்கை வேலை இழப்புகளுக்கு வழிவகுப்பதோடு தோட்டத் தொழிலாளர்களின் வேலை மற்றும் சமூக நிலைமைகளை மோசமாக்கும்.

ஏனைய அனைத்து தொழிற்சங்கங்களையும் போலவே, இ.தொ.கா., NUW, ம.ம.மு., ஜ.தொ.கா. மற்றும் ஜே.வி.பி. தலைமையிலான அகில இலங்கை தோட்டத் தொழிலாளர் சங்கம் உட்பட தொழிற்சங்கங்கள் அந்தக் கொள்கைகளை செயல்படுத்த திசாநாயக அரசாங்கத்துடன் நெருக்கமாக ஒத்துழைக்கின்றன.

தொழிலாளர்கள் நியாயமான ஊதியம் மற்றும் அடிப்படை சமூக உரிமைகளை வெல்வதற்கு தொழிற்சங்கங்களை நம்பியிருக்க முடியாது; மாறாக, தங்கள் உரிமைகளுக்காகப் போராட அவர்களே முன்முயற்சி எடுக்க வேண்டும். அரசாங்கம், பிராந்திய பெருந்தோட்ட கம்பனிகள் அல்லது தொழிற்சங்கங்களால் பேச்சுவார்த்தை நடத்தப்பட்ட, ஏமாற்றும் ஊதிய ஒப்பந்தங்களை நிராகரித்து, வாழ்க்கைச் செலவு அதிகரிப்புக்கு ஏற்ப திட்டமிடப்பட்ட நியாயமான மாத சம்பளம், மருத்துவ விடுமுறை உட்பட சம்பளத்துடன் கூடிய விடுமுறை மற்றும் போதுமான வீட்டு வசதியையும் கோர வேண்டும்.

இந்தப் போராட்டத்தை ஒழுங்கமைக்க, முதலாளித்துவக் கட்சிகள் மற்றும் தொழிற்சங்கங்களில் இருந்து சுயாதீனமாகவும், திசாநாயக அரசாங்கத்தின் சிக்கனக் கொள்கைகளை எதிர்க்கும் ஏனைய தொழிலாளர்களுடன் ஒன்றிணைந்தும், ஒவ்வொரு தோட்டத்திலும் ஜனநாயக ரீதியாக தேர்ந்தெடுக்கப்பட்ட தொழிலாளர் நடவடிக்கைக் குழுக்களை ஸ்தாபிப்பது அவசியமாகும்.

அத்தகைய போராட்டம், உலகெங்கிலும் உள்ள தொழிலாளர்களுடன் ஐக்கியப்பட்டு, பெருந்தோட்டங்கள், வங்கிகள் மற்றும் பெரிய முதலாளித்துவ நிறுவனங்களை தொழிலாளர்களின் கட்டுப்பாட்டின் கீழ் தேசியமயமாக்குவது உட்பட, சோசலிசக் கொள்கைகளை செயல்படுத்தும் தொழிலாளர்கள் மற்றும் விவசாயிகளின் அரசாங்கத்திற்கான பரந்த போராட்டத்தை அடிப்படையாகக் கொண்டிருக்க வேண்டும்.