எலிசபெத் சிம்மர்மேன்-மோட்லர்: நவம்பர் 10, 1956 - நவம்பர் 28, 2025

2023 இல் எலிசபெத் சிம்மர்மேன்-மோட்லர்

சோசலிச சமத்துவக் கட்சி (ஜேர்மனி) அதன் நீண்டகால உறுப்பினரான தோழி எலிசபெத் சிம்மர்மன்-மோட்லரின் மரணத்தை ஆழ்ந்த துயரத்துடன் அறிவிக்கிறது. கட்சி உறுப்பினர்கள் அனைவராலும் ‘எல்லி’ என்று அறியப்பட்ட அவர், ஒரு துயரமான விபத்தைத் தொடர்ந்து, 28 நவம்பர் அன்று காலை தனது 69 வயதில் காலமானார். தீயணைப்புப் படையினர் உடனடியாக எச்சரிக்கப்பட்டு வந்தாலும், அவரை உயிர்ப்பிக்க மேற்கொண்ட அனைத்து முயற்சிகளும் தாமதமாகி விட்டதால் பயனளிக்கவில்லை.

1975 ஆம் ஆண்டு எல்லி, தனது 19 வயதில் சோசலிச சமத்துவக் கட்சியின் முன்னோடி அமைப்பான சோசலிச தொழிலாளர் கழகத்தில் (Bund Sozialistischer Arbeiter) இணைந்துகொண்டு, உலக ட்ரொட்ஸ்கிச இயக்கத்தின் முன்னோக்குகிற்காக 50 ஆண்டுகள் அயராது போராடினார். 2024 ஆம் ஆண்டு அவர் ஆற்றிய ஒரு உரையில், “எனது அரசியல், வரலாற்று மற்றும் கலாச்சாரக் கல்விக்கான பெரும்பகுதியை” நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவிடம் (ICFI) நான் கடமைப்பட்டிருக்கிறேன் என்று அவர் கூறினார்.

சோசலிசக் கொள்கைகளையும் அவற்றைப் பாதுகாப்பதையும் பொறுத்தவரை, எல்லி தன்னுடன் கூட சமரசம் செய்துகொள்ளாதவராக இருந்தார். கட்சியின் பிரச்சாரங்களிலும், தேர்தல் போராட்டங்களிலும் பங்கேற்று, அதன் சோசலிச இலக்குகளை ஊக்குவித்த அற்புதமான ஆற்றல், விடாமுயற்சி, பொறுமை ஆகியவற்றால் பல தோழர்கள் அவரை நினைவில் வைத்திருப்பார்கள்.

சர்வதேசியவாதம் என்பது எல்லிக்கு மிக முக்கியமான கேள்வியாக இருந்தது. அவர் நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவின் ஏராளமான பள்ளிகளிலும் மாநாடுகளிலும் கலந்து கொண்டு, பல சர்வதேச தோழர்களுடன் நட்பை வளர்த்துக் கொண்டார். 1985-1986 இல், ஜெர்ரி ஹீலி தலைமையிலான பிரித்தானிய தொழிலாளர் புரட்சிக் கட்சி, நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவுடன் முறித்துக் கொண்டு, ஒரு தேசியவாத போக்கை ஏற்றுக்கொண்ட போது, ​​ஹீலி மீதான ஆழ்ந்த மரியாதை இருந்தபோதிலும், தயக்கமின்றி நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவை எல்லி ஆதரித்தார்.

தொடர்ந்து வந்த ஆண்டுகளில், இந்தப் பிளவின் படிப்பினைகளில் இருந்து புதிய உறுப்பினர்களுக்கு கல்வி கற்பிப்பதில் அவர் முக்கிய பங்கு வகித்தார். இலங்கையில் உள்நாட்டுப் போரிலிருந்து தப்பி வெளியேறி, தேசியவாதப் பின்னணியைக் கொண்டிருந்த தமிழ்த் தோழர்கள், அந்த நேரத்தில் சர்வதேச சோசலிசத்தின் சிறப்பை எல்லி அவர்களுக்கு நம்ப வைத்த விடாமுயற்சியை இன்றும் நினைவுகூர்கிறார்கள்.

நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவின் வரலாறு மற்றும் ஆவணங்கள் குறித்த அவரது கலைக் களஞ்சிய அறிவு, கட்சியின் தேசியக் குழுவிலும் ஒரு முக்கிய பாத்திரத்தை வகித்தது. தேசியக் குழுவில், எல்லி பல ஆண்டுகளாக உறுப்பினராக இருந்தார். அடிப்படைக் கேள்விகள் எழும்போது, எல்லி வரலாற்று ரீதியான விளக்கத்துடன் முன்னோக்கிற்கு பங்களிப்பார் என்பதை எப்போதும் ஒருவர் நம்பலாம்.

சோசலிச சமத்துவக் கட்சியின் பொது முகமாக எல்ளி பிரசாரம் செய்தார். அவர் ஐரோப்பிய, ஜேர்மன் கூட்டாட்சி மற்றும் வடக்கு ரைன்-வெஸ்ட்பாலியா மாநிலத் தேர்தல்களில் பல முறை போட்டியிட்டு, உலக சோசலிச வலைத் தளத்திற்கு கிட்டத்தட்ட 330 கட்டுரைகளை எழுதியுள்ளார். வறுமை மற்றும் சமூக சமத்துவமின்மை, கொரோனா வைரஸ் பெருந் தொற்றுநோய், நாஜிக் குற்றவாளிகள் மீதான விசாரணைகள், அஹ்ர் பள்ளத்தாக்கில் ஏற்பட்ட வெள்ளப் பேரழிவு மற்றும் தொழில்துறை பற்றிய அறிக்கைகள், குறிப்பாக எஃகு துறையில் ஏற்பட்ட நெருக்கடி குறித்து, அவர் வாழ்ந்த டியூஸ்பேர்க்கில் நேரடியாக கிடைத்த அனுபவங்கள் ஆகியவை அவரது கட்டுரைகளின் முக்கிய தலைப்புகளாக இருந்தன.

எல்லி, சீமென்ஸில் மூன்றரை தசாப்தங்களாக எழுத்தராகப் பணியாற்றி தனது வாழ்க்கையை நடத்தி வந்தார். அவர் 2020 இல் ஓய்வு பெற்றார். அக்டோபர் 2022 இல், அவருக்கு ஏற்பட்ட பக்கவாதம், அவரது ஆரோக்கியத்தை பாதித்தது.

எல்லியின் பிரிவால் வாடும் அவரது கணவர் பீட்டர் மோட்லர், ஓய்வு பெற்ற எஃகுத் தொழிலாளி ஆவார். இவர் பல ஆண்டுகள் தனது சக ஊழியர்களுக்காகப் பணித்துறைப் பிரதிநிதியாகப் பணியாற்றியுள்ளார். சோசலிச சமத்துவக் கட்சி அவருக்குத் தனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறது.

தொழிலாள வர்க்கத்திற்கு சேவை செய்வதற்கும், ஒரு சிறந்த சமூகத்தைக் கட்டியெழுப்புவதற்கும், தனது வாழ்நாள் முழுவதையும் அர்ப்பணித்த சோசலிசத்திற்கான ஒரு அயராத போராளியாக எலிசபெத் சிம்மர்மேன்-மோட்லரை நாம் நினைவு கூர்வோம். அவரது மரணம் ஒரு கசப்பான இழப்பாகும், மேலும் நம்மை ஆழ்ந்த துயரத்தில் ஆழ்த்துகிறது. ஆனால் ஒரு சிறந்த, சோசலிச எதிர்காலத்தின் மீதான அவரது நம்பிக்கை ஒரு உத்வேகமாகவும் உள்ளது.

எல்லியின் அரசியல் வாழ்க்கைக்கு விரிவான அஞ்சலியை விரைவில் வெளியிடுவோம். தயவுசெய்து sgp@gleichheit.de க்கு இரங்கல் செய்திகளை அனுப்பவும்.

Loading