இந்த மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கு காணாலம்.
டிசம்பர் 6 அன்று உலக சோசலிச வலைத் தள நிருபர்கள், கொழும்பிலிருந்து 140 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ள, இலங்கையின் மத்திய பெருந்தோட்ட மாவட்டமான நுவரெலியாவின் தலவாக்கலை பகுதிக்குச் சென்று, டிட்வா சூறாவளியால் பாதிக்கப்பட்ட தோட்டத் தொழிலாளர்களுடன் உரையாடினர்.
நுவரெலியா மாவட்டம், வறிய மட்ட ஊதியம் பெறும் தமிழ் பேசும் தேயிலைத் தோட்டத் தொழிலாளர்கள் அதிகம் வசிக்கும் இடமாகும். சூறாவளியால் ஏற்பட்ட கனமழை, வெள்ளம், நிலச்சரிவு மற்றும் கல் சரிவுகளால் அதிகம் பாதிக்கப்பட்ட பகுதிகளில் இதுவும் ஒன்றாகும். 89 பேர் உயிரிழந்ததாக உறுதிப்படுத்தப்பட்ட நிலையில், கண்டி மற்றும் பதுளையை அடுத்து, இது பாதிக்கப்பட்ட பகுதிகளில் மூன்றாவது இடத்தில் உள்ளது. மேலும், கண்டி மற்றும் கேகாலைக்கு அடுத்து மூன்றாவதாக இங்கு 37 பேர் காணாமல் போயுள்ளனர். அனர்த்த முகாமைத்துவ நிலையத்தின்படி கண்டி மாவட்டத்திற்குப் பின்னர் இரண்டாவது அதிக எண்ணிக்கையான 63,121 பேர் இடம்பெயர்ந்து, 211 தற்காலிக தங்குமிடங்களில் தஞ்சமடைந்துள்ளனர்.
தலவாக்கலையில் இருந்து 17 கிலோமீட்டர் தொலைவில் உள்ள எல்ஜின் தோட்டத்திற்கு நமது நிருபர்கள் சென்றிருந்தனர். அங்கு 280 குடும்பங்கள் இடம்பெயர்ந்துள்ளன. ஒரு தொழிலாளி கூறியதாவது: 'நாங்கள் மிகவும் ஆபத்தான பகுதியில் வசித்து வந்தோம், அங்கு எந்த நேரத்திலும் நிலச்சரிவுகள் ஏற்படலாம். இப்போது, எங்கள் வீடுகளுக்குத் திரும்பும் எண்ணம் இல்லை. எங்கள் குடும்பங்களுக்கு பாதுகாப்பான, ஒழுக்கமான வீட்டுவசதியையும் எங்கள் பிள்ளைகளின் எதிர்காலத்திற்கு பாதுகாப்பான சூழலையுமே நாங்கள் கோருகிறோம்.'
எல்ஜின் தோட்டத்தின் மேல் பிரிவைச் சேர்ந்த ஒரு பெண் தொழிலாளி, “எங்கள் வீடுகள் வாழ்வதற்கு தகுதியற்றவை” என்றார். எட்டு ஆண்டுகளுக்கு முன்பு, அரசாங்க நில அளவை அதிகாரிகள் கூட, எங்கள் நிலம் வசிப்பதற்கு பாதுகாப்பற்றது என்று தெரிவித்திருந்தனர். ஆனால் அதைப்பற்றி யாரும் கவனம் செலுத்தவில்லை. இப்போது, நாங்கள் கடுமையான சிரமங்களை எதிர்கொள்கிறோம். எங்கள் பிள்ளைகளின் கல்வி முற்றிலுமாக பாதிக்கப்பட்டுள்ளது. இங்கு உயர் கல்விக்கான வசதிகள் இல்லை. அவர்கள் தலவாக்கலை அல்லது கொட்டகலையி உள்ள பாடசாலைகளுக்குச் செல்ல வேண்டும். எங்கள் தோட்டத்திற்கான போக்குவரத்து கிட்டத்தட்ட முழுமையாக சிதைந்துவிட்டது. நாங்கள் ஒரு பஸ் பிடிப்பதற்கு ஐந்து கிலோமீட்டர் தூரம் நடக்க வேண்டும் அல்லது ஒரு முச்சக்கர வண்டிக்கு 500 ரூபாய் செலுத்த வேண்டும். எல்லாவற்றிற்கும் மேலாக, எங்கள் குடும்பங்களுக்கு ஒழுக்கமான மற்றும் பாதுகாப்பான வீட்டுவசதியை நாங்கள் கோருகிறோம்.”
எல்ஜின் கீழ் பிரிவைச் சேர்ந்த 38 வயதான தொழிலாளியான லூயிஸ் மேரி, பின்வருமாறு கூறினார்: “2019 இல், எங்கள் தோட்டத்துக்கு அருகில் ஒரு நீர் மின் நிலையம் கட்டப்பட்டது. கட்டுமானத்தின் போது, அவர்கள் பெரிய பாறைகளை உடைக்க வெடிபொருட்களைப் பயன்படுத்தியதால், மலையின் பல பகுதிகளில் விரிசல்கள் ஏற்பட்டன. பாதுகாப்பான சூழல் மற்றும் சரியான வீட்டுவசதி கோரி, ஒரு மனித உரிமை அமைப்பு மூலம் நாங்கள் வழக்குத் தொடர்ந்தோம். ஆனால் அதிகாரிகள் எங்களை முற்றிலும் புறக்கணித்தனர்.”
70 வயதான ஒரு ஓய்வுபெற்ற தொழிலாளியான அமிர்த வாசஹா மேரி, “எங்கள் வீடுகள் வெள்ளத்தில் மூழ்கியபோது,எங்கள் வீடுகளுக்கு மேலே அமைந்துள்ள தேவாலயத்தில் தஞ்சம் புகுந்தோம்” என்றார். “கிராம சேவகர் வந்து எங்களைத் திரும்பிச் செல்ல வேண்டாம், திரும்பிச் சென்றால் எங்கள் உயிருக்கு நாங்களே பொறுப்பு என்று எச்சரித்தார். ஆனால், இப்போது அவர் எங்களைத் திரும்பிச் செல்ல கட்டாயப்படுத்தி, உணவு வழங்குவதை நிறுத்திவிட்டார். ஆறு வற்றிவிட்டாலும் கூட, எங்கள் வீடுகளைச் சுற்றியுள்ள மலைகள் நிலையற்றதாக இருப்பதால், நாங்கள் இன்னும் நிலச்சரிவு அபாயத்தில் இருக்கிறோம்.”
அம்பேவெல நீர்த்தேக்க அணையின் கதவுகள் நவம்பர் 27 அன்று, எந்த முன் எச்சரிக்கையும் இல்லாமல் திறக்கப்பட்டன என்றும் அவர் கூறினார். முன்கூட்டியே எங்களுக்குத் தெரிவிக்கப்பட்டிருந்தால், 'எங்கள் கால்நடைகளையும் கோழிகளையும் காப்பாற்றியிருக்கலாம்' என்று அவர் மேலும் கூறினார்.
66 வயதான ஓய்வுபெற்ற தொழிலாளியான சஹாய மேரி நிலைமையை விவரிக்கையில், “மூன்று நாட்களுக்குப் பிறகு, 476/எல் பிரிவின் கிராம சேவையாளர் சமலி, எங்களை மீண்டும் வீடு திரும்புமாறும், மீண்டும் தண்ணீர் உயர்ந்தால் தேவாலயத்திற்கு வருமாறும் கூறினார். ஆனால் தண்ணீர் எப்போது உயரும் என்பதை, குறிப்பாக நாம் தூங்கும்போது எப்படி அறிந்து கொள்வது? அது திடீரென்று தோன்றுகிறது, எங்களால் எதுவும் செய்ய முடியாது. அரசாங்கமோ அல்லது தோட்ட நிர்வாகமோ இதை பெரிதாக எடுத்துக்கொள்வதாகத் தெரியவில்லை,” என்றார்.
46 வயது தொழிலாளியான அந்தோனிதாஸ் சிரோன்மணி தெளிவித்ததாவது: 'எங்கள் வீடு ஆற்று நீரில் மூழ்கியது, இதனால் டிவி மற்றும் பிற மின்னணு சாதனங்கள் உட்பட மதிப்புமிக்க பொருட்கள் சேதமடைந்தன. எங்கள் அன்றாட ஊதியத்தில் அவற்றை வாங்க எங்களால் முடியாது. எமது ஊதியம் உணவுக்கு மட்டுமே போதுமானது. நாங்கள், ஒரு நாளைக்கு 18 கிலோகிராம் தேயிலை கொழுந்து பறிக்க வேண்டும். நாங்கள் அவ்வாறு செய்யாவிட்டால், எங்கள் ஊதியம் குறைக்கப்படும். எங்கள் வீடு ஆற்றுக்கு மிக அருகில் உள்ளது, அது மிகவும் ஆபத்தானது. நாங்கள் மூன்று நாட்கள் தேவாலயத்தில் தங்கினோம், ஆனால் இப்போது எங்களை வீடு திரும்பச் சொல்லியுள்ளனர். அரசாங்க அதிகாரிகளும் தொழிற்சங்கத் தலைவர்களும் வருகை தந்து உதவி செய்வதாக உறுதியளித்த போதிலும், நாங்கள் மீண்டும் அதே சூழ்நிலையில் வாழத் தள்ளப்பட்டுள்ளோம்.'
மற்றொரு தொழிலாளி ராஜேஸ்வரி ரங்கன், தனது வீடு வெள்ளத்தால் முற்றிலுமாக அழிந்துவிட்டதாகக் கூறினார். தற்போது, மிகவும் பாதிக்கப்பட்டவர்களாக அரசாங்கத்தால் அடையாளம் காணப்பட்ட 26 குடும்பங்கள் மட்டுமே இன்னும் தேவாலயத்தில் தங்கியுள்ளன. 'ஆனால் இடம்பெயர்ந்த 280 குடும்பங்களும் நிவாரணம், நிலம், சரியான வீட்டுவசதி ஆகியவற்றைக் கோருகின்றன,' என்று அவர் மேலும் கூறினார்.
WSWS செய்தியாளர்களுடன் பேசிய பல தொழிலாளர்கள், அரசாங்கம், தோட்ட நிறுவனங்கள் மற்றும் தோட்டத் தொழிற்சங்கங்களும் தங்கள் அவல நிலையை முற்றிலுமாக புறக்கணிப்பதாக குற்றம் சாட்டினர். அரசாங்கம் முதல் மூன்று நாட்களுக்கு மட்டுமே உணவு வழங்கியது. அதன் பிறகு, தொழிலாளர்கள் உள்ளூர்வாசிகள், தேவாலயங்கள் மற்றும் பிற சமூக அமைப்புகளின் ஆதரவை நம்பியிருக்க வேண்டியிருந்தது. அடிப்படை வசதிகள் எதுவும் இல்லை. கழிப்பறைகள் போதவில்லை. குழந்தைகளும் முதியவர்களும் மெத்தைகள் அல்லது பிற அத்தியாவசியப் பொருட்கள் இல்லாமல் தரையில் தூங்க நிர்ப்பந்திக்கப்பட்டனர்.
எல்ஜின் தோட்டத்தின் மேல் மற்றும் கீழ் பிரிவுகளைச் சேர்ந்த இடம்பெயர்ந்த குடும்பங்கள், நவம்பர் 27 முதல் தங்கக்கலை தமிழ்ப் பாடசாலையிலும் சகாயமாதா தேவாலயத்திலும் தங்கியுள்ளனர். ஒரு கட்டத்தில், 280 குடும்பங்களைச் சேர்ந்த 930 பேர் இருந்தனர்.
எல்ஜின் தோட்டம் இப்போது ஊவாக்கலை தோட்டத்துடன் இணைக்கப்பட்டு வரையறுக்கப்பட்ட ஹட்டன் பெருந்தோட்ட நிறுவனத்தால் நிர்வகிக்கப்படுகிறது. இது முன்னர் லிப்கெல்ல தோட்டத்தின் ஒரு பகுதியாக இருந்தது. இந்த தோட்டம், மலைகளாலும் அம்பேவெல நீர்த்தேக்க அணையாலும் சூழப்பட்டுள்ளது. மகாவலி நதியின் கிளை நதியான எல்ஜின் ஓயா, தொழிலாளர்களின் வீடுகளுக்கு அருகாமையில் பாய்கிறது.
மெரயா நகரத்திலிருந்து எல்ஜின், ஊவாக்கலை மற்றும் தங்கக்கலை தோட்டங்களுக்குச் செல்லும் வீதி வெள்ளத்தால் கடுமையாக சேதமடைந்துள்ளது. தற்போது, மெரயா நகரம் வரை மட்டுமே பேருந்துகள் இயக்கப்படுவதால் தொழிலாளர்கள் தங்கள் வீடுகளை அடைய ஐந்து கிலோமீட்டருக்கு மேல் நடக்கத் தள்ளப்பட்டுள்ளனர்.
நுவரெலியா மாவட்டத்தில், ரம்பொட, கொத்மலை, ராகலை, பூண்டுலோயா மற்றும் தலவாக்கலை உட்பட ஏனைய நகரங்களும் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளன.
ரம்பொடையில், தவலந்தென்ன சந்திக்கு அருகில் ஒரு பெரிய பாறை, வீடு மீது விழுந்ததில் மூன்று பேர் கொல்லப்பட்டனர். இந்த நிலச்சரிவு பெரும் சேதத்தை ஏற்படுத்தியதுடன் கண்டி-நுவரெலியா பிரதான வீதியின் ஒரு பகுதியை அழித்துள்ளது. கரன்டி எல்ல, ரம்பொடகம மற்றும் அம்பத்தலாவ ஆகிய மூன்று கிராமங்கள் வெள்ளத்தில் மூழ்கி, சுமார் 70 குடும்பங்கள் கொத்மலை நீர்த்தேக்க அணைக்குள் அடித்துச் செல்லப்பட்டன. பதின்மூன்று உடல்கள் மீட்கப்பட்டன, மேலும் பலர் காணாமல் போயுள்ளனர். 11 நாட்களாக அந்தப் பகுதியில் போக்குவரத்து மற்றும் மின்சாரம் துண்டிக்கப்பட்டிருந்தது.
ராகலையில் உள்ள ஹை ஃபோரஸ்ட் தேயிலைத் தோட்டத்தில் ஏற்பட்ட நிலச்சரிவில் 35 பேர் கொல்லப்பட்டனர். எட்டு உடல்கள் மீட்கப்பட்டுள்ள போதிலும், 27 பேரை இன்னும் காணவில்லை. சில வீடுகள் முற்றிலுமாக இடிந்து விழுந்துள்ளன; மற்றவை பகுதியளவு சேதமடைந்துள்ளன.
பூண்டுலோயாவில் உள்ள ஈடன் தோட்டமும் சொய்ஸி தோட்டமும் தற்போது நிலச்சரிவு அபாய எச்சரிக்கையின் கீழ் உள்ளன. இதன் விளைவாக, 105 பேர் இடம்பெயர்ந்து வேறு இடங்களில் பாதுகாப்பு தேடுகின்றனர். தலவாகலையில், ஒக்ஸ்போர்ட் தோட்டத்தில் 70 குடும்பங்களும் இதே ஆபத்து காரணமாக இடம்பெயர்ந்துள்ளனர்.
பெரும்பாலான தோட்டத் தொழிலாளர்கள் இன்னும் பிரிட்டிஷ் காலனித்துவ ஆட்சியின் போது, ஒரு நூற்றாண்டுக்கு முன்பு கட்டப்பட்ட 10 க்கு 12 அடி அளவிலான முகாம் போன்ற லயின் அறைகளில் வசிப்பதானது, ஆட்சியில் இருந்த அரசாங்கங்களும் தோட்டக் கம்பனிகளும் நீண்டகாலமாக அந்த மக்களை அலட்சியம் செய்து வந்துள்ளமை தெளிவாகத் தெரிகிறது. இந்த குடியிருப்புகளில் சுகாதாரம் மற்றும் கல்வி வசதிகள் உட்பட அடிப்படை உள்கட்டமைப்பு இல்லை.
பாதிக்கப்பட்டவர்களில் பலர் எமது செய்தியாளர்களிடம் கூறுகையில், தங்களுக்கு இன்னும் உருப்படியான உதவிகள் எதுவும் கிடைக்கவில்லை என்றும், சூறாவளியால் பாதிக்கப்பட்டவர்களின் வாழ்க்கை 'மீண்டும் நிலைநாட்டப்படும்' என்று தொடர்ந்து கூறி வரும் அரசாங்கத்தின் மீது தமக்கு நம்பிக்கை இல்லை என்றும் தெரிவித்தனர்.
மேலும் படிக்க
- இலங்கை: டிட்வா சூறாவளிப் பேரழிவு சம்பந்தமாக வெகுஜனக் கோபம் அதிகரிக்கும் நிலையில் ஜே.வி.பி./தே.ம.ச. அரசாங்கம் கருத்துச் சுதந்திரத்தை நசுக்குவதற்காக அவசரகால அதிகாரங்களைப் பயன்படுத்துகின்றது
- இலங்கை மற்றும் ஆசியாவில் பாரிய வெள்ளத்தால் ஏற்பட்ட மனிதப் பேரழிவு: எப்படி நடந்தது?
- டிட்வா சூறாவளி இலங்கையில் கம்பளை மற்றும் அதைச் சுற்றியுள்ள கிராமங்களுக்கு பாரிய அழிவை ஏற்படுத்தியுள்ளது
- இலங்கை: மத்திய பெருந்தோட்ட மாவட்டத்தில் டிட்வா சூறாவளியில் இருந்து தப்பியவர்கள் நிரந்தர வீடுகளைக் கோருவதோடு தோட்ட நிர்வாகத்தைக் கண்டிக்கின்றனர்.
- ஆசியாவில் ஏற்பட்ட கடுமையான வெள்ளப்பெருக்கில் 1,500க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர், நூற்றுக்கணக்கானோர் காணாமல் போயினர்
- இலங்கையில் டிட்வா சூறாவளி பேரழிவைத் தொடர்ந்து பாரிய மனிதாபிமான நெருக்கடி உருவாகியுள்ளது
