மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம்.
கிரீன்லாந்தைக் கையகப்படுத்த வேண்டும் என்ற அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் கோரிக்கையை டென்மார்க் மற்றும் கிரீன்லாந்து செவ்வாய்க்கிழமை நிராகரித்தன. துணை ஜனாதிபதி ஜே.டி. வான்ஸ் மற்றும் வெளியுறவுத்துறை அமைச்சர் மார்கோ ரூபியோ ஆகியோருடன் வெள்ளை மாளிகையில் நடந்த சந்திப்பைத் தொடர்ந்து இந்த நிராகரிப்பு வெளியானது. அதே நேரத்தில், ஐரோப்பிய நேட்டோ (NATO) உறுப்பு நாடுகள் அந்த ஆர்க்டிக் தீவிற்குத் தங்கள் படைகளை அனுப்பி வருகின்றன.
“எங்களுக்குள் அடிப்படை கருத்து வேறுபாடு உள்ளது,” என்று வாஷிங்டனில் உள்ள டென்மார்க் தூதரகத்தில் செய்தியாளர்களிடம் பேசிய டென்மார்க் வெளியுறவுத்துறை அமைச்சர் லார்ஸ் லோக்கி ராஸ்முசென் தெரிவித்தார். ட்ரம்பின் “கிரீன்லாந்தைக் கைப்பற்றும் விருப்பத்தை” நிராகரித்த ராஸ்முசென், “இது எங்கள் இராஜ்ஜியத்தின் நலன்களுக்கு எதிரானது” என்று வலியுறுத்தினார்.
“ஜனாதிபதி தனது கருத்தைத் தெளிவாகத் தெரிவித்துள்ளார், எங்களுக்கு வேறு நிலைப்பாடு உள்ளது” என்று அவர் கூறினார். மேலும், “டென்மார்க் இராஜ்ஜியத்தின் பிராந்திய ஒருமைப்பாட்டையும், கிரீன்லாந்து மக்களின் சுயநிர்ணய உரிமையையும் மதிக்காத கருத்துக்கள் முற்றிலும் ஏற்றுக்கொள்ள முடியாதவை” என்றும் அவர் குறிப்பிட்டார்.
செவ்வாய்க்கிழமை வெள்ளை மாளிகையில் நடந்த மற்றொரு நிகழ்வில் பேசிய ட்ரம்ப், தனது கோரிக்கையை மீண்டும் வலியுறுத்தினார். “தேசிய பாதுகாப்பிற்காக எமக்கு கிரீன்லாந்து தேவை,” என்று அவர் அறிவித்தார். “நாங்கள் அங்கு செல்லவில்லை என்றால், ரஷ்யாவும் சீனாவும் உள்ளே நுழைந்துவிடும். அதைத் தடுக்க டென்மார்க்கால் எதுவும் செய்ய முடியாது, ஆனால் எங்களால் எல்லாவற்றையும் செய்ய முடியும்,” என்றார்.
நேட்டோ நட்பு நாட்டிற்கு எதிராக இராணுவப் பலத்தைப் பயன்படுத்துவதைத் தவிர்ப்பீர்களா என்று கேட்கப்பட்டபோது, ட்ரம்ப் அதற்குப் பதிலளிக்க மறுத்துவிட்டார். “நிச்சயமாக நான் எனது வாய்ப்புகளை விட்டுக்கொடுக்கப் போவதில்லை,” என்று அவர் கூறினார்.
ஐரோப்பியப் படைகள் கிரீன்லாந்திற்கு அனுப்பப்பட்டு வரும் சூழலில் இந்த அச்சுறுத்தல்கள் வந்துள்ளன. டென்மார்க் தனது இராணுவ வலுவூட்டலை அறிவித்துள்ளது. அதே நேரத்தில் ஜேர்மனி 13 படையினர்களையும், நோர்வே இரண்டு இராணுவ சிப்பாய்களையும், சுவீடன் குறிப்பிட்ட எண்ணிக்கையிலான அதிகாரிகளையும் “ஆர்க்டிக் உறுதிப்பாட்டு நடவடிக்கைக்காக” அனுப்புகின்றன. பிரான்ஸ், மலைகளில் போர்புரியும் தனது படைப் பிரிவுகளை அனுப்பி வருகிறது. கனடா, நெதர்லாந்து மற்றும் ஐக்கிய இராச்சியம் (UK) ஆகிய நாடுகள் இதில் பங்கேற்பதை உறுதிப்படுத்தியுள்ளன அல்லது பரிசீலித்து வருகின்றன.
கிரீன்லாந்து டென்மார்க்கின் ஒரு தன்னாட்சிப் பிரதேசமாகும். டென்மார்க் நேட்டோ கூட்டணியின் ஒரு நிறுவன உறுப்பு நாடு என்பதோடு, அதன் 5-வது பிரிவின் (Article 5) கீழ் பாதுகாக்கப்படுகிறது. இப்பிரிவின்படி, ஒரு உறுப்பு நாடு தாக்கப்பட்டால் மற்ற அனைத்து நேட்டோ நாடுகளும் அதைப் பாதுகாக்க கட்டாயமாக முன்வர வேண்டும் என்பதாகும்.
கடந்த ஞாயிற்றுக்கிழமை, டென்மார்க் பிரதமர் மெட்டே ஃபிரடெரிக்சன், இது ஒரு “தீர்மானிக்கத்தக்க தருணம்” என்று அறிவித்தார். மேலும், “அமெரிக்கா மற்றொரு நேட்டோ நாட்டின் மீது தாக்குதல் நடத்தினால், அனைத்தும் முடிவுக்கு வரும்” என்று எச்சரித்தார். செவ்வாய்க்கிழமை, சுவீடன் பிரதமர் உல்ஃப் கிறிஸ்டர்சன், அமெரிக்காவின் “அச்சுறுத்தல் தரக்கூடிய பேச்சுகளை” கண்டித்தார். மேலும், “டென்மார்க்கின் வேண்டுகோளின் பேரில்” அதிகாரிகள் கிரீன்லாந்திற்கு வந்து கொண்டிருப்பதை உறுதிப்படுத்தினார்.
இந்த நெருக்கடி ஐரோப்பிய தலைவர்களிடமிருந்து கடுமையான எச்சரிக்கைகளைத் தூண்டியுள்ளது. பிரெஞ்சு ஜனாதிபதி இம்மானுவேல் மக்ரோன் கடந்த வாரம் எலிசே அரண்மனையில் தூதர்களிடம் பேசுகையில்: “கிரீன்லாந்து படையெடுப்பிற்கு உள்ளாகுமா, கனடா 51-வது மாநிலமாக மாற்றப்படுமா அல்லது தைவான் மேலும் சுற்றி வளைக்கப்படுமா என்று மக்கள் ஒவ்வொரு நாளும் யோசிக்கிறார்கள்” என்றார். அமெரிக்கா “தனது சில கூட்டாளிகளைப் புறக்கணிப்பதோடு, சர்வதேச விதிகளை மீறி செயல்படுகிறது” என்றும் மக்ரோன் குற்றம் சாட்டினார்.
ஜேர்மன் ஜனாதிபதி பிராங்க்-வால்டர் ஸ்டெய்ன்மியர் ஜனவரி 7-ஆம் தேதி ஆற்றிய உரையில், “இந்த உலக ஒழுங்கைக் கட்டியெழுப்ப உதவிய எமது மிக முக்கியமான பங்காளியான அமெரிக்காவால் மதிப்புகள் சிதைக்கப்படுவது” குறித்து எச்சரித்தார். “உலகம் ஒரு கொள்ளையர்களின் கூடாரமாக மாறுவதைத் தடுப்பதே இதன் நோக்கம், அங்கு மனசாட்சியற்றவர்கள் தங்களுக்குத் தேவையான எதையும் எடுத்துக் கொள்வார்கள்,” என்று அவர் கூறினார்.
ஜனவரி 12-13 தேதிகளில் நடத்தப்பட்ட ராய்ட்டர்ஸ்/இப்சோஸ் (Reuters/Ipsos) கருத்துக்கணிப்பின்படி, கிரீன்லாந்தைக் கையகப்படுத்தும் அமெரிக்காவின் முயற்சிக்கு 17 சதவீத அமெரிக்கர்கள் மட்டுமே ஒப்புதல் அளித்துள்ளனர். அதே நேரத்தில், 47 சதவீதம் பேர் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இராணுவ பலத்தைப் பயன்படுத்துவது “நல்ல யோசனை” என்று 4 சதவீதம் பேர் மட்டுமே கூறியுள்ளனர், 71 சதவீதம் பேர் அது “கெட்ட யோசனை” என்று கூறியுள்ளனர்—இதில் 60 சதவீத குடியரசுக் கட்சியினரும் அடங்குவர். சுமார் 85 சதவீத கிரீன்லாந்து மக்கள் அமெரிக்காவுடன் இணைவதை எதிர்ப்பதாகக் கருத்துக்கணிப்புகள் தெரிவிக்கின்றன.
கிரீன்லாந்து, ஐஸ்லாந்து மற்றும் ஐக்கிய இராச்சியம் ஆகியவற்றிற்கு இடையே உள்ள முக்கியமான கடல்வழிப் பாதையான GIUK இடைவெளியை (GIUK Gap) கிரீன்லாந்து தன் கட்டுப்பாட்டில் கொண்டுள்ளது. ரஷ்யாவின் வடக்குக் கடற்படை அட்லாண்டிக் பெருங்கடலை அடைய இந்தப் பாதை வழியாகத்தான் சென்றாக வேண்டும். காலநிலையில் ஏற்பட்டுவரும் மாற்றமானது, ஆர்க்டிக் கப்பல் வழித்தடங்களைத் திறந்து வருகிறது, இது உலகளாவிய வர்த்தகத்தையே மாற்றியமைக்கக்கூடும். வடக்கு பசிபிக் மற்றும் வடக்கு ஐரோப்பாவிற்கு இடையிலான வழி, சூயஸ் கால்வாய் வழியை விட 40 சதவீதம் குறுகியதாகும்.
கிரீன்லாந்தின் இராணுவ வலிமைக்கு அப்பால், அங்கு சுமார் 1.5 மில்லியன் டன் அரிய வகை கனிமங்கள் இருப்பதாக மதிப்பிடப்பட்டுள்ளது. —இது சீனாவிற்கு அடுத்தபடியாக உலகின் இரண்டாவது பெரிய இருப்பாக இருக்கலாம்— அத்துடன், தாமிரம், கிராஃபைட் மற்றும் மேம்பட்ட ஆயுத அமைப்புகள் மற்றும் செயற்கை நுண்ணறிவு (AI) உள்கட்டமைப்பிற்கு அவசியமான பிற முக்கியமான கனிமங்களின் பெரும் வைப்புகளும் அங்கு உள்ளன.
யுரேசியா குரூப் அரசியல் அபாய ஆலோசனை நிறுவனத்தைச் சேர்ந்த கிளேட்டன் ஆலன் கடந்த வாரம் CNBC-யிடம் கூறுகையில்: “ட்ரம்பைப் பொறுத்தவரை அவர் ஒரு ரியல் எஸ்டேட் நபர். அடுத்த முப்பது முதல் ஐம்பது ஆண்டுகால பொருளாதார அனுகூலம் மற்றும் மூலோபாய பாதுகாப்பு அடிப்படையில், கிரீன்லாந்து மிகவும் மதிப்புமிக்க ஒரு நிலப்பரப்பாக உள்ளது,” என்றார்.
உலகெங்கிலும் அமெரிக்க இராணுவ வன்முறை வெடித்துள்ளதன் ஒரு பகுதியாகவே இந்த கிரீன்லாந்து தொடர்பான மோதல் போக்கு அமைந்துள்ளது. ஜனவரி 3 அன்று, அமெரிக்கப் படைகள் வெனிசுவேலா மீது இரவு நேரத் தாக்குதலை நடத்தின. இதில், 100-க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டனர் மற்றும் ஜனாதிபதி நிக்கோலஸ் மதுரோ கடத்தப்பட்டார். இந்த நடவடிக்கையில் 15,000-க்கும் மேற்பட்ட படையினர்கள், USS Gerald R. Ford விமானம் தாங்கி கப்பல் மற்றும் ஆளில்லா விமானங்கள் மற்றும் ஏவுகணைத் தாக்குதல்கள் பயன்படுத்தப்பட்டன. மதுரோ நியூ யோர்க்கிற்கு கொண்டு வரப்பட்டு, அங்குள்ள மத்திய கூட்டாட்சி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். வெனிசுவேலாவின் எண்ணெயை 500 மில்லியன் டாலருக்கு விற்பனை செய்து முடித்துள்ளதாகவும், அந்தத் தொகை கத்தாரில் உள்ள வங்கி கணக்குகளில் அமெரிக்கக் கட்டுப்பாட்டில் வைக்கப்பட்டுள்ளதாகவும் ட்ரம்ப் நிர்வாகம் செவ்வாய்க்கிழமை அறிவித்தது.
அதே நேரத்தில், ஈரான் மீது இராணுவத் தாக்குதல்களை நடத்தவும் அமெரிக்க நிர்வாகம் தயாராகி வருகிறது. ஈரான் மீது “அமெரிக்க இராணுவத்தின் உயிருக்கு ஆபத்தான வலிமையையும் வீரியத்தையும் பயன்படுத்த ட்ரம்ப் அஞ்சமாட்டார்” என்று வெள்ளை மாளிகை செய்தித் தொடர்பாளர் கரோலின் லெவிட் திங்களன்று தெரிவித்தார். மேலும், “பரிசீலனையில் உள்ள பல விருப்பத் தேர்வுகளில் விமானத் தாக்குதல்களும் ஒன்று” என்றும் அவர் கூறினார். ஈரானின் அணுசக்தி திட்டம் மற்றும் பாலிஸ்டிக் ஏவுகணை தளங்கள் மீதான தாக்குதல் திட்டங்கள் உள்ளிட்ட இராணுவ விளக்கங்களை செவ்வாய்க்கிழமை பென்டகனிடமிருந்து ட்ரம்ப் பெற்றுக்கொண்டார்.”
இந்த இராணுவவாதத்திற்கு மத்தியில், வரலாற்றிலேயே மிகப்பெரிய அளவிலான 1.5 டிரில்லியன் டாலர் பாதுகாப்பு வரவுசெலவுத் திட்டத்திற்கான திட்டங்களை ட்ரம்ப் அறிவித்தார். வாஷிங்டன் போஸ்ட் இதழின் தலையங்கம், “1.5 டிரில்லியன் டாலர் பாதுகாப்புச் செலவினத்திற்கான ட்ரம்பின் வரவேற்புக்குரிய உந்துதல்” என்ற தலைப்பில் ஒரு கட்டுரையை வெளியிட்டு, இந்த முன்மொழிவை “சரியான உத்வேகம்” என்று பாராட்டியது.
வெனிசுவேலாவில் ட்ரம்பின் அதிகாரத்தை சவால் செய்யும் போர் அதிகாரத் தீர்மானத்தை முறியடிக்க செனட் சபை புதன்கிழமை மாலை வாக்களித்தது. மிசூரியின் ஜோஷ் ஹாவ்லி மற்றும் இந்தியானாவின் டாட் யங் ஆகிய இரண்டு குடியரசுக் கட்சி செனட்டர்கள், ட்ரம்பின் கடுமையான அழுத்தத்தைத் தொடர்ந்து தங்கள் நிலப்பாட்டை மாற்றிக்கொண்டனர். இதனால் ஏற்பட்ட சமநிலையை உடைக்க, துணை ஜனாதிபதி வான்ஸ் தனது வாக்கினைப் பதிவு செய்தார். ஜனாதிபதி அந்த செனட்டர்களைத் தொலைபேசியில் அழைத்து “ஆவேசமாகப்” பேசியதாகவும், குடியரசுக் கட்சியிலுள்ள எதிர்ப்பாளர்களை “பயனற்ற தோல்வியாளர்கள்” மற்றும் “பேரழிவு” என்று பகிரங்கமாக விமர்சித்ததாகவும் கூறப்படுகிறது.
கரீபியன் முதல் ஆர்க்டிக் வரை, உலகெங்கிலும் அமெரிக்க இராணுவ வன்முறை வெடிப்பது, அமெரிக்க முதலாளித்துவத்தின் இறுதி நெருக்கடியைப் பிரதிபலிக்கிறது. பொருளாதாரப் போட்டியின் மூலம் தனது உலகளாவிய நிலையைத் தக்கவைக்க முடியாத நிலையில், அமெரிக்க ஆளும் வர்க்கம் வளங்களைக் கைப்பற்றவும், போட்டியாளர்களை அடிபணியச் செய்யவும், நேரடி இராணுவ வலிமையைப் பயன்படுத்துகிறது. ட்ரம்ப் சட்டப்பூர்வமான பாசாங்குகளைக் கூட கைவிட்டுவிட்டார். “எனக்கு சர்வதேச சட்டம் தேவையில்லை” என்று அவர் கடந்த வாரம் நியூ யோர்க் டைம்ஸிடம் கூறினார். அவரது அதிகாரத்திற்கு என்ன வரம்புகள் உள்ளன என்று அவரிடம் கேட்டபோது, “எனது சொந்த அறநெறி. எனது சொந்த மனநிலை. அது மட்டுமே என்னைத் தடுக்கக்கூடிய ஒரே விஷயம்” என்று பதிலளித்தார்:
இரு கட்சிகளுமே (குடியரசுக் கட்சி மற்றும் ஜனநாயகக் கட்சி) இந்தச் சட்டவிரோதத்தை ஆதரித்துள்ளன. டிசம்பர் மாதம், 115 ஜனநாயகக் கட்சி உறுப்பினர்கள் வரலாற்றிலேயே மிகப்பெரிய தொகையான 901 பில்லியன் டாலர் பாதுகாப்பு அங்கீகார மசோதாவிற்கு ஆதரவாக வாக்களித்தனர்.
