மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம்.
கடந்த செவ்வாயன்று, மினசோட்டாவின் மினியாபோலிஸில் உள்ள உள்ளூர் தொழிற்சங்கங்கள் மற்றும் சமூக அமைப்புகளின் கூட்டமைப்பு, வரும் ஜனவரி 23 வெள்ளிக்கிழமை அன்று வெளிநடப்பு செய்ய அழைப்பு விடுத்துள்ளன. இது ரெனீ நிக்கோல் குட் கொல்லப்பட்டது உட்பட, ட்ரம்ப்பின் குடிவரவு மற்றும் சுங்க அமலாக்கத் துறையின் (ICE) வெறியாட்டத்தை எதிர்ப்பதற்கான ஒரு நாள் பொது வேலைநிறுத்தம் மற்றும் மாநிலம் தழுவிய பொருளாதார முடக்கமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
சோசலிச சமத்துவக் கட்சி இந்த நடவடிக்கையை ஆதரிப்பதோடு தொழிலாளர்கள், மாணவர்கள் மற்றும் இளைஞர்கள் சாத்தியமான பரந்த அளவில், இதில் பங்குபற்ற வேண்டும் என்று அழைப்பு விடுக்கின்றது. தங்கள் நகரம் துணை இராணுவத்தால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளதைக் கண்டு ஆத்திரமடைந்துள்ள மினசோட்டா முழுவதிலும் உள்ள உழைக்கும் மக்களின் அழுத்தத்தினால் இந்த வெளிநடப்பு செய்வதற்கான அழைப்பு எழுந்துள்ளது. சமீபத்தில் வெளியான அறிக்கைகளின்படி, ICE அதிகாரிகளிடமிருந்து தப்பிச் செல்ல முயன்றபோது, மார்பில் இரண்டு முறையும் முன்கையில் ஒரு முறையும் சுடப்பட்டு கொடூரமாகக் கொல்லப்பட்ட ரெனீ குட்டின் மரணத்திற்குப் பிறகு, கடந்த 10 நாட்களாக போராட்டங்கள் பரவி வருகின்றன.
பொது வேலைநிறுத்தத்திற்கான அழைப்பு மினியாபோலிஸில் ICE இன் பயங்கரவாத வெறியாட்டத்துக்கு எதிரான போராட்டத்தில் ஒரு முக்கியமான முன்னேற்றமாக நிரூபிக்கப்படலாம். ஆனால், இந்த நடவடிக்கை அந்த நகரம், மாநிலம் மற்றும் நாடு முழுவதும் ட்ரம்ப் நிர்வாகத்திற்கு எதிராக தொழிலாளர் வர்க்கம் மேற்கொள்ளும் ஒரு பரந்த அணிதிரட்டலின் தொடக்கமாகக் கருதப்பட வேண்டும்.
மினசோட்டாவில் கிளர்ச்சிச் சட்டத்தை (Insurrection Act) அமல்படுத்தப்போவதாக ட்ரம்ப் அச்சுறுத்தியுள்ள நிலையில் இந்த போராட்ட அழைப்பு வந்துள்ளது. இது ஒரு சர்வாதிகாரத்தை நிறுவுவதற்கான அவரது சதித்திட்டத்தின் ஒரு பண்பு ரீதியான விரிவாக்கமாகும்.
ரெனீ குட் கொல்லப்பட்டதற்கு எதிராக வெடித்துள்ள போராட்டங்களுக்கு பதிலளிக்கும் விதமாக, ட்ரம்ப் தனது ட்ரூத் சமூக வலைத்தள பதிவில், மாநில அதிகாரிகள் “தொழில்முறை கிளர்ச்சியாளர்கள் மற்றும் கலகக்காரர்கள், குடிவரவு மற்றும் சுங்க அமலாக்கத் துறையை சேர்ந்த தேசபக்தர்களைத் தாக்குவதை நிறுத்தவில்லை என்றால், நான் கிளர்ச்சிச் சட்டத்தை அமல்படுத்துவேன்... ஒரு காலத்தில் சிறந்த மாநிலமாக இருந்த அங்கு நடக்கும் இந்த அவலத்திற்கு விரைவில் முற்றுப்புள்ளி வைப்பேன்” என்று அறிவித்துள்ளார்.
போராட்டங்களையும் மக்கள் எதிர்ப்பையும் “கிளர்ச்சி” என்று முத்திரை குத்துவதன் மூலம், ட்ரம்ப்பின் ஆட்சி பெருமளவிலான வன்முறைக்கு களம் அமைத்து வருகிறது. இந்த கிளர்ச்சிச் சட்டம், போஸ் கொமிட்டாட்டஸ் (Posse Comitatus) சட்டத்தை மீறி, அமெரிக்க இராணுவத்தை நாட்டுக்குள் நிலைநிறுத்துவதற்கான அதிகாரத்தை ஜனாதிபதிக்கு வழங்குகிறது. மினசோட்டாவின் மக்களுக்கு எதிராக கிளர்ச்சிச் சட்டத்தைப் பயன்படுத்துவதாக ட்ரம்ப்பின் அச்சுறுத்தல் —மாநிலத்தின் எந்தவொரு கோரிக்கையும் இல்லாமல், அமைதியான போராட்டங்களுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக— அப்பட்டமாக சட்டவிரோதமானது.
கடந்த புதன்கிழமை மாலை ஜனநாயகக் கட்சி ஆளுநர் டிம் வால்ஸ் வெளியிட்ட அசாதாரண அறிக்கையில், தற்போது என்ன நடக்கிறது என்பது குறித்த அப்பட்டமான உண்மை ஒப்புக்கொள்ளப்பட்டுள்ளது. மாநிலத்தில் நடக்கும் முன்னேற்றங்கள் “நம்பிக்கைக்கு அப்பாற்பட்டவை” என்றும், “மத்திய அரசாங்கம் எமது சமூகங்களின் மீது பொழிந்து வரும் குழப்பம், இடையூறு மற்றும் அதிர்ச்சியின் அளவை செய்திகள் வெளிப்படுத்தும் உண்மைகளால் ஈடு செய்ய முடியாது” என்றும் அவர் அறிவித்தார்.
“மத்திய கூட்டாட்சி அரசாங்கத்தின் இரண்டாயிரம் முதல் மூவாயிரம் வரையிலான ஆயுதம் ஏந்திய ஏஜெண்டுகள்” மாநிலம் முழுவதும் குவிக்கப்பட்டுள்ளதாகவும், அவர்கள் வீடு வீடாகச் செல்வதாகவும் வால்ஸ் குறிப்பிட்டார். மேலும் அவர்கள் “அமெரிக்க குடிமக்கள் உட்பட மக்களை பாரபட்சமின்றி தடுத்து நிறுத்தி, அவர்களின் ஆவணங்களைக் காட்டுமாறு கோருகின்றனர்” என்றும், “ஜன்னல்களை உடைப்பது, கர்ப்பிணிப் பெண்களைத் தெருவில் இழுத்துச் செல்வது, மினசோட்டா மக்களை எவ்வித முன்னறிவிப்புமின்றி பிடித்து அடையாளமற்ற வேன்களில் தள்ளுவது மற்றும் எந்தவித சட்ட நடைமுறையுமின்றி அப்பாவி மக்களைக் கடத்துவது” போன்ற செயல்களில் ஈடுபடுவதாகவும் அவர் தெரிவித்தார்.
இந்த நடவடிக்கையை “நமது சொந்த மத்திய கூட்டாட்சி அரசாங்கத்தால் மினசோட்டா மக்களுக்கு எதிராக கட்டவிழ்த்துவிடப்படும் திட்டமிட்ட அட்டூழிய தாக்குதல்கள்” என்று வால்ஸ் விவரித்தார். “பழிவாங்கும் மற்றும் கணக்குத் தீர்க்கும் நாள் வந்துவிட்டது” என்ற ட்ரம்ப்பின் பாசிச அச்சுறுத்தலைக் குறிப்பிட்ட ஆளுநர், “அது இந்த மாநில மக்களுக்கு விடுக்கப்பட்ட நேரடி அச்சுறுத்தலாகும்” என்று கூறினார்.
மினியாபோலிஸ் நிலைமை குறித்து வால்ஸ் கூறியது உண்மைதான். ஆனால், ட்ரம்ப் மற்றும் ICE ஏஜென்டுகளை தடுப்பதற்கான எந்தவொரு தீவிரமான மூலோபாயமும் அங்கு முற்றிலும் இல்லை. “நீதிமன்றங்களிலும் வாக்குப்பெட்டிகளிலும்” சண்டையிடுவது பற்றி வால்ஸ் பேசினார். ஆனால், தனது அதிகாரத்திற்கு சவால் விடும் எந்தவொரு சட்ட முடிவுகளையும் தான் புறக்கணிக்கப் போவதாக ட்ரம்ப் ஏற்கனவே தெளிவுபடுத்தியுள்ளார். அனைத்திற்கும் மேலாக 2024 இல், பாசிஸ்டுகள் மற்றும் பிற்போக்குவாதிகளின் ஒரு கும்பலால் கட்டுப்படுத்தப்படுகின்ற உச்ச நீதிமன்றம், ட்ரம்ப் ஜனாதிபதியாக இருந்து மேற்கொள்ளும் “அதிகாரப்பூர்வ செயல்களுக்காக” வழக்குத் தொடர முடியாது என்று தீர்ப்பளித்தது.
தேர்தல்களைப் பொறுத்த வரையில், 2026 இடைக்காலத் தேர்தல்களை ரத்து செய்யவோ அல்லது செல்லாது என அறிவிக்கவோ, அல்லது அத்தேர்தல்கள் நடத்தப்பட்டால் இராணுவச் சட்டத்தின் கீழ் அவற்றை நடத்தவோ ட்ரம்ப் முன்னெப்போதும் இல்லாத வகையில் பகிரங்கமாக அச்சுறுத்தி வருகிறார். வியாழக்கிழமை அன்று ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனத்திற்கு அளித்த பேட்டியில், தான் பல சாதனைகளைச் செய்துள்ளதால், “எமக்கு ஒரு தேர்தலே தேவையில்லை” என்று ட்ரம்ப் அறிவித்துள்ளார்.
அரசாங்கம் ஒரு தேசிய வாக்காளர் தரவுத்தளத்தை உருவாக்கி வருவதாகவும், சமூக பாதுகாப்பு எண்கள் மற்றும் வீட்டு முகவரிகள் உள்ளிட்ட முழுமையான வாக்காளர் பட்டியல்களை ஒப்படைக்குமாறு மாநிலங்களை வற்புறுத்தி வருவதாகவும் ப்ளூம்பெர்க் பத்திரிகை புதன்கிழமை செய்தி வெளியிட்டுள்ளது. இந்த உள்கட்டமைப்பு செயல்பாட்டுக்கு வந்தால், வாக்காளர்களை “சரிபார்க்கவும்”, வாக்குப்பதிவைக் குறைக்கவும், தொழிலாளர் வர்க்கம் மற்றும் புலம்பெயர்ந்த சமூகங்களை அச்சுறுத்தவும் வாக்குச் சாவடிகளில் ICE ஏஜெண்டுகள் நிறுத்தப்படலாம்.
இந்த மாத தொடக்கத்தில் வாஷிங்டன் வெனிசுவேலா மீது நடத்திய படையெடுப்பை விளக்கும் போது, வெளியுறவுத்துறை செயலாளர் மார்க்கோ ரூபியோ, “அவர் (ட்ரம்ப்) ஒன்றைச் செய்வேன் என்று சொன்னால், அதைச் செய்வார் என்றுதான் அர்த்தம்” என அப்பட்டமாகத் தெரிவித்தார். இதே தர்க்கம் தான் இப்போது கிளர்ச்சிச் சட்டத்தை அமல்படுத்துவது, தேர்தல்களை ரத்து செய்வது மற்றும் இராணுவச் சட்டத்தை திணிப்பது போன்ற ட்ரம்ப்பின் அச்சுறுத்தல்களுக்கும் பொருந்தும்.
மினியாபோலிஸில் நடந்து வரும் போலீஸ்-அரசின் ஆக்கிரமிப்பிற்கும், ட்ரம்ப்பின் விரிவடைந்து வரும் சதித்திட்டத்திற்கும் உள்ளூரிலும் அதற்கு அப்பாலும் பெரும் எதிர்ப்பு நிலவுகிறது. ரெனீ குட் கொல்லப்பட்டதிலிருந்து கடந்த ஒரு வாரமாக, தினசரி ஆர்ப்பாட்டங்கள், உயர்நிலைப் பள்ளி மாணவர்களின் வெளிநடப்பு, மற்றும் மக்கள் தொகையின் பரந்த பிரிவினர் பங்கேற்கும் எதிர்ப்பு போராட்ட நடவடிக்கைகள் நடந்து வருகின்றன.
ஆனால், அனைத்து செல்வங்களையும் உற்பத்தி செய்யும் மற்றும் சமூகத்தையே ஸ்தம்பிக்க வைக்கும் வல்லமை கொண்ட மாபெரும் சமூக சக்தியான தொழிலாளர் வர்க்கத்தின் தீவிர அணிதிரட்டலை அடிப்படையாகக் கொண்டால் மட்டுமே, இந்த எதிர்ப்பு வெற்றி பெறும். ஜனநாயகக் கட்சியின் போராட்டமற்ற மற்றும் இணக்கமான போக்கிலிருந்து விலகி, தொழிலாளர்களின் பாரிய இயக்கத்தின் ஒரு சுயாதீனமான அமைப்பை நோக்கி நகர்வதே இப்போதைய தேவையாகும்.
இதுதான், ஜனவரி 23 அன்று அழைப்பு விடுக்கப்பட்ட நடவடிக்கையின் முக்கியத்துவம் ஆகும். மினியாபோலிஸ் ஆக்கிரமிப்பிற்குப் பதிலடியாக ஒரு பொது வேலைநிறுத்த இயக்கம் தேவை என்பதை உலக சோசலிச வலைத் தளம் மீண்டும் மீண்டும் வலியுறுத்தி வருகிறது. ஆனால் ஒரு பொது வேலைநிறுத்தம் என்பது அடையாளப் போராட்டமோ அல்லது, நுகர்வோர் புறக்கணிப்போ அல்ல. மாறாக, அதன் பொருள் உற்பத்தி மற்றும் பொருளாதார நடவடிக்கைகளை முழுமையாக முடக்குவதாகும்.
வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடுவது பொது ஊழியர் சட்டங்கள் மற்றும் கூட்டுப் பேரம் பேசும் ஒப்பந்தங்களின்படி தடைசெய்யப்பட்டுள்ளது என ஆளுநரால் நியமிக்கப்பட்ட பெருநகர சபை விடுத்துள்ள அச்சுறுத்தல்களை தொழிலாளர்கள் நிராகரிக்க வேண்டும். ட்ரம்ப் நிர்வாகம் சட்டத்தின் எல்லைகளுக்கு வெளியே பகிரங்கமாகச் செயல்பட்டு வருகிறது. வர்க்கப் போராட்டத்தை அடக்குவதற்கு, தொழிற்சங்க எந்திரத்தால் பேச்சுவார்த்தை நடத்தப்படும் ஒப்பந்த நுணுக்கங்களுக்கு ஜனநாயக உரிமைகளைப் பாதுகாப்பதைக் கீழ்ப்படுத்த முடியாது.
மேலும், ஒட்டுமொத்த தொழிலாளர் வர்க்கமும் அணிதிரட்டப்பட வேண்டும். பல உள்ளூர் தொழிற்சங்கங்கள் ஜனவரி 23 ஆர்ப்பாட்டத்திற்கு ஆதரவு தெரிவித்துள்ள போதிலும், ஜனநாயகக் கட்சியுடன் நெருங்கிய தொடர்புடைய மினசோட்டா AFL-CIO தொழிற்சங்கம் இதுவரை அதற்கு ஆதரவளிக்க மறுத்துவிட்டது. ரெனீ நிக்கோல் குட் கொல்லப்பட்டதைத் தொடர்ந்து, மாநில தொழிலாளர் கூட்டமைப்பு ஒரு அறிக்கையை வெளியிட்டது. அதில் தான் “அதிர்ச்சியும், மனவேதனையும், ஆத்திரமும்” அடைந்துள்ளதாக கூட்டமைப்பு தெரிவித்தது, ஆனால், எந்தவொரு போராட்டத்திற்கும் அது அழைப்பு விடுக்கவில்லை. அதற்குப் பதிலாக, “முழுமையான விசாரணை” மீதும் “தேர்ந்தெடுக்கப்பட்ட அதிகாரிகளிடம்” முறையிடுவதன் மீதும் தொழிலாளர்களை நம்பிக்கை வைக்குமாறு அது திசைதிருப்பியது.
வியாழனன்று உலக சோசலிச வலைத் தளத்திற்கு கருத்துத் தெரிவித்த மினசோட்டா AFL-CIO தொழிற் சங்கத்தின் தலைவர் பெர்னி பர்ன்ஹாம், வேலைநிறுத்தம் அல்லது ஜனவரி 23 போராட்டத்திற்கு ஆதரவு அளிப்பது குறித்த எந்தவொரு அறிக்கையையும் வெளியிடுவதற்கு முன்பு தான் நிர்வாகக் குழுவிடம் ஆலோசிக்க வேண்டும் என்று கூறினார்.
ஒவ்வொரு பணியிடத்திலும், பள்ளியிலும் மற்றும் குடியிருப்புப் பகுதிகளிலும் சாமானிய தொழிலாளர் குழுக்களை அமைப்பதன் மூலம் தொழிலாளர்கள் தங்களைச் சுயாதீனமாக ஒழுங்கமைத்துக் கொள்ள வேண்டும் என்று சோசலிச சமத்துவக் கட்சி அழைப்பு விடுக்கிறது. தொழிலாளர்களின் போராட்டத்தை, ட்ரம்ப்பிற்கு எதிரான உண்மையான போராட்டத்தை எதிர்க்கும் ஜனநாயகக் கட்சி அல்லது தொழிற்சங்க அதிகாரத்துவத்தின் செயல்பாடுகளுக்கு அடிபணியச் செய்ய முடியாது.
ஒவ்வொரு தொழிற்சாலை, பள்ளி, பொதிகளை பாதுகாக்கும் கிட்டங்கிகள் மற்றும் பணியிடங்களிலும் - அது தொழிற்சங்கம் உள்ள இடமாக இருந்தாலும் இல்லாவிட்டாலும் - தொழிலாளர்கள் உடனடியாக அவசரக் கூட்டங்களை நடத்த வேண்டும். இந்தக் கூட்டங்களில், போராட்டத்தையும் மக்களின் பாதுகாப்பையும் ஒருங்கிணைப்பதற்கும், வழிநடத்துவதற்கும் பொறுப்பான சாமானிய தொழிலாளர் குழுக்களை’ உருவாக்கத் தொழிலாளர்கள் தங்கள் பிரதிநிதிகளைத் தேர்ந்தெடுக்க வேண்டும்.
காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டத்தை ஆதரிக்கும் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட வேண்டும். இத்தகைய தீர்மானங்கள், ரெனீ நிக்கோல் குட்டைக் கொன்றவரைக் கைது செய்து தண்டிக்க வேண்டும்; அனைத்து ICE, CBP மற்றும் DHS படைகளையும் உடனடியாகத் திரும்பப் பெற வேண்டும்; குடியேறிய சமூகங்களை அச்சுறுத்தும் இந்தத் துணை இராணுவ அமைப்புகளை ஒழித்துக்கட்ட வேண்டும்; மற்றும் ICE காவலில் வைக்கப்பட்டுள்ள அனைவரையும் உடனடியாக விடுதலை செய்ய வேண்டும் போன்ற உறுதியான கோரிக்கைகளை முன்வைக்க வேண்டும்.
தொழில்துறைகள் மற்றும் பிராந்தியங்கள் முழுவதும் இந்த சாமானிய தொழிலாளர் அமைப்புகளை இணைக்க ஒருங்கிணைப்புக் குழுக்கள் நிறுவப்பட வேண்டும். இதன் மூலம் ஒரு பாரிய அளவிலான பொது நடவடிக்கைக்குத் தேவையான கட்டமைப்புகளை உருவாக்க வேண்டும்.
இத்தகையதொரு இயக்கத்திற்கு மினியாபோலிஸ் நகரின் வரலாற்றிலேயே ஒரு சக்திவாய்ந்த முன்னுதாரணம் உள்ளது. 1934-ஆம் ஆண்டில், அமெரிக்க வரலாற்றிலேயே மிகவும் தீவிரமான மற்றும் முக்கியமான பொது வேலைநிறுத்தங்களில் ஒன்று மினியாபோலிஸில் நடைபெற்றது. இது ட்ரொட்ஸ்கிசப் போராளிகள் மற்றும் டீம்ஸ்டர்ஸ் அமைப்பால் வழிநடத்தப்பட்டது. தொழிலாளர்கள் குடிமக்கள் கூட்டணி, தேசிய பாதுகாப்புப் படை மற்றும் போலீஸ் அடக்குமுறைகளை எதிர்த்து நின்றனர். துப்பாக்கிச் சூடுகள் மற்றும் இராணுவச் சட்டம் இருந்தபோதிலும், அவர்கள் தீர்க்கமான வெற்றிகளைப் பெற்று, நாடு முழுவதும் தொழில்துறை தொழிற்சங்கவாதத்திற்கு அடித்தளமிட்டனர்.
இன்று, நிலைமை இன்னும் அவசரமானது. தொழிலாளர்கள், முதலாளிகளின் சங்கங்கள் மற்றும் தேசிய பாதுகாப்புப் படையின் அடக்குமுறையை மட்டுமல்ல, ஒரு பாசிச ஜனாதிபதி, அரசின் துணை இராணுவப் படைகள் மற்றும் உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் தீவிரமடைந்து வரும் ஒரு போரை எதிர்கொள்கின்றனர்.
புதன்கிழமை வால்ஸ் தனது உரையில் கூறியது போல மினசோட்டா ஒரு “தீவு” அல்ல. மினியாபோலிஸில் நடப்பது என்பது ஒரு சர்வாதிகாரத்தைத் திணிப்பதற்கான பரந்த சதியின் ஒரு முனையாகும். ஜனநாயக ஆட்சி முறைகளைக் கைவிட்டு வரும் முதலாளித்துவ தன்னலக்குழுவின் அரசியல் கருவியாக ட்ரம்ப் பேசிச் செயல்படுகிறார். வோல் ஸ்ட்ரீட் மற்றும் இராணுவ-உளவுத்துறை அமைப்பின் கட்சியான ஜனநாயகக் கட்சி, இந்த ஆபத்திற்கு எதிரான எந்தவொரு உண்மையான இயக்கத்தையும் எதிர்க்கிறது.
மினியாபோலிஸில் இப்போது உருவாகி வரும் வேலைநிறுத்த இயக்கம் நாடு முழுவதும் மற்றும் சர்வதேச அளவிலும் விரிவுபடுத்தப்பட வேண்டும். இத்தகைய உலகளாவிய எதிர்-தாக்குதலுக்கான கட்டமைப்பு மற்றும் தலைமையையும் வழங்க சாமானிய தொழிலாளர் குழுக்களின் சர்வதேச தொழிலாளர் கூட்டணி (IWA-RFC) நிறுவப்பட்டுள்ளது. இது, பாசிசம் மற்றும் சர்வாதிகாரத்திற்கு எதிரான எதிர்ப்பை, போர், வேலை வெட்டுக்கள், பணவீக்கம் மற்றும் சமூகத் துயரங்களுக்கு எதிரான தொழிலாளர் வர்க்கத்தின் போராட்டத்துடன் இணைக்கப் போராடுகிறது.
சோசலிச சமத்துவக் கட்சி அனைத்து தொழிலாளர்களையும் ஒவ்வொரு வேலையிடத்திலும் என்ன செய்ய வேண்டும் என்பது குறித்து ஒரு தீவிர கலந்துரையாடல்களை மேற்கொள்ளுமாறு வலியுறுத்துகிறது. நிலைமை அவசரமானது. முன்னோக்கி செல்லும் வழி, நீதிமன்றங்களுக்கு மேல்முறையீடு செய்வதன் மூலமோ அல்லது அடுத்த தேர்தலின் மூலமோ அல்ல, மாறாக தொழிலாள வர்க்கத்தின் சுயாதீனமான அரசியல் அணிதிரட்டலின் மூலமோ ஆகும்.
