மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம்.
ரொம் பெய்னின் பொது அறிவு என்ற சிறிய நூலுக்கு இணையாக முக்கியத்துவம் வாய்ந்த புரட்சிகர பிரசுரங்கள் மிகச் சிலவே உள்ளன. சரியாக 250 ஆண்டுகளுக்கு முன்பு, 1776 ஜனவரி 9 அன்று முதன்முதலில் வெளியான இந்த நூல், ஒட்டுமொத்த பிரபுத்துவ ஆதிக்க உலகிற்கும் எதிரான ஒரு நேரடித் தாக்குதலாகும். இது வெளியாகி ஆறே மாதங்களில், அங்கீகரிக்கப்பட்ட அமெரிக்கச் சுதந்திரப் பிரகடனத்திற்கான பாதையைச் சீரமைத்துக் கொடுத்ததிற்காக பரவலாகப் பாராட்டப்படுகிறது.
முடியாட்சி மீதான பெய்னின் தாக்குதலை இன்றைய சூழலுக்குப் பொருத்தமானதாக்கும் ஒரு தருணத்தில் இந்த ஆண்டு நிறைவு வருகின்றது. டொனால்ட் ட்ரம்பின் வரம்பற்ற அதிகாரத்தின் மீதான ஈர்ப்பும், அரசியலமைப்பின் மீதான அவரது அலட்சியமும் வெறும் தனிநபர் சார்ந்தவை மட்டுமல்ல. அவர் ஒரு பெரும் தன்னலக்குழுவின் தேர்ந்தெடுக்கப்பட்ட தலைவர். மேலும், மக்கள் வாழ்க்கையிலிருந்து அன்னியமாகிப்போன ஒரு சீர்குலைந்த அரசியல் முறையின் வெளிப்பாடு. இந்தச் சூழல் பெயின் அன்று எதிர்கொண்ட உலகத்தை (நவீன வடிவில்) எதிரொலிக்கிறது. அதே நேரத்தில், “மன்னர்கள் வேண்டாம்” போன்ற போராட்டங்களும், மினியாபோலிஸில் நடந்த அரசு வன்முறைக்குப் பிந்தைய போராட்டங்களும் இறையாண்மை, சமத்துவம் மற்றும் அதிகாரத்தை எதிர்க்கும் மக்களின் உரிமை குறித்த அடிப்படை கேள்விகளை மீண்டும் எழுப்பியுள்ளன. பொது அறிவு நூல் இந்தத் தருணத்திற்கு மிக அவசியமான ஒன்றாகத் திகழ்கிறது.
இன்றைய காலத்தைப் போலவே, அப்போதும் பொது அறிவு நூல், அதுவரை மக்களால் முழுமையாகப் புரிந்துகொள்ளப்படாத சில மையப் பிரச்சனைகளை முன்வைத்தது. இந்த நூல் வெளிவரும் வரை, பிரித்தானியாவிற்கும் அதன் வட அமெரிக்கக் குடியேற்ற காலனி நாடுகளுக்கும் இடையிலான “பேரரசரின் நெருக்கடி” குறித்த விவாதங்கள் அனைத்தும், பிரித்தானிய அரசியலமைப்பின் கீழ் நாடாளுமன்றம் தனது பண்டைய கடமைகளைச் சரியாகச் செய்கிறதா என்பதைச் சுற்றியே அமைந்திருந்தன. மாறாக, அப்போது புரிந்துகொள்ளப்பட்ட அந்த அரசியலமைப்பு முறையே இந்தப் பிரச்சனைகளுக்குக் காரணமா என்பது குறித்து யாரும் கேள்வி எழுப்பவில்லை. 1765-ஆம் ஆண்டின் முத்திரைச் சட்டம் (Stamp Act) கொண்டுவரப்பட்ட பிறகு, பேரரசரின் அதிகாரம் மேன்மேலும் அதிகரித்தது. அதற்கு முந்தைய பழைய நிலையை மீண்டும் அடைய வேண்டும் என்ற குடியேறிய காலனி மக்களின் விருப்பமே இந்த விவாதங்களுக்குத் தூண்டுகோலாக இருந்தது. நாடாளுமன்றத்தில் தங்களுக்கு நேரடிப் பிரதிநிதித்துவம் இல்லாத நிலையில், அங்கு வரி விதிப்பதற்கான உரிமை நாடாளுமன்றத்திற்கு உள்ளதா என்பது குறித்த தர்க்கங்களாகவே இவை அமைந்திருந்தன.
இந்த விவாதங்கள் சட்ட ரீதியான தன்மையைக் கொண்டிருந்தாலும், இவற்றை வெறும் “பழமைவாத” விவாதங்கள் என்று கருதுவது தவறாகும். ஏனெனில், வரிவிதிப்பு மற்றும் பிரதிநிதித்துவம் குறித்த இந்தப் சர்ச்சைகளுக்குப் பின்னால்—அதிகாரம், சுதந்திரம் மற்றும் எல்லாவற்றிற்கும் மேலாக சமத்துவம் சார்ந்த புரட்சிகரமான நோக்கங்கள் ஒளிந்திருந்தன.
1775-ஆம் ஆண்டு வரை, பெரும்பாலான குடியேறிய காலனி மக்களால் தாங்கள் எடுத்த நிலைப்பாடுகளின் வெடிப்புத்தன்மை கொண்ட விளைவுகளை எதிர்கொள்ள முடியவில்லை. இவர்களின் இந்த பலவீனத்தை பிரித்தானிய விசுவாசிகள் தங்களுக்குச் சாதகமாகப் பயன்படுத்திக் கொண்டனர். வில்லியம் பிளாக்ஸ்டோன் எனும் சிறந்த ஆங்கிலேய சட்ட வல்லுநர் முன்வைத்த வாதங்களை பழமைவாதிகள் பற்றிக்கொண்டனர். ஒவ்வொரு அரசாங்கத்திலும் ஒரே ஒரு இறுதி அதிகாரம் இருக்க வேண்டும் என்று பிளாக்ஸ்டோன் வாதிட்டார்—அவர் குறிப்பிட்டது போல, அது ஒரு “வரம்பற்ற சர்வாதிகார அதிகாரம்”. பிரித்தானிய சாம்ராஜ்யத்தில் அந்த அதிகாரம், “நாடாளுமன்றத்துடன் கூடிய அரசர்” எனும் அமைப்பிடம் இருந்தது, அதாவது அரசர், பிரபுக்கள் மற்றும் பொதுச்சபை ஆகிய மூன்றும் இணைந்து ஒரே இறையாண்மை கொண்ட அமைப்பாகச் செயல்பட்டன. அந்த அமைப்பின் எந்தவொரு பகுதியைக் கேள்வி கேட்பதும், ஒட்டுமொத்தக் கட்டமைப்பையே சவாலுக்கு உட்படுத்துவதாக அமைந்தது.
பரவலாக ஏற்றுக்கொள்ளப்பட்ட இந்த அடிப்படை வாதத்திலிருந்து, காலனித்துவ நிலைப்பாட்டிற்கு ஒரு நேரடிச் சவால் எழுந்தது. “தேசத்தின் சட்டபூர்வமான அமைப்பை உருவாக்கிய” அந்த நாடாளுமன்றம் குடியேற்ற காலனி நாடுகளை ஆளவில்லை என்றால், பிறகு அந்த இறையாண்மை எங்கே இருக்கும்?
பெய்னிடம் இதற்கு ஒரு பதில் இருந்தது. “அமெரிக்காவின் அரசன் எங்கே என்று சிலர் கேட்கக்கூடும்? நண்பரே, நான் உங்களுக்குச் சொல்கிறேன், அவர் மேலே (விண்ணுலகில்) ஆட்சி செய்கிறார். அவர் பிரித்தானியாவின் அரச மிருகத்தைப் போல மனிதகுலத்தை அழிப்பதில்லை. அமெரிக்காவில் சட்டமே அரசன். குறைந்தபட்சம் ட்ரம்ப் நிர்வாகம் தலைகீழாக மாற்றுவதற்கு முன்பாவது, “அமெரிக்க அரசாங்கக் கோட்பாடு” என்று அழைக்கப்பட்டதை பெயின் இங்கு முன்னறிவித்தார். மன்னர் அல்ல, மக்களே இறையாண்மை கொண்டவர்களாக இருப்பார்கள். இறையாண்மை என்பது மன்னரிடமிருந்து குடிமகனுக்கு மாறுவதை விவரிக்க ஒரு உருவகத்தைப் பெயின் பயன்படுத்தினார்; அந்த மகுடத்தை (Crown) “உடைத்தெறிந்து, யாருக்கு உரிமையோ அந்த மக்களிடமே அதை விநியோகிக்க வேண்டும்” என்று அவர் வலியுறுத்தினார்.
பெய்ன் இந்த வரிகளை எழுதியபோது, அரசியலமைப்பு நெருக்கடி ஏற்கனவே போராக மாறியிருந்தது. பிரித்தானிய அரசு பொஸ்டன் நகரில் இராணுவச் சட்டத்தைப் பிறப்பித்தது, குடியேற்ற காலனிகள் வெளிப்படையாகக் கிளர்ச்சியில் ஈடுபடுவதாக அறிவித்தது. மேலும் மாசசூசெட்ஸை அடக்குவதற்குப் படைகளை அனுப்பியது; இதுவே புரட்சியின் முதல் போர்களுக்கு இட்டுச் சென்றது. பிரித்தானிய அமைச்சகத்தின் இந்த தீவிரப்போக்கு எதிர்ப்பை மேலும் வலுப்படுத்தியது. குடியேற்ற காலனிகள் முழுவதும் புரட்சிக் குழுக்கள் உருவாகி, மன்னரின் அதிகாரத்தைப் பலவீனப்படுத்தின—சில இடங்களில் அவர்களை விரட்டியடித்தன. ஒரு தேசிய அளவிலான முன்னோடியாக, பிலடெல்பியாவில் கொன்டினென்டல் காங்கிரஸ் உருவானது. இது ஒரு மாற்று அதிகார மையத்தை உருவாக்கி, 1775-இல் ஜோர்ஜ் வாஷிங்டன் தலைமையில் தனது சொந்த இராணுவத்தைப் போர்க்களத்தில் இறக்கியது. பெரும்பாலான குடியேற்ற காலனி மக்கள் தாங்கள் பின்பற்றுவதாகக் கூறிக்கொண்ட அதே பிரித்தானிய அரசியலமைப்பின் கீழ், இது முற்றிலும் சட்டவிரோதமான செயலாகும்.
ஆயினும்கூட, போர் மற்றும் சட்டத்திற்குப் புறம்பான நிறுவனங்களின் பெருக்கத்திற்கு மத்தியிலும் கூட, “சுதந்திரம்” குறித்த பேச்சுகள் பெரும்பாலும் தனிப்பட்ட அளவிலும் மற்றும் ஒரு தற்காலிக முயற்சியாகவுமே இருந்தன. அது உடனடித் திட்டமாக கருதப்படாமல், ஒரு தொலைதூர வாய்ப்பாகவே கற்பனை செய்யப்பட்டது. நிச்சயமாக, சாமுவேல் மற்றும் ஜோன் ஆடம்ஸ், பெஞ்சமின் பிராங்க்ளின் மற்றும் இளம் தோமஸ் ஜெபர்சன் உள்ளிட்ட சில காலனிகளின் தலைவர்கள் முழுமையான பிளவை ஆதரிக்கும் நிலைக்கு வந்திருந்தனர். இருப்பினும், இந்த நெருக்கடிக்கு மன்னர் அல்ல, நாடாளுமன்றமும் ஊழல் நிறைந்த அமைச்சகமுமே பொறுப்பு என்பதே அப்போதைய மேலோங்கிய கருத்தாக இருந்தது.
பென்சில்வேனியாவைச் சேர்ந்த ஜோன் டிக்கின்சன் மற்றும் ஜோசப் காலோவே போன்ற சமரசவாதிகள், பேரரசரின் மறுசீரமைப்பு மூலம் ஒரு தீர்வு கிடைக்கும் என்று தொடர்ந்து நம்பினர்—அதாவது, ஒரு பொதுவான முடியாட்சியின் கீழ் தனித்தனி சட்டமன்றங்களைக் கொண்டிருப்பது போன்ற ஒரு அமைப்பு. உண்மையில், பொது அறிவு நூல் வெளியான அதே நாளில், கொண்டினன்டல் காங்கிரஸ் சுதந்திரத்தை நாடவில்லை என்று அங்கிருந்த மக்களுக்கும், — மன்னருக்கும் —உறுதியளிக்க டிக்கின்சனின் ஆதரவாளர்கள் ஒரு குழுவை உருவாக்கினர். இது உண்மையும் கூட. அப்போது பிலடெல்பியாவிற்கு அனுப்பப்பட்ட எந்தவொரு குடியேற்றப் பிரதேசக் குழுவிற்கும், சுதந்திரத்தைப் பற்றிப் பரிசீலிக்குமாறு அந்தந்த மாகாண சபைகள் உத்தரவிடவில்லை. அதுவரை முடியாட்சி ஒரு குற்றவாளியாகக் கூண்டில் நிறுத்தப்படவே இல்லை.
தங்கள் காலனிகளுக்கு எதிராகப் போர் தொடுக்கும் ஒரு மன்னருக்கும், முடியாட்சி முறையைத் தீர்மானமாகக் கண்டிக்கத் தயங்கும் ஒரு அரசியல் கலாச்சாரத்திற்கும் இடையே நிலவிய இந்த முட்டுக்கட்டைக்கு இடையில் ரொம் பெயின் நுழைந்தார்.
அவர் ஏற்கவிருந்த அந்தப் பிரம்மாண்டமான பாத்திரத்திற்கு அவர் ஒரு பொருத்தமற்ற நபராகவே அப்போது தோன்றியிருக்கலாம். லண்டனில் நியூட்டனின் இயற்பியலில் தங்களுக்கு இருந்த பொதுவான ஆர்வம் குறித்து விவாதிக்க பிராங்க்ளினைச் சந்தித்த பெயின், அவரிடமிருந்து ஒரு பரிந்துரைக் கடிதத்தைப் பெற்றுக்கொண்டு, வெறும் 14 மாதங்களுக்கு முன்புதான் அமெரிக்காவிற்கு வந்திருந்தார். தனது சொந்த நாடான இங்கிலாந்தில் அப்போது முற்றிலும் அறியப்படாதவராக இருந்த 39 வயதான பெயின், “தான் முயற்சித்த ஒவ்வொன்றிலும் தோல்வியடைந்தவர்” என்று வரலாற்றாசிரியர் ரொபர்ட் மிடில்காஃப் எழுதுகிறார்—அவர் தனது தந்தையிடமிருந்து கற்றுக்கொண்ட ஆடை தைக்கும் தொழில்; பள்ளி ஆசிரியர் பணி மற்றும் ஒரு சிறிய அரசு அதிகாரி பணி என அனைத்திலும் தோல்வியடைந்திருந்தார்.
“நவம்பர் 30, 1774-ல், முதலாவது கொன்டினென்டல் காங்கிரஸ் அந்த நகரத்திலிருந்து கலைந்து சென்றுகொண்டிருந்த அதே வேளையில், ரொம் பெயின் பிலடெல்பியாவில் தரை இறங்கினார். அவர் சரியாக ஒரு சரியான நேரத்தில், சரியான இடத்திற்கு வந்து சேர்ந்திருந்தார். பிலடெல்பியா அப்போது மிகப்பெரிய குடியேற்ற நகரமாக இருந்தது—இருப்பினும் வெறும் 30,000ம் குடியிருப்பாளர்களைக் கொண்டிருந்த அது, நமது இன்றைய தரத்தின்படி ஒரு பெரிய நகரம்தான். லண்டன் மற்றும் லிவர்பூலுக்கு அடுத்தபடியாக பிரிட்டிஷ் சாம்ராஜ்யத்தின் மூன்றாவது பரபரப்பான துறைமுகமாகவும், ஐரோப்பாவின் பல பகுதிகளிலிருந்து வந்த ஏராளமான குடியேறிகள் மற்றும் கைவினைஞர்கள், சாதாரண தொழிலாளர்கள் எனப் பெரும் உழைக்கும் வர்க்கத்தைக் கொண்ட அமெரிக்காவின் பன்முகத்தன்மை வாய்ந்த இடமாகவும் அது விளங்கியது.
பிலடெல்பியா மிகத் தீவிரமான அரசியலின் தாயகமாகவும் இருந்தது. இத்தகைய ஒரு சூழலில் தன்னை இணைத்துக்கொண்ட பெயின், விஞ்ஞானி டேவிட் ரிட்டன்ஹவுஸ், கலைஞர் சார்லஸ் வில்சன் பீல் மற்றும் மருத்துவர்களான தோமஸ் யங் மற்றும் பெஞ்சமின் ரஷ் ஆகியோருடன் நட்பு கொண்டார். இந்த மருத்துவர்கள் நகரின் ஏழைகளுக்கு இலவசமாகச் சிகிச்சை அளித்ததோடு, நோய்களுக்கு எதிராகத் தடுப்பூசி போடும் புதிய கருத்தையும் ஆதரித்தனர். சுதந்திரத்திற்காகத் தனது பேனாவை ஏந்துமாறு பெயினுக்குப் பரிந்துரைத்தவர் மருத்துவர் ரஷ் தான்.
அதன்பிறகு விவாதத்தின் எந்தவொரு பகுதியுமே பழையபடி இருக்கவில்லை. பொது அறிவு நூல் வெளியான முதல் மூன்று மாதங்களிலேயே 120,000 பிரதிகள் விற்பனையாயின. அதன் முதல் ஆண்டிலேயே 25 தனித்தனி பதிப்புகள் வெளிவந்தன. இன்றைய அமெரிக்காவில் இதற்கு இணையான ஒரு வெளியீடு இருக்க வேண்டுமென்றால், சில மாதங்களிலேயே சுமார் 15 மில்லியன் பிரதிகள் விற்கப்பட வேண்டும். ஆனால் அக்காலத்தில், வாசகர் பரப்பு என்பது கல்வியறிவு உள்ளவர்கள் அல்லது புத்தகம் வாங்கக்கூடியவர்களைத் தாண்டியும் விரிந்து நின்றது. பிலடெல்பியாவிலிருந்து கிடைத்த ஒரு குறிப்பு, அந்த நூல் “அனைத்துத் தரப்பு மக்களுக்கும் வாசித்துக் காட்டப்பட்டது” (முக்கியத்துவம் சேர்க்கப்பட்டுள்ளது) என்று குறிப்பிடுகிறது. இது பொதுச் சதுக்கங்களிலும், விடுதிகளிலும், வீடுகளிலும் விவாதிக்கப்பட்டது. கண்டம் தழுவிய இராணுவத்தின் (Continental Army) முழுப் படைப் பிரிவுகளுக்கும் இதன் பகுதிகளை வாசித்துக் காட்ட ஜோர்ஜ் வாஷிங்டன் உத்தரவிட்டார். சுருக்கமாகச் சொன்னால், பொது அறிவு பிரசுரமானது ஒட்டுமொத்த மக்களிடமும் புரட்சிகர எண்ணங்களை ஊடுருவச் செய்தது.
இத்தகைய ஒரு மாபெரும் வெற்றிக்கு பெய்னின் உரை நடை மட்டுமே காரணம் என்று சொல்லிவிட முடியாது. பெஞ்சமின் பிராங்க்ளின் முன்னரே தொடராக வெளியிட்டு வெற்றி பெற்ற ஏழை ரிச்சர்ட்டின் பஞ்சாங்கம் என்ற புத்தகமும் மற்றும் அவர் உருவாக்கிய காலனித்துவ அஞ்சல் அமைப்பு ஆகியவையும் ஒரு பொதுவான அச்சுப் பண்பாட்டையும், அதைச் சுழற்சிக்கு விடுவதற்கான வழிகளையும் உருவாக்க உதவின. இதுவே பிரசுரங்கள் மற்றும் தலையங்கங்கள் மூலம் ஒரு விரிவான விவாதத்தை நடத்த சாத்தியமாக்கியது. அதன் உச்சக்கட்ட சாதனையாக பொது அறிவு பிரசுரம் அமைந்தது. இந்த அச்சுப் பண்பாடானது, அச்சடித்தல் மற்றும் காகிதம் தயாரிப்பதில் ஏற்பட்ட படிப்படியான, ஆனால் தீர்க்கமான முன்னேற்றங்கள், மலிவு விலை அச்சுச் சந்தைகளின் வளர்ச்சி மற்றும் செய்தித் தாள்கள், புத்தக விற்பனையாளர்கள் மற்றும் முறைசாரா மறுபதிப்பு வலையமைப்புகளின் விரிவாக்கம் ஆகியவற்றால் ஏற்கனவே தயார் செய்யப்பட்டிருந்தது. இவை குறுகிய கால மற்றும் சமகால விவகாரங்கள் குறித்த படைப்புகளை விரைவாகத் தயாரிப்பதற்கும், குடியேற்ற காலனிகள் முழுவதும் கொண்டு செல்வதற்கும் வழிவகுத்தன.
இந்த முன்னேற்றங்கள், பேரரசின் நெருக்கடி காலத்தில் உருவான மக்களின் மனமாற்றங்களுடன் ஒன்றிணைந்து செயல்பட்டன. இதையே ஜோன் ஆடம்ஸ் பின்னாளில் “மக்களின் மனதில் ஏற்பட்ட மாற்றங்கள்” என்று குறிப்பிட்டார். பெய்னின் மேதமை என்பது, காலப்போக்கில் மக்களிடையே உருவாகி வந்த இந்த உணர்வுக்கு ஒரு வலிமையான வடிவத்தைக் கொடுத்ததிலேயே அடங்கியிருந்தது. பல ஆண்டுகால நெருக்கடிகளுக்குப் பிறகு பலராலும் பொதுப்படையாகக் கருதப்பட்ட எண்ணங்களை அவர் மிகத்தெளிவாக வெளிப்படுத்தினார். “காரண காரியங்களை விட காலமே அதிக மாற்றங்களைச் செய்கிறது” என்று அவர் அவதானித்தார்.
பெய்ன் குறிப்பிட்டது போல, வரலாறே இந்தப் பணியின் பெரும்பகுதியைச் செய்திருக்கலாம்; ஆனால் அவரைத் தவிர வேறு எந்தவொரு நபராலும் அவர் செய்ததைச் செய்திருக்க முடியுமா என்பது சந்தேகமே. இங்கிலாந்தில் அவரது வாழ்க்கையைப் பற்றி மிகக் குறைவாகவே அறியப்பட்டாலும், அவரது எழுத்துக்கள் பதினெட்டாம் நூற்றாண்டின் அறிவொளி கால உலகத்தின் இலக்கிய மற்றும் அறிவுசார் வட்டாரங்களில் அவர் ஆழமாகத் தோய்ந்திருந்ததைக் காட்டுகின்றன. அத்துடன், இங்கிலாந்து உள்நாட்டுப் போரின் இரகசிய தீவிர மரபுகளை பெயின் உள்வாங்கியிருந்தார் என்பது நிச்சயம். இவை மன்னராட்சிக்கு எதிரான, குடியரசுவாத நீரோட்டங்கள் ஆகும். இவை குரோம்வெல்லின் தோல்விக்குப் பிறகும் இங்கிலாந்து அரசியல் கலாச்சாரத்தில் பாதியளவு ஒடுக்கப்பட்ட நிலையில் தொடர்ந்து பரவி வந்தன.
இதற்கெல்லாம் மேலாக, ரொம் பெய்னின் தோல்விகளும் வறுமையுமே அவரது திறமைக்குக் கூடுதல் வலு சேர்த்தன என்று பேர்னார்ட் பெய்லின் குறிப்பிடுகிறார். அந்தப் பிரசுரம்...
கண்ணியமான சமூகத்தின் விளிம்புகளில் வாழ்ந்து கொண்டும், கடன் சிறை எனும் படுகுழியில் எப்போது வேண்டுமானாலும் விழக்கூடிய ஆபத்தான நிலையில் தொங்கிக் கொண்டும் இருக்கும் அந்தப் பாதி-சொத்திழந்தவர்களின் சீற்றமும் ஆத்திரமும்; ஹோகார்த் (Hogarth) தனது கொடூரமான நீதிபோதனைக் கதைகளில் மிகச் சிறப்பாகவும், ஒரு வெறித்தனத்தோடும் சித்தரித்த அந்த மீள முடியாத நரகத்தை நோக்கியே அவர்கள் ஒவ்வொரு அடியிலும் தள்ளப்படுகிறார்கள்.
ரொம் பெய்னின் பின்னணி எதுவாக இருந்தாலும், அவரது படைப்புகளில் அடிப்படையிலேயே ஒரு புதிய அம்சம் இருந்தது. இன்று நாம் “கருத்தை உருவாக்குபவர்கள்” என்று அழைப்பவர்களை மட்டுமல்லாமல், பெரும் திரளான குடியேறிய காலனிய மக்களையும் ஈர்க்கும் வகையில் அவர் மிக எளிமையான முறையில் எழுதினார். இங்கிலாந்தில் இழிவாகக் கருதப்பட்ட “கீழ்த்தட்டு மக்களிடையே” வளர்ந்தவர் என்பதால், பெய்ன் தனது வாசகர்களை நன்கு அறிந்திருந்தார். அவர் பழைய ஏற்பாடு (Old Testament) மற்றும் பொது வழிபாட்டுப் புத்தகம் (Book of Common Prayer) ஆகியவற்றின் ஆழமான அறிவைப் பயன்படுத்தி, எளிய, நேரடியான மற்றும் தெளிவான மொழியில் எழுதினார். ஒரு தசாப்த கால விவாதங்களில் — குறிப்பாகப் பிரதிநிதித்துவம் மற்றும் வரிவிதிப்பு தொடர்பான நெருக்கடியை முன்னிறுத்திய டிக்கின்சனின் புகழ்பெற்ற பென்சில்வேனியா விவசாயியின் கடிதங்கள் போன்ற படைப்புகளில் — நிறைந்திருந்த இலத்தீன் சொற்றொடர்களையும், ரோமானியக் குடியரசு பற்றிய புரியாத குறிப்புகளையும் அவர் தவிர்த்தார்.
இந்த அலங்காரமற்ற எளிய பாணியில், பெய்ன் உண்மையை வெளிப்படையாகக் கூறினார்: பிரிட்டிஷ் பேரரசுடன் மீண்டும் சமரசம் செய்துகொள்வது இனி சாத்தியமில்லை. இதற்கு நாடாளுமன்றமோ, அமைச்சகமோ, ஏன் மூன்றாம் ஜோர்ஜ் மன்னர் தனிப்பட்ட முறையிலோ காரணமல்ல. கொடுங்கோன்மையும் மக்களுக்கு எதிரான அச்சுறுத்தல்களும் முடியாட்சி, பிரபுத்துவ முறை மற்றும் அந்தப் பேரரசின் கட்டமைப்பிலிருந்தே உருவானவை. ஒரு குடியரசு அரசாங்கத்தை உருவாக்கும் குறிக்கோளுடன் கூடிய புரட்சியும், சுதந்திரமும் மட்டுமே இதற்கு ஒரே தீர்வாகும்.
அந்தச் சிறு நூலின் பெரும்பகுதி, முடியாட்சி மற்றும் பிரபுத்துவ முறையின் மீதான ஆக்ரோஷமான — பெரும்பாலும் நகைச்சுவையான — தாக்குதலுக்கே அர்ப்பணிக்கப்பட்டது. அதன் துணிச்சலைப் புரிந்துகொள்ள, தற்கால வாசகர்கள் ஒன்றை உணர வேண்டும்: ஒரு தசாப்தத்திற்கு முன்பு வரை, குடியேறிய காலனிய மக்கள், தமது காலனிகளில் இருந்த பிரிட்டிஷ் பிரபுக்களின் மிகக் குறைந்த பதவியில் உள்ளவர்களின் முன்னால் கூட தலைவணங்கி, குனிந்து, மரியாதையுடன் தொப்பிகளைக் கழற்றி நின்றனர். அரச அடையாளங்கள் எங்கும் நிறைந்திருந்தன. மன்னரின் பிறந்தநாள் விடுமுறையாகக் கொண்டாடப்பட்டது. முடியாட்சி தனது குடிமக்களை அச்சுறுத்தி அடிபணிய வைப்பதையே நோக்கமாகக் கொண்டிருந்தது.
ஆனால், இப்போது பெய்ன், இரக்கமற்ற கிண்டலுடன், வாரிசு ரீதியான ஆட்சி என்பது அறிவுக்கும் இயற்கைக்கும் எதிரானது என்று கூறினார். “மன்னர்களின் வாரிசு உரிமை என்பது ஒரு முட்டாள்தனம் என்பதற்கு இயற்கையே ஒரு வலுவான சான்று,” என்று அவர் எழுதினார். “இயற்கை அதை அங்கீகரிக்கவில்லை, இல்லையென்றால் மனிதகுலத்திற்கு ஒரு சிங்கத்திற்குப் பதிலாக ஒரு கழுதையை (மன்னராகத் தருவதன் மூலம்) அடிக்கடி அது கேலி செய்திருக்காது.”
முடியாட்சியை ஒரு ஆட்சி முறையாகத் தான் வெறுப்பதற்கான காரணங்களை அடுக்கி கூறுவதில் ரொம் பெய்ன் தயக்கம் காட்டவில்லை. அவர் எழுதினார்:
முடியாட்சியின் கட்டமைப்பிலேயே ஏதோ ஒன்று மிகவும் அபத்தமான ஒன்று உள்ளது; அது முதலில் ஒரு மனிதனைத் தகவல்கள் வந்து சேரும் வழிகளிலிருந்து தனிமைப்படுத்துகிறது. ஆனால், அதே சமயம் மிக உயர்ந்த அறிவுத்திறன் தேவைப்படும் விவகாரங்களில் முடிவெடுக்கும் அதிகாரத்தை அவனிடம் வழங்குகிறது. ஒரு மன்னனின் அந்தஸ்து அவனை உலகிலிருந்து அந்நியப்படுத்துகிறது, ஆனால் ஒரு மன்னனின் கடமையோ உலகை முழுமையாக அறிந்திருக்க வேண்டியதைக் கோருகிறது; எனவே, ஒன்றிற்கொன்று இயற்கைக்கு மாறாக முரண்பட்டு அழித்துக் கொள்ளும் இந்தப் பகுதிகள், அந்த ஒட்டுமொத்தப் பாத்திரமுமே அபத்தமானது மற்றும் பயனற்றது என்பதை நிரூபிக்கின்றன.
தகுதியற்ற அறிவிலிகளால் ஆளப்படும் இந்த மேன்மேலும் சிக்கலாகி வரும் சமூகத்தைப் பற்றிய இந்த விவரணை, இன்றைய டொனால்ட் ட்ரம்ப்பின் அமெரிக்காவிற்கு இன்னும் கூடுதல் வலுவுடன் பொருந்துகிறது. இங்கு சராசரித் தொழிலாளர்களை விட, பல நூறு மடங்கு அதிக ஊதியம் பெறும் தலைமை நிர்வாக அதிகாரிகளைக் கொண்ட பிரமாண்டமான கார்ப்பரேட் நிறுவனங்களே ஆட்சி செய்கின்றன. ஆனால், அந்த நிறுவனங்களின் தொழிலைப் பற்றி ஒட்டுமொத்தமாகத் தொழிலாளர்களே மிகச் சிறப்பாக அறிந்திருக்கிறார்கள்.
பெய்னின் பார்வையில், நிலப்பிரபுத்துவத்தின் நீண்ட கால வரலாறு ஐரோப்பாவின் முடிசூடிய மன்னர்களுக்கு எந்த அடைக்கலத்தையும் அளிக்கவில்லை. வெற்றியாளன் வில்லியம் —அனைத்து ஆங்கில மன்னர்களும் அவரிடமிருந்து வந்தவர்கள் (மற்றும் அவர்கள்)— என்பவன் வெறும் “ஆயுதம் ஏந்திய கொள்ளைக்கூட்டத்துடன் தரையிறங்கிய ஒரு பிரெஞ்சு தறுதலை” (French bastard) என்றும், “பூர்வீக மக்களின் சம்மதமின்றி” தன்னையே அரசனாக அறிவித்துக்கொண்ட ஒரு ஆக்கிரமிப்பாளர் என்றும் பெய்ன் சாடினார்.
இத்தகைய அவமானகரமான தொடக்கமே ஊழல் நிறைந்த ஒரு அரசியல் ஒழுங்கை உருவாக்கியது. பல நூற்றாண்டுகளுக்குப் பிறகு, மூன்றாம் ஜோர்ஜ் மன்னருக்கு “போர் புரிவதையும், பதவிகளைத் தூக்கிக் கொடுப்பதையும் தவிர வேறு எந்த வேலையும் இல்லை.” ஆனால், அதற்காக அவருக்கு ஆடம்பரமாக வழங்கப்பட்ட வெகுமதியோ மிக அதிகம் — “ஒரு மனிதன் வருடத்திற்கு எட்டு லட்சம் ஸ்டெர்லிங் ஊதியம் பெற்றுக்கொண்டு, அதற்கு மேலதிகமாக (மக்களால்) வழிபடப்படுவதும் உண்மையிலேயே ஒரு அழகான பிழைப்புத்தான்’ என்று ரொம் பெய்ன் கிண்டல் செய்தார்.
முடியாட்சியைப் பற்றிய தனது கருத்துக்களை, 250 ஆண்டுகளுக்குப் பிறகும் ஒரு வார்த்தைகூட மாற்றத் தேவையில்லாத ஒரு தீர்க்கமான கணிப்பீட்டின் மூலம் பெய்ன் சுருக்கிக் கூறினார்: “சமூகத்திற்கும் கடவுளின் பார்வைக்கும், இதுவரை வாழ்ந்த அனைத்து முடிசூடிய முரடர்களையும் விட ஒரு நேர்மையான மனிதனே அதிக மதிப்புமிக்கவன்.”
ஆனால், பெய்னின் உடனடி இலக்கு ஜோர்ஜ் மன்னர் அல்ல. மாறாக, முடியாட்சியுடன் இன்னும் ஒரு உடன்பாட்டை எட்ட முடியும் என்று நம்பிக்கொண்டிருந்த டிக்கின்சன் போன்ற காலங்கடத்துபவர்களின் ஆலோசனைகளே ஆகும். லெக்சிங்டன் மற்றும் கொன்கார்ட் (Lexington and Concord) போர்களுக்குப் பிறகு, சமரசம் என்பது “கடந்த ஆண்டு பஞ்சாங்கத்தைப்” போலப் பழசாகிப்போன ஒன்று என்று பெய்ன் திட்டவட்டமாகக் கூறினார். மன்னரின் படைகள் மாசசூசெட்ஸ் கிராமப் புறங்களுக்குள் நுழைந்து குடியேறிய காலனிய மக்களின் இரத்தத்தை குடித்த பிறகு, சமரசம் என்பது ஒரு “தவறான கனவாக” மாறியது. ஏனெனில் ஜோர்ஜ் மன்னர் இப்போது தன்னை ஒரு “இரக்கமற்ற, பிடிவாத குணம் கொண்ட இங்கிலாந்தின் பாரொனாக” (Pharaoh எகித்திய மன்னர்) வெளிப்படுத்திக்கொண்டார். “மக்களின் தந்தை எனும் போலிப் பட்டத்தைச் சுமந்துகொண்டு, தன் மக்கள் கொல்லப்படுவதை உணர்ச்சியற்று கேட்டுக் கொண்டும், அவர்களின் இரத்தத்தை தன் ஆன்மாவில் சுமந்தபடி நிம்மதியாகத் தூங்கவும் கூடிய ஒரு பாவி” என்று பெய்ன் அவரை வர்ணித்தார். இந்தக் கடைசி வரியைப் படிக்கும்போது, மினியாபோலிஸில் அலெக்ஸ் பிரெட்டி மற்றும் ரெனீ நிக்கோல் குட் ஆகியோரின் பொலீஸ் கொலைகளை டொனால்ட் ட்ரம்ப் தழுவியதை ஒருவர் நினைக்காமல் இருக்க முடியாது.
லெக்சிங்டன் மற்றும் கொன்கோர்டில் சிந்தப்பட்ட இரத்தத்திலிருந்து, பெயின் தனது பார்வையை விரிவுபடுத்தினார். இது பிரிட்டனின் நடத்தை — அனைத்து மனிதகுலத்தின் அடிப்படை உரிமைகளான இயற்கை உரிமைகளுக்கும் எதிராகப் போர் பிரகடனம் செய்வது போன்றது — என்பதால், இந்த மோதலை ஒரு சாதாரண காலனித்துவ பிரதேசத் தகராறு என்பதையும் தாண்டி, உலகளாவிய மனிதகுல நலன்கள் சார்ந்த ஒரு போராட்டமாக அவர் உயர்த்தினார். இது “அமெரிக்காவின் இலட்சியம்,” என்று அவர் பிரகடனப்படுத்தினார். இது “பெருமளவில் ஒட்டுமொத்த மனிதகுலத்தின் இலட்சியமாகும்.”
பிரிட்டிஷ் ஆட்சியிலிருந்து அமெரிக்கா சுதந்திரம் பெற வேண்டும் என்ற பெய்னின் அந்தச் சிறு நூல், புரட்சிகரமான நம்பிக்கையின் உணர்வை வெளிப்படுத்தியது. அமெரிக்கர்கள் தாங்கள் எடுக்கத் தயங்கிக் கொண்டிருந்த அந்தப் பெரிய முடிவை எடுக்கும் துணிவை அது அவர்களுக்கு அளித்தது. “உலகை மீண்டும் புதிதாகத் தொடங்கும் ஆற்றல் நம்மிடம் உள்ளது”, என்று அவர் உறுதி அளித்தார். உலகம் முழுவதும் பல யுகங்களுக்கு நினைவு கூரப்படப் போகும் ஒரு தருணம் இது என்று அவர் விளக்கினார்:
மனிதகுலத்தை நேசிப்பவர்களே! கொடுங்கோன்மையை மட்டுமல்ல, கொடுங்கோலனையும் எதிர்க்கத் துணிபவர்களே, முன்வாருங்கள்! பழைய உலகின் ஒவ்வொரு இடமும் ஒடுக்குமுறையால் சூழப்பட்டுள்ளது. சுதந்திரம் உலகம் முழுவதும் வேட்டையாடப்படுகிறது. ஆசியாவும் ஆப்பிரிக்காவும் அவளை (சுதந்திரத்தை) நீண்ட காலத்திற்கு முன்பே வெளியேற்றிவிட்டன—ஐரோப்பா அவளை ஒரு அந்நியரைப் போலப் பார்க்கிறது, இங்கிலாந்தோ அவளை வெளியேறும்படி எச்சரித்துள்ளது. ஓ! தப்பியோடியவரை ஏற்றுக்கொள், காலப்போக்கில் மனிதகுலத்திற்கு ஒரு புகலிடத்தைத் தயார் செய்யுங்கள்.
அமெரிக்கா “சிவில் மற்றும் மத சுதந்திரத்தை விரும்புவோருக்கான புகலிடமாகவும், எதிர்காலத்தில் சொந்த நாட்டில் நட்போ பாதுகாப்போ கிடைக்காதபோது துன்புறுத்தப்படுபவர்களுக்கான ஒரு சரணாலயமாகவும்” விளங்கும். பெய்னின் பார்வையில், அமெரிக்காவில் சந்திக்கும் அனைவரும் “நாட்டின் மக்கள்”, மேலும் ஒடுக்குமுறையிலிருந்து தப்பி வருபவர்களை வரவேற்கவே இந்தப் புதிய குடியரசு உருவானது —இந்த வரிகள், அமெரிக்காவிற்கு புலம்பெயர்ந்தவர்கள் மற்றும் அகதிகளைப் பற்றிப் பேசும்போது, டொனால்ட் ட்ரம்ப் பயன்படுத்தும் “படையெடுப்பு”, “விலங்குகள்” மற்றும் “எமது நாட்டை விஷமாக்குகிறார்கள்” போன்ற சொற்களுக்கு நேரடி கண்டனமாக அமைகின்றன.
இந்தப் போராட்டத்தை உலகளாவிய கண்ணோட்டத்தில் இருந்து பார்த்த பெய்னின் பார்வை, அந்தப் புரட்சிக் காலகட்டத்தில் தனித்துவமானது அல்ல. வரலாற்றாசிரியர் கார்டன் வூட் எழுதியது போல, அமெரிக்காவை நிறுவியவர்கள் “ஒருபோதும் நவீன அர்த்தத்திலான ஒரு தேசியப் புரட்சியைச் செய்ய நினைக்கவில்லை.” பெய்னின் கருத்துக்களைச் சுருக்கிக் கூறும் அவர், “அமெரிக்கர்கள் உலகின் மிகவும் பரந்த மனப்பான்மை கொண்ட மக்கள். அவர்கள் வெவ்வேறு நாடுகளைச் சேர்ந்த அனைவரையும் தங்களது நாட்டு மக்களாக கருதினர். அண்டை வீடுகள், நகரங்கள் மற்றும் நாடுகள் போன்றவற்றை, கண்டம் அளவிலான சிந்தனை கொண்டவர்களுக்கு மிகக் குறுகிய எல்லைகளாகக் கருதிப் புறக்கணித்தனர்” என்று விளக்குகிறார்.
1770 மற்றும் 1780-களின் குடியரசுப் புரட்சியாளர்களின் கற்பனை, குறிப்பாகப் பெய்னின் சிந்தனை, விரிவானதாகவும் உலகளாவியதாகவும் இருந்திருக்கலாம். ஆனால் அந்தச் சரித்திரத் தருணத்தில், உலகப் பொருளாதாரத்தின் வளர்ச்சி அதற்கேற்றவாறு ஈடுகொடுக்கவில்லை. உண்மையான உலகளாவிய சகோதரத்துவத்திற்கான பொருள்சார் அடிப்படைகள் அப்போது இன்னும் உருவாகவில்லை. உற்பத்தி சிதறிக்கிடந்தது, தகவல் தொடர்பு மந்தமாக இருந்தது, சமூக வாழ்க்கை பெரும்பாலும் பேரரசரின் மற்றும் வளர்ந்து வரும் தேசிய-முதலாளித்துவ கட்டமைப்புகளுக்குள்ளேயே அமைந்திருந்தது; இது மிகவும் துணிச்சலான புரட்சிகர அபிலாஷைகளைக் கூட கட்டுப்படுத்தியது.
ஆனால் தற்போது காலம் வேறுபட்டது. முந்தைய புரட்சியாளர்கள் உள்ளுணர்வால் மட்டுமே உணர்ந்த ஒன்றை முதலாளித்துவமே இன்று உருவாக்கியுள்ளது: அதுதான் ஒருங்கிணைக்கப்பட்ட உலகப் பொருளாதாரமும், உழைப்பும், விநியோகச் சங்கிலிகளும், போராட்டங்களும் எல்லைகளைக் கடந்து நிற்கும் ஒரு தொழிலாளர் வர்க்கமும் ஆகும். உலகளாவிய சகோதரத்துவம் என்பது இனி ஒரு வெறும் அறநெறி சார்ந்த கோரிக்கையோ அல்லது தத்துவார்த்த நம்பிக்கையோ அல்ல. அது புறநிலை சமூக உறவுகளில் வேரூன்றிய ஒன்றாக ஆகியுள்ளது.
வரலாற்றிலேயே முதல் முறையாக, ரொம் பெய்னின் வாக்குறுதியை நனவாக்கக்கூடிய பொருள்சார் வசதிகளை இன்றைய தொழிலாளர்கள் பெற்றுள்ளனர். ரொம் பெய்ன் கற்பனை செய்ததை விட மிகவும் நேரடியான அர்த்தத்தில், “உலகை மீண்டும் புதிதாகத் தொடங்கும்” ஆற்றல் அவர்களிடம் இப்போது உள்ளது.
