முன்னோக்கு

ட்ரம்ப்பிற்கும், குடிவரவு மற்றும் சுங்க அமலாக்கத் துறைக்கும் (ICE) எதிரான சர்வதேச எதிர்ப்பு, மிலான் ஒலிம்பிக் தொடக்க விழாவில் முக்கியத் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது

மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம். 

இத்தாலியின் மிலான் நகரில் நடைபெறும் 2026 குளிர்கால ஒலிம்பிக் போட்டிகளின் போது, மாணவர்களால் ஒருங்கிணைக்கப்பட்ட குடிவரவு மற்றும் சுங்க அமலாக்கத் துறை (ICE) அமைப்பிற்கு எதிரான போராட்டத்தின் போது, போராட்டக்காரர்கள் பதாகைகளை ஏந்தி ஊர்வலமாகச் செல்கின்றனர். வெள்ளிக்கிழமை, பிப்ரவரி 6, 2026 [AP Photo/Luca Bruno]

ட்ரம்ப்பிற்கும், அவரது கொலைவெறி பிடித்த அமெரிக்க குடியேற்ற மற்றும் சுங்க அமலாக்க துறையின் (ICE) முகவர்கள் 2026 குளிர்கால ஒலிம்பிக் போட்டிகளில் மிலான் நகரில் இருப்பதற்கும் எதிரான ஒரு பெரும் எதிர்ப்பு அலை ஏற்பட்டுள்ளது.

அமெரிக்கத் துணை ஜனாதிபதி ஜே.டி. வான்ஸை மிலானுக்கு வரவேற்ற இத்தாலியின் பாசிசப் பிரதமர் ஜோர்ஜியா மெலோனி, அந்நகரை முழுமையான கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்தார். சுமார் 6,000ம் பலத்த ஆயுதமேந்திய இத்தாலிய போலீசாரும் இராணுவ அதிகாரிகளும் தெருக்களில் ரோந்துப் பணியில் ஈடுபட்டுள்ளனர். கட்டிடங்களின் கூரைகளில் துப்பாக்கியால் குறி பார்த்து சுடும் சிப்பாய்கள் (Snipers) நிறுத்தப்பட்டுள்ளனர். நகரம் முழுவதிலும் விமானங்கள் பறக்கத் தடை விதிக்கப்பட்ட மண்டலங்கள் உருவாக்கப்பட்டுள்ளன. மேலும், வன்முறைப் போராட்டத்தில் ஈடுபடக்கூடும் என்ற சந்தேகத்தின் அடிப்படையில் எவரையும் 12 மணிநேரம் சிறையில் அடைக்க போலீசாருக்கு அனுமதி அளிக்கும் ஒரு சிறப்பு ஆணையும் பிறப்பிக்கப்பட்டுள்ளது.

ஆயினும், விளையாட்டு வீரர்களின் சாதனைகளுக்கு அப்பால், உலக நாடுகளின் கவனத்தை இந்த விளையாட்டுப் போட்டிகள் ஈர்த்ததற்குக் காரணம் இந்த போலீஸ்-அரசு இயந்திரத்தின் அடக்குமுறை அல்ல. மாறாக, அட்லாண்டிக் பெருங்கடலின் இருபுறமும் (அமெரிக்கா மற்றும் ஐரோப்பா) பாசிசக் கொள்கைகளுக்கு எதிராக வளர்ந்து வரும் அரசியல் எதிர்ப்பின் வெளிப்பாடுகளே ஆகும். போராட்டங்கள் மிலான் நகரையே உலுக்கியுள்ளன. தொடக்க விழாவில் போர் எதிர்ப்பு உணர்வுகள் வெளிப்பட்டன, மேலும் அமெரிக்க ஒலிம்பிக் வீரர்கள் ட்ரம்ப் நிர்வாகத்தை பகிரங்கமாக விமர்சித்துள்ளனர்.

அமெரிக்க நகரங்களில் ICE-யின் சட்டவிரோத ஆக்கிரமிப்புகள், குடியேறியவர்களை நாடுகடத்துதல் மற்றும் மினியாபோலிஸில் ரெனீ நிக்கோல் குட் மற்றும் அலெக்ஸ் பிரெட்டி ஆகியோர் படுகொலை செய்யப்பட்டது போன்ற நிகழ்வுகள் ஐரோப்பா மற்றும் அதற்கும் அப்பால் உள்ள பெருந்திரளான மக்களை அதிர்ச்சிக்கும் தீவிரமான சிந்தனைக்கும் உள்ளாக்கியுள்ளன. ட்ரம்ப் நிர்வாகத்தின் கீழ், தாங்கள் இதுவரை கண்டிராத ஒரு அமெரிக்க அரசாங்கத்தை எதிர்கொள்கிறோம் என்பதை உலகம் முழுவதிலும் உள்ள உழைக்கும் மக்கள் உணர்ந்து வருகின்றனர். இது பாசிசக் கொள்கைகளை அப்பட்டமாக அறிவித்து செயல்படுத்தும் ஒரு முற்றிலும் சட்டவிரோத ஆட்சியாக உள்ளது.

மிலானில் நடக்கும் நிகழ்வுகள், சர்வதேச அளவில் மக்கள் மத்தியில் தூண்டிவிட்டுள்ள எதிர்வினையின் ஆரம்பக் கட்டத்தைப் பிரதிபலிக்கின்றன. ஜனவரி 30-31 ஆகிய தேதிகளில், ICE இந்த விளையாட்டுகளில் பங்கேற்கும் என்ற அறிவிப்பை எதிர்த்து மிலானில் ஆயிரக்கணக்கானோர் போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்கள் ஏப்ரல் 25 சதுக்கத்தில் ஒன்று கூடினர். இந்தச் சதுக்கத்துக்கு, 1945 ஏப்ரல் 25 அன்று நாஜி மற்றும் இத்தாலிய பாசிச அதிகாரிகளுக்கு எதிராக மிலானில் நடந்த பொது வேலைநிறுத்தம் மற்றும் ஆயுதமேந்திய கிளர்ச்சியின் நினைவாகப் பெயரிடப்பட்டது. இது, பாசிச சர்வாதிகாரி பெனிட்டோ முசோலினியைப் பிடித்து தூக்கிலிடுவதற்கு இட்டுச் சென்றது.

மக்களின் இந்த ஆக்ரோஷமான வெளிப்பாடு, இத்தாலிய அதிகாரிகளை அதிர்ச்சியில் ஆழ்த்தியது. இத்தாலிய வெளியுறவு அமைச்சர் அந்தோனியோ தஜானி, ICE மீதான விமர்சனத்தைக் கண்டித்தார். இனப்படுகொலை செய்த நாஜி எஸ்.எஸ் (SS) துணை இராணுவப் படையினரைக் குறிப்பிட்டு, “இங்கு வருவது ஒன்றும் எஸ்.எஸ் படையினர் அல்ல” என்று அவர் கூறினார். இருப்பினும், இது நிலைமையைத் தணிக்கவில்லை, ஏனெனில் ICEன் முகவர்களுக்கும் நாஜி ஆயுத குழுக்களுக்கும் இடையே உள்ள தெளிவான ஒற்றுமைகள் மக்களுக்கு அப்பட்டமாகத் தெரிகின்றன. ICE என்பது உழைக்கும் மக்களைத் தேவையற்றவர்களாகக் கருதும் ஒரு ஆளும் வர்க்கத்தின் சார்பாக, மக்கள் ஒடுக்குமுறை, நாடுகடத்துதல், பெரும் தடுப்புக்காவல் மற்றும் நீதிமன்ற விசாரணைக்கு அப்பாற்பட்ட கொலைகளைக் கண்காணிக்கும் ஒரு போலீஸ்-அரசு பயங்கரவாத அமைப்பாகும்.

இத்தாலியின் சமூக நிலைமைகள், காஸாவில் இஸ்ரேல் நடத்தும் இனப்படுகொலை மற்றும் மிலானில் ICE முகவர்களின் இருப்பு ஆகியவற்றிற்கு எதிரான போராட்டங்கள் தொடர்ந்து நீடிக்கின்றன. இந்த வார இறுதியில் ஆயிரக்கணக்கான மக்கள் மிலானில் மீண்டும் திரண்டனர்; ஒலிம்பிக் கிராமத்தை நோக்கி அணிவகுத்துச் செல்வதற்காக அவர்கள் நகரின் போலீஸ் ஊரடங்கை மீறினர். கூட்டத்தின் மீது கண்ணீர் புகை குண்டுகள் மற்றும் நீர்த்தாரைகளைப் பிரயோகித்த கலகத் தடுப்பு போலீசாருடன் போராட்டக்காரர்கள் மோதினர்.

போர் எதிர்ப்பு அல்லது ட்ரம்ப்பிற்கு எதிரான மறைமுகக் கருத்துக்கள், ஒலிம்பிக் தொடக்க விழாவின் திட்டமிடப்பட்ட நிகழ்வுகளுக்குள்ளும் ஊடுருவின. மிலானைச் சேர்ந்த ராப் இசைக்கலைஞர் காலி (Ghali), ஜியானி ரொதாரியின் புகழ்பெற்ற 1948-ஆம் ஆண்டு போர் எதிர்ப்புச் சிறுவர் கவிதையான புரோமெமோரியாவை (Promemoria) பாடினார். அதே வேளையில், அமெரிக்க / தென்னாப்பிரிக்க நடிகை சார்லிஸ் தெரோன், இனவெறிக்கு எதிரான முன்னாள் தென்னாப்பிரிக்க ஜனாதிபதி நெல்சன் மண்டேலாவின் மேற்கோள் ஒன்றை வாசித்தார்.

தொடக்க விழாவில் கூடியிருந்த 60,000ம் பேர் கொண்ட கூட்டத்தினர், அமெரிக்க ஒலிம்பிக் குழுவினருக்காகக் கைதட்டல்களை எழுப்பியபோது, அமெரிக்கத் துணை ஜனாதிபதி வான்ஸ் மற்றும் அவரது மனைவி உஷா மைதானத்திற்கு வரும் காட்சிகள் திரையில் காட்டப்பட்டதும், அவர்களைப் பார்த்து பூ (Boo) என சத்தமிட்டுத் தங்கள் எதிர்ப்பைத் தெரிவித்தனர். அமெரிக்க வீரர்கள் அணிவகுத்துச் செல்லும்போது இதுபோன்று சத்தமிட வேண்டாம் என்ற ஒலிம்பிக் அமைப்பாளர்களின் கோரிக்கையை மக்கள் புறக்கணித்தனர்.

இறுதியாக, ஒலிம்பிக் வீரர்களே வெளியிட்ட அறிக்கைகள் ட்ரம்ப் மற்றும் மெலோனி அரசாங்கங்களை ஆழமாக உலுக்கியுள்ளன. இவர்கள் பல ஆண்டுகள் கடுமையான பயிற்சியில் தங்களை அர்ப்பணித்த அசாத்திய விளையாட்டுத் திறன் கொண்ட நபர்கள் ஆவர். போட்டிகளின் போது ஒலிம்பிக் கிராமத்தில் வசிக்கும் இவர்கள், உலகம் முழுவதிலுமிருந்து வரும் வீரர்களைச் சந்தித்து, சர்வதேசத் தோழமையையும் மரியாதையையும் வளர்க்கிறார்கள். ஊடகங்களில் ஒலிம்பிக் போட்டிகளைச் சுற்றிப் பரப்பப்படும் தேசபக்தி மற்றும் கொடி அசைத்தல் போன்ற விஷயங்களை அவர்கள் தானாக முன்வந்து விரும்பி ஏற்பதில்லை, மாறாக அவை அவர்கள் மீது திணிக்கப்படுகின்றன என்பதையே இவர்களின் கருத்துக்கள் தெளிவுபடுத்துகின்றன.

ICE நடவடிக்கைகளின் போது, தனது நாட்டைப் பிரதிநிதித்துவப்படுத்துவது உங்களுக்கு வசதியாக இருக்கிறதா என்று கேட்கப்பட்டபோது, அமெரிக்க பனிச்சறுக்கு வீரரான ஹண்டர் ஹெஸ், “நான் கொடியை அணிந்திருப்பதாலேயே, அமெரிக்காவில் நடக்கும் எல்லாவற்றையும் நான் ஆதரிக்கிறேன் என்று அர்த்தமல்ல” என்று பதிலளித்தார்.

அவருடன் சக வீரரான கிறிஸ் லில்லிஸ், ICEன் நடவடிக்கைகள் மற்றும் அமெரிக்காவின் ஒட்டுமொத்த நிகழ்வுகள் குறித்து தான் “மனம் உடைந்து” இருப்பதாகக் கூறினார். “ஒரு நாடாக, நாம் ஒவ்வொருவரின் உரிமைகளையும் மதிப்பதிலும், எமது குடிமக்கள் மற்றும் மற்ற அனைவரையும் அன்புடனும் மரியாதையுடனும் நடத்துவதை உறுதி செய்வதிலும் கவனம் செலுத்த வேண்டும் என்று நான் நினைக்கிறேன். ஒலிம்பிக் போட்டிகளில் வீரர்கள் போட்டியிடுவதைப் பார்க்கும்போது, நாங்கள் பிரதிநிதித்துவப்படுத்த முயற்சிக்கும் அமெரிக்கா இதுதான் என்பதை மக்கள் உணர்வார்கள் என்று நான் நம்புகிறேன்” என்று அவர் தெரிவித்தார்.

இத்தகைய அறிக்கைகள் ஒலிம்பிக் வரலாற்றில் சக்திவாய்ந்த அரசியல் முக்கியத்துவம் வாய்ந்த விமர்சன தருணங்களின் நீண்ட பாரம்பரியத்தின் ஒரு பகுதியாகும். 1968-ஆம் ஆண்டு, டாக்டர் மார்ட்டின் லூதர் கிங் ஜூனியர் படுகொலை செய்யப்பட்ட சில மாதங்களுக்குப் பிறகு, இனவெறியை எதிர்ப்பதற்காக அமெரிக்க வீரர்கள் கைகளை உயர்த்தி கருப்பினத்தவர் உரிமைக்கான முழக்க வணக்கம் செலுத்திய அந்தச் சின்னமான போராட்டத்தைப் போன்றதே இதுவும் ஆகும்.

ஹிட்லர் ஆட்சியின் கீழ் நடந்த 1936 பேர்லின் ஒலிம்பிக் போட்டியின் போது, கறுப்பின அமெரிக்க வீரர் ஜெஸ்ஸி ஓவன்ஸ் நான்கு தங்கப் பதக்கங்களை வென்று நாஜிக்களின் இனவெறிக் கோட்பாட்டைத் தகர்த்தார். அந்தப் போட்டியில் ஆரம்பச் சுற்றில் ஓவன்ஸ் இரண்டு முறை தவறு (fouls) செய்தபோது, ஜேர்மனியின் நீளம் தாண்டுதல் வீரர் லஸ் லோங் அவருக்கு முக்கிய ஆலோசனைகளை வழங்கினார். இந்த ஆலோசனை, ஓவன்ஸ் தகுதி பெற்று இறுதியில் தங்கம் வெல்ல உதவியது. வெள்ளிப் பதக்கம் வென்ற லஸ் லோங், ஹிட்லரின் முன்னிலையிலேயே ஓவன்ஸுடன் கை கோர்த்து அவரைப் பகிரங்கமாகப் பாராட்டினார்.

ஹன்ட் மற்றும் லில்லிஸ் போன்றவர்களின் கருத்துக்கள், டரம்ப் மற்றும் மெலோனி போன்ற அரசாங்கங்கள் எதைப் பிரதிநிதித்துவப்படுத்துகின்றனவோ, அதற்கு எதிராக உலகெங்கிலும் உள்ள மக்கள் மத்தியில் வளர்ந்து வரும் வெறுப்பைப் பிரதிபலிக்கின்றன. தனிமைப்படுத்தப்பட்ட மற்றும் வெறுக்கத்தக்க இந்த பிற்போக்கு அரசாங்கங்களுக்கு எதிராக ஒரு ஆழமான சமூக மற்றும் அரசியல் தீவிரமயமாக்கல் தொடங்கியுள்ளது. தணிக்கை மற்றும் போலீஸ்-அரசு ஒடுக்குமுறைகளையும் மீறி, இந்த மக்கள் உணர்வு வெளிப்படத் தொடங்கியுள்ளது.

எதிர்பார்த்தபடியே, ட்ரம்பும் மெலோனியும் விளையாட்டுகளின் போது தங்களை எதிர்க்கும் வீரர்களையும் போராட்டக்காரர்களையும் தரம் தாழ்ந்த முறையில் விமர்சித்துள்ளனர். ட்ரூத் சோஷியல் தளத்தில் ஹண்டர் ஹெஸை தாக்கிப் பேசிய ட்ரம்ப், “அவர் ஒரு உண்மையான தோல்வியாளர், தற்போதைய குளிர்கால ஒலிம்பிக்கில் அவர் தனது நாட்டைப் பிரதிநிதித்துவப்படுத்தவில்லை என்று கூறுகிறார்” என்று பதிவிட்டார். மெலோனி ஒலிம்பிக் போராட்டக்காரர்களை “இத்தாலியினதும் இத்தாலிய மக்களினதும் எதிரிகள்” என்று விமர்சித்தார்.

ஆனால் “மக்களின் எதிரிகள்” யார் என்பதைக் கண்டறிவது கடினமல்ல. போர், இனப்படுகொலை, புலம்பெயர்ந்தோர்களுக்கு எதிரான இனவெறியைத் தூண்டுதல், சிக்கன நடவடிக்கைகள் மற்றும் போலீஸ்-அரசு அடக்குமுறை ஆகியவற்றை நாடும் ஆளும் முதலாளித்துவ தன்னலக்குழுவின் பாசிசப் பிரதிநிதிகளாக அவர்கள் உள்ளனர். மாறாக, அவர்களுக்கு எதிராகப் போராடும் தொழிலாளர்களோ அல்லது இளைஞர்களோ அல்ல.

முதலாளித்துவ தன்னலக்குழுவின் கைகளில் இருந்து பொருளாதார மற்றும் அரசியல் அதிகாரத்தைப் பறிக்கக்கூடிய சமூக சக்தியான தொழிலாள வர்க்கத்தின் எழுச்சியால், சர்வதேச அளவில் எதிர்ப்புணர்வுகள் வளர்ந்து வருகின்றன. ஜனவரி மாதம் மினியாபோலிஸில் குட் மற்றும் பிரெட்டி ஆகியோரின் போலீஸ் படுகொலைகளுக்கு எதிராக நடந்த மக்கள் போராட்டங்கள், அமெரிக்காவிலும் சர்வதேச அளவிலும் உருவாகி வரும் சமூக எழுச்சியின் வெளிப்பாடுகளாகும்.

உண்மையில், ஒலிம்பிக் தொடக்க விழா நடைபெற்ற அதே நாளில், அமெரிக்காவில் 46,000ம் செவிலியர்களின் வேலைநிறுத்தம் தொடர்ந்து கொண்டிருக்கிறது. அதே வேளையில், இத்தாலி மற்றும் மத்திய தரைக்கடல் பகுதி முழுவதும் உள்ள துறைமுகத் தொழிலாளர்கள் “போருக்காகத் துறைமுகத் தொழிலாளர்கள் வேலை செய்ய மாட்டார்கள்” என்ற ஒருநாள் வேலைநிறுத்தத்தைத் தொடங்கினர். இவர்களது வேலைநிறுத்தம் மத்திய கிழக்கு நாடுகளை நோக்கிச் சென்ற ஆயுதங்களின் வருகையைத் தாமதப்படுத்தியதுடன், காஸா இனப்படுகொலைக்கு எதிராக ஆயுதங்களை ஏற்றிச் சென்ற கப்பல்களைத் துறைமுகங்களிலேயே தடுத்து நிறுத்தியது.

இந்த நிகழ்வுகள் தொழிலாள வர்க்கப் போராட்டங்களின் சர்வதேச ஐக்கியத்தின் தேவையையும் சாத்தியத்தையும் சுட்டிக்காட்டுகின்றன. இத்தகைய இயக்கத்தின் நனவான குறிக்கோள், சிக்கன நடவடிக்கை, ஏகாதிபத்திய போர் மற்றும் சர்வாதிகாரக் கொள்கைகளைப் பின்பற்றும் முதலாளித்துவ அரசாங்கங்களை வீழ்த்துவதற்கும், அதிகாரத்தை உழைக்கும் மக்களிடம் மாற்றுவதற்கும் தொழிலாளர்களின் சமூக மற்றும் தொழில்துறை சக்தியைத் திரட்டுவதாக இருக்க வேண்டும். இதன் மூலம் தனிநபர் இலாபத்திற்காக அல்லாமல், சமூகத் தேவைகளைப் பூர்த்தி செய்ய சமூக மற்றும் பொருளாதார வளங்கள் பயன்படுத்தப்படும் ஒரு சோசலிச சமுதாயத்தை உருவாக்க முடியும்.

Loading