இந்த மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கு காணலாம்.
இந்திய பிரதமர் நரேந்திர மோடி இந்த வாரம் இஸ்ரேலுக்கு இரண்டு நாள் விஜயம் மேற்கொண்டார். வாஷிங்டனும் டெல் அவிவும் ஈரானால் ஆத்திரமூட்டப்படாமலேயே அதன் மீது ஒரு குற்றவியல் போரை தொடங்கத் தயாராக இருக்கும் கட்டத்தில், இஸ்ரேலுடனான இந்தியாவின் “மூலோபாய பங்காண்மையை” மேலும் உயர்த்த இந்த பயணத்தை அவர் தேர்ந்தெடுத்துள்ளார்.
2003 இல் ஈராக் மீது படையெடுத்ததன் பின்னர், அமெரிக்கா மத்திய கிழக்கில் முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு அதிக ஆயுத சக்தியை நிலைநிறுத்தி வருவதால், அத்தகைய போர் ஈரான் மக்களுக்கு பேரழிவு விளைவுகளை ஏற்படுத்துவதோடு முழு மத்திய கிழக்கையும் தீக்கிரையாக்கும் அபாயத்தைக் கொண்டுள்ளது.
பல வாரங்களாக மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்கும் இஸ்ரேலின் இராணுவம், ஈரான் மீதான போரில் இணைவதற்கு வாஷிங்டன் பச்சை கொடி காட்டும் வரை மட்டுமே காத்திருக்கிறது. மோடியின் பாராட்டுகளையும் அரவணைப்புகளையும் ஏராளமாகப் பெற்ற இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு, கடந்த இரண்டு மாதங்களில் இரண்டு முறை, ஈரானுக்கு எதிரான ஆட்சி மாற்றப் போருக்கு சதி திட்டமிடுவதற்காக அமெரிக்க ஜனாதிபதியும் வருங்கால சர்வாதிகாரியுமான டொனால்ட் ட்ரம்பை வெள்ளை மாளிகையில் சந்தித்துள்ளார். அனைத்து தகவல்களின்படி, கடந்த ஜூன் 12 அன்று அமெரிக்க-இஸ்ரேலிய குண்டுவீச்சின் போது ஏற்பட்டதை விட மிகப் பெரிய அளவில் ஈரான் மீது பேரழிவை ஏற்படுத்தும் வகையில் குண்டு மழை பொழிவதாக ட்ரம்ப் விடுத்த அச்சுறுத்தல்களை நிறைவேற்றுமாறு நெதன்யாகு வலியுறுத்தி வருகிறார்.
இதற்கிடையில், ட்ரம்ப் மத்தியஸ்தம் செய்ததாகக் கூறப்படும் போர் நிறுத்தம் ஒருபுறம் இருக்க, நெதன்யாகுவும் அவரது பாசிச ஆட்சியும், காஸா மக்கள் மீது இனப்படுகொலை தாக்குதலைத் தொடர்வதுடன் ஒரு மாபெரும் இஸ்ரேலை ஸ்தாபிப்பதற்கான தங்கள் திட்டங்களை மேம்படுத்துவதற்காக, மேற்குக் கரையை இனரீதியாக சுத்திகரிக்கும் முயற்சியை அவர்கள் தீவிரப்படுத்தியுள்ளனர்.
இவை எதுவும் மோடியை சிறிதும் இடைநிறுத்தவில்லை.
இஸ்ரேலின் குற்றங்களுடன் தன்னையும் இந்தியாவையும் ஒன்றிணைக்க மோடி முன்சென்றுள்ளார். 7 அக்டோபர் 2023 அன்று நடந்த ஹமாஸ் எழுச்சியை, தீவிர வலதுசாரிகள் உட்பட முழு சியோனிச அரசியல் ஸ்தாபனத்தின் காதுகளுக்கும் இசையாக ஒலிக்கும் மொழியில் அவர் கண்டனம் செய்தார்; காஸாவை தனது தனிப்பட்ட மேற்பார்வையின் கீழ் ஒரு புதிய காலனித்துவ பினாமி ஆட்சிக்கு உட்பட்டதாக மாற்றும் ட்ரம்பின் “சமாதானத் திட்டத்தை” அவர் பாராட்டினார்; காஸா மக்களுக்கு எதிரான இஸ்ரேலின் பயங்கரவாத மற்றும் படுகொலை பிரச்சாரம் குறித்து ஒரு அவர் மூச்சுக்கூட விடவில்லை. ஹமாஸை “பயங்கரவாதி” என கடுமையாக சாடிய மோடி, இந்தியாவின் வலிமையையும் இஸ்ரேலின் “பகிரப்பட்ட ஜனநாயக விழுமியங்களையும்” பாராட்டினார். ஆனால் இஸ்ரேலிய குண்டுவீச்சினால் 70 ஆயிரத்துக்கும் மேற்பட்ட காஸா பாலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டதையும், அந்த பகுதியின் முழு மக்களையும் திட்டமிட்டு பட்டினியால் வாட்டியதையும், அதன் பெரும்பாலான உட்கட்டமைப்பு மற்றும் குடியிருப்புகள் அழிக்கப்பட்டதையும் அவர் மௌனமாக புறக்கணித்தார்.
2017 இல், மோடி இஸ்ரேலுக்கு விஜயம் செய்த முதல் இந்தியப் பிரதமரானார். தனது இரண்டு நாள் பயணத்தின் முதல் நாளான புதன்கிழமை, நெசெட்டில் (இஸ்ரேல் பாராளுமன்றம்) உரையாற்றிய முதல் இந்தியப் பிரதமர் ஆனார். 2002 இல் குஜராத் முதலமைச்சராக இருந்தபோது, சுமார் 2,000 பேர் கொல்லப்பட்ட மற்றும் இலட்சக்கணக்கானோர் வீடற்றவர்களாக ஆக்கப்பட்ட முஸ்லிம்-விரோத படுகொலையைத் தூண்டி, இந்தியாவில் முதன்முதலில் தேசிய முக்கியத்துவம் பெற்ற ஒரு இந்து மேலாதிக்கவாதியை, போர்க் குற்றவாளி ஆட்சி ஒரு கோரமான வணக்கத்துடன் எழுந்து நின்று வரவேற்றது.
தண்டனை பாணியிலான பல ஆண்டுகால இஸ்ரேலிய முற்றுகையினால் தூண்டப்பட்ட ஹமாஸ் எழுச்சியை, “ஒரு காட்டுமிராண்டித்தனமான பயங்கரவாதத் தாக்குதல்” என்று மோடி முத்திரை குத்தினார். “உங்கள் வலியை நாங்கள் உணர்கிறோம்,” என்று அவர் தொடர்ந்தார். “உங்கள் துயரத்தை நாங்கள் பகிர்ந்து கொள்கிறோம். இந்த தருணத்திலும் அதற்கு அப்பாலும், இந்தியா இஸ்ரேலுடன் உறுதியாக, முழு நம்பிக்கையுடன் நிற்கிறது.
“பொதுமக்களின் கொலையை எந்த காரணத்தாலும் நியாயப்படுத்த முடியாது. பயங்கரவாதத்தை எதுவும் நியாயப்படுத்த முடியாது,” என அவர் தெரிவித்தார்.
மோடி தனது உரையில் காஸாவைப் பற்றி குறிப்பிட்டதைப் பொறுத்தவரை, அது ட்ரம்பின் “சமாதானத் திட்டத்தின்” நிலைப்பாட்டில் இருந்து வந்தது. அது “நீதியான மற்றும் நீடித்த அமைதிக்கான வாக்குறுதியைக் கொண்டுள்ளது” என்று அதை அவர் வஞ்சத்தனமாகப் பாராட்டினார்.
இந்த ஓர்வெல்லிய சித்தரிப்புக்கு ஏற்ப, மோடி நெதன்யாகுவையும் இஸ்ரேலிய முற்றுகை அரசையும் உண்மையான சமாதானத்தை உருவாக்குபவர்களாக சித்தரித்தார். பாலஸ்தீனப் பிரச்சினைக்கு அதன் “இறுதித் தீர்வை” செயல்படுத்துவதில் இஸ்ரேலுக்கு சுதந்திரம் அளிப்பதற்காக வடிவமைக்கப்பட்ட, ட்ரம்ப் இடைத்தரகராக இருந்த, 2020 ஆபிரகாம் ஒப்பந்தங்களை பாராட்டிய அவர், இந்தியா “உங்கள் தைரியத்தையும் தொலைநோக்குப் பார்வையையும் பாராட்டுகிறது” என்று கூறினார்.
இந்தோ-இஸ்ரேலிய உறவுகளைப் பற்றிக் கூறுகையில், தெற்காசியாவில் வாஷிங்டனின் முன்னணி கூட்டாளிக்கும் அதன் மத்திய கிழக்கு தாக்குதல் நாய்க்கும் இடையிலான “வலுவான பங்காண்மையானது” “தேசிய நலன்களுக்கு உதவுவதோடு, பூகோள ஸ்திரத்தன்மை மற்றும் செழிப்புக்கும் பங்களிக்கிறது” என்று அவர் அறிவித்தார்.
ஜெருசலேம் போஸ்ட் மகிழ்ச்சியடைந்தது. “பயங்கரவாதத்தை” எதிர்த்துப் போராடுவது என்ற பெயரில் காஸா மக்கள் மீது இஸ்ரேல் இப்போது இரண்டரை ஆண்டுகளாக நடத்தி வரும் போரை மோடி சித்தரித்த விதத்தைப் பற்றிப் பேசுகையில், அது, “எந்த மழுப்பலும் இல்லை. சூழ்நிலைப்படுத்தலும் இல்லை. ‘பக்கசார்பும்’ இல்லை. ‘மூல காரணங்களைக்’ குறிப்பிடவில்லை. கண்டனத்தை நீர்த்துப்போகச் செய்யும் நோக்கில் ‘சமநிலைப்படுத்துதலும்’ இல்லை,” என்று அறிவித்தது.
மோடியைப் புகழும் போது நெதன்யாகு உணர்ச்சிவசப்பட்டமை ஆச்சரியத்துக்குரியதல்ல. இஸ்ரேலின் பக்கம் “நின்றதற்கு” இந்தியாவுக்கு நன்றி தெரிவித்த அவர், பின்னர் இந்தியாவின் இந்து மேலாதிக்க பிரதமரை “ஒரு நண்பரை விட, ஒரு சகோதரரை விட” மேலானவர் என்று அறிவித்தார்.
மோடியின் வருகையின் முடிவில், இரு நாடுகளும் பதினாறு புரிந்துணர்வு ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டதுடன் அவற்றின் கூட்டாண்மையை இப்போது “சமாதானம், புதுமை மற்றும் சுபீட்சத்துக்கான விசேட மூலோபாய பங்காண்மை” என உயர்த்தின.
செயற்கை நுண்ணறிவு மற்றும் சைபர் பாதுகாப்பு துறையில் ஒத்துழைப்பு முதல் கல்வி, வணிகம் மற்றும் விவசாயம் வரை அனைத்தையும் இந்த புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் உள்ளடக்கியிருந்தன. 2023 அக்டோபருக்குப் பிறகு பாலஸ்தீன தொழிலாளர் மீதான கட்டுப்பாடுகளால் ஏற்பட்ட தொழிலாளர் பற்றாக்குறையை ஈடுசெய்ய 50,000 இந்திய தொழிலாளர்களை இஸ்ரேலுக்குக் கொண்டு வருவதற்கான ஒப்பந்தமும் அவற்றில் அடங்கும்.
நெதன்யாகுவும் மோடியும் ஒரு குறிப்பிடத்தக்க பாதுகாப்பு புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டனர். இது அரோ, டேவிட் ஸ்லிங், ஐயர்ன் டோம் (குறுகிய தூர ராக்கெட்டுகள்) மற்றும் ஐயரன் பீம் (லேசர் அடிப்படையிலானது) போன்ற நவீன ஏவுகணைகளை கூட்டாக மேம்படுத்துவது மற்றும் கூட்டாக உற்பத்தி செய்வதில் கவனம் செலுத்துகிறது. இது இராணுவப் பயிற்சி, ஆராய்ச்சி மற்றும் அபிவிருத்தி, சைபர் பாதுகாப்பு மற்றும் பயங்கரவாத எதிர்ப்பு ஆகியவற்றில் பரந்த ஒத்துழைப்புக்கான முந்தைய புரிந்துணர்வு ஒப்பந்தத்தை அடிப்படையாகக் கொண்டது.
இந்த விஜயத்தின் போது புதிய ஆயுத ஒப்பந்தங்கள் எதுவும் அறிவிக்கப்படாத போதிலும், சமீபத்திய ஆண்டுகளில் இந்திய-இஸ்ரேலிய ஆயுத வர்த்தகம் பெருமளவில் விரிவடைந்துள்ளது.
2020 முதல் 2024 வரை இஸ்ரேலின் வெளிநாட்டு ஆயுத விற்பனையில் மூன்றில் ஒரு பங்கைக் கொண்டு, புது தில்லி இப்போது இஸ்ரேலிய ஆயுதங்களை அதிகம் வாங்கும் நாடாக ஆகியுள்ளது. இஸ்ரேலுக்கான இந்தியாவின் இராணுவ ஏற்றுமதியும் சமீபத்திய ஆண்டுகளில் வேகமாக வளர்ந்துள்ளது. காஸா படுகொலை தொடங்கியதிலிருந்து, இந்தியா இஸ்ரேலிய ஆயுதங்களை இணைந்து தயாரித்து இஸ்ரேலுக்கு போர் ட்ரோன்கள், ஏவுகணைகள் மற்றும் வெடிபொருட்களை வழங்கியுள்ளது. காஸாவில் பயன்படுத்தப்படும் செயற்கை நுண்ணறிவு ஆயுத அமைப்பு இந்திய மற்றும் இஸ்ரேலிய நிறுவனங்களால் கூட்டாக உருவாக்கப்பட்டது.
கடந்த ஆண்டில், இரு நாடுகளும் 8.6 பில்லியன் டாலர் மதிப்புள்ள இராணுவ பரிவர்த்தனைகளை மேற்கொண்டுள்ளன.
மோடியின் வருகையின் போது, இருதரப்பு வர்த்தகத்தை அதிகரிக்க ஒரு சுதந்திர வர்த்தக ஒப்பந்தத்தை எட்ட முயற்சிப்பதாக புது தில்லியும் டெல் அவிவ்வும் மீண்டும் உறுதியளித்தன. கடந்த செப்டம்பரில், இஸ்ரேலிய நிதியமைச்சரும் தீவிர இஸ்ரேலிய குடியேற்ற-பாசிசவாதியுமான பெசலெல் ஸ்மோட்ரிச் இந்தியாவுக்கு பயணம் செய்தபோது, இரு நாடுகளும் தங்கள் முதல் இருதரப்பு முதலீட்டு ஒப்பந்தத்தில் (BIA) கையெழுத்திட்டன.
ஈரான் மீதான அமெரிக்க-இஸ்ரேலியப் போரின் அதிர்ச்சிகள் உலகளவில் எதிரொலித்து, புவிசார் அரசியல் பதட்டங்களை அதிகரிக்கச் செய்து, போரைத் தூண்டுவதோடு உலகப் பொருளாதாரத்தை உலுக்கும். அதன் எண்ணெயில் 80 சதவீதத்திற்கும் அதிகமாக இறக்குமதி செய்யும் இந்தியாவுக்கு, எண்ணெய் விலையில் பெரும் ஏற்றத்தையும் மத்திய கிழக்கிலிருந்து கிடைக்கும் புலம்பெயர் தொழிலாளர்களின் வருமனம் சரிவதையும் எதிர்கொள்ள நேரிடும்.
ஈரான் இந்தியாவின் நீண்டகால நட்பு நாடாகும். ஆப்கானிஸ்தான் மற்றும் அனைத்து மத்திய ஆசியாவிற்கும் ஒரு பொருளாதார வழித்தடத்தை வழங்குவதற்காக, ஈரானின் சபாஹர் துறைமுகத்தை மேம்படுத்துவதில் புது தில்லியானது நிதி மற்றும் அரசியல் மூலதனத்தை முதலீடு செய்துள்ளது.
ஈரான் மீதான அமெரிக்க-இஸ்ரேலியப் போரின் விளைவுகள் குறித்து புது தில்லி சந்தேகத்திற்கு இடமின்றி அச்சமடைகின்ற போதிலும், இஸ்ரேலுடனும், இன்னும் முக்கியமாக, வாஷிங்டனுடனும் அதன் பொருளாதார மற்றும் இராணுவ-பாதுகாப்பு உறவுகளை விரிவுபடுத்துவதைத் தடுக்க அந்த அச்சம் நிச்சயமாக போதுமானதாக இல்லை. எல்லாவற்றுக்கும் மேலாக, சர்வதேச சட்டத்தை அவர்கள் மீறுவதை, இந்தியாவின் சொந்த கொள்ளையடிக்கும் நடவடிக்கைகளுக்கும் பெரும் வல்லரசாகும் விருப்பங்களுக்கும் உரிமம் வழங்குவதாகக் கருதுகிறது.
கடந்த மே மாதம், பாகிஸ்தானால் ஆத்திரமூட்டப்படாமலேயே அதன் மீது இந்தியா நடத்திய வெளிப்படையான சட்டவிரோத தாக்குதலுக்கு, அதன் சந்தேகத்திற்கு இடமில்லாத ஆதரவை அறிவிப்பதில் இஸ்ரேல் கிட்டத்தட்ட தனியாக நின்றது என்பது குறிப்பிடத்தக்கது. இந்தத் தாக்குதல் நான்கு நாட்கள் வான்வழி மற்றும் பீரங்கி மோதல்களுக்கு வழிவகுத்ததுடன் தெற்காசியாவின் போட்டி அணு ஆயுத சக்திகளை முழுமையான போரின் விளிம்பிற்கு கொண்டு வந்தது.
கடந்த கால் நூற்றாண்டில், பா.ஜ.க மற்றும் காங்கிரஸ் கட்சி அரசாங்கங்களின் கீழ், புது தில்லியானது அமெரிக்க ஏகாதிபத்தியத்துடனான அதன் சீன-விரோத “பூகோள மூலோபாய கூட்டாண்மையை” தொடர்வதற்காக தெஹ்ரானுடனான உறவுகளை மீண்டும் மீண்டும் தியாகம் செய்துள்ளது. தெற்காசியாவின் வரலாற்று மூலோபாய போட்டியாளர்களுக்கு இடையே நல்லிணக்கத்தை ஏற்படுத்துவதாகக் கருதப்பட்ட ஈரானில் இருந்து பாகிஸ்தான் வழியாக இந்தியாவுக்கு ஒரு இயற்கை எரிவாயு குழாய் இணைப்பைத் துண்டிப்பதும், 2000 ஆண்டுகளின் பிற்பகுதியில் ஈரானின் சிவில் அணுசக்தி திட்டத்தை அச்சுறுத்தலாகக் குறிப்பிடுவதில், சர்வதேச அணுசக்தி நிறுவனத்தில் அமெரிக்காவுடன் அணிசேர்வதும் இதில் அடங்கும்.
ஆக்கிரமிப்பு, போர் மற்றும் இனப்படுகொலை மற்றும் குறிப்பாக வாஷிங்டனின் இந்தியா-மத்தியகிழக்கு-ஐரோப்பா பொருளாதார வழித்தடத்தை (IMEC) ஊக்குவிப்பதன் மூலம், இறுதியில் மத்திய கிழக்கில் அமெரிக்க செல்வாக்கின் விரிவாக்கத்திலிருந்து ஆதாயம் பெறவும் இந்தியா எதிர்பார்க்கின்றது. இந்த உட்கட்டமைப்பு முயற்சி 2023 ஜி20 உச்சி மாநாட்டில், புது தில்லியில் அமெரிக்க ஆதரவு மற்றும் சவுதி அரேபியா மற்றும் ஐக்கிய அரபு எமிரேட்ஸின் பங்கேற்புடன் சீனாவின் பெல்ட் அண்ட் ரோட் (Belt and Road Initiative) முன்முயற்சியை எதிர்ப்பதற்கான ஒரு வழிமுறையாக தொடங்கப்பட்டது. இந்தியாவையும் ஐரோப்பாவையும் இணைக்கும் பல்வகை வர்த்தக மற்றும் போக்குவரத்து வழித்தடத்தை நிறுவுவதே IMEC-இன் நோக்கமாகும். இதன் கீழ், போக்குவரத்து நேரங்களில் 40 சதவிகிதத்தை குறைப்பது மற்றும் இஸ்ரேலையும் அதன் ஹைஃபா துறைமுகத்தையும் ஒரு பிரதான மையமாக நிலைநிறுத்தும் சாத்தியத்துக்கும் உறுதியளிக்கிறது.
உலகின் மிகப் பெரிய பணக்காரர்களில் ஒருவரும் மோடியின் நெருங்கிய கூட்டாளியுமான கௌதம் அதானி தலைமையிலான அதானி குழுமம் இஸ்ரேலின் ஹைஃபா துறைமுகத்தில் 70 சதவிகித பங்குகளை வைத்திருக்கிறது என்பது தற்செயலாக அல்ல. மாறாக, இந்தியா-இஸ்ரேல் உறவுகளில் அதானி குழுமத்தின் பங்கு இதைத் தாண்டி செல்கிறது. இது தொழில்நுட்பம் மற்றும் உட்கட்டமைப்பில் இஸ்ரேலை தளமாகக் கொண்ட நிறுவனங்களுடன் பங்காண்மைகளைக் கொண்டுள்ளதுடன் இஸ்ரேல் பாதுகாப்புப் படைகளுக்கு ட்ரோன்கள் மற்றும் ஆயுதங்களை உற்பத்தி செய்யும் எல்பிட் சிஸ்டம்ஸ் போன்ற இஸ்ரேலிய பாதுகாப்பு நிறுவனங்களுடன் ஒத்துழைக்கிறது.
இந்தியப் பிரதமரின் வருகையின் போது மோடிக்கும் நெதன்யாகுவுக்கும் இடையே காட்டப்பட்ட நட்புறவும் கருத்தியல் வேர்களைக் கொண்டுள்ளதாகும். சியோனிசத்திற்கும் இந்து மேலாதிக்கத்திற்கும் இடையே, மத தேசியவாதம் மற்றும் முஸ்லிம்களை “வேறுபடுத்தி பார்ப்பது” போன்ற பொதுவான வெறுப்பு ஆகியவற்றால் தூண்டப்பட்ட, ஆழமான மற்றும் நீண்டகால குணத் தோற்ற ஒற்றுமை காணப்படுகிறது. இது 1930களில் இந்துத்துவாவின் ஸ்தாபக சித்தாந்தவாதியான வி.டி. சவர்காரால் நன்கு அங்கீகரிக்கப்பட்டது. சியோனிசத்திற்கு ஆதரவளிக்க வலியுறுத்திய அவர், ஹிட்லர் ஜேர்மனியின் யூதர்களை நடத்துவது போல “இந்து தேசம்” இந்திய முஸ்லிம்களை நடத்த வேண்டும் என்று கூட வலியுறுத்தினார்.
எதிர்பார்த்தது போலவே, ஈரான் மோடியின் இஸ்ரேல் வருகையை கடுமையாக விமர்சித்துள்ளது. வெளியுறவு அமைச்சின் செய்தித் தொடர்பாளர் ஒருவர், இஸ்ரேல் காஸாவில் “போர்க்குற்றங்களை” நடத்தும் நேரத்தில் மோடியின் வருகையால் இந்தியா “பாலஸ்தீன மக்களின் துன்பங்களை” புறக்கணித்துள்ளதாக விமர்சித்தார். ஈரான் மீதான வரவிருக்கும் போரில் இஸ்ரேலின் வகிபாகத்தை நேரடியாக குறிப்பிடாவிட்டாலும், “இந்தியா ஒரு வரலாற்று நண்பராக சியோனிச ஆட்சியைக் கட்டுப்படுத்தும், அதற்கு வெகுமதி அளிக்காது” என்று தெஹ்ரான் எதிர்பார்த்தது என அந்த செய்தித் தொடர்பாளர் கூறினார்.
ஸ்டாலினிச நாடாளுமன்றக் கட்சிகளுக்கு அப்பால், மோடியின் இஸ்ரேல் பயணம் மற்றும் இந்திய-இஸ்ரேலிய மூலோபாய உறவுகளை மேம்படுத்துவது குறித்து அரசியல் ஸ்தாபனங்கள் மற்றும் பெருநிறுவன ஊடகங்களுக்குள் இருந்து சிறிய விமர்சனங்கள் வெளிப்பட்டன. அந்த விமர்சனங்கள், அரபு வளைகுடா நாடுகளுடனான உறவுகளை சேதப்படுத்தும் அதன் சாத்தியத்தை மையமாகக் கொண்டதாகவே இருந்தன -இனப்படுகொலை மற்றும் ஈரான் மீதான வரவிருக்கும் குற்றவியல் போருக்கும் இந்தியாவின் மறைமுக ஆதரவு பற்றி அல்ல.
“ஆக்கிரமிக்கப்பட்ட மேற்குக் கரையில் ஆயிரக்கணக்கான பாலஸ்தீனியர்களை இஸ்ரேல் வெளியேற்றி இடம்பெயர்த்து வருவது தீவிரமடைந்துள்ள நிலையில், மோடி அங்கு விஜயம் செய்தமைக்காக” அதிகாரப்பூர்வ எதிர்க்கட்சியான காங்கிரஸ் கட்சியின் செய்தித் தொடர்பாளர் ஜெய்ராம் ரமேஷ் கண்டனம் தெரிவித்தார்... “காஸாவில் பொதுமக்கள் மீதான இஸ்ரேலின் தாக்குதல்கள் இரக்கமின்றி தொடர்கின்றன (அத்துடன்) இஸ்ரேலும் அமெரிக்காவும் ஈரான் மீது வான்வழித் தாக்குதல்களைத் திட்டமிட்டுள்ளன,” என்றார். ஆனால் இது காஸாவில் இஸ்ரேலின் இனப்படுகொலைக்கு எதிராக, குறிப்பாக சிறுபான்மை முஸ்லிம் மக்களிடையே காணப்படும் பாரிய வெறுப்பு, மற்றும் உழைக்கும் மக்கள் மத்தியில் அடிநிலையில் காணப்படும் சக்திவாய்ந்த ஏகாதிபத்திய எதிர்ப்பு மரபுகளுக்கு அறைகூவல் விடுப்பதன் மூலம், வெகுஜன ஆதரவைப் பெறுவதற்கான ஒரு இழிவான முயற்சியே அன்றி வேறில்லை. காங்கிரஸ் கட்சி இந்திய-அமெரிக்க கூட்டணியுடன் முழுமையாக ஒத்துழைப்பதோடு, 2023 அக்டோபர் முதல் மத்திய கிழக்கு முழுவதும் இஸ்ரேல் வன்முறையில் ஈடுபட்டுள்ள நிலையில், முதலில் பைடென், பின்னர் ட்ரம்பின் கீழ், இஸ்ரேலுக்கு ஆயுதம் வழங்குதல், நிதியளித்தல் மற்றும் அரசியல் ரீதியாக ஆதரவளிப்பதில் வாஷிங்டனின் பங்கை திட்டமிட்டு மூடிமறைக்கின்றது.
