ஈரானுக்கு எதிரான போரில் பங்கேற்பதற்கான நிபந்தனைகளை ஐரோப்பிய ஒன்றியம் முன்வைக்கிறது

மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம்.

ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், ஜேர்மன் சான்சிலர் பிரெட்ரிக் மெர்ஸை வெள்ளை மாளிகையின் ஓவல் அலுவலகத்தில் சந்திக்கிறார். செவ்வாய்க்கிழமை, மார்ச் 3, 2026, வாஷிங்டன் [AP Photo/Mark Schiefelbein]

ஹோர்முஸ் நீரிணையில் இராணுவ நடவடிக்கையில் ஈடுபடுமாறு அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் விடுத்த அழைப்பை ஐரோப்பிய ஒன்றியம் (EU) உறுதியாக நிராகரித்துள்ளது. கடந்த திங்கள்கிழமை பிரஸ்ஸல்ஸில் நடைபெற்ற ஐரோப்பிய ஒன்றிய வெளியுறவு அமைச்சர்களின் கூட்டத்திற்குப் பிறகு, ஐரோப்பிய ஒன்றிய வெளியுறவு ஆணையர் காஜா கலாஸ் கூறுகையில், ‘யாரும் இந்தப் போரில் தீவிரமாக ஈடுபட விரும்பவில்லை. இது எங்களுடைய போர் அல்ல’ என்றார்.

ஜேர்மன் சான்சிலர் பிரெட்ரிக் மெர்ஸ் மற்றும் பிற ஐரோப்பிய அரசாங்கத் தலைவர்களும் போரில் பங்கேற்பதற்கு எதிராகப் பேசினர். “நாங்கள் பங்கேற்போமா என்பது கேள்வி அல்ல,” என்று கூறிய மெர்ஸ், “நாங்கள் அவ்வாறு செய்ய மாட்டோம்” என்றார். நேட்டோ குறித்து அவர் கூறுகையில், இது “ஒரு தற்காப்பு கூட்டணி, தலையீடு செய்யும் கூட்டணி அல்ல,” எனவே அதன் ஈடுபாடு இங்கே அவசியமில்லை என்றும் குறிப்பிட்டார்.

அமெரிக்க-இஸ்ரேலியத் தாக்குதலுக்குப் பிறகு ஈரானால் முடக்கப்பட்டுள்ள கடல்வழிப் பாதையை (ஹோர்முஸ் நீரிணை) பாதுகாப்பதில் உதவுமாறு அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் முன்னதாக ஐரோப்பிய கூட்டாளிகளை வலியுறுத்தியிருந்தார். மேலும், அவர்கள் மறுக்கும் பட்சத்தில் நேட்டோ அமைப்பில் அதன் விளைவுகளைச் சந்திக்க நேரிடும் என்றும் அச்சுறுத்தியிருந்தார்.

“இந்த நீரிணையின் மூலம் பயன்பெறுபவர்கள், அங்கு அசம்பாவிதங்கள் ஏதும் நடக்காமல் இருப்பதை உறுதி செய்ய உதவுவதே பொருத்தமானது,” என்று ட்ரம்ப் பைனான்சியல் டைம்ஸ் இதழுக்குத் தெரிவித்தார். “பதில் ஏதும் இல்லையென்றால் அல்லது அது எதிர்மறையான பதிலாக இருந்தால், அது நேட்டோவின் எதிர்காலத்திற்கு மிகவும் மோசமானதாக அமையும் என்று நான் நினைக்கிறேன்” என்று குறிப்பிட்ட அவர், கடந்த திங்கள்கிழமை நடந்த செய்தியாளர் சந்திப்பிலும் இந்த அச்சுறுத்தலை மீண்டும் விடுத்தார்.

ஐரோப்பாவின் “இல்லை” என்பது, ஈரான் மீதான குற்றவியல் போரை அவர்கள் நிராகரிக்கின்றனர் என்று அர்த்தமல்ல. அல்லது ஐரோப்பியர்கள் தங்களது சொந்த துருப்புக்களுடன் மோதலில் தலையிடுவதற்கான சாத்தியக்கூறுகளையும் இது விலக்கிவிடவும் இல்லை. அவர்கள் வெறுமனே தங்களால் கட்டுப்படுத்தவோ அல்லது அதன் முடிவில் செல்வாக்கு செலுத்தவோ முடியாத ஒரு போரில், தங்களை ஈடுபடுத்திக்கொள்ள அவர்கள் விரும்பவில்லை. மாறாக, இந்தப் போரில் தங்களின் பங்களிப்பை வழங்குவதற்குப் பதிலாக, அதற்கு ஈடாகப் பெரிய அளவிலான சலுகைகளைப் பெற அவர்கள் பேரம் பேச விரும்புகிறார்கள்.

போர் தொடங்கிய உடனேயே, அதாவது இரண்டு வாரங்களுக்கு முன்பு வெள்ளை மாளிகைக்குச் சான்சிலர் மெர்ஸ் சென்றிருந்தபோது, ஜனாதிபதி ட்ரம்பிற்கு தனது ஆதரவை உறுதிப்படுத்தியிருந்தார். ‘தெஹ்ரானில் உள்ள இந்த மோசமான ஆட்சி முடிவுக்கு வர வேண்டும் என்பதில் நாங்கள் உடன்படுகிறோம். அவர்கள் சென்ற பிறகு அடுத்தகட்டமாக என்ன நடக்கும் என்பதைப் பற்றி நாங்கள் கலந்துரையாடுவோம்” என்று அவர் அப்போது கூறியிருந்தார்.

ஆனால் அதன் பிறகு, ஈரான் ஆட்சி முறையை ஒரு சீட்டுக்கட்டு வீடுகளைப் போல வீழ்த்தக்கூடிய ஒரு குறுகிய காலப் போருக்கு ட்ரம்ப் அர்ப்பணிக்கவில்லை என்பது தெளிவாகியுள்ளது. வாஷிங்டன் மற்றும் டெல் அவிவ் நகரங்களில் உள்ள போர் வெறியர்கள் கற்பனை செய்ததை விட, ஈரான் மிகவும் மீள்திறன் கொண்டதாக நிரூபிக்கப்பட்டுள்ளது. அது ஏற்கனவே எட்டு நாடுகளில் பழிவாங்கும் தாக்குதல்களை நடத்தியுள்ளது. மேலும், உலக எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயு விநியோகத்தில் ஐந்தில் ஒரு பகுதியையும், உலக உர ஏற்றுமதியில் 13 சதவீதத்தையும் கொண்டு செல்லும் ஹோர்முஸ் நீரிணையையும் அது முடக்கியுள்ளது.

இந்த முடக்கம் வாரக்கணக்கிலோ அல்லது மாதக்கணக்கிலோ நீடித்தால், உலகப் பொருளாதாரத்தின் மீதான விளைவுகள் பேரழிவை ஏற்படுத்தும். ஏற்கனவே கடுமையாக உயர்ந்துள்ள எரிபொருள் மற்றும் வெப்பமூட்டிகளின் விலைகள் மேலும் விண்ணைத் தொடும். உணவுப் பொருட்களின் விலையும் அவ்வாறே உயரும். கச்சா எண்ணெயை மூலப்பொருளாக நம்பியிருக்கும் இரசாயனத் தொழிற்துறையும் கடுமையாகப் பாதிக்கப்படும். உலகளாவிய விநியோகச் சங்கிலியில் ஏற்படும் இந்த இடையூறு, பொருளாதாரத்தின் கிட்டத்தட்ட ஒவ்வொரு துறையிலும் எதிரொலிக்கும்.

ட்ரம்ப் நிர்வாகம் இதற்குப் பதிலடியாக ஒரு தரைவழித் தாக்குதலுக்கு தயாராகி வருகிறது. இது, ஒட்டுமொத்த மத்திய கிழக்கையும் போர்த் தீயினால் எரிக்கும் அச்சுறுத்தலை ஏற்படுத்தியுள்ளது. தனது போர்த் திட்டங்களைப் பற்றி நேட்டோ கூட்டாளிகளிடம் எவ்விதத் தகவலையும் தெரிவிக்காமலும், அல்லது கலந்தாலோசிக்காமலும் இருந்த ட்ரம்ப், இப்போது அவர்களின் ஆதரவை ஒரு இறுதி எச்சரிக்கையின் வடிவில் கோருகிறார்.

ஐரோப்பிய வல்லரசுகள் இதனால் ஆத்திரமடைந்துள்ளன —இருந்தாலும் அவர்கள் இதற்கு முற்றிலும் எதிரானவர்கள் அல்ல. அவர்களே பல ஆண்டுகளாக ஈரானில் ஆட்சி மாற்றத்தைக் கொண்டுவர உழைத்து வருகின்றனர் மற்றும் அந்நாட்டிற்கு எதிரான பொருளாதாரத் தடைகளையும் ஆதரித்துள்ளனர். இவர்கள் காஸாவில் இஸ்ரேலிய இனப்படுகொலையை ஆதரித்துள்ளனர். இது, ஈரான் மீதான போருக்கான ஒரு ஆயத்தப் பணியாகவே அமைந்தது. மத்திய கிழக்கை மறுபங்கீடு செய்வதில் தங்களுக்கான பங்கைப் பெற ஐரோப்பிய வல்லரசுகள் விரும்புகின்றன மற்றும் ஹோர்முஸ் நீரிணையின் முடக்கத்தால் நேரடியாக அவை பாதிக்கப்பட்டுள்ளன. இருப்பினும், அவர்கள் சில நிபந்தனைகளை விதிக்கின்றனர். தங்கள் சொந்த நலன்கள் பாதுகாக்கப்படுவதை உறுதி செய்ய அவர்கள் விரும்புகிறார்கள்.

இவற்றில் முதன்மையானது, உக்ரேனில் ரஷ்யாவிற்கு எதிரான போர் தொடர வேண்டும் என்பதாகும். உண்மையில் ரஷ்யாவின் நெருங்கிய நட்பு நாடுகளில் ஒன்றான ஈரானில் ஏற்படும் தோல்வி ரஷ்யாவை பலவீனப்படுத்தும். இருப்பினும், குறுகிய காலத்தில் இந்தப் போர் மாஸ்கோவிற்குச் சாதகமாகவே அமைந்துள்ளது. தற்போது வளைகுடாப் பகுதியில் பயன்படுத்தப்படும் ஆயுதங்கள் உக்ரேனிடம் இல்லை. மேலும், உயர்ந்து வரும் எரிசக்தி விலைகள், சர்வதேசத் தடைகளால் வற்றச் செய்யப்பட வேண்டிய ரஷ்யாவின் கருவூலத்தை மீண்டும் நிரப்பி வருகின்றன.

ஹோர்முஸ் நீரிணை முடக்கத்தின் விளைவுகளைக் குறைப்பதற்காக, ரஷ்ய எண்ணெய் மீதான தடைகளை ட்ரம்ப் தளர்த்தியிருப்பது ஐரோப்பாவில் பெரும் ஆத்திரத்தை ஏற்படுத்தியுள்ளது. மாஸ்கோவிற்கான முன்னாள் ஜேர்மன் தூதர் ரூடிகர் வான் பிரிட்ச்சின் கருத்துப்படி, ஈரானில் போர் தொடங்கியதிலிருந்து ரஷ்யா கூடுதலாக 6 பில்லியன் யூரோக்களை ஈட்டியுள்ளது.

எனவே, மூனிச் பாதுகாப்பு மாநாட்டின் தலைவர் வொல்ப்காங் இஷிங்கர், ஐரோப்பிய வல்லரசுகள் ஈரான் போரில் தங்கள் பங்கேற்பிற்குப் பதிலாக சில எதிர்க் கோரிக்கைகளை முன்வைக்க வேண்டும் என்று பரிந்துரைத்தார்: அதாவது, “அமெரிக்கா மீண்டும் உக்ரேன் விவகாரத்தில் நேரடியாக ஈடுபட வேண்டும் மற்றும் ரஷ்யாவிற்கு எதிராக நீண்டகாலமாகத் திட்டமிடப்பட்டுள்ள அமெரிக்கத் தடைகளின் தொகுப்பு இறுதியாகச் செயல்படுத்தப்பட வேண்டும்” என்பதே அவை.

உக்ரேன் விவகாரம், காஸாவின் நிலைமை மற்றும் ஈரான் விவகாரம் ஆகியவற்றிற்கான அணுகுமுறை, “கடந்த காலங்களில் வழக்கமாக இருந்தது போல” நட்பு நாடுகளிடையே ஒருங்கிணைக்கப்பட வேண்டும் என்று இஷிங்கர் கோரினார். கோபமடைந்த ட்ரம்ப், உக்ரேன் போரில் ஏற்கனவே இருப்பதை விட இன்னும் கூடுதலான சிக்கல்களை இவை ஏற்படுத்தக்கூடும் என்று கூறினார்.

ஐரோப்பியர்கள் தங்களை ஒரு எதிரியாகவும் போட்டியாளராகவும் பெருகிய முறையில் கருதி வரும் அமெரிக்காவின் கட்டளைக்கு அடிபணியத் தயாராக இல்லை. ஆப்கானிஸ்தானைப் போலவே, அமெரிக்கா நடத்தும் நீண்டகால, பேரழிவு தரக்கூடிய ஒரு போருக்குள் தங்களை இழுத்துச் செல்வதை அவர்கள் விரும்பவில்லை. அமெரிக்காவால் தூண்டப்படும் ஈரானின் ஆட்சி அதிகாரச் சரிவு மற்றும் அந்நாட்டின் இன ரீதியான பிளவு போன்றவை ஒரு உள்நாட்டுப் போரைத் தூண்டி, ஐரோப்பாவை நோக்கி ஒரு மிகப்பெரிய அகதிகள் அலையை உருவாக்கும் என்று அவர்கள் அஞ்சுகின்றனர். தெஹ்ரான் ஆட்சிக்கு எதிராக, அமெரிக்கா குர்திஷ் குழுக்களுக்கு ஆயுதம் வழங்கி வருவதாக வெளியான தகவல்கள், ஐரோப்பாவில் கடும் எதிர்ப்பைச் சந்தித்துள்ளன.

முன்னாள் காலனித்துவ ஆதிக்க நாடான பிரான்சின் ஜனாதிபதி இம்மானுவேல் மக்ரோன், அமெரிக்காவைச் சாராமல் அந்தப் பிராந்தியத்தில் ஐரோப்பிய நாடுகள் சுயாதீனமாக ஒரு இராணுவத் தலையீட்டை மேற்கொள்ள வேண்டும் என்று மிகவும் குரல் கொடுக்கும் ஒரு ஆதரவாளராகத் திகழ்கிறார்.

தற்போது G7 தலைமைப் பொறுப்பை வகிக்கும் பிரான்சின் முன்முயற்சியால், மார்ச் 11 அன்று, ஹோர்முஸ் நீரிணையில் கப்பல் போக்குவரத்தின் சுதந்திரத்திற்கு உத்தரவாதம் அளிக்க G7 நாடுகள் ஒப்புக்கொண்டன. இது, எரிபொருள் கொள்கலன் கப்பல்கள் மற்றும் சரக்குக் கப்பல்களுக்குப் பாதுகாப்பு வழங்குவதற்கான ஒரு “முற்றிலும் தற்காப்பு” நோக்கம் கொண்ட பணியாகும். இது உடனடியாகத் தொடங்கப்படாது. ஆனால் “மோதலின் மிகத் தீவிரமான கட்டம் முடிவடைந்த பின்னர் விரைவில்” தொடங்கும் என்று கூறப்படுகிறது. ஏடன் வளைகுடா மற்றும் செங்கடல் இடையே யேமன் ஹவுதி போராளிகளின் தாக்குதல்களில் இருந்து வணிகக் கப்பல்களைப் பாதுகாக்கும் ஐரோப்பிய ஒன்றியத்தின் அஸ்பைட்ஸ் (Aspides) நடவடிக்கை தான் இதற்கான ஒரு முன்மாதிரியாகக் கொள்ளப்படுகிறது.

இருப்பினும், இந்த நடவடிக்கையின் “தற்காப்பு” என்ற போலித்தன்மையானது மக்ரோன் அனுப்பியுள்ள கடற்படையின் மூலம் முரண்படுகிறது. பிரான்சின் வரலாற்றிலேயே இல்லாத வகையில், ஒரு மிகப்பெரிய கடற்படையை அவர் மத்திய தரைக்கடலின் கிழக்குப் பகுதிக்கு அனுப்பியுள்ளார். மேலும் அவரது கூற்றுப்படி, இது ஹோர்முஸ் நீரிணையிலும் நிலைநிறுத்தப்படலாம்.

இதில் எட்டுப் போர்க் கப்பல்கள், இரண்டு ஹெலிகாப்டர் தாங்கி கப்பல்கள் மற்றும் பல்வேறு ஆயுத அமைப்புகள், 30 ரபேல் போர் விமானங்கள், பல ஹெலிகாப்டர்கள் மற்றும் உளவு விமானங்களைக் கொண்ட சார்ல் டு கோல் விமானம் தாங்கி போர்க்கப்பல் ஆகியவை அடங்கும். பிரான்சின் ஒரு நீர்மூழ்கிக் கப்பலும், நெதர்லாந்து, இத்தாலி, ஸ்பெயின் மற்றும் கிரீஸ் ஆகிய நாடுகளின் போர் கப்பல்களும் இந்தப் பிரமாண்டமான கடற்படையுடன் இணைந்துள்ளன.

நேட்டோவில் உறுப்பினராக இருக்கும் ஆனால் ஐரோப்பிய ஒன்றியத்தில் இல்லாத ஐக்கிய இராச்சியமும் மத்திய கிழக்கில் இராணுவ நிலைநிறுத்தலில் பங்கேற்கிறது. பிரதமர் கீர் ஸ்டார்மர் ஒரு செய்தியாளர் கூட்டத்தில் பின்வருமாறு கூறினார்:

இறுதியாக, சந்தையில் ஸ்திரத்தன்மையை உறுதிப்படுத்த நாம் ஹோர்முஸ் நீரிணையை மீண்டும் திறக்க வேண்டும். அது எளிதான காரியம் அல்ல. எனவே, பிராந்தியத்தில் கப்பல் போக்குவரத்திற்கான சுதந்திரத்தை எவ்வளவு விரைவாக முடியுமோ அவ்வளவு விரைவாக மீட்டெடுக்கவும், அதன் பொருளாதாரப் பாதிப்பைக் குறைக்கவும் எங்களது ஐரோப்பியக் கூட்டாளிகள் உட்பட அனைத்துக் கூட்டாளிகளுடனும் இணைந்து ஒரு சாத்தியமான, கூட்டுத் திட்டத்தை உருவாக்கி வருகிறோம்.

இருப்பினும், ஐக்கிய இராச்சியம் ஒரு “பரந்த போருக்குள்” இழுக்கப்படுவதை தான் அனுமதிக்க மாட்டேன் என்று ஸ்டார்மர் வலியுறுத்தினார். வான் பாதுகாப்பில் நிபுணத்துவம் பெற்ற HMS டிராகன் என்ற நாசகாரி கப்பலை அவர் மத்திய தரைக்கடலின் கிழக்குப் பகுதிக்கு அனுப்பியதோடு, HMS இளவரசர் வேல்ஸ் என்ற விமானம் தாங்கிக் கப்பலையும் மிகுந்த தயார் நிலையில் வைத்துள்ளார்.

ஜேர்மனி தற்போது மத்திய தரைக்கடலின் கிழக்குப் பகுதியில் வடக்கு ரைன்-வெஸ்ட்பாலியா என்ற ஒரே ஒரு போர்க் கப்பலை மட்டுமே நிலைநிறுத்தியுள்ளது. மேலும் வடக்கு ஈராக், பாக்தாத் மற்றும் ஜோர்டான் ஆகிய நாடுகளில் ISIS பயங்கரவாதிகளை எதிர்கொள்ள 280 படையினர்களை நிலைநிறுத்தியுள்ளது. ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் நேட்டோவுடன் கலந்தாலோசித்த பிறகு, ரஷ்யாவுடனான மோதலுக்காக நேட்டோவின் கிழக்குப் பகுதி மற்றும் வடக்கு அட்லாண்டிக் பகுதிகளில் தனது படைகளை ஜேர்மனி குவித்து வருகிறது.

பிரித்தானியா மற்றும் பிரான்ஸ் ஆகிய நாடுகள் ஈரான் மீதான போருக்குத் தங்கள் தளங்களைப் பயன்படுத்த அமெரிக்காவிற்கு அனுமதி வழங்கத் தொடக்கத்தில் தயங்கின. ஆனால், ஜேர்மனி எவ்விதப் பிரச்சனையும் இன்றி இதற்கு அனுமதி அளித்தது. எல்லாவற்றிற்கும் மேலாக, சுமார் 9,000ம் அமெரிக்க படையினர்கள் தங்கியுள்ள ஜேர்மனியின் ராம்ஸ்டீன் விமானப்படைத் தளம், மத்திய கிழக்கில் அமெரிக்கா நடத்தும் போர்களுக்கு ஒரு முக்கியமான போக்குவரத்து மற்றும் தளவாட மையமாக விளங்கி வருகிறது.

“இது எங்களது போர் அல்ல” என்று காஜா கலாஸ் கூறினாலும், ஐரோப்பிய வல்லரசுகள் ஈரான் மீதான இந்தப் போரில் ஆழமாகப் பின்னிப் பிணைந்துள்ளன—சர்வதேசச் சட்டத்தை மீறும் இந்தப் போர் ஏற்கனவே ஆயிரக்கணக்கான உயிர்களைப் பலிவாங்கியுள்ளது. மேலும், ஒட்டுமொத்தப் பிராந்தியத்தையும் போர்த்தீயில் எரிக்கும் அச்சுறுத்தலை ஏற்படுத்தியுள்ளது. உலக வல்லரசுகளுக்கிடையிலான இந்தப் புதிய உலக மறுபங்கீட்டுக்கான போராட்டத்தில், தாங்கள் ஓரங்கட்டப்படுவதை அவர்கள் விரும்பவில்லை.

இந்தப் போரானது, தொழிலாள வர்க்கம் மற்றும் இளைஞர்களின் முதுகின் மீது சுமத்தப்படுகிறது. விலைவாசி உயர்வு, பிரம்மாண்டமான இராணுவச் செலவுகள் மற்றும் கட்டாய இராணுவச் சேவை ஆகிய வடிவங்களில், அவர்கள் இதன் சுமையைத் தாங்க வேண்டியுள்ளது. போரும் இராணுவவாதமும் ஜனநாயகத்துடன் ஒருபோதும் ஒத்துப்போகாதவை. அமெரிக்காவில் ட்ரம்பின் போர்க்கொள்கையானது தொழிலாளர்களின் ஜனநாயக உரிமைகள் மீதான நேரடித் தாக்குதலுடன் எவ்வாறு கைகோர்த்துச் செல்கிறதோ, அதேபோல ஐரோப்பாவிலும் ஆளும் வர்க்கம் அதிகப்படியான அடக்குமுறையையே நம்பியுள்ளது.

தற்போதைய ஸ்தாபன அரசியல் கட்சிகளிடையே போருக்கு எதிரான தீவிரமான எதிர்ப்பு ஏதுமில்லை. ஜேர்மனியின் இடது கட்சி முதல் அதிதீவிர வலதுசாரி ஜேர்மனிக்கான மாற்றுக் (AfD) கட்சி வரை அனைவரும், ஈரானியத் தலைமையை துரோகத்தனமாக படுகொலை செய்ததை வரவேற்றுள்ளனர். சமூக சமத்துவமின்மை, போர் மற்றும் சர்வாதிகாரத்திற்கு எதிரான போராட்டத்தை, அவற்றின் மூல காரணமான முதலாளித்துவத்திற்கு எதிரான போராட்டத்துடன் இணைக்கும் ஒரு சோசலிசத் வேலைத்திட்டத்தின் அடிப்படையில், சர்வதேசத் தொழிலாள வர்க்கத்தை அணிதிரட்டுவதன் மூலம் மட்டுமே இந்தப் போரை நிறுத்த முடியும்.

Loading