மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம்.
ஈரானுக்கு எதிராக அமெரிக்காவும் இஸ்ரேலும் போரைத் தொடங்கி மூன்று வார காலத்திற்குள், அமெரிக்கப் படைகளின் வரவிருக்கும் தரைவழிப் படையெடுப்பு, இந்த மோதலை ஒரு உலகளாவிய பேரழிவாக மாற்ற வழிவகுத்து வருகிறது.
அமெரிக்காவின் மூன்று நீர்நிலம் மற்றும் வான்வழித் தாக்குதல் அணிகளைச் சேர்ந்த பல்வேறு கப்பல்களில் சுமார் 7,500 கடற்படையினர்கள் இன்னும் சில நாட்களில் இப்பகுதியை வந்தடைய உள்ளனர்.
ஆசிய-பசிபிக் பிராந்தியத்தில் இருந்த யுஎஸ்எஸ் திரிப்போலி (USS Tripoli) படையணி மீண்டும் இங்கு நிலைநிறுத்தப்பட்டுள்ளது. அதேபோல், கலிபோர்னியாவைத் தளமாகக் கொண்ட யுஎஸ்எஸ் பொக்ஸர் (USS Boxer) அணியின் மூன்று கப்பல்களில் உள்ள படையினர்களின் விடுமுறை பாதியிலேயே ரத்து செய்யப்பட்டு, அவர்கள் முன்னதாகவே மத்திய கிழக்கு நாடுகளுக்கு அனுப்பப்பட்டுள்ளனர். இதே போன்ற எண்ணிக்கையிலான மூன்றாவது கடற்படைப் பிரிவும் இப்பகுதியை நோக்கி விரைந்து கொண்டிருக்கிறது.
அமெரிக்காவும் இஸ்ரேலும் ஈரானுக்கு எதிராக முன்னெடுத்துள்ள இந்தச் சட்டவிரோதப் போரின் தன்மையால், ஒரு தரைவழி ஆக்கிரமிப்பு ஏற்பட்டால் அது பேரழிவுகரமான விளைவுகளையே உண்டாக்கும். அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், ஜெனிவாவில் அமெரிக்க மற்றும் ஈரானிய தூதர்கள் மூன்றாவது சுற்றுப் பேச்சுவார்த்தை நடத்திய இரண்டு நாட்களுக்குள்ளேயே, பிப்ரவரி 28 நள்ளிரவில் இந்தப் போரைத் தொடங்கினார். ஈரானிய சமூகத்தை அழிப்பதே அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் அறிவிக்கப்பட்ட குறிக்கோள் என்று ட்ரம்ப்பும், அவருடைய பாசிச யுத்த அமைச்சர் பீட் ஹெக்செத்தும் பல சந்தர்ப்பங்களில் மீண்டும் மீண்டும் கூறியுள்ளனர்.
ஈரானின் உச்ச தலைவர் அயதுல்லா அலி கொமேனி உள்ளிட்ட டசின் கணக்கான முக்கிய இராணுவ மற்றும் அரசியல் தலைவர்களைக் குறிவைத்து படுகொலை செய்யும் அமெரிக்க மற்றும் இஸ்ரேலிய படைகளின் திட்டத்தைக் குறித்து ட்ரம்ப் வெள்ளிக்கிழமை மீண்டும் பெருமிதம் கொண்டார். “அவர்கள் அனைவரும் போய்விட்டார்கள்... நாங்கள் அவர்களுடன் பேச விரும்புகிறோம், ஆனால் பேசுவதற்கு அங்கு யாருமில்லை. இது எங்களுக்குப் பிடித்திருக்கிறது,” என்று அவர் பிரகடனப்படுத்தினார்.
இந்த மாஃபியா பாணியிலான வீராவேசம், இந்த அழித்தொழிப்புப் போர் அமெரிக்க மற்றும் உலக ஏகாதிபத்தியத்தை ஒரு தீவிரமடைந்து வரும் நெருக்கடிக்குள் தள்ளியுள்ளது என்ற உண்மையை மறைக்க முடியாது. தெஹ்ரானில் உள்ள முதலாளித்துவ-மதகுருமார்களின் ஆட்சியை வீழ்த்தி, வான்வழித் தாக்குதல்கள் மூலம் “ஆட்சி மாற்றத்தை” கொண்டு வரும் ட்ரம்ப்பின் திட்டம் படுதோல்வியடைந்துள்ளது.
இதற்குப் பதிலடியாக ஈரான் ஹோர்முஸ் நீரிணையை தனது கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்துள்ளதுடன், வளைகுடாப் பிராந்தியம் முழுவதிலும் உள்ள அமெரிக்கத் தளங்கள் மற்றும் எரிசக்தி உள்கட்டமைப்புகள் மீது பதிலடித் தாக்குதல்களை நடத்தியுள்ளது. கச்சா எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுவின் விலைகள் விண்ணைத் தொட்டுள்ளன. இது வட அமெரிக்கா மற்றும் ஐரோப்பாவின் ஏகாதிபத்திய மையங்களில் சமூக மற்றும் பொருளாதார அமைதியின்மையை ஏற்படுத்தும் அச்சுறுத்தலை உருவாக்கியுள்ளது. ஏனெனில், கட்டுக்கடங்காத பணவீக்கம் இலட்சக்கணக்கான தொழிலாளர்களை வறுமையில் தள்ளும்.
வெள்ளை மாளிகையில் இருக்கும் இந்த குண்டர் முன்வைக்கும் ஒரே தீர்வு, போரை இன்னும் தீவிரமாக நடத்துவதுதான். தரைப்படையை நிலைநிறுத்துவது குறித்து “தீவிரமாக ஆலோசிக்கப்பட்டு வருவதாக” வெள்ளை மாளிகையின் மூன்று ஆதாரங்களைக் குறிப்பிட்டு ஆக்ஸியோஸ் (Axios) வெள்ளிக்கிழமை செய்தி வெளியிட்டுள்ளது. ஈரானின் 90 சதவீத எண்ணெய் ஏற்றுமதி கையாளப்படும் கார்க் தீவை (Kharg Island) கைப்பற்றுவதே அதிக சாத்தியமுள்ள திட்டங்களில் ஒன்றாகக் கருதப்படுகிறது. வியாழக்கிழமையன்று செய்தியாளர்களிடம் பேசிய ட்ரம்ப், தான் “எந்த இடத்திற்கும் படைகளை அனுப்பவில்லை” என்று கூறிவிட்டு, பின்னர் ஒரு சர்வாதிகாரியின் பாணியில், “அப்படி நான் அனுப்புவதாக இருந்தாலும், அதை நிச்சயம் உங்களிடம் சொல்ல மாட்டேன்,” என்று சேர்த்துக் கொண்டார்.
தனக்கு முன்னிருந்த ஹிட்லரைப் போலவே, தன்னால் மட்டுமே இந்தப் போரின் போக்கை தீர்மானிக்க முடியும் என்று ட்ரம்ப் தன்னைத்தானே நம்ப வைத்திருக்கலாம். ஆனால் உண்மை என்னவென்றால், இவ்வளவு பெரிய எண்ணிக்கையிலான படைகளை அந்த பிராந்தியத்திற்கு அனுப்பியதன் மூலமே, அவர்களின் தரைவழி ஆக்கிரமிப்பு என்பது தவிர்க்க முடியாத ஒன்றாக மாறிவிட்டது என்பதே யதார்த்தமாகும். இதற்கு மாற்றாக இருப்பது வாஷிங்டன் சந்திக்க நேரிடும் ஒரு அவமானகரமான பின்வாங்கல் மட்டுமே. இயற்கை வளங்கள், மலிவான உழைப்பு, புவிசார் அரசியல் செல்வாக்கு மற்றும் வர்த்தக வழித்தடங்களின் கட்டுப்பாடு ஆகியவற்றிற்காகப் பெரும் வல்லரசுகளுக்கு இடையே நிலவும் தீவிரமடைந்து வரும் போர்களுக்கு மத்தியில், இத்தகைய ஒரு பின்வாங்கலுக்குப் பிறகு, அரசியல் ரீதியாகத் தப்பிப்பிழைக்க முடியும் என்று ட்ரம்ப் எதிர்பார்க்க முடியாது.
தரைப்படையை நிலைநிறுத்துவது இந்தப் போரை இன்னும் பெரிய அளவில் தீவிரப்படுத்தும். இதுவரை பதிவாகியுள்ள 13 அமெரிக்க இராணுவ உயிரிழப்புகள் மிக வேகமாகப் பலமடங்கு அதிகரிக்கும். இது, இன்னும் அதிகமான படைகளை அனுப்ப வேண்டிய கட்டாயத்தை உருவாக்கும். கடற்கரையிலிருந்து வெறும் 15 மைல் தொலைவில் உள்ள கார்க் தீவிலோ அல்லது அதன் நிலப்பகுதியிலோ தாக்குதல் தொடங்கப்பட்டால், அங்குள்ள அமெரிக்க நிலைகளை ஈரானால் எளிதாகக் குறிவைக்க முடியும். 93 மில்லியன் மக்கள் தொகையைக் கொண்ட ஈரான், தனது பாதுகாப்புப் படைகளை வலுப்படுத்தும் ஆற்றலைக் கொண்டுள்ளது. முதலாம் உலகப் போரின் போது, கலிப்போலி தீபகற்பத்தைக் (Gallipoli peninsula) கைப்பற்ற பிரிட்டனும் அதன் நட்பு நாடுகளும் 1915-ல் மேற்கொண்ட இராணுவ நடவடிக்கையுடன் ஒரு ஆஸ்திரேலிய சிந்தனைக் குழு இதனை ஒப்பிட்டுள்ளது. அந்த நடவடிக்கை 2,50,000-க்கும் அதிகமான உயிரிழப்புகளுடன் முடிவடைந்ததுடன், பெரும் தோல்வியிலும் முடிந்தது.
தற்போதைய மோதலுக்கும் முதலாம் உலகப் போருக்கும் இடையில் செய்யக்கூடிய ஒரே ஒப்பீடு இது மட்டுமல்ல. மற்றொரு முக்கிய ஒற்றுமை என்னவென்றால், அனைத்து முக்கிய ஏகாதிபத்திய வல்லரசுகளும் இந்தப் போருக்குள் இழுக்கப்படும் வேகம் ஆகும். வாரத் தொடக்கத்தில் பிரஸ்ஸல்ஸில் நடைபெற்ற வெளியுறவு அமைச்சர்கள் கூட்டத்தில், ஐரோப்பிய ஏகாதிபத்திய நாடுகள் இது “எங்களுடைய போர் அல்ல” என்று பிரகடனப்படுத்திக் கொண்டிருந்தன. ஆனால், வியாழக்கிழமைக்குள் பிரிட்டன், கனடா, பிரான்ஸ், ஜேர்மனி, இத்தாலி, நெதர்லாந்து மற்றும் ஜப்பான் ஆகிய நாடுகள் ஹோர்முஸ் நீரிணையை விடுவிக்கும் முயற்சியில் பங்கேற்பதாக உறுதியளித்து ஒரு அறிக்கையை வெளியிட்டன.
உலகின் 20 சதவீத எண்ணெய் போக்குவரத்திற்கான பாதையாக விளங்கும் இந்த நீர்வழிப்பாதை வழியாகக் கப்பல்கள் செல்வதைத் தடுக்கும் ஈரானிய இலக்குகள் மீது, அமெரிக்கா தனது தளங்களைப் பயன்படுத்தித் தாக்குதல் நடத்த பிரிட்டன் வெள்ளிக்கிழமை அனுமதி அளித்தது. இந்தப் போரை விரைவாக முடிக்க வேண்டும் என்ற விரக்தியில் ஐரோப்பிய நாடுகளைத் தீவிர நடவடிக்கைக்குத் தள்ளும் முக்கிய அச்சங்கள் என்னவென்றால், நீண்டகாலப் போர் எரிசக்தி விலையேற்றத்தின் மூலம் அவர்களின் பொருளாதாரங்களை முடக்கிவிடும், அடுத்து ரஷ்யாவிற்கு எதிரான போரைத் தொடர உக்ரேனுக்குக் கிடைக்கும் அமெரிக்கத் தயாரிப்பு ஆயுதங்களைத் தடுத்துவிடும், மேலும், அதிக எண்ணெய் மற்றும் எல்.என்.ஜி (LNG) வருவாய் காரணமாக கிரெம்ளினின் (ரஷ்யா) நிதிநிலை வலுப்பெற்றுவிடும் என்பதாகும்.
இந்தப் போரின் விரிவாக்கமானது நெருக்கடியில் உள்ள முதலாளித்துவத்தில் வேரூன்றி உள்ளது. இது ஒரு உலகளாவிய பொருளாதாரத்திற்கும், உலகத்தை தேசிய அரசுகளாகப் பிரிப்பதற்கும் இடையிலான சமரசமற்ற முரண்பாடுகளிலும், உற்பத்தியின் சமூகத் தன்மைக்கும் ஒரு சிறிய தன்னலக்குழுவின் உற்பத்திச் சாதனங்களின் மீதான தனியார் உடைமைக்கும் இடையிலான முரண்பாட்டிலும் வெளிப்படுகிறது. ஈரானின் எரிசக்தி வளங்களைக் கைப்பற்றுவதன் மூலமும், மத்திய கிழக்கில் ரஷ்யா மற்றும் சீனாவை ஓரங்கட்டுவதன் மூலமும், அமெரிக்காவின் நீண்டகால பொருளாதார வீழ்ச்சியை முறியடிக்க முடியும் என்று ட்ரம்ப் பிரதிநிதித்துவப்படுத்தும் அந்த தன்னலக்குழு நம்புகிறது.
வாஷிங்டனின் நோக்கம் என்னவென்றால், புரட்சிகர மற்றும் காலனித்துவ எதிர்ப்புப் போராட்டங்களின் மூலம் 20 ஆம் நூற்றாண்டில் தொழிலாள வர்க்கம் ஈட்டிய சமூக மற்றும் அரசியல் வெற்றிகளைத் தலைகீழாக மாற்றி, 20 ஆம் நூற்றாண்டைத் துடைத்தெறிவதும், 1800 களின் பிற்பகுதியில் ஏகாதிபத்தியத்தின் தொடக்கத்தில் இருந்த அப்பட்டமான காலனித்துவ ஒடுமுறைக்கு உலகைத் திருப்புவதுமாகும். அப்போது, பிரிட்டன் இருந்த இடத்தில் இப்போது அமெரிக்கா சவாலற்ற மேலாதிக்க சக்தியாக இருக்கிறது என்பது மட்டுமே வித்தியாசமாகும். இந்த மூலோபாயத்தைப் பின்பற்றுவதற்கு, ஆளும் வர்க்கத்திற்கு வெளிநாடுகளில் இராணுவ ஆக்கிரமிப்பு போர் தேவைப்படுவதைப் போலவே, உள்நாட்டில் வர்க்கப் போரை தீவிரப்படுத்துவதும் அவசியமாகிறது. இதனால்தான் அமெரிக்காவில் ஒரு சர்வாதிகாரத்தை நிறுவுவதற்கான ட்ரம்ப்பின் நடவடிக்கைகளுக்கு ஆளும் வர்க்கத்திற்குள் இருந்து உண்மையான எதிர்ப்பு எதுவும் எழவில்லை. மேலும், ஐரோப்பிய ஆளும் உயரடுக்குகள் அதிதீவிர வலதுசாரி கட்சிகளைத் திட்டமிட்டு அரசியலில் ஒருங்கிணைத்து வருகின்றன.
ஆரம்பத்திலிருந்தே, உலக சோசலிச வலைத் தளம் இந்தப் போரின் குற்றவியல் தன்மை மற்றும் அது தீவிரமடைவதற்கான சாத்தியக்கூறுகள் குறித்து கவனத்தை ஈர்த்தது. போரின் முதல் நாளில், WSWS சர்வதேச ஆசிரியர் குழுவின் தலைவர் டேவிட் நோர்த் பின்வருமாறு எழுதினார்:
இந்தப் போர் அமெரிக்க சமூகத்தின் உள்நாட்டு சமூக நெருக்கடியைத் தீர்க்கப்போவதில்லை, அல்லது அமெரிக்க முதலாளித்துவத்தின் உலகளாவிய நிலையில் ஏற்பட்டுள்ள நீண்டகாலச் சரிவை மாற்றியமைக்கவும் போவதில்லை.
உள்நாட்டு மற்றும் சர்வதேச ரீதியிலான இந்த முரண்பாடுகள் அனைத்தும் தீவிரமடையும். இந்தப் போர் தவிர்க்க முடியாமல் தீவிரமடைந்து ஒட்டுமொத்த கிரகத்தையும் ஆட்கொள்ளும்.
கடந்த வியாழக்கிழமை, வெள்ளை மாளிகையில் ஜப்பானிய பிரதமர் சானே தகைச்சியுடன் நடந்த சந்திப்பின் போது, ஈரான் மீதான அமெரிக்க/இஸ்ரேலிய குண்டுவீச்சை 1941 இல் இடம்பெற்ற பேர்ல் துறைமுகம் மீதான ஜப்பானின் தாக்குதலுடன் ஒப்பிட்டதன் மூலம், தான் கட்டவிழ்த்துவிட்டுள்ள போரின் பரிமாணங்களை ட்ரம்ப் ஓரளவுக்கு ஒப்புக்கொண்டார். ஜப்பான் மற்றும் பிற அமெரிக்க கூட்டாளிகளுக்குப் போர் குறித்து முன்கூட்டியே ஏன் அறிவிக்கப்படவில்லை என்று ஒரு நிருபர் கேட்டதற்கு, ட்ரம்ப், “நாங்கள் அதை யாருக்கும் சொல்லவில்லை, ஏனென்றால் எங்களுக்கு ஒரு திடீர் தாக்குதல் தேவைப்பட்டது. திடீர் தாக்குதலைப் பற்றி ஜப்பானை விட யாருக்கு நன்றாகத் தெரியும்? பேர்ல் துறைமுகம் பற்றி நீங்கள் ஏன் என்னிடம் சொல்லவில்லை? சரியா?” என்று கூறினார்.
டிசம்பர் 1941 இல் பேர்ல் துறைமுகம் மீதான ஜப்பானின் தாக்குதல் அமெரிக்காவை இரண்டாம் உலகப் போருக்குள் இழுத்தது. 1945 இல் இடம்பெற்ற அந்தப் படுகொலை முடிந்தபோது, அந்தப் போர் 80 மில்லியனுக்கும் அதிகமான உயிர்களைப் பலிவாங்கியிருந்ததுடன், ஐரோப்பிய யூதர்கள் மீதான நாஜிக்களின் இனப்படுகொலை மற்றும் ஜப்பானிய நகரங்கள் மீது அமெரிக்கா இரண்டு அணு குண்டுகளை வீசிய கொடூரங்களையும் கண்டது. இன்று உலகத்தை மீண்டும் மறுபங்கீடு செய்வதில் தங்களின் பங்கை கைப்பற்றிக்கொள்ள, வாஷிங்டனும் அதன் ஏகாதிபத்திய எதிரிகளும் அதேபோன்றதொரு கொடூரமான முறைகளைப் பயன்படுத்தத் தயாராக உள்ளனர்.
ஏகாதிபத்திய காட்டுமிராண்டித்தனத்தின் மீள் எழுச்சியைத் தடுப்பதற்கு, சமூகத்தை சோசலிச முறையில் மறுசீரமைப்பதற்காக சர்வதேச தொழிலாள வர்க்கத்தைத் அணிதிரட்டுவது அவசியமாகும். ஏகாதிபத்திய நாடுகளின் தொழிலாளர்கள், ஆளும் உயரடுக்குகளின் கொள்ளைப் போர்களுக்காகத் தங்களின் பணத்தை வாரி இறைப்பதில் எந்த ஆர்வமும் கொண்டிருக்கவில்லை. ஏனெனில், இந்தப் போர்கள் கடும் விலைவாசி உயர்வு, வேலைவாய்ப்புப் பறிப்பு மற்றும் இராணுவத்திற்கு நிதி திரட்டுவதற்காக சமூக நலத்திட்டங்களை ஒழிப்பது போன்ற பாதிப்புகளையே அவர்களுக்குத் தருகின்றன. அமெரிக்க மற்றும் ஐரோப்பிய ஏகாதிபத்தியத்திற்குத் தோல்வியைக் கொடுப்பதற்கான போராட்டத்தில், ஈரான் மற்றும் மத்திய கிழக்கு முழுவதிலும் உள்ள தொழிலாளர்களே இவர்களின் இயற்கையான கூட்டாளிகள் ஆவர். அரசியல் அதிகாரம் தொழிலாள வர்க்கத்தின் கைகளுக்கும் சோசலிசத்திற்கும் மாறுவதற்கான உலகளாவிய போராட்டத்தில் தங்களுக்கான இடத்தைப் பிடிப்பதன் மூலமே, அவர்களால் ஏகாதிபத்திய ஆக்கிரமிப்பை முறியடிக்க முடியும். இதுவே உலக சோசலிச வலைத் தளம் மற்றும் நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழு முன்வைக்கும் வேலைத் திட்டமாகும்.
