முன்னோக்கு

மே தின இணையவழிப் பேரணியில் இணையுங்கள்! சோசலிசத்திற்காக! போர், இனப்படுகொலை மற்றும் பாசிசத்திற்கு எதிராக!

மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம்.

மார்ச் 24, 2026 அன்று மெல்போர்னில் நடந்த விக்டோரியன் ஆசிரியர்கள் வேலைநிறுத்தத்தின் ஒரு பகுதி

இன்று மே தினம், தொழிலாள வர்க்க ஒற்றுமையின் சர்வதேச தினமாகும். நான்காம் அகிலத்தின் அனைத்துலகக்  குழுவும் (ICFI) உலக சோசலிச வலைத் தளமும் (World Socialist Web Site) எங்களது 13-வது வருடாந்தர சர்வதேச மே தின இணையவழிப் பேரணியை அமெரிக்க கிழக்கு நேரப்படி (EDT) மாலை 3:00 மணிக்கு (இலங்கை நேரப்படி மே 2 ஆம் தேதி அதிகாலை 12:30 மணி) நடத்துகின்றன. சோசலிசத்திற்காகப் போராடவும், முதலாளித்துவ அமைப்புமுறைக்கு முற்றுப்புள்ளி வைக்கவும் விரும்பும் அனைவரும் இதில் பதிவு செய்து கலந்து கொள்ளுமாறு நாங்கள் அழைப்பு விடுக்கிறோம்.

ஆளும் வர்க்கமானது வர்க்க நனவை ஒடுக்குவதற்கும், அமெரிக்காவில் நிலவும் மகத்தான வர்க்கப் போராட்ட பாரம்பரியத்தை மறுத்து மூடிமறைப்பதற்கும் முடிவில்லாத முயற்சிகளை மேற்கொண்டுள்ளது. உண்மையில், மே தினம் அமெரிக்காவில்தான் பிறந்தது.

நூற்று நாற்பது ஆண்டுகளுக்கு முன்பு, மே 1, 1886 இல், எட்டு மணி நேர வேலை நாளை வலியுறுத்தி இலட்சக்கணக்கான அமெரிக்கத் தொழிலாளர்கள் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டனர். இந்த இயக்கத்தின் மையமாக சிகாகோ இருந்தது, அங்கு 80,000 தொழிலாளர்கள் பங்கேற்றனர். மூன்று நாட்களுக்குப் பிறகு, மே 4 மாலை, ஹேமார்க்கெட் சதுக்கத்தில் நடந்த அமைதியான தொழிலாளர் பேரணி காவல்துறையினரின் வன்முறைத் தாக்குதலுக்கு உள்ளானது. ஒரு குண்டு வெடித்தது. அந்த குண்டுவெடிப்பு  மற்றும் அதைத் தொடர்ந்து நடந்த காவல்துறையினரின் மோதலில் ஏழு அதிகாரிகளும் நான்கு தொழிலாளர்களும் கொல்லப்பட்டனர்.

இந்தச் சம்பவத்தைச் சாக்காக வைத்துக்கொண்டு சிகாகோவின் ஆளும் வர்க்கம் சிகாகோ தொழிலாளர்களுக்கு எதிராக வன்முறை வேட்டையைத் தொடங்கியது. பேச்சாளர்கள் அல்லது ஏற்பாட்டாளர்களில் யாரையும் குண்டுவெடிப்புடன் தொடர்புபடுத்தும் ஒரு சிறு ஆதாரம் கூட இருக்கவில்லை. ஆனால் எட்டு அராஜகவாத மற்றும் சோசலிச தொழிற்சங்கத் தலைவர்கள் பிடிக்கப்பட்டு, ஒரு போலி நீதி விசாரணைக்கு உட்படுத்தப்பட்டனர். இது அரச வன்முறைக்கும் மற்றும் போலிச் சட்டப் புனைவுகளுக்கும் ஒரு முன்னுதாரணமாக அமைந்தது. ஆகஸ்ட் ஸ்பைஸ் (August Spies), அடால்ஃப் பிஷர் (Adolph Fischer), ஜார்ஜ் ஏங்கல் (George Engel) மற்றும் ஆல்பர்ட் பார்சன்ஸ் (Albert Parsons) ஆகிய நான்கு தொழிலாளர்கள் நவம்பர் 11, 1887 அன்று தூக்கிலிடப்பட்டனர். மற்றொருவரான லூயிஸ் லிங்க் (Louis Lingg), தனது சிறை அறையிலேயே தற்கொலைக்குத் தள்ளப்பட்டார்.

ஹேமார்க்கெட் தியாகிகள் எதற்காகத் தங்கள் உயிரைத் தியாகம் செய்தார்களோ, அந்த இலட்சியத்தை உலகம் முழுவதும் உள்ள தொழிலாள வர்க்கம் ஏற்றுக்கொண்டது. மூன்று ஆண்டுகளுக்குப் பிறகு, 1889 இல் பாரிசில் கூடிய இரண்டாம் அகிலத்தின் நிறுவன மாநாடு, ஒவ்வொரு நாட்டிலும் உள்ள தொழிலாளர்கள் எட்டு மணி நேர வேலை நாளை ஆதரித்து ஒன்றாகப் போராட்டம் நடத்தும் நாளாக மே 1 ஆம் தேதியை அறிவித்தது. அன்றிலிருந்து மே 1 ஆம் தேதி சர்வதேச தொழிலாள வர்க்கத்திற்குச் சொந்தமானதாகிவிட்டது.

அந்த ஆரம்பகால மே தினங்களின் முக்கிய கோரிக்கையாக எட்டு மணி நேர வேலை நாள் இருந்தது. இன்று, மே தினம் என்பது மனித நாகரிகத்தின் உயிர்வாழ்வுக்கான போராட்டமாகும். உண்மையில், சுரண்டலின் நிலைமை எவ்வாறு உள்ளதென்றால், தொழிலாளர் இயக்கத்தின் மிக அடிப்படையான வெற்றியான எட்டு மணி நேர வேலை நாள் கூட தொழிற்சங்க அதிகாரத்துவத்தால் கைவிடப்பட்டுள்ளது. AFL-CIO நிர்வாகிகள் ஜனநாயகக் கட்சியுடன் இணைந்து “வலிமையான மே தினம்” (May Day Strong)  நிகழ்வுகளை ஏற்பாடு செய்யும் அதே வேளையில், பண்டகசாலைகள், மருத்துவமனைகள், பள்ளிகள் மற்றும் தொழிற்சாலைகளில் உள்ள தொழிலாளர்கள் 10, 12 மற்றும் 14 மணி நேரப் பணிமுறைகளைத் தாங்கிக்கொள்ள வேண்டிய கட்டாயத்தில் உள்ளனர்.

முதலாளித்துவம், சமத்துவமின்மை மற்றும் சுரண்டலுக்கு எதிரான சர்வதேச தொழிலாள வர்க்கத்தின் ஒற்றுமைக்கான போராட்டத்தில் மே தின நிகழ்வு இழையோடியுள்ளது — இது தொழிலாளர்களின் அதிகாரத்திற்கான போராட்டத்தை முன்னெடுப்பதற்கென அர்ப்பணிக்கப்பட்ட ஒரு தினமாகும். லியோன் ட்ரொட்ஸ்கி 1918 இல் எழுதியது போல், மே தினத்தின் உண்மையான நோக்கம், “அந்நாளில் அனைத்து நாட்டுத் தொழிலாளர்களின் ஒரே நேரத்திலான ஆர்ப்பாட்டத்தின் மூலம், ஒரு உலக மையத்தையும் ஒரு உலக அரசியல் நோக்குநிலையையும் கொண்ட புரட்சிகர நடவடிக்கையிலான ஒரே சர்வதேச பாட்டாளி வர்க்க அமைப்பிற்குள் அவர்களை ஒன்றிணைப்பதற்கான அடித்தளத்தை அமைப்பதாகும்.”

தொழிலாள வர்க்கத்தின் ஒரு சர்வதேசப் புரட்சிகரத் தலைமையைக் கட்டியெழுப்புவது என்ற அந்தப் பணி, நமது சகாப்தத்தின் முடிக்கப்படாத வரலாற்றுப் பணியாகவே இன்றும் உள்ளது. அதுவே நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவின் பணியாகும்.

கடந்த பதிமூன்று ஆண்டுகளாகத் தொடர்ந்து நடத்தப்பட்டு வரும் நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவின் வருடாந்தர சர்வதேச மே தின இணையவழிப் பேரணிகள் இந்த உணர்விலேயே ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. இவை தொழிற்சங்க அதிகாரத்துவமும் அதன் துணை அமைப்புகளும் முதலாளித்துவ அரசுடனான தங்களின் கூட்டணியை மறைப்பதற்குப் பயன்படுத்தும் வெற்று தீவிரவாத சொற்றொடர்களுக்கான நிகழ்வுகள் அல்ல. ஒவ்வொரு பேரணியும் உலக சோசலிச இயக்கத்தின் முன்னோக்கை வளர்ப்பதில் ஒரு தவிர்க்க முடியாத படியாக இருந்துள்ளது.

2014 ஆம் ஆண்டு நடைபெற்ற முதலாவது சர்வதேச மே தின இணையவழிப் பேரணியிலிருந்து, அனைத்துலகக் குழு இந்தப் பேரணிகளில் ஒரு மைய எச்சரிக்கையை விடுத்து வருகிறது: முதலாளித்துவத்தின் தீர்க்க முடியாத முரண்பாடுகளால் தூண்டப்படும் உலகின் ஏகாதிபத்திய மறுபங்கீடு, மனிதகுலத்தை உலகளாவிய பேரழிவை நோக்கி இட்டுச்செல்கிறது. அந்த எச்சரிக்கைகள் இப்போது உறுதிப்படுத்தப்பட்டுள்ளன. உலகப் போர் என்பது எதிர்கால சாத்தியக்கூறு அல்ல. அது ஒரு விரிவடைந்து வரும் யதார்த்தமாகும். பிப்ரவரி 28 அன்று ஈரானுக்கு எதிராகத் தொடங்கப்பட்ட அமெரிக்க-இஸ்ரேலிய ஆக்கிரமிப்புப் போர், உலகளாவிய இராணுவவாதத்தின் தீவிரப்பாட்டின்  இதுவரை இல்லாத மிகவும் வெடிப்புத்தன்மை வாய்ந்த வெளிப்பாடாகும்.

ஒன்றோடொன்று தொடர்புடைய இரண்டு செயல்முறைகள் மேலோங்கியுள்ளன. முதலாவது, போரின் தீவிரமடைதலும், அதனுடன் இணைந்து பாசிசம் மற்றும் சர்வாதிகாரத்தை நோக்கிய திருப்பமும், தொழிலாளர் வர்க்கத்தின் மீதான ஒரு கட்டுப்பாடற்ற தாக்குதலுமாகும். இது அமெரிக்காவில் அதன் மிகக் கூர்மையான வெளிப்பாட்டைக் காண்கிறது; அங்கே தன்னலக்குழுக்களின் ஜனாதிபதியான ட்ரம்ப், ஜனநாயக உரிமைகளைத் தகர்த்து, குடிவரவு காவல்துறையை அரசியல் பயங்கரவாதத்தின் ஒரு கருவியாக ஏவிவிடுகிறார், அத்துடன் சமூகமானது இராணுவவாதம் மற்றும் ஒடுக்குமுறையைச் சுற்றி மறுசீரமைக்கப்பட வேண்டும் என்று கோருகிறார்.

இரண்டாவதாக, சர்வதேச தொழிலாள வர்க்கத்தின் வளர்ந்து வரும் எதிர்ப்பாகும். இந்த மே தினப் பேரணியானது கண்டங்கள் முழுவதும் தொழிலாளர்கள் மற்றும் இளைஞர்களின் வளர்ந்து வரும் போராட்டங்களைப் பதிவு செய்யும் என்பதுடன், இந்தப் போராட்டங்களை போர், சர்வாதிகாரம் மற்றும் முதலாளித்துவத்திற்கு எதிரான ஒரு நனவான இயக்கமாக ஒன்றிணைப்பதற்குத் தேவையான வேலைத் திட்டத்தையும் மூலோபாயத்தையும் முன்வைக்கும்.

அமெரிக்கா, பிரிட்டன், பிரான்ஸ், ஜேர்மனி, இலங்கை, ஆஸ்திரேலியா, நியூசிலாந்து, துருக்கி, பிரேசில் மற்றும் ரஷ்யா ஆகிய நாடுகளைச் சேர்ந்த நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழு மற்றும் அதன் ஆதரவு அமைப்புகளின் முன்னணிப் பிரதிநிதிகள்; அத்துடன் சமூக சமத்துவத்திற்கான அனைத்துலக இளைஞர்கள் மற்றும் மாணவர்கள் அமைப்பு (IYSSE), மற்றும் சாமானிய தொழிலாளர் குழுக்களின் சர்வதேச தொழிலாளர் கூட்டணி (IWA-RFC) ஆகியவற்றின் பிரதிநிதிகளும் இதில் பேசுவார்கள்.

தற்போது ஒவ்வொரு கண்டத்திலிருந்தும் போராட்டங்களில் இறங்கி, ஒரு முன்னோக்கிய பாதையைத் தேடிக்கொண்டிருக்கும் அஞ்சல் ஊழியர்கள், வாகனத்துறை தொழிலாளர்கள், ஆசிரியர்கள், துறைமுகத் தொழிலாளர்கள், மாணவர்கள் என தொழிலாளர்கள் மற்றும் இளைஞர்களிடமிருந்து சேகரிக்கப்பட்ட அறிக்கைகளை இந்தப் பேரணி முன்னிலைப்படுத்தும்.

மே தினப் பேரணியானது இந்த உலக நிலைமை குறித்த மதிப்பீட்டை வழங்கும்: ஈரான் மீதான போரின் வரலாறும் அதன் அர்த்தமும்; சர்வாதிகாரத்தை நோக்கிய உந்துதலும் முதலாளித்துவ ஜனநாயக வடிவங்களின் சரிவும்; மற்றும் சர்வதேச அளவில் வர்க்கப் போராட்டத்தின் துரிதமடைந்து வரும் வெடிப்புகள் ஆகியவற்றை அது விளக்கும்.

இந்தப் பேரணி ஒரு நினைவேந்தல் அல்ல. இது ஒரு நடவடிக்கைக்கான அழைப்பு. ஆளும் வர்க்கமானது வெளிநாட்டில் போருக்காகவும், உள்நாட்டில் வர்க்கப் போருக்காகவும் சமூகத்தை ஒழுங்கமைத்து வருகிறது; மேலும் தொழிற்சங்க அதிகாரத்துவத்தின் மற்றும் அனைத்து முதலாளித்துவக் கட்சிகளின் உதவியுடன் ஆளும் வர்க்கம் இதைச் செய்கிறது. மே தினப் பேரணியானது தொழிலாளர்கள் மற்றும் இளைஞர்களுக்கு வரவிருக்கும் போராட்டத்திற்கான வேலைத்திட்டம், மூலோபாயம் மற்றும் ஒரு சர்வதேச அமைப்புரீதியான முன்னோக்கை வழங்கி ஆயுதபாணியாக்கும்.

இப்பொழுதே wsws.org/mayday இல் பதிவு செய்யுங்கள். இந்தப் பேரணி அமெரிக்கக் கிழக்கு நேரப்படி மே 1 மாலை 3:00 மணிக்கும் (இலங்கை நேரப்படி மே 2, சனிக்கிழமை அதிகாலை 12:30 மணிக்கும்) தொடங்குகிறது. உங்கள் சக தொழிலாளர்கள், உங்கள் சக மாணவர்கள், உங்கள் குடும்பத்தினர் மற்றும் உங்கள் நண்பர்களைத் திரட்டுங்கள். இன்று, 2026 மே 1 அன்று, சர்வதேச சோசலிச இயக்கத்தில் உங்களது இடத்தைப் பெற்றுக்கொள்ளுங்கள்.

Loading