மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம்.
கடந்த வாரம் ஸ்பிரிட்(Spirit ) விமான நிறுவனம் தனது செயல்பாடுகளை நிறுத்தியபோது, ஒரே இரவில் 17,000ம் தொழிலாளர்கள் தங்கள் வேலைகளையும், சலுகைகளையும், மற்றும் ஒருவேளை அவர்களின் இறுதி ஊதியத்தையும் கூட இழந்தனர். கடைசி விமானம் தரையிறங்கிய அடுத்த கணமே, ஒவ்வொரு ஸ்பிரிட் ஊழியருக்குமான மருத்துவ, பல் மற்றும் கண் சிகிச்சைக்கான காப்பீடுகள் ரத்து செய்யப்பட்டன.
இந்த வீழ்ச்சியானது மில்லியன் கணக்கான தொழிலாள வர்க்கப் பயணிகளை விமானப் பயணத்தை மேற்கொள்ள முடியாத நிலைக்கு உடனடியாகத் தள்ளியுள்ளது. ஏனெனில், ஸ்பிரிட் நிறுவனத்தின் கட்டணங்கள் மற்ற பாரம்பரிய விமான நிறுவனங்களின் கட்டணத்தில் ஒரு சிறு பகுதியாகவே இருந்தன. வேறு வார்த்தைகளில் கூறுவதானால், தொழிலாளர்கள் இருமுறை விலை கொடுக்கிறார்கள்: உற்பத்தியாளர்கள் என்ற ரீதியில் வேலைகளையும் சலுகைகளையும் இழக்கிறார்கள். நுகர்வோர் என்ற ரீதியில் மலிவான பயண வசதியை இழக்கிறார்கள்.
இந்த வான்வழி நிறுவனம் திவாலானதற்கு மிக உடனடியான காரணம், ஈரானுடனான போரின் போது எரிபொருள் விலை இருமடங்காக உயர்ந்ததே ஆகும். உலகளாவிய எண்ணெய் போக்குவரத்தில் 20 சதவீதத்தைக் கொண்டுள்ள ஹோர்முஸ் நீரிணை முற்றுகையிடப்பட்டதன் நேரடி விளைவாக இது அமைந்தது. ஏற்கனவே திவாலாகும் நிலையில் இருந்த ஸ்பிரிட் நிறுவனத்தால் இந்த அதிர்ச்சியைத் தாங்க முடியவில்லை. போர் தொடருமானால் JetBlue மற்றும் Frontier உள்ளிட்ட பிற விமான நிறுவனங்களும் இதேபோன்று வீழ்ச்சியடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ஆனால் உண்மையில், இந்த எரிபொருள் விலை அதிர்ச்சியானது, தொழில்துறையை மேலும் வலுப்படுத்தவும் வேலைகளை ஒழிக்கவும் ஒரு வாய்ப்பாகப் பயன்படுத்தப்படுகிறது. ஸ்பிரிட் விமான நிறுவனம் போன்ற அதி-குறைந்த விலையிலான ஒரு நிறுவனம் சந்தையிலிருந்து அகற்றப்படுவது மற்ற நிறுவனங்களின் விலைகளையும் இலாபங்களையும் கணிசமாக உயர்த்தும் என்பதால், அமெரிக்க அரசாங்கம் இந்த நிறுவனம் வீழ்ச்சியடைய அனுமதித்துள்ளது.
ட்ரம்ப் நிர்வாகம் 500 மில்லியன் டாலர் இடைக்காலக் கடனைப் பற்றி ஆராய்ந்து, பின்னர் அதிலிருந்து பின்வாங்கியது. “எங்களிடம் சும்மா வீணாகக் கிடப்பதற்கு அரைக் கோடி டாலர்கள் எப்போதும் இருப்பதில்லை” என்று போக்குவரத்து அமைச்சர் சீன் டஃபி கூறினார். அவர் ராய்ட்டர்ஸிடம் கூறுகையில்: “நாங்கள் செய்ய விரும்பாதது என்னவென்றால், உருப்படாத ஒரு விஷயத்திற்காக நல்ல பணத்தை விரயம் செய்வதுதான். ஸ்பிரிட் நிறுவனத்தில் ஏற்கனவே நிறைய பணம் கொட்டப்பட்டுள்ளது, ஆனால் அவர்களால் இலாபமீட்டும் வழியைக் கண்டறிய முடியவில்லை” என்று கூறினார்.
எஞ்சியுள்ள அதி-குறைந்த கட்டண விமான நிறுவனங்களான Frontier, Avelo, Sun Country மற்றும் Allegiant ஆகியவற்றிற்கு அரசாங்கம் 2.5 பில்லியன் டாலர் அவசர கால கூட்டாட்சி எரிபொருள் உதவியை வழங்கலாம் என்ற ஆலோசனைகளையும் டஃபி நிராகரித்தார். “இந்த நேரத்தில் அது அவசியமென்று நான் நினைக்கவில்லை... அவர்கள் அமெரிக்க அரசாங்கத்திடம் வர விரும்பினால், நாங்கள் மிக இறுதிப் புகலிடமாகவே கடன் வழங்குவோம்” என்றார்.
ஈரான் மீதான தனது போருக்கு ஒரு நாளைக்கு 1 பில்லியன் டாலர்களைச் செலவழிக்கும் அதே நிர்வாகம் தான், அடுத்த ஆண்டுக்கு மனித வரலாற்றிலேயே மிகப்பெரிய இராணுவ வரவுசெலவுத் திட்டமான 1.535 ட்ரில்லியன் டாலர்களைக் கோருகிறது. இதற்கிடையில், ஸ்பிரிட் விமான நிறுவனத்தின் கலைப்பு நடவடிக்கைகளை மேற்பார்வையிடுவதற்காக, அதன் நிர்வாகம் தக்கவைப்பு ஊக்கத்தொகையாக 10.7 மில்லியன் டாலர்களைப் பெற வாய்ப்புள்ளது.
ஸ்பிரிட் ஊழியர்கள் மற்றும் போரின் பொருளாதாரத் தாக்கத்தால் பாதிக்கப்பட்ட அனைவருக்கும் புதிய வேலை கிடைக்கும் வரை முழு ஊதியமும் சலுகைகளும் வழங்கப்பட வேண்டும் என்று உலக சோசலிச வலைத் தளம் கோருகிறது. எண்ணெய் நிறுவனங்களும் பெரும் வங்கிகளும் தாங்கள் ஆதரிக்கும் போரின் மூலம் ஈட்டிய எதிர்பாராத இலாபங்களைப் பறிமுதல் செய்வதன் மூலம் மட்டுமே இது வழங்கப்பட வேண்டும். இருப்பினும், இது விமானத் துறையை தேசியமயமாக்குவதற்கும், அவற்றை தொழிலாளர்களின் கட்டுப்பாட்டின் கீழ் பொதுப் பயன்பாட்டு நிறுவனங்களாக இயக்குவதற்கும், விமான ஊழியர்களுக்கு கண்ணியமான பணிச்சூழலையும், பயணிகளுக்கு மலிவான கட்டணங்களையும் உறுதி செய்வதற்கும் ஒரு முதல் படியாகும்.
இந்தக் கோரிக்கைகளை ட்ரம்ப் அரசாங்கத்திடம் முறையிடுவதன் மூலம் வென்றெடுக்க முடியாது. மாறாக ஸ்பிரிட் தொழிலாளர்களையும் விமானத் துறை முழுவதிலுமுள்ள தொழிலாளர்களையும் ஒட்டுமொத்த தொழிலாள வர்க்கத்தையும் ஒன்றிணைக்கும் சுயாதீனமான சாமானிய தொழிலாளர் குழுக்களைக் கட்டியெழுப்புவதன் மூலம் மட்டுமே வென்றெடுக்க முடியும். இந்தக் குழுக்களே இக்கோரிக்கைகளை நிறைவேற்றுவதற்குத் தேவையான நடவடிக்கைகளைத் தயார் செய்யவும் ஒருங்கிணைக்கவும் திறன் கொண்டவை ஆகும்.
போரினால் உருவான பொருளாதார அதிர்ச்சிகள், தொழிலாள வர்க்கத்தின் மீது அரை நூற்றாண்டாக நீடித்து வரும் இருகட்சித் தாக்குதலை (ஜனநாயக மற்றும் குடியரசுக் கட்சிகளின் தாக்குதல்) தீவிரப்படுத்தப் பயன்படுத்தப்படுகின்றன.
அமெரிக்க விமானத் துறையின் கட்டுப்பாடுகளை நீக்கும் பணி 1978 இல் ஜிம்மி கார்டரின் ஜனநாயகக் கட்சி நிர்வாகம் மற்றும் ஜனநாயகக் கட்சியின் கட்டுப்பாட்டிலிருந்த காங்கிரஸின் கீழ் தொடங்கியது. கார்ட்டர், சிவில் வானூர்தியியல் வாரியத்தைக் கலைத்து, வழித்தடங்கள் மற்றும் விலைகள் மீதான கடுமையான விதிமுறைகளை முடிவுக்குக் கொண்டுவரும் சட்டத்தில் கையெழுத்திட்டார். இது ஊதியம், வேலைகள் மற்றும் சேவைகளை யார் அதிகமாக வெட்டுகிறார்கள் என்பதைக் காண விமான நிறுவனங்களுக்கு இடையே ஒரு கொடூரமான போட்டியைத் தூண்டியது.
இது 1980-களில் தொடர்ச்சியான கசப்பான வேலைநிறுத்தங்களுக்கு வழிவகுத்தது. இதில் கொன்டினென்டல் (1983-85), பான்-ஆம் (1985) மற்றும் யுனைடெட் விமான நிறுவனங்களின் விமானிகள் (1985), TWA விமானப் பணிப்பெண்கள் (1986) மற்றும் 1989 முதல் 1991 வரை ஈஸ்டர்ன் விமான நிறுவனத்தின் இயந்திரவியலாளர்கள் நடத்திய வேலைநிறுத்தங்களும் அடங்கும். இந்தப் போராட்டங்கள் அந்த விமான நிறுவனத்தின் கலைப்புடன் முடிவடைந்தன. விமான நிறுவனங்கள் தொழிற்சங்க ஒப்பந்தங்களை ரத்து செய்யவும், பெரும் ஆட்குறைப்பு மற்றும் ஊதியக் குறைப்புகளை மேற்கொள்ளவும் திவால் நீதிமன்றங்களைப் பயன்படுத்தின. குறிப்பாக 1983-ல் கொன்டினென்டல் மற்றும் 1989-ல் ஈஸ்டர்ன் விமான நிறுவனங்களில் இது நடந்தது. 1991-க்குள், ஈஸ்டர்ன் மற்றும் பான் ஆம் ஆகிய விமான நிறுவனங்கள் வீழ்ச்சியடைந்தன, இது தங்கள் வாழ்நாள் முழுவதும் அந்த நிறுவனங்களில் பணியாற்றிய தொழிலாளர்களின் ஓய்வூதியங்களை முற்றிலுமாக அழித்தது.
நிர்வாகத்தின் ஒரு அங்கமாகத் தன்னை மாற்றிக்கொண்ட தொழிற்சங்க அதிகாரத்துவத்தின் முக்கிய உதவியின்றி இதைச் செய்திருக்க முடியாது. முதலாளித்துவத்திற்கு சவால் விடும் ஒரு போராட்டத்தை ஒழுங்கமைப்பதற்குப் பதிலாக, இந்த அதிகாரத்துவம் தனது சொந்த நலன்களையே பாதுகாத்துக் கொண்டது. விமான நிறுவன விமானிகள் சங்கமும் சர்வதேச இயந்திர வல்லுநர்கள் சங்கமும், 1985-ல் TWA நிறுவனத்தில் பங்குரிமைக்கு ஈடாக, ஆண்டுக்கு 200 மில்லியன் டாலர் ஊதியக் குறைப்பை வழங்கின. யுனைடெட் விமான நிறுவன ஊழியர்கள், 55 சதவீத உரிமை மற்றும் ஆறு ஆண்டு கால வேலைநிறுத்தமில்லா உறுதிமொழிக்காக, 1994-ல் 15.7 சதவீதம் வரையிலான ஊதியக் குறைப்பை ஏற்றுக்கொண்டனர்.
1978-ல் இருந்த 10 முக்கிய விமான நிறுவனங்களில், அமெரிக்கன், டெல்டா மற்றும் யுனைடெட் ஆகிய மூன்று நிறுவனங்கள் மட்டுமே இப்போது எஞ்சியுள்ளன. 1978-ல் முதல் நான்கு நிறுவனங்கள் 40 சதவீதப் பயணிகளைக் கொண்டிருந்தன. இப்போது அவை 80 சதவீதத்தைக் கொண்டுள்ளன.
கட்டுப்பாடுகளைத் தளர்த்துவது என்பது தொழிலாள வர்க்கத்தின் மீதான பாரிய தாக்குதல்களின் மூலம் ஒரு கட்டமைப்பு ரீதியான பொருளாதார நெருக்கடியிலிருந்து தன்னை விடுவித்துக் கொள்ள ஆளும் வர்க்கம் மேற்கொண்ட பரந்த முயற்சியின் ஒரு பகுதியாகும். இது கார்ட்டரின் மத்திய வங்கித் தலைவர் போல் வோல்கரின், “சராசரி அமெரிக்கரின் வாழ்க்கைத்தரம் வீழ்ச்சியடைய வேண்டும்” என்ற பிரகடனத்தில் சுருக்கமாகக் கூறப்பட்டது. இதே போன்ற கொள்கைகள் மார்கரெட் தாட்சரின் கீழ் பிரிட்டன் மற்றும் பிரான்சுவா மித்திரோனின் கீழ் பிரான்ஸ் உட்பட ஒவ்வொரு முன்னேறிய நாடுகளிலும் நடைமுறைப்படுத்தப்பட்டன.
ஒரு முக்கிய திருப்புமுனை 1981 இல் ஏற்பட்டது. அப்போது, கார்ட்டர் காலத்தில் முதன்முதலில் வகுக்கப்பட்ட திட்டங்களின்படி அடிப்படையில் செயல்பட்ட குடியரசுக் கட்சி ஜனாதிபதி ரொனால்ட் ரீகன், PATCO தொழிற்சங்கத்தைச் சேர்ந்த வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டிருந்த 11,000ம் விமானப் போக்குவரத்துக் கட்டுப்பாட்டாளர்களைப் பணிநீக்கம் செய்தார். வாஷிங்டனில் 400,000 தொழிலாளர்களின் பேரணி உட்படப் பெரும் ஆதரவு இருந்தபோதிலும், AFL-CIO தொழிற்சங்கமானது ஒரு பொது வேலைநிறுத்தத்தை ஆதரிக்க மறுத்துவிட்டது. இது PATCO இன் விதியைத் தீர்மானித்ததுடன், இதைத் தொடர்ந்து நிகழ்ந்த தொடர்ச்சியான துரோகங்களும் காட்டிக்கொடுப்புகளும் இன்றுவரை தொடர்கின்றன.
அமெரிக்காவில் விமானப் பாதுகாப்பு PATCO பணிநீக்கங்களுக்குப் பிறகு ஒருபோதும் மீளவில்லை. இன்று, 90 சதவீதத்திற்கும் அதிகமான விமானப் போக்குவரத்துக் கட்டுப்பாட்டு மையங்கள், பரிந்துரைக்கப்பட்ட பணியாளர் அளவிற்குக் குறைவாகவே செயல்படுகின்றன. இது, மார்ச் மாதம் லாகார்டியா விமான நிலையத்தில் ஒரு ஜெட் விமானத்திற்கும் தீயணைப்பு வாகனத்திற்கும் இடையே ஏற்பட்ட உயிரிழப்புக்குக் காரணமான மோதல் போன்ற தொடர் பேரழிவுகளுக்கு வழிவகுக்கிறது.
சமீபத்திய தசாப்தங்களில், மேலும் பல தாக்குதல்களை நடத்துவதற்குப் பொருளாதார அதிர்ச்சிகள் சாதகமாகப் பயன்படுத்திக் கொள்ளப்பட்டன. செப்டம்பர் 11 பயங்கரவாதத் தாக்குதல்களைத் தொடர்ந்து ஏற்பட்ட தொழில்துறை வீழ்ச்சி, 2002-ல் யுஎஸ் விமான நிறுவனம், சில மாதங்களுக்குப் பிறகு யுனைடெட், பின்னர் 2005-ல் டெல்டா மற்றும் நோர்த்வெஸ்ட் உள்ளிட்ட மேலும் பல நிறுவனங்களின் திவால்நிலைகளுக்கு ஒரு காரணமாக அமைந்தது.
ஒபாமா நிர்வாகம் இந்த ஒருங்கிணைப்பை முழுமைப்படுத்தியது. 2008 இல் டெல்டா நிறுவனம் நோர்த்வெஸ்ட்டைக் கைப்பற்றுவதற்கும், 2010 இல் யுனைடெட் மற்றும் கொன்டினென்டல் நிறுவனங்களின் இணைப்பிற்கும், 2011-ல் சவுத்வெஸ்ட் நிறுவனம் ஏர்ட்ரானைக் கைப்பற்றியதற்கும், 2013-ல் அமெரிக்கன் நிறுவனம் யுஎஸ் ஏர்வேஸுடன் இணைந்ததற்கும் நீதித்துறை ஒப்புதல் அளித்தது.
2020 ஆம் ஆண்டில், பெருந்தொற்று உலகப் பொருளாதாரத்தின் பெரும்பகுதியை முடக்கிய நிலையில், இந்தத் துறை —விமானப் பணிப்பெண்கள் சங்கத்தின் ஆதரவுடன்— 2 டிரில்லியன் டாலர் CARES சட்டத்தின் ஒரு பகுதியாக 54 பில்லியன் டாலர் பெருந்தொற்று மீட்பு நிதியைக் கோரிப் பெற்றது. வேலைகளைப் பாதுகாப்பதற்காக என்று கூறப்பட்டாலும், அதற்குப் பதிலாக அடுத்த ஆண்டே 70,000ம் ஆட்குறைப்புகள் செய்யப்பட்டன.
ஈரானில் நடக்கும் போர், ஏற்கனவே நடைமுறையில் உள்ள கொள்கைகளை விரைவுபடுத்துவதற்காகப் பயன்படுத்தப்படும் சமீபத்திய அதிர்ச்சியாகும். கடந்த ஆண்டு, அமெரிக்க நிறுவனங்கள் 1.2 மில்லியன் (12 லட்சம்) ஆட்குறைப்புகளை அறிவித்தன. அதே நேரத்தில், வரும் ஆண்டுகளில் செயற்கை நுண்ணறிவு மூலம் 80 சதவீத தொழிலாளர்களை பணியில் இருந்து நீக்க நிர்வாகிகள் நம்புகிறார்கள்.
ஈரான் மீதான போர் என்பது தொழிலாள வர்க்கத்தின் மீதான உலகளாவிய யுத்தத்தின் ஒரு பகுதியாகும். ஒரு பீப்பாய் எண்ணெய்யின் விலை 100 டாலருக்கு மேல் இருக்கும் வகையில் நீடிக்கும் மோதலானது, மேலும் 45 மில்லியன் மக்களைக் கடுமையான உணவுப் பாதுகாப்பின்மைக்குத் தள்ளக்கூடும் என்று உலக வங்கி மதிப்பிடுகிறது. உரத்தின் முக்கிய மூலப்பொருளான யூரியாவின் விலை 60 முதல் 70 சதவீதம் உயர்ந்துள்ளது. இது பயிரிடும் பருவத்தில் சகாராவுக்குத் தெற்கே உள்ள ஆப்பிரிக்கா முழுவதும் பஞ்சத்தை அச்சுறுத்துகிறது. இந்த மோதலின் நேரடி விளைவாக ஏற்கனவே 2 மில்லியன் தொழிலாளர்கள் தங்கள் வேலைகளை இழந்துள்ளனர் என்பதை ஈரான் அரசாங்கம் ஒப்புக்கொண்டுள்ளது. பிரிட்டனில், அடுத்த ஆண்டுக்குள் 250,000 வேலைகள் வரை இழக்கப்படலாம், மேலும் ஜேர்மனியில் போரின் காரணமாக 200,000 வேலைகள் ஆபத்தில் உள்ளன.
இந்தத் தாக்குதல்களின் வீச்சு தவிர்க்கமுடியாமல் பெரும் சமூகப் போராட்டங்களைத் தூண்டும். கடந்த வெள்ளிக்கிழமை நடைபெற்ற சர்வதேச மே தின இணையவழி பேரணியில் டேவிட் நோர்த் கூறியது போல், “2026-ஆம் ஆண்டின் முதல் மாதங்கள், தொழிலாள வர்க்கத்தின் எதிர்ப்பு ஒரு உலகளாவிய சக்தியாக உருவெடுக்கும் காலகட்டத்தைக் குறிக்கின்றன. அது, தன்னலக்குழுவின் தாக்குதலுக்கு எதிராக, இக்காலகட்டத்தின் அடிப்படை கேள்விகளான போர் அல்லது அமைதி, சர்வாதிகாரம் அல்லது ஜனநாயகம், சோசலிசம் அல்லது காட்டுமிராண்டித்தனம் போன்றவற்றை நேரடியாக வரலாற்று நிகழ்ச்சி நிரலில் வைக்கும் அளவில் போராடுகிறது.”
இதன் முடிவு, “தற்போது நடைபெற்று வரும் போராட்டங்களாலும், இந்தப் போராட்டங்களின் போக்கில் தொழிலாள வர்க்கம் வளர்த்தெடுக்கும் அரசியல் நனவு, அமைப்பு மற்றும் தலைமையினாலும் தீர்மானிக்கப்படும்” என்று நோர்த் வலியுறுத்திக் கூறினார்.
