மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம்.
டைமண்ட் பிரின்சஸ் (Diamond Princess) உல்லாசக் கப்பலில் ஏற்பட்ட பயங்கரமான நோய்ப் பரவலைத் தொடர்ந்து, கோவிட்-19 பெருந்தொற்று குறித்துப் பெருவாரியான மக்கள் அறிந்து ஆறு ஆண்டுகளுக்குப் பிறகு, மற்றொரு உல்லாசக் கப்பலில் அதைவிட மிகக் கொடிய நோய்க்கிருமி ஒன்றின் அபாயகரமான பரவல் நிகழ்ந்து வருகின்றது. மீண்டும் ஒருமுறை, சம்பந்தப்பட்ட ஒவ்வொரு அதிகார அமைப்பின் பதிலும், பொதுமக்கள் பயப்படுவதற்கு ஏதுமில்லை என்று வலியுறுத்துவதாகவே உள்ளது.
டச்சு நாட்டுக் கொடியுடன் பயணிக்கும் MV ஹோண்டியஸ் (MV Hondius) கப்பலில், ஆண்டிஸ் வைரஸ் ஹான்டாவைரஸ் (Andes virus hantavirus) தொற்றால் எட்டுப் பேர் பாதிக்கப்பட்டிருப்பதும், மூன்று பேர் உயிரிழந்திருப்பதும் உறுதி செய்யப்பட்டுள்ளது. கப்பல் ஒன்றில் இந்த வைரஸ் குழுமமாகப் பரவிய நிகழ்வு பதிவாவது இதுவே முதல்முறையாகும். ஒரு தொற்றுப் பரவல் நடப்பதே அதிகாரிகளுக்குத் தெரிவதற்கு முன்னால், முப்பது பயணிகள் ஏற்கனவே நான்கு கண்டங்களில் தரை இறங்கிவிட்டனர். வணிக ரீதியான அந்த விமானப் பயணங்களின் போது, அவர்கள் சந்தேகத்திற்கு இடமின்றி முகக்கவசம் அணியாமலேயே பயணித்திருப்பார்கள். இந்நிலையில், உயிருக்கு ஆபத்தான நிலையில் இருந்த ஒரு பயணியுடன் சிறிது நேரம் தொடர்பிலிருந்த KLM விமானப் பணிப்பெண் ஒருவர், லேசான அறிகுறிகளுடன் ஆம்ஸ்டர்டாமில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் என்ற செய்தி வியாழக்கிழமை வெளியானது. இது கப்பலுக்கு வெளியே பதிவான முதல் சாத்தியமான இரண்டாம் நிலை பாதிப்பாகக் கருதப்படுகிறது.
இந்த ஹன்டா வைரஸ் திரிபினால் 38 முதல் 40 சதவிகிதம் வரை உயிரிழப்பு ஏற்படுகிறது, இது கோவிட்-19 ஐ விட சுமார் 40 மடங்கு அதிகமாகும். இதற்கு FDA (அமெரிக்க அரசாங்கத்தின் உணவு மற்றும் மருந்து நிர்வாகம்) அங்கீகாரம் பெற்ற தடுப்பூசியோ, குறிப்பிட்ட வைரஸ் எதிர்ப்பு சிகிச்சையோ இல்லை; மேலும் அறிகுறிகள் தோன்றுவதற்கு எட்டு வாரங்கள் வரை ஆகக்கூடிய நோய்க்காப்புக் காலத்தைக் (incubation period) கொண்டுள்ளது. இந்த நோய்த்தொற்றுக் குழுமம் ஏற்கனவே எத்தனை பேருக்குப் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது என்பது யாருக்கும் தெரியாது.
நிச்சயமாக, இத்தகையச் சூழ்நிலையில் பீதி அடைவது எவ்வித பலனையும் அளிக்காது என்றாலும், இதுவரை வெளிவந்துள்ள உண்மைகள் மிகவும் கவலையளிப்பதாக உள்ளன. இவை பொதுமக்களுக்குத் தெளிவான முறையில் பரவலாகத் தெரிவிக்கப்பட வேண்டும், அத்துடன் தேவையான அனைத்து பொதுச் சுகாதார நடவடிக்கைகளும் செயல்படுத்தப்பட வேண்டும். இருப்பினும், இந்த ஆழமடைந்து வரும் நெருக்கடிக்கு மத்தியில், அதிகாரிகளின் முதன்மையான அக்கறை பொதுமக்களுக்குத் தகவல் தெரிவிப்பதல்ல, மாறாகத் தகவல்களை மறைப்பதே ஆகும்.
மே 7 அன்று உலக சுகாதார அமைப்பின் (WHO) அவசர விளக்கக் கூட்டத்தில், தொற்றுநோய் மற்றும் பெருந்தொற்று மேலாண்மைக்கான இடைக்கால இயக்குநர் மரியா வான் கெர்கோவ் (Maria Van Kerkhove), ஹோண்டியஸ் கப்பலில் “முதலாவது மற்றும் இரண்டாவது பாதிப்புக்குள்ளான தம்பதிகளுக்கு இடையேயும், சிகிச்சை அளித்த ஒரு மருத்துவருக்கும்” இடையில் மனிதரிடமிருந்து மனிதருக்குத் தொற்று பரவியதை உறுதிப்படுத்தினார். பின்னர் அவர், “இது SARS-CoV-2 அல்ல. இது ஒரு கோவிட் பெருந்தொற்றின் தொடக்கம் அல்ல. இது ஒரு கப்பலில் நாம் காணும் ஒரு தொற்றுப் பரவல் மட்டுமே” என்று கூறினார்.
மே 6 அன்று CDC (நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையங்கள்) மற்றும் வெளியுறவுத்துறை வெளியிட்ட கூட்டறிக்கை, அமெரிக்க பொதுமக்களுக்கான ஆபத்து “மிகவும் குறைவு” என்று அறிவித்தது. அக்டோபர் 2020-ன் கிரேட் பாரிங்டன் (Great Barrington) பிரகடனத்தின் — இது குற்றவியல் ரீதியான “தொற்றைப் பரவவிடு” கொள்கையின் அடிப்படை ஆவணமாகும் — அதன் இணை ஆசிரியரும், NIH (தேசிய சுகாதார நிறுவனங்கள்) இயக்குநரும் மற்றும் CDC-யின் தற்காலிக இயக்குநருமான ஜே பட்டாச்சார்யா இதுவரை எந்தச் செய்தியாளர் கூட்டத்தையும் நடத்தவில்லை. இந்தத் தொற்றுப் பரவல் குறித்துப் பேசிய அமெரிக்காவின் மிக முக்கியமான பொதுச் சுகாதார ஆளுமையான ஆஷிஷ் ஜா (பைடனின் முன்னாள் வெள்ளை மாளிகை கோவிட் ஒருங்கிணைப்பாளர்), NBC-ன் TODAY நிகழ்ச்சியில் கூறுகையில்: “பரந்த பொதுமக்களுக்கு, இது ஒரு பெரிய கவலை இல்லை... இது கோவிட் அல்லது காய்ச்சலைப் போன்றது அல்ல, இது ஒரு பெரிய உலகளாவிய தொற்றுப் பரவலாக மாறப்போவதில்லை” என்றார்.
ஏற்கனவே நடந்த ஒன்று மீண்டும் நடப்பதைப் போன்ற உணர்வு இங்கே கண்கூடாகத் தெரிகிறது. கோவிட்-19 பெருந்தொற்றின் தொடக்கத்தைப் போலவே, ஒவ்வொரு அதிகாரப்பூர்வ அறிக்கையும் மக்களை மயக்கமூட்டுவதாக இருக்கிறது; சாத்தியமான அபாயங்கள் குறித்துப் பொதுமக்களுக்கு எச்சரிக்கை விடுக்க எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.
இந்த நெருக்கடிக்கு இட்டுச் சென்ற நிகழ்வுகளின் வரிசையை ஆராய்ந்தால், பெருந்தொற்றுக் காலத்தில் பொதுச் சுகாதாரம் மற்றும் அறிவியல் உள்கட்டமைப்புகள் எந்த அளவிற்குப் பேரழிவுகரமான முறையில் சீரழிக்கப்பட்டுள்ளன என்பது அம்பலமாகிறது. முதலாளித்துவ சமூகம் 2020-ல் இருந்ததை விட இன்று இன்னும் குறைவாகவே தயாராக உள்ளது.
24 நாள் நீடிக்கும் “அட்லாண்டிக் ஒடிஸி” பயணம் ஏப்ரல் 1 அன்று அர்ஜென்டினாவின் உஷுவாயாவில் (Ushuaia) தொடங்கியது. ஓஷன்வைட் எக்ஸ்பெடிஷன்ஸ் (Oceanwide Expeditions) நிறுவனத்தால் இயக்கப்படும் ஹோண்டியஸ் கப்பல் — இதில் ஒரு நபருக்கு 11,000 முதல் 17,000 டாலர்கள் வரையிலான அறை வாடகைகளுடன் — 114 விருந்தினர்களுடன் அண்டார்டிகா வழியாக கேப் வெர்டே (Cape Verde) நோக்கிச் சென்றது. இத்தொற்றின் முதல் நோயாளி , எழுபதுகளில் இருந்த ஒரு டச்சுக்காரர் ஆவார். அவருக்கு ஏப்ரல் 6 அன்று காய்ச்சல் ஏற்பட்டு, ஏப்ரல் 11 அன்று இரவு கப்பலிலேயே உயிரிழந்தார்.
கப்பலின் மருத்துவர் எந்த மாதிரிகளையும் சேகரிக்கவில்லை, யாரையும் தனிமைப்படுத்தவும் உத்தரவிடவில்லை. அடுத்த நாள் காலை கப்பலின் கேப்டன் பயணிகளிடம்: “உயிரிழந்த அந்தப் பயணி எத்தகைய உடல்நலப் பிரச்சினைகளால் பாதிக்கப்பட்டிருந்தாரோ, அவை தொற்றுத்தன்மை கொண்டவை அல்ல என்று மருத்துவர் என்னிடம் கூறினார்; எனவே கப்பல் பாதுகாப்பாக உள்ளது. கப்பல் பாதுகாப்பானது,” என்று அறிவித்தார். பயணத் திட்டம் தொடர்ந்து நடைபெற்றுக் கொண்டிருந்த நிலையில், அந்தச் சடலம் 13 நாட்களுக்குக் கப்பலிலேயே வைக்கப்பட்டிருந்தது. ஒரு பயணி பின்னர் AFP செய்தி நிறுவனத்திடம் கூறுகையில், “நாங்கள் மீண்டும் அனைவரும் ஒன்றாகவே உணவருந்தினோம், மேலும் நாங்கள் முகக்கவசங்கள் எதையும் அணியவில்லை,” என்றார்.
ஏப்ரல் 24 அன்று, நெப்போலியன் நாடுகடத்தப்பட்ட இடமான செயின்ட் ஹெலினாவில் (Saint Helena) ஹோண்டியஸ் கப்பல் நங்கூரமிட்டது. முதன்முதலில் பதிவுசெய்யப்பட்ட நோயாளியின் மனைவி கப்பலிலிருந்து இறங்கி, சக்கர நாற்காலியில் கொண்டு செல்லப்பட்டு, உடனடியாக ஜோகன்னஸ்பர்க்கிற்குச் செல்லும் விமானத்தில் ஏறினார்.. விமானப் பயணத்தின் போதே அவரது உடல்நிலை மோசமடைந்ததால், அவர் ஏப்ரல் 26 அன்று ஜோகன்னஸ்பர்க்கில் இறந்தார். முதல் மரணம் நிகழ்ந்து பதினாறு நாட்களுக்குப் பிறகு, ஏப்ரல் 27 அன்று, தென்னாப்பிரிக்காவின் தேசிய தொற்று நோய்கள் நிறுவனம் ஹான்டாவைரஸ் இருப்பதை உறுதி செய்தது. அதற்குள், கப்பலிலிருந்து இறங்கிய 30 பயணிகள், எந்தவித பரிசோதனையோ, தனிமைப்படுத்தலோ, அல்லது முன் அறிவிப்போ இன்றி, 12 நாடுகளுக்கு வணிக விமானங்களில் சென்றுவிட்டனர்.
மே 2 அன்று ஹோண்டியஸ் கப்பலில் ஒரு ஜேர்மன் பெண் இறந்தார். பாதிக்கப்பட்ட ஒருவருக்குச் சிகிச்சை அளித்த பிரிட்டிஷ் மருத்துவர் தீவிர சிகிச்சைப் பிரிவில் உள்ளார். கப்பலில் இருந்து இறங்கி 12 நாட்களுக்குப் பிறகு ஒரு சுவிஸ் பயணி சூரிக்கில் அடையாளம் காணப்பட்டார்; ஓஷன்வைட் நிறுவனம் இறுதியாக இறங்கிய பயணிகளுக்கு மின்னஞ்சல் அனுப்பியதால் மட்டுமே அவர் அடையாளம் காணப்பட்டார். சர்வதேச சுகாதார விதிகளின் (IHR) கீழ், மே 2-ஆம் தேதி வரை உலக சுகாதார அமைப்புக்கு (WHO) எவ்விதத் தகவலும் தெரிவிக்கப்படவில்லை. அதாவது, முதல் மரணம் நிகழ்ந்து மூன்று வாரங்கள் கழிந்த பின்னரும், இரண்டாவது மரணம் நிகழ்ந்து ஆறு நாட்கள் கடந்த பின்னருமே தகவல் அளிக்கப்பட்டது. திரும்பிய பயணிகளுக்குத் தனிமைப்படுத்தல் குறித்த எந்த வழிகாட்டுதலும் வழங்கப்படவில்லை. இது ஏற்கனவே எந்தளவிற்குப் பரவியுள்ளது என்பது யாருக்கும் தெரியாது.
இந்தப் பேரழிவு, ஒரு கப்பல் அதிகாரிகளின் அல்லது ஒரு துறைமுக அதிகாரிகளின் அலட்சியத்தால் மட்டுமே உருவானது அல்ல. இது, கோவிட்-19 பெருந்தொற்றுக்கு பதிலளிக்கும் வகையில், கடந்த ஆறு ஆண்டுகளாகப் பொதுச் சுகாதாரக் கட்டமைப்பைத் திட்டமிட்டுச் சிதைத்ததன் விளைவாகும்; இது சர்வதேச தொழிலாள வர்க்கத்திற்கு எதிராகத் தொடர்ச்சியாக இழைக்கப்பட்டு வரும் ஒரு மாபெரும் சமூகக் குற்றமாகும்.
நிதித் தன்னலக்குழுக்களின் சார்பாகச் செயல்படும் உலக அரசாங்கங்கள், முன்னணி விஞ்ஞானிகளால் பரிந்துரைக்கப்பட்ட நோய் ஒழிப்பு மூலோபாயத்தை நிராகரித்து, அதற்குப் பதிலாக வெகுஜனத் தொற்றுக் கொள்கைகளைச் செயல்படுத்தின. தொற்றுகள், மரணங்கள் மற்றும் நீண்டகாலக் கோவிட் பாதிப்புகள் நூறு மில்லியன்கணக்கில் அதிகரித்துக் கொண்டிருந்த போதே, பெருந்தொற்று “முடிந்துவிட்டது” என அறிவிக்க முன்னெடுக்கப்பட்ட இருகட்சிப் பிரச்சாரமானது, ஹோண்டியஸ் கப்பல் விவகாரத்தில் காட்டப்பட்ட அலட்சியமான பதிலிறுப்பைச் சாத்தியமாக்கிய ஒரு தயாரிப்பு நடவடிக்கையாகும்
ட்ரம்ப் நிர்வாகம் பதவியேற்றது முதல், அறிவியல் மற்றும் பொதுச் சுகாதார உள்கட்டமைப்புக்கு எதிரான இத்தாக்குதலை அமெரிக்க வரலாற்றிலேயே முன்னெப்போதும் இல்லாத வகையில் தீவிரப்படுத்தியுள்ளது. பிப்ரவரி முதல் சுகாதார மற்றும் மனித சேவைகள் துறையில் (HHS) 20,000-க்கும் மேற்பட்ட ஊழியர்கள் பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளனர். தேசிய சுகாதார நிறுவனங்களின் (NIH) நிதிநிலை ஒதுக்கீடு 47 பில்லியன் டாலரிலிருந்து 27 பில்லியன் டாலராகக் குறைக்கப்பட்டுள்ளது. ஹோண்டியஸ் கப்பல் நிகழ்வு ஒரு சிறந்த உதாரணமாகக் கருதப்படும் விலங்குவழித் தொற்று (zoonotic) அச்சுறுத்தல்களைக் கண்காணிக்க உருவாக்கப்பட்ட STOP Spillover திட்டம், ஒரு நிர்வாக ஆணையின் மூலம் ரத்து செய்யப்பட்டது. உல்லாசக் கப்பல்களுக்காகச் செயல்படும் அமெரிக்காவின் ஒரே பொதுச் சுகாதார அமைப்பான CDC-யின் கப்பல் சுகாதாரத் திட்டம், ஏப்ரல் மாதம் கலைக்கப்பட்டது. ஜனவரி மாதம் அமெரிக்கா உலக சுகாதார அமைப்பிலிருந்து (WHO) வெளியேறியது; இது இத்தகைய தொற்றுப் பரவல்கள் குறித்துத் தகவல் பரிமாறும் முறையான சர்வதேச சுகாதார விதிகள் (IHR) சார்ந்த தொடர்புகளைத் துண்டித்தது. நவீன மருத்துவத்திற்கு எதிராகப் பகிரங்கப் போர் தொடுப்பதற்காகவே HHS துறையில் அமர்த்தப்பட்ட, தடுப்பூசி எதிர்ப்புப் போலி அறிவியலாளரான ராபர்ட் எஃப். கென்னடி ஜூனியர், கோவிட் நோயாளிகளை (ஏற்கனவே வேறு நோய்வாய்ப்பட்டவர்களை) மட்டுமே கொல்லும் என்று சமீபத்தில் அறிவித்தார்.
அறிவியலுக்கு எதிரான அதே பாசிசப் போர் சர்வதேச அளவிலும் அரங்கேறி வருகிறது — ஹான்டாவைரஸ் உருவான அர்ஜென்டினாவில் மிலெய், அங்கு CONICET (தேசிய அறிவியல் மற்றும் தொழில்நுட்ப ஆராய்ச்சி மன்றம்) சிதைக்கப்பட்டுள்ளது); இத்தாலியில் மெலோனி, ஜேர்மனியில் AfD (தீவிர வலதுசாரி ஜேர்மனிக்கான மாற்றீட்டு கட்சி )என இது தொடர்கிறது. இவை எதுவுமே ட்ரம்பின் இரண்டாவது பதவிக்காலத்தில் தொடங்கவில்லை. அமெரிக்காவின் ஜனநாயகக் கட்சி, பிரித்தானியாவின் தொழிற்கட்சி அரசாங்கம் மற்றும் ஐரோப்பா முழுவதிலும் உள்ள சமூக ஜனநாயகக் கட்சிகள் என அனைத்துமே, கடந்த ஆறு ஆண்டுகளாகப் பொதுச் சுகாதாரத்தின் மீதான இந்தத் தாக்குதலில் இளைய பங்காளிகளாகவே செயல்பட்டு வருகின்றன.
இப்போது என்ன செய்யப்பட வேண்டும்? ஒவ்வொரு வேலைத்தலம், பள்ளி, மருத்துவமனை, துறைமுகம் மற்றும் கப்பலிலும், தொழிலாள வர்க்கம் சுயாதீனமாக அணிதிரண்டு பின்வரும் கோரிக்கைகளை முன்வைக்க வேண்டும்:
- ஒவ்வொரு பயணி, கப்பல் பணியாளர்கள், செயின்ட் ஹெலினாவில் தரையிறங்கியவர்கள் மற்றும் அவர்களுடன் விமானத்தில் தொடர்பில் இருந்தவர்கள் என அனைவருக்கும் உடனடியாக PCR [தற்போது உடலில் வைரஸ் தொற்று இருக்கிறதா என்பதைக் கண்டறியும் சோதனை] மற்றும் சீரோலஜி (serology) [இரத்தத்தில் வைரஸுக்கு எதிரான எதிர்ப்புச் சக்தி உருவாகியுள்ளதா என்பதைக் கண்டறியும் சோதனை] பரிசோதனைகள் நடத்தப்பட வேண்டும்; அத்துடன் அவர்களின் மரபணு வரிசைமுறை (genomic sequencing) முடிவுகள் முழுமையாகப் பொதுமக்களுக்கு வெளியிடப்பட வேண்டும்.
- கல்வியாளர்கள், சுகாதாரப் பணியாளர்கள் மற்றும் போக்குவரத்துத் தொழிலாளர்கள், ஒவ்வொரு உட்புறப் பொது இடத்திலும் HEPA வடிகட்டிகள் (காற்றில் உள்ள நுண்ணிய துகள்களை நீக்கும் கருவி) மற்றும் Far-UVC (222 nm) காற்று கிருமி நீக்கக் கருவிகள் (காற்றில் உள்ள கிருமிகளை அழிக்கும் புற ஊதா தொழில்நுட்பம்) ஆகியவற்றைப் பாதுகாப்பாகச் செயல்படுத்தக் கோரிக்கையாக முன்வைக்க வேண்டும்.
- CDC (நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையம்), NIH (தேசிய சுகாதார நிறுவனங்கள்) மற்றும் HHS (சுகாதார மற்றும் மனித சேவைகள் துறை) ஆகியவற்றில் செய்யப்பட்ட ஒவ்வொரு பணிநீக்கமும் உடனடியாகத் திரும்பப் பெறப்பட வேண்டும்; உல்லாசக் கப்பல் ஆய்வு, விலங்குவழித் தொற்று (zoonotic) கண்காணிப்பு மற்றும் பெருந்தொற்றுத் தயார்நிலை ஆகிய நடவடிக்கைகள் அவசர கால அடிப்படையில் மீண்டும் நடைமுறைப்படுத்தப்பட வேண்டும்.
- குற்றவியல் ரீதியான “தொற்றைப் பரவவிடு” கொள்கை முடிவுக்குக் கொண்டுவரப்பட வேண்டும். கோவிட்-19, இன்ஃப்ளூயன்ஸா (Influenza) [நுரையீரல் மற்றும் சுவாசப் பாதையைத் தாக்கும் ஒரு தீவிர வைரஸ் காய்ச்சல்] மற்றும் காற்றில் பரவும் பிற நோய்க்கிருமிகளை முற்றிலுமாக ஒழிப்பதை, அதனை நிராகரித்த ஆளும் வர்க்கத்திற்கு எதிராகத் தொழிலாள வர்க்கம் தனது கோரிக்கையாக முன்னெடுக்க வேண்டும்.
- விலங்குகளிடமிருந்து மனிதர்களுக்குப் பரவும் நோய்களின் (zoonotic) பரவலைத் துரிதப்படுத்தும் முதலீடுகளைச் செய்யும் நிதிய தன்னலக்குழுவிற்கு எதிராக, காலநிலை மாற்றத்தைத் தடுப்பதற்கான அவசரகால நடவடிக்கைகள் கட்டாயமாகச் சுமத்தப்பட வேண்டும்.
இது பீதியூட்டுவதற்கான அழைப்பு அல்ல. மாறாக, என்ன நடக்கிறது என்பதைப் பொதுமக்கள் தெரிந்து கொள்வதற்கும், தங்கள் அரசாங்கங்கள் செய்ய மறுப்பதை நோக்கித் தொழிலாள வர்க்கம் செயல்படுவதற்கும் விடுக்கப்பட்ட அழைப்பாகும். ஹோண்டியஸ் தொற்றுக் குழுமம் அடுத்த பெருந்தொற்றாக மாறுமா என்பது இன்னும் தெரியவில்லை. ஆனால் ஒன்று மட்டும் உறுதி; பெருந்தொற்றுகளைத் தடுப்பதற்கோ, விலங்குவழித் தொற்று அச்சுறுத்தல்களை அதிகரிக்கும் காலநிலை மாற்றத்தைக் கட்டுப்படுத்துவதற்கோ அல்லது இவற்றின் விளைவுகளிலிருந்து தொழிலாள வர்க்கத்தைப் பாதுகாப்பதற்கோ, ஆளும் வர்க்கம் அமைப்ப ரீதியாகத் திறனற்றது என்பது கடந்த ஆறு ஆண்டுகளுக்கும் மேலாக நிரூபணமாகியுள்ளது.
பொதுச் சுகாதாரம் சோசலிச அடிப்படையில் மறுசீரமைக்கப்பட வேண்டும் — அது சர்வதேச அளவில் ஒருங்கிணைக்கப்பட்டதாகவும், ஜனநாயக ரீதியாகத் திட்டமிடப்பட்டதாகவும், நிதிய தன்னலக்குழுவின் லாபத்தை விட மனிதத் தேவைகளை முதன்மைப்படுத்துவதாகவும் இருக்க வேண்டும். இதுவே நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழு (ICFI) மற்றும் சோசலிச சமத்துவக் கட்சி (SEP) ஆகியவற்றின் முன்னோக்காகும். இதற்கு மாற்றாக இருப்பது காட்டுமிராண்டித்தனமே ஆகும்.
