முன்னோக்கு

நேட்டோவும் உக்ரேனும் ரஷ்யாவிற்கு எதிரான போரைத் தீவிரப்படுத்துகின்றன

இந்த மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கு காணலாம்.

ஜூன் 3, 2026 புதன்கிழமையன்று, உக்ரேனிய ஆளில்லா விமானத் தாக்குதலுக்குப் பிறகு, ரஷ்யாவின் செயின்ட் பீட்டர்ஸ்பேர்க் துறைமுகத்திற்கு மேலே கரும்புகை மண்டலம் எழுவதைக் காணலாம். [AP Photo]

ரஷ்யாவிற்கு எதிராக நேட்டோ நடத்திவரும் போர் ஒரு புதிய கட்டத்தை எட்டியுள்ளது. கடந்த புதன்கிழமை அன்று, ரஷ்யாவின் இரண்டாவது பெரிய நகரமான செயின்ட் பீட்டர்ஸ்பர்க் மீது உக்ரேனின் ஆளில்லா விமானம் தாக்குதல்களை நடத்தியது. இந்நகரத்தில் சர்வதேச பொருளாதார மன்றம் தொடங்கப்பட்ட வேளையில், செயின்ட் பீட்டர்ஸ்பேர்க் எண்ணெய் முனையத்திற்கு மேலே கரும்புகை மேகங்கள் எழுந்தன. கிடைத்த தகவல்களின்படி, குரோன்ஸ்டாட் கடற்படைத் தளமும் ஏனைய இராணுவ இலக்குகளும் ஆளில்லா விமானத் தாக்குதலுக்குள்ளாகின.

இந்தத் தாக்குதலானது, ரஷ்யாவின் எரிசக்தி நிலையங்கள், விமான நிலையங்கள், ஆயுதத் தொழிற்சாலைகள், கட்டளை மையங்கள் மற்றும் இராணுவ உள்கட்டமைப்புகள் ஆகியவற்றின் மீது உக்ரேன் நடத்தி வரும் முன்னெப்போதையும் விட மிகத் தீவிரமான மற்றும் ஆழமாக ஊடுருவக்கூடிய, ஆளில்லா விமான மற்றும் ஏவுகணைத் தாக்குதல்களின் ஒரு பகுதியாகும் —இவற்றில் சில போர்க்கள எல்லையையும் தாண்டி நூற்றுக்கணக்கான கிலோமீட்டர் தொலைவில் நடத்தப்பட்டவை ஆகும்.

உக்ரேன் இந்தத் தாக்குதல்களைத் தனியாக நடத்தவில்லை. இவை நேட்டோ வல்லரசுகளால், குறிப்பாக ஜேர்மனியால், அரசியல் ரீதியாக மூடிமறைக்கப்பட்டு, இராணுவ ரீதியாக சாத்தியமாக்கப்பட்டு, தொழில்நுட்ப ரீதியாக ஆதரிக்கப்பட்டு, மூலோபாய ரீதியாக ஒருங்கிணைக்கப்படுகின்றன.

சமீபத்திய வாரங்களில் பேர்லினும் கியேவ்வும் பகிரங்கமாக ஒப்புக்கொண்ட விஷயங்களையே இந்தச் சமீபத்திய தாக்குதல்கள் நடைமுறைப்படுத்துகின்றன. கடந்த ஏப்ரல் மாத மத்தியில் உக்ரேனிய ஜனாதிபதி வோலோடிமிர் ஜெலென்ஸ்கி பேர்லினில் இராணுவ மரியாதைகளுடன் வரவேற்கப்பட்டபோது, இரு அரசாங்கங்களும் போர் ஒத்துழைப்பை ஆழமாக்குவதை முறைப்படுத்தும் ஒரு “மூலோபாய கூட்டாண்மையில்” கையெழுத்திட்டன.

மே மாத நடுப்பகுதியில், கியேவ்விற்கு விஜயம் செய்திருந்த பாதுகாப்பு அமைச்சர் போரிஸ் பிஸ்டோரியஸ், ஜேர்மனியும் உக்ரேனும் இணைந்து 1,500 கிலோமீட்டர் வரை பாயும் திறன் கொண்ட ட்ரோன்களையும் ஏனைய ஆளில்லா ஆயுத அமைப்புகளையும் கூட்டாக உருவாக்கவும், உற்பத்தி செய்யவும் உத்தேசித்துள்ளதாக அறிவித்தார். இது ரஷ்யாவின் உட்பகுதிகளுக்குள் ஆழமாக ஊடுருவி தாக்குதல் நடத்துவதை சாத்தியமாக்குகிறது.

பேர்லின் உக்ரேனை ஜேர்மனிய ஆயுதங்களைப் பெறும் ஒரு நாடாக மட்டுமல்லாமல், எதிர்கால ஜேர்மனிய மற்றும் ஐரோப்பியப் போர்த் தயாரிப்புக்கான ஒரு ஆய்வகமாகவே கருதுகிறது என்ற உண்மையை பிஸ்டோரியஸ் மறைக்கவில்லை. போர்க் களத்தில் உக்ரேனின் அனுபவத்திலிருந்து ஜேர்மனி பயனடைய முடியும் என்று அவர் பிரகடனம் செய்தார். அதாவது, ஒரு அணுஆயுத வல்லரசுக்கு எதிராக ஒரு அதிநவீன தொழில்நுட்பப் போர் எவ்வாறு நடத்தப்படுகிறது என்பதை ஜேர்மனிய ஆயுதப் படைகள் உக்ரேனில் கற்று வருகின்றன.

செயின்ட் பீட்டர்ஸ்பர்க் மீதான தாக்குதலானது, நேட்டோ வல்லரசுகள் ஒவ்வொரு சிவப்புக் கோட்டையும் தாண்டிச் சென்று கொண்டிருக்கின்றன என்பதை அடிக்கோடிட்டுக் காட்டுகிறது. ரஷ்ய பிரதேசத்தின் மீது மேற்கத்திய ஆயுதங்களைக் கொண்டு நடத்தப்படும் தாக்குதல்கள், உக்ரேனுக்கு வெளியேயும் கூட எதிர் நடவடிக்கைகளுக்கு வழிவகுக்கலாம் என்று ரஷ்யா பலமுறை எச்சரித்துள்ளது. ரஷ்யா மீதான தாக்குதல்களுக்காக உக்ரேனுடன் இணைந்து நீண்டதூர ஆயுதங்களையும் ட்ரோன்களையும் உருவாக்கப் போவதாக பேர்லின் அறிவித்ததைத் தொடர்ந்து, ரஷ்ய பாதுகாப்பு அமைச்சகம் ஏப்ரல் மாதத்திலேயே ஜேர்மனிய ஆயுத நிறுவனங்களின் முகவரிகளை வெளியிட்டது.

ஏகாதிபத்திய சக்திகள் ரஷ்யாவின் ஒவ்வொரு எச்சரிக்கைக்கும் முற்றுமுழுதான பொறுப்பற்ற தன்மையுடன் பதிலடி கொடுத்து, அணுஆயுதப் போரை உருவாக்கும் அபாயத்தை ஏற்படுத்தி வருகின்றன. இந்த மோதல் நேட்டோவிற்கும் ரஷ்யாவிற்கும் இடையிலான ஒரு நேரடிப் போராக மாறக்கூடும் என்பதை அவர்கள் நனவுபூர்வமாக ஏற்றுக்கொள்வது மட்டுமல்லாமல், அதை நோக்கியே வேலை செய்தும் வருகின்றனர். ரஷ்யப் பகுதிகள் மீதான முன்னெப்போதையும் விட மிகத் தீவிரமான ஆழ ஊடுருவும் தாக்குதல்கள், ரஷ்யாவின் எல்லைகளில் மேற்கொள்ளப்படும் இராணுவப் பயிற்சிகள், கிழக்கு ஐரோப்பாவில் கூடுதல் நேட்டோ துருப்புக்கள் மற்றும் ஐரோப்பாவின் போர் ஆற்றலை விரிவுபடுத்துதல் ஆகியவற்றின் மூலம், மாஸ்கோவை ஒரு எதிர்வினைக்கு தூண்டி, அதன் மூலம் நேட்டோ அதிகாரப்பூர்வமாகப் போருக்குள் நுழைவதற்கான ஒரு சாக்குப்போக்காக அதைப் பயன்படுத்திக் கொள்ள அவர்கள் முனைகின்றனர்.

இதற்கும் “ஜனநாயகம்”, “சுதந்திரம்” அல்லது “மனித உரிமைகள்” ஆகியவற்றைப் பாதுகாப்பதற்கும் எந்தவொரு சம்பந்தமும் கிடையாது. உக்ரேன் போர் என்பது பல தசாப்தங்களாக கிழக்கு ஐரோப்பா நோக்கி நேட்டோ விரிவடைந்ததன் விளைவாக ஏற்பட்டதாகும். ரஷ்யாவிற்கு எதிரான ஒரு இராணுவ புறக்காவல் நிலையமாக உக்ரேனை முறையான விதத்தில் மாற்றியதும், 2014-ல் வாஷிங்டன் மற்றும் பேர்லின் ஆதரவுடன் கீயேவில் நடந்த வலதுசாரிகளின் அரசியல் கவிழ்ப்புமே இதற்குக் காரணங்களாகும். பிப்ரவரி 2022-ல் ரஷ்யா படையெடுப்பை தொடங்கியதில் இருந்து, நேட்டோ நாடுகள் தொடர்ந்து போரை விரிவுபடுத்தி வருகின்றன.

இந்தப்போர் ஏகாதிபத்திய நலன்களைக் கொண்டிருக்கிறது: மூலப்பொருட்கள் நிறைந்ததும், புவிசார் மூலோபாய முக்கியத்துவம் வாய்ந்ததுமான உக்ரேனைக் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வருவது; ரஷ்யாவை பலவீனப்படுத்தி, இறுதியில் அதனைத் துண்டு துண்டாக சிதறடிப்பது; யூரேசிய நிலப்பரப்பின் மூலப்பொருட்கள் மற்றும் சந்தைகளை அணுகுவது; மற்றும் உலகைப் பெரிய ஏகாதிபத்திய சக்திகளுக்கு இடையே மறுபங்கீடு செய்வதுமே இதன் நோக்கங்களாகும்.

ஜேர்மனியைப் பொறுத்தவரை, உக்ரேன் ஒரு தனித்துவமான வரலாற்று முக்கியத்துவத்தைக் கொண்டுள்ளது. முதலாவது உலகப் போரிலேயே, உக்ரேன் மீதான கட்டுப்பாடு ஜேர்மனிய ஏகாதிபத்தியத்தின் போர் நோக்கங்களில் ஒன்றாக இருந்தது. இரண்டாவது உலகப் போரில், சோவியத் ஒன்றியத்திற்கு எதிரான அழித்தொழிப்புப் போரில் ஜேர்மானியப் படை உக்ரேனை ஆக்கிரமித்தது. இந்தப் போர் 27 மில்லியனுக்கும் (2.7 கோடி) அதிகமான சோவியத் குடிமக்களின் உயிர்களைப் பலிவாங்கியது. ஆபரேஷன் பார்பரோசா (Operation Barbarossa) தொடங்கப்பட்டு கிட்டத்தட்ட 85 ஆண்டுகளுக்குப் பிறகு, ஜேர்மனிய ஆளும் வர்க்கம் மீண்டும் ஒருமுறை கிழக்கு ஐரோப்பா நோக்கித் தன் கரங்களை நீட்டுகிறது.

ஐரோப்பிய வல்லரசுகள் உக்ரேனிய மக்களைத் தங்களது சொந்த ஏகாதிபத்திய நலன்களுக்காக பீரங்கித் தீவனமாக நடத்துகின்றன. அதே நேரத்தில், வரவிருக்கும் ஆண்டுகளில், ஆண்டுக்கு 200 பில்லியன் யூரோக்களுக்கும் அதிகமாக வெடித்துப் பெருகவிருக்கும் ஜேர்மனிய இராணுவ பட்ஜெட் உட்பட இந்த பிரம்மாண்டமான இராணுவச் செலவினங்கள் அனைத்தும், தொழிலாள வர்க்கத்தின் மீதான கொடூரமான தாக்குதல்களின் மூலமாகவே ஈடுகட்டப்படும்: இவற்றுக்கு. சமூக நலக் குறைப்புகள், ஓய்வூதியக் குறைப்புகள், ஊதியக் குறைப்புகள், வேலைநீக்கங்கள், பொதுச் சேவைகளை அழித்தல் மற்றும் பள்ளிகள், பல்கலைக்கழகங்கள் மற்றும் பணியிடங்களை இராணுவமயமாக்குதல் ஆகியவற்றின் மூலமே நிதியளிக்கப்படும்.

போர்ப் பைத்தியக்காரத்தனத்திற்கு எதிரான போராட்டத்திற்கு, புட்டின் ஆட்சியின் பிற்போக்கான கொள்கைகளை நிராகரிப்பதும் அவசியமாகும். உக்ரேன் மீதான ரஷ்யப் படையெடுப்பானது, பல தசாப்த காலமாக நேட்டோவினால் ரஷ்யா முற்றுகையிடப்பட்டதற்கு எதிரான ஒரு முற்போக்கான அல்லது ஏகாதிபத்திய-எதிர்ப்புப் பதில் நடவடிக்கை அல்ல. அது, சோவியத் ஒன்றியத்தின் ஸ்டாலினிச அழிவிலிருந்து மற்றும் முதலாளித்துவ மீட்சியிலிருந்து உருவான ஒரு முதலாளித்துவ தன்னலக்குழு ஆட்சியின் விரக்தியடைந்த மற்றும் பிற்போக்குத்தனமான எதிர்வினையாகும். புட்டினின் கொள்கை முற்றிலும் தோல்வியைத் தழுவியுள்ளது. ஏகாதிபத்தியத்துடன் ஒரு சமரசத்தை ஏற்படுத்திக் கொள்வதன் மூலம், உலக முதலாளித்துவ ஒழுங்கிற்குள் ரஷ்ய தன்னலக்குழுவிற்கு ஒரு அங்கீகரிக்கப்பட்ட இடத்தைப் பெற்றுத் தரும் முயற்சியாகவே அவரது ஒட்டுமொத்த மூலோபாயமும் அமைந்துள்ளது.

நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழு (ICFI), போர் தொடங்கியதில் இருந்தே அதற்கு எதிராக உக்ரேன் மற்றும் ரஷ்யாவின் தொழிலாளர்களை ஐக்கியப்படுத்த முயன்று வருகிறது. போர் தொடங்கிய உடனேயே வெளியிட்ட அதன் முதல் அறிக்கையில், ICFI “உக்ரேன் மீதான ரஷ்யாவின் இராணுவத் தலையீட்டை” திட்டவட்டமாகக் கண்டித்ததுடன், “அமெரிக்கா மற்றும் நேட்டோ நாடுகளின் தூண்டுதல்கள் மற்றும் அச்சுறுத்தல்கள் இருந்தபோதிலும், உக்ரேன் மீதான ரஷ்யாவின் படையெடுப்பை சோசலிஸ்டுகளும் வர்க்க நனவுள்ள தொழிலாளர்களும் எதிர்க்க வேண்டும்” என்றும் குறிப்பிட்டது. அந்த அறிக்கை பின்வருமாறு பிரகடனப்படுத்தியது:

1991-ல் சோவியத் ஒன்றியம் கலைக்கப்பட்டதன் மூலம் கட்டவிழ்த்து விடப்பட்ட பேரழிவை, விளாடிமிர் புட்டினால் பிரதிநிதித்துவப்படுத்தப்படும் முதலாளித்துவ ஆளும் வர்க்கத்தின் நலன்களுக்குச் சேவை செய்யும் முற்றிலும் பிற்போக்குத்தனமான கருத்தியலான ரஷ்ய தேசியவாதத்தின் அடிப்படையில் தடுத்து நிறுத்திவிட முடியாது... புட்டின் ஆட்சியால் என்னதான் நியாயங்கள் கூறப்பட்ட போதிலும், உக்ரேன் மீதான படையெடுப்பு ரஷ்ய மற்றும் உக்ரேனிய தொழிலாள வர்க்கத்தைப் பிரிப்பதற்கும், மேலும் அமெரிக்க மற்றும் ஐரோப்பிய ஏகாதிபத்தியத்தின் நலன்களுக்குச் சேவை செய்வதற்கும் மட்டுமே பயன்படும்.

இந்தப் பகுப்பாய்வு முற்றிலும் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. அக்டோபர் புரட்சி மற்றும் லெனின் மீதான கடுமையான தாக்குதலுடன் புட்டின் இந்தப் போரைத் தொடங்கினார். ஆக்கிரமிப்பிற்கு முன்பு அவர் ஆற்றிய உரையில், உக்ரேனின் தேசிய சுயநிர்ணய உரிமையை அங்கீகரித்ததற்காகவும், சமத்துவமான குடியரசுகளின் ஒரு தன்னார்வ யூனியனாக சோவியத் ஒன்றியத்தை நிறுவியதற்காகவும் போல்ஷிவிக்குகளைத் தாக்கினார். இதன் மூலம், தனது ஆட்சி 1917-ன் புரட்சிகர மற்றும் சர்வதேச மரபுகளை முற்றிலும் நிராகரிக்கிறது என்பதையும், ஜார் மன்னராட்சியின் மகா ரஷ்ய பேரினவாதத்தையே கையில் எடுக்கிறது என்பதையும் அவர் தெளிவுபடுத்தினார்.

இந்தக் கொள்கையின் பேரழிவு தரும் விளைவுகளை உக்ரேன் மற்றும் ரஷ்யாவில் உள்ள தொழிலாளர்கள் அனுபவித்து வருகின்றனர். போரில் இலட்சக்கணக்கான மக்கள் கொல்லப்பட்டுள்ளனர் அல்லது காயமடைந்துள்ளனர், ஒட்டுமொத்த நகரங்களும் பிராந்தியங்களும் அழிக்கப்பட்டுள்ளன, இலட்சக்கணக்கான மக்கள் இடம்பெயர்ந்துள்ளனர். உக்ரேனிய தொழிலாள வர்க்கம், ஏகாதிபத்திய போர் நோக்கங்களுக்காக ஜெலென்ஸ்கி ஆட்சியினாலும் அதன் நேட்டோ ஆதரவாளர்களாலும் பீரங்கித் தீனியாகப் பயன்படுத்தப்பட்டு வருகிறது. ரஷ்ய தொழிலாள வர்க்கமோ புட்டின் ஆட்சியினால் ஒடுக்கப்பட்டு, வலுக்கட்டாயமாக இராணுவத்தில் சேர்க்கப்பட்டு, அதன் உண்மையான சமூக மற்றும் ஜனநாயக நலன்களுக்கே துரோகம் இழைக்கும் ஒரு போருக்குள் அனுப்பப்பட்டு வருகிறது.

சரியாக இதே காரணத்திற்காகவே, இந்த இரண்டு போர் முகாம்களில் உள்ள எதற்கும் வழங்கப்படும் எந்தவொரு ஆதரவும் பிற்போக்குத்தனமானது ஆகும். நேட்டோ நாடுகள் ரஷ்யாவை இராணுவ ரீதியாக கீழ்ப்படுத்துவதையும், யூரேசிய நிலப்பரப்பை மறுபங்கீடு செய்வதையும் நோக்கமாகக் கொண்டுள்ளன. புட்டினின் ஆட்சி ஏகாதிபத்தியத்திற்கு எதிராகத் தொழிலாள வர்க்கத்தைப் பாதுகாக்கவில்லை, மாறாக அக்டோபர் புரட்சியின் சாதனைகளை அழித்ததன் மூலம் தங்களின் செல்வத்தையும் அதிகாரத்தையும் பெற்றுக்கொண்ட ரஷ்ய தன்னலக் குழுவின் நலன்களையே பாதுகாக்கிறது.

ஜேர்மனி, ஐரோப்பா, ரஷ்யா, உக்ரேன் மற்றும் சர்வதேச அளவில் உள்ள தொழிலாளர்களும் இளைஞர்களும் இதிலிருந்து அவசியமான முடிவை எடுக்க வேண்டும்: போருக்கு எதிரான போராட்டத்திற்கு, போருக்கான அடிப்படைக் காரணமான முதலாளித்துவ இலாப முறைக்கு எதிராக வழிநடத்தப்படும் தொழிலாள வர்க்கத்தின் ஒரு சர்வதேச சோசலிசப் போர்-எதிர்ப்பு இயக்கம் கட்டியெழுப்பப்படுவது அவசியமாகும்.

உக்ரேன் மற்றும் ரஷ்யாவில் உள்ள தொழிலாளர்களுக்கு, எதிரெதிர் போட்டி தன்னலக் குழுக்கள் மற்றும் ஏகாதிபத்திய சக்திகளின் நலன்களுக்காக ஒருவரையொருவர் கொன்று குவிப்பதில் எந்தவொரு ஆர்வமும் இல்லை. ஜேர்மனி, பிரான்ஸ், பிரிட்டன், அமெரிக்கா மற்றும் ஐரோப்பா முழுவதிலும் உள்ள தொழிலாளர்களுக்கு தங்களின் ஆளும் வர்க்கங்களின் வல்லரசுத் திட்டங்களுக்காகத் தங்களது ஊதியங்கள், ஓய்வூதியங்கள், பள்ளிகள், மருத்துவமனைகள் மற்றும் இறுதியில் தங்களின் உயிர்களையே தியாகம் செய்வதில் எந்தவொரு ஆர்வமும் கிடையாது.

இப்போருக்கு எதிராக முன்வைக்கப்பட வேண்டிய முழக்கம், ஏதேனும் ஒரு தேசிய- அரசைப் பாதுகாப்பது அல்ல, மாறாக சர்வதேச சோசலிசமாகும்: ரஷ்ய மற்றும் உக்ரேனிய தொழிலாளர்களின் ஐக்கியம் ஓங்குக! நேட்டோ ஏகாதிபத்தியத்திற்கும் புட்டின் ஆட்சிக்கும் எதிராக அணிதிரள்வோம்! தொழிலாள வர்க்கத்தின் சர்வதேச சோசலிசப் போர்-எதிர்ப்பு இயக்கத்தைக் கட்டியெழுப்புவோம்!

Loading