முன்னோக்கு

ஐரோப்பாவில் வரலாறு காணாத அளவில் வெப்ப அலை: காலநிலை பேரழிவா அல்லது உலக சோசலிசமா

இந்த மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கு காணலாம்.

பாரிஸில் கடும் வெப்ப அலையின் போது, ​​ஈபிள் கோபுரத்திற்கு அருகிலுள்ள ரோகாடெரோ நீரூற்றில் ஒருவர் உடலைக் குளிர்வித்துக்கொள்கிறார். ஜூன் 24, 2026 [AP Photo/Christophe Ena]

ஐரோப்பாவில் இதுவரை பதிவானவற்றிலேயே மிக மோசமான வெப்ப அலை கண்டம் முழுவதும் பரவி வருகிறது. வெப்பநிலையானது அதன் பருவகால சராசரியை விட 18 டிகிரி செல்சியஸ் (32.4 டிகிரி ஃபாரன்ஹீட்) வரை அதிகமாக உயர்ந்து, அடுத்தடுத்த நாடுகளின் முந்தைய சாதனைகளைத் தகர்த்து எரித்துக்கொண்டிருக்கிறது.

பெரும் பணக்காரர்கள் குளிரூட்டப்பட்ட வீடுகள், தனிப்பட்ட ஓய்வறைகள், சொகுசு வாகனங்கள், விமானங்கள் மற்றும் அலுவலகங்களில் உல்லாசமாகச் சுற்றித் திரிய, கோடிக்கணக்கான தொழிலாளர்கள் 40 டிகிரி செல்சியஸ் (104 டிகிரி ஃபாரன்ஹீட்) வெப்பத்தில் கடுமையாக உழைக்க நிர்பந்திக்கப்படுகின்றனர். பெரும் பணக்காரர்களின் வங்கிக் கணக்கு இருப்புகள் உயர்ந்துகொண்டே செல்லும் அதே வேளையில், உலகளாவிய வெப்பநிலையும் கடுமையான வெப்பத்தால் ஏற்படும் மரணங்களின் எண்ணிக்கையும் தடுத்து நிறுத்த முடியாதபடி ஒன்றாக இணைந்து மேல்நோக்கி உயர்ந்து வருகின்றன.

இந்த வெப்ப அலையால், குறிப்பாக முதியவர்கள் மற்றும் மிகவும் இளம் வயதுடைய குழந்தைகள் மத்தியில், ஏற்கனவே 1,300-க்கும் மேற்பட்ட கூடுதல் மரணங்கள் பதிவாகியுள்ளன. 2022 மற்றும் 2024 ஆம் ஆண்டுகளில் ஏற்பட்ட முந்தைய வெப்ப அலைகளின் அனுபவத்தின் அடிப்படையில் பார்க்கும்போது, இறுதி உயிரிழப்புகளின் எண்ணிக்கை பல்லாயிரக்கணக்கில், அல்லது அதற்கும் அதிகமாக இருக்கும்.

இந்தப் பெருமளவிலான உயிரிழப்புச் சம்பவங்கள், முதலாளித்துவத்தால் உந்தப்பட்ட காலநிலை மாற்றம் மற்றும் அரசுகளின் குற்றகரமான அலட்சியம் ஆகியவற்றின் விளைவாக ஏற்பட்டதாகும். உலக வெப்பமயமாதல் குறித்து எச்சரிக்கைகள் விடுக்கப்பட்டு, பெயரளவிலான இலக்குகள் நிர்ணயிக்கப்பட்டு பல தசாப்தங்கள் கடந்த பின்னரும், கார்பன் உமிழ்வு தொடர்ந்து கொண்டிருக்கிறது; அதன் விளைவுகளை எதிர்கொள்ள சமூகத்தைத் தயார்படுத்துவதற்கு எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

உலக வானிலை பண்புக்கூறு விஞ்ஞானிகளின் கூட்டமைப்பின்படி, கடந்த வாரத்தில் காணப்பட்ட ஜூன் மாத வெப்பநிலை, 50 ஆண்டுகளுக்கு முன்பு கிட்டத்தட்ட சாத்தியமற்றதாக இருந்திருக்கும். 2003-ஆம் ஆண்டில்கூட, பகல் நேர வெப்பநிலை உச்சங்கள் ஏற்படுவதற்கான வாய்ப்பு 10 மடங்கு குறைவாகவும், இரவு நேர உச்சங்கள் ஏற்படுவதற்கான வாய்ப்பு 100 மடங்கு குறைவாகவும் இருந்திருக்கும். உலகளவில், 1980-களிலிருந்து, கடுமையான வெப்ப நிகழ்வுகளின் விகிதம் ஏழு மடங்கு அதிகரித்துள்ளது.

சமூக உள்கட்டமைப்பு இந்த நெருக்கடியை எதிர்கொள்ளும் வகையில் முற்றிலும் தயார்படுத்தப்படாமல் விடப்பட்டுள்ளது. அணுமின் நிலையங்கள் உட்பட மின் உற்பத்தி அமைப்புகள் கண்டம் முழுவதும் செயல்பாட்டிலிருந்து நிறுத்தப்பட்டுள்ளன. போக்குவரத்தும் ஸ்தம்பித்துள்ளது. ஜேர்மனியில், ஒரு மோட்டார் நெடுஞ்சாலையின் பகுதி கடும் வெப்பத்தால் உண்மையிலேயே பிளந்துச் சிதறியுள்ளது. அனைத்து முக்கிய நகரங்களிலும் வீடுகளும் மருத்துவமனைகளும் தாங்க முடியாத அளவுக்கு வெப்பமடைந்து வருகின்றன. ஆயிரக்கணக்கான பள்ளிகள் மூடப்பட்டுள்ளன அல்லது அவற்றின் செயல்பாட்டு நேரம் குறைக்கப்பட்டுள்ளது.

விவசாயத் துறையில், பிரான்சில் கடும் வெப்பத்தால் 200,000-க்கும் மேற்பட்ட கோழிகள் உயிரிழந்துள்ளன; இது கால்நடைகள் மீது ஏற்படும் வெப்ப அழுத்தத்தின் ஒரு எடுத்துக்காட்டாகும். வறண்டுபோன மண்ணால் பயிர்களுக்கு ஏற்படும் பாதிப்பும், காட்டுத்தீ பரவும் அபாயம் அதிகரித்து வருவதும் இந்தப் பிரச்சினையை மேலும் மோசமாக்குகின்றன. இத்தாலியின் மிக நீளமான நதியான போ (Po) கிட்டத்தட்ட முற்றிலும் வறண்டுபோயுள்ளதால், கடல்நீர் 18 கிலோமீட்டர் (11 மைல்) வரை நாட்டுக்குள் முன்னேறியுள்ளது.

ஆற்றல் மற்றும் காலநிலை நுண்ணறிவு பிரிவின் கூற்றுப்படி, கடுமையான வானிலை நிகழ்வுகளால் பாதிக்கப்பட்ட இங்கிலாந்தில் விற்கப்படும் உணவுப் பொருட்களின் விலை, சராசரி மளிகைப் பொருட்களின் பணவீக்க விகிதத்தை விட இரண்டு மடங்குக்கு மேல் வேகமாக உயர்ந்து வருகிறது. கடந்த இரண்டு ஆண்டுகளில் ஏற்பட்ட உணவுப் பணவீக்கத்தில் 30 முதல் 50 சதவீதம் வரை இதுவே காரணமாக இருந்துள்ளது. 2024 ஆம் ஆண்டு காலநிலை தாக்க ஆராய்ச்சிக்கான போட்ஸ்டாம் நிறுவனத்தின் ஆய்வு, உலக வெப்பமயமாதல் தொடருமானால், 2035 ஆம் ஆண்டு வரை உணவுப் பணவீக்கம் மேலும் 30 முதல் 50 சதவீதம் அதிகரிக்கக்கூடும் என்று எச்சரித்துள்ளது.

காலநிலை மாற்றத்தால் உருவாகியுள்ள இந்தப் புதிய இயல்பு நிலையில், ஒவ்வொரு ஆண்டும் பல வாரங்கள் தாங்க முடியாத வெப்பத்தை மக்கள் எதிர்கொள்ள வேண்டியிருக்கும். தொழிலாளர்கள் வேலையிடத்திலேயே சுருண்டு விழும் அபாயமும், முதியவர்களோ அல்லது குழந்தைகளோ மூச்சுத்திணறி உயிரிழக்கும் ஆபத்தும் நேரிடும். பயணம் செய்வது, கல்வி கற்பது, மருத்துவ வசதிகளைப் பெறுவதற்கான திறன் பாதிக்கப்படும். குறைந்த மின் உற்பத்திக்கும், குளிர்விப்பதற்கான தேவையின் கடுமையான அதிகரிப்புக்கும் இடையில் சிக்கித் தவிக்கும் நிலையில், மின்சாரத்தின் செலவுகள் கடுமையாக உயரும். உணவுப் பொருட்களின் விலைகளும் தொடர்ந்து அதிகரித்துக்கொண்டே செல்லும்.

நிதி ரீதியாகக் கணக்கிட்டால், காப்பீட்டு நிறுவனமான அலையன்ஸ் (Allianz) மதிப்பீட்டின்படி, 2030 ஆம் ஆண்டுக்குள் இந்த வெப்ப அலைகளால் ஐரோப்பியக் கண்டத்திற்கு ஏற்படும் ஒட்டுமொத்த இழப்பு 600 பில்லியன் அமெரிக்க டாலர்களைத் தாண்டும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதில் பிரான்ஸ், ஸ்பெயின் மற்றும் இத்தாலி மிகக் கடுமையாகப் பாதிக்கப்படும். இதற்கு முந்தைய, ஒப்பீட்டளவில் குறைந்த தீவிரமுடைய வெப்ப அலைகள்கூட, ஐரோப்பியக் கண்டத்தின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் (GDP) 0.5 சதவீதம் வரை இழப்பை ஏற்படுத்தின. தெற்கு ஐரோப்பாவில் இந்த இழப்பு 1 சதவீதமாக உயர்ந்தது.

இந்த இழப்புகள் —வறட்சி, வெள்ளம் மற்றும் புயல்களால் ஏற்படும் இழப்புகளுடன் சேர்த்து— குறைந்த ஊதியங்கள், வேலையின்மை மற்றும் பொதுச் சேவைகளில் வெட்டுக்கள் மூலம் தொழிலாள வர்க்கத்தின் மீது சுமத்தப்படும்.

மனிதர்கள் வசிக்கும் அனைத்துக் கண்டங்களும் இதே அபாயங்களைச் சந்திக்கின்றன. அமெரிக்காவில் உருவாகி வரும் வெப்ப அலை, ஜூலை 4-ஆம் தேதிக்குள் அந்நாட்டின் முக்கிய நகரங்களில் 40 டிகிரி செல்சியஸ் (104 டிகிரி ஃபாரன்ஹீட்) வெப்பநிலையை ஏற்படுத்தும் அச்சுறுத்தலை உருவாக்கியுள்ளது. இதுவும் அதே அதிர்ச்சியூட்டும் தலைப்புச் செய்திகளுடனும், அதே அதிகாரப்பூர்வ அலட்சியத்துடனும் எதிர்கொள்ளப்படும்.

உலக மக்கள் தொகையில் வெறும் 15 சதவீதத்தைக் கொண்டுள்ள உலகின் இரண்டு பணக்கார கண்டங்களில் ஏற்பட்டுள்ள இந்த தாக்கம், ஆசியா மற்றும் ஆப்பிரிக்காவில் உள்ள உலகத் தொழிலாள வர்க்கத்தின் பெரும்பகுதியினர் எதிர்கொள்ளும் மிக மோசமான சமூகப் பேரழிவை அடிக்கோடிட்டுக் காட்ட உதவுகிறது.

உணவு உற்பத்திக்கு மோசமான விளைவுகளை ஏற்படுத்தும் நிலையில், ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தின் ஆய்வு ஒன்றின்படி, கடுமையான வெப்பத்தை அனுபவிக்கும் மக்களின் எண்ணிக்கை 2050 ஆம் ஆண்டுக்குள் 1.54 பில்லியனிலிருந்து 3.79 பில்லியனாக இரட்டிப்பாகும். காலநிலை தாக்க ஆய்வு மையம் வெளியிட்ட மற்றொரு ஆய்வின்படி, அதிகரித்து வரும் இந்த வெப்பநிலையால் ஏற்படும் மரணங்களில் 90 சதவீதம் வட ஆப்பிரிக்கா, மத்திய கிழக்கு மற்றும் தென்மேற்கு ஆசியாவின் ஏழை நாடுகளிலேயே நிகழும்.

இந்த அனைத்து நிகழ்வுகளிலும், தொழிலாளர் வர்க்கம் தனது உயிரையும் ஆரோக்கியத்தையும் பாதுகாப்பதற்கும், அத்தியாவசிய சமூகச் சேவைகளுக்கான அணுகலை உறுதிசெய்வதற்குமான போராட்டத்தை உடனடியாக எதிர்கொள்கிறது. கடுமையான வெப்பநிலையில் நடைபெறும் பணிகள், தொழிலாளர்களுக்கு வருமான இழப்பு ஏற்படாமல் உடனடியாக நிறுத்தப்பட வேண்டும். வீடுகள் மற்றும் பணியிடங்களை குளிர்ச்சியாக வைத்திருக்க அவற்றை மேம்படுத்துவதற்குத் தேவையான வளங்கள் ஒதுக்கப்பட வேண்டும். இதில் பள்ளிகள், மருத்துவமனைகள், முதியோர் இல்லங்கள் மற்றும் அத்தியாவசியத் தொழில்களுக்கு முன்னுரிமை வழங்கப்பட வேண்டும்.

வெள்ளம் மற்றும் புயல்களும் அவற்றுக்கே உரிய அவசர நடவடிக்கைகளைக் கோருகின்றன. இவை அனைத்திற்கும், தாங்க முடியாத சூழ்நிலைகளிலும் தொழிலாளர்களை வேலை செய்ய நிர்பந்திக்கும் தொழிற்சங்க அதிகாரத்துவங்களுக்கு எதிராக, சாமானிய தொழிலாளர்களின் ஒழுங்கமைக்கப்பட்ட முன்முயற்சி அவசியமாகும்.

ஆளும் வர்க்கம் இந்த முயற்சிகளைத் தன் முழு வலிமையுடன் எதிர்க்கும். ஒவ்வொரு நாட்டிலும், பெருநிறுவனங்கள் தங்களது போட்டியாளர்களுடன் போட்டியிடுவதற்காகத் தங்களது தொழிலாளர்களிடமிருந்து ஒவ்வொரு பைசாவையும் பிழிந்தெடுக்கின்றன. அரசாங்கங்கள் தங்களால் இயன்ற அனைத்து வளங்களையும் மறு ஆயுதமயமாக்கலுக்குத் திருப்பிவிடுகின்றன. 2050 ஆம் ஆண்டிற்குள் நிகர பூஜ்ஜிய உமிழ்வு இலக்கை அடைவதற்குத் தேவைப்படும் மிகக் குறைந்தபட்ச மதிப்பீட்டிற்கும், தற்போதைய காலநிலை நிதி நிலைகளுக்கும் இடையிலான இடைவெளிக்கு, கடந்த ஆண்டின் இராணுவச் செலவினம் தோராயமாக சமமாக இருந்தது. (அதாவது, கடந்த ஆண்டின் மனிதர்களைக் கொல்லும் ஆயுதங்களுக்குச் செலவிடப்பட்ட பணமானது, ஒட்டுமொத்த மனிதகுலத்தையும் காலநிலை மாற்றத்திலிருந்து காப்பாற்றத் தேவைப்படும் பற்றாக்குறைப் பணத்திற்குச் சமமாக இருக்கிறது.)

காலநிலை மாற்றத்தின் விளைவுகளுக்கு எதிரான தற்காப்புப் போராட்டத்திலிருந்து, அதன் மூலக் காரணமான இலாபத்திற்காக இயங்கும் தனியார் உற்பத்தி முறைக்கு எதிரான தாக்குதல்மிக்க போராட்டத்திற்கு மாறுவதற்குத் தேவையான போராட்டத்தின் பிரம்மாண்டமான, புரட்சிகரமான மற்றும் சோசலிசத் தன்மையை இந்த நிகழ்வு தெளிவாக எடுத்துக்காட்டுகிறது.

வெப்ப அலைகள் என்பது சமூகத்திற்கு முற்றிலும் இயற்கையான அச்சுறுத்தல் அல்ல. மனிதனின் உற்பத்தி ஆற்றலில் ஏற்பட்டுள்ள அபரிமிதமான வளர்ச்சி, புவியின் காலநிலையை மறைமுகமாக எமது கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்துள்ளது. ஆனால், இது ஒட்டுமொத்த மனிதகுலத்தின் பெரும்பான்மையினருக்குமான சுற்றுச்சூழல் நிலைமைகளை மென்மேலும் சீரழிப்பதற்கும் மோசமாக்குவதற்கும் இட்டுச் செல்கிறது. இது, ஒரு சிறிய எண்ணிக்கையிலுள்ள முதலாளித்துவ வர்க்கம் தங்களுடைய சொந்த அழிவுகரமான சமூக நலன்களுக்காக அந்த அதிகாரத்தைச் செலுத்துவதையே பிரதிபலிக்கிறது.

போர் மற்றும் உலகளாவிய பொருளாதார மந்தநிலையைப் போலவே, காலநிலைப் பேரழிவும் முதலாளித்துவத்தின் மீதான மார்க்சிய விமர்சனத்திற்கும் சமூகப் புரட்சியின் அவசியத்தை வலியுறுத்துவதற்கும் ஒரு உச்சகட்ட சான்றாகும். இந்தப் பிரச்சினையை, கார்ல் மார்க்சின் கூட்டுழைப்பாளரான பிரெட்ரிக் எங்கெல்ஸ், 140 ஆண்டுகளுக்கு முன்பு இயற்கையின் இயங்கியல் என்ற தனது நூலில் மிகச் சிறப்பாகப் பின்வருமாறு பகுப்பாய்வு செய்தார்:

இயற்கையின் மீதான எமது ஒட்டுமொத்த ஆளுமையும் எதில் அடங்கியிருக்கிறது என்றால், அதன் விதிகளை அறிந்துகொள்ளவும், அவற்றைச் சரியாகப் பயன்படுத்தவும் முடிந்திருப்பதுதான் பிற உயிரினங்களை விட எமக்கு இருக்கும் சாதகமான அம்சமாகும்... உண்மையில், ஒவ்வொரு நாள் கடக்கும்போதும் நாம் இந்த விதிகளை இன்னும் சரியாகப் புரிந்துகொள்ளக் கற்று வருகிறோம்; இயற்கையின் பாரம்பரியப் போக்கில் நாம் செய்யும் தலையீடுகளின் உடனடி மற்றும் தொலைதூர விளைவுகள் இரண்டையுமே நாம் அறிந்து வருகிறோம்...

இந்தக் கட்டுப்பாட்டைச் செயல்படுத்துவதற்கு வெறும் அறிவு மட்டும் போதாது. அதற்கு இதுவரை இருந்து வரும் எமது உற்பத்தி முறையிலும், அதனோடு சேர்ந்து எமது ஒட்டுமொத்த சமகால சமூக ஒழுங்கமைப்பிலும் ஒரு முழுமையான புரட்சி தேவைப்படுகிறது.

ஏங்கெல்ஸ் விளக்குவது போல், “உடனடி இலாபத்திற்காக உற்பத்தியிலும் பரிவர்த்தனையிலும் ஈடுபட்டுள்ள” முதலாளிகள், “முதல், புலப்படும் வெற்றிக்கு” அப்பால் பார்க்கும் திறனற்றவர்களாகக் கட்டமைப்பு ரீதியாக இருக்கிறார்கள். அவர்களைப் பொறுத்தவரை, “விற்பனை செய்வதன் மூலம் பெறப்படும் இலாபமே ஒரே உந்துதலாகிறது.” மேலும் இந்த இலாபம் மிக பிரம்மாண்டமானது: 2022-ல் அமெரிக்காவில் மட்டும் பங்குச் சந்தையில் பட்டியலிடப்பட்ட எண்ணெய் மற்றும் எரிவாயு நிறுவனங்களின் நிகர வருமானம் $916 பில்லியன் டாலர்களாக இருந்தது. இதில் 84 சதவீதம், மக்கள்தொகையில் மிகவும் செல்வந்தர்களான பத்தில் ஒரு பங்கினராலும், பாதி வருமானம் மிகவும் செல்வந்தர்களான 1 சதவீதத்தினராலும் கைப்பற்றப்பட்டது.

பசுமை மற்றும் சுற்றுச்சூழல் இயக்கங்கள் செய்வதைப் போல, இந்த தன்னலக்குழு அரசுகளிடம் ஒழுங்குபடுத்துமாறு கோரிக்கைகளை விடுப்பதன் மூலமாகவோ அல்லது நேரடியாக நிறுவனங்களின் நிர்வாகக் குழுக்களிடம் வேண்டுகோள் விடுப்பதன் மூலமாகவோ காலநிலை நெருக்கடியைத் தீர்க்க முயற்சிப்பது, பசியால் வாடும் ஓநாய்களின் கூட்டத்திடம் தாவர உணவுக் கொள்கையைப் பற்றி விவாதிப்பதற்கு ஒப்பானதாகும்.

புதைபடிவ எரிபொருள் அடிப்படையிலான முதலாளித்துவத்தின் இலாபங்கள், பில்லியனர்களை காலநிலை மாற்றத்தின் விளைவுகளிலிருந்து பாதுகாப்பதோடு மட்டுமல்லாமல், அதனால் பாதிக்கப்படுவோரின் ஜனநாயக உணர்வுகளுக்கு அவர்கள் முழுமையாக அலட்சியமாக இருக்கவும் செய்கின்றன. நிகர பூஜ்ஜிய உமிழ்வு கொண்ட ஒரு சமூகத்தை நோக்கிய மாற்றத்தில், ஆளும் வர்க்கமானது கைவிடப்படும் புதைபடிவ எரிபொருள் சொத்துக்கள் மற்றும் முதலீடுகளில் $1.4 முதல் $2.4 டிரில்லியன் டாலர்கள் வரை இழக்க நேரிடும். ஐரோப்பிய அரசாங்கங்கள் ஒவ்வொன்றிற்கும் செலவிட்ட நேரத்தையும் வளங்களையும் ஒப்பிட்டுப் பார்த்தால், அத்தகையதொரு காலநிலை மாற்றத்தை விட, அணுஆயுதம் ஏந்திய ரஷ்யாவுடனான போரைப்பற்றி சிந்திக்கவே அவர்கள் அதிகம் தயாராக இருக்கிறார்கள் என்பதை அது உறுதிப்படுத்துகிறது.

பூமியில் மனித உயிர்களைப் பாதுகாப்பது என்பது, ஒரு உலக சோசலிசப் புரட்சியின் மூலம் தன்னலக்குழுவின் சொத்துக்களை கையகப்படுத்தி, முதலாளித்துவ அரசாங்கங்களை வீழ்த்தி, இந்தத் தீவைப்பவர்களிடமிருந்து அதிகாரத்தைக் கைப்பற்றுவதாகும்.

சர்வதேசத் தொழிலாள வர்க்கம் —உலக மக்கள்தொகையில் பெரும்பான்மையினராகவும், உலகளாவிய உற்பத்தியால் புறநிலையாக ஒன்றுபட்டவர்களாகவும் இருப்பவர்கள்— மட்டுமே, முதலாளித்துவ வர்க்கத்தின் இலாப வேட்கைக்கும், காலநிலை பேரழிவு மற்றும் அணு ஆயுதப் போர் மூலம் மனிதகுலத்தையும், இந்த பூகோளத்தையும் அழிக்கும் அச்சுறுத்தலை ஏற்படுத்தும் உலகச் சந்தைகள் மற்றும் வளங்களின் மீதான கட்டுப்பாட்டிற்கான கட்டுப்பாடற்ற போட்டிக்கும் ஒரு முடிவைக் கொண்டுவரக்கூடிய ஒரே சக்தியாகும்.

தொழிலாள வர்க்கத்தால் நிறுவப்படும் ஒரு சோசலிச சமூகத்தால் மட்டுமே, மார்க்ஸ் தனது மூலதனம் நூலில் உத்தேசித்துள்ள பின்வரும் “உன்னதமான” எதிர்காலத்தை உருவாக்குவதற்குத் தேவையான உலகளாவிய அளவிலான உற்பத்தியின் ஜனநாயகத் திட்டமிடலைத் தொடங்க முடியும்:

ஒற்றைத் தனிநபர்கள் இந்த பூமியைத் தனியுரிமையாகக் கொண்டிருப்பது என்பது, ஒரு மனிதன் இன்னொரு மனிதனைத் தனிப்பட்ட முறையில் அடிமையாக வைத்திருப்பதைப் போன்றே முற்றிலும் அபத்தமான ஒன்றாகத் தோன்றும். ஒரு முழு சமூகமோ, ஒரு தேசமோ அல்லது ஒரே நேரத்தில் இருக்கும் அனைத்து சமூகங்களும் சேர்ந்தோ கூட பூமியின் உரிமையாளர்கள் அல்லர். அவர்கள் அதன் தற்காலிகப் பயன்பாட்டாளர்கள் மட்டுமே... மேலும், அவர்கள் ஒரு நல்ல குடும்பத் தலைவர்களைப் போல அதை மேம்படுத்திய நிலையில் அடுத்தடுத்த தலைமுறைகளுக்குக் கையளிக்க வேண்டும்.

Loading