இந்த மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கு காணலாம்.
வாஷிங்டனின் ஸ்போக்கேன் நகரத்தில் தொடர்ச்சியாகப் பரவிய காட்டுத்தீ உழைக்கும் வர்க்கக் குடியிருப்புகளைச் சூறையாடி, நகரின் மக்கள்தொகையில் நான்கில் ஒரு பங்கினரை இடம்பெயரக் கட்டாயப்படுத்திய நிலையில், 65,000-க்கும் மேற்பட்ட மக்கள் அங்கிருந்து வெளியேற்றப்பட்டுள்ளனர். முதலாளித்துவத்தால் தூண்டப்பட்ட பருவநிலை மாற்றம் தடையின்றித் தொடர்வதால், இரண்டு வாரங்களில் இரண்டாவது முறையாக ஒரு முக்கிய நகரம் தீக்கிரையாகும் அபாயத்தில் உள்ளது.
உலகளவில் காலநிலை நெருக்கடி நாளுக்கு நாள் மோசமடைந்து வருகிறது. இந்த ஆண்டின் தொடக்கத்தில் கனடாவிலும் வடக்கு மின்னசோட்டாவிலும் பற்றியெரிந்த காட்டுத்தீ, தற்போது ஆப்பிரிக்காவிலும் மத்திய கிழக்கிலும் பரவிவரும் தீ விபத்துகள், மற்றும் பிரான்சின் போர்டோ நகரையே சாம்பலாக்கும் அச்சுறுத்தலை ஏற்படுத்திய தெற்கு ஐரோப்பிய காட்டுத்தீ ஆகியவை நவீன தீவிர வானிலை நிகழ்வுகளுக்கான பிற சான்றுகளாகும். இவை அனைத்துமே முதலாளித்துவ உற்பத்தியின் அராஜகத் தன்மையினால் விளைந்தவையாகும்; எல்லாவற்றிற்கும் மேலாக, புதைபடிவ எரிபொருள் (fossil fuel) நிறுவனங்கள் முன்னெப்போதும் இல்லாத அளவில் புவியின் வளிமண்டலத்தில் பசுமைக்குடில் வாயுக்களை (Greenhouse Gases) வெளியேற்றுவதன் நேரடி விளைவாகவே இந்நிலை உருவாகியுள்ளது.
மேலும், புவி வெப்பமயமாதல் மோசமடைந்து வருகிறது. போட்ஸ்டாம் காலநிலை தாக்க ஆராய்ச்சி நிறுவனம் (Potsdam Institute for Climate Impact Research) நடத்திய சமீபத்திய ஆய்வின்படி, 1970 முதல் 2015 வரை ஒரு தசாப்தத்திற்கு 0.2°C-க்கும் குறைவாகவே அதிகரித்த புவியின் சராசரி மேற்பரப்பு வெப்பநிலை, கடந்த தசாப்தத்தில் தோராயமாக 0.35°C ஆக உயர்ந்துள்ளது. எல் நினோ (El Niño), எரிமலை வெடிப்புகள் மற்றும் சூரிய சுழற்சிகளின் தாக்கங்களை நீக்கிய பிறகே செய்யப்பட்டுள்ள இந்தக் கணக்கீடு, ஐந்து பிரதான உலகளாவிய வெப்பநிலை தரவுத்தொகுப்புகளில் 98 சதவீதத்திற்கும் அதிகமான புள்ளியியல் நிச்சயமாக உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
ஸ்போக்கேன் தீக் கூட்டமைப்பு (Spokane Complex Fire) என்பது புதிதாக உருவெடுத்து வரும் ஆபத்துகளில் ஒன்றாகும். இந்தத் தீக் கூட்டமைப்பானது, ஓல்ட் டிரெயில்ஸ் (Old Trails), ஆட்டம் லேன் (Autumn Lane) மற்றும் ஃபேர்வியூ (Fairview) ஆகிய பகுதிகளில் ஆகஸ்ட் 1 பிற்பகலில் பற்றியெரிந்த காட்டுத்தீக்களை உள்ளடக்கியதாகும்; இவை மணிக்கு 35 முதல் 45 மைல் (56 முதல் 72 கிலோமீட்டர்) வேகத்தில் வீசிய காற்றினால் நகரம் முழுவதும் வேகமாகப் பரவின. ஆகஸ்ட் 3 நிலவரப்படி, இந்தக் காட்டுத்தீ தோராயமாக 8,026 ஏக்கர் பரப்பளவை எரித்துச் சாம்பலாக்கியுள்ளதுடன், சற்றும் கட்டுப்படுத்தப்படாத நிலையில் (0 சதவீதம் கட்டுப்பாடு) தோராயமாக 700 கட்டிடங்களையும் அழித்துள்ளது. சம்பவ தளக் கட்டுப்பாட்டு அதிகாரி டாம் கிளெமோ ஸ்போக்ஸ்மேன்-ரிவ்யூ (Spokesman-Review) நாளிதழிடம் கூறுகையில், “வாஷிங்டன் வரலாற்றிலேயே மிகப்பெரிய, மிகக் கடுமையான அழிவை ஏற்படுத்திய தீ விபத்து நேற்று பிற்பகலில் தான் நிகழ்ந்துள்ளது” என்று தெரிவித்தார்.
மிகக் கடுமையாகப் பாதிக்கப்பட்ட இந்தியன் டிரெயில் (Indian Trail), பால்போ (Balbo) மற்றும் வடமேற்கு, வடக்கு ஸ்போக்கேன் பகுதிகள் பெரும்பாலும் தொழிலாள வர்க்கக் குடியிருப்புகளாகும். தோராயமாக 5,000 வீடுகளுக்கு வெளியேற்ற உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. மேன்–கிராண்ட்ஸ்டாஃப் VA மருத்துவ மையத்தில் இருந்த நோயாளிகளும் ஊழியர்களும் வெளியேற்றப்பட்ட நிலையில், அம்மையமும் மூடப்பட்டது. 400-க்கும் மேற்பட்டோர் ஸ்போக்கேன் மாநாட்டு மையத்தில் தஞ்சமடைந்தனர். தீயணைப்புக் குழுவினர் தீயினால் பாதிக்கப்பட்ட பகுதிகளை அடையும் போது, அழிக்கப்பட்ட கட்டிடங்களின் எண்ணிக்கை மேலும் உயரும் என்று அதிகாரிகள் எச்சரிக்கின்றனர்.
தொழிலாளர்கள் மேன்மேலும் ஆபத்தான காற்றுத் தரத்தையும் எதிர்நோக்கியுள்ளனர். ஸ்போக்கேனின் காற்றுத் தரக் குறியீடு (AQI) இன்று 218 ஐ எட்டியுள்ளது; இது “ஆரோக்கியமற்றது” எனக் குறிக்கப்படுகிறது, மேலும் நாளை இது 300 அல்லது அதற்கு மேல் உயர்ந்து “ஆபத்தானது” என்ற நிலையை எட்டும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிலைகளில், அன்றாட வழக்கமான வேலைகளுக்காக வெளியே செல்வது கூட தொழிலாளர்களின் சுவாசத்தில் சிரமத்தை ஏற்படுத்துவதுடன் ஆஸ்துமா தாக்குதல்கள், நுரையீரல் நோய், இருதய நோய், பக்கவாதம் போன்ற பல நோய்களின் ஆபத்தையும் உயர்த்துகிறது. இந்த அடர்ந்த புகை வட அமெரிக்காவின் பெரும்பாலான பகுதிகளில் பரவி—தெற்கே நெவாடா வரை, கிழக்கே மின்னியாபோலிஸ் வரை மற்றும் பிரிட்டிஷ் கொலம்பியா, ஆல்பர்ட்டா வரை சென்றுடைந்துள்ளது. காட்டுத்தீயை எதிர்த்துப் போராட ஆஸ்திரேலியாவிலிருந்தும் நாடு முழுவதிலிருந்தும் ஆயிரக்கணக்கான தீயணைப்பு வீரர்கள் கிழக்கு வாஷிங்டனுக்கு வந்துள்ளனர்.
அதேவேளையில், ஜனநாயகக் கட்சியைச் சேர்ந்த வாஷிங்டன் ஆளுநர் பாப் ஃபெர்குசன், “கூட்டாட்சி உதவியைப்” பெறுவதற்காக அதிபர் டொனால்ட் ட்ரம்புடன் தான் பேசிய உரையாடலை அறிவிக்கும் வகையில் சமூக ஊடகங்களில் ஒரு அடிபணியும் அறிக்கையை வெளியிட்டார்; அதில், ட்ரம்ப் “வாஷிங்டன் மக்கள் மீது தனது அக்கறையை வெளிப்படுத்தினார்” என்றும் உரிமை கோரினார். ஃபெர்குசன் தனது கால்பிடிக்கும் போக்கை முடிக்கும் விதமாக, “இந்த உரையாடலை மேற்கொள்ள அதிபர் நேரம் ஒதுக்கியதை நான் ஆழமாகப் பாராட்டுகிறேன்” என்றும் எழுதினார்.
ட்ரம்ப் உண்மையில் ஒரு தசாப்தத்தின் பெரும்பகுதியை, பருவநிலை மாற்றத்தை எதிர்த்துப் போராடுவதற்கான மிகக் குறைந்தபட்ச முயற்சிகளைக் கூட ஒழித்துக்கட்டும் பிரச்சாரத்திலேயே கழித்துள்ளார். தனது முதல் ஆட்சிக் காலத்தில், அவர் 2015 பாரிஸ் உடன்படிக்கையிலிருந்து அமெரிக்காவை வெளியேற்றினார்; மேலும் நாடு முழுவதுமுள்ள நிலக்கரி மின் நிலையங்களை மீண்டும் உயிர்ப்பிப்பதன் தொடர்ச்சியான ஆதரவாளராகவும் இருந்து வருகிறார். பருவநிலை மாற்றம் குறித்த சுற்றுச்சூழல் பாதுகாப்பு முகமையின் ஆபத்து அறிவிப்பு ரத்து செய்யப்படுவதற்கும் அவர் தலைமை தாங்கினார்; இது வளிமண்டலத்தை மாசுபடுத்தவும், கிரகத்தின் சூழலியலை அழிக்கவும் பெருநிறுவனங்களுக்கு இருந்த கட்டுப்பாடுகளை மேலும் அகற்றுவதற்கு வழிவகுத்தது.
பருவநிலை மாற்றத்தை தீவிரமாக துரிதப்படுத்தும் நடவடிக்கைகளை ட்ரம்ப் எடுத்துள்ள அதேவேளையில், புவி வெப்பமயமாதலின் விளைவுகள் குறித்து எச்சரித்து வந்த விஞ்ஞானிகளையே அவர் பணியிலிருந்து நீக்கியுள்ளார். சாதனை அளவிலான வெப்பம், நீண்டகால வறட்சி மற்றும் காடுகளில் சேர்ந்துள்ள காய்ந்த மரக் கழிவுகள் ஆகியவை மேன்மேலும் பேரழிவை ஏற்படுத்தும் காட்டுத்தீகளை உருவாக்கும் என்ற எச்சரிக்கைகளும் இதில் அடங்கும்.
வாஷிங்டனில், கடந்த நான்கு ஆண்டுகளில் நான்காவது முறையாக அம்மாநிலம் வறட்சியால் பாதிக்கப்படுவதன் மூலம் இது வெளிப்பட்டுள்ளது. இதன் விளைவாக, தேசிய வானிலை சேவை சனிக்கிழமையன்று கிழக்கு வாஷிங்டனுக்கு தனது முதன்முதலான “குறிப்பாக ஆபத்தான சூழ்நிலை” கொண்ட சிவப்பு எச்சரிக்கையை விடுத்தது. 2026 ஆம் ஆண்டில் அம்மாநிலம் முழுவதும் 1,000-க்கும் மேற்பட்ட காட்டுத்தீ விபத்துகள் ஏற்பட்டு தோராயமாக 450,000 ஏக்கர் பரப்பளவை எரித்துச் சாம்பலாக்கியுள்ளன; இது 2021-க்குப் பிறகு நிகழ்ந்த மிக மோசமான பருவமாகும். ஆகஸ்ட் 3 நிலவரப்படி, 15 முதல் 17 பெரிய காட்டுத்தீக்கள் 250,000 முதல் 262,000 ஏக்கர் பரப்பளவில் பற்றியெரிந்து கொண்டிருந்தன. சின்லாஹெகின் காட்டுத்தீ (Sinlahekin Fire) மூன்று மடங்கு பெரியதாக விரிவடைந்து, ஒகானோகன் கவுண்டியின் (Okanogan County) ஏறத்தாழ பாதிப் பகுதிக்கான மின்சாரத்தைத் துண்டித்ததுடன், சற்றும் கட்டுப்படுத்தப்படாத நிலையிலேயே (0 சதவீதம் கட்டுப்பாடு) உள்ளது.
கொல்வில் பழங்குடியினர் பாதுகாக்கப்பட்ட பகுதியில் (Colville Reservation) ஏற்பட்ட கைசர் கேன்யன் காட்டுத்தீ (Kaiser Canyon Fire), 129,000 ஏக்கருக்கும் அதிகமான நிலப்பரப்பை எரித்து, வீடுகளையும் தோராயமாக 120 தொல்பொருள் இடங்களையும் ஒரு ஷேக்கர் தேவாலயத்தையும் (Shaker Church) அழித்துள்ளது; இவை அனைத்துமே கொல்வில் பழங்குடியினருக்கும் ஒட்டுமொத்த மனிதகுலத்திற்கும் ஏற்பட்ட மகத்தான கலாச்சார இழப்புகளாகும்.
தொழிலாள வர்க்கக் குடியிருப்புகளிலும் பழங்குடியினரிடமும் ஏற்பட்டுள்ள இந்த அழிவானது, காட்டுத்தீயை எதிர்த்துப் போராடுவதற்கும் பருவநிலை மாற்றத்திற்கு எதிராக நடவடிக்கை எடுப்பதற்குமான அடிப்படையை வழங்கக்கூடிய செல்வ வளத்திற்கு முற்றிலும் முரணாக உள்ளது. அமேசான், மைக்ரோசாப்ட், ஸ்டார்பக்ஸ் மற்றும் போயிங் ஆகிய பெருநிறுவனங்கள் வாஷிங்டனில் தலைமையகத்தைக் கொண்டுள்ளன அல்லது அங்குதான் தங்கள் அடித்தளத்தைக் கொண்டுள்ளன; மேலும் பில் கேட்ஸ், ஸ்டீவ் பால்மர் மற்றும் ஜெஃப் பெசோஸ் போன்ற தன்னலக்குழுக்கள் ஒவ்வொருவரும் $100 பில்லியனுக்கும் அதிகமான நிகர சொத்து மதிப்பைக் கொண்டுள்ளனர். இம்மாநிலத்தின் பில்லியனர்களின் ஒட்டுமொத்த சொத்து மதிப்பானது, கற்பனை செய்யக்கூடிய எந்தவொரு அவசரக்கால நடவடிக்கை, தீயணைப்பு உள்கட்டமைப்பு முதலீடு அல்லது பருவநிலைத் தகவமைப்புத் திட்டத்தின் செலவையும் விடப் மிகப்பெரியதாகும். ஆனால் ஸ்போக்கேனில் உள்ள தொழிலாளர்களோ மாநாட்டு மையத்தில் கயிற்றுக் கட்டில்களில் தூங்கிக் கொண்டு, தங்களின் வீடுகள் இன்னும் இருக்கிறதா இல்லையா என்பதை அறியக் காத்திருக்கிறார்கள்.
ஈரானியப் போருக்கும் வெளிநாடுகளில் மேலும் போர்களை நடத்துவதற்கும் ட்ரம்ப் கோரியுள்ள 1.5 டிரில்லியன் டாலர் இராணுவ வரவுசெலவுத் திட்டத்துடன் ஒப்பிடும்போது இது ஒன்றுமே இல்லை. அதுமட்டுமின்றி, ஒவ்வொரு பெரிய பொருளாதார அதிர்ச்சிக்குப் பிறகும் வங்கிகளுக்கும் முக்கிய பெருநிறுவனங்களுக்கும் பிணைப்புத் தொகையாக மேலும் டிரில்லியன் கணக்கில் நிதியுதவிகள் வாரியிறைக்கப்படுகின்றன.
தீயணைப்பு வளங்களை ஒழித்துக் கட்டுவதும், பருவநிலை மாற்றம் குறித்து நடவடிக்கை எடுக்காமல் இருப்பதும் முற்றிலும் இருகட்சிகளின் (ஜனநாயகக் கட்சி மற்றும் குடியரசுக் கட்சி) கொள்கையாகவே உள்ளது. வானிலையைத் தாங்கக்கூடிய உள்கட்டமைப்பை உருவாக்குவதற்குத் தேவையான நிதியை வழங்கத் தவறிய ஒபாமா நிர்வாகத்தின் கீழ் காட்டுத்தீ, சூறாவளி மற்றும் பிற தீவிர வானிலை நிகழ்வுகள் பரவலாகின; அதே நேரத்தில், பருவநிலை ஆராய்ச்சியைக் சீர்குலைக்கவும் தொழிலாளர்களுக்கான தேவையான பாதுகாப்புகளை அகற்றவும் ட்ரம்பின் முதல் ஆட்சிக் காலத்தில் வகுக்கப்பட்ட பிற்போக்குத்தனமான பாதையை மாற்றியமைக்க பைடன் எதுவும் செய்யவில்லை. சில வாரங்களுக்கு முன்பு டெட்ராய்ட்டும் சிகாகோவும் பாதிக்கப்பட்ட அதே வழியில், 2023 இல் பைடனின் ஆட்சியின் கீழ்தான் காட்டுத்தீப் புகை நியூயார்க் நகரத்தை திணறடித்தது.
இருப்பினும், மிக அடிப்படையானது முதலாளித்துவத்திலேயே பிணைந்துள்ள உள்ளார்ந்த முரண்பாடாகும். பருவநிலை மாற்றம் என்பது இயல்பாகவே ஒரு உலகளாவிய நிகழ்வாகும்; சந்தைகள், வளங்கள் மற்றும் வர்த்தகப் பாதைகளுக்காகப் போட்டி தேசிய அரசுகள் தங்களுக்குள் போட்டியிடும் வரை இதனைத் தீர்க்க முடியாது. கார்பன் கடன் உரிமைகள் வடிவிலான பருவநிலை மாற்றத்தைத் தணிப்பதற்கான மேலோட்டமான முயற்சிகள் கூட, ஒரு நிதிச் சொத்தாக மாறி, அதன் மூலம் இந்தத் தன்னலக்குழு தன்னைத்தானே செழுமைப்படுத்திக்கொள்ள மட்டுமே பயன்படுகின்றன.
ஒரே உண்மையான தீர்வு தொழிலாள வர்க்கத்திடமிருந்தே வர முடியும்; ஏனெனில், புவியில் உண்மையிலேயே சர்வதேசத் தன்மை கொண்ட ஒரே சமூக சக்தியும், பருவநிலை மாற்றத்தின் அடிப்படைக் காரணமான முதலாளித்துவத்தைத் தூக்கியெறிவதற்கு வரலாற்று ரீதியாகத் தகுதிபெற்ற ஒரே சக்தியும் தொழிலாள வர்க்கமே ஆகும். தனியார் லாபத்திற்கு முன்னுரிமை அளிக்கும் இந்தச் சமூக-பொருளாதார அமைப்பை ஒழித்து, அதற்குப் பதிலாக தொழிலாள வர்க்கத்தின் கூட்டு உழைப்பால் உருவாக்கப்படும் செல்வத்தை மனிதத் தேவைகளைப் பூர்த்தி செய்யப் பயன்படுத்தும் ஒரு அமைப்பைக் கொண்டு பிரதியீடு செய்யும் சர்வதேச வேலைத்திட்டம் மற்றும் முன்னோக்கின் ஒரு பகுதியாக இது இருக்க வேண்டும்.
பூர்ஷ்வா வர்க்கத்தின் பிரம்மாண்டமான செல்வமும், வங்கிகள் மற்றும் முக்கிய பெருநிறுவனங்களின் செல்வமும் சுவீகரிக்கப்பட்டு, காப்பீட்டு நிலையைப் பொருட்படுத்தாமல் வீடற்ற அல்லது உடைமைகளை இழந்த ஒவ்வொரு குடும்பத்திற்கும் முழு இழப்பீடு வழங்குவதற்கும்; இடம்பெயர்ந்தவர்களுக்குத் தஞ்சமளிக்க காலியாக உள்ள வீடுகளை அவசரகால அடிப்படையில் கையகப்படுத்துவதற்கும்; வெளியேற்றங்கள் காரணமாகப் பணியாற்ற முடியாத அனைத்துத் தொழிலாளர்களுக்கும் வருமானப் பாதுகாப்பு அளிப்பதற்கும்; மற்றும் செலவுக் கட்டுப்பாடுகள் எதுவுமின்றி கிடைக்கக்கூடிய அனைத்துத் தீயணைப்பு வளங்களையும் உடனடியாக அணிதிரட்டுவதற்கும் பயன்படுத்தப்பட வேண்டும். இன்று பற்றியெரியும் காட்டுத்தீ முதலாளித்துவத்தின் விளைபொருளாகும்; அதை நிரந்தரமாக அணைப்பதற்கு சோசலிசத்தால் மட்டுமே முடியும்.
