முன்னோக்கு

மாஸ்கோ மீதான பாரிய ட்ரோன் தாக்குதல், ரஷ்யாவுடனான அமெரிக்க-நேட்டோ போரின் புதிய கட்டத்தைக் குறிக்கிறது

இந்த மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கு காணலாம்.

உக்ரேனிய ட்ரோன் தாக்குதலுக்குப் பிறகு, 2026 ஜூன் 3 அன்று ரஷ்யாவின் செயின்ட் பீட்டர்ஸ்பேர்க்கிற்கு மேலே கரும்புகை மண்டலம் காணப்படுகிறது. [AP Photo/(File)]

சனிக்கிழமை இரவு உக்ரேன் மாஸ்கோ மீது தாக்குதல் நடத்தியது; இதுவரை இந்தப் போரில் ரஷ்யத் தலைநகர் மீது நடத்தப்பட்ட தாக்குதல்களில் இதுவே மிகப்பெரியது. நகரை நோக்கி வந்த 450 ட்ரோன்கள் சுட்டு வீழ்த்தப்பட்டதாக மாஸ்கோ மேயர் தெரிவித்தார். மாஸ்கோ பிராந்தியத்தில் மூன்று பேர் கொல்லப்பட்டனர்; நகரின் எரிபொருளில் வழக்கமாக 40 சதவீதத்தை வழங்கும் சுத்திகரிப்பு ஆலை தீப்பற்றி எரிந்தது.

இந்தத் தாக்குதல், ஒரு வாரத்துக்கு முன்பு போலந்திலிருந்து சுமார் 2 கிலோமீட்டர் (1.2 மைல்) தொலைவில் உள்ள மேற்கு உக்ரேனின் யாகோடின் ரயில் நிலையத்தில் பயணிகள் ரயில் மீது ரஷ்யா நடத்திய ட்ரோன் தாக்குதலைத் தொடர்ந்து நடந்தது. முன்னாள் பிரிட்டிஷ் பிரதமர் போரிஸ் ஜான்சனையும் பல ஐரோப்பிய அரசாங்கங்களின் பாதுகாப்பு ஆலோசகர்களையும் ஏற்றிச் சென்ற ரயில் அந்த நிலையத்தைக் கடந்து சென்ற சில நிமிடங்களுக்குப் பிறகே அந்தத் தாக்குதல் நிகழ்ந்தது.

இத்தாக்குதலில் உக்ரேனின் ஃபிளமிங்கோ குரூஸ் ஏவுகணையும், நாட்டில் தயாரிக்கப்பட்ட முதல் பாலிஸ்டிக் ஏவுகணையான பெலிக்கனும் இடம்பெற்றதாக உக்ரேன் ஜனாதிபதி வொலோடிமீர் ஜெலென்ஸ்கி ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தார். உக்ரேன் இதுவரை நம்பியிருந்த லியூட்டி ட்ரோன்களின் போர்க்குண்டு 50 முதல் 60 கிலோகிராம் மட்டுமே எடை கொண்டது; ஆனால் ஃபிளமிங்கோ 1,150 கிலோகிராம் போர்க்குண்டைக் கொண்டுள்ளது. மேலும், பிரெஞ்சு நிறுவனமான சஃப்ரான் வழங்கிய வழிகாட்டல் அமைப்பையும் பயன்படுத்துகிறது.

இடைவிடாத தீவிரப்படுத்துதலே கொள்கையாகக் கொண்டுள்ள நேட்டோ ஏகாதிபத்திய சக்திகளுக்கும் ரஷ்யாவுக்கும் இடையே இப்போது நடைமுறையில் ஒரு போர் நிலை நிலவுகிறது.

நேட்டோ சக்திகளால் நிதியளிக்கப்பட்டு, கூட்டாக உருவாக்கப்பட்டு, பெரும்பாலும் நேரடியாகவே வழங்கப்பட்ட ஆயுதங்களைக் கொண்டு உக்ரேன் ரஷ்ய நகரங்களைத் தாக்கி வருகிறது; அதே நேட்டோ சக்திகள் செயற்கைக்கோள் படங்களையும் இலக்கு நிர்ணய உளவுத் தகவல்களையும் வழங்கி வருகின்றன. ஜூன் மாதம் முதல் ஐரோப்பிய ஒன்றியம் உக்ரேனுக்கான ட்ரோன்கள் மற்றும் ஏவுகணைகளுக்காக 8.5 பில்லியன் யூரோவைச் ஒதுக்கியுள்ளது.

மாஸ்கோ மீதான தாக்குதல்களுக்கு நிதியளிப்பதும் ஆயுதமளிப்பதும் பொறுப்பற்ற தன்மையையும் தாண்டியவை. ரஷ்யாவின் பெரும் பதிலடி தொடரக்கூடும் என்பதை ஐரோப்பியத் தலைவர்கள் அறிவார்கள்; அவர்களது நடவடிக்கைகள் அத்தகைய பதிலடியைத் தூண்டும் நோக்கம் கொண்டவையே. உக்ரேனை ஆதரிக்கும் நாடுகள் மீது ட்ரோன் மற்றும் ஏவுகணைத் தாக்குதல்களை நடத்துவதற்கான ரஷ்யத் திட்டங்கள் குறித்த உளவுத் தகவல்கள் இப்போது “மிகவும் ஒத்திசைவானதாகவும், துரதிர்ஷ்டவசமாக, நம்பவைக்கும் வகையிலும்” உள்ளதாகப் போலந்து பிரதமர் டொனால்ட் டஸ்க் வியாழக்கிழமை தனது பாராளுமன்றத்தில் தெரிவித்தார். இரண்டு நாட்களுக்குப் பிறகு மாஸ்கோ மீதான தாக்குதல் நடந்தது.

ஆயினும், பேச்சுவார்த்தைகளுக்காகவோ, பேரபாயத்தின் விளிம்பிலிருந்து பின்வாங்குவதற்காகவோ ஐரோப்பிய நேட்டோ சக்திகளின் எந்தத் தலைவரும் அழைப்பு விடுக்கவில்லை. ரஷ்யா மீதான ஐரோப்பாவின் அழுத்தம் குறித்து ஐரோப்பிய ஆணையத் தலைவர் உர்சுலா வொன் டெர் லெயன் செப்டம்பர் 2 அன்று கூறியதாவது: “அதை நாங்கள் அதிகரிப்போம். மேலும் நாங்கள் நிறுத்த மாட்டோம்.”

போரைத் தீவிரப்படுத்துவதன் மூலம் ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டினின் அரசாங்கத்தின் வீழ்ச்சியைக் கொண்டுவர முடியும் என்று நேட்டோ சக்திகள் கணக்கிடுகின்றன. அது அணு ஆயுதப் பரிமாற்றம் வரை செல்லாது என்றும் அவை நம்பக்கூடும். ஆனால் அத்தகையதொரு பரிமாற்றத்தின் அபாயத்தை ஏற்கத் தயாராகவே அவை உள்ளன; எந்தவொரு அரசாங்கத்தின் நோக்கத்தையும் சாராத ஒரு தர்க்கம் நிகழ்வுகளுக்கு உண்டு.

ஏகாதிபத்திய சக்திகளை இத்தகைய நடவடிக்கைகளுக்குத் தூண்டுவது எது? அவற்றின் சொந்த ஆட்சியின் சமூக, பொருளாதார, அரசியல் நெருக்கடிகளிலேயே அதற்கான பதில் உள்ளது; அந்த நெருக்கடிகளுக்கு அவற்றிடம் தீர்வு எதுவும் இல்லை. இக்கொள்கைகளை நடைமுறைப்படுத்துவோரின் குற்றகரமான நோக்கங்கள் நிச்சயமாக உண்மையானவையே. ஆனால் அவர்கள் தாமே ஏகாதிபத்தியத்தின் புறநிலைத் தர்க்கத்தின் விளைபொருள்.

ஐரோப்பிய சக்திகள் மந்தமான வளர்ச்சியையும், பின்தங்கும் உற்பத்தித்திறனையும், அமெரிக்கா மற்றும் சீனாவுடனான விரிவடைந்து வரும் தொழில்நுட்ப இடைவெளியையும் எதிர்கொள்கின்றன; ஐரோப்பிய மத்திய வங்கியின் முன்னாள் தலைவர் மரியோ ட்ராகி இந்த இடைவெளியை “இருத்தலுக்கே சவாலானது” என்று அழைத்துள்ளார். இந்தத் தீவிரப்படுத்துதலில் ஜேர்மன் ஏகாதிபத்தியம் மையப் பாத்திரம் வகிக்கிறது. போருக்கு நிதியளிக்கும் ஐரோப்பிய நாடுகளில் மிகப்பெரிய நிதியளிப்பாளர் பேர்லின்; ரஷ்யாவுக்கு எதிராகப் பயன்படுத்தப்படும் ஆயுதங்களின் வரம்புக்கு “எந்தக் கட்டுப்பாடுகளும்” இருக்காது என்று சான்சலர் பிரெடரிக் மெர்ஸ் அறிவித்துள்ளார். ஜேர்மனி அடுத்த ஆண்டு தனது பாதுகாப்பு வரவு-செலவுத் திட்டத்தை 32.7 சதவீதம் உயர்த்தி 109.7 பில்லியன் யூரோவாக்கவுள்ளது; அதேவேளை 2030ஆம் ஆண்டுக்குள் சுகாதாரப் பராமரிப்பு மற்றும் ஓய்வூதியங்களிலிருந்து 38.3 பில்லியன் யூரோவை வெட்டவுள்ளது.

20ஆம் நூற்றாண்டில் இருமுறை ஜேர்மன் ஏகாதிபத்தியம் கிழக்கு நோக்கிப் படையெடுத்தது. 1941இல், தான் Lebensraum (”வாழ்விடம்”) என்று அழைத்த இலக்குக்காக, அதாவது கிழக்கின் நிலம், வளங்கள், உழைப்பு ஆகியவற்றை வெற்றிகொள்வதற்காக, சோவியத் ஒன்றியத்துக்கு எதிராக ஹிட்லர் ஓர் அழித்தொழிப்புப் போரைத் தொடுத்தார்; அது 27 மில்லியன் சோவியத் உயிர்களைப் பறித்தது. மூன்றாம் ரெய்க்கின் தோல்விக்கு எட்டு தசாப்தங்களுக்குப் பிறகு, தனது தொழில்துறை அடித்தளமும் ஏற்றுமதிச் சந்தைகளும் அரிக்கப்படுவதை எதிர்கொள்ளும் ஜேர்மன் ஆளும் வர்க்கம், தனது நெருக்கடியிலிருந்து வெளியேறும் வழியை மீண்டும் கிழக்கிலேயே காண்கிறது.

அமெரிக்கா, தனது பங்குக்கு, பிரமாண்டமான, நீடித்திருக்க முடியாத கூட்டாட்சிக் கடனாலும், கடன் வாங்கும் செலவுகளின் கடுமையான உயர்வால் துரிதப்படுத்தப்படும் டாலர் அமைப்புமுறையின் ஆழமடையும் நெருக்கடியாலும் உந்தப்படுகிறது. 40 டிரில்லியன் டாலர் கடனுக்கான வட்டிக்காக மட்டும் நிதியாண்டின் முதல் 11 மாதங்களில் 1.052 டிரில்லியன் டாலர் செலவானது; இது பென்டகன் செலவிட்டதை விட அதிகமாகும். 10 ஆண்டு கருவூலப் பத்திரத்தின் வருவாய் விகிதம் வெள்ளிக்கிழமை 5.01 சதவீதத்தில் நிறைவடைந்தது; இது 2007ஆம் ஆண்டு ஜூலைக்குப் பிறகு இல்லாத அளவுக்கு உயர்வானது. அமெரிக்க ஏகாதிபத்தியம் தனது பொருளாதாரச் சரிவை இராணுவ வழிமுறைகளால் ஈடுசெய்ய முயல்கிறது.

ஐரோப்பிய சக்திகளின் தீவிரப்படுத்துதல், ஒரு பகுதியில், ட்ரம்பின் கீழ் அமெரிக்க வெளியுறவுக் கொள்கையில் ஏற்பட்ட மாற்றத்துக்கான எதிர்வினையாகும். குறைந்தபட்சம் இப்போதைக்கு, பிப்ரவரி 28 அன்று தொடங்கிய ஈரானுக்கு எதிரான போரிலும், சீனாவுடனான மோதலிலும் ட்ரம்ப் நிர்வாகத்தின் கவனம் குவிந்துள்ளது; சீன ஜனாதிபதி ஷி ஜின்பிங் இந்த வாரம் வாஷிங்டனுக்கு வருகிறார்.

அதேவேளை, அமெரிக்க ஆளும் ஸ்தாபனத்தில் ஆதிக்கம் செலுத்தும் பிரிவுகள் ஐரோப்பியர்களைத் தூண்டிவிட்டு வருகின்றன. ரஷ்ய எண்ணெயை அதிகம் வாங்குவோர் மீது 100 சதவீதம் வரை சுங்கவரிகளை விதிக்க அதிகாரமளிக்கும் மசோதாவுக்கு செப்டம்பர் 16 அன்று 58 பிரதிநிதிகள் சபை ஜனநாயகக் கட்சியினர் வாக்களித்தனர்; அதற்கு எதிராக வாக்களித்த பிரதிநிதிகள் சபை சிறுபான்மைத் தலைவர் ஹக்கீம் ஜெஃப்ரீஸ், அது மிகவும் பலவீனமானது என்று ஆட்சேபித்தார். நவம்பர் 3 அன்று காங்கிரஸின் கட்டுப்பாட்டை ஜனநாயகக் கட்சியினர் வென்றால், ரஷ்யாவுக்கு எதிராக இன்னும் ஆக்ரோஷமான போர்த் திட்டத்தை அவர்கள் முன்னெடுப்பார்கள்.

அமெரிக்க மற்றும் ஐரோப்பிய ஏகாதிபத்திய சக்திகள், 1914இல் பெரும் சக்திகள் இருந்த நிலைக்கு ஒப்பான ஒரு நிலையை அடைந்துள்ளன. 1914 ஜூன் 28 அன்று சரயேவோவில் ஆஸ்திரிய ஆர்ச்டியூக் படுகொலை செய்யப்பட்டதைத் தொடர்ந்து வந்த வாரங்களில், ஜேர்மனி, ஆஸ்திரியா-ஹங்கேரி, ரஷ்யா, பிரான்ஸ், பிரிட்டன் ஆகியவற்றின் அரசாங்கங்கள், போரால் ஏற்படும் அனைத்துப் பயங்கர விளைவுகள் இருந்தபோதிலும், தம்முன் இருந்த தெரிவுகளில் போரே மிகக் குறைந்த தீமை கொண்டது என்ற முடிவுக்கு வந்தன. 1914இல் இருந்ததைப் போலவும், 1939இல் ஹிட்லரிடம் இருந்ததைப் போலவும், தம்மால் தீர்க்க முடியாத பிரச்சினைகளை அடக்குவதற்கான வழிமுறையாக ஆளும் வர்க்கங்கள் போரைக் காண்கின்றன. இந்த அரசாங்கங்களில் எதுவும் பின்வாங்கத் தயாராக இல்லை; கடக்க மனமில்லாத எந்தச் சிவப்புக் கோடும் அவற்றுக்கு இல்லை.

அரசாங்கங்கள் தீவிரப்படுத்துதலைத் தேர்ந்தெடுத்துள்ளன; ஆனால் அதன் விளைவுகளை அவற்றால் கட்டுப்படுத்த முடியாது. இரண்டு ஆண்டுகளில் தம் நகரங்கள் எப்படித் தோற்றமளிக்கும் என்பது அவற்றுக்குக் காட்டப்பட்டாலும், அது அவற்றைத் தடுத்து நிறுத்தாது. ரஷ்யப் புரட்சியின் இணைத் தலைவரான லியொன் ட்ரொட்ஸ்கி, நான்காம் அகிலத்தின் 1938ஆம் ஆண்டு ஸ்தாபக வேலைத்திட்டத்தில் எழுதினார்: “ஒரு புதிய போர் தனது ஆதிக்கத்துக்கு ஏற்படுத்தும் மரண ஆபத்தை முதலாளித்துவ வர்க்கம் நிச்சயமாக உணர்ந்தே இருக்கிறது. ஆனால் 1914இன் முன்னிரவில் இருந்ததை விட, போரைத் தவிர்ப்பதற்கான ஆற்றல் அந்த வர்க்கத்திடம் இப்போது அளவிட முடியாத அளவுக்குக் குறைவாகவே உள்ளது.” இந்த மதிப்பீடு இன்று இன்னும் அதிகமாகவே உண்மையாகும்.

இப்போது ஐந்தாவது ஆண்டில் உள்ள இந்தப் போர், நேட்டோ சக்திகளால் தூண்டிவிடப்பட்டதாகும். ரஷ்யாவின் எல்லைகள் வரை மூன்று தசாப்தங்களாக நடந்த நேட்டோ விரிவாக்கமும், நேட்டோவின் பினாமியாக உக்ரேனுக்கு ஆயுதமளிக்கப்பட்டதும், 2022 பிப்ரவரியில் புட்டினின் படையெடுப்புடன் தொடங்கிய மோதலைத் தூண்டுவதையே இலக்காகக் கொண்டிருந்தன.

ஏகாதிபத்திய சக்திகளின் சார்பாகப் போரை நடத்தி வரும் உக்ரேனிய ஆட்சி, அனைத்தையும் விட ஆழமான நெருக்கடியை எதிர்கொள்கிறது எனலாம். ஜெலென்ஸ்கியின் சர்வாதிகார ஆட்சி இராணுவச் சட்டத்தின் மூலம் நடைபெறுகிறது; அது தேர்தல்களை நடத்துவதில்லை, எதிர்க்கட்சிகளைத் தடை செய்துள்ளது. அது வீதிகளில் ஆண்களைப் பிடித்துச் சென்று தனது இராணுவத்தை நிரப்புவதுடன், லிவிவ், டெர்னோபில், லுட்ஸ்க் மற்றும் பிற நகரங்களில் கட்டாய இராணுவ ஆட்சேர்ப்புக்கு எதிராக வளர்ந்து வரும் எதிர்ப்பையும் எதிர்கொள்கிறது.

போரை எதிர்த்ததற்காகவும், அதற்கு எதிராக உக்ரேனிய மற்றும் ரஷ்யத் தொழிலாளர்களின் ஐக்கியத்துக்கு அழைப்பு விடுத்ததற்காகவும், 27 வயதான சோசலிஸ்ட் போக்டன் சிரோட்டியுக்கிற்கு ஆகஸ்ட் 10 அன்று ஒரு உக்ரேனிய நீதிமன்றம் 15 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்தது.

1991இல் நடந்த சோவியத் ஒன்றியத்தின் கலைப்பின் விளைபொருளாகவே இருக்கும் ஒரு ஆட்சியின் எதிர்வினையே உக்ரேன் மீதான பிற்போக்கான படையெடுப்பாகும். ரஷ்ய அரசாங்கம் அரசுச் சொத்துக்களைச் சூறையாடித் தம்மை வளப்படுத்திக்கொண்ட தன்னலக்குழுக்களின் அரசாங்கமாகும்; அதன் கொள்கைகள் தொடக்கத்திலிருந்தே திவாலானவை. உக்ரேன் மீதான படையெடுப்பில் புட்டினின் மூலோபாயம், தனது “மேற்குலகப் பங்காளிகள்” என்று அவர் தொடர்ந்து அழைத்து வந்த நேட்டோ சக்திகளை, ரஷ்யாவுடன் ஓர் இணக்கத்துக்கு நெருக்குவதாகவே இருந்தது. ஆனால் அவை அந்தப் படையெடுப்பைப் பாரிய இராணுவத் தீவிரப்படுத்துதலுக்கான சாக்காகப் பயன்படுத்திக்கொண்டன.

அரசியல் சூழ்நிலையில் உள்ள மிகப்பெரிய ஆபத்து, அச்சுறுத்தலின் அளவுக்கும் அதைப் பற்றி மக்களிடையே நிலவும் புரிதலுக்கும் இடையிலான மாபெரும் இடைவெளியாகும். வெகுஜனங்கள் ஆபத்தை உணர்கின்றனர்; ஆனால் தமது அரசாங்கங்கள் அணு ஆயுதப் போரின் அபாயத்தை ஏற்கத் துணியும் என்பதை அவர்களால் நம்ப முடியாது. மக்களின் இந்த நம்பமுடியாமையை அரசாங்கங்கள் பயன்படுத்திக்கொள்கின்றன. ஆபத்துகளை மக்கள் அறிந்துகொள்வதையும் புரிந்துகொள்வதையும் தடுப்பதற்குச் சாத்தியமான அனைத்தையும் ஊடகங்களும் அரசியல் ஸ்தாபனமும் செய்து வருகின்றன.

ஒவ்வொரு நாட்டிலும் உள்ள தொழிலாளர்களும் இளைஞர்களும், அணு ஆயுதப் பயன்பாட்டில் முடிவடையக்கூடிய ரஷ்யாவுடனான ஒரு போருக்குள் தமது அரசாங்கங்கள் தம்மை இட்டுச் செல்கின்றன என்றும், அரசியல் ஸ்தாபனத்தின் எந்தப் பிரிவும் அதைத் தடுக்காது என்றும் எச்சரிக்கப்பட வேண்டும்.

சர்வதேச தொழிலாள வர்க்கத்தின் ஓர் இயக்கத்தைத் தவிர வேறு எதனாலும் இந்தப் போரைத் தடுத்து நிறுத்த முடியாது. அத்தகைய இயக்கத்துக்கான அடித்தளம் இருக்கிறது. ஒவ்வொரு நாட்டிலும் தொழிலாள வர்க்கத்தில் வளர்ந்து வரும் எதிர்ப்பு, பெருகிவரும் வேலைநிறுத்தங்கள் மற்றும் போராட்டங்களின் அலையாக வெளிப்படுகிறது. கடுமையாக உயரும் விலைகள், மறுஆயுதமயமாக்கலுக்கு நிதியளிப்பதற்காகச் சமூகத் திட்டங்கள் சிதைக்கப்படுவது ஆகியவை உள்ளடங்கிய போரின் தாக்கம், பொதுவான சமூக நெருக்கடியுடன் இணைகிறது; அதிர்ச்சியூட்டும் அளவிலான சமத்துவமின்மை, பாரிய பணிநீக்கங்கள், ஜனநாயக உரிமைகள் மீதான தாக்குதல் ஆகியவை அந்த நெருக்கடியின் கூறுகளாகும்.

இந்தப் போராட்டங்கள் நனவுபூர்வமான ஓர் அரசியல் இயக்கத்தில் ஐக்கியப்படுத்தப்பட வேண்டும். அது சர்வதேசத் தன்மை கொண்டதாக, உக்ரேன், ரஷ்யா, ஐரோப்பா, அமெரிக்கா ஆகியவற்றில் உள்ள தொழிலாளர்களை அவர்களது பொது எதிரிக்கு எதிராக ஐக்கியப்படுத்துவதாக இருக்க வேண்டும். போரை ஆதரிக்கும் ஆளும் வர்க்கத்தின் அனைத்துக் கட்சிகளிடமிருந்தும் அது சுயாதீனமானதாக இருக்க வேண்டும். அது சோசலிசத் தன்மை கொண்டதாக, போருக்கு மூலமாக இருக்கும் முதலாளித்துவ அமைப்புமுறைக்கு எதிராகத் திசைப்படுத்தப்பட்டதாக இருக்க வேண்டும்.

உலகப் போருக்கு மாற்று உலக சோசலிசப் புரட்சியே.

Loading