ஈரானுக்கு எதிரான அமெரிக்கப் போரால் எரிசக்தி விலைகள் வானளவு உயர்ந்துள்ள நிலையில், அதற்கு எதிராகப் போராட்டங்களும் வேலைநிறுத்தங்களும் வெடிக்கின்றன

இந்த மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கு காணலாம்.

ஏழாவது மாதத்தை எட்டியுள்ள ஈரானுக்கு எதிரான அமெரிக்க-இஸ்ரேலியப் போரின் விளைவுகள், எரிசக்தி விலை உயர்வு மற்றும் பில்லியன் கணக்கான மக்களுக்கான உணவு, இதர அத்தியாவசியப் பொருட்களின் விலை அதிகரிப்பு ஆகியவற்றை எதிர்த்து வளர்ந்து வரும் சமூக ஆத்திரம் மற்றும் வேலைநிறுத்தங்களின் வடிவில் உலகெங்கிலும் வெடித்து வருகின்றன.

சமீபத்திய நாட்களில், ஆசியா மற்றும் லத்தீன் அமெரிக்காவின் வளரும் நாடுகளில் முதன்மையாக தொடர்ச்சியான போராட்டங்களும் வேலைநிறுத்தங்களும் நடைபெற்றுள்ளதாக செய்தி ஊடகங்கள் தெரிவித்துள்ளன. ஊதியம் தங்களது எரிபொருள் செலவுகளைக்கூட ஈடுகட்ட முடியாத நிலையில், வேலைக்குச் செல்வதில் எந்தப் பயனும் இல்லை என்று டாக்ஸி ஓட்டுநர்களும் தொழிலாளர்களும் கருதுகின்றனர்.

உதாரணமாக, போர்த்துகலில் டீசல் விலை ஒரு காலனுக்கு 9 டாலருக்கும் அதிகமாகச் சாதனை அளவை எட்டியுள்ளது; இதற்கு எதிர்ப்புத் தெரிவித்து, ஓட்டுநர்கள் ஹாரன் அடித்தபடி மெதுவாக வாகனம் ஓட்டி சாலைகளை மறியல் செய்கின்றனர். சிரியா, குவாத்தமாலா, இந்தோனேசியா, பாகிஸ்தான், பிலிப்பீன்ஸ், இந்தியா, வங்காளதேசம், இலங்கை ஆகிய நாடுகளிலும் போராட்டங்களும் வேலைநிறுத்தங்களும் பதிவாகியுள்ளன.

உலக எரிசக்தி விலைகள் மீது இப்போர் ஏற்படுத்திய தாக்கம் தொழிலாள வர்க்கத்திற்கு பேரழிவுகரமாக அமைந்துள்ளது. போருக்கு முன் பீப்பாய்க்கு 65 முதல் 75 டாலர் வரையிலான வரம்பில் இருந்த பிரென்ட் கச்சா எண்ணெய், ஏப்ரல் இறுதியில் சுமார் 120 டாலர் என்ற உச்சத்திற்குக் கடுமையாக உயர்ந்தது; மே தொடக்கத்தில் அறிவிக்கப்பட்ட போர்நிறுத்த அறிவிப்பைத் தொடர்ந்து சிறிது காலம் நீடித்த, மாயையான அமைதி ஒன்று ஏற்பட்டது.

செப்டம்பர் தொடக்கத்தில் ஈரானிய எண்ணெய்க் கப்பல்கள் மீதான அமெரிக்காவின் கடுமையான தாக்குதல்கள் மீண்டும் தொடங்கியதைத் தொடர்ந்து, எண்ணெய் விலைகள் மீண்டும் கடுமையாக உயர்ந்து 100 டாலரைத் தாண்டின. இக்கட்டுரை எழுதப்படும் நேரத்தில், பிரென்ட் கச்சா எண்ணெய் ஒரு பீப்பாய்க்கு 109 டாலருக்கும் அதிகமான விலையில் வர்த்தகமாகி வருகிறது.

அமெரிக்காவில், பிப்ரவரி 28-ஆம் தேதி போர் தொடங்கியதிலிருந்து பெட்ரோல் விலைகள் சுமார் 39 சதவீதம் உயர்ந்துள்ளன. சரக்குப் போக்குவரத்து, விவசாயம், உணவு விநியோகம் ஆகியவற்றின் உயிர்நாடியான டீசல், புதன்கிழமை ஒரு காலனுக்கு சராசரியாக 6.31 டாலர் என எக்காலத்திலும் இல்லாத சராசரி உச்சத்தை எட்டியது. விமான எரிபொருள் விலைகளும் இதே பாதையைப் பின்பற்றியுள்ளன; அவை மலிவு விமான நிறுவனங்களின் வழித்தடங்களை முடக்கியுள்ளதுடன், விமானச் சீட்டு விலைகளிலும் சரக்குகளின் வான்வழிப் போக்குவரத்திலும் கூர்மையான உயர்வை ஏற்படுத்தியுள்ளன.

ஹோர்முஸ் நீரிணையின் மூடல், உலகளவில் பெட்ரோல் விலையை 50 சதவீதத்திற்கும் அதிகமாக உயர்த்தியுள்ளது; அதே வேளையில் தக்காளி போன்ற அத்தியாவசியப் பொருட்களின் விலை கிட்டத்தட்ட 40 சதவீதம் உயர்ந்துள்ளதுடன், உலகளாவிய பணவீக்கம் 2023ஆம் ஆண்டுக்குப் பிறகு காணாத உச்சமான 3.8 சதவீதத்தை எட்டியுள்ளது. இப்போர் அமெரிக்க எரிசக்தி செலவினங்களில் மட்டும் 100 பில்லியன் டாலரைக் கூடுதலாகச் சேர்த்துள்ளதாகவும், அதாவது வீடு ஒன்றுக்கு சுமார் 763 டாலர் என்ற அளவில் இருப்பதாகவும், ஒவ்வொரு இரண்டு நிமிடங்களுக்கும் இத்தொகை சுமார் 1 மில்லியன் டாலர் வீதம் அதிகரித்து வருவதாகவும் பிரவுன் பல்கலைக்கழக ஆய்வாளர்கள் மதிப்பிட்டுள்ளனர்.

புவிசார் அரசியல் மற்றும் நிதியியல் எதிரொலிகள் பாரசீக வளைகுடாவைத் தாண்டி வெகுதூரம் பரவியுள்ளன. ஆசியாவில் மோதல்கள் மற்றும் அரசு உருவாக்கம் குறித்து ஆய்வு செய்யும் ஆஸ்திரேலிய தேசிய பல்கலைக்கழக விரிவுரையாளர் சனா ஜாஃப்ரி, உலகெங்கிலுமுள்ள அரசாங்கங்கள் எதிர்கொள்ளும் மையக் கேள்வியை முன்வைத்தார். “இந்தப் புவிசார் அரசியல் நெருக்கடியைச் சமாளிக்க ஆசியாவிற்கோ பொதுவாக வளரும் உலகிற்கோ எவ்வளவு நிதித் திறன் இருக்கிறது?” என்று அவர் கேட்டார்.

செவ்வாய்க்கிழமை நியூயார்க் டைம்ஸ் பத்திரிகையிடம் பேசிய ஜாஃப்ரி, “அந்த நிதித் திறன் தீர்ந்து போகத் தொடங்கும்போது உலகளாவிய நிதிச் சந்தைகளுக்கு என்ன நேரிடும்?” என்று கேட்டார். “ஒரு கட்டத்தில், இது அனைவருக்கும் பிரச்சினையாக மாறும்” என்று அவர் எச்சரித்தார். உலகெங்கிலும் உள்ள தொழிலாள வர்க்கத்தைப் பொறுத்தவரை, அந்தக் கட்டம் ஏற்கெனவே வந்துவிட்டது.

2026 பிப்ரவரி 28 அன்று, அமெரிக்காவும் இஸ்ரேலும் ஈரானுக்கு எதிராக, போர் அறிவிப்பின்றியும் அமெரிக்க காங்கிரஸ் அல்லது ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு அவையின் அனுமதியின்றியும், மிகப்பெரிய அளவிலான, தூண்டுதலற்ற தாக்குதலைத் தொடங்கின. ஈரானின் அரசுத் தலைவர் குறிவைத்துக் கொல்லப்பட்டதுடன் போர் தொடங்கியது; அதைத் தொடர்ந்து, நாடு முழுவதும் மற்றும் பரந்த பாரசீக வளைகுடா பிராந்தியம் முழுவதும் உள்ள இராணுவ நிலையங்கள், அரசாங்க வசதிகள் மற்றும் எரிசக்தி உள்கட்டமைப்புகள் மீது தாக்குதல்கள் நடத்தப்பட்டன.

சில நாட்களுக்குள், உலகளவில் வர்த்தகம் செய்யப்படும் கச்சா எண்ணெயில் சுமார் 20 சதவீதம் — அதாவது நாளொன்றுக்கு 17 முதல் 21 மில்லியன் பீப்பாய்கள் வரை — கடந்து செல்லும் ஹோர்முஸ் நீரிணையை ஈரான் மூடியது; சர்வதேச எரிசக்தி முகமை (IEA) “உலகளாவிய எண்ணெய்ச் சந்தையின் வரலாற்றிலேயே மிகப்பெரிய விநியோகச் சீர்குலைவு” என்று விவரித்த நிலைமையை அது தூண்டியது.

எரிசக்தி உள்கட்டமைப்புகள் மீதான தாக்குதல்கள் வளைகுடா ஒத்துழைப்பு கவுன்சில் நாடுகளைத் தாக்கின. செப்டம்பர் 11ஆம் தேதிக்குள், சவூதி அரேபியாவில் உள்ள கிழக்கு–மேற்கு கச்சா எண்ணெய்க் குழாய்த்தடம் முழுமையாக மூடப்பட்டது. இந்தச் சீர்குலைவுகளுடன் இப்போது மேலும் ஒன்று சேர்ந்துள்ளது: ஏடன் வளைகுடாவை நோக்கிய செங்கடல் வழித்தடத்தில் உள்ள கடலோரப் பகுதிகளையும் முக்கியத் தீவுகளையும் தங்கள் கட்டுப்பாட்டில் வைத்திருப்பதன் மூலம் ஹவுத்திகள் பாப் அல்-மந்தாப் நீரிணையை மூடியுள்ளனர்.

தற்போதைய மதிப்பீடுகளின்படி, இந்தப் போரால் ஏற்பட்ட பேரழிவின் ஒட்டுமொத்த விளைவாக உலக வர்த்தகத்தில் 39 சதவீதமும், உலகளாவிய சரக்கு அனுப்புதல்களில் 31 சதவீதமும் சீர்குலைந்துள்ளன. கார்க் தீவு முதல் சவூதி அரேபியாவின் கிழக்கு மாகாணம் வரையிலான பகுதிகளில் உள்ள எண்ணெய் சுத்திகரிப்பு நிலையங்கள் தாக்கப்பட்டுள்ளன. இதன் விளைவுகளை IEA-வின் தலைவர் “வரலாற்றிலேயே மிகப்பெரிய உலகளாவிய எரிசக்திப் பாதுகாப்புச் சவால்” என்று விவரித்துள்ளார்.

இந்தச் சீர்குலைவுகளின் அரசியல் விளைவுகள் இப்போது ஒவ்வொரு கண்டத்திலும் உள்ள தெருக்களிலும் சதுக்கங்களிலும் கண்கூடாகத் தெரிகின்றன. கிடைக்கக்கூடிய செய்திகளின் அடிப்படையில், சமீபத்திய நாட்களில் வெடித்துள்ள போராட்டங்களின் பகுதியளவிலான பட்டியல் கீழே வழங்கப்பட்டுள்ளது:

  • சிரியா: பெட்ரோல், டீசல் மற்றும் பிற பெட்ரோலியப் பொருட்களின் விலையை தற்காலிகமாக 40 சதவீதம் வரை உயர்த்துவதாக அரசாங்கம் அறிவித்ததைத் தொடர்ந்து, இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு அசாத் ஆட்சி வீழ்ச்சியடைந்ததற்குப் பின்னர் இதுவரை இல்லாத அளவுக்கு மிகப்பெரிய போராட்டங்கள் வெடித்தன. மறுசீரமைப்பை உறுதியளித்திருந்தும் தற்போது எரிசக்தித் துறையின் வீழ்ச்சிக்கு தலைமை தாங்கி வரும் இடைக்கால அரசாங்கத்தின் மீது தங்கள் ஆத்திரத்தை வெளிப்படுத்தும் வகையில், பல நகரங்களில் போராட்டக்காரர்கள் டயர்களையும் வாகனங்களையும் எரித்தனர்.
  • குவாத்தமாலா: சமீபத்திய எண்ணெய் விலை உயர்வு, ஏழை மற்றும் தொழிலாள வர்க்கக் குடும்பங்களால் சமாளிக்க முடியாத அளவுக்கு செலவுகளை அதிகரித்ததைத் தொடர்ந்து வெகுஜனப் போராட்டங்கள் வெடித்தன. போராட்டக்காரர்கள் டயர்களையும் வாகனங்களையும் எரித்து, பிரதான சாலைகளை மறித்தனர். கடந்த பல ஆண்டுகளில் நாடு கண்டிராத மிகத் தீவிரமான அமைதியின்மைகளில் இதுவும் ஒன்று என்று கண்காணிப்பாளர்கள் குறிப்பிட்டுள்ளனர் .
  • போர்த்துகல்: லிட்டருக்கு 2.17 யூரோவுக்கும் அதிகமாக, அதாவது காலனுக்கு 9 டாலருக்கும் மேல் டீசல் விலை சாதனை உயரத்தை எட்டிய பின்னர், பிரதான சாலைகளில் ஓட்டுநர்கள் ஹாரன் ஒலித்தபடி ஒருங்கிணைந்த போராட்டத்தில் மெதுவாக வரிசையாக வாகனங்களை ஓட்டினர். பிரான்சின் ஜிலே ஜோன் (மஞ்சள் சட்டை) இயக்கத்தை நினைவூட்டும் இப்போராட்டங்கள், பிரதமர் லூயிஸ் மொண்டெனீக்ரோவின் அரசாங்கத்தை சவாலுக்கு உட்படுத்தியுள்ளன.
  • இந்தோனேசியா: எரிபொருள் பற்றாக்குறையும் பெட்ரோல் நிலையங்களில் நீண்ட வரிசைகளும் போக்குவரத்தையும் வர்த்தகத்தையும் பாதித்துள்ளன. அடிப்படை எரிசக்தி செலவுகளைக்கூட தங்கள் வருமானம் ஈடுகட்டவில்லை என்று தொழிலாளர்கள் தெரிவிக்கும் நிலையில், டாக்ஸி ஓட்டுநர்களும் தினக்கூலித் தொழிலாளர்களும் நடத்தும் வேலைநிறுத்தங்கள் முக்கிய நகரங்கள் முழுவதும் பரவியுள்ளன.
  • பாகிஸ்தான்: ஏற்கெனவே சர்வதேச நாணய நிதியத்தின் கடுமையான அழுத்தத்தில் இருக்கும் நாட்டில், மைல்கணக்கில் நீளும் எரிபொருள் வரிசைகள் பொருளாதார நடவடிக்கைகளை மந்தப்படுத்தியுள்ளன. விலை உயர்வுக்கு எதிரான போராட்டங்கள், கராச்சியிலும், லாகூரிலும் நடைபெறும் பரந்த அரசாங்க எதிர்ப்புப் போராட்டங்களுடன் இணைந்துவிட்டன.
  • பிலிப்பீன்ஸ்: வளைகுடா இறக்குமதிகளின் சீர்குலைவுடன் தொடர்புடைய எரிசக்தி பற்றாக்குறை, சுழற்சி மின்வெட்டுகளையும் மின்சார நிறுவன அலுவலகங்களுக்கு வெளியே போராட்டங்களையும் தூண்டியுள்ளது. மணிலாவின் போக்குவரத்துத் துறையில் உள்ள தொழிலாளர்கள் எரிபொருள் மானியங்களைக் கோரி வேலைநிறுத்தங்களை நடத்தியுள்ளனர்.
  • இந்தியா: உயரும் டீசல் மற்றும் சமையல் எரிவாயு விலைகள் பல மாநிலங்களில் ஆர்ப்பாட்டங்களுக்கு வழிவகுத்துள்ளன; அங்கு எதிர்க்கட்சிகள் விலைக் கட்டுப்பாடுகளைக் கோரி பேரணிகளை ஒழுங்கமைத்துள்ளன.கிராமப்புற மற்றும் நகர்ப்புற ஏழைகள் ஒரே நேரத்தில் நெருக்கடிக்கு ஆளாகியிருப்பதால், பிரதமர் நரேந்திர மோடியின் அரசாங்கம் அதிகரித்து வரும் அழுத்தத்தை எதிர்கொள்கிறது.

இப்போரின் முதல் மணிநேரங்களிலிருந்தே, தற்போது நிகழ்ந்து வருவதை டொனால்ட் ட்ரம்பின் தனிப்பட்ட குணநலக்குறையின் விளைவாகப் புரிந்துகொள்ள முடியாது என்று உலக சோசலிச வலைத்தளம் (WSWS) வலியுறுத்தி வந்துள்ளது. இது அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் வரலாற்று நெருக்கடியின் வெளிப்பாடாகும்,உலகின் வளங்களைப் புதிய காலனித்துவ முறையில் மறுபங்கீடு செய்வதன் மூலம் அந்த நெருக்கடியைக் கடக்க மேற்கொள்ளப்படும் முயற்சியின் வெளிப்பாடுமாகும்.

வெனிசுலா எண்ணெயைக் கைப்பற்றியதும், ஈரான் மீதான தாக்குதலும், சீனாவுடனான அதிகரித்து வரும் மோதலும் இச்செயல்முறையின் கூறுகளாகும். இவை, அமெரிக்க மேலாதிக்கக் கட்டுப்பாட்டின் கீழ் உலகை மறுசீரமைக்கவும், வாஷிங்டன் மற்றும் வால் ஸ்ட்ரீட்டின் ஆணைகளுக்குக் கீழ்ப்படிய மறுக்கும் எந்த அரசையும் நசுக்கவும் நடத்தப்படும் ஒரே ஒரு உலகளாவிய போரின் முனைகளாகும்.

மத்திய கிழக்கின் எரிசக்தி வளங்களைக் கட்டுப்படுத்துவது, சீனாவுடனான பரந்த மோதலில் முக்கியமான மூலோபாயக் கருவியாக இருப்பதால் ஈரான் இலக்காகத் தேர்ந்தெடுக்கப்பட்டது. சீனா தனது அன்றாட எண்ணெய் நுகர்வில் 70 சதவீதத்திற்கும் அதிகமானதை இறக்குமதி செய்து வந்த நிலையில், அதில் பெரும்பகுதி ஈரானிலிருந்து வந்தது.

2026 பிப்ரவரி 28க்குப் பின்னர் உடனடியாக WSWS எச்சரித்தபடி, “இப்போர் அமெரிக்க சமூகத்தின் உள்நாட்டு சமூக நெருக்கடியைத் தீர்க்காது; அமெரிக்க முதலாளித்துவத்தின் உலகளாவிய நிலையில் ஏற்பட்டுள்ள நீண்டகாலச் சரிவையும் இது மாற்றாது. இந்த உள்நாட்டு மற்றும் சர்வதேச முரண்பாடுகள் அனைத்தும் தீவிரமடையும். போர் தானாகவே தவிர்க்க முடியாத வகையில் தீவிரமடைந்து, முழுக் கிரகத்தையும் சூழ்ந்துகொள்ளும்.”

இந்த எச்சரிக்கைகள் சரியானவை என நிரூபிக்கப்பட்டுள்ளன. முதலாளித்துவத்தின் முரண்பாடுகளான உலகமயமாக்கப்பட்ட உற்பத்திக்கும் தேசிய-அரசு அமைப்புமுறைக்கும் இடையிலான முரண்பாடும், உற்பத்தியின் சமூகத் தன்மைக்கும் உற்பத்திச் சாதனங்களின் தனியார் உடைமைக்கும் இடையிலான முரண்பாடும் தாமாகத் தீர்ந்துவிட முடியாது. அவை தொழிலாள வர்க்கத்துடனான ஒரு புரட்சிகர மோதலை நோக்கி நகர்கின்றன.

இந்த முரண்பாடுகள் ஆழமடைந்து, பெரும் வல்லரசுகளை ஒரு புதிய உலகளாவிய போரை நோக்கி இட்டுச் செல்லும் அதேவேளையில், அவை தொழிலாள வர்க்கத்தின் ஓர் இயக்கத்தையும் உருவாக்கி வருகின்றன. டமாஸ்கஸ் முதல் தாக்கா, லிஸ்பன் வரையிலும் தற்போது வெடித்துள்ள போராட்டங்கள் அந்தப் புரட்சிகர எழுச்சியின் முதல் அதிர்வுகளாகும்; அவை மேலும் தீவிரமடையும். இந்தப் போர் அல்லது இந்த எரிசக்தி விலைகளுக்கு மட்டுமன்றி, இவை இரண்டையும் உருவாக்கிய ஒட்டுமொத்த முதலாளித்துவ அமைப்புக்கும் எதிராக, எல்லைகளைக் கடந்து தொழிலாளர்களை ஒன்றிணைக்கும் சோசலிச சர்வதேசியவாதம் மற்றும் நனவுபூர்வமான வேலைத்திட்டம் என்ற கொடியின் கீழ் இந்தப் போராட்டங்களை ஒன்றிணைப்பதே தொழிலாள வர்க்கத்தின் முன்னுள்ள பணியாகும்.

Loading