UAW தேர்தல் படுதோல்விக்குப் பிறகு: சாமானிய தொழிலாளர் குழுக்களைக் கட்டியெழுப்பி, தொழிற்சாலைத் தளத்தில் அதிகாரத்தைக் கைப்பற்றுவோம்!

இந்த மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கு காணலாம்.

2026 ஜூலை 23 அன்று டெட்ராய்ட் அசெம்பிளி காம்ப்ளெக்ஸ்-ஜெபர்சன் ஆலையில் ஸ்டெல்லாண்டிஸ் தொழிலாளர்களுடன் வில் லெஹ்மன் (வலது). [Photo by willforuawpresident.org]

பின்வரும் அறிக்கை வில் லெஹ்மனால் வெளியிடப்பட்டது. பென்சில்வேனியா மாநிலம் மக்கன்ஜியில் உள்ள மேக் டிரக்ஸ் (Mack Trucks) ஆலையில் பணிபுரியும் சாமானிய தொழிலாளியான அவர், சமீபத்தில் முடிவடைந்த தேர்தல்களில் ஐக்கிய வாகனத் தொழிலாளர் சங்கத்தின் (UAW) தலைவர் பதவிக்குப் போட்டியிட்டார். இது அவரது WillforUAWPresident.org வலைத் தளத்தில் 2026 அக்டோபர் 16 அன்று பதிவிடப்பட்டது.

சகோதரர்களே, சகோதரிகளே,

இப்போது முடிவடைந்துள்ள UAW தேர்தல்களைப் பற்றிய மிக முக்கியமான உண்மை என்னவென்றால், கடந்த வாரம் வெளியிடப்பட்ட புள்ளிவிவரங்களின்படி, தொழிலாளர்களில் மிகப் பெரும்பான்மையினர் வாக்களிப்பில் பங்கேற்கவில்லை என்பதே. வாக்களிக்கத் தகுதியுள்ள ஏறத்தாழ 1.1 மில்லியன் உறுப்பினர்களில் 98,029 பேர் மட்டுமே வாக்களித்தனர். உறுப்பினர்களில் 90 சதவீதத்திற்கும் மேற்பட்டோர் வாக்குப்பதிவிலிருந்து விலகி நின்றனர்.

ஃபேயின் 66,166 வாக்குகளைப் பெற்றார்; இது பதிவான வாக்குகளில் 68 சதவீதமாக இருந்தாலும், மொத்த உறுப்பினர்களில் வெறும் 6 சதவீதமே. தங்கள் வேலைக்கும் சம்பளத்திற்கும் தொழிற்சங்க எந்திரத்தைச் சார்ந்திருக்கும் பத்தாயிரக்கணக்கான அதிகாரிகள், ஊழியர்கள், நியமிக்கப்பட்டவர்களைக் கழித்துவிட்டால், இந்த எண்ணிக்கை சாமானிய தொழிலாளர்களில் ஏறத்தாழ 3 சதவீதத்திற்கு நெருக்கமாகவே இருக்கும். அதிகாரத்துவத்தின் முழு ஆதரவும் அவருக்கு இருந்தது; தொழிலாளர்கள் வாக்குப்பதிவைப் புறக்கணித்து அதற்குப் பதிலளித்தனர்.

இருப்பினும், பெருநிறுவன ஊடகங்களும் தொழிற்சங்க எந்திரமும், ஃபேயின் ஒரு “மக்கள் ஆணை”யைப் பெற்றார் என்று நம்மிடம் கூறுகின்றன. இது ஒரு பொய்; இது அனைவருக்கும் தெரிந்ததே. உண்மையில், இந்தத் தேர்தல் தொழிற்சங்க எந்திரத்திற்கு முழுமையான படுதோல்வியாக அமைந்தது.

குறைந்த வாக்குப்பதிவுக்குக் காரணம் என்ன? கடந்த தேர்தல் நடந்து நான்கு ஆண்டுகளுக்குப் பிறகும், பல தொழிலாளர்களுக்கு இம்முறையும் வாக்குச்சீட்டே கிடைக்கவில்லை அல்லது தேர்தல் நடப்பதே தெரியவில்லை. மேலும், தொழிற்சங்க எந்திரத்திற்கே சவால் விடுத்த ஒரே பிரச்சாரமான எனது பிரச்சாரம், அதைப் பற்றித் தொழிலாளர்கள் அறிந்துகொள்வதைத் தடுப்பதற்கென வடிவமைக்கப்பட்ட கட்டுப்பாடுகளுக்கு உட்படுத்தப்பட்டது.

2022ஆம் ஆண்டு மாநாட்டில் ஏற்றுக்கொள்ளப்பட்டு, இந்தத் தேர்தலில் முதன்முறையாக நடைமுறைப்படுத்தப்பட்ட விதிகளின்படி, சங்க உறுப்பினர் அல்லாதோர் ஒரு வேட்பாளருக்கு “மதிப்புள்ள எதையும்” வழங்குவதற்குத் தடை விதிக்கப்பட்டது. எனது பிரச்சாரத்தை உலக சோசலிச வலைத் தளத்திலிருந்தும் (WSWS), 2022 தேர்தலின்போது பத்தாயிரக்கணக்கான வாகனத் தொழிலாளர்கள் பின்தொடர்ந்த அதன் வாகனத் தொழிலாளர் செய்திமடலிலிருந்தும் (Autoworker Newsletter) துண்டிப்பதற்கு அந்த விதி பயன்படுத்தப்பட்டது.

இதன் விளைவாக, இந்தத் தேர்தலில் ஒரு போர்க்குணமிக்க, சோசலிச மாற்று இருப்பதையே நூறாயிரக்கணக்கான தொழிலாளர்கள் அறியாமல் போயினர். இதைப் பற்றி அவர்கள் அறிந்திருந்தால், தேர்தலிலிருந்து விலகியிருந்த பலர் எனக்கு வாக்களித்திருப்பார்கள் என்பதில் எனக்கு உறுதியான நம்பிக்கை உள்ளது.

மேலும், UAW-ஆக இருந்தாலும்சரி, நீதிமன்றம் நியமித்த கண்காணிப்பாளராக இருந்தாலும்சரி, அவர்கள் கூறும் எதையும் நம்ப முடியாது. அறிவிக்கப்பட்ட தேர்தல் முடிவுகள் குறித்து பல தொழிலாளர்கள் ஆழ்ந்த சந்தேகம் கொண்டுள்ளனர்; அவ்வாறு சந்தேகிப்பதற்கு அவர்களுக்கு எல்லா காரணங்களும் உள்ளன.

ஆனால் தீர்மானகரமான காரணி, தொழிற்சங்க எந்திரத்தின் மீது சாமானியத் தொழிலாளர்கள் கொண்டுள்ள வெறுப்பாகும். தொழிற்சங்கத்தை மாற்றியமைப்பதாக வாக்குறுதியளித்தே ஃபேய்ன் பதவிக்கு வந்தார். இப்போது, மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டிருப்பது தனது தலைமையின் மீது தொழிலாளர்கள் கொண்டுள்ள நம்பிக்கையின் வெளிப்பாடு என்று அவர் கூறுகிறார். அப்படியானால், 2022ஆம் ஆண்டைவிட இந்த ஆண்டு ஏன் குறைவான உறுப்பினர்கள் வாக்களித்தனர்?

தொழிலாளர்களுக்கு உண்மையான தெரிவு கிடைத்த இடங்களில், அவர்கள் பெருமளவில் வாக்களித்துள்ளனர். இந்தக் கோடையில், நெக்ஸ்டீர் (Nexteer), டானா (Dana), பிரிட்ஜ்வாட்டர் (Bridgewater) மற்றும் பிற வாகன உதிரிபாக உற்பத்தி நிறுவனங்களில் பணியாற்றும் ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள், ஃபேய்ன் ஆதரித்து முன்னெடுத்த நிறுவன ஆதரவு ஒப்பந்தங்களை 90 சதவீதத்திற்கும் அதிகமான பெரும்பான்மையுடன் நிராகரித்தனர். நெக்ஸ்டீரில், தொழிலாளர்கள் மூன்று காட்டிக்கொடுப்பு ஒப்பந்தங்களை நிராகரித்ததுடன், 86 சதவீத வாக்குகளுடன் வேலைநிறுத்தத்திற்கும் ஆதரவளித்தனர். ஆனால் UAW அந்த வேலைநிறுத்த வாக்கெடுப்பை மூடிமறைத்து, நிறுவன வளாகத்திலேயே நான்காவது ஒப்பந்தத்தை வலுக்கட்டாயமாகத் திணித்தது. அதே ஒப்பந்தங்களைத் திணித்த தலைமையைத் தேர்ந்தெடுக்கும் தேர்தலில் மட்டும் தொழிலாளர்கள் பங்கேற்காமல் ஒதுங்கியிருந்தனர்.

பென்சில்வேனியாவின் மக்கன்கியிலுள்ள எனது மேக் டிரக்ஸ் ஆலையில், 2023ஆம் ஆண்டு ஃபேய்னின் காட்டிக்கொடுப்பு ஒப்பந்தத்தை நாங்கள் நிராகரித்து வேலைநிறுத்தத்தில் இறங்கினோம். ஃபேய்ன் எங்கள் வேலைநிறுத்தத்தைச் சீர்குலைத்து, வாரத்திற்கு மேலும் இரண்டரை மணிநேர வேலைச் சுமையை எங்கள் மீது திணித்த ஒரு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டார்.

தொழிலாளர்கள் போராடுவதற்கான வழியைத் தேடிக்கொண்டிருக்கின்றனர். எனது பிரச்சாரத்தைப் பற்றி தொழிலாளர்கள் அறிந்துகொள்வதைத் தடுப்பதற்கு தொழிற்சங்க அதிகாரத்துவமும் கூட்டாட்சி கண்காணிப்பாளரும் இணைந்து முயற்சித்தபோதிலும், தொழிற்சாலைகளிலும் கல்விப் பணியாளர்களிடையேயும் நாங்கள் ஏறத்தாழ 2,000 வாக்குகளைப் பெற்றோம். எனக்கு வாக்களித்த ஒவ்வொரு தொழிலாளருக்கும் நான் நன்றி தெரிவிக்கிறேன். அதிகாரத்துவத்தை ஒழிப்பதற்கும், சாமானிய தொழிலாளர்களின் அதிகாரத்தை நிலைநாட்டுவதற்கும், தொழிலாளர் வர்க்கத்தின் சர்வதேச ஐக்கியத்திற்கும் ஆதரவாக நீங்கள் அளித்தது ஒரு வர்க்க உணர்வுள்ள, நனவுபூர்வமான வாக்காகும். அது வளர்ந்துவரும் அரசியல் தீவிரமயமாக்கலின் ஒரு பகுதியாகவும், சோசலிசத்தை நோக்கிய திருப்பத்தின் வெளிப்பாடாகவும் அமைந்துள்ளது.

இந்தத் தேர்தல் நாம் எதிர்கொள்ளும் நிலைமையையும் நாம் செய்ய வேண்டிய பணிகளையும் எவ்விதத்திலும் மாற்றவில்லை. எனது பிரச்சாரம் ஒருபோதும் ஒரு தனிநபரைப் பற்றியதாகவோ, தொழிற்சங்க எந்திரத்தில் ஒரு பதவியை வெல்லும் நோக்கத்தைக் கொண்டதாகவோ இருக்கவில்லை. தொழிலாளர்களுக்கு ஒரு வேலைத்திட்டத்தை முன்வைப்பதற்கும் ஒரு இயக்கத்தைக் கட்டியெழுப்புவதற்குமே நான் போட்டியிட்டேன். தொழிலாளர்கள் மேல்மட்டத் தலைமையில் ஒருவரைத் தேர்ந்தெடுத்தால் நிலைமைகள் மாறிவிடும் என்ற கருத்து இனி செல்லுபடியாகாது. அமெரிக்கக் காங்கிரஸ் மற்றும் வெள்ளை மாளிகைக்கான தேர்தல்களில் இது எவ்வளவு உண்மையோ, அதே அளவுக்கு UAW தேர்தல்களிலும் உண்மையாகும்.

ஜூன் மாத பிரதிநிதிகள் மாநாடு, தொழிற்சங்க எந்திரம் எவ்வாறு செயல்படுகிறது என்பதைத் தெளிவாகக் காட்டியது. உள்ளூர் தொழிற்சங்கக் கிளைகளால் சமர்ப்பிக்கப்பட்ட ஏறத்தாழ 100 தீர்மானங்களில், தீர்மானக் குழு ஒரு சிலவற்றை மட்டுமே பிரதிநிதிகள் மாநாட்டின் விவாதத்திற்கு முன்வைத்தது. ஆனால், சர்வதேச நிர்வாகக் குழு சமர்ப்பித்த 35 தீர்மானங்களும் நேரடியாக மாநாட்டின் விவாதத்திற்கு எடுத்துவரப்பட்டன. உறுப்பினர் சந்தாக்களைக் குறைப்பதாக அளிக்கப்பட்ட வாக்குறுதியை மாநாடு தடுத்ததுடன், உயர்மட்ட தொழிற்சங்க அதிகாரிகளின் ஊதிய உயர்வுகளுக்கும் ஒப்புதல் அளித்தது. அனைத்தும் மேல்மட்டத்திலிருந்து கட்டுப்படுத்தப்படுகின்றன.

தொழிலாளர்களின் முன்முயற்சியின்றி எதுவும் மாறப்போவதில்லை. இதன் பொருள், சாலிடாரிட்டி ஹவுஸின் (Solidarity House) அனுமதிக்காகக் காத்திருக்காமல், ஊதியங்கள், வேலைவாய்ப்புகள் மற்றும் வேலை நிலைமைகள் தொடர்பான போராட்டத்தை ஒழுங்கமைப்பதற்காக, ஒவ்வொரு தொழிற்சாலையிலும் பணியிடத்திலும் தொழிலாளர்களாலேயே கட்டுப்படுத்தப்படும் சாமானிய தொழிலாளர் குழுக்களைக் கட்டியெழுப்புவதாகும். UAW எந்திரத்தை ஒழித்து, அதிகாரத்தையும் முடிவெடுக்கும் உரிமையையும் தொழிற்சாலைத் தளத்தில் உள்ள தொழிலாளர்களிடம் மாற்றுவதே இந்தக் குழுக்களின் நோக்கமாகும்.

அந்தப் போராட்டம் சர்வதேச அளவிலானதாக இருக்க வேண்டும். UAW அதிகாரத்துவம் ட்ரம்பின் சுங்க வரிகளை ஆதரிப்பதுடன், பொருளாதாரத் தேசியவாதத்தையும் ஊக்குவிக்கிறது. வாக்குகள் எண்ணப்பட்டுக்கொண்டிருந்தபோது, எனது ஆதரவாளர்கள் ஒன்டாரியோவின் வின்ட்சரில், ஸ்டெல்லாண்டிஸ் வேலை வெட்டுக்களுக்கு எதிராக அமெரிக்கா, கனடா, மெக்சிகோ தொழிலாளர்களின் ஐக்கியத்திற்காகப் போராடிக்கொண்டிருந்தனர். வர்த்தகப் போர் தொழிலாளர்களான நம்மை ஒருவருக்கொருவர் எதிராக நிறுத்துகிறது; அதே வேளையில், பெருநிறுவனங்கள் எல்லையின் இரு பக்கங்களிலும் நமது வேலைகளை அழிப்பதற்காக ஒன்றிணைந்து செயல்படுகின்றன.

வரவிருக்கும் போராட்டங்கள் வேகமாக நெருங்கி வருகின்றன. வாழ்க்கைச் செலவுக்கு ஈடுகொடுக்காத பல ஆண்டுகால ஒப்பந்தங்களுக்குள் நாம் சிக்கவைக்கப்பட்டுள்ளோம். பணவீக்கம் 3.7 சதவீதம் என்று அரசாங்கம் கூறுகிறது. ஆனால், வாடகை, மளிகைப் பொருட்கள், சுகாதாரப் பராமரிப்பு, எரிபொருள், குழந்தைப் பராமரிப்பு உள்ளிட்ட வாழ்க்கையின் அத்தியாவசியத் தேவைகளுக்கான செலவுகள் இதைவிட மிக வேகமாக உயர்ந்துள்ளன என்பது ஒவ்வொரு தொழிலாளிக்கும் தெரியும். வாகனத் துறையில் ஆட்குறைப்புகள் ஏற்கெனவே தொடங்கிவிட்டன. மேலும், மில்லியன் கணக்கான வேலைவாய்ப்புகளை ஒழிப்பதற்காக, பெருநிறுவனங்கள் AI மற்றும் தானியக்கமயமாக்கலில் பில்லியன் கணக்கான டாலர்களை முதலீடு செய்து வருகின்றன.

பில்லியனர் தன்னலக்குழு உள்நாட்டில் ஜனநாயக உரிமைகள் மீது போர் தொடுத்து, உலகம் முழுவதும் போரைத் தீவிரப்படுத்தி வருகிறது; இவ்விரண்டுக்கும் தொழிலாளர்களான நம்மை விலை கொடுக்கச் செய்கிறது. இவை ஆலைகளில் நடைபெறும் போராட்டத்திலிருந்து தனியான பிரச்சினைகள் அல்ல. நமது வேலைகளையும் ஊதியங்களையும் வெட்டும் அதே பெருநிறுவனங்கள்தான் ஜனநாயகக் கட்சி, குடியரசுக் கட்சி ஆகிய இரு கட்சிகளையும் கட்டுப்படுத்துகின்றன. UAW எந்திரம் ஜனநாயகக் கட்சியுடன் பிணைக்கப்பட்டுள்ளது; 2028 ஜனாதிபதித் தேர்தலுக்கான சாத்தியமான வேட்பாளராக ஃபேயினை ஊடகங்கள் ஏற்கெனவே முன்னிறுத்தி வருகின்றன. பெருவணிகத்தின் இரு கட்சிகளில் எதையும் நம்பியிருப்பதன் மூலம், நமது வேலைகளையோ, ஊதியங்களையோ, உரிமைகளையோ தொழிலாளர்களான நம்மால் பாதுகாக்க முடியாது.

தொழிற்சங்க எந்திரத்திற்கு, அது சம்பளம் கொடுத்து வைத்திருக்கும் கையாட்களையும் அடிவருடிகளையும் தவிர வேறு எந்த ஆதரவுத் தளமும் இல்லை. உண்மையான அதிகாரம் தேர்தலைப் புறக்கணித்த நூறாயிரக்கணக்கான தொழிலாளர்களிடம்தான் உள்ளது. அவர்கள் போராட விரும்புகின்றனர். அந்த எதிர்ப்பு இப்போது ஒழுங்கமைக்கப்பட வேண்டும். ஒவ்வொரு ஆலையிலும் பணியிடத்திலும், சாமானிய தொழிலாளர் குழுக்களின் சர்வதேச தொழிலாளர் கூட்டணி மூலம் தொழில்துறைகளையும் தேசிய எல்லைகளையும் கடந்து இணைக்கப்பட்ட சாமானிய தொழிலாளர் குழுக்களைக் கட்டியெழுப்புவோம்.

ஆனால், பணியிடங்களில் அமைப்புகளை உருவாக்குவது மட்டுமே போதாது. ஆட்குறைப்புகள், பணவீக்கம், சர்வாதிகாரம் மற்றும் போர் ஆகியவற்றுக்கு எதிரான போராட்டம், முதலாளித்துவ அமைப்புமுறைக்கு எதிரான அரசியல் போராட்டமாகும். இதற்கு, ஜனநாயகக் கட்சி மற்றும் குடியரசுக் கட்சி ஆகிய இரண்டிலிருந்தும் சுயாதீனமான தொழிலாளர் வர்க்கத்தின் வெகுஜன சோசலிச இயக்கத்தைக் கட்டியெழுப்புவது அவசியமாகிறது. நமது உழைப்பால் உருவாக்கப்படும் பெரும் செல்வத்தைத் தன்னலக்குழுவின் கைகளிலிருந்து பறித்தெடுத்து, அதை உருவாக்கும் தொழிலாளர்களின் ஜனநாயகக் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவருவதே அதன் நோக்கமாகும். அந்தப் போராட்டத்தையே நான் தொடர்ந்து முன்னெடுப்பேன். எனக்கு வாக்களித்த ஒவ்வொரு தொழிலாளரையும், UAW இல் உள்ள அனைத்து தொழிலாளர்களையும் அந்தப் போராட்டத்தில் இணையுமாறு வலியுறுத்துகிறேன்.

தோழமையுடன்,

வில் லெஹ்மன்

Loading