முன்னோக்கு

ஐரோப்பா தழுவிய வேலைநிறுத்த அலை: ஐரோப்பியப் பொது வேலைநிறுத்தத்தைத் தயார்படுத்துங்கள்!

இந்த மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கு காணலாம்.

ரோம் நகர மையத்தில் உள்ள கொலோசியத்தின் முன்பாக, அரசாங்கத்தின் வரவு-செலவுத் திட்ட மசோதாவுக்கு எதிராகத் தொழிற்சங்கங்கள் அழைப்பு விடுத்த பொது வேலைநிறுத்தத்தின்போது, ஆர்ப்பாட்டக்காரர்கள் பேரணியாகச் செல்கின்றனர். 2026 நவம்பர் 20 வெள்ளிக்கிழமை. [AP Photo]

ஐரோப்பா முழுவதும் வர்க்கப் போராட்டத்தின் ஒரு புதிய கட்டம் உருவாகி வருகிறது. பிரான்ஸ், ஸ்பெயின், இத்தாலி ஆகிய நாடுகளில் நடைபெற்ற வெகுஜன வேலைநிறுத்தங்களையும், போர், கட்டாய இராணுவச் சேவை, சிக்கன நடவடிக்கைகள் ஆகியவற்றுக்கு எதிராக இளைஞர்கள் நடத்திய சர்வதேச ஆர்ப்பாட்டங்களையும் தொடர்ந்து, புதிய வேலைநிறுத்தங்களும் ஆர்ப்பாட்டங்களும் ஒழுங்கமைக்கப்படுகின்றன. போருக்கும் சமூக வெட்டுக்களுக்கும் எதிரான தீர்மானகரமான சக்தியாகத் தொழிலாள வர்க்கம் மேலும் மேலும் முன்னுக்கு வருகிறது.

செவ்வாய்க்கிழமை அன்று பிரான்சில் நடைபெற்ற நாடு தழுவிய வேலைநிறுத்தம் மற்றும் போராட்ட தினத்தில் 500,000க்கும் மேற்பட்டோர் பங்கேற்றதாகத் தொழிற்சங்கங்களின் புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன. வெள்ளிக்கிழமை அன்று இத்தாலியில் ஜியோர்ஜியா மெலோனியின் அரசாங்கத்தின் வரவு-செலவுத் திட்டத்திற்கு எதிராக 1.5 மில்லியன் வரையிலான தொழிலாளர்களும் இளைஞர்களும் ஆர்ப்பாட்டம் செய்ததாக இத்தாலிய பொதுத் தொழிலாளர் கூட்டமைப்பு (CGIL) தெரிவிக்கிறது. அதேவேளையில், பல நாடுகளில் போருக்கும் இராணுவவாதத்திற்கும் சிக்கன நடவடிக்கைகளுக்கும் எதிராக இளைஞர்கள் போராட்டம் நடத்தினர்; ஜேர்மனியில் மட்டும் ஏறத்தாழ 87,000 பேர் பங்கேற்றதாக ஏற்பாட்டாளர்கள் தெரிவித்துள்ளனர். ஜேர்மனியில் உலோக, மின்சாரத் தொழில்துறைகளைச் சேர்ந்த 151,000 தொழிலாளர்களும் ஒரு நாள் முழுவதும் வேலைநிறுத்தம் செய்தனர்.

நேற்று, திங்கட்கிழமை, பெல்ஜியத்தில் தொழிற்சங்கங்களின் நாடு தழுவிய அணிதிரட்டல் நடைபெற்றது; வேலைநிறுத்தங்களுடன் இணைந்து பிரஸ்ஸல்ஸில் ஒரு வெகுஜன ஆர்ப்பாட்டமும் நடைபெற்றது. புதன்கிழமை கிரீஸில் நாடு தழுவிய 24 மணி நேர வேலைநிறுத்தம் நடைபெறவுள்ளது; இதில் பொதுத்துறைத் தொழிலாளர்களுடன் இணைந்து நூற்றுக்கணக்கான தனியார்துறைத் தொழிற்சங்கங்களும் பங்கேற்கத் திட்டமிட்டுள்ளன. போர்த்துக்கல், ஸ்பெயின், பிரித்தானியா ஆகிய நாடுகளிலும் வேலைநிறுத்தங்கள் நடைபெற்று வருகின்றன.

இந்தப் போராட்டங்கள் இன்னும் ஒருங்கிணைக்கப்படவில்லை; ஆயினும் அவை அனைத்திற்கும் அடிப்படையான காரணங்கள் ஒன்றே: உண்மையான ஊதியங்களின் வீழ்ச்சி, விண்ணை முட்டும் வாழ்க்கைச் செலவு, பொதுச் சேவைகளின் அழிவு, போருக்கும் மீள் ஆயுதமயமாக்கலுக்குமான செலவை மக்கள் மீது சுமத்துதல்.

இது அடிப்படையான அரசியல் கேள்விகளை நிகழ்ச்சிநிரலுக்குக் கொண்டுவருகிறது. இந்தப் போராட்டங்கள் சுயாதீனமாகவும் தேசிய எல்லைகளைக் கடந்தும், அரசியல் அதிகாரம் குறித்த கேள்வியை எழுப்பும் ஒரு ஐரோப்பியப் பொது வேலைநிறுத்தமாக வளர்த்தெடுக்கப்பட வேண்டும். இதற்கு, நனவுபூர்வமான ஒரு சர்வதேச சோசலிச முன்னோக்கும் ஒரு புதிய புரட்சிகரத் தலைமையும் தொழிலாள வர்க்கத்திற்குத் தேவைப்படுகின்றன.

இத்தகைய ஒரு போராட்டத்தைத் தொழிற்சங்க அதிகாரத்துவங்களிடமிருந்து சுயாதீனமாகவும், இறுதியில் அவற்றுக்கு எதிராகவுமே ஒழுங்கமைக்க முடியும். அவை முதலாளித்துவத்தைப் பாதுகாக்கின்றன; போருக்கும் சிக்கன நடவடிக்கைகளுக்குமான கொள்கைகளை அடிப்படையில் ஆதரிக்கின்றன; போர்ப் பொருளாதாரத்தை ஒழுங்கமைப்பதிலும் அவையே பங்கேற்கின்றன. இதனால்தான், எதிர்ப்பைத் தேசிய வரம்புக்குள்ளும் கால வரம்புக்குள்ளும் மட்டுப்படுத்தவும், அந்தந்த அரசாங்கங்களை நோக்கிச் செலுத்தவும், முதலாளித்துவ ஆட்சியைக் கேள்விக்குள்ளாக்குவதற்கு முன்பே அதை நெரித்துவிடவும் அவை முயல்கின்றன.

பெல்ஜியமும் கிரீஸும்: தொழிற்சங்கங்கள் எதிர்ப்பைக் கட்டுப்படுத்துகின்றன

பெல்ஜியத்தில், வலதுசாரி தேசியவாதப் பிரதமர் பார்ட் டி வேவரின்  கொள்கைகள் கடுமையான அரசாங்க நெருக்கடியைத் தூண்டியுள்ளன. அவரது ஐந்து கட்சிக் கூட்டணி, 2029ஆம் ஆண்டுக்குள் மொத்தம் ஏறத்தாழ 10 பில்லியன் யூரோ அளவிலான செலவின வெட்டுக்களையும் கூடுதல் வருவாய் ஈட்டும் நடவடிக்கைகளையும் உள்ளடக்கிய திட்டத்தில் உடன்பாட்டை எட்டத் திணறி வருகிறது. பரிசீலனையில் உள்ள நடவடிக்கைகளில், ஊதியங்களைப் பணவீக்கத்திற்கு ஏற்பத் தானாகச் சரிசெய்யும் முறையின் மீதான கட்டுப்பாடுகள், நுகர்வு வரிகளின் அதிகரிப்பு, ஓய்வூதியங்கள், சுகாதாரப் பராமரிப்பு மற்றும் சமூக நல உதவிகள் மீதான தாக்குதல்கள் ஆகியவை அடங்குகின்றன.

நவம்பர் தொடக்கத்தில் டி வேவர் தனது பதவி விலகலை முன்வைத்தார். மன்னர் அவரைப் பேச்சுவார்த்தை மேசைக்கே திருப்பி அனுப்பினார். நாடு தழுவிய அணிதிரட்டல் நடைபெறும் அதே நாளில், வரவு-செலவுத் திட்டப் பேச்சுவார்த்தைகள் குறித்து பிரதமர் மீண்டும் அறிக்கை சமர்ப்பிக்க வேண்டியுள்ளது. அரசாங்கம் வெளிப்படையான நெருக்கடியில் சிக்கியுள்ள நிலையில், தொழிலாள வர்க்கத்தின் எதிர்ப்பு எழுகிறது.

ஆயினும், பெல்ஜியப் பொதுத் தொழிலாளர் கூட்டமைப்பு (FGTB), கிறிஸ்தவத் தொழிற்சங்கங்களின் கூட்டமைப்பு (CSC) மற்றும் சினோவா (Synova) ஆகிய தொழிற்சங்கங்களின் தலைமைகள், இந்த இயக்கத்தை வேலைநிறுத்தங்களுடன் இணைந்த ஒரு தேசிய ஆர்ப்பாட்ட நாளுக்குள் மட்டுப்படுத்துகின்றன. 21 பில்லியன் யூரோ மதிப்பிலான ஒரு மாற்று வரவு-செலவுத் திட்டத்தை முன்வைத்து, அரசாங்கத்திடம் முறையிடும் அவை, தமது முன்மொழிவுகள் பெல்ஜியப் பொருளாதாரத்தின் போட்டித்திறனை வலுப்படுத்தும் நோக்கத்தையும் கொண்டவை என்று வெளிப்படையாக அறிவிக்கின்றன. இந்தத் தாக்குதல்களை அடிப்படையிலேயே எதிர்ப்பதற்குப் பதிலாக, தொழிலாளர்களை தேசியப் பொருளாதார மற்றும் வரவு-செலவுக் கொள்கைகளின் வரம்புக்குள் கட்டிப்போட அவை முயல்கின்றன.

இதே கேள்வி கிரீஸிலும் எழுகிறது. மிட்சோடாகிஸ் அரசாங்கத்திற்கு எதிரான தனது அணிதிரட்டலை அரசு ஊழியர் தொழிற்சங்கக் கூட்டமைப்பு (ADEDY) ஒரு நாள் வேலைநிறுத்தத்திற்குள் மட்டுப்படுத்துகிறது. ஊதிய உயர்வுகள், ஐரோப்பியக் கடன் நெருக்கடியின்போது ரத்து செய்யப்பட்ட பொதுத்துறையின் 13ஆம், 14ஆம் மாத ஊதியங்களை மீண்டும் வழங்குதல் ஆகியவை அதன் கோரிக்கைகளில் அடங்கும். அதேவேளையில், ஏறத்தாழ 25 பில்லியன் யூரோ மதிப்பிலான மீள் ஆயுதமயமாக்கல் திட்டத்திற்கு அரசாங்கம் நிதியளித்து வருகிறது.

தொழிற்சங்க அதிகாரத்துவங்களுடனும் போலி-இடது கட்சிகளுடனும் கிரேக்கத் தொழிலாளர்களுக்குக் கசப்பான அனுபவம் உள்ளது. பல ஆண்டுகளாக, சிக்கன நடவடிக்கைத் திட்டங்களுக்கு எதிரான அவர்களின் போராட்டங்கள் ஒரு நாள் வேலைநிறுத்தங்களுக்குள் மட்டுப்படுத்தப்பட்டிருந்தன. 2015இல், இடதுசாரி எனப்படும் சிரிசா (SYRIZA) அரசாங்கம், தனது வாக்குறுதிகளையும், ட்ரொய்கா (ஐரோப்பிய ஆணையம், ஐரோப்பிய மத்திய வங்கி, சர்வதேச நாணய நிதியம்) விதித்த சிக்கனக் கட்டளைகளை நிராகரித்த பொதுவாக்கெடுப்பையும் காட்டிக்கொடுத்து, புதிய சமூகத் தாக்குதல்களைத் திணித்தது.

இந்த இரு நாடுகளின் அனுபவம், தொழிலாளர்கள் தமது போராட்டங்களைத் தேசியத் தொழிற்சங்க எந்திரங்களுக்கு ஏன் அடிபணியச் செய்யக் கூடாது என்பதைக் காட்டுகிறது. சர்வதேசத் தன்மையும் சுயாதீனமும் ஒருங்கே கொண்ட ஒரு இயக்கத்தால் மட்டுமே, நிதி மூலதனத்தின் இந்த ஐரோப்பா தழுவிய தாக்குதலை எதிர்க்க முடியும்.

தொழிற்சங்க அதிகாரத்துவங்கள் போருக்கும் சிக்கன நடவடிக்கைகளுக்குமான கொள்கைகளில் பங்காளிகளாக உள்ளன

இதே அடிப்படை நோக்குநிலையை இத்தாலியின் CGIL, பிரான்சின் பொதுத் தொழிலாளர் கூட்டமைப்பு (CGT), ஜேர்மனியின் ஐஜி மெட்டல் (IG Metall) தொழிற்சங்கம் மற்றும் ஐரோப்பா முழுவதிலுமுள்ள தொழிற்சங்க எந்திரங்களிடமும் காணலாம். அவை அரசு எந்திரங்களுடனும் பெருநிறுவனங்களுடனும் நெருக்கமாக ஒருங்கிணைந்துள்ளன; தத்தம் நாட்டின் தொழில்துறை அடித்தளத்தையும் போட்டித்திறனையும் பாதுகாக்கின்றன. இரண்டாம் உலகப் போருக்குப் பிந்தைய காலத்தில் ஐரோப்பிய முதலாளித்துவம் எதிர்கொள்ளும் மிக ஆழமான நெருக்கடியில், இது மேலும் மேலும் தொழிலாளர்களை, மீள் ஆயுதமயமாக்கலும் போர்ப் பொருளாதாரமும் முன்வைக்கும் கோரிக்கைகளுக்கு அடிபணிய வைப்பதையே பொருள்படுத்துகிறது.

இது ஜேர்மனியில் குறிப்பாகத் தெளிவாகத் தெரிகிறது. IG Metall தொழிற்சங்கம், தொழில்துறை முதலாளிகளின் கூட்டமைப்புகளுடன் இணைந்து, ஜேர்மன் ஆயுதத் தொழில்துறையை விரிவுபடுத்த வேண்டும் என்றும், ஜேர்மன் தலைமையின் கீழ் ஒரு புதிய போர் விமானம் உருவாக்கப்பட வேண்டும் என்றும் கோருகிறது. பேர்லினில், ரைன்மெட்டால் (Rheinmetall) நிறுவனம் வாகன உதிரிபாக உற்பத்தியிலிருந்து பீரங்கிக் குண்டுகளுக்கான உதிரிபாகங்களின் உற்பத்திக்கு மாறுவதற்கும், பிற ஆலைகளில் நடைபெறும் இதுபோன்ற மாற்றங்களுக்கும் அது உடனிருந்து ஆதரிக்கிறது. இதன் மூலம், “வேலைகளைப் பாதுகாப்பது” என்ற பெயரில் இராணுவமயமாக்கலை அது ஊக்குவிக்கிறது.

பிரெஞ்சு CGT-யும் தனது தொழில்துறைக் கொள்கையைத் தேசிய இராணுவத் திறன்களின் பாதுகாப்போடு பிணைக்கிறது. நவம்பர் தொடக்கத்தில், பிரெஞ்சுக் கடற்படைக்கும் ஆயுதத் தொழில்துறைக்குமான உற்பத்தித் தளங்கள் பிரெஞ்சுக் கட்டுப்பாட்டிலேயே தொடர்ந்து இருக்கும் வகையில் அரசு தலையிட வேண்டும் என்று அது கோரியது.

இத்தாலியின் CGIL போன்ற பிற தொழிற்சங்கங்கள் மீள் ஆயுதமயமாக்கலைப் பகிரங்கமாக விமர்சித்தாலும், அவையும் தமது போராட்டங்களைத் தேசியச் சீர்திருத்த முன்னோக்கிற்கு அடிபணியச் செய்கின்றன. மெலோனியின் வரவு-செலவுத் திட்டங்களுக்கு எதிராக CGIL ஒரு நாள் அளவிலான ஐந்து பொது வேலைநிறுத்தங்களை ஒழுங்கமைத்துள்ளது. அரசாங்கத்திற்கும் முதலாளித்துவத்திற்கும் எதிரான ஒரு சுயாதீன அரசியல் போராட்டத்தை வளர்த்தெடுப்பதற்குப் பதிலாக, அது வரவு-செலவுத் திட்டத்தில் திருத்தங்களைக் கோருவதுடன், அதே உறுதியுடன் இராணுவவாதத்தையும் சிக்கன நடவடிக்கைகளையும் ஆதரிக்கும் முதலாளித்துவ எதிர்க்கட்சிகளை நோக்கித் தொழிலாளர்களைத் திருப்பிவிடுகிறது.

போராட்டங்கள் மீது திணிக்கப்படும் தேசிய, கால வரம்புகள், தொழிற்சங்க அதிகாரத்துவங்களின் சமூகப் பாத்திரத்திலிருந்தே நேரடியாக எழுகின்றன. அவை முதலாளித்துவத்தைப் பாதுகாக்கின்றன; போருக்கும் சிக்கன நடவடிக்கைகளுக்குமான கொள்கைகளில் தாமே ஒருங்கிணைக்கப்பட்டுள்ளன; எதிர்ப்பு முதலாளித்துவ ஆட்சியைக் கேள்விக்குள்ளாக்குவதற்கு முன்பே அதைக் கட்டுப்படுத்த முயல்கின்றன.

போலி-இடது கட்சிகள் இந்தக் கொள்கைகளுக்கு ஆதரவளிக்கின்றன: ஒன்று, அவை மீள் ஆயுதமயமாக்கலையும் போரையும் நேரடியாக ஆதரிக்கின்றன; அல்லது, வேலைநிறுத்தங்களும் ஆர்ப்பாட்டங்களும் அரசாங்கங்களைத் தமது போக்கை அடிப்படையிலேயே மாற்றிக்கொள்ளும்படி நிர்ப்பந்திக்க முடியும் என்ற பிரமையைப் பரப்புகின்றன.

முதலாளித்துவம் போருக்கும் காட்டுமிராண்டித்தனத்திற்கும் இட்டுச் செல்கிறது

உலகளாவிய முதலாளித்துவ நெருக்கடி, அமைதியான சீர்திருத்தக் கொள்கைகளுக்குத் திரும்புவதற்கான எந்த வாய்ப்பையும் விட்டுவைக்கவில்லை. மக்ரோன், மெர்ஸ், கிளிங்பைல் தொடங்கி, மெலோனி, டி வேவர் வழியாக, ஸ்பெயினில் பெயரளவில் இடதுசாரியான ஸ்பானிய சோசலிசத் தொழிலாளர் கட்சி (PSOE), சுமார் (Sumar) ஆகியவற்றின் கூட்டணி அரசாங்கம் வரையிலான அனைத்து ஐரோப்பிய அரசாங்கங்களும், சமூகத் தேவைகளை நிதி மூலதனத்தின், மீள் ஆயுதமயமாக்கலின் நலன்களுக்கு அடிபணியச் செய்கின்றன.

கடந்த வியாழக்கிழமை பேர்லினில் நடைபெற்ற, “விருப்பமுள்ளவர்களின் கூட்டணி” (Coalition of the Willing) எனப்படும் அமைப்பின் உச்சிமாநாடு, போரைத் தீவிரப்படுத்துவது எவ்வளவு ஆக்கிரோஷமாக மேற்கொள்ளப்படுகிறது என்பதை வெளிப்படுத்தியது. உக்ரேனுக்கான இராணுவ ஆதரவைத் தொடரவும், ஐரோப்பாவின் போர்த் திட்டங்களையும் மீள் ஆயுதமயமாக்கல் திட்டங்களையும் முன்னெடுக்கவும், 37 நாடுகளின் பிரதிநிதிகளும், ஐரோப்பிய ஒன்றியத்தின், நேட்டோவின் தலைவர்களும் சான்சலர் அலுவலகத்தில் ஒன்றுகூடினர். 2027ஆம் ஆண்டுக்கு 45 பில்லியன் யூரோ வரையிலான கூடுதல் நிதி உதவியை வழங்குவதற்கான ஐரோப்பிய ஆணையத்தின் முன்மொழிவை ஜேர்மன் அரசாங்கம் ஆதரித்தது.

அணு ஆயுதமேந்திய ரஷ்யாவுடன் ஒரு நேரடி மோதலையும், அதன் மூலம் ஒரு பேரழிவுக்குரிய போரையும் ஐரோப்பியச் சக்திகள் பணயம் வைக்கின்றன. வரலாறு காணாத சமூக வெட்டுக்கள், இராணுவமயமாக்கல் மற்றும் ஜனநாயக உரிமைகள் மீதான தாக்குதல்கள் மூலமாகவும், இறுதியில் போர்க்களங்களில் தமது உயிர்களைப் பலிகொடுக்க வேண்டிய நிலையிலும், இதற்கான விலையைத் தொழிலாளர்களும் இளைஞர்களுமே செலுத்த நிர்ப்பந்திக்கப்படுகின்றனர்.

வளர்ந்து வரும் எதிர்ப்புக்கு ஆளும் வர்க்கங்கள் தமது தாக்குதல்களைக் கடுமையாக்குவதன் மூலமும், எதேச்சாதிகார ஆட்சி முறைகள் மூலமும், போருக்கான தயாரிப்புகள் மூலமும் பதிலளிக்கின்றன. இந்த வளர்ச்சிப்போக்கு முதலாளித்துவத்தின் முரண்பாடுகளிலிருந்தே எழுகிறது: சந்தைகள், மூலப்பொருட்கள், புவிசார் அரசியல் ஆதிக்கம் ஆகியவற்றுக்கான போராட்டம், ஏகாதிபத்தியச் சக்திகளுக்கு இடையிலான மோதல்களையும் தொழிலாள வர்க்கத்திற்கு எதிரான தாக்குதலையும் தீவிரப்படுத்துகிறது.

முதலாளித்துவம் மீண்டும் போருக்கும் காட்டுமிராண்டித்தனத்திற்கும் இட்டுச் செல்கிறது. இதைச் சுயாதீனமான ஒரு சர்வதேச சோசலிச இயக்கத்தின் மூலம் தொழிலாள வர்க்கம் எதிர்க்க வேண்டும்.

அரசியல் அதிகாரம் குறித்த கேள்வியை எழுப்பும் ஒரு ஐரோப்பியப் பொது வேலைநிறுத்தத்தைத் தயார்படுத்துங்கள்!

ஒவ்வொரு புதிய வேலைநிறுத்த அலையுடனும், இளைஞர்களின் தீவிரமயமாதலுடனும் இத்தகைய ஓர் இயக்கத்திற்கான அடித்தளங்கள் உருவாகி வருகின்றன.

நவம்பர் 20 அன்று நடைபெற்ற இளைஞர் போராட்டங்களில் சமூக சமத்துவத்திற்கான சர்வதேச இளைஞர் மற்றும் மாணவர் அமைப்பு (IYSSE) மேற்கொண்ட தலையீடு, ஒரு சோசலிச முன்னோக்கு எவ்வாறு வரவேற்கப்படுகிறது என்பதை எடுத்துக்காட்டியது. பேர்லினில், பள்ளி வேலைநிறுத்தக் குழுக்களின் ஒரு செய்தித் தொடர்பாளர் பொது வேலைநிறுத்தத்திற்கான கோரிக்கையை முன்வைத்தார்: “ஒரு சர்வதேச இளைஞர் வேலைநிறுத்தத்திலிருந்து ஒரு சர்வதேசப் பொது வேலைநிறுத்தம் வரை செல்வதே, தெளிவாகவே, சிறந்த முடிவாக இருக்கும்.” பேர்லின் சுதந்திரப் பல்கலைக்கழகத்தில், சுயாதீனமான சாமானிய தொழிலாளர்களின் நடவடிக்கைக் குழுக்களுக்கும் ஒரு சோசலிச நோக்குநிலைக்கும் அழைப்பு விடுத்ததற்காகச் சமூக சமத்துவத்திற்கான சர்வதேச இளைஞர் மற்றும் மாணவர் அமைப்பின் பேச்சாளருக்குப் பலத்த கரவொலி கிடைத்தது.

இளைஞர் போராட்டங்களைத் தொழிலாள வர்க்கத்துடன் ஒன்றிணைப்பதற்கு IYSSE போராடுகிறது. தொழிற்சாலைகள், துறைமுகங்கள், மருத்துவமனைகள், பள்ளிகள், போக்குவரத்துத் துறைகளில் உள்ள தொழிலாளர்களுக்குப் பொருளாதாரத்தை ஸ்தம்பிக்கச் செய்து, போர் எந்திரத்தை முடக்கும் வலிமை உள்ளது.

அந்த வலிமையை நனவுபூர்வமாகவும் சர்வதேச அளவிலும் அணிதிரட்டுவதற்கான போராட்டத்தைச் சாமானிய தொழிலாளர் குழுக்களின் சர்வதேச தொழிலாளர் கூட்டணி (IWA-RFC) முன்னின்று நடத்துகிறது. பணியிடங்களிலும் பள்ளிகளிலும் பல்கலைக்கழகங்களிலும் சுயாதீனமான, ஜனநாயக முறையில் கட்டுப்படுத்தப்படும் சாமானிய தொழிலாளர்களின் நடவடிக்கைக் குழுக்கள் உருவாக்கப்பட வேண்டும் என்று அது அழைப்பு விடுக்கிறது. இந்தக் குழுக்கள் ஒரு துறையிலிருந்து மற்றொரு துறைக்கும், தேசிய எல்லைகளைக் கடந்தும் தமது போராட்டங்களை ஒன்றிணைத்து, ஒரு ஐரோப்பியப் பொது வேலைநிறுத்தத்தைத் தயார்படுத்துவதுடன், அதற்கான அமைப்புக் கட்டமைப்பையும் வழங்கும்.

ஒரு ஐரோப்பியப் பொது வேலைநிறுத்தம், முதலாளித்துவ அரசாங்கங்கள் மீது அழுத்தம் கொடுப்பதை நோக்கமாகக் கொண்ட மற்றுமொரு குறியீட்டுப் போராட்டமாக இருக்கக் கூடாது. அதிகாரத்திற்கான ஓர் அரசியல் போராட்டத்தின் தொடக்கப் புள்ளியாக அது மாற வேண்டும்.

இதற்கு, வங்கிகளையும் பெருநிறுவனங்களையும் கைப்பற்றித் தனியார் உடைமையிலிருந்து அகற்றி, பொருளாதாரத்தை உழைக்கும் மக்களின் ஜனநாயகக் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவரும் ஒரு சோசலிச வேலைத்திட்டம் தேவைப்படுகிறது. ரஷ்யாவிலும் உக்ரேனிலும் உலகின் பிற பகுதிகளிலும் உள்ள தொழிலாளர்களுடன் ஐக்கியப்பட்ட ஐரோப்பிய ஐக்கிய சோசலிச அரசுகள் என்ற முன்னோக்கால், ஏகாதிபத்திய ஐரோப்பிய ஒன்றியம் பதிலீடு செய்யப்பட வேண்டும்.

எல்லாவற்றுக்கும் மேலாகத் தொழிலாள வர்க்கத்திற்கு ஒரு புதிய புரட்சிகரத் தலைமை தேவை. வர்க்கப் போராட்டத்தின் புறநிலையான சர்வதேசமயமாக்கலும் தீவிரமயமாக்கலும் சோசலிச நனவைத் தானாகவே உருவாக்குவதில்லை. வளர்ந்து வரும் வெகுஜன எதிர்ப்பு, ஒரு சர்வதேச சோசலிச முன்னோக்காலும், தமது போராட்டங்களை ஒன்றிணைத்து அரசியல் அதிகாரத்திற்கான தாக்குதல் நடவடிக்கையாக மாற்றும் திறன்கொண்ட ஒரு புரட்சிகரக் கட்சியாலும் ஆயுதபாணியாக்கப்பட்டுள்ளதா என்பதே தீர்மானகரமான கேள்வி.

இந்தத் தலைமையைக் கட்டியெழுப்புவதற்காகச் சோசலிச சமத்துவக் கட்சிகளும் நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவும் (ICFI) போராடுகின்றன. ஐரோப்பிய வேலைநிறுத்த அலை இந்தப் பணிக்கு மேலும் மேலும் சாதகமான நிலைமைகளை உருவாக்குகிறது. ஐரோப்பா முழுவதிலுமுள்ள தொழிலாளர்களையும் இளைஞர்களையும் இந்தப் பணியை நனவுபூர்வமாகவும் மிகுந்த உறுதியுடனும் முன்னெடுக்குமாறு நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழு அழைக்கிறது.

Loading