Socialist Equality Party (Sri Lanka)
சோசலிச சமத்துவக் கட்சியின் வரலாற்று சர்வதேசிய அடித்தளங்கள் (இலங்கை)

இலங்கையில் உத்தியோகபூர்வ சுதந்திரம்

10-1. இலங்கைக்கு சுய-அரசாங்கத்தை அனுமதிக்க பிரிட்டன் எடுத்த முடிவு, இலங்கை தேசிய காங்கிரஸ் (சி.என்.சி.) முன்னெடுத்த எந்தவொரு வெகுஜனப் பிரச்சாரத்தினதும் விளைபொருள் அல்ல. இந்து சமுத்திரத்தில் ஒரு மூலோபாய மையமாக அமைந்துள்ளதனால், இந்தத் தீவானது இரண்டாம் உலகப் போரின் போது நேசநாடுகளின் தென் கிழக்காசியக் கட்டளையகத்துக்கு தலைமையகமாக மாறியது. அமைச்சர்கள் சபையின் தலைவராக இருந்த டி.எஸ். சேனாநாயக்க, இலங்கை தேசிய காங்கிரஸ் யுத்தத்துக்கு வழங்கிய முழு ஆதரவைப் பயன்படுத்தி யுத்தத்துக்குப் பிந்திய சுய-அரசாங்கத்துக்காக மூடிய கதவுகளுக்குப் பின்னால் பேரம் பேசினார். சேனாநாயக்கவும் அவரது கூட்டாளிகளும் மேலாட்சிக்குட்பட்ட நிலைக்கு அதிகமாய் தமது பார்வையை செலுத்தவே இல்லை. அதாவது, தீவின் ஒட்டுமொத்த வெளிநாட்டு கொள்கைகளை மற்றும் பாதுகாப்புக் கொள்கைகளை தொடர்ந்தும் இலண்டனே தீர்மானிக்கும் வகையில், பிரிட்டன் ஏகாதிபத்தியத்தின் ஒரு இளைய பங்காளியாக இருப்பதே இந்த மேலாட்சிக்குட்பட்ட நிலையாகும். எந்தவொரு தீர்விலும் சிங்கள தட்டுக்களின் அரசியல் மேலாதிக்கத்தை தக்கவைத்துக்கொள்வதே பேச்சுவார்த்தைகளில் சேனாநாயக்கவின் பிரதான குறிக்கோளாக இருந்தது. அவர் வெளிநாட்டுக் கொள்கையை முழுவதுமாக பிரிட்டனே கட்டுப்படுத்துவதை எதிர்க்காத போதிலும், தீவின் தமிழ் பேசும் பெருந்தோட்டத் தொழிலாளர்களின் தலைவிதியை தீர்மானிப்பதற்காக இந்தியாவுடன் நடத்தப்படும் பேச்சுவார்த்தைகளுக்கு இலங்கையே பொறுப்பாக இருக்க வேண்டும் என வலியுறுத்தினார். 1944ல் இலண்டன் ஒரு புதிய அரசியலமைப்பை வரைவதற்காக சோல்பரி ஆணைக்குழுவை ஸ்தாபித்த போது, அதன் பிரதிநிதிகள் தமிழ் மற்றும் முஸ்லிம் பிரதிநிதிகளுடன் கலந்துரையாடல் நடத்துவதை சேனாநாயக்க எதிர்த்தார். சோல்பரி ஆணைக்குழு மட்டுப்படுத்தப்பட்ட சுய-அரசாங்கத்தை சிபாரிசு செய்த போதிலும் டொமினியன் அந்தஸ்தையும் கூட வழங்கத் தாமதித்ததற்குப் பின்னர், சேனாநாயக்கவும் இலங்கை தேசிய காங்கிரஸ் தலைவர்களும் 1945 செப்டெம்பரில் அந்த அறிக்கையை ஏற்றுக்கொள்ள வாக்களித்தனர்.

10-2. இலங்கையில், போல்ஷிவிக்-லெனினிஸ்ட் கட்சியின் தலைவர்கள் மட்டுமே யுத்தத்தை எதிர்த்து சுதந்திரத்துக்காகப் பிரச்சாரம் செய்ததால், அவர்கள் சிறையில் இருந்து கணிசமானளவு மரியாதையுடன் வெளியேவந்தனர். ஆயினும், யுத்தத்தின் போது பிலிப் குணவர்த்தனாவும் என்.எம். பெரேராவும் வரைந்த சந்தர்ப்பவாத நோக்குநிலை, விரைவில் கட்சிக்குள் ஒரு வெளிப்படையான பிளவாக வெளிவந்தது. போல்ஷிவிக்-லெனினிஸ்ட் கட்சியின் பிராந்திய குழுவின் அதிகாரத்தை இலங்கையில் ஏற்றுக்கொள்ள மறுத்த பிலிப் குணவர்த்தனாவும் என்.எம். பெரேராவும், யுத்தத்துக்கு முன்னர் பயன்படுத்திய லங்கா சம சமாஜக் கட்சி என்ற பெயரை பயன்படுத்தி தமது சொந்தக் கட்சியை ஸ்தாபித்தனர். 1941ல் லங்கா சம சமாஜக் கட்சி வரைந்த இலங்கைக்கான வேலைத்திட்டத்தை அந்தக் கட்சி மீண்டும் எடுத்துக்கொண்டதோடு, 1942ல் போல்ஷிவிக்-லெனினிஸ்ட் கட்சி ஸ்தாபிக்கப்பட்ட போதும், அதன் பின்னரும் அது எடுத்த தீர்மானங்களையும் சகல ஆவணங்களையும் மறுத்து ஒதுக்கியது. குணவர்த்தனாவும் பெரேராவும், லங்கா சம சமாஜக் கட்சியின் முன்னாள் உறுப்பினர்களுக்கும் ஓடுகாலிகளுக்கும் கதவுகளைத் திறந்துவிட்டதோடு பல்வேறு முதலாளித்துவ அமைப்புக்களுடன் கூட்டணி ஏற்படுத்திக்கொள்ளவும் முயற்சித்தனர். லங்கா சம சமாஜக் கட்சி தன்னை “நான்காம் அகிலத்திற்காக” என்பதாய் அறிவித்துக்கொண்ட போதும், அதனுடன் இணைப்பைப் பெறுவதற்கு அது முயற்சிக்கவில்லை. லங்கா சம சமாஜக் கட்சியின் தேசியவாத நோக்குநிலை, ட்ரொட்ஸ்கிசத்தில் இருந்து அடிப்படையில் பிரிவதையும் யுத்தத்துக்கு முந்திய சம சமாஜ வாதத்தின் குட்டி முதலாளித்துவ தீவிரவாதத்துக்கு மீண்டும் திரும்புவதையும் குறித்து நின்றது. “இந்திய போல்ஷிவிக்-லெனினிஸ்ட் கட்சி: ஒரு குறுங்குழுவாத மரண முடிவு” என்ற தலைப்பில் பிலிப் குணவர்த்தனா 1947ல் வெளியிட்ட ஒரு அறிக்கையில், ஒட்டுமொத்த போல்ஷிவிக்-லெனினிஸ்ட் கட்சி வேலைத்திட்டமும் ட்ரொட்ஸ்கிசமும் ஒரு தோல்விகண்ட வீரசாகசமே தவிர வேறொன்றுமல்ல எனத் தான் கருதுவதை தெளிவுபடுத்திவிட்டார்.

10-3. பிலிப் குணவர்த்தனாவையும் என்.எம். பெரேராவையும் வெளியேற்ற, இந்தியாவில் போல்ஷிவிக்-லெனினிஸ்ட் கட்சி மத்திய குழு எடுத்த தீர்மானமொன்று, “இந்தப் பிளவு தற்செயலான நிகழ்வு அல்ல, மாறாக, குட்டிமுதலாளித்துவ சக்திகளின் அழுத்தத்தின் கீழ் அபிவிருத்தியடைந்த, பாட்டாளி வர்க்கம் சாராத ஒரு போக்கின் தெளிவான வெளிப்பாடாகும்.... அமைப்பு மட்டத்தில் தெளிவாகக் காணக்கூடியதாய் இருக்கும் இன்றைய வேறுபாடுகள் அரசியல் மட்டத்தில் அபிவிருத்தி காணும் காலவிதியைக் கொண்டுள்ளன,” என்று முடிக்கப்பட்டிருந்தது. 1946ல் ஏற்படுத்தப்பட்ட ஒரு பரீட்சார்த்தமான மறுஐக்கியம் துரிதமாக நொருங்கி அரசியல் வேறுபாடுகளின் அடிப்படைப் பண்பை கோடிட்டுக் காட்டின.

10-4. போல்ஷிவிக்-லெனினிஸ்ட் கட்சியும் (இலங்கை பகுதி) லங்கா சம சமாஜக் கட்சியும், யுத்தத்தின் பின்னர் தோன்றிய போர்க்குணமிக்க வேலை நிறுத்த இயக்கங்களில் முன்னணிப் பாத்திரம் வகித்தமை, தொழிற்சங்க இயந்திரத்தைக் கட்டியெழுப்புவதற்காக யுத்த காலத்தில் வேலை நிறுத்தங்களை தகர்க்கும் அமைப்பாக தனது நிலையைப் பயன்படுத்திக்கொண்ட கம்யூனிஸ்ட் கட்சியின் செல்வாக்கைக் கீழறுத்தது. வங்கி எழுத்தர்களின் வேலை நிறுத்தத்துடன் 1946 ஆகஸ்ட்டில் வெடித்த ஒரு பொது வேலை நிறுத்தம், அடுத்த இரண்டு மாதங்களில் தொழிலாள வர்க்கத்தின் ஏனைய பகுதியினர் மத்தியிலும் பரவி, பிரிட்டனின் ஆளுனரை சில பொருளாதாரக் கோரிக்கைகளுக்கு இணங்கச் செய்தது. வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டவர்கள், பிரிட்டிஷ் ஆட்சியிடம் இருந்து சுதந்திரம் வேண்டும் என்ற அரசியல் கோரிக்கையையும் முன்வைத்தனர். தொழிலாள வர்க்கத்துக்கு எந்தவொரு சலுகையும் வழங்குவதை கடுமையாக எதிர்த்த இலங்கை தேசிய காங்கிரஸ் அமைச்சர்கள், 1946 உடன்பாடுகளின் நெறிமுறைகளை மீறி, 1947 மே-ஜூன் மாதங்களில் இரண்டாவது பொது வேலை நிறுத்தத்தை தூண்டினர். இந்த வேலை நிறுத்தம் வன்முறையான அடக்குமுறையை சந்தித்தது. ஆயிரக்கணக்கான அரசாங்க மற்றும் தனியார்துறை ஊழியர்கள் வேட்டையாடப்பட்டு, தமது வேலைகளை இழந்தனர். வேலைநிறுத்தத்தின் கடைசி நாட்களில் பொதுமக்கள் பாதுகாப்பு மசோதாவை நிறைவேற்றிய அரசாங்கம், பொலிசாருக்கு பரந்த அதிகாரங்களை கொடுத்தது.

10-5. இந்த வேலை நிறுத்தத்தை ஒட்டி, 1947 ஜூனில், இந்தியா மற்றும் பர்மா வரிசையில் இலங்கைக்கும் முழு டொமினியன் அந்தஸ்தை வழங்குவதாக பிரிட்டன் அரசாங்கம் அறிவித்தது. ஒரு வரலாற்றாசிரியர் எழுதியது போல்: “சேனாநாயக்கவும் [இலங்கை தேசிய காங்கிரஸ்] மிதவாதிகளும், ஏனைய விமர்சகர்களுக்கும் மேலாக, இடதுசாரி சக்திகளின் அதிகரித்துவரும் அழுத்தத்தை எதிர்கொள்கின்றனர்; டொமினியன் அந்தஸ்தை உடனடியாக வழங்குவதென்பது இப்போது அவர்களது அரசியல் உயிர்வாழ்க்கையை உறுதிசெய்கின்ற ஒரு வழியாக அவசரத் தேவையாக உள்ளது என்பது பற்றி பிரிட்டன் அரசாங்கத்திடம் ஒரு தெளிவான புரிந்துணர்வு இருந்தது.[18] 1947 பிற்பகுதியில் நடந்த அரச சபை தேர்தலில், இலங்கை தேசிய காங்கிரஸ் மற்றும் ஏனைய முதலாளித்துவ அமைப்புக்களில் இருந்து சேனாநாயக்கவால் புதிதாக ஸ்தாபிக்கப்பட்ட ஐக்கிய தேசியக் கட்சி (யூ.என்.பீ.), பரவலான வெற்றி பெற்று ஒரு கூட்டணி அரசாங்கத்தை அமைத்தது. போல்ஷிவிக்-லெனினிஸ்ட் கட்சி மற்றும் ல.ச.ச.க.யும் கணிசமான எண்ணிக்கையிலான ஆசனங்களை வென்றன.

10-6. ஐக்கிய தேசியக் கட்சியின் (யூ.என்.பி.) அரசியல்வாதியான எஸ்.டபிள்யூ.ஆர்.டி. பண்டாரநாயக்கவின் தலைமையின் கீழ், ஆளும் பாராளுமன்ற கூட்டணியொன்றை அமைக்க லங்கா சம சமாஜக் கட்சி சூழ்ச்சிகளை வகுத்ததில், சிங்கள முதலாளித்துவத்துக்கான அதன் சந்தர்ப்பவாத அடிபணிவு உடனடியாக அம்பலத்துக்கு வந்தது. வெளிப்படையாகவே இன மற்றும் மத அடிப்படையில் சிங்கள பெரும்பான்மையினரை ஐக்கியப்படுத்துவதற்காக 1919ல் அமைக்கப்பட்ட சிங்கள மகா சபைக்கு பண்டாரநாயக்கவே தலைவராக இருந்தார். கொல்வின் ஆர். டி சில்வா, 1939ல், சிங்கள மகா சபையானது “ஒரு ஆபத்தான பிற்போக்குச் சபையாகும்”, அது “காவிநிற பாசிசத்தின் ஒரு உள்ளூர் வடிவத்தை” எடுக்கும் சாத்தியத்தைக் கொண்டுள்ளது, என எச்சரித்தார்.[19] பண்டாரநாயக்கவின் கீழான ஒரு ஆளும் கூட்டணிக்கு ஆதரவளிக்க லங்கா சம சமாஜக் கட்சி எடுத்த முயற்சிகள், சிங்கள ஜனரஞ்சகவாதத்தை யூ.என்.பி.க்கு ஒரு முற்போக்கான மாற்றீடாக சித்தரித்துக் காட்டும் ஒரு ஆபத்தான பாதையை நோக்கிய முதல் அடியெடுப்பாக இருந்தது. இந்த பிற்போக்கு பாசாங்கில் பங்குபெற போல்ஷிவிக்-லெனினிஸ்ட் கட்சி மறுத்ததை அடுத்து லங்கா சம சமாஜக் கட்சியின் சூழ்ச்சித்திட்டங்கள் பொறிந்து போயின.

10-7. போல்ஷிவிக்-லெனினிஸ்ட் கட்சி மற்றும் லங்கா சம சமாஜக் கட்சியின் வர்க்க நிலைநோக்கில் இருந்த அடிப்படை வேறுபாடுகள், 1948 பெப்பிரவரி 4 அன்று பிரிட்டன் கையளித்த “சுதந்திரம்” சம்பந்தமான விடயத்தில் மேலும் வெளிச்சத்துக்கு வந்தது. அன்றைய தினம், “சுதந்திரம் உண்மையானதா போலியானதா” என்ற தலைப்பில் வெளியிடப்பட்ட சக்திவாய்ந்த அறிக்கையொன்றில், போல்ஷிவிக்-லெனினிஸ்ட் கட்சி தலைவர் கொல்வின் ஆர். டி சில்வா, இலங்கை மக்களுக்கு “சுதந்திர”க் கொண்டாட்டங்கள் பற்றி மகிழ்ச்சியுறுவதற்கு ஒன்றும் இல்லை, என அறிவித்தார். “அவர்கள் பெற்றுக்கொண்டுள்ள புதிய நிலை, “சுதந்திரம்” அல்ல. மாறாக, உண்மையில் பிரிட்டிஷ் ஏகாதிபத்தியத்தின் இலங்கை அடிமைகளின் சங்கிலிகளை மறுவடிவமைப்பு செய்வதாகும். பிரிட்டன் ஏகாதிபத்தியம் அந்த ஆட்சியை செலுத்துவதற்கான வழிமுறையின் தொடர்ச்சியே இதுவாகும்... இலங்கையின் ‘அந்தஸ்தில்’ ‘மாற்றம் எதுவும் இல்லை’ என மூடர்கள் மட்டுமே வாதிட முடியும். மாற்றமொன்று இருக்கின்றது. ஆனால், அந்த மாற்றத்தின் சாரம், இலங்கை காலனித்துவ நிலையில் இருந்து சுதந்திரமான நிலைக்குச் சென்றதைக் குறிக்கவில்லை. மாறாக, பிரிட்டிஷ் ஏகாதிபத்தியம் இலங்கையை நேரடியாக ஆளும் வழிமுறையில் இருந்து, மறைமுகமாக ஆளும் வழிமுறைக்கு மாறிச் சென்றுள்ளதையே குறிக்கிறது.”[20] போல்ஷிவிக்-லெனினிஸ்ட் கட்சி அரச சபையில் அரசாங்கத்தின் சுதந்திரம் சம்பந்தமான தீர்மானத்திற்கு எதிராக வாக்களித்தது மட்டுமல்லாமல், உத்தியோகபூர்வமாக ஏற்பாடு செய்யப்பட்ட விழாக்களுக்கு எதிராக, மத்திய கொழும்பில் காலிமுகத் திடலில், சுமார் 50,000 பேர் பங்குபெற்ற பெரிய கூட்டமொன்றையும் ஏற்பாடு செய்தது. இதற்கு நேர்மாறான விதத்தில், “சுதந்திரமானது” ஒரு மட்டுப்படுத்தப்பட்ட முன்நகர்வு எனப் பிரகடனம் செய்த லங்கா சமசமாஜக் கட்சி, பாராளுமன்றத்தில் வாக்களிப்பைப் புறக்கணித்தது. போல்ஷிவிக்-லெனினிஸ்ட் கட்சியின் பேரணியில் பங்குபெற மறுத்த லங்கா சம சமாஜக் கட்சி, அந்தப் பேரணி “பகட்டான போல்ஷவிக்குகள்” நடத்தும் “பகட்டுக்காட்சி, அதிதீவிர-இடதுசாரியம் மற்றும் சாகச நடவடிக்கை” எனக் கண்டனம் செய்தது.

10-8. பிரிட்டிஷ் ஏகாதிபத்தியத்துக்கும் இலங்கை முதலாளித்துவத்துக்கும் இடையில் ஏற்பட்ட “சுதந்திர” ஏற்பாட்டின் ஜனநாயக-விரோதப் பண்பு, ஐக்கிய தேசியக் கட்சி அரசாங்கம் எடுத்த முதல் நடவடிக்கைகளில் வெளிப்படையானது. ஐக்கிய தேசியக் கட்சி இலட்சக்கணக்கில் இருந்த தமிழ் பேசும் தோட்டத் தொழிலாளர்களின் அடிப்படை உரிமையான பிரஜா உரிமையை பறிக்கும் சட்டத்தை நிறைவேற்ற முடிவெடுத்தது. இந்த ஜனநாயக விரோதச் சட்டத்தை போல்ஷிவிக்-லெனினிஸ்ட் கட்சி சமரசமற்று எதிர்த்தது. கொல்வின் ஆர். டி சில்வா 1948 ஆகஸ்டில் ஆற்றிய உரையில், “அரசு தேசத்திற்கு சமமானதாகவும் தேசம் இனத்திற்கு சமமானதாகவும் இருக்கவேண்டும்” எனக் கருதுவது, “ஒரு காலங்கடந்த கருத்தும் தகர்த்தெறியப்பட்ட மெய்யியலும் ஆகும்” எனத் தெரிவித்தார். “நிச்சயமாக பாசிசத்தின் கீழேயே, தேசம் இனத்துக்கு சமமானதாக இருக்கும் என்பதோடு அரசை வடிவமைப்பதில் இனம் ஆதிக்கம்செலுத்தும் காரணியாகவும் இருக்கும். இந்தப் பிரச்சினையை இந்த அரசாங்கம் முதலாளித்துவ வர்க்க கோணத்தில் அணுகுமானால், நான்காம் அகிலத்தினராகிய நாம், அதாவது எமது கட்சி, இந்தப் பிரச்சினையை தொழிலாள வர்க்கத்தின் கோணத்தில் இருந்து அணுகுவோம். அதாவது, நாம் இனப் பிரச்சினையில் இருந்து சுயாதீனமாக மற்றும் இனப் பிரச்சினையை விடவும் மேலானதாக வர்க்க கோணத்தில் இருந்து அணுகுவோம். மனிதனுக்கு மனிதன் இன வம்சாவளியின் அடிப்படையிலான பிளவுகளை இந்த நாட்டின் உழைக்கும் மக்கள் மத்தியில் ஏற்படுத்த நாம் தயாரில்லை. ஒரு தொழிலாளி முதலும் முக்கியமுமாக ஒரு தொழிலாளியே என நாம் கூறுகின்றோம்,” என அவர் மேலும் கூறினார். குறிப்பிடத்தக்க வகையில், தீவின் வடக்கு மற்றும் கிழக்கில் அகில இலங்கை தமிழ் காங்கிரஸை பிரதிநிதித்துவம் செய்த தமிழ் முதலாளித்துவத் தட்டுக்கள், அந்த மசோதாவுக்கு வாக்களித்ததன் மூலம், தமிழ் பேசும் தோட்டத் தொழிலாளர்களின் உரிமைகளுக்கு எதிராக, தமது வர்க்க ஒத்துழைப்பை வெளிப்படுத்தினர். தமிழ் காங்கிரஸில் ஒரு சிறு குழு, இந்த சட்டத்தை எதிர்த்து, அதில் இருந்து வெளியேறி தமிழரசுக் கட்சியை அமைத்தது.

10-9. ட்ரொட்ஸ்கியின் நிரந்தரப் புரட்சி தத்துவத்தின் அடிப்படையில், யுத்தத்துக்குப் பிந்திய சுதந்திர ஏற்பாடுகளின் பண்பைப் பற்றி போல்ஷிவிக்-லெனினிஸ்ட் கட்சி செய்த தொலைநோக்கான ஆய்வுகள் காலத்திற்குத் தாக்குப் பிடித்து நின்றுள்ளன. மேலாதிக்கம் செய்யும் ஏகாதிபத்திய சக்தி என்ற பிரிட்டனின் நிலையை அமெரிக்கா ஆக்கிரமித்துக்கொண்டதும் மற்றும் சோவியத் ஒன்றியம், கிழக்கு ஐரோப்பா மற்றும் சீனாவில் ஸ்ராலினிச ஆட்சிகள் இருந்தமையானது சூழ்ச்சித் திட்டங்களுக்கு இடமளித்திருந்ததுமான அதேநேரத்தில், ஆசியாவிலும் ஆபிரிக்காவிலும் புதிதாக “சுதந்திரமடைந்த” முதலாளித்துவ அரசுகள், ஏகாதிபத்தியத்துக்கும் மற்றும் அமெரிக்காவால் ஸ்தாபிக்கப்பட்ட யுத்தத்துக்குப் பிந்திய பொருளாதார செயல்திட்டத்துக்கும் அடிபணிந்தவையாக தொடர்ந்தும் இருந்தன. இந்தியாவில் நேரு, இந்தோனேஷியாவின் சுகார்ணோ, எகிப்தில் நாசர் மற்றும் தான்சானியாவில் நைராரே போன்ற தலைவர்களால் தங்களை “ஏகாதிபத்திய எதிர்ப்பாளர்களாக” அல்லது “சோசலிஸ்டுகளாக” காட்டிக்கொள்ள முடிவதென்பது முதலாவதாக சோவியத் மற்றும் சீன ஸ்ராலினிஸ்டுகளிடம் இருந்து கிடைத்ததான விமர்சனமற்ற ஆதரவையும் அத்துடன் இரண்டாவதாக தேசியப் பொருளாதார ஒழுங்குக் கொள்கைகளையும் (இறக்குமதியை உள்நாட்டு உற்பத்தியைக் கொண்டு பிரதியீடு செய்வது, வரம்புபட்ட தேசியமயமாக்கல்கள் மற்றும் பொருளாதாரத் திட்டமிடல்கள் போன்றவை) சார்ந்ததாய் இருந்தது. சுதந்திரம் குறித்த மாயத்தோற்றமானது, யுத்தத்துக்குப் பிந்திய பொருளாதார வளர்ச்சியின் முடிவுடனும் மற்றும் தேசிய சீர்திருத்தக் கொள்கைகளை தாங்கிப்பிடித்துக்கொண்டிருந்த பிரெட்டன் வூட்ஸ் அமைப்பு முறையின் பொறிவுடனும் வெளிச்சத்துக்கு வந்தது. இந்தியா மற்றும் இலங்கையைப் போல், நாட்டுக்கு நாடு, தேசிய முதலாளித்துவம் அடிப்படை ஜனநாயகக் கடமைகளை முன்னெடுக்க இலாயக்கற்றது என்பதை நிரூபித்துள்ளது. முன்னாள் காலனித்துவ ஆட்சியாளர்களின் பொருளாதார நலன்கள் தொடர்ந்தும் பாதுகாக்கப்பட வேண்டி, முன்னதாக இருந்த இன-மொழி மற்றும் கலாச்சார உறவுகளை வெட்டி அவர்களால் ஸ்தாபிக்கப்பட்ட எல்லைக் கோடுகள் இன்னமும் நிலவுகின்றன. புதிய அரசுகளுக்குள், ஆளும் தட்டுக்கள், ஒரு இனக்குழு, பழங்குடிக் குழு அல்லது மதக் குழு எஞ்சியிருப்பவர்களின் மீது ஜனநாயக விரோதமாக மேலாதிக்கம் செய்வதன் மீது தான் பரவலாய் தங்களுக்கு அடித்தளம் அமைத்துக் கொண்டிருக்கின்றன.


[18]

.[18] [A History of Sri Lanka (இலங்கையின் வரலாறு) கே.எம். டி சில்வா, பக்கம் 460]

[19]

[Britain, World War 2 and the Sama Samajists (பிரிட்டனும் இரண்டாம் உலக யுத்தமும் சமசமாஜிஸ்டுகளும்) இளம் சோசலிஸ்டுகள் வெளியீடு, பக்கம் 63]

[20]

[Blows against the Empire, பக்கம் 127]