16-1. 1964 ஜூனில் சிறிமாவோ பண்டாரநாயக்கா அம்மையாரின் அரசாங்கத்துக்குள் லங்கா சம சமாஜ கட்சி நுழைந்துகொண்டமை, நான்காம் அகிலத்தின் வரலாற்றில் ஒரு பெரும் திருப்புமுனையாகும். முதல் தடவையாக ட்ரொட்ஸ்கிஸ்டுகள் என உரிமைகோரிய ஒரு கட்சி நேரடியாக முதலாளித்துவத்துக்கு சேவை செய்யச் சென்றது. இந்தக் காட்டிக்கொடுப்புக்கு ஐக்கிய செயலகமே முழுப் பொறுப்பாக இருந்ததோடு சற்றே ஒரு ஆண்டுக்கு முன்னர், பப்லோவாதிகளுடனான சோசலிச தொழிலாளர் கட்சியின் (அமெரிக்கா) கொள்கையற்ற மறு ஐக்கியம் பற்றி, பிரிட்டன் சோசலிச தொழிலாளர் கழகம் விடுத்த எல்லா எச்சரிக்கைகளையும் நிரூபித்தது. சோசலிச தொழிலாளர் கழகத்தின் தலைவர் ஜெரி ஹீலி, லங்கா சம சமாஜ கட்சியின் காட்டிக்கொடுப்பானது பப்லோ, மண்டேல் மற்றும் பியர் பிராங்கின் காட்டிக்கொடுப்புக்களுக்கு “முற்றுமுழுதுமான உதாரணமாகும்” என விளக்கினார். “கடந்த 18 ஆண்டுகளாக, இலங்கையில் லங்கா சம சமாஜக் கட்சியுடன் இடைவிடாது தொடர்புகொண்டிருந்ததனால், அவர்களே அதற்குப் பொறுப்பேற்க வேண்டும். இதற்கான [லங்கா சம சமாஜ கட்சியின் சீரழிவுக்கான] பதில், இலங்கையில் அன்றி, பப்லோவாத திருத்தல்வாதத்துக்கு எதிரான போராட்டம் பற்றிய ஒரு சர்வதேசிய ஆய்வில் தான் இருக்கின்றது. இந்தக் கூட்டணியின் உண்மையான சிற்பிகள் பாரிசில் தான் வசிக்கின்றனர்.”[35]
16-2. சிறிமாவோ பண்டாரநாயக்கா அரசாங்கத்துக்குள் ஸ்ராலினிச கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் பிலிப் குணவர்த்தனாவின் எம்.ஈ.பி., லங்கா சம சமாஜ கட்சி அடங்கிய ஐக்கிய இடது முன்னணி (ULF) ஊடாக லங்கா சம சமாஜ கட்சி நுழைவதற்கான பாதை ஐக்கிய செயலகத்தினாலேயே ஊக்குவிக்கப்பட்டு ஒப்புதலளிக்கப்பட்டது. சர்வதேச செயலகம், 1960ல் “தொழிலாள வர்க்கக் கட்சிகளுடன்” ஒரு தேர்தல் கூட்டணிக்கு அழைப்பு விடுத்ததோடு, 1963 மறு ஐக்கிய மாநாடானது, “வலதுபக்கம் நோக்கிசெல்லும் இயக்கத்தை தடுக்கவும் மற்றும் வெகுஜனங்கள் ஒரு மாற்று இடதை நோக்கி நகருவதற்கு உதவவும், லங்கா சம சமாஜ கட்சி ஐக்கிய இடது முன்னணி பிரச்சினையை சரியாக எழுப்பியது” எனப் பிரகடனம் செய்தது. [36] எவ்வாறெனினும், இந்த ஐக்கிய இடது முன்னணி (ஐ.இ.மு.), 1930களில் ட்ரொட்ஸ்கி எதிர்ப்புத் தெரிவித்த மக்கள் முன்னணியின் வடிவத்தை அப்படியே கொண்டிருந்தது. எல்லாவற்றுக்கும் மேலாக, அது வர்க்க கூட்டுழைப்பில் நிரூபணமான செயல்பாட்டு வரலாறுகளைக் கொண்ட கட்சிகளை உள்ளடக்கிக் கொண்டிருந்தது. இனவாத எம்.ஈ.பீ. 1956 ஸ்ரீ.ல.சு.க. அரசாங்கத்தில் பங்குபற்றியது என்பதோடு ஸ்ராலினிச கம்யூனிஸ்ட் கட்சி யுத்தத்தின் போது இலங்கை தேசிய காங்கிரஸின் பகுதியாக இருந்ததுடன், ஐக்கிய தேசியக் கட்சி விரும்பியிருந்தால் முதலாவது ஐ.தே.க அரசாங்கத்திலும் இணைந்திருக்கும்.
16.3. தொழிலாள வர்க்கத்தின் பெரும் ஐக்கியத்தின் மத்தியில், ஹர்த்தால் நடந்து 10வது ஆண்டு நிறைவின் போதே, 1963 ஆகஸ்ட் 12 அன்று ஐக்கிய இடது முன்னணி கூட்டணி உத்தியோகபூர்வமாக கையெழுத்திடப்பட்டது. புரட்சிகரக் கட்சியின் அரசியல் சுயாதீனம், அரசியல் வேலைத் திட்டங்கள், பதாகைகள் மற்றும் சுலோகங்களில் கலப்பின்மையை வலியுறுத்தி ட்ரொட்ஸ்கி முன்வைத்த ஐக்கிய முன்னணி தந்திரோபாயத்துக்கும் இந்த சந்தர்ப்பவாத அமைப்புக்கும் இடையில் பொதுவான தன்மை எதுவும் கிடையாது. பப்லோவாதிகள் அறிவித்தது போல், இந்த ஐக்கிய இடது முன்னணி கூட்டு “ஒரு தூய்மையான சோசலிச வேலைத்திட்டம் அல்ல”, மாறாக, முதலாளித்துவ வரம்புக்குள் பாராளுமன்றத்தின் ஊடாக இட்டுநிரப்பப்படும் வரம்புக்குட்பட்ட சீர்திருத்தங்களின் ஒரு பட்டியல் மட்டுமே. அதற்கும் மேலாக, ஐக்கிய செயலகம் அங்கீகரித்த வேலைத்திட்டம், எம்.ஈ.பீ.யின் இனவாத அரசியலுக்கு பெரும் சலுகைகளை கொடுத்தது. 1960ல் சிங்களமும், தமிழும் சம அந்தஸ்தில் இருக்கவேண்டும் என்ற கோரிக்கையை கைவிட்டு லங்கா சமசமாஜ கட்சி, இப்போது நடப்பில் உள்ள சிங்களம் மட்டும் சட்டத்தை குறைந்த பாரபட்சம் கொண்டதாக ஆக்க வேண்டும் என போலித்தனமாக அழைப்புவிடுக்கும் ஒரு பொது கூட்டுக்கு உடன்பட்டது. லங்கா சம சமாஜ கட்சியின் மத்திய குழுவுக்குள், எட்மண்ட் சமரக்கொடி தலைமையிலான ஒரு சிறுபான்மைக் குழு ஐக்கிய இடது முன்னணியின் வேலைத்திட்டத்தை மக்கள் முன்னணிவாதம் என சரியான முறையில் கண்டனம் செய்த போதிலும், ஐக்கிய இடது முன்னணியில் இருந்து வெளியேறுமாறு லங்கா சம சமாஜ கட்சியைக் கோரவில்லை. சமரக்கொடியின் நிலைப்பாடு மத்தியவாத நழுவலுக்கு ஒரு சிறந்த உதாரணம். முன்மொழியப்பட்ட விடயத்தின் சந்தர்ப்பவாத பண்பை அடையாளங்கண்டுகொள்ள அவரால் முடிந்த போதிலும், அவசியமான அரசியல் முடிவுகளை எடுத்துக்கொள்ளவும் என்.எம். பெரேரா தலைமையில் இருந்து முறித்துக்கொள்ளவும் அவரால் முடியவில்லை. பிரிட்டனில் சோசலிச தொழிலாளர் கழகத்தில் இருந்து மட்டுமே ட்ரொட்ஸ்கிச விமர்சனம் வந்தது. அது ஐக்கிய இடது முன்னணியை சந்தர்ப்பவாதிகள் எனக் கண்டனம் செய்ததோடு “நான்காம் அகிலத்தின் கொள்கைகள் மற்றும் வேலைத்திட்டத்தை” மீண்டும் உறுதிசெய்து “கட்சியில் இருந்து திருத்தல்வாதத்தையும் திருத்தல்வாதத் தலைவர்களையும் அகற்றுமாறு” லங்கா சமசமாஜ கட்சியில் இருந்த ”நூற்றுக்கணக்கான அர்ப்பணிப்புக்கொண்ட கம்யூனிஸ்டுகளுக்கு” அழைப்பு விடுத்தது.[37]
16-4. 1960ல் அது ஆரம்பிக்கப்பட்டதில் இருந்தே, ஸ்ரீ.ல.சு.க. அரசாங்கம் நெருக்கடிக்குள் இருந்து வந்தது. சிங்களம் மட்டும் கொள்கை சம்பந்தமாக தமிழர்களின் பரந்தளவான எதிர்ப்புக்கு பதிலிறுப்பாக, தமிழரசுக் கட்சியை தடை செய்த சிறிமாவோ பண்டாரநாயக்கா, 1961ம் ஆண்டின் பெரும்பகுதிக்கு அவசரகாலச் சட்டத்தை நடைமுறைப்படுத்தினார். அரசாங்கத்தின் சிக்கன நடவடிக்கைகளுக்கு எதிராக வளர்ச்சியடைந்து வந்த வேலைநிறுத்த இயக்கத்துக்கு மத்தியில், தொழிற்சங்க நடவடிக்கையைத் தடை செய்த அரசாங்கம், துறைமுகத்தில் இராணுவத்தை நிறுத்தியது. 1962 ஜனவரியில், மூத்த பொலிஸ் மற்றும் இராணுவ அதிகாரிகள் மேற்கொண்ட தோல்விகண்ட ஒரு சதிப்புரட்சி முயற்சி, தொழிலாள வர்க்கத்தை அடக்குவதில் சிறிமாவோ பண்டாரநாயக்காவின் திறமை பற்றி ஆளும் வட்டாரத்தின் மத்தியில் நிலவிய பீதியை வெளிப்படுத்தியது. 1963 செப்டெம்பரில், 21 பொதுக் கோரிக்கைகளைச் சூழ, தோட்டத் தொழிலாளர் சங்கங்கள் உட்பட சகல தொழிற்சங்கங்களும் இணைந்து தொழிற்சங்க கூட்டுக் குழு அமைக்கப்பட்டமை, வேலை நிறுத்தங்களுக்கு மேலும் செயலூக்கத்தை கொடுத்தது. லங்கா சமசமாஜக் கட்சியின் இலங்கை வர்த்தக ஊழியர்கள் சங்கம் (சி.எம்.யூ.) மேற்கொண்ட 69 நாள் வேலை நிறுத்தம், வேலைக்குத் திரும்பும்படி அரசாங்கம் விடுத்த இறுதிக் கெடுவை புறக்கணித்ததோடு 1964 ஜனவரிக்குள்ளாக கணிசமான சலுகைகளையும் வழங்க நிர்ப்பந்தித்தது. தனது பாராளுமன்ற பெரும்பான்மை உறுதியற்றிருந்த காரணத்தினால் சிறிமாவோ பண்டாரநாயக்கா பெப்பிரவரியில் பாராளுமன்றத்தை ஒத்தி வைத்தார்.
16-5. பிரமாண்டமான தொழிலாள வர்க்க இயக்கத்தைக் கையாளுவது எப்படி என்பது சம்பந்தமாக அவரது அமைச்சரவை நெருக்கடியில் இருந்த நிலையில், சிறிமாவோ பண்டாரநாயக்கா ஐக்கிய இடது முன்னணியில் இருந்த கட்சிகளுடன் பேச்சுவார்த்தையை தொடங்கினர். மார்ச் 21 அன்று, காலிமுகத் திடலில் மிகப்பெருந்தொகையான தோட்டத் தொழிலாளர்களின் பங்கேற்றத்துடன் 21 அம்சக் கோரிக்கைகள் இயக்கத்தின் பெரும் கூட்டமொன்றில் லங்கா சம சமாஜ கட்சித் தலைவர்கள் உரையாற்றிக்கொண்டிருந்த நிலையில், என்.எம். பெரேரா ஒரு கூட்டணி அரசாங்கத்தை அமைப்பது பற்றி சிறிமாவோ பண்டாரநாயக்காவுடன் இரகசியக் கலந்துரையாடலை நடத்திக்கொண்டிருந்தார். பேச்சுவார்த்தைகள் அம்பலத்துக்கு வந்ததும் தனது நடவடிக்கைகளை நியாயப்படுத்திய, முதலாளித்துவத்தின் வர்க்க நனவுகொண்ட பிரதிநிதியான சிறிமாவோ பண்டாரநாயக்கா, தனது பல்வேறு யோசனைகளைப் பற்றி வெளிப்படையாக விளக்கமளித்தார்: “ஒரு சர்வாதிகாரத்தை ஸ்தாபிப்பதன் மூலம் மட்டுமே இத்தகைய [வேலை நிறுத்த] பிரச்சினைகளை தீர்க்க முடியும் என சிலர் நினைக்கின்றனர். வேறு சிலர் தொழிலாளர்களை துப்பாக்கி முனையில் வேலைக்கு இழுத்துச் செல்ல வேண்டும் என்கின்றனர். இன்னும் பலர் இந்தப் பிரச்சினையை தீர்ப்பதற்கு தேசிய அரசாங்கமொன்றை அமைக்க வேண்டும் என்கின்றனர். நான் இந்த கருத்துக்களை வெவ்வேறாகவும் மற்றும் உலக நிகழ்வுகளின் சூழ்நிலையிலும் வைத்து நோக்கினேன். இந்தத் தீர்வுகளில் எதுவும் நாங்கள் செல்லவேண்டிய இடத்துக்கு செல்ல உதவாது என்பதே எனது முடிவு... எனவே, கனவான்களே, நான் தொழிலாள வர்க்கத் தலைவர்களுடன், குறிப்பாக திரு. பிலிப் குணவர்த்தனா மற்றும் திரு என்.எம். பெரேரா உடன் பேச்சுவார்த்தைகளை நடத்தத் தீர்மானித்தேன்” . [38]
16-6. கொல்வின் ஆர். டி சில்வா மற்றும் லெஸ்லி குணவர்த்தனா தலைமையிலான “மத்திய” கன்னை என அழைக்கப்பட்டதன் ஆதரவுடன், என்.எம்.பெரேரா தலைமையிலான லங்கா சம சமாஜ கட்சியின் வலது கன்னை, ஸ்ரீ.ல.சு.க. உடனான ஒரு கூட்டணிக்கு ஒப்புதலளிப்பதற்காக ஜூன் 6-7ம் திகதிகளில் கட்சி மாநாடு ஒன்றை அவசரமாக கூட்டியது. நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவின் சார்பில் இலண்டனில் இருந்து கொழும்புக்கு விரைந்த ஜெரி ஹீலி மாநாட்டுக்குள் நுழைவது தடை செய்யப்பட்ட போதிலும், அவர் மண்டபத்திற்கு வெளியில் தீவிரமாக பிரச்சாரம் செய்தார். உள்ளே என்.எம். பெரேரா முன்வைத்த தீர்மானம் காட்டிக்கொடுப்பை நியாயப்படுத்தியது. ஸ்ரீ.ல.சு.க. ஒரு முதலாளித்துவக் கட்சி அல்ல, மாறாக “அது தீவிரவாத குட்டி-முதலாளித்துவத்தையும் நடுத்தர வர்க்கத்தின் கீழ்த்தட்டினரையும் அடித்தளமாகக் கொண்ட ஒரு கட்சியாகும். அது மிகவும் பிற்போக்கான சக்திகளைக் கைவிட்டிருக்கிறது என்பதோடு பல்வேறு தேசியமயமாக்கல் நடவடிக்கைகளை மேற்கொண்டிருக்கிறது” என வாதிட்டது. இந்தப் பிரகடனங்கள், சீனாவில் கோமிண்டாங் போன்ற அமைப்புகள் பற்றி ட்ரொட்ஸ்கி எழுதிய சகலதையும் முழுமையாக நிராகரித்த அதேவேளை, கியூபா மற்றும் அல்ஜீரியாவில் குட்டி முதலாளித்துவ தலைமைகள் பற்றிய பப்லோவாத புகழ்ச்சியின் பாதையில் முழுமையாக பயணித்தன. லங்கா சமசமாஜ கட்சியின் தலைமை ஸ்ரீ.ல.சு.கட்சியின் இனவாதத்துக்கு முழுமையாக சரணடைந்ததை இந்தத் தீர்மானம் தெளிவாக்கியது. சிறிமாவோ பண்டாரநாயக்காவுடன் உடன்பாடு கொண்ட 10 கொள்கைகளின் பட்டியலில் மொழி மற்றும் பிரஜா உரிமை பிரச்சினைகள் குறித்து எதுவும் குறிப்பிடப்பட்டிருக்கவில்லை. “மத்திய” கன்னை முன்வைத்த தீர்மானங்கள் டி சில்வா மற்றும் பிலிப் குணவர்த்தனா போன்ற முன்னாள் இந்திய போல்ஷிவிக் லெனினிஸ்ட் கட்சியின் புரட்சியாளர்களின் அரசியல் மற்றும் நெறிமுறை பிறழ்வை வெளிச்சத்துக்கு கொண்டுவந்தது. ஸ்ரீ.ல.சு.கட்சிக்கு சரணடைவது சம்பந்தமான நிபந்தனைகளில், வெறுமனே லங்கா சமசமாஜக் கட்சியை மட்டுமன்றி, ஏனைய ஐக்கிய இடது முன்னணி கட்சிகளையும் கூட்டணி அரசாங்கம் உள்ளடக்கிக்கொள்ள வேண்டும் என்பதில் மட்டுமே அவர்கள் என்.எம். பெரேராவுடன் “கருத்துவேறுபாடு” கொண்டிருந்தனர்.
16-7. புதிதாக அமைக்கப்பட்ட புரட்சிகர சிறுபான்மையினரின் தீர்மானம், கூட்டணி அரசாங்கத்திற்கான முன்மொழிவை “பாட்டாளி வர்க்கப் புரட்சியை காட்டிக்கொடுத்ததாக” ஐயத்திற்கிடமின்றி கண்டனம் செய்தது. அது அறிவித்ததாவது: “ஸ்ரீ.ல.சு.க. அரசாங்கத்துக்குள் லங்கா சமசமாஜ கட்சி தலைவர்கள் நுழைந்தமை, பகிரங்கமான வர்க்கக் கூட்டுழைப்புக்கும், வெகுஜனங்களை தவறாக நோக்குநிலைப்படுத்துவதற்கும், தொழிலாள வர்க்கத்தில் பிளவை ஏற்படுத்துவதற்கும் மற்றும் போராட்ட முன்னோக்கை கைவிடுவதற்கும் வழிவகுப்பதுடன், தொழிலாள வர்க்க இயக்கம் தகர்த்தெறியப்படுவதற்கும் இடதுகளின் சுயாதீன புரட்சிகர அச்சு அழிக்கப்படுவதற்கும் வழிவகுக்கும். இதன் விளைவாக, முதலாளித்துவ பிற்போக்கு சக்திகள், பலவீனமடைவதற்கு அல்லது தூக்கிவீசப்படுவதற்குப் பதிலாக, இறுதியில் பலமடையும்.” என்.எம்.பெரேராவின் தீர்மானத்துக்கு 501 வாக்குகளும், “மத்திய” உட்குழுவுக்கு 75 வாக்குகளும் மற்றும் எதிர் தரப்பினருக்கு 159 வாக்குகளுமாக வாக்களிப்பு முடிந்ததை அடுத்து, புரட்சிகர சிறுபான்மை மாநாட்டை விட்டு வெளியேறி, தனியாக கூடி லங்கா சம சமாஜக் கட்சி [புரட்சிகர] (LSSP (R)) என உருவாகவிருந்த அமைப்பை ஸ்தாபித்தது.
16-8. இவை முழுவதிலும் ஐக்கிய செயலகம் முற்றிலும் சந்தர்ப்பவாதப் பாத்திரத்தை வகித்த்து. ஏப்பிரலில், அதாவது மாநாட்டுக்கு ஒரு வாரத்துக்கு முன்னதாக அது, இலங்கையில் ஐக்கிய இடது முன்னணியால் “இன்னொரு கியூபாவை அல்லது அல்ஜீரியாவை உருவாக்கவும், மற்றும் உலகம் பூராவும் உள்ள புரட்சிகரச் சிந்தனை கொண்ட தொழிலாளர்களுக்கு மேலும் உயர்ந்த ஊக்கத்தை கொடுக்கவும் முடியும்” எனப் பிரகடனம் செய்தது.[39] சிறிமாவோ பண்டாரநாயக்காவுடன் என்.எம். பெரேரா பேச்சுவார்த்தை நடத்தும் செய்தி பாரிசுக்குக் கிடைத்தபோது, ஐக்கிய செயலகம், தமது சொந்த அரசியல் பொறுப்பினை மூடிமறைக்கும் தடுமாற்றத்துடன் மீண்டும் ஐக்கிய இடது முன்னணிக்கு திரும்புமாறு அழைப்பு விடுத்தது. ஆனால், “கூட்டணியெனும் கசப்பான மாத்திரைக்கு இனிப்புச் சாயம் பூசுவது” என ஐக்கிய இடது முன்னணி பற்றி ஹீலி பொருத்தமாகக் கூறினார் – சிறிமாவோ பண்டாரநாயக்கா அரசாங்கத்துக்குள் நுழைவதற்கு என்.எம். பெரேரா பயன்படுத்திக்கொண்ட படிக்கல்லாக அது இருந்தது. ஐக்கிய இடது முன்னணியின் வேலைத்திட்டத்துக்கும் சிறிமாவோ பண்டாரநாயக்காவுடனான லங்கா சமசமாஜ கட்சியின் கொடுக்கல் வாங்கலுக்கும் இடையில் அடிப்படை வேறுபாடுகள் எதுவும் கிடையாது. ஐக்கிய செயலகம், ஸ்ரீ.ல.சு.க. அரசாங்கத்தில் அமைச்சர்களான என்.எம். பெரேராவையும் ஏனைய இரு உறுப்பினர்களையும் வெளியேற்றி, அவரது பிரேரணைகளுக்கு வாக்களித்த லங்கா சம சமாஜ கட்சி உறுப்பினர்களையும் இடைநீக்கம் செய்தது. ஆனால், லங்கா சம சமாஜ கட்சிக்குள்ளேயே இருந்த “மத்திய” கன்னை என அழைக்கப்பட்டதற்கு எதிராக பல மாதங்களாக எந்தவொரு நடவடிக்கையையும் எடுக்கவில்லை.
16-9. லங்கா சம சமாஜ கட்சியின் காட்டிக்கொடுப்பு சம்பந்தமாக தனது உறுப்பினர்கள் மத்தியிலான விமர்சனத்தையும் ஐக்கிய செயலகம் நசுக்கியது. அமெரிக்க சோசலிச தொழிலாளர் கட்சிக்குள், உத்தியோகபூர்வமாக ஒரு சிறுபான்மைக் குழுவாக இருந்த ரிம் வோல்போர்த் தலைமையிலான நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழு ஆதரவாளர்கள், நான்காம் அகிலத்தின் வரலாற்றில் முன்னெப்போதும் கண்டிராத ஒரு நிகழ்வாய் லங்கா சமசமாஜ கட்சி சிறிமாவோ பண்டாரநாயக்கா அரசாங்கத்துக்குள் நுழைந்ததைப் பற்றி கட்சிக்குள் கலந்துரையாட வேண்டும் என வலியுறுத்தியமைக்காக கட்சியிலிருந்து இடைநீக்கம் செய்யப்பட்டார்கள். அமெரிக்க சோசலிச தொழிலாளர் கட்சி பப்லோவாதிகளுடன் மறுஐக்கியப்பட்டதற்கு எதிராக 1961ல் இருந்து பிரிட்டன் சோசலிச தொழிலாளர் கழகத்துடன் சேர்ந்து போராடி வந்த சிறுபான்மையினர், நான்காம் அகிலத்தின் அமெரிக்கக் குழுவொன்றை ஸ்தாபித்தனர். இதுவே 1966 நவம்பரில் தொழிலாளர் கழகமாக [Workers League] மாற்றம்பெற்றது.
16-10. 1964 ஜூலையில் வெளியிடப்பட்ட ஒரு அறிக்கையில், நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழு இந்த தொலைநோக்குடைய முடிவை எடுத்தது: “லங்கா சம சமாஜ கட்சி உறுப்பினர்கள் சிறிமாவோ பண்டாரநாயக்கா கூட்டரசாங்கத்துக்குள் நுழைந்தமை, நான்காம் அகிலத்தின் பரிமாணத்தில் ஒரு முழு சகாப்தம் முடிவுக்கு வந்துள்ளதை குறிக்கின்றது. உலக ட்ரொட்ஸ்கிச இயக்கத்தினுள் இருந்த திருத்தல்வாதம் தொழிலாள வர்க்கத்திற்கு தோல்வியை அளிப்பதற்கான ஒரு தயாரிப்பில் ஏகாதிபத்தியத்துக்கு நேரடியான சேவை செய்வதில் தன்னை வெளிப்படுத்திக் கொண்டது.” [40]
திருத்தல்வாதத்துக்கு எதிராக ட்ரொட்ஸ்கிஸம் [Trotskyism Versus Revisionism, Volume Four (London: New Park, 1974), p. 225.]
இலங்கை, மாபெரும் காட்டிக்கொடுப்பு, ஜெரி ஹீலி, www.wsws.org, தமிழ், நூலகம்] Gerry Healy, “Ceylon, the Great Betrayal,” Trotskyism Versus Revisionism, Volume Four, pp. 233–4.
[நியூஸ் லெட்டரில் இருந்து, வை. ரன்ஜித் அமரசிங்க எழுதிய புரட்சிகர கருத்தியல்வாதமும் பாராளுமன்ற அரசியலும் என்ற நூலில் மேற்கோள் காட்டப்பட்டுள்ளது, பக்.261-262]
[Trotskyism Versus Revisionism நூலில் மேற்கோள் காட்டப்பட்டுள்ளது, பாகம் 4. பக். 241]
[Trotskyism Versus Revisionism, பாகம் 4, பக். 235]
[Trotskyism Versus Revisionism, பாகம் 4, பக். 255]