20-1. 1971 ஜே.வி.பி.யின் எழுச்சியுடன், அதிகரித்துவந்த பொருளாதார மற்றும் அரசியல் நெருக்கடியை எதிர்கொண்ட ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி - லங்கா சமசமாஜ கட்சி - கம்யூனிஸ்ட் கட்சி அரசாங்கம், அரச ஒடுக்குமுறையை விரிவுபடுத்துவதன் மூலமும் சிங்கள இனவாதத்துக்கு எரியூட்டுவதன் மூலமும் அதற்கு தனது பிரதிபலிப்பை காட்டியது. 1956ல் “சிங்களம் மட்டும்” கொள்கையை எதிர்த்த கொல்வின் ஆர். டி சில்வாவே, 1972ல் அரசியலமைப்பு விவகார அமைச்சராக இருந்து, புத்த மதத்தை அரச மதமாகவும் சிங்கள மொழியை மட்டும் உத்தியோகபூர்வ மொழியாகவும் உத்தியோகபூர்வமாக பிரகடனம் செய்த புதிய அரசியலமைப்பை வரைவதில் மையப் பாத்திரம் ஆற்றினார். அரசத்துறை தொழில்வாய்ப்பிலும் பல்கலைக்கழக அனுமதியிலும் தமிழ் மக்களுக்கு எதிராக பாரபட்ச நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன. தமிழரசுக் கட்சி, அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் போன்ற தமிழ் கட்சிகளும் மற்றும் இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் போன்ற பிரதான பெருந்தோட்டத் தொழிலாளர் அமைப்பும் புதிய அரசியலமைப்பை கசப்புடன் எதிர்த்ததோடு தமிழர் ஐக்கிய முன்னணி (TUF) என்பதை அமைத்தனர். இதுவே 1975ல் தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணியாக (TULF) மாற்றப்பட்டது.
20-2. 1973-74 எண்ணெய் அதிர்ச்சிகளும் உலக பொருளாதார மந்தநிலையும் இலங்கை மீது கடும் தாக்கத்தை ஏற்படுத்தின. உற்பத்திப் பொருட்களின் விலை அதிகரிப்பு, குறிப்பாக எண்ணெய் மற்றும் உணவு இறக்குமதியில் விலையேற்றம், ஒரு கூர்மையான அந்நியச் செலாவணி நெருக்கடியை ஏற்படுத்தியது. இதற்கு நிதி அமைச்சர் என்.எம். பெரேரா, உணவு இறக்குமதி மீது கடும் கட்டுப்பாடுகள், அரிசி போக்குவரத்தில் அரசின் ஏகபோக உரிமை மற்றும் சம்பளக் கட்டுப்பாடு போன்றவற்றை உள்ளடக்கிய தேசியப் பொருளாதார ஒழுங்குமுறையை விரிவாக்கினார். பெருந்தோட்டப் பகுதிகளில் வேலையின்மை, தொழில் நிரந்தரமின்மை மற்றும் விலைவாசி அதிகரிப்பும் கடுமையான வறுமைக்கும் நூற்றுக்கணக்கானவர்களின் பட்டினிச் சாவுக்கும் வழிவகுத்தது. இதற்கு சிறிமாவோ பண்டாரநாயக்க, 1974ல் இந்தியப் பிரதமர் இந்திரா காந்தியுடன் செய்துகொண்ட உடன்படிக்கையின் ஊடாக பலாத்காரமாக தோட்டத் தொழிலாளர்களை மீண்டும் இந்தியாவுக்கு திருப்பி அனுப்பும் நடவடிக்கையை துரிதப்படுத்துவதன் மூலம் எதிர்வினை ஆற்றினார். கூட்டணி அரசாங்கத்தின் மீது விரிவடைந்த பகைமை, ஒரு போர்க்குணமிக்க தொழிலாள வர்க்க போராட்ட அலையை உருவாக்கியது.
20-3. 1970ல் புரட்சிக் கம்யூனிஸ்ட் கழகத்தின் அரசியல் நிலைப்பாடு பற்றிய தெளிவுபடுத்தல், அபிவிருத்தியடைந்து வரும் வெகுஜன இயக்கத்தில் கட்சி தலையீடு செய்வதற்கு தீர்க்கமானதாக நிரூபணமானது. லங்கா சமசமாஜக் கட்சி மற்றும் கம்யூனிஸ்ட் கட்சியும் ஸ்ரீ.ல.சு.க.யில் இருந்து முறித்துக்கொண்டு தொழிலாளர்களதும் விவசாயிகளதும் அரசாங்கத்துக்காகவும் சோசலிசக் கொள்கைகளுக்காகவும் போராட வேண்டும் என்று புரட்சிக் கம்யூனிஸ்ட் கழகம் முன்வைத்த கோரிக்கை, கூட்டணி அரசாங்கத்தை கடுமையாக எதிர்த்த தொழிலாளர்களின் கணிசமான தட்டினரின் உணர்வுகளை ஈர்த்தது. இரத்மலானை புகையிரத வேலைத் தளங்களிலும், மத்திய வங்கி மற்றும் அரசுக்குச் சொந்தமான துல்ஹிரிய ஆடைத் தொழிற்சாலையிலும் குறிப்பிடத்தக்களவு தொழிற்சங்க அணிகளை அமைக்க கட்சியால் முடிந்தது. மற்றும் அது யாழ்ப்பாண குடாநாட்டில் சீநோர் தொழிற்சாலையிலும் குழுவொன்றை அமைத்தமை, சிங்கள மற்றும் தமிழ் தொழிலாள வர்க்கத்தை ஐக்கியப்படுத்துவதற்கான அதன் போராட்டத்தை பிரதிபலித்தது.
20-4. அரசாங்கத்தின் நெருக்கடி மோசமடைந்த நிலையில், சிறிமாவோ பண்டாரநாயக்க ஜனநாயக-விரோத வழிமுறைகளை நாடினார். ஸ்ரீ.ல.சு.க. தலைமையிலான அரசாங்கம், 1972 அரசியலமைப்புச் சபையில் அதற்கிருந்த அறுதிப் பெரும்பான்மையைப் பயன்படுத்தி 1977 வரை இரண்டு ஆண்டுகளுக்கு தனது ஆட்சிக் காலத்தை எதேச்சதிகாரமான முறையில் நீடித்துக்கொண்டது. ஜே.வி.பி. எழுச்சியின் போது திணிக்கப்பட்ட அவசரகால நிலைமையை அது நடைமுறையில் வைத்திருந்ததோடு ஊடகங்கள் மற்றும் அரசியல் எதிரிகளின் வாயை அடைப்பதற்காக அவசரகாலச் சட்டத்தை பயன்படுத்திக்கொண்டது. பொருளாதார கொள்கைகள் சம்பந்தமான வேறுபாடுகள் வளர்ச்சி கண்ட நிலைமையில், சிறிமாவோ பண்டாரநாயக்க 1975ல் லங்கா சம சமாஜ கட்சி அமைச்சர்களை பதவி நீக்கம் செய்ததோடு தீவை வெளிநாட்டு முதலீட்டுக்கு திறந்துவிடுவதை குறிக்கோளாகக் கொண்ட முதல் நடவடிக்கைகளை எடுக்கத் தொடங்கினார்.
20-5. 1975 செப்டெம்பரில் அரசாங்கத்தில் இருந்து லங்கா சம சமாஜக் கட்சி வெளியேற்றப்பட்டதில் இருந்து, 1977 ஜூலையில் அது அழிவுகரமாக தோல்வியடைந்தது வரையான காலப்பகுதி, 1968ல் இருந்து சர்வதேச அளவில் இடம்பெற்ற புரட்சிகர எழுச்சிகளின் பாகமாக, இலங்கை முதலாளித்துவத்துக்கும் பெரும் அரசியல் நெருக்கடி கொண்ட காலகட்டமாக இருந்தது. சிறிமாவோ பண்டாரநாயக்கவின் சிக்கனக் கொள்கைகள் வேலைநிறுத்த அலைகளை பெருக்கெடுக்கச் செய்ததோடு, அவற்றில் புரட்சிக் கம்யூனிஸ்ட் கழகம் மேலும் மேலும் முனைப்பான பாத்திரம் ஆற்றியது. புரட்சிக் கம்யூனிஸ்ட் கழகத்தின் தலையீட்டையிட்டு கவலைகொண்ட அரசாங்கம், பாராளுமன்றத்தில் கட்சியை பகிரங்கமாகத் தாக்கியது. இந்த நிலைமைகள் 1976 பிற்பகுதியில் உச்சக்கட்டத்தை அடைந்தன. நவம்பரில், பேராதனைப் பல்கலைக் கழகத்தில் ஒரு மாணவன் மீது துப்பாக்கிப் பிரயோகம் செய்ததற்கு எதிராக நடந்த பரந்தளவிலான மாணவர்களின் ஆர்ப்பாட்டங்களில் பத்தாயிரக்கணக்கான தொழிலாளர்களும் இணைந்துகொண்டார்கள். 1976 டிசம்பரில் இருந்து, ரத்மலானை புகையிரத வேலைத் தளங்களில் பணிகள் நிறுத்தப்பட்டதுடன் தொடங்கிய ஒரு பொது வேலை நிறுத்த இயக்கம், புகையிரத பகுதி பூராவும் துரிதமாக பரவியது. அரசாங்கம் வேலை நிறுத்தத்தினை தடை செய்த போதிலும் அது ஏனைய பொதுத் துறை தொழிலாளர்களின் வேலை நிறுத்தத்துக்கே ஊக்குவிப்பு கொடுத்தது. வாரக்கணக்காக சிறிமாவோ பண்டாரநாயக்க அரசாங்கத்தின் தலைவிதி ஊசலாடிக் கொண்டிருந்தது.
20-6. தொழிலாள வர்க்கத்தின் உறுதியான எதிர்த்தாக்குதலை எதிர்கொண்ட முதலாளித்துவ ஆட்சியின் உயிர்பிழைப்பு லங்கா சம சமாஜக் கட்சி, கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் புரட்சிகர லங்கா சம சமாஜக் கட்சியின் தலைவர்களில்தான் தங்கியிருந்தது, அவர்கள் வெகுஜன இயக்கம் எந்தவகையிலும் ஆட்சியைக் கைப்பற்றுவதை நோக்கி அபிவிருத்தியடைய விடாமல் தடுத்தனர், வேலை நிறுத்தக்காரர்களுக்கு எதிரான பொலிஸ் அரச நடவடிக்கைகளுக்கு ஆதரவளித்துக்கொண்டு அரசாங்கத்தில் நீடித்திருந்த கம்யூனிஸ்ட் கட்சி, வேலை நிறுத்தம் நசுக்கப்பட்ட பின்னர் 1977 பெப்பிரவரியிலேயே ஆளும் கூட்டணியை விட்டு வெளியேறியது. வேலை நிறுத்த இயக்கம் “அரசியல்-அற்றது” என பிரகடனம் செய்த லங்கா சமசமாஜக் கட்சி தலைவர்கள், வேலை நிறுத்தம் செய்த தொழிலாளர்களுக்கு ஆதரவளிக்க மறுத்தனர், அல்லது சிறிமாவோ பண்டாரநாயக்க அரசாங்கத்தை பதவியிறக்க எந்தவொரு அழைப்பும் விடுக்க மறுத்தனர். புரட்சிகர லங்கா சமசமாஜ கட்சி தலைவர் பாலா தம்புவின் கீழ் இருந்த சி.எம்.யூ. (Ceylon Mercantile Union) வேலை நிறுத்தத்தில் பங்குபற்ற மறுத்ததோடு சி.எம்.யூ. உறுப்பினர்களை அணிதிரட்ட புரட்சிக் கம்யூனிஸ்ட் கழகம் எடுத்த முயற்சிகளையும் எதிர்த்தது.
20-7. லங்கா சம சமாஜக் கட்சியும் மற்றும் கம்யூனிஸ்ட் கட்சியும் தொழிலாளர்களதும் விவசாயிகளதும் அரசாங்கத்துக்கும் மற்றும் சோசலிசக் கொள்கைகளுக்கும் போராட வேண்டும் என்று புரட்சிக் கம்யூனிஸ்ட் கழகம் முன்வைத்த கோரிக்கையை தாக்குவதில் புரட்சிகர லங்கா சம சமாஜ கட்சியும் அதில் இருந்து பிரிந்து சென்ற பல்வேறு குழுக்களும் தீர்க்கமான பாத்திரம் ஆற்றின. ஆட்சியைக் கைப்பற்றக் கோருவதன் மூலம் சீர்திருத்தவாத கட்சிகளான லங்கா சம சமாஜக் கட்சி மற்றும் கம்யூனிஸ்ட் கட்சி சம்பந்தமாக புரட்சிக் கம்யூனிஸ்ட் கழகம் மாயையை உருவாக்கிவிடுவதாக துல்சிறி அந்திராதி விமர்சித்தார். எவ்வாறெனினும், புரட்சிக் கம்யூனிஸ்ட் கழகம் முன்வைத்த கோரிக்கையானது, இந்தக் கட்சிகளுக்கு ஆதரவாக பிரச்சாரம் செய்வதை குறிக்கோளாகக் கொண்டதல்ல. மாறாக, லங்கா சமசமாஜக் கட்சி மற்றும் கம்யூனிஸ்ட் கட்சியிடம் இன்னமும் மனமின்றி தலைமையை எதிர்பார்த்திருக்கும் தொழிலாள வர்க்கத்தில் சோசலிச-எண்ணம் கொண்ட தட்டினர் மீது அவர்கள் கொண்டுள்ள பிடியை அகற்றுவதை இலக்காகக் கொண்டதாகும். இடது-கோசம் எழுப்பும் அந்திராதியின் கண்டனம், உண்மையில், லங்கா சம சமாஜக் கட்சி மற்றும் கம்யூனிஸ்ட் கட்சியை அம்பலப்படுத்தும் இன்றியமையாத அரசியல் பணியை தட்டிக்கழிப்பதோடு, அதன் மூலம் தொழிலாளர்களை இத்தகைய கட்சிகளின் பிடியிலேயே விட்டுவைப்பதை குறிக்கோளாகக் கொண்டதாகும். லங்கா சம சமாஜக் கட்சி, கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் புரட்சிகர லங்கா சம சமாஜக் கட்சி இந்த வெகுஜன இயக்கத்தை காட்டிக் கொடுத்தமை, ஐக்கிய தேசியக் கட்சி மீண்டும் ஆட்சிக்கு வருவதற்கு வழிவகுத்தது. 1977 ஜூலை தேர்தலில், கூட்டணிக் கட்சிகள் தோல்வியில் நசுங்கின: 168 ஆசனங்களில் ஐக்கிய தேசியக் கட்சி 140 ஆசனங்களை வென்றது; ஸ்ரீ.ல.சு.க. 8 ஆசனங்களையே தக்க வைத்துக்கொண்டது; லங்கா சம சமாஜக் கட்சி மற்றும் கம்யூனிஸ்ட் கட்சி சகல ஆசனங்களையும் இழந்தன.
20-8. இலங்கைத் தொழிலாள வர்க்கத்தில் பழைய தலைமைகளுக்கு எதிராக தனது அரசியல் போராட்டத்தை புரட்சிக் கம்யூனிஸ்ட் கழகம் ஆழப்படுத்திக்கொண்டிருந்த நிலையில், பிரிட்டனில் அத்தகைய போராட்டத்தில் இருந்து தொழிலாளர் புரட்சிக் கட்சி (WRP) தூர விலகி நின்றது. 1974ல் பிரிட்டிஷ் சுரங்கத் தொழிலாளர்களின் உறுதியான வேலை நிறுத்தத்தின் விளைவாக, பிரிட்டனில் ஹீத் அரசாங்கம் கவிழ்க்கப்பட்டமை, சிறுபான்மை தொழிற் கட்சி அரசாங்கத்தை ஆட்சிக்கு கொண்டுவந்தது. போர்க்குணம் மிக்க தொழிலாள வர்க்கத்தின் டோரிவாத-எதிர்ப்பின் அடிப்படையிலேயே முக்கியமாக ஒரு வருடத்துக்கு முன்னர் ஸ்தாபிக்கப்பட்டிருந்த தொழிலாளர் புரட்சிக் கட்சி ஒரு அரசியல் நெருக்கடியை எதிர்கொண்டதோடு நூற்றுக்கணக்கான உறுப்பினர்களின் இழப்பை எதிர்கொண்ட நிலையில், இப்போது சமூக ஜனநாயகத்தில் தொழிலாளர்களுக்கு எஞ்சியிருந்த போலி நம்பிக்கைகளுக்கு எதிராகப் போராடுவது அதற்கு அவசியமாக இருந்தது. இந்தப் போலி நம்பிக்கைகள், ஒரு மத்திய குழு உறுப்பினரும் முன்னணி தொழிற்சங்க வாதியுமான அலன் தோனட்டின் தலைமையிலான ஒரு கொள்கையற்ற, வலதுசாரிக் குழுவினால் தெளிவாக வெளிப்படுத்தப்பட்டன. தொழிற் கட்சி அரசாங்கம் முதலாளித்துவத்துடன் மோதலுக்கு வரும் என அது வாதிட்டது. தொழிற் கட்சி வாதத்தின் வர்க்கப் பண்பைப் பற்றி உறுப்பினர்களுக்கு தெளிவுபடுத்தி அதன் மூலம் தொழிலாள வர்க்கத்துக்குத் தெளிவுபடுத்தப் போராடுவதற்கு மாறாக, தொழிலாளர் புரட்சிக் கட்சி அரசியல் கலந்துரையாடல்கள் இன்றியே தோர்நெட் குழுவை வெளியேற்றியது. தொழிற் கட்சி இன்னமும் அநேகமான தொழிலாளர்களின் விசுவாசத்தை கொண்டிருந்த அதே வேளை, புரட்சிகர கட்சி ஒரு பதிலீட்டை கொடுக்கும் நிலையில் இல்லாதபோது, தொழிலாளர் புரட்சிக் கட்சி 1975 ஜூலையில் தொழிற் கட்சி அரசாங்கத்தை பதவியிறக்க அழைப்பு விடுத்தமை, அது தொழிலாளர்களை அரசியல் ரீதியில் பயிற்றுவிப்பதற்கு பொறுமையாக போராடுவதை கைவிட்டிருந்தது தெரியவந்தது. இந்த இடது-கோசம் கொண்ட அழைப்புகளின் பின்னால், தொழிற் கட்சித் தலைமைக்கு எதிரான அரசியல் போராட்டத்தை தொழிலாளர் புரட்சிக் கட்சி கைவிட்டிருந்ததோடு தொழிற்சங்க அதிகாரத்துவத்தின் ஒரு பிரிவினருக்கும் அடிபணிந்தது.
20-9. புரட்சிக் கம்யூனிஸ்ட் கழகத்துக்குள்ளேயும் இத்தகைய ஒரு நிலைப்பாட்டை திணிப்பதற்கு தொழிலாளர் புரட்சிக் கட்சி முயற்சித்தது. 1975 செப்டெம்பரில் பாலசூரியவுக்கு கடிதம் எழுதிய மைக் பண்டா, “பிரச்சாரவாத வால் மீண்டும் மார்க்சிய நாயை ஆட்டுவதையிட்டு நான் கவலைகொண்டுள்ளேன். உங்களது பிரசுரத்தில், திருத்தல்வாதிகளை அம்பலப்படுத்த (சரியான முறையில்) அதிக இடம் கொடுக்கப்பட்டது பிரதிபலித்துள்ளது ஆனால் அதிகாரத்திற்கான போராட்டத்தின் ஊடாக கருத்துப்பொருட்களை ஸ்தூலமாக அபிவிருத்தி செய்வதற்காக போதுமானளவு செய்யப்படவில்லை” எனத் தெரிவித்தார். லங்கா சம சமாஜக் கட்சி மற்றும் கம்யூனிஸ்ட் கட்சி மீதான கோரிக்கைகளை புரட்சிக் கம்யூனிஸ்ட் கழகம் கைவிட வேண்டும் என அழைப்பு விடுத்த பண்டா, இது கட்சி “மத்தியவாதிகளுக்கு அடிபணிவதில் முடிவடையும்” என எச்சரித்து, ஸ்ரீ.ல.சு.க. அரசாங்கத்தைக் கவிழ்க்க அழைப்பு விடுமாறு கோரினார். லங்கா சம சமாஜக் கட்சியும் மற்றும் கம்யூனிஸ்ட் கட்சியும் தொழிலாளர் அரசாங்கத்திற்காகப் போராடவேண்டும் எனக்கோருவதன் மூலம் அவற்றை அம்பலப்படுத்துவதில் புரட்சிக் கம்யூனிஸ்ட் கழகம் உறுதியாக இருந்தது. எல்லாவற்றுக்கும் மேலாக, “நான்காம் அகிலத்தை பாதுகாத்து : ட்ரொட்ஸ்கிச - விரோத வஞ்சகனுக்கு ஒரு பதில்” என்ற தலைப்பில் 1975ல் அந்திராதிக்கு எழுதிய புத்தக அளவிலான பதில் உள்ளடங்கியதும் புரட்சிக் கம்யூனிஸ்ட் கழகத்தின் “பிரச்சாரவாதம்” என மற்றவர்களால் கூறப்பட்டதுமான பல்வேறு பப்லோவாத குழுக்களுக்கு எதிரான பாலசூரியாவின் வாதங்கள், தொழிலாள வர்க்கத்தினுள் புரட்சிக் கம்யூனிஸ்ட் கழகம் தலையீடு செய்வதற்கான இன்றியமையாத தயாரிப்பாக இருந்தன.
20-10. 1975-77 எழுச்சிகள் தீர்மானகரமான அரசியல் பரீட்சை என்பது நிரூபிக்கப்பட்டது. தனது அரசியல் பாதை பற்றிய 1970 ஆம் ஆண்டின் தெளிவுபடுத்தலில் உறுதியாக நின்ற புரட்சிக் கம்யூனிஸ்ட் கழகம், வர்க்க நனவுகொண்ட தொழிலாளர்கள் மத்தியில் அதனது நிலையை சிறப்பாக விரிவுபடுத்திக்கொண்டது. சிறிமாவோ பண்டாரநாயக்கா அரசாங்கத்துக்கு எதிராக சோசலிச வேலைத்திட்டத்தின் அடிப்படையில் தொழிலாள வர்க்கத்தை அணிதிரட்டப் போராடிய ஒரே கட்சி புரட்சிக் கம்யூனிஸ்ட் கழகம் மட்டுமே ஆகும். பாலா தம்பு, சமரக்கொடி மற்றும் அந்திராதி தலைமையிலான புரட்சிகர லங்கா சமசமாஜ கட்சியின் சகல குழுக்களும் அடுத்த சில ஆண்டுகளுக்குள் இலங்கை அரசியலில் இருந்து காணாமல் போயின. அவர்களின் இடத்தை, முன்னாள் லங்கா சமசமாஜக் கட்சி உறுப்பினர்களினால் 1978ல் ஸ்தாபிக்கப்பட்ட நவ சம சமாஜக் கட்சி எடுத்துக்கொண்டது. நவ சம சமாஜக் கட்சியை ஸ்தாபித்தவர்கள், 1964 காட்டிக்கொடுப்புக்கும், இரண்டாவது கூட்டணி அரசாங்கத்துக்கும் அதன் இனவாத கொள்கைகளுக்கும் ஆதரவளித்திருந்ததோடு வேலை நிறுத்த அலை தோன்றிய காலம் பூராவும் லங்கா சம சமாஜக் கட்சியிலேயே இருந்தனர். 1977 தேர்தல் தோல்வியின் பின்னரே அவர்கள் அதில் இருந்து வெளியேறினர். அதனது பெயரில் சுட்டிக்காட்டப்படுவது போலவே, நவ சம சமாஜக் கட்சி வெறுமனே புதிய முகத்தைக்கொண்ட பழைய சந்தர்ப்பவாத சம சமாஜ வாதமாகவே இருந்தது. அது லங்கா சமசமாஜக் கட்சியின் பப்லோவாத வர்க்க கூட்டிணைவையும் மற்றும் கூட்டணிவாதத்தையும் தொடர்ந்தும் பேணியதோடு, மிகவும் பொருத்தமான முறையில், 1981ல் பப்லோவாத ஐக்கிய செயலகத்தின் இலங்கை பகுதியாகவும் மாறியது.
20-11. இலங்கையில் பண்டாரநாயக்க அரசாங்கத்தின் எழுச்சியும் வீழ்ச்சியும், தெற்காசியாவில் ஏனைய இடங்களிலும் உறைக்கத்தக்க சமாந்தர நிகழ்வுகளைக் கண்டன. 1970களின் பொருளாதார நெருக்கடியின் மத்தியில், பாகிஸ்தானில் சுல்பிகார் அலி பூட்டோவின் அரசாங்கமும் இந்தியாவில் இந்திரா காந்தியின் அரசாங்கமும், போலி-சோசலிச வாய்ச்சவடால்கள் மற்றும் ஜனரஞ்சகவாத தேசியவாதத்தின் ஊடாக தொழிலாள வர்க்கத்தையும் ஒடுக்கப்பட்ட உழைப்பாளிகளையும் முதலாளித்துவத்துடன் கட்டிப்போட முயற்சித்தனர். இரு அரசாங்கங்களும் ஆரம்பத்தில் மிகவும் மட்டுப்படுத்தப்பட்ட சீர்திருத்தங்களை நடைமுறைப்படுத்தி, பின்னர் தொழிலாள வர்க்கத்துடன் மூர்க்கமான மோதல்களுக்கு வந்ததோடு, எதிர்ப்புக்களை நசுக்குவதற்காக எதேச்திகார வழிமுறைகளை நாடின. பாகிஸ்தானிலும் இந்தியாவிலும், பல்வேறு ஸ்ராலினிசக் கட்சிகள், இத்தகைய இடது அரசாங்கங்கள் என சொல்லப்பட்டவற்றை தொழிலாள வர்க்கம் சவால் செய்வதைத் தடுக்கவும், அதன் மூலம் முதலாளித்துவம் அதன் நடவடிக்கைகளை மீண்டும் தொடங்க உதவுவதிலும் தீர்க்கமான பாத்திரம் ஆற்றின. 1977ல் ஐந்து மாதகால இடைவெளியில், பூட்டோ, இந்திரா காந்தி மற்றும் சிறிமாவோ பண்டாரநாயக்க போன்ற சகலரும் ஆட்சியில் இருந்து வீழ்ந்தனர். முதலாளித்துவ அரசியல் பின்னர் கூர்மையாக வலதுபக்கம் நகர்ந்தது. இந்திரா காந்தியின் விடயத்திலும், அவர் 1980ல் மீண்டும் ஆட்சிக்கு வந்த போதே இந்த நகர்வை உள்ளடக்கியிருந்தார். பாகிஸ்தானில் ஜெனரல் ஸியா-உல்-ஹக்கின் தலைமையில் அமெரிக்க ஊக்குவிப்புடன் நடத்தப்பட்ட இராணுவ சதிக்கவிழ்ப்பால் பூட்டோ வெளியேற்றப்பட்டார். இந்த அரசாங்கங்கள் ஒரு பிற்போக்குவாத வரலாற்றினை விட்டுச் சென்றன. பேரினவாதத்தில் ஊறியதும், தேசியவாத மற்றும் மத-வகுப்புவாத அடையாளங்களுக்கு அழைப்புவிடுத்ததுமான அவர்களது “இடது” ஜனரஞ்சகவாதம், 1980களில் ஆசியா பூராவும் இன-வகுப்புவாத அரசியல் பண்புரீதியில் விரிவடைவதற்கு விதைகளை விதைத்தன.