35-1. 2008 செப்டம்பரில் அமெரிக்க முதலீட்டு வங்கியான லெஹ்மென் பிரதர்சின் பொறிவுடன் வெடித்த உலகப் பொருளாதார நெருக்கடியானது ஒரு காலகட்டத்திற்குரிய பொருளாதாரச் வீழ்ச்சி அல்ல, மாறாக முதலாளித்துவ ஒழுங்கின் அடிப்படையான நிலைமுறிவாகும். நிதிய முறைமைக்கும் பிரதான கூட்டுத்தாபனங்களுக்கும் முண்டு கொடுப்பதற்கு, அரசாங்கங்களால் உட்செலுத்தப்பட்ட டிரில்லியன் கணக்கான டொலர்கள் பொருளாதார அமைப்பினை மறுஸ்திரம் செய்து விட்டிருந்ததாகத் தோன்றிய நம்பிக்கைகள் எல்லாம் துரிதமாக மறைந்துவிட்டன. இந்த பிணையெடுப்புகளும் ஊக்குவிப்புப் பொதிகளும், உண்மையில் தனியார் சுரண்டல்காரர்கள் மற்றும் ஊக வணிகர்களின் மலை போன்று குவிந்திருந்த திரும்பிச் செலுத்தமுடியாத கடனை, அரசாங்கக் கணக்கிற்கு மாற்றி விட்டு, இப்போது ஒவ்வொரு நாட்டிலும் சிக்கன நடவடிக்கைகளின் வடிவத்தில் தொழிலாள வர்க்கத்தின் மீது சுமத்தப்பட்டுக் கொண்டிருக்கிறது. பொருளாதார நெருக்கடி இன்னும் விரிந்து சென்று, பெரும் ஆபத்தான வடிவங்களை எடுத்துக் கொண்டிருக்கிறது. ஆஸ்திரேலிய சோசலிச சமத்துவக் கட்சியின் தேசிய செயலரான நிக் பீம்ஸ் விளக்கியதாவது: “நிலைமுறிவு என்றால் முதலாளித்துவம் தீடீரென இயங்காது நின்று போய் விடுகிறது என்று அர்த்தமல்ல. இது வரலாற்றின் ஒரு புதிய காலகட்டம் திறப்பதை அடையாளப்படுத்துகிறது, இதில் பழைய கட்டமைப்புகளான பொருளாதார மற்றும் அரசியல் கட்டமைப்புகளும் மற்றும் அத்துடன் சித்தாந்தங்கள் மற்றும் சிந்திக்கும் வழிவகைகளும் சமுதாயத்தின் தலைவிதியை தானே முடிவெடுக்கும் புதிய வகையிலான அரசியல் போராட்டம் அபிவிருத்தியடைவதற்கு பாதையை திறந்து விடுகின்றன.”[71]
35-2. மோசமடைந்துவரும் பொருளாதார நெருக்கடி, பூகோள-அரசியல் பகைமைகளை -முதலாவதாக அமெரிக்காவிற்கும் சீனாவிற்கும் இடையிலான பகைமைகளை- மேலும் மோசமாக்கும். சீனாவின் துரிதமான பொருளாதார வளர்ச்சியானது அது எரிசக்தி, மூலப் பொருள் மற்றும் சந்தைகளுக்காக உலகத்தில் தேடியலைகின்ற நிலையில், தவிர்க்கவியலாமல் அதனை அதன் மிக ஸ்தாபகமான எதிரிகளுடனும் மற்றும் இந்தியா போன்ற எழுச்சியுறும் சக்திகளுடனும் போட்டிக்கு இட்டுச் செல்லும். தனது கடற் பாதையைப் பாதுகாக்க, சீனா தனது இராணுவ சக்தியை, குறிப்பாக கடற்படையின் சக்தியை விரிவுபடுத்திக் கொண்டிருக்கின்ற போதிலும், இது மேற்கு பசிபிக் மற்றும் இந்தியப் பெருங்கடலில் நெடுங்காலமாக நிலவும் அமெரிக்க மேலாதிக்கத்தை அச்சுறுத்துகிறது. இப்போது, உலகின் மிகப்பெரும் கடன்கார நாடான அமெரிக்கா, உலகின் பொருளாதார ஆதிக்க சக்தி என்ற அதன் யுத்தத்துக்குப் பிந்தைய நிலையை ஏற்கனவே இழந்துள்ளதோடு தனது எதிரிகளை கீழறுக்க தன்னிடம் எஞ்சியிருக்கின்ற இராணுவ பலத்தை ஈவிரக்கமின்றி பயன்படுத்திக்கொண்டிருக்கிறது. அமெரிக்காவால் தனது முந்தைய ஆதிக்கத்தை அமைதியான முறையில் கைவிட முடியாதது அதேவேளையில், தனது சொந்த கூர்மையான பொருளாதார மற்றும் சமூக ஸ்திரமின்மைகளால் நொருங்கிப் போய்க் கிடக்கும் சீனாவால் வாஷிங்டன் நிபந்தனைகளை விதிப்பதை அனுமதிக்க முடியாது. ஏற்கனவே வர்த்தக மற்றும் நாணய மதிப்பு மோதல்களில் வெளிப்படையாகியிருக்கும், உக்கிரமடைந்துவரும் இந்தப் பகைமை, கடுமை தணியாது ஏனைய சக்திகளையும் இதனுள் தவிர்க்கமுடியாமல் இழுத்துக்கொள்வதுடன் மனித குலத்தை இன்னுமொரு பேரழிவான உலகப் போருக்குள் தள்ளிவிடவும் அச்சுறுத்துகிறது.
35-3. ஒட்டுமொத்த ஆசியாவும் அமெரிக்காவிற்கும் சீனாவிற்கும் இடையில் உக்கிரமடைகின்ற போட்டிக்கான களமாக மாற்றப்பட்டு வந்துள்ளது. வடகிழக்கு ஆசியாவில் தனது முந்தைய மேலாதிக்க நிலையை தூக்கி நிறுத்துவதற்காக, ஜப்பான் அமெரிக்காவுடனான தனது இராணுவக் கூட்டணியை பலப்படுத்திக்கொண்டிருக்கிறது. ஒரு உலக சக்தியாவதற்கு தனது சொந்த இலட்சியங்களை வளர்த்துக் கொண்டிருக்கும் இந்தியாவும், வாஷங்டனுடன் ஒரு மூலோபாயக் கூட்டணியை ஸ்தாபித்துக் கொண்டுள்ளது. ஒவ்வொரு நாட்டிலும், ஆளும் வர்க்கம் ஒரு அடிப்படையான இருதலைக்கொள்ளி நிலையை எதிர்கொள்கின்றது: அது இப்போது ஆசியாவில் ஏறக்குறைய ஒவ்வொரு நாட்டிற்கும் மிகப் பெரிய வர்த்தகக் பங்காளியாக இருக்கின்ற சீனாவுக்கும், இன்னமும் உலகின் மிகப் பெரிய பொருளாதாரமாகவும் பலம்வாய்ந்த இராணுவ சக்தியாகவும் இருந்துவரும் அமெரிக்காவிற்கும் இடையே சமநிலையை வைத்துக்கொள்வது எப்படி என்பதே ஆகும். இந்தப் பூகோள அரசியல் சண்டையின் அழிவுகரமான பின்விளைவுகள், ஏற்கனவே மத்திய ஆசியாவில் அமெரிக்க மேலாதிக்கத்திற்குட்பட்ட ஒரு காலனித்துவ காவலரணாக ஆகியுள்ள ஆப்கானிஸ்தானிலும், மற்றும் அதன் அருகிலிருக்கும், அரசியல் நெருக்கடி மற்றும் மோதலால் அதிர்ந்துபோயுள்ள பாகிஸ்தானிலும் ஏற்கனவே காணக்கூடியதாகவுள்ளது.
35-4. இந்தியப் பெருங்கடலின் பிரதான போக்குவரத்துப் பாதையின் மத்தியில் அமைந்திருப்பதன் விளைவாக, இலங்கை இந்தப் போட்டியின் சுழலுக்குள் இழுக்கப்பட்டுக்கொண்டிருக்கின்றது. தீவின் நீண்ட உள்நாட்டு யுத்தம் 2009ல் முடிவுக்கு வந்தமை, கொழும்பில் ஆதிக்க நிலைக்காக அமெரிக்கா, சீனா மற்றும் இந்தியா இடையிலான போட்டியைத் தீவிரமாக்கியுள்ளது. விடுதலைப் புலிகளின் தோல்வி நிச்சயமானதாக தோன்றிய போதே, சீனா இலங்கைக்கு இராணுவ மற்றும் பொருளாதார உதவியை வழங்கி தனது செல்வாக்கை பெருமளவு விரிவுபடுத்திக்கொண்டுள்ளது என்பதை அமெரிக்கா தாமதமாகக் கண்டுகொண்டது. பதிலுக்கு பர்மா, பங்களாதேஷ் மற்றும் பாகிஸ்தான் உட்பட இந்தியப் பெருங்கடலில், தனது மூலோபாய துறைமுக வசதிகளை ஏற்படுத்திக்கொள்வதன் பாகமாக, இலங்கையின் தெற்கு நகரான ஹம்பாந்தொட்டையில் ஒரு பெரிய புதிய துறைமுகத்தை உருவாக்க சீனா அனுமதிக்கப்பட்டது. 2009 டிசம்பரில் முன்வைக்கப்பட்ட ஒரு அமெரிக்க செனட் அறிக்கையில், அமெரிக்கா “இலங்கையை இழக்க முடியாது” என்று அப்பட்டமாக அறிவிக்கப்பட்டிருந்ததில் இருந்து, அமெரிக்காவுக்கு இத்தீவின் மூலோபாய முக்கியத்துவம் கோடிட்டுக் காட்டப்பட்டது. பிராந்தியம் பூராவும் உள்ள தனது சமதரப்பினரைப் போலவே, இலங்கை அரசாங்கமும் ஒரு ஆபத்தான சமநிலைப்படுத்தும் நடவடிக்கையில் ஈடுபட்டிருக்கிறது. இது தொழிலாள வர்க்கத்திற்கு அழிவுகரமான பின்விளைவுகளை ஏற்படுத்தும் ஒரு மோதலுக்குள் தீவு இழுக்கப்படுவதை தடுக்கப் போவதில்லை.
35-5. ஜனாதிபதி மஹிந்த இராஜபக்ஷவினால் 2006ல் மீண்டும் தொடங்கப்பட்ட யுத்தம் தீவை அழிவிற்குள்ளாக்கியது. சகல பெரும் வல்லரசுகளதும் ஆதரவுடன், அரசாங்கமும் இராணுவமும் கொடூரமான முற்றுகை யுத்தத்தை முன்னெடுத்ததில், பல பத்தாயிரக்கணக்கான தமிழ் பொது மக்கள் கொல்லப்பட்டதுடன் நகரங்களும் கிராமங்களும் சிதைக்கப்பட்டன. இந்த யுத்தமானது ஜனநாயக உரிமைகள் மீதான நீண்டகால விளைவுகளைக் கொண்ட தாக்குதல்கள் மற்றும் தொழிலாள வர்க்கத்தின் மீது புதிய பொருளாதார சுமைகளை திணிப்பதுடன் சேர்ந்தே நடந்தேறியது. இராணுவத்துடன் நெருக்கமாக செயற்பட்ட அரசாங்கத்தைச் சார்ந்த கொலைப் படைகள் ஊடகவியலாளர்கள் மற்றும் அரசியல்வாதிகள் உட்பட நூற்றுக்கணக்கானவர்களை கொன்றன அல்லது “காணாமல் போக”ச் செய்தனர். 2007 மார்ச்சில் கடற்படையின் கட்டுப்பாட்டிலான ஊர்காவற்துறை தீவுக்கு சென்றுகொண்டிருந்த போது, சோசலிச சமத்துவக் கட்சி உறுப்பினரான நடராஜா விமலேஸ்வரன் காணாமல் போய்விட்டார். இந்த வழக்கு தொடர்பான எந்தவொரு விசாரணையையும் தடுத்த அரசாங்கமே, அவர் காணாமல் போனதற்கும் கொல்லப்பட்டிருப்பதற்கான சாத்தியத்திற்கும் அரசியல் ரீதியில் பொறுப்பாளியாகும்.
35-6. உள்நாட்டுப் போரின் முடிவு, ஜனாதிபதி மகிந்த இராஜபக்க்ஷ வாக்குறுதியளித்ததைப் போல “சமாதானத்தையும் சுபிட்சத்தையும்” கொண்டு வந்திருக்கவில்லை. போருக்கு செலவிடுவதற்காக தீவை முழுதாக அடகு வைத்திருக்கும் நிலையில், அரசாங்கமானது சர்வதேச நாணய நிதியத்தின் கோரிக்கைகளை பூர்த்தி செய்வதற்கு பொதுத் துறை வேலைகள், சேவைகள் மற்றும் மானியங்களில் பெரும் வெட்டுக்களை மேற்கொள்ளத் தள்ளப்பட்டுள்ளது. கடந்த ஐந்து ஆண்டுகளாக ஊதியங்களில் ஏறக்குறைய எவ்வித அதிகரிப்பும் செய்யப்படாத போதிலும், அடிப்படைப் பொருட்களின் விலைகள் உட்பட விலைவாசி வானளாவ உயர்ந்து, தொழிலாள வர்க்கத்தின் மற்றும் ஒடுக்கப்பட்ட மக்களின் பெரும் பகுதியினருக்கு இன்னலை உருவாக்கியிருக்கிறது. செல்வந்தர்களுக்கும் வறியவர்களுக்கும் இடையிலான இடைவெளி அண்மைய சமூக புள்ளிவிபரங்களில் கோடிட்டுக் காட்டப்பட்டுள்ளது. உயர்மட்டத்தில் உள்ள 20 சதவீதத்தினர் மொத்த குடும்ப வருவாய் அளவில் 54.1 சதவீதத்தைப் பெறுகின்ற அதேவேளையில் சமூகத்தில் கீழிருக்கும் 20 சதவீதத்தினரோ மொத்த குடும்ப வருவாயில் வெறும் 4.5 சதவீதத்தையே பெறுகின்றனர். உழைக்கும் மக்களை நெருக்கும் தேவைகள் மற்றும் அபிலாசைகளில் எதுவும், இலங்கையின் அரசியல் ஸ்தாபனத்தின் எந்தப் பிரிவிலும் வெளிப்பாடைக் காணவில்லை. எதிர்க்கட்சிகளான ஐக்கிய தேசியக் கட்சியும் மக்கள் விடுதலை முன்னணியும் அரசாங்கத்தின் போரையும் சர்வதேச நிதி மூலதனத்தின் சார்பாக சர்வதேச நாணய நிதியத்தால் உத்தரவிடப்படும் சந்தை-சார்பு பொருளாதாரத் திட்டத்தையும் முழுமையாக ஆதரித்தன.
35-7. இராஜபக்க்ஷ அரசாங்கம், கால் நூற்றாண்டு கால உள்நாட்டு யுத்தத்தின் போது கட்டியெழுப்பப்பட்ட நாட்டின் மிகப்பெரும் பாதுகாப்புப் படைகள் மீது தங்கியிருப்பது, இலங்கை முதலாளித்துவத்தின் அரசியல் பலவீனத்தை வெளிச்சம் போட்டுக் காட்டுகிறது. போர் முடிந்து ஏறக்குறைய இரண்டு ஆண்டுகளுக்குப் பின்னரும் கூட, கொடூரமான அவசரகால அதிகாரங்கள் இன்னமும் அமுலில் இருப்பதோடு துருப்புகளில் எதுவும் கலைக்கப்படவில்லை. மாறாக, 60,000 குடும்பங்களை பலவந்தமாக இடம்பெயரச் செய்யும், பிரமாண்டமான கொழும்பு சேரிகளை அகற்றும் திட்டம் போன்ற, முன்னர் படையினருக்கு தொடர்பற்றவை என கருதப்பட்டுவந்த அரசாங்கத்தின் வேலைகளுக்குள் இராணுவம் நுழைந்து கொண்டிருக்கின்றது. “தேசத்தைக் கட்டியெழுப்புவதற்கு” படையினரைப் போல தொழிலாளர்களும் தியாகம் செய்ய வேண்டும் என்ற இராஜபக்க்ஷவின் அறிவுறுத்தலில் பொதுவாழ்க்கை இராணுவமயப்படுத்தப்படுவது சுருக்கிக் கூறப்பட்டுள்ளது. இராஜபக்க்ஷ அரசாங்கமானது மேலும் மேலும் பாராளுமன்றம், அரசியலமைப்பு அல்லது நீதிமன்றங்களை துச்சமாக மதித்து இயங்கும், ஒரு அரசியல்-இராணுவ சூழ்ச்சிக்குழுவாகவே செயல்படுகிறது. பொலிஸ்-அரசு எந்திரம், எல்லாவற்றுக்கும் மேலாய் தொழிலாள வர்க்கத்தினதும் கிராமப்புற வெகுஜனங்களதும் எந்தவொரு எதிர்ப்பையும் ஒடுக்குவதையே இலக்காகக் கொண்டுள்ளது.
35-8. நீண்டகால உள்நாட்டுப் போருக்கு வழிவகுத்த அடித்தளத்தில் உள்ள பிரச்சினைகளில் எதுவும் விடுதலைப் புலிகளின் இராணுவத் தோல்வியினால் தீர்க்கப்பட்டிருக்கவில்லை. உத்தியோகபூர்வ சுதந்திரத்தின் ஆறு தசாப்தங்களுக்குப் பின்னரும், இலங்கை முதலாளித்துவத்தால் இனவாத அடிப்படையில் தீவைத் துண்டாடுவதன் மூலமாகவே அதிகாரத்தில் தொற்றிக் கொண்டிருக்க முடிந்திருக்கிறது. படைவலிமை மூலம் மட்டுமே அது ஐக்கியத்தைப் பேணிவந்துள்ளது என்பது வடக்கிலும் கிழக்கிலும் உள்ள பிரமாண்டமான இராணுவ ஆக்கிரமிப்பில் தற்போது வெளிப்படையாகியுள்ளது. தசாப்தகாலமாக பலப்படுத்தப்பட்ட பாரபட்சங்கள் சம்பந்தமாக தமிழ் மக்களால் உணரப்படும் துயரங்களும் கோபங்களும் தவிர்க்கமுடியாமல் புதிய வடிவங்களில் வெடிக்கும். ஆயினும், அவசியமான அரசியல் படிப்பினைகள் கிரகித்துக்கொள்ளப்பட வேண்டும். புலிகளின் தோல்வியானது அடிப்படையில் இராணுவத் தோல்வி அல்ல, மாறாக அதன் அரசியல் முன்னோக்கில் உள்ளடங்கியிருந்த பலவீனங்களின் விளைவே ஆகும். ஆரம்பத்தில் இருந்தே, இந்தியா அல்லது ஏனைய பிராந்திய மற்றும் உலக சக்திகளின் ஆதரவுடன், தமிழ் முதலாளித்துவத்தின் சார்பாக ஒரு முதலாளித்துவ ஈழத்தை அமைப்பதே அவர்களின் நோக்கமாக இருந்தது. இதே சக்திகள் புலிகளுக்கு எதிராக தீர்க்கமாகத் திரும்பியபோது, இராணுவத் தாக்குதல்களை நிறுத்துமாறு “சர்வதேச சமூகத்திடம்” பயனற்ற கோரிக்கையை வைக்குமளவுக்கு கீழிறங்கி வந்தனர். இலங்கையின் முதலாளித்துவத்திற்கும் அதன் ஏகாதிபத்திய ஆதரவாளர்களுக்கும் எதிராக, உண்மையான ஜனநாயக உரிமைகளுக்கான போராட்டத்தை நடத்துவதற்கு சமுதாயத்தில் வல்லமைபடைத்த ஒரே சமூக சக்தி தொழிலாள வர்க்கம் மட்டுமே ஆகும். ஆனாலும், தமிழ் மற்றும் சிங்களத் தொழிலாளர்களை வர்க்க அடிப்படையில் ஐக்கியப்படுத்தும் எந்தவொரு நோக்கத்துக்கும் புலிகள் எப்போதும் இயல்பாகவே எதிரானவர்களாக இருந்தனர். சிங்களப் பொதுமக்கள் மீதான புலிகளின் கண்மூடித்தனமான தாக்குதல்கள், கொழும்பு ஸ்தாபனத்தின் தேவைகளுக்குப் பயன்பட்டதோடு இனவாதப் பிளவை ஆழப்படுத்தியது. புலிகளின் கட்டுப்பாட்டின் கீழான பகுதிகளில், அவர்கள் உழைக்கும் மக்களின் ஜனநாயக உரிமைகளையும் சமூகத் தேவைகளையும் நசுக்கினர். அதனால், தமது இறுதிக் கட்டத்தில், தீவிலும் மற்றும் பிராந்தியம் முழுவதிலுமான தொழிலாள வர்க்கத்திற்கு இல்லா விட்டாலும், தமிழ் வெகுஜனளுக்கும் கூட எந்தவொரு பரந்த அறைகூவலும் விடுக்க புலிகளின் தலைமைத்துவம் முற்றிலும் இலாயக்கற்று இருந்தது. புலிகளின் வீழ்ச்சியானது முதலாளித்துவ பிரிவினைவாதத்தை அடிப்படையாகக் கொண்ட அனைத்துப் போக்குகளதும் திவால்நிலைக்கான ஒரு வெளிப்படையான ஆதாரமாகும்.
35-9. கடந்த கால் நூற்றாண்டு கால யுத்தம், ஒவ்வொரு அரசியல் போக்கினையும் பரிசோதித்து விட்டது. சோசலிச சமத்துவக் கட்சி மட்டுமே, ஸ்ரீலங்கா-ஈழம் சோசலிசக் குடியரசுக்கான அதன் மூலோபாயத்தின் அத்தியாவசிமான அங்கமாக, தமிழ் மக்களதும் ஒட்டுமொத்த உழைக்கும் மக்களதும் ஜனநாயக உரிமைகளை பாதுகாக்க, ஒரு தொடர்ச்சியான அரசியல் போராட்டத்தை முன்னெடுக்கும் இயலுமை கொண்டது என்பதை நிரூபித்தது. சகல பக்கங்களிலும் இருந்து வந்த, அரசியல் மற்றும் சரீரரீதியான தாக்குதல்களை தாங்கக் கூடிய சோசலிச சமத்துவக் கட்சியின் திறன், அது காலூன்றியுள்ள கோட்பாடுகளின் வலிமையில் இருந்து ஊற்றெடுக்கின்றது. நிரந்தரப் புரட்சி தத்துவத்தினதும் மூலோபாயத்தினதும் பாதுகாப்பும் அபிவிருத்தியும், முதலாளித்துவத்தின் அனைத்துவிதமான பிரிவுகளில் இருந்தும் தொழிலாள வர்க்கத்தின் அரசியல் சுயாதீனத்திற்காகப் போராடுவதில் மட்டுமே தங்கியிருக்கின்றது. நான்கு தசாப்தத்துக்கும் மேலாக, ட்ரொட்ஸ்கிசத்துக்காக ஒரு சமரசமற்ற போராட்டத்தை முன்னெடுத்ததில், சோசலிச சமத்துவக் கட்சி தொழிலாள வர்க்கத்தில் ஆழமாக வேர் பரப்பியுள்ளதோடு உழைக்கும் மக்களின் வரலாற்று நலன்களைப் பாதுகாக்கின்ற ஒரே கட்சியாக தன்னை ஸ்தாபித்துக்கொண்டுள்ளது.
35-10. இரண்டாம் உலகப் போருக்குப் பின்னர், தெற்காசியா முழுவதிலும் ஸ்தாபிக்கப்பட்ட சுதந்திர அரசுகள் அனைத்திலும், தேசிய வேலைத்திட்டத்தின் முழுத் தோல்வியை இலங்கை மிகவும் நுணுக்கமாக காட்சிப்படுத்துகிறது. கண்ணியமான வாழ்க்கைத் தரங்களுக்கும் அடிப்படை ஜனநாயக உரிமைகளுக்குமான வெகுஜனங்களின் அபிலாசைகளைப் பூர்த்தி செய்ய எங்குமே முதலாளித்துவ அரசாங்கங்களால் முடியவில்லை. கோடிக்கணக்கான மக்கள் வறுமையிலும் பின்தங்கிய நிலையிலும் மூழ்கிப்போயுள்ளனர். இலங்கையில் தசாப்தகாலங்கள் நீண்டிருந்த உள்நாட்டுப் போருக்கு இணையாக, பிராந்தியம் முழுவதிலும் ஆளும் தட்டுக்களின் போட்டிப் பிரிவுகள் தங்களது சொந்த குறுகிய நலன்களை மேம்படுத்துவதற்காக இனவாத, வகுப்புவாத மற்றும் மொழிப் பிளவுகளை பிற்போக்குத்தனமாக சுரண்டிக் கொண்டுள்ளன. தொழிலாள வர்க்கம் ஒரு புதிய புரட்சிகரக் கொந்தளிப்பு காலகட்டத்தினுள் பிரவேசிக்கின்ற நிலையில், இன்றியமையாத அரசியல் படிப்பினைகளைப் பெறுவது அத்தியாவசியமானதாகும். தேச எல்லைகளுக்குள்ளும் அதைக் கடந்தும் தொழிலாள வர்க்கத்தை ஐக்கியப்படுத்துவதன் மூலமாக மட்டுமே, முதலாளித்துவத்தின் காலங்கடந்த அமைப்புமுறையைத் தூக்கியெறிவதற்கும் அதனை ஒரு உலக ரீதியில் திட்டமிடப்பட்ட சோசலிசப் பொருளாதாரத்தால் பதிலீடு செய்வதற்கும் அவசியமான புரட்சிகர சக்தியை அபிவிருத்தி செய்ய முடியும். சோசலிச சமத்துவக் கட்சி, இந்திய போல்ஷிவிக் லெனினிஸ்ட் கட்சியின் சிறந்த புரட்சிகரப் பாரம்பரியங்களுக்கு புத்துயிரூட்ட முயற்சிப்பதோடு, உலக சோசலிசப் புரட்சியின் ஒரு பிரிக்கமுடியாத பாகமாக, தெற்காசிய ஐக்கிய சோசலிச அரசுகளுக்காக தொழிலாளர்கள் மற்றும் ஒடுக்கப்பட்ட மக்களின் ஐக்கியத்திற்காக போராடுவதற்கு அனைத்துலக் குழுவின் வேலைத்திட்டத்தை அடித்தளமாக கொள்கிறது.
35-11. இடைவிடாத பொருளாதார நெருக்கடிகள், கூர்மையடைந்துவரும் ஏகாதிபத்தியங்களுக்கு இடையிலான பகைமைகள், இராணுவவாதத்தின் வளர்ச்சி, ஆழமடையும் சமூக ஏற்றத்தாழ்வு மற்றும் தற்போதுள்ள அரசியல் கட்சிகள் மற்றும் கட்டமைப்புகளில் இருந்து சாதாரண மக்களின் ஆழமானமான அந்நியப்படுதலும், போர்கள் மற்றும் புரட்சிகளின் ஒரு புதிய நீண்ட காலகட்டத்தின் தெளிவான அறிகுறிகள் ஆகும். முதலாளித்துவத்தின் நெருக்கடி மிகப் பிரமாண்டமான வர்க்கப் போராட்டங்களை உருவாக்கிக் கொண்டிருப்பதற்கான சமீபத்திய சாட்சியங்களே வட ஆபிரிக்காவிலும் மத்திய கிழக்கிலுமான எழுச்சிகளாகும். ஆயினும், முதலாளித்துவ நிலைமுறிவு அபிவிருத்திகாணுகின்ற அளவுக்கும், தொழிலாள வர்க்கத்தின் நடப்பு அரசியல் நனவுக்கும் இடையில் ஒரு பெரும் இடைவெளி காணப்படுகிறது. தொழிலாள வர்க்கத்தின் சுயாதீனமான அணிதிரள்வைத் தடுக்கும் சமூக ஜனநாயக, ஸ்ராலினிச மற்றும் பப்லோவாத முகவர்களுக்கு எதிராக, ஒரு புரட்சிகரக் கட்சி நடத்தும் ஒரு பொறுமையான மற்றும் சளைக்காத அரசியல் போராட்டத்தின் மூலமாகவே இந்த இடைவெளியை வெல்ல முடியும். அவ்வாறு செயற்படுவதன் மூலம், சோசலிச சமத்துவக் கட்சி தொழிலாள வர்க்கத்தின் புதிய சுயாதீனமான அமைப்புகள் உருவாவதை ஊக்குவித்து, உதவி செய்யும். தொழிலாள வர்க்கத்தில் ஒரு இடைவிடாத அரசியல் போராட்டத்தின் ஊடாக, தொழிலாளர்களதும் விவசாயிகளதும் அரசாங்கமொன்றை நிறுவுவதற்கு இன்றியமையாத தொழிலாள வர்க்கத்திற்கும் விவசாயிகளுக்கும் இடையிலான அத்தியாவசியமான கூட்டணியை ஏற்படுத்த கட்சி முயற்சிக்கும்.
35-12. ஆயினும், தொழிலாள வர்க்கத்தின் நனவினை அதன் சர்வதேசிய மற்றும் வரலாற்றுக் கடமைகளுக்கு உயர்த்துவதற்காக ஒரு புரட்சிகரத் தலைமையைக் கட்டியெழுப்பும் முக்கிய பிரச்சினை எஞ்சியிருக்கின்றது. சர்வதேசத் தொழிலாள வர்க்கத்தின் முந்தைய மூலோபாய அனுபவங்களில் இருந்து அவசியமான படிப்பினைகளை பெற்றுக்கொண்டுள்ள மிக முன்னேறிய விஞ்ஞானபூர்வமான தத்துவத்தை அடிப்படையாகக் கொண்ட ஒரு கட்சியால் மட்டுமே, அந்த பாத்திரத்தை வகிக்க முடியும். நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவும் அதன் பகுதிகளும் மட்டுமே சமகால மார்க்சிசத்தின், அதாவது ட்ரொட்ஸ்கிசத்தின் வரலாற்று பாரம்பரியத்தின் உருவடிவாகத் திகழ்கின்றன. அந்த அடிப்படையிலேயே, சோசலிச சமத்துவக் கட்சியும் நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவில் உள்ள அதன் சகோதரக் கட்சிகளும், மிகவும் தொலைநோக்கும் சுய அர்ப்பணிப்பும் கொண்ட தொழிலாளர்களும் இளைஞர்களும் கட்சியின் பதாகைக்கு வென்றெடுக்கப்படுவதோடு அவர்கள் உலக சோசலிசப் புரட்சியை முன்னெடுப்பதற்கான சடரீதியான சக்திகளை வழங்குவார்கள் என்ற நம்பிக்கையுடன், சர்வதேச தொழிலாள வர்க்கத்துக்கு கல்வியூட்டவும், அதனை அணிதிரட்டவும் ஐக்கியப்படுத்தவும் முயற்சிக்கின்றன.
Nick Beams, The World Economic Crisis: A Marxist Analysis (October 2008) http://www.wsws.org/articles/2008/oct2008/nbe1-o04.shtml.