Socialist Equality Party (US)
சோசலிச சமத்துவக் கட்சியின் வரலாற்று, சர்வதேச அடித்தளங்கள்

சோசலிச சமத்துவக் கட்சியின் கோட்பாட்டு ரீதியான அடித்தளங்கள்

1. சோசலிச சமத்துவக் கட்சியின் வேலைத்திட்டம் ஊக வகையிலோ எதையேனும் செய்யவேண்டும் என்பதற்காகவோ இல்லாமல் கோட்பாட்டு ரீதியானதாகும். உலக முதலாளித்துவத்தின் புறநிலை நெருக்கடியின் தன்மை பற்றிய பகுப்பாய்வின் அடிப்படையிலும் தொழிலாள வர்க்கம் மற்றும் சர்வதேச சோசலிச இயக்கம் ஆகியவற்றின் பெரும் மூலோபாய அனுபவங்களை உள்ளீர்த்துக்கொள்ளலின் அடிப்படையிலும் வளர்த்தெடுக்கப்பட்டதாகும். தற்போதைய உலகப் பொருளாதார மற்றும் அரசியல் அமைப்புமுறை அதன் அடிப்படை பண்பியல்புகளில் ஏகாதிபத்திய தன்மையை கொண்டதாகும். தொழில்நுட்பத் துறையில் பிரம்மாண்டமான முன்னேற்றம், உற்பத்தி சக்திகளின் பரந்த வளர்ச்சி மற்றும் உலகம் முழுவதும் முன்னேற்றமடைந்த முதலாளித்துவ உற்பத்தி உறவுகளின் விரிவாக்கம் இருந்த போதிலும்கூட, உலக முதலாளித்துவ அமைப்புமுறை சாராம்சத்தில் இரு உலகப் போர்கள், பாசிசம் மற்றும் கிட்டத்தட்ட முடிவில்லா வகையில் இருந்த பிராந்திய இராணுவ மோதல்கள், கணக்கிலடங்கா மிருகத்தனமான அரசியல் சர்வாதிகாரங்கள் என்று 20ம் நூற்றாண்டில் ஏற்பட்டவற்றை தூண்டிவிட்ட அதே வெடிப்புத்தன்மை வாய்ந்த, கிட்டத்தட்ட தீர்த்துவைக்க முடியாத முரண்பாடுகளால் நாலாபக்கமும் இருந்து நெருக்கப்பட்டுள்ளது.

2. முதலாம் உலகப் போரின் வேளையில் லெனினால் அடையாளம் காணப்பட்ட ஏகாதிபத்தியத்தின் மையக் கூறுபாடுகள் (உற்பத்தி ஒரு சிலரின் ஏகபோக உரிமையில் குவிப்பாக இருத்தல், நிதி மூலதனம் மற்றும் பொருளாதார ஒட்டுண்ணித்தனத்தின் மேலாதிக்கம், உலக புவி அரசியல் மற்றும் பொருளாதார மேலாதிக்கத்திற்கான பெரும் சக்திகளின் முயற்சி, பலவீனமான நாடுகளை ஒடுக்குதல், அரசியல் பிற்போக்குத்தன்மைக்கு செல்லும் பொதுப்போக்கு ஆகியவை நடப்பு உலகின் பொருளாதார மற்றும் அரசியல் ஒழுங்கை விளக்குகின்றன. 1914 (முதலாம் உலகப் போரின் பொழுது) மற்றும் 1939 (இரண்டாம் உலகப் போரின் பொழுது) ஆண்டுகளில் இருந்ததைப் போல, அடிப்படை முரண்பாடுகள், உலக பொருளாதாரம் மற்றும் தேசிய அரசுக்கும் இடையிலும், சமூகமயப்பட்ட உற்பத்தி முறை மற்றும் உற்பத்தி சக்திகளின் தனியார் சொத்துடைமைக்கும் இடையிலும் இருக்கின்றன. ஏகாதிபத்திய சகாப்தம் தன்னுடன்கூட முதலாளித்துவ முறை தூக்கியெறியப்படுவதற்கான புறநிலையான அடித்தளங்களையும் கொண்டிருக்கிறது --அதாவது தொழில்துறை, நிதியம் ஆகியவை சமூக உடைமையாக்கப்படல், பொருளாதார வாழ்வு பூகோளமயமாக்கப்படல் மற்றும் தொழிலாள வர்க்கத்தின் அதிகரிக்கும் சமூக சக்தி ஆகியவையாகும்.

3. 1991ல் சோவியத் ஒன்றியத்தின் சரிவிற்கு பின்னர், முதலாளித்துவ அமைப்பு முறையின் சிந்தனையாளர்களும் அதற்கு வக்காலத்து வாங்குபவர்களும் "வரலாறு முடிந்துவிட்டது" என்று அறிவிக்க அவசரப்பட்டனர். இதன் மூலம் அவர்கள் "சோசலிசத்தின் முடிவு" மற்றும் முதலாளித்துவம் இறுதியாக வெற்றிபெற்று விட்டது என்று அர்த்தப்படுத்தினர். இதன் பின் நடந்த நிகழ்வுகள், ஏற்கனவே புரட்சி பற்றிய இரங்கல் குறிப்புக்கள், வரலாற்றைப் பற்றிய இறுதிக் குறிப்புக்களும் அவசரப்பட்டு கூறப்பட்டு விட்டன என்பதை ஏற்கனவே விளக்கிக்காட்டியுள்ளன. 20ம் நூற்றாண்டு எந்த அளவிற்கு கொந்தளிப்பை காட்டியதோ அதே அளவிற்கு கொந்தளிப்பு 21ம் நூற்றாண்டிலும் இருக்கும். உண்மையில் சர்வதேச தொழிலாள வர்க்கம் அதன் முந்தைய தலைமுறைகளால் தீர்க்க முடியாத வரலாற்றுப் பிரச்சினைகளை எதிர்கொள்ள வேண்டியிருக்கும்.

4. புரட்சிகர சோசலிச மூலோபாயம் வரலாற்று அறிவின் அடிப்படையிலும், முன்னைய போராட்டங்களின் படிப்பினைகளை புரிந்து கொள்வதின் மூலமும் தான் அபிவிருத்தி செய்யப்பட முடியும். எல்லாவற்றிற்கும் மேலாக, சோசலிஸ்ட்டுக்களின் அறிவு வளர்ச்சிக்கு நான்காம் அகிலத்தின் வரலாற்று பற்றிய விரிவான தகவல்கள் தேவையாகும். சோசலிசப் புரட்சியின் தத்துவார்த்த மற்றும் அரசியல் தாக்குதல் முனை என்ற வகையில் மார்க்சிசத்தின் வளர்ச்சி அதன் மிகவும் முன்னேறிய வெளிப்பாட்டை, 1938 இல் நான்காம் அகிலம் ஸ்தாபிக்கப்பட்டது முதல் ஸ்ராலினிசம், சீர்திருத்தவாதம், பப்லோவாதம் மற்றும் அனைத்து வகை அரசியல் சந்தர்ப்பவாதத்திற்கும் எதிராக அதனால் நடத்தப்பட்ட போராட்டங்களில் கண்டது.

5. கட்சிக்குள் வேலைத்திட்டத்தின் அடிப்படை விஷயங்கள் மீதான அரசியல் ஐக்கியம் என்பது, வரலாற்று சகாப்தம், அதன் மைய மூலோபாய படிப்பினைகளை பற்றிய ஒரு பொது மதிப்பீட்டின் அடிப்படையில்தான் சாத்தியமாகும். வரலாறு தொழிலாள வர்க்கத்திற்கு ஒரு கரடுமுரடான பாதை ("Via Dolorosa") என்று ஒரு முறை ரோசா லுக்செம்பேர்க் குறிப்பிட்டார். வரலாற்றின் படிப்பினைகளை --அதன் வெற்றிகளை மட்டும் இல்லாமல் தோல்விகளையும்-- எந்த அளவிற்கு தொழிலாள வர்க்கம் கற்றுக்கொண்டுள்ளதோ அந்த அளவிற்குத்தான் புரட்சிகர போராட்டத்தின் புதிய காலகட்டத்தால் முன் வைக்கப்படக்கூடிய புதிய கோரிக்கைகளுக்காக தயார் செய்யப்பட முடியும்.