Socialist Equality Party (US)
சோசலிச சமத்துவக் கட்சியின் வரலாற்று, சர்வதேச அடித்தளங்கள்

நிரந்தரப் புரட்சி தத்துவம்

14. 1903 அகல் பேரவையில் ஏற்பட்ட பிளவு ரஷ்யாவில் நெருங்கி வரும் சமூக கொந்தளிப்பின் அரசியல் ஆருடமாக இருந்தது. 1905ம் ஆண்டின் ரஷ்ய புரட்சியானது ரஷ்ய சமூக ஜனநாயகக் கட்சியின் புரட்சிகர மூலோபாயத்துக்கு அடிப்படையான பிரச்சினைகளை எழுப்பியது. புரட்சி இறுதியில் தோல்வி அடைந்தது என்றாலும், 1905இன் நிகழ்வுகள் தொழிலாள வர்க்கத்தின் பிரமாண்டமான சமூக சக்தியைக் காட்டின; அது ஜாரிச ஆட்சிக்கு எதிரான போராட்டத்தில் முக்கியமான பங்கை கொண்டிருந்தது. 1905 நிகழ்வுகளுக்கு முன்பு, புரட்சிகளின் அபிவிருத்தியானது தேசிய நிகழ்வுகளின் கிரமமான முன்னேற்றம் எனக் கருதப்பட்டன; அவற்றின் விளைவுகள் உள் சமூகப் பொருளாதாரக் கட்டுமானம் மற்றும் உறவுகளின் தர்க்கத்தால் நிர்ணயிக்கப்படும் என்று கருதப்பட்டன. மார்க்சிச தத்துவவியலாளர்கள் சோசலிசப் புரட்சி மிக முன்னேற்றம் அடைந்த ஐரோப்பிய முதலாளித்துவ நாடுகளில்தான் (பிரிட்டன், ஜேர்மனி, பிரான்ஸ்) ஏற்படும் என்றும் அந்த அளவிற்கு முன்னேற்றம் அடையாத நாடுகள் (ரஷ்யாவை போன்றவை) ஒரு பாட்டாளி வர்க்க சோசலிசப் புரட்சிக்கு "முதிர்ச்சி பெறுவதற்கு" முன்னதாக விரிவடைந்ததொரு முதலாளித்துவ பொருளாதார மற்றும் பூர்சுவா ஜனநாயக அரசியல் வளர்ச்சிக் கட்டத்தை கடக்க வேண்டியிருக்கும் என்றும், இரண்டாவதாக கூறிய நாடுகளில், தேசிய முதலாளித்துவத்தின் அரசியல் தலைமையின் கீழ் ஒரு ஜனநாயகக் குடியரசை ஸ்தாபிப்பது வரைக்குமாய் புரட்சிகர போராட்டத்தினை வரையறைக்குட்படுத்த மார்க்சிச கட்சிகள் கடமைப்பாடு கொண்டிருக்கும் என பொதுவாக கூறப்பட்டு வந்தது. இந்த மரபார்ந்த முன்னோக்கு, பிளெக்கானோவால் உருவாக்கப்பட்ட அரசியல் மூலோபாயத்தை பின்பற்றி, ரஷ்ய மென்ஷிவிக்குகளின் பணிகளுக்கு பாதை காட்டியது. ஆனால் 1905 புரட்சியில் ஜாருக்கு எதிராக ஒரு ஜனநாயகப் புரட்சியை நடத்துவதற்கு முதலாளித்துவம் விரும்பவில்லை; மாறாக ஜாருடன் சேர்ந்து கொண்டு தொழிலாள வர்க்கத்திற்கு எதிராகச் செயல்பட்டது.

15. மென்ஷிவிக்குகளுக்கு எதிராக வாதிட்ட லெனின், முதலாளித்துவத்தின் பலவீனம் காரணமாக புரட்சியானது விவசாய வர்க்கத்துடன் கூட்டு சேர்ந்த தொழிலாள வர்க்கத்தினால் தலைமையேற்கப்பட வேண்டியிருக்கும், இது "பாட்டாளி வர்க்கத்தினதும் விவசாயிகளினதும் ஜனநாயக சர்வாதிகாரத்தை" உருவாக்கும் என்று கூறினார். இந்த சூத்திரம் ஜனநாயகப் புரட்சிக்கு சாத்தியமான அதிதீவிர குணவியல்பை (அதாவது, கிராமப்பகுதிகளில் நிலப்பிரபுத்துவ உறவுகளின் அத்தனை எச்சங்களையும் சமரசமின்றி தகர்ப்பது மற்றும் சர்வாதிகார ஆட்சியின் தீர்மானமான தகர்ப்பு ஆகியவை) அளிக்கும் லெனினின் உறுதிப்பாட்டை வெளிப்படுத்துவதாக இருக்கும் நிலையிலும், இது புரட்சியை அல்லது அது வழங்கவிருக்கும் அரசை சோசலிச அர்த்தங்களில் சித்தரிக்கவில்லை. ஜனநாயக சர்வாதிகாரமானது முதலாளித்துவ சொத்துடமை வடிவங்களை ஆக்கிரமிப்பு செய்து கைப்பற்றுவதை அவசியமானதாகக் கொண்டிருக்கவில்லை. தவிரவும், அரசின் வடிவத்தின் தன்மை மற்றும் பாட்டாளி வர்க்கம் மற்றும் விவசாயிகள் வர்க்கத்தின் இடையேயான அதிகாரப் பகிர்வு போன்ற விவகாரங்களில் எல்லாம் இது தெளிவின்றியே இருந்தது.

16. நிரந்தரப் புரட்சி தத்துவத்தில், ஜாரிசத்தை தூக்கியெறிவதில் இருந்து எழும் அரச அதிகாரத்தின் வர்க்க இயல்பு தொடர்பாகவும் பின்தங்கிய ரஷ்யாவில் ஜனநாயக புரட்சி பிரச்சினைக்கும் லெனினின் சூத்திரப்படுத்தலில் தெளிவற்றதாகப் பண்பிடப்பட்டது அல்லாத ஒரு துணிவான தீர்வினை ட்ரொட்ஸ்கி அளித்தார். அப்புரட்சி ஜனநாயகப் பணிகளை தீர்ப்பதுடன் மட்டுப்படுத்தப்படாது என்றும் அது ஒரு சோசலிசத் தன்மையை பெற்றுவிடும் என்றும் தொழிலாள வர்க்கம் அரசு அதிகாரத்தை எடுத்துக் கொண்டு தன்னுடைய சர்வாதிகாரத்தை ஸ்தாபித்துக் கொள்ளும் என்றும் ட்ரொட்ஸ்கி கணித்தார். முதலாளித்துவ முறையின் சர்வதேச வளர்ச்சியை பொறுத்துத்தான் வரவிருக்கும் ரஷ்ய புரட்சியின் சமூக இயக்கவியல் இருக்கும் என்ற அடிப்படையில் ட்ரொட்ஸ்கி தன்னுடைய பகுப்பாய்வைக் கொண்டிருந்தார். ரஷ்ய புரட்சியின் தன்மை, பணிகள், விளைவுகள் இறுதிப் பகுப்பாய்வில் தேசிய நிலைமைகள் என்பதற்கு பதிலாக சர்வதேச நிலைமையினால் நிர்ணயிக்கப்படும் என்று அவர் வலியுறுத்தினார். ரஷ்ய மக்களை எதிர்கொண்ட உடனடிப்பணிகள் ஒரு பூர்சுவா ஜனநாயக தன்மையை கொண்டிருந்தாலும் ஜாரிச சர்வாதிகாரத்தை தூக்கி எறிதல், கிராமப்பகுதிகளில் இருக்கும் நிலப்பிரபுத்துவ உறவுகளின் எச்ச சொச்சங்களை இல்லாதொழித்தல் போன்ற இப்பணிகள் தேசிய முதலாளித்துவத்தின் அரசியல் தலைமையின் கீழோ அல்லது ஒரு பூர்ஷ்வா ஜனநாயகக் குடியரசின் கட்டமைப்புக்குள்ளாகவோ அடையப்படமுடியாது என்றும் கூறினார். உலகப் பொருளாதாரத்தில் ஏற்பட்ட பரந்த மாறுதல்கள் மற்றும் தொழிலாள வர்க்கம் மகத்தான சமூக சக்தியாக வெளிவருதல் இவையெல்லாம் ஜனநாயக புரட்சியானது 19ம் நூற்றாண்டை விடவும் 20ம் நூற்றாண்டில் மாறுபட்ட வகையில் அபிவிருத்தியடையும் என்று அர்த்தப்படுத்தின. ரஷ்ய முதலாளித்துவம் உலக முதலாளித்துவ அமைப்புடன் இணைக்கப்பட்டு விட்டிருந்தது. அது பலவீனமானதாகவும் ஏகாதிபத்தியத்தை சார்ந்திருந்ததாகவும் இருந்தது. எனவே ஜனநாயகப் பணிகள், விவசாய வெகுஜனங்களின் ஆதரவுடன் தொழிலாள வர்க்கத்தால் தலைமையேற்று நடத்தப்படும் ஒரு புரட்சியின் மூலமே நனவாக முடியும். இருப்பினும், அதிகாரத்தை எடுத்துக் கொண்ட பின், தொழிலாள வர்க்கம் ஜனநாயகப் பணிகளுக்குள் தன்னை வரையறைக்குட்படுத்திக் கொள்ள முடியாது; அது ஒரு சோசலிச குணநலன் கொண்ட நடவடிக்கைகளை மேற்கொள்ள நிர்ப்பந்திக்கப்படும். தவிரவும், ரஷ்யாவில் சோசலிசப் புரட்சியானது தன்னை ஒரு தேசிய கட்டமைப்புக்குள் கட்டுப்படுத்திக் கொள்ள முடியாது. அப்புரட்சியின் உயிர் பிழைப்பு புரட்சியை வளர்ச்சிடைந்த முதலாளித்துவ நாடுகளிலும், இறுதியாக உலகம் முழுமைக்கும், விஸ்த்தரிப்பதிலேயே தங்கியுள்ளது. இந்த விளைவிற்கான உள்ளார்ந்த சாத்தியம் உலக முதலாளித்துவ அமைப்பின் உண்மையான அபிவிருத்தியில் அடங்கியிருந்தது. 1905 ல் ட்ரொட்ஸ்கி எழுதினார்:

அனைத்து நாடுகளையும் அதன் தனது உற்பத்திமுறை மற்றும் வணிகத்தினால் ஒன்றாகப் பிணைத்த வகையில் முதலாளித்துவம் உலகம் முழுவதையும் ஒற்றைப் பொருளாதார, அரசியல் தன்மை கொண்டதாக மாற்றியுள்ளது.... இது இப்பொழுது வெளிப்படும் நிகழ்வுகளுக்கு உடனடியாக ஒரு சர்வதேச தன்மையை கொடுத்து ஒரு பரந்த தொடுவானத்தையும் காட்டுகிறது. தொழிலாள வர்க்கத்தினால் வழிநடத்தப்படும் ரஷ்யாவின் அரசியல் விடுதலை என்பது அந்த வர்க்கத்தை இதுகாறும் வரலாற்றில் அறியப்பட்டிராத உயரத்திற்கு இட்டுச்செல்லும்; அந்த வர்க்கத்திற்கு மாபெரும் அதிகாரம் மற்றும் இருப்புக்களை கொடுக்கும்; உலக முதலாளித்துவதை கலைக்கும் தொடக்கியாக ஆக்கும். இதற்கான அனைத்து புறநிலை நிலைமைகளை வரலாறு தோற்றுவித்துள்ளது. [8]


[8]

Permanent Revolution (London: New Park, 1971), p. 240