ஜூலை 1975 இல் பணவீக்க வீதம் உயர்வாக இருந்த போதும், தொழிலாள வர்க்கத்திற்கு வில்சன் அரசாங்கம் 10 சதவீத உயர்வுடன் மட்டுப்படுத்தும் சம்பளச் சட்டங்களை அறிமுகப்படுத்த நகர்ந்தது. சம்பளச் சட்டங்கள் சட்டசபையில் நிறைவேற்றப்படுவதற்கு முன்னரே —அவை வெள்ளையறிக்கை வடிவில் மட்டுமே வழங்கப்பட்டிருந்த நிலையில்— அதே மாதம், WRP தலைமை, அதன் முந்தைய நிலைப்பாட்டில் ஓர் அடிப்படை மாற்றம் செய்திருந்த அதன் அரசியல் குழு அறிக்கை ஒன்றை ஏற்றுக் கொள்வதற்கு ஓர் அவசர மாநாட்டிற்கு அழைப்பு விடுத்தது. அத்தீர்மானம் பிரகடனப்படுத்தியதாவது:
“தொழிற் கட்சி அரசாங்கத்தின் சம்பளச் சட்டங்களுக்கு எதிராக போராடவும் மற்றும் சுதந்திரமான கூட்டு பேரத்தை ஒழிக்கவும் போராடுமாறு ஒட்டுமொத்த தொழிலாள வர்க்கத்திற்கும் தொழிலாளர் புரட்சிக் கட்சி அழைப்பு விடுக்கிறது.
“தொழிலாள வர்க்கத்தின் வாழ்க்கைத் தரங்களும் அடிப்படை ஜனநாயக உரிமைகளும் ஆபத்தில் உள்ளன.
“தொழிற் கட்சி அதன் கொள்கைகையை மீறுவதன் மூலமும் மற்றும் பொருளாதார நெருக்கடிக்கு வங்கியாளர்களின் தீர்வினை அமலாக்குவதன் மூலமும், தொழிற் கட்சி அரசாங்கம் தொழிலாள வர்க்கத்துடன் அதனை மோதல் போக்கில் அமைத்து கொண்டுள்ளது.” ( ஜூன் 9-11, 1979 இல் மறுஅழைப்பு விடுக்கப்பட்ட நான்காம் மாநாட்டில் சமர்பிக்கப்பட்ட தீர்மானமான, தொழிலாளர் புரட்சிக் கட்சியின் ஐந்தாண்டுகள் என்பதில் மேற்கோளிடப்பட்டவை. பக்கம் 3)
இந்த வாக்கியங்கள் முழுமையாக சரியானவையே. ஆனால் பின்னர் கீழ்வருவன வந்தன:
“உயர் பணவீக்கம் 60 சதவீதத்திற்கும் அதிகமாக அதிகரித்து வரும் போது, எந்தவொரு தொழிலாளரும் 10 சதவீத சம்பள உயர்வில் வாழ முடியாது.
“இது வில்சன் அரசாங்கத்தை எதிர்த்து அதனை பதவியிலிருந்து கீழிறக்குவதற்காக போராடுவதைத் தவிர, தொழிலாள வர்க்கத்துக்கு வேறு மாற்றீட்டை வழங்கவில்லை.
“பரந்த பெரும்பான்மை தொழிலாளர்கள் மத்தியிலும் மற்றும் தொழிற்சங்க இயக்கத்திலும் இப்போது தொழிற் கட்சி அரசாங்கத்தின் மீது நம்பிக்கையோ அல்லது அதற்கு ஆதரவோ இல்லை. (மேலே குறிப்பிடப்பட்ட அதே அறிக்கை, பக்கம் 3)
இந்த வாக்கியங்களில் ஒன்று கூட உண்மையில்லை. அரசாங்கத்தைப் பதவியிலிருந்து கீழிறக்க அழைப்பு விடுப்பதற்குப் பதிலாக —அந்த சம்பளச் சட்ட வரைவினைத் திரும்பப் பெறுமாறும் மற்றும் அதை அறிமுகப்படுத்திய வலதுசாரிகளை வெளியேற்றுமாறும் தொழிற் கட்சி மற்றும் தொழிற்சங்க இயக்கத்துக்குள் ஒரு பிரச்சாரம்— அங்கே மாற்றீடு இருந்தது. தொழிற் கட்சி அரசாங்கத்திற்கு இப்போது ஆதரவு இல்லை என்ற வலியுறுத்தலைப் பலப்படுத்துவதற்கு எந்த ஆதாரமும் முன்வைக்கப்படவில்லை. தொழிற் கட்சி அரசாங்கத்தின் சட்டவரைவை தோற்கடிக்க தொழிலாளர் இயக்கத்தினுள் பிரச்சாரம் செய்வதற்குப் பதிலாக, அந்த தீர்மானம் பிரகடனப்படுத்தியதாவது:
“அவர்களை (வில்சன் மற்றும் வலதுசாரிகளை) இராஜினாமா செய்ய நிர்ப்பந்திப்பதும் மற்றும் தொழிற் கட்சி ஒரு பொது தேர்தலில் இறங்கி டோரிகளைத் தோற்கடித்து மக்களின் புதிய தீர்ப்பைக் கோருமாறு செய்வதுமே ஒட்டுமொத்த இயக்கத்தையும் ஐக்கியப்படுத்துவதற்கான ஒரே வழி." (மேலே குறிப்பிடப்பட்ட அதே அறிக்கை,பக்கம் 4)
இந்த தீர்மானம், பிரிட்டிஷ் ட்ரொட்ஸ்கிஸ்டுகள் பல தசாப்தங்களாக போராடி வந்த பாட்டாளி வர்க்க நோக்குநிலையிலிருந்து அதன் அடிப்படையான வேலைத்திட்ட முறிவை எடுத்துக்காட்டியது. புரட்சிகர கட்சி தொழிலாள வர்க்கத்தின் எந்தவொரு குறிப்பிட்ட பகுதியையும் இன்னும் வென்றெடுத்திராத சூழ்நிலையில், தொழிற் கட்சிக்கு ஒரே மாற்றீடாக இருந்த டோரி அரசாங்கத்தைத் தொழிலாள வர்க்கம் ஒரு வருடத்திற்கும் சற்று அதிக காலத்திற்கு முன்னர் தான் பதவியிலிருந்து கீழிறக்கி இருந்த நிலைமைகளின் கீழ், தொழிற் கட்சி அரசாங்கத்தைப் பதவியிலிருந்து கீழிறக்குவதற்கான அழைப்பு என்பது சாகசவாதத்தின் (adventurism) உச்சக்கட்டமாகும். தொழிற் கட்சி பகிரங்கமாக தொழிலாள வர்க்கத்துக்கு எதிராக திரும்புவதற்கு நிர்ப்பந்திக்கப்பட்டு கொண்டிருந்த அந்த கட்டத்தில், தொழிலாள வர்க்கத்தின் பாரிய அமைப்புகளுக்குள்ளேயே பலமாக தலையீடு செய்வதற்கான நிலைமைகள் உருவாகி கொண்டிருந்த நிலையில், WRP ஒரு சாத்தியமற்ற இறுதி எச்சரிக்கையை முன்வைத்தது. இந்த மோதலின் மிகவும் ஆரம்ப கட்டத்திலேயே, WRP, தொழிற் கட்சியின் தலைவிதியை தேசிய வாக்காளர்களின் கரங்களில் இருத்தக்கூடிய ஒரு பிரச்சாரத்துடன் கூடிய ஒரு முன்கூட்டிய போராட்டத்திற்கு தொழிலாள வர்க்க அமைப்புகளுக்குள் முன்மொழிந்தது.
தொழிற் கட்சியின் தேர்தல் தொகுதிகளுக்குள் வலதுசாரி நாடாளுமன்ற கன்னைக்கு அரசியல் எதிர்ப்பின் அறிகுறிகள் இருப்பதாக கருதிய நிலையில் தான், WRP இந்த அரசியல் வெடிகுண்டை வீசியது. இது இறுதியில் வடகிழக்கு நியூஹாமின் (Newham) நாடாளுமன்ற பிரதிநிதி ரெக் பிரன்டைஸை (Reg Prentice) வெற்றிகரமாக வெளியேற்றியதுடன் தொடங்கியது, இந்த தொகுதியில் தான் அக்டோபர் 1974 தேர்தலில் வனேசா ரெட்கிரேவ் (Vanessa Redgrave) போட்டியிட்டார். தொழிற் கட்சிக்குள் இருந்த சக்திகள் வலதுசாரிகளிடம் இருந்து விடுபட போராடி கொண்டிருந்த வேளையில், WRP, தொழிற் கட்சி ஆதரவாளர்களிடம் தொழிற் கட்சி அரசாங்கத்தைப் பதவியிலிருந்து கீழிறக்குமாறு கூறிக் கொண்டிருந்தது! இத்தகைய கொள்கை இதுவரையில் தொழிலாள வர்க்கத்தின் உண்மையான வளர்ச்சியுடன் தொடர்பில்லாமல் செய்யப்பட்டிருந்தது —போல்ஷிவிக் ட்ரொட்ஸ்கிச இயக்க வரலாற்று மரபுகளைக் குறித்தோ கூற வேண்டியதே இல்லை— மேலும் இதை வெறுமனே அரசியல் பிழையென விளக்கி விடவும் முடியாது.
WRP தலைமையினுள் வர்க்க நோக்குநிலையில் நிகழ்ந்திருந்த ஆழ்ந்த மாற்றத்தின் மிகவும் குழப்பமான அறிகுறியான அது, பிரிக்க முடியாதபடி முந்தைய இலையுதிர்காலத்தின் பிளவுடன் தொடர்புபட்டிருந்தது. ஹீலி இப்போது சார்ந்திருக்கும் குட்டி முதலாளித்துவத்தின் ஆதிக்கத்தில் இருந்த தலைமை, தொழிற் கட்சி அரசாங்கத்தில் விரைவாக அவநம்பிக்கையுற்று, தொழிலாள வர்க்கத்தின் அரசியல் நனவின் மெதுவான முன்னேற்றத்தில் பொறுமையிழந்தது. ஒரு நிலக்கரி சுரங்க தொழிலாளி அல்லது கப்பல் கட்டும் தொழிலாளியை காட்டிலும், வனசா மற்றும் கொறின் ரெட்கிரேவுக்கு தொழிற் கட்சியுடன் முறித்துக் கொள்வது மிகவும் எளிதாக இருந்தது.
கட்சியின் அரசியல் நிலைப்பாட்டில் இந்த அடிப்படை மாற்றத்திற்கு வழங்கப்பட்ட காரணம் —அதாவது ஊதியக் கட்டுப்பாடு குறித்த தொழிற் கட்சியின் வெள்ளை அறிக்கை (அப்போதும் கூட அது சம்பள வெட்டு மீதல்ல!)— தொழிலாள வர்க்கத்திடம் WRP தலைமை காட்டிய அலட்சியத்தை அம்பலப்படுத்தியது. இந்த சம்பவத்தை, ராம்சே மக்டொன்னால்டின் இழிவார்ந்த 1931 காட்டிக்கொடுப்புடனும் —தேசிய அரசாங்கத்தை அமைத்தல்— மற்றும் பெரும் மந்தநிலையின் மத்தியில் நலன்புரி உதவிகளுக்கான நிதி ஒதுக்கீடு குறைப்பு போன்ற வரலாற்று அனுபவத்துடன் எவ்வாறு ஒப்பிடப்பட முடியும்? இந்த சம்பவங்கள் தொழிலாளர்களின் ஒட்டுமொத்த தலைமுறைகளுக்கும் அரசியல் நிலைப்புள்ளியை (reference point) அமைத்தன. ஆனால் தொழிலாள வர்க்கம் அதன் பலத்தை எடுத்துக்காட்டி சமீபத்தில் அது தோற்கடித்திருந்த டோரிகளால் பிரதிநிதித்துவப்படுத்தப்பட்ட அபாயங்களைப் புறக்கணித்து விட்டு, பாராளுமன்ற வெள்ளையறிக்கை என்ற இதுபோன்றவொரு அற்ப காரணத்தின் அடித்தளத்தில் தொழிற் கட்சி அரசாங்கத்தைப் பதவியிலிருந்து கீழிறக்க தொழிலாள வர்க்கத்திற்கு அழைப்புவிடும் ஒரு கட்சியை பொறுப்புணர்ச்சி வாய்ந்ததாக எடுத்துக் கொள்ளப்படும் என்று எதிர்பார்க்க முடியாது.
ட்ரொட்ஸ்கி இத்தகைய மேலோட்டமான பொறுமையின்மைக்கு எதிராக சுதந்திர தொழிற் கட்சியினரை (ILP) எச்சரித்திருந்தார்:
“தொழிற் கட்சியின் நிலைப்பாடுகள் ஏற்கனவே அதன் கடந்த கால ஆட்சி அதிகார செயல்பாடுகளிலும் அதன் தற்போதைய பிற்போக்குத்தனமான களத்திலும் அம்பலப்பட்டுள்ளதாக வாதிடப்படுகிறது. சான்றாக, அதன் பிரைட்டன் தீர்மானத்தில். நம்மைப் பொறுத்த வரையில் — எங்களுக்கு அது சரி! ஆனால் தொழிற் கட்சிக்கு வாக்களித்த எட்டு மில்லியன் பெருந்திரளான மக்களைப் பொறுத்த வரையில் அது அவ்வாறு இல்லை.
“மாநாட்டு முடிவுகளுக்கு அதிகூடிய முக்கியத்துவம் கொடுப்பது புரட்சியாளர்களுக்கு ஒரு மிகப் பெரிய அபாயமாகும். நாம் இதுபோன்ற ஆதாரங்களை நமது பிரச்சாரத்தில் பயன்படுத்துகிறோம் தான் — ஆனால் அதை நமது சொந்த பத்திரிகைகளின் செல்வாக்கு வட்டத்துக்கு வெளியே முன்வைக்க முடியாது. ஒருவர் அவரின் சொந்த தொண்டை பலத்துக்கு மேல் கூச்சலிட முடியாது.” (பிரிட்டனைப் பற்றி ட்ரொட்ஸ்கியின் எழுத்துக்கள், தொகுதி 3, நியூ பார்க், பக்கம் 118-19)
தேர்தல் சம்பந்தமாக ILP புறக்கணிப்பு நிலைப்பாட்டை ஏற்க வேண்டும் என்று முன்மொழிந்தோருடன் ட்ரொட்ஸ்கி கூர்மையாக முரண்பட்டிருந்தார்:
“ஒரு புறக்கணிப்பு தந்திரோபாயத்தில் ILP வெற்றி பெற்று, மில்லியன் கணக்கான தொழிலாளர்கள் அதைப் பின்தொடர்வதை வென்றுவிட்டதாகவும், இந்த மில்லியன் கணக்கான வாக்குகள் கிடைக்காமல் போனமையால் தொழிற் கட்சியின் தேர்தல் தோல்விக்கு வழிவகுத்தது என்றும் வைத்துக்கொள்வோம். போர் வந்தால் என்ன நடக்கும்? ஏமாற்றமடைந்த பெருந்திரளான மக்கள் தொழிற் கட்சி பக்கம் திரும்புவார்களே அன்றி நம் பக்கம் திரும்ப மாட்டார்கள். போரின் போது சோவியத்துகள் அமைக்கப்பட்டாலும், சிப்பாய்கள் அவர்களுக்காக தொழிற் கட்சி ஆட்களையே தேர்ந்தெடுப்பார்கள், நம்மை அல்ல. அப்போது தொழிலாளர்கள் நாம் தான் தொழிற் கட்சியை முடமாக்கிவிட்டோம் என்று கூறக்கூடும். ஆனால் நாம் விமர்சனரீதியான ஆதரவு அளித்து, அதன் மூலமாக தொழிற் கட்சி அதிகாரத்திற்கு வர உதவினால், அதே நேரத்தில் தொழிற் கட்சி ஒரு முதலாளித்துவ அரசாங்கமாக செயல்படும் என்றும், முதலாளித்துவ போரை வழி நடத்தும் என்றும் தொழிலாளர்களுக்குக் கூறி வந்தால் — பின்னர், போர் வரும் போது, நாம் சரியாக முன்கணித்ததையும், அதே நேரத்தில் நாம் அவர்களை [தொழிலாள வர்க்கத்தை] நோக்கியே அணிவகுத்தோம் என்பதையும் தொழிலாளர்கள் காண்பார்கள். நாம்சோவியத்களில் தேர்ந்தெடுக்கப்படுவோம், சோவியத்களும் காட்டிக் கொடுக்காது.
“அதிகாரத்திற்கான நேரடிப் போராட்டத்தின் மூலமாக ஒரு புரட்சிகர கட்சிக்கு நாடாளுமன்றத்தை கவிழ்க்க பலம் இருக்கும் போது மட்டுமே, அதாவது, பொது வேலைநிறுத்தம் மற்றும் எழுச்சி மூலமாக நாடாளுமன்ற நடவடிக்கையை பிரதியீடு செய்யும் பலம் இருக்கும் போது மட்டுமே, ஒரு பொதுவான கொள்கையாக, நாடாளுமன்றத்தைப் புறக்கணிக்க ஒரு புரட்சிகர கட்சிக்கு உரிமை உண்டு.
பிரிட்டனில் பெருந்திரளான மக்களுக்கு இதுவரையில் ILP மீது நம்பிக்கை இல்லை. ஆகவே நாடாளுமன்ற எந்திரத்தை உடைக்க ILP மிகவும் பலவீனமாக இருப்பதால், அதை தொடர்ந்து பயன்படுத்திக் கொள்ள வேண்டும். ஒரு பகுதியான புறக்கணிப்பை பொறுத்த வரையில், ILP அவ்விதம் செயற்பட விரும்பினால், அது யதார்த்தமாக இருக்காது. பிரிட்டிஷ் அரசியலின் இந்த கட்டத்தில், அது தொழிலாள வர்க்கத்தை அது ஏதோவொரு விதத்தில் அவமதிப்பதாக அவர்களால் விளங்கிக் கொள்ளப்படும்; குறிப்பாக நாடாளுமன்ற மரபுகள் இன்னமும் மிகவும் பலமாக உள்ள பிரிட்டனில் இது நிஜமான நிலைமையாக உள்ளது.” (மேற்குறிப்பிட்ட அதே நூல்)
ILP இன் புறக்கணிப்பு கொள்கையை யதார்த்தமற்றது என்று குறிப்பிட்டால், பின்னர் WRP 1975 இல் தொழிற் கட்சி சம்பந்தமாக ஏற்றிருந்த கொள்கையையும் நியாயப்படி சிறுபிள்ளைத்தனத்தனமானது என்று தான் விவரிக்க முடியும். WRP தலைவர்கள், ட்ரொட்ஸ்கி எழுதியிருந்ததை உதறித் தள்ளியதுடன், தொழிலாளர்கள் என்ன உணர்ந்தார்களோ அதையும் அலட்சியப்படுத்தி, பகுதியான தோல்விக்கு — தொழிற் கட்சி அரசாங்கத்தை இராஜினாமா செய்ய நிர்பந்திக்கவும், அதை உரிய விதத்தில் தண்டித்ததும், திரும்பவும் அதற்கே வாக்களிக்கவும் முன்மொழிந்தனர்! இது மனநிலை சரியில்லாத பெற்றோர் அவர்களின் குழந்தையின் பயத்தைப் போக்குவதற்காக குழந்தையை ஜன்னல் விளிம்பில் இருந்து கீழே தள்ளிவிட தீர்மானிப்பதைப் போல உள்ளது! WRP முன்மொழிந்த உபாயத்தில் இருந்த பிரச்சினை என்னவென்றால், அதன் வெற்றி நடுத்தர வர்க்கத்தைச் சார்ந்திருந்த அளவுக்கு தொழிலாள வாக்கத்தைச் சார்ந்திருக்கவில்லை, தொழிற் கட்சி மீண்டும் தேர்ந்தெடுக்கப்படுவது என்பது, பெரிதும் WRP இன் கொள்கையுடன் அவர்கள் கொண்டிருக்கும் உடன்பட்டை சார்ந்திருக்கும் — அல்லது குறைந்தபட்சம் அதன் இரண்டாவது பாதியை சார்ந்திருக்கும்.
வெறும் இரண்டாண்டுகளுக்கு முன்னர் தான், அதன் துரதிஷ்டமான ஸ்தாபக வேலைத்திட்டத்தில், SLL குறைந்தபட்சம் ஒரு சரியான புள்ளியைக் குறிப்பிட்டது: “தொழிற் கட்சி அரசாங்கத்தைச் சோசலிச கொள்கையின் அடிப்படையில் தேர்ந்தெடுக்க போராடுவதை எதிர்க்கும் IMG [International Marxist Group] மற்றும் IS [International Socialist] ஐ தொழிலாள வர்க்கம் முழுமையாக நிராகரிக்க வேண்டும். தொழிற் கட்சி ஏற்கனவே போதுமானளவு தொழிலாள வர்க்கத்தில் மதிப்பிழந்திருப்பதாக அவை அதிதீவிர இடது சாகசவாதத்தை முன்னெடுத்து, அவ்விதத்தில் அவை அந்த வர்க்கத்துக்காக தங்களைப் பிரதியீடு செய்து கொள்கின்றன. அதே சமயம், தொழிலாளர்களின் நனவு பொருளாதார போராட்ட மட்டத்தில் மட்டுப்பட்டுள்ளது என்ற தளத்தில் இருந்தவாறு, டோரி அரசாங்கத்துக்கு எதிராக தொழிலாள வர்க்கத்தை அரசியல்ரீதியில் அணிதிரட்டி போராட அவர்கள் மறுக்கின்றனர்." (நான்காம் அகிலம், Winter 1973 பக்கம் 132)
IMG-IS இன் நிலைப்பாடு இப்போது சரியென WRP ஒப்புக் கொள்ள, இந்த இரண்டாண்டுகளில் என்ன பேரழிவுகரமான சம்பவம் நடந்திருந்தது? அனைத்திற்கும் மேலாக, தொழிற் கட்சியை பதவியிலிருந்து கீழிறக்க வேண்டும் என்றளவுக்கு அது தொழிலாள வர்க்கத்தின் பார்வையில் மதிப்பிழந்திருந்ததாக ஹீலியும் பண்டாவும் முடிவுக்கு வந்திருந்தனர் என்றால், பின்னர் அவர்கள் ஏன் அது மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட வேண்டுமென முன்மொழிந்தார்கள்? இந்த கேள்விகளுக்கு அங்கே எந்த பதிலும் இல்லை. உண்மையில் இந்த கேள்விகள் மத்திய தலைமைக்கு உள்ளேயே கூட கேட்கப்படவில்லை, அது ஹீலியைச் சுற்றி இருந்த நடுத்தர வர்க்க கும்பலுக்குள் வேகமாக சீரழிந்து கொண்டிருந்தது.
1975 இலையுதிர்காலத்தில், “தொழிற் கட்சியை இராஜினாமா செய்ய நிர்ப்பந்தி” என்று தலைப்பிட்டு வெளியிடப்பட்ட ஓர் அறிக்கையில் புதிய கொள்கை விவரிக்கப்பட்டிருந்தது. இந்த ஆவணத்தில் WRP இன் எல்லா தீவிர வாய்சவடால்களும் இருந்த போதினும், அது அதன் கொள்கைகளுக்குத் தொழிலாளர்களை வெல்வதற்கான அனைத்து நம்பிக்கையையும் கைவிட்டுவிட்டது என்பதை உறுதிப்படுத்தியது. தொழிலாள வர்க்கத்திற்கு உள்ளேயும் மற்றும் அதன் அமைப்புகளுக்கு உள்ளேயும் தொழிற் கட்சி மற்றும் தொழிற்சங்க அதிகாரத்துவத்தின் வலதுசாரிகளுக்கு எதிராக அதுவொரு போராட்டத்தை ஒழுங்கமைக்க முடியும் என்று WRP உறுதியாக நம்பியிருந்தால், அங்கே புதிய தேசிய தேர்தல்களைக் கோருவதற்கு காரணமே இல்லை. உண்மையில் WRP இன் கொள்கை, தொழிற் கட்சியைப் பதவியிலிருந்து டோரிகள் கீழிறக்கும் வரையில் பொறுமையாய் காத்திருப்பதாக இருந்தது — வலதுசாரிக்கு எதிராக அணிதிரளக் கூடிய சக்தியாக தொழிலாளர் இயக்க உள்வாழ்வில் செயலூக்கத்துடன் தலையீடு செய்வதாக இருக்கவில்லை.
அத்தகைய ஒரு கொள்கை, வெறுமனே அதற்கு மட்டுமின்றி, தொழிலாளவர்க்கத்திலும் தொழிலாளவர்க்கத்தினாலும் ஒரு புரட்சிகர கட்சியைக் கட்டமைக்க வேண்டிய அவசியத்திற்காக கடினமான மற்றும் அலுப்பான நாளாந்த பணியை மேற்கொள்வதில் ஆர்வமற்றிருந்த WRP க்குள் இருந்த நடுத்தர வர்க்க பிரமுகர்களுக்கும் அருமையாக பொருந்துவதாக இருந்தது. ஹீலியும், பண்டாவும் அவர்களது அமைப்பை, அரசியல் நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்களின் (விரிவுரையாளர்கள், நடிகைகள், பத்திரிகையாளர்களின்) ஒரு கட்சியாக மாற்றினார்கள், இவர்களுக்கு WRP ஒரு தளத்தையும், பல்வேறு கொண்டாட்ட தருணங்களில் ஒன்றுகூடி பின்னர் வீட்டுச் சென்று மறந்து விடும் பார்வையாளர்களையும் வழங்கியது.
அந்த அறிக்கையில் கண்கூடாகவே பல முரண்பாடுகள் இருந்தன. “தொழிற் கட்சியில் இப்போது தவிர்க்கவியலாத அவசியமாக இருக்கும் பெரும் போராட்டத்தில் இருந்து எந்தவிதத்திலும் பின்வாங்குவதற்கு” எதிராக அது எச்சரித்தது — ஆனால் துல்லியமாக அதை செய்வதற்கே WRP முன்மொழிந்தது. பின்னர் அது, “மத்தியவாதிகளின் முதிர்ச்சியில்லா உடைவுகள், சாகசங்கள் மற்றும் பீதியூட்டும் தோரணைகள் அனைத்தையும் முற்றிலுமாக எதிர்க்க" வேண்டியிருப்பதாக அறிவித்தது. ஆனால் WRP மிகப்பெரிய முதிர்ச்சியில்லா உடைவையும் அனைத்து பீதியூட்டும் தோரணைகளையும் முன்மொழிந்து கொண்டிருந்தது — அதாவது தொழிற் கட்சி அரசாங்கத்தைப் பதவியிலிருந்து கீழிறக்க முன்மொழிந்தது! இந்த அறிவுரையில் மிகவும் ஆர்வத்திற்குரிய விடயம் என்னவென்றால் தொழிற் கட்சிக்குள் வலதுசாரியினரை வெளியேற்ற போராடி கொண்டிருந்தவர்களுக்கு எதிராக வழிநடத்தப்பட்டிருப்பதாக தென்படும். இறுதியில் அந்த அறிக்கை குறிப்பிட்டது: “காட்டிக்கொடுப்புகளுக்கும் மற்றும் உடைவுகள் மீதான அச்சுறுத்தல்களுமான பொறுப்பை அவற்றுக்குச் சொந்தமான இடத்தில் — வில்சன் மீதும் வலதுசாரிகள் மீதும் — வைக்க வேண்டும்.”
ஆனால் காட்டிக்கொடுப்புக்கான பொறுப்பை வில்சன் மற்றும் வலதுசாரி மீது சுமத்தினால், பின்னர் இந்த வலதுசாரிகள் பிரதியீடு செய்யப்பட்டு வெளியேற்றப்பட வேண்டுமென்ற கோரிக்கையை ஏன் WRP முன்வைக்கவில்லை?
WRP இன் அதிதீவிர இடதுவாதம் தலைகீழாக திரும்பி ஒரு வினோதமான நாடாளுமன்ற கோணல்புத்தி வடிவை எடுத்திருந்தது என்பது 1976 வாக்கில் தெளிவடையத் தொடங்கியது. புதிய தேர்தல் நடத்தப்பட்டால் மட்டுமே… தொழிலாள வர்க்கத்தின் எல்லா பிரச்சினைகளும் தீர்க்கப்படும். அக்டோபர் 1976 இல் WRP இன் இரண்டாவது மாநாடு, “நெருக்கடி: ஒரு புரட்சிகர சோசலிச தீர்வு" என்று தலைப்பிட்ட ஒரு தீர்மானத்தை வெளியிட்டது:
“இந்த அமைப்புமுறையை நிர்வகிக்கும் ஒட்டுண்ணிகளை விட தொழிலாள வர்க்கம் மிகவும் பலம் வாய்ந்தது. ஏகாதிபத்தியத்தைத் தோற்கடிக்க முடியும் என்று காட்டிய வியட்நாம், மொசாம்பிக் மற்றும் அங்கோலா தொழிலாளர்களுடன் சேர்ந்து ஒரு நிலைப்பாட்டை எடுக்க வேண்டியதே அவர்களின் பணியாகும்.
“ஆனால் துரோகிகளின் இந்த அரசாங்கத்தைப் பதவியிலிருந்து கீழிறக்குவதன் மூலமாக மட்டுமே இந்த பலத்தை வெளிப்படுத்த முடியும். பின்னர் தொழிலாளர் இயக்கத்தினுள் டோரிக்கள் மற்றும் அவர்களின் முகவர்கள் இருவரினது கணக்குகளையும் தீர்த்துக்கொள்ள முடியும்.
“பொதுத் தேர்தலில் போராட முடியும். நெருக்கடியைத் தடுக்க, புரட்சிகர தலைமையைக் கட்டமைக்கவும் மற்றும் ஒரு சோசலிச வேலைத்திட்டத்தின் பின்னால் தொழிலாள வர்க்கத்தை உடைக்க முடியாத சக்தியாக முறுக்கேற்றவும் முடியும்.
“கூட்டணிக்கான எந்தவொரு முயற்சியையும் நிராகரிக்குமாறும், தொழிற் கட்சி அரசாங்கத்தைப் பதவியிலிருந்து கீழிறக்குமாறும் மற்றும் சோசலிச கொள்கையின் அடிப்படையிலான பொது தேர்தலுக்கு கட்டாயப்படுத்துமாறும் நாம் தொழிலாளர்களை அழைக்கிறோம்” (தொழிலாளர் புரட்சிக் கட்சியின் ஐந்தாண்டுகள், பக்கம் 4)
தொழிற் கட்சி தலைமைக்கு எதிராக தொழிலாளர்களின் இயக்கத்தினுள் ஒரு தொடர்ச்சியான போராட்டத்தை நிலைநிறுத்துவதில் —தொழிற்சங்கங்களுக்குள் கன்னைகளை உருவாக்குதல், தொழிற் கட்சிக்குள் வேட்பாளர் தேர்வுக் குழுவை வளர்த்தெடுத்தல், இன்னும் இதர பிறவற்றில்— WRP தலைமை இடது வாய்சவடால் மற்றும் நாடாளுமன்ற சீர்திருத்தவாதத்தின் ஒரு பன்முக கலவையைப் பதிலீடாக வைத்தது. தொழிலாள வர்க்கம் முழுப் பலத்தையும் ஒருபோதும் தேர்தல்களில் வெளிப்படுத்த முடியாது. என்ன பிரச்சினைகளுக்காக ஒரு பொது தேர்தலில் போட்டியிட்டாலும் ஒரு பொது தேர்தல் மூலமாக "தொழிலாளர் இயக்கத்தில் டோரிக்கள் மற்றும் அவர்கள் முகவர்களுடனான கணக்கை தீர்ப்பது" குறித்த கூற்று, “ஆட்சி அதிகாரத்துக்குத் தயாரிப்பு செய்தல்,” மற்றும் "புரட்சியின் உத்வேகம்" குறித்து என்ன தான் வார்த்தைஜாலங்கள் இருந்தாலும், ஒரு "நாடாளுமன்ற பாதையை" தழுவும் முன்னோக்கை கொண்டிருந்தது.
நவம்பர் 12, 1976 இல் முதற்பக்க கருத்துரையில் நியூஸ் லைன் அறிவித்தது: “ஒட்டுமொத்த தொழிலாளர் இயக்கமும் தொழிற்சங்க இயக்கமும், டோரி மற்றும் வங்கியாளர்கள் நிர்வாகம் பதவியேற்பதைத் தடுப்பதற்காக உடனடியாக செயல்பட வேண்டும்”.
“தொழிலாள வாக்கத்தின் சொந்த அமைப்புகள் மூலமாக —தொழிற்சங்கங்கள் மற்றும் தொழிற் கட்சி மூலமாக— அதன் பலத்தைப் பிரயோகித்து இதை செய்ய முடியும்.
“ஒரு முழுமையான சோசலிச வேலைத்திட்டத்தை ஏற்க ஓர் அவசர தொழிற் கட்சி மாநாட்டிற்கு அழைப்பு விடுப்பதே, முதல் அத்தியாவசிய நடவடிக்கையாக இருக்க வேண்டும்.
“இரண்டாவதாக, இந்த செல்வாக்கிழந்த, பீதியில் நடுங்கும், தொழிலாள வர்க்க விரோத கலஹன் (Callaghan) அரசாங்கத்தைக் கட்டாயம் பதவியில் இருந்து இறக்க வேண்டும். (1976 முதல் 1979 வரை தொழிற் கட்சி அரசாங்கத்தின் பிரதமர்)
“மூன்றாவதாக, தாட்சர் கும்பலை முறியடிக்க சோசலிச கொள்கைகளின் அடிப்படையில் ஒரு பொது தேர்தல் நடத்தப்பட வேண்டும்.”
இந்த பழிக்கு அஞ்சா- நடைமுறையைத் திட்டமிட்டதற்காக கபடமில்லா அனைத்து பிரிட்டிஷ் ஜனநாயகவாதிகளின் பாராட்டுக்களுக்கும் WRP தலைவர்கள் தகுதி உடையவர்களாக ஆனார்கள். முதலாவதாக தொழிற் கட்சி ஓர் அவசர கூட்டத்தில் சோசலிச கொள்கைகளை ஏற்க வேண்டுமென அவர்கள் கோரினார்கள். பின்னர், இது நிறைவேற்றப்படும் என்று கருதிய அவர்கள், இந்த புரட்சிகர வேலைத்திட்டம் நடைமுறைப்படுத்தப்பட வேண்டுமென முன்மொழியவில்லை. அதற்கு பதிலாக, அந்த அரசாங்கம் இராஜினாமா செய்ய வேண்டுமென்றும், ஏற்கனவே ஆளும் கட்சி ஏற்றுக் கொண்டிருந்த சோசலிச கொள்கைகளின் அடிப்படையில் ஒரு பொது தேர்தலை நடத்த வேண்டுமென்றும் WRP கோரிக்கை விடுத்தது. வேறு வார்த்தைகளில் கூறுவதானால், சோசலிசம் ஒருமுறை வாக்கெடுப்பில் உறுதிப்படுத்தப்பட்டுவிட்டால் அதை நிறைவேற்றி விடலாம் என்பதாக இருந்தது. ஓர் அபத்தமான கொள்கையால் மட்டுமே, WRP இன் கொள்கை அறிக்கைகளில் இதுபோன்ற கோரமான பிதற்றல்களை உருவாக்க முடியும்.
WRP இன் அரசியல் நிலைப்பாடு தொழிலாள வர்க்கத்திடம் இருந்து எவ்வளவு தூரம் விலகி சென்றிருந்தது என்பதை புரிந்து கொள்ள, ஜூலை 1975 க்குப் பின்னர் அபிவிருத்தி செய்யப்பட்ட கொள்கைகளை முந்தைய வில்சன் தொழிற் கட்சி அரசாங்கத்தின் கீழ் போராட முன்னெடுக்கப்பட்ட கொள்கைகளுடன் வேறுபடுத்தி ஒப்பிட்டு பார்ப்பது பயனுள்ளதாக இருக்கும்.
WRP, தொழிற் கட்சி அரசாங்கத்தை கீழிறக்குவதற்கான அதன் அழைப்பை, சம்பளச் சட்டங்கள் அறிமுகப்படுத்தப்பட்டதன் அடித்தளத்தில் அமைத்திருந்தது. ஆனால் முந்தைய வில்சன் அரசாங்கம் ஆகஸ்ட் 1966 இன் விலைகள் மற்றும் வருமான சட்டத்தின் கீழ் கூலிகளை உறையச் செய்திருந்ததுடன், தொழிலாள வர்க்கத்தின் வாழ்க்கை தரங்கள் மீது தாக்குதல்களைத் தொடுத்திருந்தது. ஆனால் அந்நேரம் —பிரிட்டிஷ் ட்ரொட்ஸ்கிஸ்டுகள் ICFI ஐ கட்டி எழுப்பும் செறிவான போராட்டத்தில் இருந்தபோது— SLL முற்றிலும் வேறுபட்ட அணுகுமுறையை ஏற்றது. 1967 இல் வெளியிடப்பட்ட "வில்சனுக்கு மாற்றீடு" என்ற அவரின் பிரசுரத்தில், ஹீலி, தொழிற் கட்சி அரசாங்கத்தின் தாக்குதல்களைத் தொகுத்துரைத்து பின்வரும் கேள்வியை எழுப்பினார்:
“டோரிகளைத் திரும்ப வர விடாமல் தொழிற்சங்கம் மற்றும் தொழிற் கட்சி இயக்கத்தில் உள்ள இன்றைய வலதுசாரி தலைவர்களை எதிர்த்து எப்படி போராடுவது? இந்த கேள்வி தான் நேர்மையான பலரின் கவனத்தில் நிறைந்துள்ளது.”
சோசலிச கொள்கைகளின் அடிப்படையில் “இடது' நாடாளுமன்ற உறுப்பினர்களைப் போராட்டம் செய்விப்போம்” என்ற கோரிக்கையின் கீழ், வில்சன் தலைமையைப் பிரதியீடு செய்வதற்கு SLL அழைப்பு விடுத்தது. ஒன்பது ஆண்டுகளுக்கு பின்னர், தொழிற் கட்சி கிளைகளின் அரசியல் அணிகளில் பகிரங்கமான வலதுசாரிகளுக்கு எதிராக ஒரு போராட்டம் அபிவிருத்தி அடைந்து வந்தது. ஆனால் WRP, வளைந்து கொடுப்பதும் பொறுமையும் அவசியம் என்று வலியுறுத்திய அதேவேளையில், உண்மையில் அரசாங்கத்தை இராஜினாமா செய்ய நிர்பந்திக்கும் கொள்கையுடன் அந்த அபிவிருத்தியிலிருந்து தன்னை துண்டித்துக் கொண்டு, வலதுசாரி எதிர்ப்பின் மீது Militant tendency போன்ற மத்தியவாதிகள் செல்வாக்கு செலுத்த ஒரு தங்குதடையற்ற களத்தை அமைத்தளித்தது.