ICFI
தொழிலாளர் புரட்சிக் கட்சி ட்ரொட்ஸ்கிசத்தை எவ்வாறு காட்டிக்கொடுத்தது?

சட்ட ஒழுங்கிற்கான ஒரு கட்சியை நோக்கி

GLC க்கு சார்பாக WRP தொழிற்சங்கங்களுடன் போராடி கொண்டிருந்த அதேவேளை, வர்க்க போராட்டத்தின் மற்றொரு முனையில் பிரச்சனைகள் அபிவிருத்தி அடைந்து கொண்டிருந்தன. இலண்டன், மான்செஸ்டர் மற்றும் லிவர்பூலில் ஒடுக்கப்பட்ட ஆயிரக் கணக்கான புலம்பெயர்ந்த தொழிலாளர்களும் இளைஞர்களும் முதலாளித்துவத்தின் சீரழிந்த நிலைமைகளுக்கு எதிராகவும், பொலிஸின் கொடுமை மற்றும் இனவாதத்திற்கு எதிராகவும் திரண்டெழுந்தனர். இந்த கிளர்ச்சிகள் தாட்சரை நோக்கிய இளைஞர்களின் வெறுப்பை மட்டுமல்ல, மாறாக நகர உட்பகுதி சேரிகளின் கண்காணிப்பாளர்களாக செயல்பட்டு வந்த சமூக ஜனநாயக அலுவலக சிப்பந்திகளினது பணக்குவியல்கள் மீதான அவர்களின் அவமதிப்பையும் வெளிப்படுத்தின. இந்த கிளர்ச்சிகள் எவ்வகையிலும் தற்செயலானவை இல்லை என்பதோடு, தொழிற் கட்சியினரின் தொடர்ச்சியான காட்டிக்கொடுப்புகளால், அதாவது பொறுமையாக இருக்குமாறு அவர்களின் நயவஞ்சக முறையீடுகள், முதலாளித்துவ அரசு படைகளுக்கு எதிராக இளைஞர்களை அணித்திரட்ட அவர்கள் மறுத்தமை, மற்றும் அவர்களின் நிலைமைகளை மேம்படுத்த அவர்கள் தகைமையற்று இருந்தமை என இவற்றால் உருவாகி இருந்த விரக்தியின் வெளிப்பாடாக இருந்தன.

பிரிக்ஸ்டன் மற்றும் ரொக்ஸ்ரெத்தில் ஆயிரக் கணக்கான இளைஞர்களால் WRP ஆனது சீர்திருத்தவாதிகளின் கூட்டாளிகளாகவே பார்க்கப்பட்டது என்ற உண்மை, அவர்களின் விரக்தியைத் தீவிரப்படுத்த மட்டுமே செய்ததுடன், தன்னியல்பான எழுச்சி மூலமாக அல்லாமல் அவர்களின் கண்ணோட்டங்களைத் தெரியப்படுத்துவதற்கு வேறு வழி இல்லாதோராய் அவர்களை மாற்றியிருந்தது. இந்த கிளர்ச்சிகளுக்குத் தலைமையும் வேலைத்திட்டமும் இல்லாமல் இருந்தன என்பதற்கு பெரிதும் WRP தான் பொறுப்பாக்கப்பட வேண்டும். 1981 கோடையில், டோரிக்கள் மற்றும் அவர்களின் சீர்திருத்தவாத சேவகர்களை எதிர்த்து போராடுவதற்கு வழி தேடிய கிளர்ச்சிகரமான இளைஞர்களுக்கு WRP என்ன மாற்றீட்டை வழங்கி இருக்க முடியும்? இடது பேச்சாளர்கள் வழிநடத்திய "டோரி-எதிர்ப்பு" போராட்டம் குறித்த அதன் பேச்சுக்கள், இத்தகைய நம்பிக்கையற்ற நாடாளுமன்றவாதிகளை இயல்பாகவே அவமதித்து ஒதுக்கிய இளைஞர்களுக்கு நகைப்பூட்டுவதாக மட்டுமே தோன்றியிருக்க முடியும். தொழிலாள வர்க்கத்தை நோக்கிய ஒரு திருப்பத்தை அது பரிந்துரைக்கவும் முடியாமல், WRP, வெறுமனே GLC இன் சட்டதிட்டங்களுக்கு ஒத்துழைக்குமாறு தொழிற்சங்கங்களுக்கு அறிவுறுத்தியது. சுருங்கச் சொன்னால், இளைஞர்களுக்குக் காட்டுவதற்கு WRP வசம் ஒரு முட்டுச்சந்தை தவிர வேறொன்றும் இருக்கவில்லை.

முதலாளித்துவ அரசின் சீர்திருத்தவாத ஏஜண்டுகளுக்கு WRP தலைவர்களின் சரணாகதியின் அரசியல் தர்க்கமானது, எழுச்சிகள் பற்றிய அவர்களின் வெறித்தனமான கண்டனங்களில் —எழுச்சிகளை அவர்கள் வழக்கமான பாணியில் கலவரங்கள் எனக் குறித்ததில்— மற்றும் வெடிக்கும் பதட்ட நிலைக்கான உண்மையான புறநிலை அடிப்படை ஏதும் இருப்பதாக மறுக்கும் அவர்களது முயற்சிகளில் மிக ஒழுக்கங் கெட்ட வெளிப்பாட்டைக் கண்டது. பதிலாக நியூஸ் லைன் எழுச்சிகளை உண்மையில் அரசு ஆத்திர மூட்டல்கள் என வலியுறுத்தியது. இந்தச் சூத்திரப்படுத்தல் ‘டோரி எதிர்ப்பு போராட்டம்’ எனும் பெயரில் எழுச்சி கொண்ட இளைஞர்களைக் கண்டனம் செய்ய WRP தலைவர்களுக்கு வசதியாக அனுமதி அளித்த அதேவேளை, முற்றுகையிடப்பட்ட பகுதிகளில் தலைமை தாங்கிய பிராந்திய தொழிற் கட்சி அரசாங்கங்கள் மீது எவ்வித தாக்குதலையும் தவிர்த்தது.

"தொழிற் கட்சி கட்டுப்பாட்டில் உள்ள நகரசபைகள், கலவர பாதிப்புகளாலும் அதிக பொலிஸ் செலவுகளாலும் கூடுதல் கடனில் மூழ்கடிக்கப்பட்டு வருகின்றன," என்று ஜூலை 11, 1981 நியூஸ் லைன் பதிப்பில் வெளியான ஒரு தலையங்கத்தில் WRP கருத்துரைத்தது. கலவரம் நடந்த பகுதிகளில் இருந்து படைகளை வெளியேற்ற வேண்டுமென GLC யை கோருவதன் மூலம் ஏன் WRP இந்த பிரச்சினையைக் கையாளவில்லை?

ஜூலை 18, 1981 இல், "கலவரங்கள்: பொலிஸ்-இராணுவ ஆத்திரமூட்டல்?" என்று தலைப்பிட்ட WRP அரசியல் குழுவின் அறிக்கை ஒன்றை நியூஸ் லைன் பிரசுரித்தது. அது, "பிரிட்டனில் இரத்தம் தோய்ந்த மோதலை உண்டாக்குவதற்காக செயல்பட்டு" வந்த அரசினது விசேட முகவர்களால் திட்டமிடப்பட்ட சதியின் விளைபொருள் தான் இந்த கிளர்ச்சிகள் என்று நிரூபிக்க முயன்றது. இந்த "கலவரங்கள்", "அரசாங்க எதிர்ப்பாளர்கள் அனைவருக்கும் எதிராக பயங்கரவாதத்தையும் அச்சுறுத்தலையும் பயன்படுத்தி தொழிலாள வர்க்கத்திற்கு எதிராக முன்கூட்டிய ஒரு வன்முறை தாக்குதலை" நடத்த டோரிக்களுக்கு உதவுவதற்காகவே முடுக்கிவிடப்பட்டு இருந்தன என்று அது வாதிட்டது.

"பொலிஸ் ஊடுருவல்காரர்கள் மற்றும் இராணுவ உளவுத்துறையின் ஆத்திரமூட்டுபவர்களுக்கு எதிராக முழுமையாக விழிப்புடன் இருக்க" அழைப்பு விடுத்து WRP வலியுறுத்துகையில், அந்த கிளர்ச்சி "வெறுமனே டோரி கொள்கைகளால் நடத்தப்பட்ட சமூக இழப்புகள் மற்றும் வேலைவாய்ப்பின்மைக்கு எதிரான ஒரு தன்னெழுச்சியான வெடிப்பல்ல. மாறாக, ஒவ்வொரு சம்பவமும் திட்டமிட்டு வேண்டுமென்றே பொலிஸ் சிறப்புப்படை பிரிவுகளின் நடவடிக்கைகளால் உண்டாக்கப்பட்டதாகும்," என்று வலியுறுத்தியது.

கிழக்காசிய மற்றும் கறுப்பின சமூகத்தின் பெரும் பகுதியினரை ஆத்திரமூட்டலாளர்களாக அல்லது அவர்களின் பதிலாட்களாக வசைபாடி துஷ்டர்களாக காட்டி, "ஜன்னல்களை தகர்ப்பதையும் கொள்ளை அடிப்பதையும் தடுக்க பொலிஸ் முற்றிலும் எந்த முயற்சியும் மேற்கொள்ளவில்லை" என்று, இந்த கோழைத்தனமான அயோக்கியர்கள் குறை கூறினார்கள்.

GLC இன் ஊதுகுழலாக செயல்பட்ட WRP அரசியல் குழு ஆத்திரத்துடன் குறிப்பிடுகையில், "கலவரங்கள் நடந்த எல்லா நகரங்கள் மற்றும் தன்னாட்சி பெருநகரங்களும் தொழிற் கட்சியின் கட்டுப்பாட்டில் இருந்தவையாகும்," என்றது. இந்த அரசியல் சூழ்நிலையின் முக்கியத்துவத்தை பகுத்தாராய்வதற்குப் பதிலாக, ஹீலியவாதிகள் சீர்திருத்தவாதிகளுக்கு அவர்களின் அனுதாபத்தை வழங்கினர்: "ஹெசல்டைன் ஒரு பைசா கூட விட்டுக் கொடுக்க மறுத்த நிலைமைகளின் கீழ் கலவர சேதங்கள் அவர்களின் அன்றாட செலவுகளை இன்னும் பேரளவில் அதிகரிக்க உள்ளது. இந்த பிராந்திய அதிகாரிகள் அத்தியாவசிய சமூக சேவைகளில் மிஞ்சி இருப்பதைப் பாதுகாக்கவும் பொலிஸ் வேலைகளுக்குமான செலவுகளையும் சமாளிக்க முடியாத நிலைமை இன்னும் வேகமாக நெருங்கி கொண்டிருக்கிறது."

அந்த அறிக்கை பின்வருமாறு நிறைவு செய்யப்பட்டிருந்தது: “பொலிஸ் ஆத்திரமூட்டல்களுக்குள் சிக்கி, சூறையாடல்கள் மற்றும் நாசவேலைகளில் ஈடுபட்ட வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கு எங்களின் முழு எதிர்ப்பை மீளவலியுறுத்துகிறோம். இது, அவர்கள் முகங்கொடுக்கும் எந்தப் பிரச்சினைகளையும் தீர்க்கப் போவதில்லை, நிஜமான போராட்டம் டோரிகளுக்கு எதிராகவும் சமூகப் புரட்சிக்காகவும் என்பதால் இது வைட்லோ (William Whitelaw) இன் தடுப்பு முகாம்களுக்கு மட்டுமே ஆட்களை வழங்கும்."

இந்த அறிக்கையை எழுதியவர்களையும் இதற்கு வாக்களித்தவர்களையும் பிறிக்ஸ்டன் மற்றும் ரொக்ஸ்ரெத் வீதிகளில் நிர்வாணமாக ஓட விட்டு அவர்கள் மீது காரி துப்ப செய்ய தகுதியுடையவர்கள் ஆகிறார்கள். டோரி நீதியரசர் ஸ்கார்மன் பிரபுவின் நீதி விசாரணைக்குழுவால் பல மாதங்களுக்குப் பின்னர் வெளியிடப்பட்ட அவரின் ஆணைக்குழு அறிக்கையில் எதை ஒப்புக்கொள்ள நிர்பந்திக்கப்பட்டாரோ அதைக் கூட ஹீலியினது அரசியல் குழுவின் பிற்போக்கு பாசாங்குக்காரர்களால் ஒப்புக்கொள்ள முடியவில்லை. இளைஞர்களின் கிளர்ச்சிகளுக்கு அங்கே புறநிலை காரணங்கள் இருந்ததை அந்த அறிக்கை ஒப்புக் கொண்டிருந்தது.

டிசம்பர் 1981 இல், ஸ்கார்மன் அறிக்கை வெளியிடப்பட்டு இரண்டு மாதங்களுக்குப் பின்னர், WRP பொதுச் செயலாளர் பண்டா நியூஸ் லைனில் எட்டு பக்கங்களுக்கு விரிந்து கிடந்த ஒரு நீண்ட கட்டுரையில் அதன் கண்டுபிடிப்புகளுக்குப் பதிலளித்தார். அது கிளர்ச்சி சம்பந்தமான கட்சி நிலைப்பாட்டால் உருவாக்கப்பட்டிருந்த துர்நாற்றத்தைச் சுத்திகரிக்கவும், பிரிக்ஸ்டன் மற்றும் ரொக்ஸ்ரெத் இளைஞர்கள் மத்தியில் WRP இன் நம்பகத்தன்மையை மீட்டெடுக்கவும் ஒரு காலங்கடந்த முயற்சியாக இருந்தது. அனேகமாக அது பண்டாவின் தரப்பில் அவரின் சொந்த மனச்சாட்சியுடன் கணக்குகளைத் தீர்த்துக் கொள்வதற்கான ஒரு முயற்சியாக கூட இருந்திருக்கலாம்.

பண்டாவின் பகுப்பாய்வு திட்டமிடப்படாத ஒன்றாக ஆனால் WRP அரசியல் குழுவின் நிலைப்பாடு மீதான ஒரு நாசகரமான குற்றப்பத்திரிகைக்கு நிகராக இருந்தது. கிளர்ச்சிகளின் போது உயிரிழந்த இளைஞர்களை நினைவுகூர்வதற்காகவும் மற்றும் "பொலிஸ் பயங்கரவாதம் மற்றும் டோரி அரசாங்க ஆத்திரமூட்டல்களுக்கு எதிராக தங்களின் வீடுகள் மற்றும் சமூகங்களைப் பாதுகாத்த ஆயிரக் கணக்கான இளைஞர்கள் மற்றும் வயதான தொழிலாளர்களின் உறுதி, ஒற்றுமை மற்றும் தைரியத்திற்கும்" அவர் கட்டுரையை அர்பணித்து, சம்பவங்களைக் குறித்த பண்டாவின் பதிப்பு, அதற்கு முந்தைய கோடையில் WRP கூறிய வாதங்களுடன் முற்றிலும் முரண்பட்டிருந்தது.

இளைஞர்களை ஆத்திரமூட்டுபவர்கள் என்று முத்திரை குத்துவதிலிருந்து விலகி, பண்டா அவர்களின் போராட்டத்தைப் புகழ்ந்திருந்தார்: "வாரம் முழுவதும் அவர்கள் பெருநகர பகுதிகள் எங்கிலும் இருந்து திரட்டப்பட்டிருந்த நூற்றுக் கணக்கான பொலிஸிற்கு எதிராக வீதிகளை கட்டுப்பாட்டில் கொண்டிருந்தார்கள்...

"பிரிக்ஸ்டன் எரிந்தது. ஆனால் தீவைப்பு, சொத்துக்களை விட அதிகமானதை அழித்தது. அது, பல தொழிலாளர்களின் மனங்களில், அரசு ஒடுக்குமுறை சக்திகளுடன் —பொலிஸ் உடன்— சமாதான சக வாழ்வில் இருப்பது சாத்தியமே என்ற எந்தவொரு நம்பிக்கையையும் அழித்தது. அது, மில்லியன் கணக்கானவர்களை முடிவின்றி வறுமை மற்றும் இழப்புகளுக்குள் தள்ளியிருந்த டோரி அரசாங்கம் மீதும் மற்றும் திவாலான முதலாளித்துவ அமைப்புமுறை மீதும் நிலவிய அவர்களின் தணிக்கவியலா வெறுப்பைத் தெள்ளத்தெளிவாக எடுத்துக்காட்டியது." (நியூஸ் லைன், டிசம்பர் 5, 1981)

பண்டாவின் ஆவணம் ஹீலியை அம்பலப்படுத்தவோ அல்லது கட்சியைத் திருத்தவோ எழுதப்படவில்லை. இப்போது கிளர்ச்சிகள் பாதுகாப்பாக முடிந்து விட்டிருந்தன மற்றும் ஸ்கார்மன் பிரபுவின் ஆய்வு முடிவுகள் கடந்த கோடைகால வீதி மோதல்களை ஒரு குறிப்பிட்டளவு நியாயபூர்வமாக ஆமோதித்திருந்தது, ஆகவே WRP இன் கடந்தகால வரலாற்றை மூடிமறைக்கும் விசேட பணி பண்டாவினுடையதாக இருந்தது. ஆனால் அவர் ஒரு விடயத்தில் சரியாக இருந்தார். பிரிக்ஸ்டன் எரிந்தது மற்றும் தீக்கிரையாக்கிய நடவடிக்கைகள் சொத்துக்களை விட அதிகமானதை அழித்திருந்தன. அது, தொழிலாள வர்க்க இளைஞர்களிடையே WRP தலைமை மீதிருந்த அரசியல் நம்பகத்தன்மையை அழித்திருந்தது.