தேவை, ஆடம்பரம் மற்றும் ஊகவணிகம்
“சோசலிச விநியோகமுறை”யுடன் தொடங்கிய பின்னர், சோவியத் அதிகாரமானது சந்தைக்கு திரும்ப வேண்டிய நிர்ப்பந்தத்தை 1921 ஆம் ஆண்டில் கண்டது. முதலாவது ஐந்தாண்டு திட்ட சகாப்தத்தில் அனைத்து வழிகளிலுமான அதிதீவிர அழுத்தமானது மறுபடியும் அரசு விநியோக முறைக்கு, அதாவது, “போர் கம்யூனிச” காலத்திலான அனுபவங்களை ஒரு உயர் மட்டத்தில் திரும்பவும் செய்வதற்கு இட்டுச்சென்றது. ஆயினும் இந்த அடிப்படையும் கூட போதாததாய் நிரூபணமானது. 1935 ஆம் ஆண்டில், திட்டமிட்ட விநியோக அமைப்புமுறை மீண்டும் வர்த்தகத்திற்கு வழிவிட்டது. இவ்வாறாக, நடைமுறைப்படுத்தத்தக்க விநியோக வழிமுறைகள் சொத்து வடிவங்களை விடவும் அதிகமாய் தொழில்நுட்ப மட்டத்தையும் மற்றும் இருக்கின்ற சடத்துவ வளங்களையும் சார்ந்திருக்கின்றன என்பது இரண்டாவது முறையாக வெளிப்படையானது.
உழைப்பின் உற்பத்தித் திறனை, குறிப்பாக உற்பத்திக்கேற்ற ஊதிய முறை மூலம், அதிகரிப்பது என்பது, வருங்காலத்தில் பாரிய அளவிலான உற்பத்திப்பொருட்கள் அதிகரிப்புக்கும், அவற்றின் விலைகள் குறைவதற்கும், அதனைத் தொடர்ந்து மக்களின் வாழ்க்கைத் தரம் உயர்வதற்கும் இட்டுச் செல்ல உறுதியளிப்பதாக இருக்கிறது. ஆனால் இது விடயத்தின் ஒருபக்க அம்சம் மட்டுமே — அந்த அம்சமும் முதலாளித்துவத்தின் செழுமையான சகாப்தத்திலும் கூட உணரப்பட்டு வந்திருக்கும் ஒன்றாய் இருக்கிறது. ஆனால், சமூக தோற்றப்பாடுகளும் நிகழ்ச்சிப்போக்குகளும் அவற்றிற்கிடையிலான தொடர்புகள் மற்றும் ஒன்றின்மீது ஒன்றினது இடைத்தொடர்புகளுடன் சேர்த்து பரிசீலீக்கப்பட வேண்டும். பண்ட விநியோகிப்பு அடிப்படையில் உழைப்பின் உற்பத்தித்திறனை அதிகரிப்பது என்பதன் அர்த்தம் அதேசமயத்தில் சமத்துவமின்மையும் அதிகரித்துச் செல்கிறது என்பதாகும். உத்தரவிடும் தட்டின் செழுமையிலான அதிகரிப்பு பரந்த மக்களின் வாழ்க்கைத்தரத்திலான அதிகரிப்பை விடவும் கணிசமாய் விஞ்சிச் செல்லத் தொடங்குகிறது. அரசின் சொத்து அதிகரிப்பதுடன் சேர்ந்து ஒரு புதிய சமூக தட்டுக்களின் உருவாக்க நிகழ்ச்சிப்போக்கும் நடக்கிறது.
அன்றாட வாழ்க்கை நிலைமைகளின் படி, ஏற்கனவே சோவியத் சமூகம், பாதுகாப்பான மற்றும் சலுகைகள் கொண்ட ஒரு சிறுபான்மையாகவும், தேவைகளைக் கொண்டு வாழ்க்கையை ஓட்டிச் செல்லும் ஒரு பெரும்பான்மையாகவும் பிளவுபட்டிருக்கிறது. மேலும், இந்த ஏற்றத்தாழ்வானது அதன் இருதுருவங்களிலும், அப்பட்டமான பாரிய முரணான தன்மையையும் கொண்டிருக்கிறது. பரந்த விநியோகத்திற்கென வடிவமைக்கப்படும் தயாரிப்புகள், அவற்றின் விலை மிகவும் அதிகமாக இருக்கின்றபோதும், தரம் குறைவானதாக இருப்பது என்பது ஒரு விதியாக இருக்கிறது. அதிலும் மையங்களில் இருந்து எவ்வளவு தள்ளி இருக்கிறோமோ அவ்வளவுக்கு அவை கிடைப்பதும் கடினமாகி விடும். இந்த நிலைமைகளில் ஊகவணிகம் மட்டுமல்ல நுகர்வுப் பொருட்களை அப்படியே திருடிச் சென்று விடுவது என்பதும் ஒரு பாரிய குணாம்சத்தை பெற்று விடுகிறது. அத்துடன் நேற்று வரை இந்த நடவடிக்கைகள் திட்டமிட்ட விநியோகிப்பிற்கு துணைசெய்வதாக இருந்த நிலையில், இப்போது அவை சோவியத் வர்த்தகத்துக்கான ஒரு திருத்தமாக சேவைசெய்கின்றன.
பின்னூட்டங்களை சேகரிக்கும் போது கண்களை மூடிக் கொள்வது, காதுகளுக்கு பஞ்சு வைத்து அடைத்துக் கொள்வது என்பதை சோவியத் ஒன்றியத்தின் 'நண்பர்கள்' ஒரு தொழில்முறை வழக்கமாகவே வைத்திருக்கிறார்கள். அவர்களை நாம் நம்ப முடியாது. எதிரிகள் பெரும்பாலும் தீயநோக்கத்துடனான அவதூறுகளையே பரப்புகிறார்கள். எனவே, அவர்களும் வேண்டாம், அதிகாரத்துவத்தின் பக்கமே திரும்புவோம். குறைந்தபட்சம் அது தன்னிடமே குரோதத்துடன் நடந்து கொள்ளாது என்பதால், அதன் உத்தியோகபூர்வமான தன்மீதேயான குற்றச்சாட்டுகள் —இவை எப்போதும் ஏதேனும் அவசரமான நடைமுறைத் தேவைகளினால் உந்தப்பட்டு வெளிவரும்— அதன் அடிக்கடியான இரைச்சலான சுய-தம்பட்டங்களை விடவும், அதிகம் நம்பிக்கை கொள்வதற்கு தகுதியைப் பெற்றவையாகின்றன.
1935 ஆம் ஆண்டின் தொழில்துறை திட்டமானது கிட்டத்தட்ட முற்றுமுழுதாகவே நடைமுறைப்படுத்தப்பட்டது என்பது நன்கறிந்ததே. ஆனால் வீட்டு வசதித் துறையில், அது 55.7 சதவீதம் மட்டுமே நடைமுறைப்பட்டது. மேலும், தொழிலாளர்களுக்கான வீடுகள் கட்டும் பணி மிகவும் மெதுவாகவும், மோசமாகவும், எல்லாவற்றுக்கும் மேல் மிகவும் மெத்தனத்துடனும் நடந்தது. கூட்டுற்பத்தி பண்ணை உறுப்பினர்களைப் பொறுத்தவரை, அவர்கள் முன்பு போலவே, தமது பழைய குடிசைகளில் தங்கள் கன்றுக்குட்டிகள் மற்றும் கரப்பான்பூச்சிகள் சகிதமாய் வாழ்கின்றனர். மறு பக்கத்தில், சோவியத் கனவான்கள் தங்களுக்கு புதிதாகக் கட்டிக் கொடுக்கப்பட்ட வீடுகள் எல்லாவற்றிலும் வீட்டு வேலை செய்பவர்கள் அதாவது “வேலைக்காரர்களுக்கான அறைகள்” இல்லை என்று ஊடகங்களில் புகார் செய்கிறார்கள்.
ஒவ்வொரு ஆட்சியும் அதன் பிரம்மாண்ட பிரதிபலிப்பை அதன் கட்டிடங்களிலும் கட்டிடவடிவமைப்பிலும் கொண்டிருக்கிறது. ஏராளமான மாளிகைகள் மற்றும் சோவியத்துகளின் அவைகள் —அதிகாரத்துவத்தின் இந்த ஆலயங்கள் சில சமயங்களில் பத்து மில்லியன் ரூபிள்கள் வரையும் கூட செலவு வைத்திருந்தன—, ஆடம்பர திரையரங்குகள், செம்படையின் இல்லங்கள் அதாவது முதன்மையாக அதிகாரிகளுக்கான இராணுவ உல்லாசக்கூடங்கள், மற்றும் அதற்கான கட்டணங்களை செலுத்தக்கூடியவர்களுக்கான ஆடம்பரமான சுரங்கப்பாதைகள் ஆகியவை ஒருபுறமும், தொழிலாளர்களின் குடியிருப்புக்கள் வெறும் தங்கும்முகாம்களை போன்ற மிகவும் அதீதமானதும் மாறாததுமான பின்தங்கிய நிலை நிலவுவது மறுபுறமும் என்பதுதான் இப்போதைய சோவியத் சகாப்தத்தை குணாம்சப்படுத்துவதாய் இருக்கிறது.
அரசின் சரக்குகளை இரயில்பாதைகள் வழி அனுப்பும் விடயத்தில், உண்மையான முன்னேற்றம் எட்டப்பட்டிருக்கிறது. ஆனால் பாமர சோவியத் மனிதனுக்கு அதனால் மிகக் குறைந்த பயனே கிட்டியிருக்கிறது. சாலைகள் மற்றும் தகவல்தொடர்புகளுக்கான துறைத்தலைவர்களிடம் இருந்தான ஏராளமான உத்தரவுகள், 'பயணப்பெட்டிகள் மற்றும் பயணிகள் நிலையங்களின் சுகாதாரமற்ற நிலை' குறித்து, 'சாலை பயணிகளுக்கான சேவைகள் விடயத்தில் நடவடிக்கையற்ற நிலை எனும் சகிக்கமுடியாத உண்மை' குறித்து, 'இரயில்பாதை பயணச்சீட்டுகள் விடயத்தில் ஏராளமான துஷ்பிரயோகங்கள், திருட்டுகள், மற்றும் மோசடிகள், காலி இருக்கைகளின் எண்ணிக்கையை மறைப்பது மற்றும் அவற்றில் ஊக வர்த்தகம் செய்வது, இலஞ்சம் வாங்குவது, நிலையங்கள் மற்றும் சாலைகளில் பைகளை திருடிச்செல்வது' ஆகியவை குறித்து புகாரிடுகின்றன. இந்த உண்மைகள் எல்லாம் 'சோசலிசப் போக்குவரத்துக்கு ஒரு அவமானம்!' உண்மையில், இவையெல்லாம் முதலாளித்துவ போக்குவரத்தில் குற்றவியல் குற்றங்கள். மிடுக்கான நிர்வாகியின் இந்த தொடர்ச்சியான புகார்கள் உண்மையில், வெகுஜனங்களின் பயன்பாட்டிற்கு போக்குவரத்து சாதனங்கள் மிக அதீத பற்றாக்குறையான நிலையில் இருக்கின்றன என்பதற்கும், போக்குவரத்தில் கொண்டுசெல்லப்படுகிற பொருட்களுக்கு மிகக் கடுமையான அளவில் தேவை இருக்கிறது என்பதற்கும், அத்துடன் இறுதியாக, அதிகாரத்தில் இருக்கும் மற்ற எவரையும் போலவே இரயில்பாதை அதிகாரிகளும் தங்கள் பங்கிற்கு எந்த அளவிற்கு சாதாரண மனிதர்களை சிடுமூஞ்சித்தனமான அலட்சியத்துடன் நடத்துகின்றனர் என்பதற்கும் குறிப்பான சாட்சியங்களைத் தாங்கி நிற்கின்றன. அதிகாரத்துவம் நிலத்திலும், நீரிலும், ஆகாயத்திலும் தனக்கு சேவை செய்து கொள்வதில் எவ்வளவு திறமையுடன் செயலாற்றுகிறது என்பதை, பெரும் எண்ணிக்கையிலான சோவியத் ஆடம்பர கார்கள், சிறப்பு இரயில்கள், சிறப்பு கப்பல்கள் மூலமும் மற்றும் அவையெல்லாம் மென்மேலும் மிகச்சிறந்த வாகனங்கள் மற்றும் விமானங்களினால் பிரதியீடு செய்யப்படுவதில் இருந்தும் நாம் அறிந்து கொள்கிறோம்.
சோவியத் தொழில்துறையின் வெற்றிகளை வகைப்படுத்துகையில் லெனின்கிராட் மத்திய குழுவின் பிரதிநிதியான ஸ்டனோவ், தனக்கு முன்னாலிருந்த கேட்போரின் கரவொலிக்கிடையே, 'ஒரு வருடத்தில் திறம்பட செயல்படும் நமது தொழிலாளர்கள் எல்லாம் தற்போதைய ஆரவாரமற்ற ஃபோர்ட் கார்களில் அல்லாமல், சொகுசுவாகனங்களில் (லிமோஸின்களில்) மாநாட்டுக்கு வந்து இறங்குவார்கள்' என்று வாக்குறுதியளித்தார். சோவியத் தொழில்நுட்பமானது, மனிதகுலத்தை நோக்கி அதன் முகம் திரும்பியிருக்கின்ற மட்டத்திற்கு, தனது முயற்சிகளை முதன்மையாக ஒரு தேர்ந்தெடுத்த சிறுபான்மையினரின் உயர்-வகுப்பு தேவைகளை பூர்த்தி செய்வதை நோக்கி செலுத்துகிறது. வீதி வாகனங்கள், ஒருவேளை அவை தென்படுகின்ற இடங்களில், முன்புபோலவே மூச்சு முட்டும் அளவிற்கு நிரம்பியே செல்கின்றன.
உணவு தொழிற்சாலைகளுக்கான மக்கள் ஆணையர் மிக்கோயன், தரம்குறைந்த இனிப்பு மிட்டாய்கள் உயர்ந்த வகைகளால் துரிதமாக இடம் பெயர்க்கப்பட்டு வருகின்றன என்றும், 'நமது பெண்கள்' சிறந்த வாசனைத்திரவியங்களை கோருகிறார்கள் என்றும் பெருமையடித்துக் கொள்ளும்போது, தொழில்துறையானது பணப்புழக்கத்திற்கு மாறிவிட்ட சூழ்நிலையில், தன்னை சிறந்ததர வாடிக்கையாளர்களுக்காய் தகவமைத்துக் கொண்டிருக்கிறது என்பதையே புரிந்து கொள்ளக் கூடியதாய் இருக்கிறது. உயரிடத்தில் இருக்கும் “மனைவிமார்கள்” எக்காரணத்தினாலும் கடைசி இடத்தை பிடிக்கக்கூடாது என்பதே சந்தையின் விதிகளாகும். இத்துடன் சேர்த்து அறிய வருவதாக இருக்கின்ற இன்னொரு விபரம், உக்ரேனில் 1935 ஆம் ஆண்டில் விசாரணை மேற்கொள்ளப்பட்ட 95 கூட்டுறவு கடைகளில் 68 இல் இனிப்புமிட்டாய்களே கையிருப்பில் இருக்கவில்லை, மிருதுரொட்டி (pastry) வகைகளின் தேவையில் 15 முதல் 20 சதவீதம் வரை தான் பூர்த்தி செய்யப்பட்டிருந்தது, அதுவும் கூட மிக மலிவான தரமுடைய தயாரிப்புகளைக் கொண்டு. 'நுகர்வோரின் தேவைகளைக் கருத்திக் கொள்ளாமல் இந்த தொழிற்சாலைகள் செயற்படுகின்றன' என்று இஸ்வெஸ்டியா புகார் தெரிவிக்கிறார். அதிலும், நுகர்வோர் தனக்காக வாதாடிப் பெறும் திறனற்றவராக இருக்கும் பட்சத்தில் இதுவே இயல்பான நிலையாக உள்ளது.
இந்த கேள்வியை, சேதன இரசாயனவியலின் பார்வையில் இருந்து அணுகும் பேராசிரியர் பாக், 'நமது ரொட்டி சிலசமயங்களில் சகிக்க முடியாத அளவு மோசமாய் இருக்கிறது' என்று கண்டுபிடித்துக் கூறுகிறார். ஈஸ்ட் மற்றும் அது நொதிக்கும் முறையின் புதிர்களால் தூண்டப்படாமலேயே, உழைக்கும் ஆணும் பெண்ணும் கூட அதே கருத்துக்கே வருகிறார்கள். ஆயினும், பெருமைமிகு பேராசிரியரை போலல்லாது, தங்களின் மதிப்பீட்டை ஊடகங்களின் பக்கங்களில் வெளிப்படுத்தி விட அவர்களுக்கு வாய்ப்பு கிடைப்பதில்லை.
மாஸ்கோவில், சிறப்பு 'நாகரிக இல்லங்கள்' மூலம் வடிவமைக்கப்பட்ட பட்டு ஆடைகளின் பல்வேறு வண்ண நாகரிக வகைகளை ஆடைகள் வாரியம் விளம்பரம் செய்கிறது. மாகாணங்களில், பெரும் தொழில் நகரங்களிலும் கூட, தொழிலாளர்கள் முன்பு போலவே, ஒரு பருத்தி-அச்சு ஆடையையும் கூட வரிசைகளில் நின்று பலதுன்பங்களை சகிக்காமல் பெறமுடிவதில்லை: ஏனென்றால் போதுமான ஆடைகள் இருப்பு இல்லை! சிலரின் ஆடம்பரங்களுக்கு விநியோகிப்பதை விடவும் பலரின் தேவைகளுக்கு விநியோகம் செய்வது என்பது மிகவும் கடினமான ஒன்று தான். வரலாறு அனைத்தும் அதற்கு சான்றுறுதி கூறுகிறது.
தனது சாதனைகளை பட்டியலிடும்போது, மிகோயன் நமக்கு விபரம் சொல்கிறார்: 'தாவரவெண்ணெய் (oleomargarine) தொழில் என்பது நமக்கு புதியது' என்று. இந்த தொழில் பழைய ஆட்சியில் இருந்திருக்கவில்லை என்பது உண்மைதான். எனினும், அதற்காக ஜார் காலத்தை விடவும் நிலைமை மோசமாகி இருக்கிறது என்று நாம் உடனே முடிவு கட்டிவிடத் தேவையில்லை. அந்நாட்களில் மக்கள் வெண்ணெயையே பார்க்காமல் தான் வாழ்ந்தார்கள். ஆனால் ஒரு மாற்றுப் பொருளின் தோற்றமானது, குறைந்தபட்சம் சோவியத் ஒன்றியத்தில், கொடுக்கும் அர்த்தம் என்னவென்றால், இரண்டு வகையான நுகர்வோர் இருக்கிறார்கள்: ஒருதரப்பினர் வெண்ணெயை தேர்ந்தெடுக்கிறார்கள், மற்றொரு தரப்பினர் தாவரவெண்ணெயைக் கொண்டு சமாளித்துக் கொள்கிறார்கள் என்பதாகும். அதே மிக்கோயன் பெருமையாகக் கூறுகிறார்: 'நாங்கள் மகோர்காவை (ரஷ்ய புகையிலை) தேவைப்படும் அனைவருக்கும் நிறைய விநியோகம் செய்கிறோம்'. ஐரோப்பாவும் சரி அமெரிக்காவும் சரி மகோர்கா போன்றதொரு மலிவுத்தர புகையிலையை கேள்விப்பட்டதும் கூட இல்லை என்ற விடயத்தையும் சேர்த்துக் கூற அவர் மறந்து போகிறார்.
மிக ரஷ்யத் தன்மையுடையதாக இல்லாதபோதும், மிக வெளிப்படுத்தும் தன்மையுடையதாக, ஆடம்பரம் எனும் பொருள் தரும் 'Luxe' என்ற அடைமொழியுடன், மாஸ்கோவில் மற்றும் பிற பெரு நகரங்களில், உயர் தரபொருட்களுடன் சிறப்புக் கடைகள் திறக்கப்படுவது சமத்துவமின்மையின் ஒரு தெளிவான —எதிர்த்து நிற்கின்ற என்று கூட சொல்ல வேண்டாம்— வெளிப்பாடுகளில் ஒன்றாய் இருக்கிறது. அதேநேரத்தில், மாஸ்கோ மற்றும் மாகாணங்களில் உணவுப் பொருட்களது கடைகளில் பாரிய கொள்ளை நடப்பதைக் குறித்த இடைவிடாத புகார்கள், எல்லோருமே சாப்பிட உணவைத் தேடுகின்ற நிலையில், உணவுப் பொருட்களோ ஒரு சிறு எண்ணிக்கையிலானோருக்கு மட்டுமே போதுமானவையாக இருக்கின்றன என்பதையே அர்த்தப்படுத்துகிறது.
வேலைக்குச் செல்லும் தாய் சமூக ஆட்சிமுறை குறித்து தனது பார்வையைக் கொண்டிருக்கிறார், அவரது “நுகர்வு” அளவுமதிப்பீடு, தனது சொந்த நுகர்வில் மட்டும் மிகக் கவனம் காட்டும் அந்த அலுவலரே வெறுப்புமிழ வெளிப்படுத்துவதைப் போல, இறுதி ஆய்வில் தீர்மானகரமானதாய் இருக்கிறது. உழைக்கும் பெண்ணுக்கும் அதிகாரத்துவத்திற்கும் இடையிலான மோதலில், மார்க்ஸ், லெனின், அவர்களுடன் சேர்ந்து நாமும், உழைக்கும் பெண்ணின் பக்கம் நிற்கிறோம். தனது சாதனைகளை மிகைப்படுத்துகின்ற, முரண்பாடுகளை மழுப்புகின்ற, மற்றும் அந்தப் பெண் விமர்சனம் செய்யாமல் இருப்பதற்காக அந்த பெண்ணின் தொண்டையைப் பிடிக்கின்ற அதிகாரத்துவவாதிக்கு எதிராக நாம் நிற்கிறோம்.
தாவரவெண்ணெயும் மலிவுப் புகையிலையும் இன்று மகிழ்ச்சி தராத அத்தியாவசியங்களாக இருக்கின்றன என்பதை ஒப்புக் கொள்ளலாம். ஆனாலும் இந்த யதார்த்தத்தை தம்பட்டமடித்துக் கொள்வதும், அதற்கு அலங்காரம் செய்வதும் பயனற்றது. 'செயல்பாட்டாளர்களுக்கு' சொகுசுவாகனங்கள், 'நமது பெண்களுக்கு' சிறந்த வாசனை திரவியங்கள், தொழிலாளர்களுக்கு தாவரவெண்ணெய், கனவான்களுக்கு “உயர்தரக்” (de luxe) கடைகள், சாமானியர்களுக்கோ உயர்தர உணவுப் பண்டங்களை கடை கண்ணாடிகள் வழியே பார்த்து விட்டுப் போக வேண்டியதுதான் — இத்தகையதொரு சோசலிசம் வெகுஜனங்களுக்கு முதலாளித்துவத்தின் மாற்று முகமாகத்தான் தோன்ற முடியும், அப்படி அவர்கள் கருதுவதும் பெரும் தவறாகி விடுவதில்லை. 'பொதுவான தேவை'யின் அடிப்படையில், வாழ்வாதாரங்களுக்கான போராட்டம் 'அனைத்து பழைய குப்பைகளுக்கு' புத்துயிர் அளிக்க அச்சுறுத்துகிறது, ஒவ்வொரு அடியெடுப்பிலும் அதனை பகுதியாக மீளெழுப்பிக் கொண்டிருக்கிறது.
• • •
அரசின் கூட்டுறவு மற்றும் கூட்டுற்பத்திப் பண்ணை நிறுவனங்களுக்கும் தனியொரு குடிமகனுக்கும் இடையில் எந்த இடைத்தரகர் மற்றும் தனியார் வர்த்தகரும் இன்றி நேரடியாக அபிவிருத்தி காண்பவையாக அனுமானிக்கப்படுகின்றன என்பதில் தான் நடப்பு சந்தை உறவுகள், புதிய பொருளாதார கொள்கையின் (NEP-1921-28) இன் கீழான உறவுகளில் இருந்து வேறுபடுகின்றன. ஆனால், இது கொள்கை அளவில் மட்டுமே உண்மையானதாக இருக்கிறது. அரசு மற்றும் கூட்டுறவு சில்லறை வர்த்தக விற்றுமுதல் (turnover) துரிதமாக வளர்ச்சியுற்று வருகிறது, கணக்கீடுகளின் படி இது 1936 இல் நூறு பில்லியன் ரூபிள்கள் அளவுக்கு இருக்க வேண்டும். 1935 இல் 16 பில்லியன் ரூபிள்களாக இருந்த கூட்டுற்பத்தி பண்ணை வர்த்தக விற்றுமுதல் நடப்பு வருடத்தில் குறிப்பிடத்தக்க அளவில் வளர்ச்சி காண இருக்கிறது. இந்த விற்றுமுதலுக்குள்ளும் மற்றும் அதற்கு சமாந்திரமாகவும் சட்டவிரோத மற்றும் பாதி சட்டவிரோத இடைத்தரகர்களின் பங்களிப்பு எவ்வளவாக இருக்கப் போகிறது என்பதைக் கண்டறிவது கடினம், குறைந்தபட்சம் இது முக்கியத்துவமற்ற அளவாக இருக்கப் போவதில்லை! தனி விவசாயிகள் மட்டுமல்ல, கூட்டுற்பத்தி பண்ணைகளும், குறிப்பாக கூட்டுற்பத்தி பண்ணைகளின் தனித்தனி உறுப்பினர்களும் இடைத்தரகர்களை அணுக மிகவும் நாட்டம் காட்டுகிறார்கள். இதே வழியைத் தான் குடிசைக் கைத்தொழில் தொழிலாளர்களும், கூட்டுறவுத் தொழிலாளர்களும் மற்றும் விவசாயிகளுடன் இணைந்து செயல்படும் உள்ளூர் தொழிற்சாலைகளும் கூடப் பின்பற்றுகிறார்கள். அவ்வப்போது, எதிர்பாராதவிதத்தில், ஒரு பெரிய மாவட்டம் முழுவதிலும் இறைச்சி, வெண்ணெய் அல்லது முட்டைகளின் வர்த்தகம் 'ஊகவணிகர்களால்' வளைக்கப்படுகிறது. உப்பு, தீப்பெட்டி, மாவு, மண்ணெண்ணெய் போன்ற மிக அத்தியாவசியமான அன்றாட பயன்பாட்டு பொருட்களும் கூட, அரச கிடங்குகளில் போதுமான அளவு இருப்பு இருக்கின்ற நிலையிலும், அதிகாரத்துவமயப்பட்ட கிராமப்புற கூட்டுறவு கடைகளில் ஒரு சமயம் பல வாரங்களுக்கும் பல மாதங்களுக்கும் கூட இல்லாதிருக்கும் நிலை இருக்கிறது. விவசாயிகள் தங்களுக்கு தேவையான பொருட்களை பிற வழிகளில் பெறுவார்கள் என்பது தெளிவு. வாங்கி மறுவிற்பனை செய்யும் விநியோகஸ்தர்களை சகஜமாக எடுத்துக் கொள்ள வேண்டிய ஒன்று தான் என்பது போன்றே சோவியத் ஊடகங்கள் பெரும்பாலும் பேசுகின்றன.
தனியார் நிறுவனங்கள் மற்றும் சொத்துத்திரட்சியின் பிற வடிவங்களைப் பொறுத்த வரை, அவை ஒரு சிறிய பாத்திரத்தை வகிப்பதாய் தென்படுகிறது. சுதந்திரமான வாகனஓட்டுநர்கள், கடைபராமரிப்பாளர்கள், தனிக் கலைஞர்கள் ஆகியோர் தனி விவசாயிகளைப் போலவே பாதி சகித்துக்கொள்ளப்படுகின்ற தொழிற்முறையினராய் இருக்கின்றனர். மாஸ்கோவில் மட்டும், ஏராளமான சிறு தனியார் வர்த்தகங்களும் பழுதுபார்ப்புக் கடைகளும் இருக்கின்றன. அவை பொருளாதாரத்தின் முக்கியமான ஓட்டைகளை நிரப்பிக் கொண்டிருக்கின்றன என்பதால் அவற்றின் விடயத்தில் கண்கள் மூடப்பட்டுக் கொள்கின்றன. ஆயினும், ஒப்பிடமுடியாத அளவுக்கு மிகப்பெரும் எண்ணிக்கையிலான தனியார் தொழில்முனைவோர்கள், கூட்டுவிற்பனை மற்றும் கூட்டுறவு கடைகளது அனைத்து வகைகளின் போலி மறைப்புகளின் கீழ், தொழில் செய்கிறார்கள்; அல்லது கூட்டுற்பத்தி பண்ணைகளது கூரைகளுக்குள் மறைந்து கொள்கிறார்கள். ஏதோ திட்டமிட்ட பொருளாதாரத்திலுள்ள பிளவுகளை வலியுறுத்தும் சிறப்பு நோக்கத்துடன் தான் என்பதுபோல, மாஸ்கோவிலுள்ள சிறப்பு விசாரணையாளர்கள், வீட்டில் செய்த தொப்பிகள் அல்லது பருத்தி சட்டைகளை வீதியில் விற்கும் வறிய பெண்களை தீங்கிழைக்கும் ஊக வணிகர்கள்போல அவ்வப்போது கைது செய்கிறார்கள்.
1935 ஆம் ஆண்டின் இலையுதிர் காலத்தில் ஸ்ராலின், 'நமது மண்ணில் ஊக வணிகத்துக்கான அடிப்படை அழிக்கப்பட்டு விட்டது' என்று அறிவித்தார். 'அப்படி இருந்தும் ஊக வணிகர்கள் இங்கு இருக்கிறார்கள் என்றால், ஒரேயொரு உண்மை மட்டுமே அதற்கு விளக்கமாக இருக்க முடியும்: வர்க்க கண்காணிப்பு இல்லாமையும் மற்றும் சோவியத் அமைப்பில் பல்வேறு இணைப்புகளிலும் ஊக வணிகர்களை நோக்கிய தாராளவாத மனோபாவமும் தான்'. ஒரு தெளிந்த வடிகட்டிய அதிகாரத்துவ சிந்தனை கலாச்சாரம்! ஊக வணிகத்தின் பொருளாதார அடிப்படை அழிக்கப்பட்டு விட்டதா? அப்படியானால் எந்தக் கண்காணிப்பிற்கும் எந்த அவசியமும் இல்லையே. உதாரணத்திற்கு, மக்களுக்கு கண்ணியமான தலைப்பாகைகள் போதுமான எண்ணிக்கையில் கிடைப்பதை அரசு உறுதி செய்யுமானால், துரதிர்ஷ்டசாலிகளான அந்த தெரு வணிகர்களை கைது செய்ய வேண்டிய அவசியம் நேராது அல்லவா. உண்மையில் அத்தகையதொரு அவசியம் இப்போது இருக்கிறதா என்பதே சந்தேகத்திற்குரியதே.
மேலே குறிப்பிட்ட தனியார் வர்த்தகர்களின் எண்ணிக்கையளவு, அவர்களின் வணிகத்தின் அளவைப் போலவே, அது மட்டுமே அபாயமூட்டிவிடக் கூடியதாக இல்லை. டிரக் ஓட்டுநர்கள், தொப்பியணிந்த வியாபாரிகள், கைக்கடிகாரம் செய்பவர்கள் மற்றும் முட்டை வாங்குபவர்கள் இவர்களெல்லாம் அரசுச் சொத்துக் கோட்டைகளின் மீது தாக்குதல் நடத்தி விடுவார்கள் என்று நீங்கள் உண்மையில் அச்சம் கொள்ள முடியாது! இருந்தாலும் இந்தக் கேள்வி வெறுமனே கணிதரீதியான இடையுறவுகளால் மட்டும் தீர்மானிக்கப்படுவதல்ல. நிர்வாக பலவீனத்தின் குறைந்தபட்ச அறிகுறி தென்பட்ட உடனேயே, ஏராளமான மற்றும் பல்வேறு வகையான ஊகவணிகர்கள், காய்ச்சல் வந்தால் உடனே தலைகாட்டும் சினப்பு போல, வெளிப்படுவது என்பது குட்டி முதலாளித்துவ போக்குகளின் தொடர்ச்சியான நெருக்குதலுக்கு சான்றளிக்கிறது. ஊகவணிக தொற்றுக்கிருமி சோசலிச வருங்காலத்துக்கு எத்தகைய பெரிய அபாயத்தைக் குறிக்கிறது என்பது, நாட்டின் பொருளாதார மற்றும் அரசியல் ஜீவனின் பொதுவான எதிர்ப்பு சக்தியால் தான் முழுமையாகத் தீர்மானிக்கப்படுகிறது.
சாதாரண தொழிலாளர்கள் மற்றும் கூட்டுற்பத்தி பண்ணை விவசாயிகளின், அதாவது மக்கள்தொகையின் சுமார் தொண்ணூறு சதவீதம் பேரின், மனநிலையும் நடத்தையும் அவர்களது சொந்த உண்மை ஊதியங்களிலான மாற்றங்களின் மூலமாகவே பிரதானமாக தீர்மானமாகின்றது. ஆயினும் அவர்களது வருமானத்திற்கும் சற்று வசதியான தட்டின் வருமானத்திற்கும் இடையிலுள்ள உறவுக்கும் இதற்குச் சளைக்காத முக்கியத்துவம் கொடுக்கப்பட வேண்டும். சார்பியல் விதி மனித நுகர்வு வட்டாரத்தில் தன்னை மிக நேரடியாக பிரகடனப்படுத்துகிறது! அனைத்து சமூக உறவுகளையும் பணக் கணக்கின் மொழிக்கு மாற்றினால் சமூகத்தின் பல்வேறு தட்டுகளும் தேசிய வருவாயில் உண்மையாக அனுபவிக்கின்ற பகுதி எவ்வளவு என்பதை அது அடிவரை வெளிப்படுத்திவிடும். சற்று நீண்ட காலத்திற்கு சமத்துவமின்மை நிலவுவதன் வரலாற்று அவசியத்தை நாம் புரிந்து கொள்கிறபோதும் கூட, ஒவ்வொரு ஸ்தூலமான நேர்விலும் அதன் அனுமதிக்கத்தக்க வரம்புகள் குறித்தும் அதன் சமூகப் பொருத்தம் குறித்துமான கேள்விகள் இன்னமும் திறந்தே இருக்கின்றன. தேசிய வருவாயில் ஒரு பங்குக்கான தவிர்க்கவியலாத போராட்டமானது அவசியமானவிதத்தில் ஒரு அரசியல் போராட்டமாக ஆகிறது. இப்போதைய கட்டுமானம் சோசலிசத்தன்மை உடையதா இல்லையா என்பது, அதிகாரத்துவத்தின் குதர்க்கவாதங்களால் அல்ல, மாறாக வெகுஜனங்கள், அதாவது தொழிற்சாலைத் தொழிலாளர்களும் கூட்டுற்பத்தி பண்ணை விவசாயிகளும், இக்கட்டுமானத்தை நோக்கி கொண்டிருக்கக் கூடிய மனோபாவத்தைக் கொண்டே தீர்மானிக்கப்படுவதாக அமையும்.
பாட்டாளி வர்க்கத்தினை வேறுபடுத்தி பிரித்தல்
ஒரு தொழிலாளர் அரசில் உண்மை ஊதியங்கள் குறித்த தரவுகள் சிறப்புக் கவனத்துடன் ஆராயப்படும், உண்மையில் வெகுஜன பிரிவுகளது வருவாய் புள்ளிவிவரங்கள் அனைத்தும் முழுமையான வெளிப்பட்ட தன்மை மற்றும் பொதுவான அணுகும் தன்மையின் தனித்துவம் கொண்டிருக்கும் என்று தான் எவரும் நினைப்பார்கள். உண்மை நிலை என்னவாய் இருக்கிறதென்றால், உழைக்கும் மக்களின் இன்றியமையாத நலன்களைத் தொடுகின்ற இந்த முழுமையான கேள்வி ஊடுருவ முடியாத ஒரு திரையால் சூழப்பட்டிருக்கிறது. சோவியத் ஒன்றியத்தில் ஒரு தொழிலாளர் குடும்பத்தின் வரவு-செலவின் அளவு என்ன என்பது, நம்பமுடியாததாக இருக்கக் கூடும், விசாரணை மேற்கொள்பவருக்கு எந்த ஒரு முதலாளித்துவ நாட்டினதை விடவும் ஒப்பிடமுடியாத அளவு மிகக் குழப்பமளிக்கக் கூடியதாக இருக்கிறது. இரண்டாம் ஐந்தாண்டு திட்ட காலத்திற்கும் கூட தொழிலாள வர்க்கத்தின் பல்வேறு பிரிவுகளின் உண்மை ஊதியங்களது வளைகோட்டை வரைந்து விடுவதற்கு நாங்கள் பயனற்ற பிரயத்தனம் செய்திருக்கிறோம்.
இது விடயத்தில் ஆதாரங்களும் அதிகாரிகளும் காக்கின்ற பிடிவாதமான மவுனம், அர்த்தமில்லாத மொத்த அளவுகள் குறித்து அவர்கள் அடித்துக் கொள்ளும் தற்பெருமைகளைப் போலவே, உரத்துப் பேசுகிறது.
கனரகதொழிற்துறை ஆணையரான ஓர்ட்ஸோனிகிட்ஸி இன் அறிக்கையின் படி, 1925 இல் இருந்து 1935 வரையான தசாப்தத்தில், தொழிலாளரின் மாதாந்திர உற்பத்தி 3.2 மடங்கும், பண ஊதியங்கள் 4.5 மடங்கும் அதிகரித்திருந்தது. மிகவும் கவர்ச்சியாகத் தோன்றக் கூடிய பிந்தைய எண்ணிக்கையில் தொழிலாள வர்க்கத்தின் உயர் அடுக்கினரில் இருக்கும் நிபுணர் வகைகளால் விழுங்கப்படுகின்ற அளவு எவ்வளவு —அதே அளவுக்கு முக்கியமாக, இந்த கவுரவமான மொத்த அளவு உண்மையான மதிப்புகளில் கொண்டிருக்கும் வெளிப்பாடு என்ன— இதையெல்லாம் குறித்து இந்த அறிக்கையிலோ அல்லது ஊடகங்களின் வருணனைகளிலோ நாம் எதனையும் காண முடியவில்லை.
1936 ஏப்ரலில் நடந்த சோவியத் இளைஞர் மாநாடு ஒன்றில், கோம்சோமோல் செயலாளரான, கோசரேவ் அறிவித்தார்: '1931 ஜனவரி முதல் 1935 டிசம்பர் வரையான காலத்தில் இளைஞர்களின் ஊதியங்கள் 340 சதவீதம் அதிகரித்திருக்கின்றன!' ஆயினும், அவர் யார் மத்தியில் முழங்கிக் கொண்டிருந்தாரோ, கவனமாய் தேர்ந்தெடுத்து அமர்த்தப்பட்டிருந்த கரகோஷம் எழுப்புவதில் தாராளம் காட்டக் கூடிய அந்த அலங்கார அணிவகுப்பு இளைஞர்களிடம் இருந்தும் கூட இந்தப் பீற்றலானது ஒரு சின்ன கைத்தட்டலைக் கூட பெற முடியவில்லை. சந்தை விலைகளில் ஏற்பட்ட அபரிமிதமான மாற்றமானது, பரந்துபட்ட தொழிலாளர்களின் அடிப்படை பொருளியல் சூழ்நிலையை சரித்து விட்டிருந்தது என்பது உரையாற்றியவரைப் போலவே கேட்டவர்களுக்கும் நன்றாகத் தெரிந்திருந்தது.
ட்ரஸ்டுகளின் இயக்குநர் மற்றும் அலுவகத்தை சுத்தம் செய்யும் பெண் அனைவரையும் ஒன்றாய் சேர்த்து, தனிமனித வருடாந்திர “சராசரி” ஊதியம் கணக்கிட்டால், தனிநபருக்கான 'சராசரி' வருடாந்திர ஊதியம், 1935 ஆம் ஆண்டில் 2300 ரூபிள்களாக இருந்து, 1936 ஆம் ஆண்டில் சுமார் 2500 ரூபிள்களாக ஆகவிருந்தது, அதாவது உண்மையான மதிப்பு கிட்டத்தட்ட 7500 பிரெஞ்சு பிராங்குகள் என்றாலும் உண்மையான கொள்முதல் திறனைப் பொறுத்தவரை இது 3,500 முதல் 4,000 பிராங்குகளைத் தாண்டாது. ஓரளவுக்கு கண்ணியமான உயர்வாக தெரிகின்ற இதுவும், நுகர்வுப் பொருட்களின் சிறப்பு விலைகள் ஒழிக்கப்பட்டு மற்றும் வரிசையான பல இலவசசேவைகள் தடை செய்யப்பட்டு அக்கூடுதல் செலவின் ஒரு பகுதியை மட்டுமே 1936 ஆம் ஆண்டின் ஊதிய உயர்வு ஈடு செய்கிறது என்ற வகையில் பார்த்தால் இன்னும் அது கீழே சரிந்து சென்று விடுகிறது. ஆனால் பிரதான விடயம் என்னவென்றால், வருடத்திற்கு 2500 ரூபிள்கள் அல்லது மாதத்திற்கு 208 ரூபிள்கள் என்பது, நாம் முன்னர் கூறியதைப் போல, 'சராசரி ஊதியம்' ஆகும். அதாவது, தொழிலாளர் ஊதியங்களில் நிலவும் உண்மையான மற்றும் குரூரமான சமத்துவமின்மையை மூடிமறைப்பதை நோக்கமாகக் கொண்ட ஒரு எண்கணித ரீதியான கட்டுக்கதை ஆகும்.
தொழிலாளர்களின் மேல்மட்டதில் உள்ளோரின் நிலை, குறிப்பாக ஸ்டக்ஹானோவ்வாதிகள் என்று சொல்லப்படுபவர்களின் நிலை, கடந்த வருடத்தில் கணிசமான உயர்வு கண்டிருக்கிறது என்பதில் சந்தேகம் இல்லை. இந்தப் பதக்கம் அந்தப் பதக்கம் என்று ஏதோவொரு பதக்கம் வென்ற தொழிலாளி வாங்கி அடுக்கியிருக்கும் உடைகள், பூட்ஸ்கள், கிராமபோன்கள், மிதிவண்டிகள் அல்லது பொருள்வைக்கும் ஜாடிகளின் எண்ணிக்கையை ஊடகங்கள் ஆர்வமாக பட்டியலிடுவதற்கு அடிப்படை இல்லாமல் இல்லை. சாமானிய தொழிலாளருக்கு இந்த நலன்களுக்கான அணுகல் எந்த அளவுக்கு குறைவாய் இருக்கிறது என்பதும் தற்செயலாய் இதில் தெளிவாகிறது. ஸ்டக்ஹானோவ் இயக்கத்தின் உந்துதலளிக்கும் நோக்கங்கள் குறித்து பேசிய ஸ்ராலின் அறிவித்தார்: 'வாழ்க்கை எளிதாக ஆகி இருக்கிறது, வாழ்க்கை மகிழ்ச்சியாக ஆகி இருக்கிறது, வாழ்க்கை மகிழ்ச்சியுடன் இருக்கும்போது வேலை துரிதமாக நடக்கிறது'. முழுக்க ஆளும் தட்டின் குணாம்சத்தை காட்டுகிற விதமாய் அமையும், உற்பத்திக்கேற்ற ஊதிய அமைப்பின் மீதான அந்த நம்பிக்கைமிக்க வெளிப்படுத்தலில், நாட்டின் முன்னைய பொருளாதார வெற்றிகளின் காரணத்தினாலேயே தொழிலாளர் பிரபுத்துவத்தை உருவாக்குவது சாத்தியமாக நிரூபணமாகி இருக்கிறது என்ற சாதாரண உண்மை அடங்கி இருக்கிறது. எவ்வாறாயினும், ஸ்டக்ஹானோவ்வாதிகளின் உந்துசக்தியாக இருப்பது ”மகிழ்ச்சியான” மனோநிலை அல்ல, மாறாக இன்னும் நிறைய சம்பாதிக்க வேண்டும் என்ற விருப்பமே. ஸ்ராலின் கூறியதில் மோலோடோவ் பின்வரும் திருத்தத்தை அறிமுகப்படுத்தினார்: 'ஸ்டக்ஹானோவ்வாதிகளைப் பொறுத்தவரை உற்பத்தித்திறனை அதிகரிப்பதற்கான உடனடி உந்துசக்தியாக இருப்பது தமது வருமானத்தை அதிகப்படுத்துவதில் அவர்கள் கொண்டுள்ள எளிய ஆர்வம் தான்'. அது உண்மையே.
சில மாத காலத்திலேயே, மாதத்திற்கு ஆயிரம் ரூபிள்களைத் தாண்டி வருவாய் ஈட்டியதால் “ஆயிர மனிதர்கள்” என்று அழைக்கப்பட்ட தொழிலாளர்களின் ஒரு முழுமையான அடுக்கு மேலெழுந்தது. மாதத்திற்கு இரண்டாயிரம் ரூபிள்களுக்கும் அதிகமாய் சம்பாதிப்பவர்களும் கூட இருந்தார்கள். அதேசமயத்தில் கீழ்நிலை பிரிவுகளது தொழிலாளர்களோ பெரும்பாலும் நூறு ரூபிள்களுக்கும் குறைவாகவே ஊதியம் பெறுகின்றனர்.
ஊதியங்களிலான இந்தப் பிளவே 'பணக்கார' மற்றும் 'பணக்காரரல்லாத” தொழிலாளர்களுக்கு இடையில் போதுமான பிரிப்புக்கோட்டை உருவாக்குவதாகத் தெரியலாம். ஆனால் அதிகாரத்துவத்திற்கு இதுவும் கூட போதவில்லை. அவர்கள் கிட்டத்தட்ட ஸ்டக்ஹானோவ்வாதிகள் மீது பிரத்தியேக சலுகைகளைப் பொழிகிறார்கள்.
அவர்களுக்கு புதிய தொடர்மாடி வீடுகள் கொடுக்கிறார்கள் அல்லது அவர்களது பழைய வீடுகளை செப்பனிட்டுக் கொடுக்கிறார்கள். சுழற்சி முறையில் அவர்களை ஓய்வு-இல்லங்கள் மற்றும் பொழுதுபோக்கு அரங்குகளுக்கு அனுப்புகிறார்கள். அவர்களது இல்லங்களுக்கு கட்டணமின்றி ஆசிரியர்கள் மற்றும் மருத்துவர்களை அனுப்புகிறார்கள். திரைப்படங்களுக்கு அவர்களுக்கு இலவசநுழைவுச்சீட்டுக்கள் கொடுத்து அனுப்புகிறார்கள். சில இடங்களில், சுழற்சி முறையில் கட்டணமின்றி அவர்களுக்கு முடி வெட்டவும் சவரம் செய்யவும் கூட செய்கிறார்கள்.
இந்த சலுகைகளில் பலவும் சாதாரண தொழிலாளியை புண்படுத்தும் மற்றும் அவமானப்படுத்தும் நோக்குடன் திட்டமிட்டு செய்யப்படுவதாகத் தென்படுகிறது. அதிகாரிகளின் தரப்பில், இந்த தொல்லையான நல்லெண்ணத்திற்கு, பிழைப்புவாதம் தவிர குழம்பிய மனச்சாட்சியும் காரணமாய் இருக்கிறது. தமது சலுகைகளில் தொழிலாளர்களின் உயரடுக்கும் பங்கெடுத்துக் கொள்ள அனுமதிப்பதன் மூலமாக தாம் தனிமைப்படுவதில் இருந்து தப்பிக்கக் கிடைத்த வாய்ப்பை உள்ளூர் ஆளும் குழுக்கள் ஆர்வத்துடன் பற்றிக் கொள்கின்றன. இதன் விளைவாய், ஸ்டக்ஹானோவ்வாதிகளின் உண்மையான வருமானம் பலசமயங்களில் கீழ்நிலை பிரிவுகளது தொழிலாளர்களின் வருமானத்தை விட இருபது அல்லது முப்பது மடங்கிற்கும் தாண்டிச் செல்கிறது. அத்துடன், குறிப்பாக அதிர்ஷ்டசாலிகளான சிறப்புத்தேர்ச்சி பெற்ற வல்லுநர்களைப் பொறுத்த வரை, பல சந்தர்ப்பங்களில் அவர்களது ஊதியம் எண்பதில் இருந்து நூறு வரைக்குமான தேர்ச்சிபெறாத தொழிலாளர்களின் மொத்த ஊதியத்தை எட்டிப் பிடிக்கும். தொழிலாளர் ஊதியத்தில் சமத்துவமின்மையின் அளவைப் பொறுத்தவரை, சோவியத் ஒன்றியம் முதலாளித்துவ நாடுகளை எட்டிப் பிடித்தது மட்டுமல்ல, அவற்றை வெகுவாக விஞ்சியும் சென்று விட்டிருக்கிறது!
சோசலிச நோக்கங்களால் உண்மையாக உந்தப்பட்டிருக்கும் மிகச்சிறந்த ஸ்டக்ஹானோவ்வாதிகள் பலரும் உண்மையில் தங்களுக்கு கிடைக்கும் சலுகைகளால் மகிழ்ச்சியடையவில்லை, மாறாக அவற்றால் எரிச்சலுற்று இருக்கின்றனர். அதில் ஆச்சரியமேதுமில்லை. பொதுவான பற்றாக்குறை நிலவுகின்ற ஒரு சுற்றுப்புறத்துக்குள் அவர்கள் மட்டும் தனியாக அனைத்து வகை பொருளியல் வசதிகளையும் அனுபவிப்பது என்பது அவர்களைச் சுற்றி பொறாமை, கெட்ட எண்ணம் ஆகியவற்றின் ஒரு வட்டத்தை உருவாக்கி, அவர்களது இருப்பிற்கும் நச்சூட்டுகின்றது. இத்தகைய உறவுகள், ஒரு முதலாளித்துவ தொழிற்சாலையில் சுரண்டலுக்கு எதிரான போராட்டத்தில் இணைந்து செயல்படும் தொழிலாளர்களுக்கு இடையிலான உறவுகளில் இருந்து பார்க்கும்போது, சோசலிச நெறிகளில் இருந்து மிகவும் வெகுதொலைவில் உள்ளனவையாக இருக்கின்றன.
இவை எல்லாம் இருந்தாலும், சிறப்புத் தேர்ச்சி பெற்ற தொழிலாளிக்கும் கூட —குறிப்பாக மாகாணப் பகுதிகளில்— அன்றாட வாழ்க்கையானது அத்தனை எளிதானதாக இருக்கவில்லை. ஏழு மணி நேர வேலை என்பது, கூடுதல் உற்பத்தித் திறனுக்காக மேலும் மேலும் அதிகமாய் தியாகம் செய்யப்படுகிறது என்ற உண்மை தவிர்த்து, உயிர்வாழ்வுக்கான துணைப் போராட்டத்திற்கு செலவிடப்படும் மணி நேரங்கள் கொஞ்சமல்ல. உதாரணத்திற்கு, சோவியத் பண்ணைகளின் மேம்பட்ட தொழிலாளர்களின் தனிச் செழுமையின் ஒரு அறிகுறியாக, ஏற்கனவே அபாயகரமான பிரபுத்துவமாக உருவெடுத்திருக்கும் டிராக்டர் அதிபர்கள், அறுவடை எந்திர ஓட்டுநர்கள் போன்றவர்கள் தங்களின் சொந்த மாடுகள் மற்றும் பன்றிகளை உடமையாக கொண்டிருக்கிறார்கள் என்ற உண்மையை அவர்கள் சுட்டிக் காட்டுகிறார்கள். சோசலிசம் இல்லாத பாலைக் காட்டிலும் பால் இல்லாத சோசலிசம் மேலானது என்பதான தத்துவம் கைவிடப்பட்டிருக்கிறது. மாடுகளுக்கோ அல்லது பன்றிகளுக்கோ குறைவில்லாததாக தோற்றமளிக்கின்ற அரசு நடத்தும் விவசாய நிறுவனங்களின் தொழிலாளர்கள், தங்களது வாழ்வாதாரத்தை உத்திரவாதம் செய்து கொள்வதற்காக தமது சொந்த சட்டைப்பை பொருளாதாரத்தை உருவாக்கிக் கொள்ளும் நிர்ப்பந்தத்துக்கு ஆளாகிறார்கள் என்பது இப்போது அனைவரும் ஒப்புக்கொள்கின்ற ஒன்றாய் இருக்கிறது. இதற்கு சற்றும் சளைக்காத திகைப்பூட்டுவது, கார்கோவ் நகரத்தில் 96,000 தொழிலாளர்கள் தங்களின் சொந்த தோட்டத்தை வைத்துக் கொண்டிருக்கிறார்கள் என்னும் வெற்றிக்களிப்பான அறிவிப்பாகும் — பிற நகரங்கள் கார்கோவ் நகருடன் போட்டியிட சவாலளிக்கப் பெறுகின்றன. 'தனது சொந்த மாடு', 'தனது சொந்த தோட்டம்' என்னும் இந்த வார்த்தைகளில் தான் மனித சக்தியின் என்னதொரு பயங்கர கொள்ளை உணர்த்தப்படுகிறது. சாணத்தை கிளறும் ஆதிகாலத்து வேலையின் சுமையை இவர்கள் எத்தகைய ஒரு விதத்தில் பூமியில் தொழிலாளர்கள் மீதும், இன்னும் அவர்களது மனைவி மற்றும் குழந்தைகள் மீதும் சுமத்துகிறார்கள்! அடிப்படை வெகுஜனங்களைப் பொறுத்தவரை, அவர்களிடம் மாடுகளும் தோட்டங்களும் இல்லை, பெரும்பான்மையான பகுதிகளில் அவர்களிடம் சொந்த வீடுகள் கூட இல்லை. தேர்ச்சி பெறாத தொழிலாளர்களின் ஊதியங்கள் வருடத்திற்கு 1,200 முதல் 1,500 ரூபிள்களாகவோ அல்லது அதற்கும் குறைவாகவோ இருக்கிறது, இது சோவியத் விலைகளைக் கொண்டு பார்த்தால் நிராதரவான ஒரு நிலை தான். பொருளியல் மற்றும் கலாச்சார மட்டத்தின் மிக நம்பகமான அளவுகாட்டியாக இருக்கக் கூடிய வாழ்க்கை நிலைமைகள் மிக மோசமானவையாக, பலசமயங்களில் தாங்கமுடியாதவையாக இருக்கின்றன. தொழிலாளர்களின் மிகப்பெருவாரியான எண்ணிக்கையினர் சாதாரண வசிப்பிடங்களில் தான் உழன்று கொண்டிருக்கிறார்கள், வசதியிலும் பராமரிப்பிலும் இந்த வசிப்பிடங்களின் நிலை தற்காலிக இராணுவ முகாம்களை விட கணிசமான அளவில் மோசமானதாய் உள்ளது.
தொழிற்சாலைகளின் தோல்விகளையும், சாக்குபோக்குகளையும், தரமற்ற தயாரிப்பு பொருள்களையும் நியாயப்படுத்த அவசியப்படும்போது, நிர்வாகமே அதன் பத்திரிகையாளர்களின் வழியாக இந்த வாழ்க்கை நிலைமைகளை படம் பிடித்துக் காட்டுவதான ஒரு சித்திரத்தை வழங்குகிறது. 'தொழிலாளர்கள் தரையில் படுத்து உறங்குகிறார்கள். ஏனென்றால் படுக்கைகளில் படுக்கைபூச்சிகள் அவர்களது இரத்தத்தை உறிஞ்சுகின்றன. நாற்காலிகள் உடைந்திருக்கின்றன; தண்ணீர் அருந்துவதற்கான ஜாடிகள் இல்லை, மற்றும் பல....'. 'ஒரு அறையில் இரண்டு குடும்பங்கள் வசிக்கின்றன. கூரையோ கசிகிறது. மழை பெய்யும்போது அவர்கள் ஒழுகும்நீரை வாளிகளில் எடுத்துச் சென்று வெளியில் ஊற்றுகிறார்கள்'. 'கழிவறைகள் அருவருப்பூட்டும் நிலையில் இருக்கின்றன'. நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் வரும் இதேமாதிரியான விவரிப்புகளை எத்தனை வேண்டுமானாலும் பெருக்கிக் கொண்டே போகலாம். இந்த தாங்கவியலாத நிலைமைகளின் விளைவாக, “தொழிலாளர்களின் நகர்வு” —உதாரணத்திற்கு எண்ணெய் துறையின் தலைவர் எழுதுகிறார்— “மிக உயர்ந்த புள்ளியை எட்டியிருக்கிறது .... தொழிலாளர்கள் இல்லாததால், பெரும் எண்ணிக்கையிலான எண்ணெய் கிணறுகள் ஒட்டுமொத்தமாக கைவிடப்பட்டு விட்டன.” குறிப்பாக சில அனுகூலமற்ற பிராந்தியங்கள் இருக்கின்றன, அங்கெல்லாம் மற்ற இடங்களில் பல்வேறு ஒழுங்கு மீறல்களுக்காக அபராதம் விதிக்கப்பட்ட அல்லது வேலையை விட்டு நீக்கப்பட்டவர்கள் மட்டுமே வேலை செய்ய சம்மதிக்கிறார்கள். இவ்வாறாக பாட்டாளி வர்க்கத்தின் அடிமட்டத்தில், உரிமைகள் ஏதுமற்ற நிராகரிக்கப்பட்ட தீண்டத்தகாத சோவியத் தொழிலாளர்களின் ஒரு அடுக்கு பெருகிக் கொண்டிருக்கிறது. எண்ணெய் உற்பத்தி போன்ற முக்கியமான தொழில்துறைப் பிரிவும் கூட அவர்களைப் பயன்படுத்திக் கொள்ளும் கட்டாயத்திற்கு ஆளாகிறது.
ஊதியங்களிலான இந்த உறுத்தும் பேதங்கள் தன்னிச்சையான சலுகைகளால் இரட்டிப்பாகி, அதிகாரத்துவம் பாட்டாளி வர்க்கத்தின் மத்தியில் கூர்மையான குரோதங்களை அறிமுகப்படுத்துவதில் வெற்றி கண்டிருக்கிறது. ஸ்டக்ஹானோவ் பிரச்சாரத்தின் கணக்குகள் சமயங்களில் ஒரு சிறிய உள்நாட்டு போரின் சித்திரத்தை படம்பிடித்துக் காட்டின. உதாரணத்திற்கு 'எந்திரப் பொறிமுறைகளை உடைப்பதும் நொருக்குவதும் தான், ஸ்டக்ஹானோவ் இயக்கத்துக்கு எதிரான ஒரு விருப்பமான [!] போராட்ட வழிமுறையாக இருக்கிறது' என்று தொழிற்சங்கங்களின் பத்திரிகை எழுதியது. மேலும் வாசித்தோம்: 'ஒவ்வொரு அடியெடுப்பிலும் வர்க்கப் போராட்டமானது தன்னை உணரச் செய்கிறது'. இந்த 'வர்க்கப்' போராட்டத்தில், தொழிலாளர்கள் ஒரு பக்கமும் தொழிற்சங்கங்கள் மற்றொரு பக்கமும் நிற்கிறார்கள். எதிர்ப்பவர்களின் 'பற்களை உடைக்கவேண்டும்' என்று ஸ்ராலின் வெளிப்படையாக பரிந்துரை செய்தார். 'கண்ணியமற்ற எதிரிகள்' பூமிப்பந்தில் இருந்தே துடைத்தெறியப்படுவார்கள் என்று மத்திய குழுவின் ஏனைய உறுப்பினர்கள் ஒன்றுக்கும் மேற்பட்ட முறைகள் எச்சரித்திருக்கின்றனர். ஸ்டக்ஹானோவ் இயக்க அனுபவமானது, அதிகாரிகளுக்கும் பாட்டாளி வர்க்கத்திற்கும் இடையிலான ஆழமான அந்நியப்படலையும், அதிகாரத்துவம் நிஜமாகவே அதனால் கண்டுபிடிக்கப்படாததான 'பிளவுபடுத்தி வெற்றிகாண்!' என்னும் மந்திரத்தை எந்த அளவு ஆவேசத்துடன் செயலுறுத்திக் கொண்டிருக்கிறது என்பதையும் குறிப்பாக தெளிவுபடுத்தியிருக்கிறது. மேலும், தொழிலாளர்களை ஆறுதல்படுத்துவதற்காக, இந்த பலவந்தமான உற்பத்திக்கேற்ற ஊதியமுறை உழைப்பு, 'சோசலிசப் போட்டி' என்று அழைக்கப்படுகிறது. இப்பெயர்சூட்டல் ஒரு கேலிக்கூத்தைப் போன்று ஒலிக்கிறது!
நமது உயிரியல் மரபணுக்களில் வேர்களைக் கொண்டிருக்கும் போட்டியானது, பேராசை, பொறாமை மற்றும் சலுகை அனைத்தையும் தன்னிடம் இருந்து களையப்பட்ட பின்னர், கம்யூனிசத்தின் கீழும் கூட அதுவே மிக முக்கியமான உந்து சக்தியாக திகழப்போகிறது என்பதில் சந்தேகமில்லை. ஆனால் அதற்கு நெருக்கமான தயாரிப்பு சகாப்தத்தில், ஒரு சோசலிச சமுதாயத்தின் உண்மையான உருவாக்கமானது, சோவியத் அரசாங்கம் இப்போது செய்வதைப் போன்று ஒரு பின்தங்கிய முதலாளித்துவத்தின் இந்த அவமதிப்பான நடைமுறைகளின் மூலமாக அல்ல, மாறாக ஒரு விடுதலைபெற்ற மனிதகுலத்திற்கு கூடுதல் பொருத்தமான வழிமுறைகளின் மூலமாகவே சாதிக்கப்பட முடியும், சாதிக்கப்படும். எல்லாவற்றுக்கும் மேல் ஒரு அதிகாரத்துவத்தின் சாட்டையின் கீழ் இது சாதிக்கப்பட முடியாது, ஏனென்றால் இந்த சாட்டைதான் பழைய உலகத்தில் இருந்து வந்த மிகவும் அருவருப்பான ஆஸ்தியாக இருப்பதாகும். சோசலிசத்தை குறித்து வெட்கமின்றி நீங்கள் பேசும் முன்பாக இந்த சாட்டை உடைத்து நொருக்கப்பட்டு பொதுமக்கள் முன்னிலையில் தீயிட்டு கொளுத்தப்பட வேண்டும்.
கூட்டுக் கிராமத்தில் சமூக முரண்பாடுகள்
தொழிற்துறை ட்ரஸ்டுக்கள் (trusts) 'கொள்கையளவில்' சோசலிச நிறுவனங்களாக இருந்தன என்றால், கூட்டுப் பண்ணைகள் விடயத்தில் அவ்வாறான நிலை இருப்பதாகக் கூறமுடியவில்லை.
அவை அரசை சார்ந்தவையாக இல்லாமல், குழுச் சொத்துகளை சார்ந்திருக்கின்றன. தனித்தனியாய் சிதறிக் கிடந்ததுடன் ஒப்பிடுகையில் இது மிகப்பெரும் ஒரு முன்னோக்கிய நகர்வு தான், ஆனபோதும் கூட்டுப் பண்ணை நிறுவனங்கள் சோசலிசத்திற்கு இட்டுச் செல்லுமா என்பது, கூட்டு அமைப்புகளுக்கு உள்ளாகவே அமைந்திருக்கின்ற ஒரு பகுதியையும், அவற்றுக்கு வெளியே சோவியத் அமைப்புமுறையின் பொதுவான நிலைமைகளில் ஒரு பகுதியையும், மற்றும் இறுதியாக, ஆயினும் முக்கியத்துவத்தில் குறைவில்லாததாக, உலகஅரங்கில் ஒரு பகுதியையும் கொண்டு அமைந்திருக்கும் ஒரு முழுத்தொடர் சூழ்நிலைகளை சார்ந்ததாய் இருக்கிறது.
விவசாயிகளுக்கும் அரசுக்கும் இடையிலான போராட்டமானது முடிந்து போனதாக கூறுவதற்கு வெகுதூரத்தில் உள்ளது. இன்னமும் மிகவும் ஸ்திரமற்றதாகவே இருக்கும் இப்போதைய விவசாய ஒழுங்கமைப்பானது, போட்டி முகாம்களுக்கு இடையில் படுபயங்கரமாக உள்நாட்டுப் போர் வெடித்ததை பின்தொடர்ந்து அவற்றுக்கு இடையில் ஏற்பட்டிருக்கும் தற்காலிக சமரசமே அன்றி வேறொன்றுமில்லை. நிச்சயமாய், விவசாய பண்ணைகளின் தொண்ணூறு சதவீதம் கூட்டுற்பத்தி மயமாக்கப்பட்டிருக்கின்றன, ஒட்டுமொத்த விவசாய உற்பத்தி பொருட்களில் 94 சதவீதம் கூட்டுற்பத்தி பண்ணை வயல்களில் இருந்து வந்தவையே. அடிப்படையில் தனிநபர் விவசாயிகள் ஒளிந்திருக்கும் 'போலி' கூட்டுற்பத்தி பண்ணைகளின் ஒரு குறிப்பிட்ட சதவீதத்தை கருத்தில் எடுத்துக் கொண்டாலுமே கூட, தனிநபர் பொருளாதாரத்தின் மீதான வெற்றி என்பது குறைந்தபட்சம் பத்துக்கு ஒன்பது பங்கு வெல்லப்பட்டு விட்டது என்பதாகவே தோன்றுகிறது என்பதை ஒப்புக் கொள்ளவே வேண்டும். ஆயினும், கிராமப்புற மாவட்டங்களில் சக்திகளுக்கும் போக்குகளுக்கும் இடையிலான உண்மையான போராட்டம் என்பது தனிநபர் மற்றும் கூட்டுற்பத்தி விவசாயிகளுக்கு இடையிலான ஒரு வெறும் முரண்பாடு என்ற கட்டமைப்புக்குள் அடக்கப்படுவதற்கும் வெகுதொலைவில் இருக்கிறது.
அரசு, விவசாயிகளை சமாதானப்படுத்தும் நோக்கத்தோடு, கிராமத்தின் சொத்துநாட்டமுடைய மற்றும் தனிநபர்வாத போக்குகளுக்கு, மிகப் பெரும் சலுகைகளை அளிக்கும் நிர்ப்பந்தத்தில் தன்னைக் காண்கிறது. கூட்டுற்பத்தி பண்ணைகளிலான நில ஒதுக்கீட்டை “நிரந்தரமாக”பயன்படுத்திக் கொள்ள அனுமதிப்பதுடன் —அதாவது, சாரத்தில், நிலத்தின் சமூகமயமாக்கத்தை கலைப்பது— இது தொடங்குகிறது. இது சட்டபூர்வமான கட்டுக்கதையா? சக்திகளின் இடையுறவுகளைப் பொறுத்து, இது யதார்த்தமாக நிரூபணமாகி மிக அண்மை வருங்காலத்தில் அரசு அளவிலான மட்டத்தில் திட்டமிட்ட பொருளாதாரத்திற்கு தீவிரமான சிக்கல்களை உருவாக்கலாம். எனினும், சிறப்பு சிறுவிவசாய பண்ணைகளில் தங்களின் சொந்த மாடுகள், பன்றிகள், ஆடுகள் மற்றும் கோழிகளுடன் தனிநபர் விவசாயத்தை மீட்சி செய்யும் நிர்ப்பந்தத்திற்கு அரசாங்கம் உள்ளானது என்பது அதைவிட முக்கியமானதாகும். இந்த சோசலிசமயமாக்கத்தின் விதிமீறலுக்கும் கூட்டுற்பத்தியின் வரம்புபடுத்தலுக்குமான பிரதிபலனாக, விவசாயியும், பெரும் உற்சாகத்துடன் இல்லை என்றாலும் கூட, கூட்டுற்பத்தி பண்ணைகளில் வேலை செய்ய அமைதியாக ஒத்துக் கொள்கிறார்; அது அரசுக்கு அவர் கொண்டுள்ள கடமையை நிறைவேற்றும் அதேநேரத்தில் தனது சொந்தக் கைகளிலும் கொஞ்சத்தைக் கொண்டிருப்பதற்கான வாய்ப்பை அவருக்கு வழங்குகிறது. சோவியத் புள்ளிவிவரங்கள் இந்த விடயத்தில் கூடுதல் நேர்மையானதாக இருந்ததாக எடுத்துக் கொண்டாலும் கூட, எண்ணிக்கைரீதியில் அளவிட மிகக் கடினமான அளவுக்கு முதிர்ச்சியற்ற வடிவங்களையே இந்த புதிய உறவுகள் இன்னும் கொண்டிருக்கின்றன. எவ்வாறாயினும் விவசாயியின் தனிமனித இருப்பில், அவரது சின்னஞ்சிறு உடைமைகள் கூட்டுற்பத்தி பண்ணைகளுக்கு குறையாத முக்கியத்துவம் பெற்றிருக்கின்றன என்ற முடிவுக்கு வந்துசேர பல விடயங்களும் அனுமதிக்கின்றன. தனிமனிதப் போக்குகளுக்கும் கூட்டாண்மைப் போக்குகளுக்கும் இடையிலான போராட்டம் கிராமங்களின் ஒட்டுமொத்த வெகுஜனங்கள் முழுமையிலும் இப்போதும் நடந்து கொண்டு தான் இருக்கிறது, முடிவு இன்னும் தீர்மானமாகியிருக்கவில்லை என்பதே இதன் அர்த்தமாகும். விவசாயிகள் எந்த பக்கம் சாயப்போகின்றனர்? அது, அவர்களுக்கே இன்னும் துல்லியமாகத் தெரியவில்லை.
1935 இன் இறுதியில் விவசாயத் துறை மக்கள் ஆணையர் கூறினார்: 'சமீப காலம் வரை, தானியங்களை சமர்ப்பிக்கும் அரசுத் திட்டத்தை நிறைவேற்றுவதில் குலாக்குகளின் தரப்பில் இருந்து நாம் பெரும் எதிர்ப்பை சந்தித்து வந்திருக்கிறோம்'. இதனை வேறுவார்த்தைகளில் சொல்வதென்றால், 'சமீப காலம் வரைக்கும்' (இன்று?) கூட்டுற்பத்தி விவசாயிகளில் பெரும்பான்மையினர் விளைச்சல் தானியத்தை அரசிடம் ஒப்படைப்பதை தங்களுக்கு சாதகமற்ற ஒரு செயல்பாடாக கருதி வந்திருந்தனர், தனியார் வர்த்தகத்தை நோக்கி சாய்வு கொண்டவர்களாக இருந்திருந்தனர் என்பதே இதன் அர்த்தமாகும். கூட்டுற்பத்தியில் ஈடுபடும் விவசாயிகளிடம் இருந்து கூட்டுற்பத்தியாக்கப்பட்ட சொத்துகள் கொள்ளையடிக்கப்படாமல் பாதுகாப்பதற்காக அரக்கத்தனமான சட்டங்கள் கொண்டுவரப்பட்டுள்ளதன் மூலமாக இதே விடயம் வேறொரு விதத்திலும் நிரூபிக்கப்படுகின்றது. கூட்டுற்பத்தியாக்கப்பட்ட சொத்துக்கள் அரசிடம் இருபது பில்லியன் ரூபிள்களுக்கு காப்பீடு செய்யப்பட்டிருக்கின்ற அதேவேளையில் கூட்டுற்பத்தி விவசாயிகளின் தனிப்பட்ட சொத்துக்கள் இருபத்தியொரு பில்லியன் ரூபிள்களுக்கு காப்பீடு செய்யப்பட்டிருக்கிறது என்பது மிகவும் இதை விளங்கப்படுத்தக் கூடிய ஒன்றாக இருக்கிறது. இந்த இடையுறவு, விவசாயிகளை தனியாக எடுத்துப் பார்க்கும்போது அவர்கள் கூட்டுற்பத்தி நிறுவனங்களை விடவும் செழுமையாக இருக்கின்றனர் என்று ஒருவேளை அர்த்தமளிக்காமல் போனாலும் கூட, விவசாயிகள் தங்களின் பொதுச் சொத்துக்களை விடவும் சொந்த உடைமைகளை கூடுதல் கவனத்துடன் காப்பீடு செய்து கொள்கின்றனர் என்று நிச்சயமாய் அர்த்தமளிப்பதாகும்.
கால்நடை வளர்ப்பிலான அபிவிருத்திப் பாதையும் நமது பார்வையில் அதேபோன்றதொரு நிலையை காட்டுவதாய் இருக்கிறது. 1935 ஆம் ஆண்டு வரைக்கும் குதிரைகளின் எண்ணிக்கை தொடர்ந்து சரிவு கண்டு வந்தது, அரசின் தொடர்ச்சியான நடவடிக்கைகளின் ஒரு விளைவாக சென்ற ஆண்டின் போதுதான் இது இலேசாக அதிகரிக்க தொடங்கியிருக்கிறது என்ற அதேநேரத்தில், கொம்புள்ள கால்நடைகளின் அதிகரிப்பானது முந்தைய வருடத்திலேயே நான்கு மில்லியன் எண்ணிக்கையை தொட்டிருந்தது. சாதகமான வருடமான 1935 இல் குதிரைகளுக்கான திட்டம் 94 சதவீதம் வரைதான் பூர்த்தியானது, அதே சமயத்தில் கொம்புள்ள கால்நடைகள் விடயத்தில், இது கணிசமாய் அளவுகடந்ததாக இருந்தது. குதிரைகள் கூட்டுற்பத்தி பண்ணைகளின் உடைமைகளாக மட்டுமே இருக்கின்றன, மாடுகளோ ஏற்கனவே பெரும்பான்மையான கூட்டுற்பத்தி விவசாயிகளின் தனிநபர் உடைமைகளாக இருக்கின்றன என்ற உண்மையில் இருந்து மேற்கண்ட தரவின் பொருளை நாம் தெளிவுற புரிந்து கொள்ளலாம். விதிவிலக்காக கூட்டுற்பத்தி விவசாயிகள் ஒரு குதிரை கொண்டிருக்க அனுமதிக்கப்பட்டிருக்கும் பெரும் சமவெளிப் பகுதிகளில், குதிரைகளின் எண்ணிக்கை அதிகரிப்பு கூட்டுற்பத்தி பண்ணைகளிலானதை விடவும் மிகவும் துரிதமாக இருக்கிறது, அந்த கூட்டுற்பத்தி பண்ணைகள் தம் பங்காக மற்ற சோவியத் பண்ணைகளை விஞ்சிய நிலையில் இருக்கின்றன என்பது கூடுதலாக சேர்த்துக் கூறத்தக்க மீதமாகவே இருக்கிறது. இவை அனைத்தில் இருந்தும், சிற்சிறு தனியார் பொருளாதாரம் பெரும்-அளவிலான சோசலிசமயப்பட்ட பொருளாதாரத்தை விட உயரியதாக இருக்கிறது என்று புரிந்து கொள்ளக் கூடாது, மாறாக காட்டுமிராண்டித்தனத்தில் இருந்து நாகரிகத்தை நோக்கிய உருமாற்றத்தில், ஒன்றிலிருந்து இன்னொன்றுக்கு மாறுகையில், வெறும் நிர்வாக அழுத்தத்தால் மட்டுமே அகற்றி விட முடியாத பலசிக்கல்கள் மறைந்திருக்கின்றன என்பதே புரிந்து கொள்ளப்பட வேண்டும்.
'சட்டம் ஒருபோதும் சமூகத்தின் பொருளாதார கட்டமைப்பு மற்றும் அதனால் பக்குவப்பட்ட கலாச்சார அபிவிருத்திக்கு உயர்ந்து நிற்க முடியாது'. நிலத்தை குத்தகைக்கு விடுவது என்பது, சட்டத்தால் தடை செய்யப்பட்டிருக்கின்ற போதும், உண்மையில் மிகப் பரவலாக, அதிலும் விளைச்சலில்-பங்கு என்ற அதன் மிகவும் தீங்கானதொரு வடிவத்தில், புழங்குகிறது. நிலம் ஒரு கூட்டுறவு பண்ணையின் மூலம் இன்னொரு பண்ணைக்கும், சில சமயங்களில் வெளிநபர்களுக்கும், இன்னும் சில சமயங்களில் அதன் சொந்த மிக வியாபாரத்திறன்பெற்ற உறுப்பினர்களிடமேயும் குத்தகைக்கு விடப்படுகிறது. நம்பவே முடியாது, சோவியத் பண்ணைகள் –அதாவது, 'சோசலிச' நிறுவனங்கள்– நிலங்களை குத்தகைக்கு விடுவதில் இறங்குகின்றன. அதிலும், குறிப்பாக விளக்கமூட்டக் கூடியதாக, GPU இன் சோவியத் பண்ணைகளில் இது புழங்குகிறது! சட்டங்களுக்கு காவலனாக இருக்கும் இந்த உயர்ந்த அமைப்பின் பாதுகாப்பின் கீழ், சோவியத் பண்ணையின் இயக்குநர், விவசாயியின் மீது ஏறக்குறைய பழைய நிலப்பிரபு- விவசாய அடிமை ஒப்பந்தங்களில் இருந்து நகலெடுக்கப்பட்டதாய் இருக்கும் குத்தகையாளர் நிபந்தனைகளை விதிக்கிறார். இவ்வாறாக விவசாயிகள் அதிகாரத்துவவாதிகளால், அரசாங்கத்தின் முகவர்கள் ஊடாக அல்லாமல், அரை சட்டபூர்வ நிலப்பிரபுக்கள் ஊடாக, சுரண்டப்படும் சந்தர்ப்பங்களை நாம் காண்கிறோம்.
இத்தகைய அவலட்சணமான நிகழ்வுப்போக்குகளின் விரிவெல்லையை சற்றும் மிகைப்படுத்தாமல் பார்க்கும்போதும், அப்போதும் அவற்றின் பிரம்மாண்டமான குறித்துக்காட்டும் முக்கியத்துவத்தை நாம் காணத் தவறமுடியாது. பொருளாதாரத்தின், மக்கள்தொகையின் மிகப்பெருவாரி பெரும்பான்மையைக் கொண்டிருக்கும் இந்த இன்னும் வெகுபின்தங்கியதாக இருக்கும் பிரிவில், முதலாளித்துவப் போக்குகளின் வலிமைக்கு அவை சந்தேகத்திற்கிடமில்லாமல் சாட்சியமளிக்கின்றன. இதனிடையே, சொத்துடைமை உறவுகளின் புதிய கட்டமைப்பைத் தாண்டியும், சந்தை உறவுகள் தவிர்க்கவியலாமல் தனிமனிதப் போக்குகளை வலுப்படுத்திக் கொண்டிருக்கின்றன, கிராமங்களின் சமூக பாகுபாட்டை ஆழப்படுத்திக் கொண்டிருக்கின்றன.
சராசரியாக ஒரு கூட்டுற்பத்தி பண்ணையின் வருவாயானது 1935 ஆம் ஆண்டு வாக்கில் சுமார் 4,000 ரூபிள்களாக இருந்தது. ஆனால் 'சராசரி' அளவுகள் தொழிலாளர்கள் விடயத்தில் விடவும் விவசாயிகள் விடயத்தில் கூடுதலாக கண்களை ஏமாற்றுபவையாக உள்ளன. உதாரணமாக கூட்டுற்பத்தி மீனவர்களின் 1935 ஆம் ஆண்டு வருமானமானது 1934 ஆம் ஆண்டினை விடவும் இருமடங்கானதாக, அல்லது சராசரியாக ஒருவருக்கு 1,919 ரூபிள்கள் அளவுக்கு இருந்தது. இந்த எண்ணிக்கையைக் கூறும்போது கிடைத்த கைதட்டல், எந்தளவுக்கு குறிப்பிடத்தக்க மட்டத்திற்கு இது பிரதான எண்ணிக்கையிலான கூட்டுற்பத்தி அமைப்புகளிலான தனிநபர் வருவாயை விட உயர்ந்ததாக இருந்தது என்பதைக் காட்டுவதாக இருந்தது. மற்றொரு புறம், ஒவ்வொரு வீட்டிற்கும் சுமார் 30,000 ரூபிள்கள் அளவுக்கு —தனிநபர் உடைமைகளில் இருந்து வரும் பணம் அல்லது வேறுவகை வருமானங்களையோ அல்லது மொத்த நிறுவன வழி வருமானங்களையோ கணக்கில் சேர்க்காமல்— வருவாய் வரக் கூடிய கூட்டுற்பத்திப் பண்ணைகளும் இருந்தன. பொதுவாக, இந்த பெரும் கூட்டுற்பத்தி விவசாயிகளில் ஒருவரது வருமானம் ஒரு 'சராசரி' தொழிலாளியின் ஊதியத்தை மற்றும் கீழ்நிலை கூட்டுற்பத்தி விவசாயியின் வருமானத்தை விட பத்து முதல் பதினைந்து மடங்குகள் அதிகமாக இருந்தது.
வருமானங்களை தரப்படுத்தல்கள் எல்லாம் ஒரு பகுதி மட்டும்தான் திறனைக் கொண்டும் அயராத உழைப்பைக் கொண்டும் தீர்மானிக்கப்படுகிறது. கூட்டுற்பத்தி பண்ணைகளும் சரி மற்றும் விவசாயிகளுக்கான நிலத்துண்டுகளானாலும் சரி அவை அத்தியாவசியமாக, காலநிலை, மண்ணின் தன்மை, பயிரின் வகை ஆகியவற்றைப் பொறுத்தும், அத்துடன் நகரங்கள் மற்றும் தொழிற்துறை மையங்களுடனான அண்மையைப் பொறுத்தும், அசாதாரணமான சமத்துவமற்ற தன்மையை கொண்டுள்ளன. நகரத்திற்கும் கிராமத்திற்குமான பேதம் ஐந்தாண்டு திட்டத்தில் மென்மையாக்கப்படாதது மட்டுமல்ல, மாறாக நகரங்கள் மற்றும் புதிய தொழில் மையங்களின் வளர்ச்சி சூடுபிடித்ததை அடுத்து இந்த பேதம் பெருமளவில் கூர்மையுற்றிருந்தது. சோவியத் சமூகத்தின் இந்த அடிப்படையான சமூக பேதமானது, பிரதானமாக வாடகை மாறுபாட்டின் காரணத்தினால், தவிர்க்கவியலாமல் அதிலிருந்து தோற்றம்பெறும் முரண்பாடுகளை, கூட்டுற்பத்தி அமைப்புகளுக்கு இடையிலும், கூட்டுற்பத்தி அமைப்புகளுக்கு உள்ளேயும் உருவாக்குகிறது.
அதிகாரத்துவத்தின் வரம்பில்லாத அதிகாரம் சமூக பாகுபடுத்தலில் மிகவும் சக்திவாய்ந்த சாதனமாக இருக்கிறது. ஊதியங்கள், விலைகள், வரிகள், வரவு-செலவு ஒதுக்கீடு மற்றும் கடன் போன்ற நெம்புகோல்களை அது தனது கரங்களில் கொண்டுள்ளது. மத்திய ஆசியப் பருத்தி கூட்டுற்பத்தி ஆலைகள் பலவற்றின் முழுக்க விகிதாச்சாரப் பொருத்தமற்ற வருவாயானது கூட்டுற்பத்தி உறுப்பினர்களின் உழைப்பின் அளவை விடவும் அரசாங்கத்தால் ஸ்தாபிக்கப்பட்ட விலைகளுடன் அதிகமாய் சார்ந்திருக்கிறது. மக்களின் ஒரு குறிப்பிட்ட அடுக்கினை மற்றொரு அடுக்கு சுரண்டுவது மறையவில்லை, மாறாக அது மாறுவேடம் பூண்டிருக்கிறது. 'செழிப்பான' முதல் பத்தாயிரக்கணக்கான கூட்டுற்பத்தி அமைப்புகள் எஞ்சியிருக்கும் பாரிய எண்ணிக்கையிலான கூட்டுற்பத்தி அமைப்புகள் மற்றும் தொழிற்சாலைத் தொழிலாளர்களின் நலன்களைப் பலியிட்டே செழிப்படைந்திருக்கின்றன. அனைத்து கூட்டுற்பத்தி அமைப்புகளையும் செழிப்பான ஒரு நிலைக்கு உயர்த்துவதென்பது பெரும்பான்மையின் இழப்பில் ஒரு சிறுபான்மைக்கு சலுகைகள் கொடுப்பதை விடவும், ஒப்பிட முடியாத அளவு மிகவும் சிரமம்மிக்க ஒரு நீண்டநெடிய பணியாகும் 'குலாக்கின் வருமானம் தொழிலாளர்களின் வருமானத்தை விட கணக்கிட முடியாத அளவு அதிகரித்திருக்கிறது' என இடது எதிர்ப்பாளர்கள் 1927 ஆம் ஆண்டில் அறிவித்தனர். இந்த கூற்றானது, ஒரு மாறுபட்ட வடிவத்தில் என்றாலும், இன்றும் தனது ஆற்றலை அப்படியே கொண்டிருக்கிறது. கூட்டுற்பத்தி அமைப்புகளின் உயர் வகுப்பின் வருவாய் அடிப்படை விவசாயி மற்றும் தொழிலாளர் வெகுஜனங்களின் வருவாயை விடவும் கணக்கிட முடியாத அளவு வளர்ந்து விட்டிருக்கிறது. பொருளியல் மட்டங்களிலான சமத்துவமின்மை, உண்மையில், குலாக்குகளை இல்லாதுசெய்த நிகழ்வின் சமயத்தில் இருந்ததை விடவும் மிகவும் அதிகமாக இருக்கிறது எனலாம்.
கூட்டுற்பத்தி அமைப்புகளுக்கு உள்ளான பாகுபாடு, அதன் வெளிப்பாட்டினை பகுதியாக தனிநபர் நுகர்வு வட்டத்திலும் மற்றும் கூட்டுற்பத்தி பண்ணையின் அடிப்படையான சொத்தும் கூட சமூகமயமானது என்பதால், பகுதியாக அது கூட்டுற்பத்தி பண்ணைகளை ஒட்டியிருக்கும் தனிநபர் நிறுவனங்களிலும் காட்டுகின்றது. ஏற்கனவே கூட்டுற்பத்தி பண்ணைகளுக்கு இடையிலான பாகுபாடே ஆழமான பின்விளைவுகளைக் கொண்டிருக்கிறது; வசதியானதொரு கூட்டுற்பத்தி பண்ணை, கூடுதலாய் உரம் போடுவதற்கும் கூடுதலாய் எந்திரப் பயன்பாட்டுக்கும் ஆகவே துரிதமாக செழிப்படைவதற்கும் வாய்ப்பு பெற்றிருக்கிறது. வெற்றிகரமான கூட்டுற்பத்தி பண்ணைகள் பல சமயங்களில் வறுமையான பண்ணைகளில் இருந்து உழைப்பு சக்தியை வாடகைக்கு அமர்த்திக் கொள்கின்றன, அதிகாரிகள் இதற்கு கண்களை மூடிக் கொள்கிறார்கள். கூட்டுற்பத்தி பண்ணைகளுக்கு மதிப்பு சமமாய் இல்லாதவாறாய் நிலங்களை எழுதிக்கொடுப்பது அவைகளுக்கு இடையிலான மேலதிக பேதத்தையும், அதன் விளைவாக, 'முதலாளித்துவ' கூட்டுற்பத்தி பண்ணைகள் அல்லது அவை இப்போதும் கூட அழைக்கப்படுகின்ற விதமாய் “மில்லியனர் கூட்டுற்பத்தி பண்ணைகள்” எனும் ஒரு தனிவகை கெட்டிப்படுவதையும் பெருமளவில் ஊக்கப்படுத்துகிறது.
விவசாயிகளுக்கு இடையிலான சமூக வேற்றுமைப்பாடு உருவாகும் நிகழ்ச்சிப்போக்கில் ஒரு நெறிப்படுத்துநராக அரசு அதிகாரம் தலையீடு செய்ய முடிகிறது என்பது உண்மையே. ஆனால் எந்த திசையில், எந்த வரம்புகளுக்குள்ளாக, அத்தலையீடுகள் செய்யப்படுகின்றன? குலாக் கூட்டுறவு பண்ணைகள் மீதும் மற்றும் அதன் உறுப்பினர்கள் மீதும் தாக்க முற்படுவது, ஒரு வலிமிகுந்த குறுக்கீட்டிற்குப் பின்னர் இப்போதுதான் ஒரு 'மகிழ்ச்சியான வாழ்க்கைக்கு' அசாதாரணமான தாகம் கொள்ளத் தொடங்குகின்ற, விவசாயிகளின் கூடுதல் 'முற்போக்கு' தட்டுகளுடன் ஒரு புதிய மோதலுக்கு திறந்துவிடும். இது தவிர —இதுதான் பிரதான விடயம்— அரசு அதிகாரமே கூட சோசலிச கட்டுப்பாட்டுத் திறன் மேலும் மேலும் குறைந்ததாக ஆகிக் கொண்டிருக்கிறது. தொழிற்சாலைகளைப் போலவே விவசாயத்திலும் இது, 'வயல்வெளிகளின் ஸ்டக்ஹானோவ்வாதி”களான வலிமையான வெற்றிகரமான மில்லியனர் கூட்டுப் பண்ணைகளின் ஆதரவையும் நட்பையும் எதிர்நோக்கி நிற்கிறது. உற்பத்தி சக்திகளின் அபிவிருத்தி குறித்த கவலையுடன் தொடங்கி, இறுதியில் வேறு மார்க்கமின்றி இது தன்னைக் குறித்த கவலையுடன் முடிவதாய் இருக்கிறது.
நுகர்வானது, உற்பத்தியுடன் நெருக்கமாகப் பின்னியதாக இருக்கும் விவசாயத் துறையில் தான் துல்லியமாக, கூட்டுற்பத்தியானது அதிகாரத்துவத்தின் ஒட்டுண்ணித்தனத்திற்கும், அதனுடன் சேர்த்து கூட்டுற்பத்தி அமைப்புகளின் உயர் வட்டாரங்களுடனான அதன் பின்னிப்பிணைப்புக்குமான பிரம்மாண்டமான வாய்ப்புகளைத் திறந்துவிட்டிருக்கிறது. கிரெம்ளினின் சம்பிரதாயபூர்வ அமர்வுகளின் போது, கூட்டுப்பண்ணை விவசாயிகள் தலைவர்களுக்கு வழங்குகின்ற அன்பளிப்பு 'பரிசுப் பொருட்கள்', அதிகாரத்தின் உள்ளூர் பிரதிநிதிகளிடம் அவர்கள் செலுத்துகின்ற அடையாளமற்ற மரியாதையின் ஒரு அடையாளமான வெளிப்பாடாக மட்டுமே இருக்கின்றன.
இவ்வாறாக தொழில்துறையை விடவும் அளவிடமுடியாத மட்டத்திற்கு அதிகமாய் விவசாயத்தில், குறைந்த உற்பத்தி மட்டமானது சொத்தின் சோசலிச மற்றும் இன்னும் கூட்டுறவு (கூட்டுற்பத்தி பண்ணை) வடிவங்களுடனும் கூட தொடர்ச்சியான மோதலுக்குள் வருகிறது. இறுதி ஆய்வில், இந்த முரண்பாட்டில் இருந்தே வளர்ச்சியுற்றதாய் இருக்கும் அதிகாரத்துவம், தனது பங்குக்கு இந்த முரண்பாட்டை ஆழப்படுத்துகிறது.
ஆளும் தட்டின் சமூக இலட்சணம்
சோவியத் அரசியல் படைப்புகளில் 'அதிகாரத்துவம்' ஒரு மோசமான சிந்தனை வழக்கமாக அல்லது வேலை வழிமுறையாக குற்றம் சாட்டப்படுவதை நீங்கள் அடிக்கடி காண முடியும். (இந்த குற்றச்சாட்டு எப்போதுமே மேலிருந்து கீழ்நோக்கி செலுத்தப்படுவதாக, உயர் வட்டாரங்களின் தரப்பில் ஒரு தற்காப்பு வழிமுறையாக இருக்கிறது.) ஆனால் ஒரு ஆளும் தட்டாக அதிகாரத்துவத்தின் மீதான, அதன் எண்ணிக்கை மற்றும் கட்டமைப்பு, அதன் இரத்தம் மற்றும் சதை, அதன் சலுகைகள் மற்றும் வேட்கைகள், அது விழுங்கும் தேசிய வருவாயின் பங்கு ஆகியவற்றின் மீதான, விசாரணையை நீங்கள் எங்கும் காணமுடியாது. ஆயினும் அது இருக்கிறது. அது தனது சமூக இலட்சணத்தை மிகக் கவனமாக மறைத்துக் கொள்கிறது என்ற உண்மையானது, ஆள்வதற்கான அதனது உரிமை குறித்த நம்பிக்கை இன்னும் வெகு தூரத்தில் தான் இருக்கின்றபோதும் இது ஒரு ஆளும் 'வர்க்க”த்திற்கே உரிய தனித்துவமான நனவைக் கொண்டிருக்கின்றது என்பதை நிரூபணம் செய்கிறது.
சோவியத் அதிகாரத்துவத்தை துல்லியமான எண்ணிக்கையில் விவரிப்பது முற்றிலும் சாத்தியமில்லாதது, அதற்கு இரண்டு வகையான காரணங்கள் உள்ளன. முதலாவதாக, அரசுதான் ஏறக்குறைய ஒரேயொரு முதலாளியாக இருக்கும் நாட்டில், நிர்வாக எந்திரம் எங்கு முடிவடைகிறது என்பதைக் கூறுவது கடினம். இரண்டாவதாக, இந்த விடயத்தில் சோவியத் புள்ளிவிவர நிபுணர்கள், பொருளாதார நிபுணர்கள் மற்றும் விளம்பரத் துறையினர் எல்லோருமே, நாம் கூறி வருகின்றவாறாய், ஒரு குறிப்பான ஒருமித்த மௌனத்தை கடைப்பிடிக்கிறார்கள். அவர்களையே அவர்களது 'நண்பர்களும்' பிரதிபலிக்கிறார்கள். வெப்ஸ் (Webbs) தம்பதிகள் உழைத்து தொகுத்திருக்கும் ஆயிரத்து இருநூறு பக்கங்களின் ஒரு இடத்தில் கூட சோவியத் அதிகாரத்துவத்தை ஒரு சமூக வகைப்பாடாக அவர்கள் குறிப்பிடவில்லையே என்று நாம் சாதாரணமாக கூறிக்கொள்ளலாம். அடிப்படையில் அது சொல்லச்சொல்லத் தான் அவர்கள் எழுதினார்கள் என்பதால், இதில் ஆச்சரியப்பட ஒன்றுமில்லை!
நவம்பர் 1, 1933 இன் உத்தியோகபூர்வ புள்ளிவிவரத்தின் படி, மத்திய அரசு எந்திரத்தில் உத்தவிடும் மனிதர்களில் சுமார் 55,000 பேர் இடம்பெற்றிருக்கின்றனர். ஆயினும், சமீப ஆண்டுகளில் அசாதாரணமான அதிகரிப்பைக் கண்டிருக்கும் இந்த எண்ணிக்கையில், ஒரு பக்கம் இராணுவ மற்றும் கடற்படை துறைகள் மற்றும் GPU ஆகியவையும் மறுபக்கத்தில் கூட்டுறவு மையங்கள் மற்றும் ஓசோவியோகிம் (Ossoaviokhim- சோவியத் ஒன்றியத்தின் பாதுகாப்பு மற்றும் அதன் இரசாயன மற்றும் வான்வெளித் துறைகள் அபிவிருத்திக்கான அமைப்பு) போன்ற சமூக அமைப்புகள் என்று சொல்லப்படுவதன் ஒரு வரிசை ஆகியவையும் சேர்க்கப்படவில்லை. இதுதவிர குடியரசு ஒவ்வொன்றும் அதன் சொந்த அரசாங்க எந்திரத்தைக் கொண்டிருக்கிறது.
அரசு, தொழிற்சங்க, கூட்டுறவு அமைப்புகளது மற்றும் பிற பொதுவான அலுவலர்களுடன் இணையாக, இவர்களுடன் பகுதியாக பிணைந்த நிலையில், கட்சியின் சக்திவாய்ந்த அலுவலர்கள் இருக்கின்றனர். சோவியத் ஒன்றியம் மற்றும் தனித்தனி குடியரசுகளின் உத்தரவிடும் உயர்வட்டாரத்தினரின் எண்ணிக்கை மொத்தமாய் 4,00,000 ஆக இருக்கும் என்றால் அது மிகையாகாது. தற்போது இந்த எண்ணிக்கை அரை மில்லியன் அளவுக்கு ஏற்கனவே உயர்ந்திருப்பதற்கான சாத்தியம் உள்ளது. நிர்வாகிகள் தான் எனினும் 'மாண்புமிகுந்தவர்கள்', 'தலைவர்கள்' என ஆளும் சாதி (ruling caste) என்ற வார்த்தையின் முறையான பொருளுக்கு சொந்தக்காரர்கள் தம்முறைக்கு மிக முக்கியமான கிடைமட்ட எல்லைகளால் மேலிருந்து கீழாக பிரிக்கப்பட்டிருந்தாலும் இவர்கள் இதில் சேர்க்கப்படவில்லை.
இந்த அரை மில்லியன் உயர் தட்டினர் ஒரு அகன்ற மற்றும் பல பரிமாண அடித்தளம் கொண்ட ஒரு கனமான நிர்வாக கூம்புகோபுரத்தால் தாங்கப் பெற்றுள்ளனர். மாவட்ட, நகர மற்றும் பிராந்திய சோவியத்துகளின் நிறைவேற்றுக் குழுக்கள், இவற்றுடன் கட்சியின் இணை உறுப்புகள், தொழிற்சங்கங்கள், கம்யூனிஸ்ட் இளைஞர் அமைப்பினர், போக்குவரத்துத் துறையின் உள்ளூர் அங்கங்கள், இராணுவம் மற்றும் படையினரின் உத்தரவிடும் அதிகாரிகள் மற்றும் GPU இன் கனவான்கள் இவர்கள் எல்லோரையும் சேர்த்தால் இரண்டு மில்லியனை நெருக்கி வரலாம். இத்துடன் 600,000 நகரங்கள் மற்றும் கிராமங்களின் சோவியத்துகளின் தலைவர்களையும் நாம் மறந்து விடக் கூடாது!
தொழில்துறை நிறுவனங்களின் உடனடி நிர்வாகமானது 1933 ஆம் ஆண்டில் (இதற்கும் சமீபத்திய தரவு இல்லை) 17,000 இயக்குநர்கள் மற்றும் துணை இயக்குநர்களின் கரங்களில் குவிந்திருந்தது. கடைகள், தொழிற்சாலைகள் மற்றும் சுரங்கங்கள் இவற்றில் வேலைமேற்பார்வையாளர் (ஃபோர்மன்) உள்ளிட கீழ் வருகின்ற அனைவரையும் சேர்த்து மொத்த நிர்வாக மற்றும் தொழில்நுட்ப ஆட்கள் சுமார் 250,000 பேர் இருந்தனர் (இவர்களில் 54,000 பேர் நிர்வாக செயல்பாடுகள் என்பதன் உண்மையான அர்த்தத்தின் கீழ் வராத தொழில்வல்லுநர்களாய் இருந்தனர் என்றபோதும்). இதனுடன், நிர்வாகமானது 'முக்கோண' வடிவில் செயல்படுவது நன்கு அறியப்பட்டதான தொழிற்சாலைகளில் கட்சி மற்றும் தொழிற்சங்க எந்திரத்தையும் நாம் சேர்த்துக் கொள்ள வேண்டும். அனைத்து-சங்க முக்கியத்துவம் பெற்ற தொழில் நிறுவனங்களின் நிர்வாகத்திற்கென அரை மில்லியன் பேர் என்று கணக்கிலெடுத்தால் அது இப்போதைய காலத்திற்கு மிகைப்பட்டதாய் இருக்க முடியாது. இவற்றுடன், தனியான குடியரசுகள் மற்றும் உள்ளூர் சோவியத்துகளின் நிறுவனங்களது நிர்வாக ஆட்களையும் நாம் கணக்கில் சேர்த்துக் கொள்ள வேண்டும்.
மற்றுமொரு மதிப்பீட்டில், 1933 ஆம் ஆண்டின் உத்தியோகபூர்வ புள்ளிவிவரம் சுட்டிக்காட்டுவதன்படியே, மொத்த சோவியத் பொருளாதாரத்திலும் 860,000 க்கும் — தொழில்துறையில் சுமார் 480,000 பேர், போக்குவரத்து துறையில் சுமார் 100,000 பேர், விவசாயத் துறையில் சுமார் 93,000 பேர், வர்த்தகத் துறையில் சுமார் 25,000 பேர்— அதிகமான நிர்வாகிகளும் தொழில்வல்லுநர்களும் இருக்கிறார்கள். இந்த எண்ணிக்கையில் நிச்சயமாக நிர்வாக அதிகாரமற்ற தொழில்வல்லுநர்கள் சேர்க்கப்பட்டிருக்கின்றனர், ஆனால் மற்றொரு பக்கத்தில் கூட்டுற்பத்தி பண்ணைகளும் கூட்டுறவு அமைப்புகளும் சேர்க்கப்படவில்லை. இந்தத் தரவும் கூட கடந்த இரண்டரை வருட காலங்களில் மிகவும் வெகு தூரம் தாண்டிச் செல்லப்பட்டு விட்டிருக்கிறது.
250,000 கூட்டுற்பத்தி பண்ணைகளுக்கு, தலைவர்களையும் கட்சி ஒருங்கிணைப்பாளர்களையும் மட்டும் கணக்கிலெடுத்தாலே, அரை மில்லியன் நிர்வாகிகள் இருப்பார்கள். உண்மை நிலவரப்படி, இந்த எண்ணிக்கை அளவிடமுடியாத அளவிற்கு இன்னும் அதிகமானதாக இருக்கிறது. சோவியத் பண்ணைகள் மற்றும் டிராக்டர் மற்றும் எந்திர நிலையங்களையும் நீங்கள் சேர்த்துக் கொண்டால், சமூகமயமாக்கப்பட்ட விவசாயத்தின் தளபதிகளின் பொதுவான எண்ணிக்கையே ஒரு மில்லியனை தாண்டி வெகுதூரம் நீள்கின்ற எண்ணிக்கையிலானதாக இருக்கிறது.
1935 ஆம் ஆண்டில் அரசு 113,000 வர்த்தக பிரிவுகளையும், 200,000 கூட்டுறவு மையங்களையும் கொண்டிருந்தது. இரண்டின் தலைவர்களுமே அடிப்படையில் வர்த்தகரீதியான அலுவலர்கள் அல்ல, மாறாக அரசின் நிர்வாகிகள், தவிர ஏகபோகவாதிகள். 'கூட்டுறவு அமைப்பு நிர்வாகிகள் அதன் உறுப்பினர்களை தங்களை தேர்ந்தெடுப்பவர்களாகக் கருதி மதிப்பது நின்று விட்டிருக்கிறது' என்று சோவியத் ஊடகங்களும் கூட அவ்வப்போது புகார் தெரிவிப்பது வழக்கமாயிருக்கிறது — ஏதோ கூட்டுறவு சங்கங்கள் மட்டும் தொழிற்சங்கங்கள், சோவியத்துகள் மற்றும் கட்சியினுடையதிலும் இருந்தும் கூட பண்புரீதியாக தனித்துக் காட்டக் கூடியதொரு பொறிமுறையைப் பெற்றிருப்பதைப் போல! உற்பத்தி உழைப்பில் நேரடியாக ஈடுபடாமல், ஆனால் நிர்வாகம் செய்கின்ற, உத்தரவிடுகின்ற, கட்டளையிடுகின்ற, மன்னிக்கின்ற மற்றும் தண்டிக்கின்ற அதிகாரம் பெற்றிருக்கும் இந்த மொத்த அடுக்கு —ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களை விட்டு விடுகிறோம்— ஐந்து அல்லது ஆறு மில்லியன் என்ற எண்ணிக்கையை எட்டும். இந்த மொத்த எண்ணிக்கையும், அதில் அடங்கியுள்ள தனித்தனி எண்ணிக்கைகளைப் போலவே, எந்த விதத்திலும் துல்லியமானதாக பாவனை செய்யக் கூடியதல்ல, ஆனால் ஒரு முதல் நிலை அண்ணளவான மதிப்பிற்கு மிகவும் போதுமானவை. தலைமையின் 'பொதுவான நிலைப்பாடு' ஒரு தலையற்ற முண்டம் அல்ல என்பதில் நம்மை உறுதிப்படுத்துவதற்கு இது போதுமானது.
கீழிருந்து மேலாக, இந்த ஆளும் கட்டமைப்பின் பல்வேறு கட்டமைப்புகளில் அல்லது அடுக்குகளில், கம்யூனிஸ்டுகளின் பகுதி இருபது முதல் தொண்ணூறு சதவீதம் வரை உள்ளடங்கியுள்ளது. அதிகாரத்துவத்தின் மொத்தத் தொகையில், கம்யூனிஸ்டுகள் மற்றும் கம்யூனிஸ்ட் இளைஞர் அமைப்பினர் சேர்ந்து தற்போது 1.5 முதல் 2 மில்லியன் பேராக இருக்கின்றனர், தொடர்ச்சியான களையெடுப்புகளால் இந்த எண்ணிக்கை குறைவாயிருக்கிறதே அன்றி கூடுதலானதில்லை. இதுதான் அரசு அதிகாரத்தின் முதுகெலும்பாய் இருக்கிறது. இதே கம்யூனிஸ்ட் நிர்வாகிகள் தான் கட்சி மற்றும் கம்யூனிஸ்ட் இளைஞர் அமைப்பின் முதுகெலும்பாகவும் இருக்கிறார்கள். முன்னாள் போல்ஷிவிக் கட்சி, இப்போது பாட்டாளி வர்க்கத்தின் முன்னணிப் படையாக இல்லை, மாறாக அதிகாரத்துவத்தின் அரசியல் அமைப்பாக இருக்கிறது. கட்சி மற்றும் கம்யூனிஸ்ட் இளைஞர் அமைப்பின் எஞ்சிய உறுப்பினர்களது பாரிய தொகையும் இந்த “செயலூக்கமானவர்களை” உருவாக்குவதற்கான ஆதாரவளமாக, அதாவது அதிகாரத்துவத்தை இட்டுநிரப்புவதற்கான கையிருப்பாக மட்டுமே சேவை செய்கிறது. கட்சிசாராத 'செயலூக்கமானவையும்' இதே நோக்கத்திற்கே சேவைசெய்கிறது.
அனுமானமாக, தொழிலாளர் மற்றும் கூட்டுப்பண்ணைமயமாக்கப்பட்ட விவசாய பிரபுத்துவத்தினர், ஸ்டக்ஹானோவ்வாதிகள், கட்சிசாராத 'செயலூக்க'மானோர், நம்பகமான நபர்கள், அவர்களின் உறவினர்கள் மற்றும் உறவினர் குடும்பத்தார், இவர்கள் எல்லோருமாய் சேர்ந்து நாம் அதிகாரத்துவத்துக்கு எடுத்துக் கொண்ட அதே எண்ணிக்கையை, அதாவது ஐந்து முதல் ஆறு மில்லியனை தொடுவதாகக் கொள்ளலாம். ஒன்றுடன் ஒன்று பின்னிப்பிணைந்த இந்த இரண்டு அடுக்குகளும் அவர்களது குடும்பங்களுமாய் சேர்ந்து ஏறக்குறைய இருபது முதல் இருபத்தி-ஐந்து மில்லியன் அளவை எட்டுகின்றனர். குடும்பத்தினரின் எண்ணிக்கையை ஓரளவுக்கு மிகக் குறைவானதாகவே நாம் கணக்கில் எடுத்துக்கொள்கிறோம், ஏனென்றால் பெரும்பாலும் கணவன் மற்றும் மனைவி, மற்றும் சிலசமயங்களில் மகனும் மகளும் கூட, எந்திரத்தில் ஒரு இடத்தைப் பெற்றிருக்கிறார்கள். மேலும், ஆளும் குழுவைச் சேர்ந்த மனைவிமார்களுக்கு குடும்ப அளவைச் சிறிதாக்கி வைத்திருப்பது, உழைக்கும் பெண்களை விடவும், எல்லோருக்கும் மேலாய் விவசாய பெண்களை விடவும் மிக எளிதானதாக இருக்கிறது. கருக்கலைப்புக்கு எதிரான இப்போதைய பிரச்சாரம் அதிகாரத்துவத்தால் முன்னெடுக்கப்பட்டது என்றாலும் அது அதற்குப் பொருந்துவதில்லை. மக்கள்தொகையின் பன்னிரண்டு சதவீதம், அல்லது மிஞ்சிப் போனால் பதினைந்து சதவீதம் — இதுதான் எதேச்சாதிகார ஆளும் வட்டாரங்களுக்கான திட்டவட்டமான சமூக அடிப்படையாக இருக்கிறது.
ஒரு தனி அறையும், போதுமான உணவும், சுத்தமான ஆடைகளும் இன்னமும் கூட ஒரு சிறுபான்மை எண்ணிக்கையினருக்கே அணுகத்தக்கதாய் இருக்கும் நிலையில், பெரிதும் சிறிதுமான மில்லியன் கணக்கான அதிகாரத்துவத்தினர், பிரதானமாக தங்கள் சொந்த நலன்களைப் பாதுகாப்பதற்கே தங்கள் அதிகாரத்தைப் பயன்படுத்த முயலுகின்றனர். அதிலிருந்து தான், இந்த அடுக்கின் பிரம்மாண்டமான தன்முனைப்புவாதம், அதன் உறுதியான உள்முக ஒற்றுமை, வெகுஜன அதிருப்தி குறித்த அதன் அச்சம், விமர்சனம் அனைத்தையும் கழுத்து நெரிப்பதின் மீதான அதன் தீவிர வலியுறுத்தல், மற்றும் இந்த புதிய பிரபுக்களின் அதிகாரத்திற்கும் சலுகைகளுக்கும் உருவடிவம் கொடுத்து அதனைப் பாதுகாக்கும் 'தலைவருக்கு' முன்பாக பயபக்தியுடன் பணிவதான கபடநாடகம் இவை அனைத்தும் உண்டாகின்றன.
அதிகாரத்துவமும் கூட, பாட்டாளி வர்க்கம் அல்லது விவசாயிகளை விடவும் ஒரேபடித்தான நிலை குறைந்ததாய் இருக்கிறது. கிராம சோவியத்தின் தலைவருக்கும் கிரெம்ளினின் அதிகாரிக்கும் இடையில் ஒரு பெரும் பிளவு இருக்கிறது. பல்வேறு பிரிவுகளில் கீழ்நிலை நிர்வாகிகளின் வாழ்க்கையானது அடிப்படையில் ஆரம்ப நிலையினதாக, மேற்கின் திறன்படைத்த தொழிலாளியின் வாழ்க்கைத் தரத்திற்கு கீழ் அமைந்ததாய் செல்கிறது. ஆயினும் எல்லாமே ஒப்புமைரீதியானதே, சுற்றியிருக்கும் மக்களின் வாழ்க்கை மட்டம் அதனினும் கணிசமான அளவுக்கு கீழே இருந்தது. கூட்டுற்பத்தி பண்ணையின் தலைவர், கட்சி ஒருங்கிணைப்பாளர், கீழ்நிலை கூட்டுறவாளர், அதேபோல் மிக உயர்ந்த பதவிகளில் இருக்கும் அதிகாரிகள் ஆகியோரின் தலைவிதி சற்றும் அவர்களை தேர்ந்தெடுப்பவர்கள் என கூறப்படுபவர்களை சார்ந்ததாக இருக்கவில்லை. ஏதேனும் அதிருப்தி உண்டானால் அதனைத் தணிக்கும் பொருட்டு, இந்த நிர்வாகிகளில் எவர் ஒருவரும் அவரது உடனடி உயரதிகாரிகளால் எந்த கணமும் நீக்கப்பட முடியும். ஆயினும், இவர்களில் ஒவ்வொருவரும் சில சந்தர்ப்பங்களில் தன்னை ஒரு படி உயர்த்திக் கொள்ளவும் முடியும். அவர்கள் அனைவருமே, குறைந்தபட்சம் தங்கள் முதல் தீவிர அதிர்ச்சியை சந்திக்கும் வரையேனும், கிரெம்ளினுடனான பரஸ்பர பாதுகாப்பு உத்தரவாதங்களால் கட்டப்பட்டு இருக்கின்றனர்.
தனது வாழ்க்கை நிலைமைகளைப் பொறுத்தவரை, ஆளும் தட்டு, குக்கிராமப் பகுதிகளின் குட்டி முதலாளித்துவத்தினரில் இருந்து தலைநகரங்களின் பெரும் முதலாளிகள் வரை அத்தனை தரங்களையும் கொண்டதாய் இருக்கிறது. இந்த பொருளாதார நிலைமைகளுக்கேற்றவாறு பழக்கவழக்கங்கள், ஆர்வங்கள், மற்றும் சிந்தனை வட்டங்கள் அமைகின்றன. சோவியத் தொழிற்சங்கங்களின் இப்போதைய தலைவர்கள் அவர்களது உளவியல் வகையில் சிட்ரின்கள், ஜோஹாக்ஸ்கள் மற்றும் பசுமைக் கட்சியினரிடம் இருந்து (Citrines, Jouhauxes and Greens) அதிகம் வேறுபட்டவர்களாக இல்லை. வேறு பாரம்பரியங்கள், வேறு வார்த்தைவகைகள், ஆனால் வெகுஜனங்களுடன் வேண்டாவெறுப்புடன் அரவணைக்கின்ற அதே உறவு, இரண்டாந்தர சூழ்ச்சிகளில் அதே மனச்சாட்சியற்ற வஞ்சகம், அதே பழமைவாத எண்ணங்கள், அதே தொலைநோக்கற்ற குறுகிய மனப்பான்மை, தங்களின் சொந்த நிம்மதிக்கான அதே கடுமையான கவலை, அத்துடன் இறுதியாக முதலாளித்துவ நாகரிகத்தின் மிக அற்பமான வடிவங்களுக்கு அதே வழிபாடு. சோவியத்தின் படைத்தலைவர்கள் மற்றும் தளபதிகளில் பெரும்பான்மையினர் புவியின் வேறு எந்த பகுதியின் படைத்தலைவர்கள் மற்றும் தளபதிகளில் இருந்து வேறுபட்டவர்களாக இருக்கவில்லை, எப்பாடுபட்டாயினும் அவர்களைப் போன்றே இருப்பதற்கு தங்களால் இயன்ற அனைத்தையும் செய்கிறார்கள். சோவியத் தூதரக அதிகாரிகள் எல்லாம் மேற்கத்திய தூதரக அதிகாரிகளிடம் இருந்து வெறும் ஆடைநாகரிகத்தை மட்டும் எடுத்துக் கொள்ளவில்லை, மாறாக அவர்களின் சிந்தனை முறைகளையும் எடுத்துக் கொண்டுவிட்டிருக்கிறார்கள். வாசகர்களை முட்டாள்களாக்குவதில், சோவியத் பத்திரிகையாளர்கள் அதனை செய்யும் விதத்தில் அவர்கள் ஒரு தனித்துவத்தை வெளிப்படுத்துகின்ற போதிலும், தங்களின் பிறநாட்டு சகாக்களுக்கு சற்றும் சளைத்தவர்களாயில்லை.
அதிகாரத்துவத்தினர் எண்ணிக்கையை அளவிடுவது கடினம் என்றால், அவர்களது வருமானத்தை கணக்கிடுவது அதை விடக் கடினம். 'பருத்து, சலுகைகளுடன் இருக்கும் நிர்வாக எந்திரமானது உபரி மதிப்பின் மிகக் கணிசமானதொரு பாகத்தை விழுங்கிக் கொண்டிருக்கிறது' என்று இடது எதிர்ப்பாளர்கள் 1927 ஆம் ஆண்டு அளவிலேயே எதிர்ப்பு தெரிவித்தார்கள். வர்த்தக எந்திரம் மட்டுமே ”தேசிய வருவாயின் பெரும் பங்கினை — மொத்த உற்பத்தியில் பத்தில் ஒரு பங்குக்கும் அதிகமாக விழுங்குகிறது' என்று எதிர்ப்பாளர்கள் தரப்பில் மதிப்பிடப்பட்டது. அதற்குப் பின்னர் அத்தகைய மதிப்பீடுகளை சாத்தியமற்றதாக ஆக்குவதற்கு அவசியமான நடவடிக்கைகளை அதிகாரிகள் எடுத்தார்கள். ஆனால் அந்தக் காரணத்தினாலேயே இதரசெலவினங்கள் குறைக்கப்பட்டிருக்கவில்லை, மாறாக வளர்ச்சி கண்டிருக்கின்றன.
மற்ற வட்டங்களிலும் வர்த்தக வட்டத்தை விட மேம்பட்ட சூழ்நிலை ஏதுமில்லை. ரகோவ்ஸ்கி 1930 ஆம் ஆண்டில் எழுதியதைப் போல, தொழிற்சங்கங்களுக்கான நிதி ஒதுக்கீடான 400,000,000 ரூபிள்களில் 80,000,000 ரூபிள்கள் அதன் ஆட்களின் பராமரிப்பிற்கே செலவிடப்படுகிறது என்பதை கட்சிக்கும் தொழிற்சங்க அதிகாரத்துவவாதிகளுக்கும் இடையில் தொடர்ந்த சண்டைகளுக்கு பின்னர், ஊடகங்களில் இருந்து மக்கள் அறிந்து கொள்ள முடிந்தது. இது வெறும் சட்டபூர்வமான நிதிஒதுக்கீட்டில் மட்டும் தான் என்பதையும் நாம் இங்கே சொல்லி விடுகிறோம். இதற்கு மேலதிகமாய், தொழிற்சங்கங்களின் அதிகாரத்துவம் தொழில்துறை அதிகாரத்துவத்திடம் இருந்து நட்பின் அடையாளமாக கொழுத்த பரிசுகளை பணம், வீடுகள், போக்குவரத்து வசதிகள், மற்றும் இன்ன பிற வடிவில் பெற்றுக் கொள்கிறது. 'கட்சி, கூட்டுறவுக் கடைகள், கூட்டுற்பத்தி பண்ணைகள், சோவியத் பண்ணை, தொழில்துறை மற்றும் நிர்வாக எந்திரம் மற்றும் இவையனைத்தின் கிளைகளுக்கு ஆதரவளிப்பதற்கு எவ்வளவு செல்கிறது' என்று வினவினார் ரகோவ்ஸ்கி. அவரே பதிலளித்தார்: 'இது குறித்த அனுமானமான தகவல் கூட நம்மிடம் இல்லை'.
கட்டுப்பாடுகளில் இருந்தான விடுதலை தவிர்க்கவியலாமல், பணம் கையாடல் செய்வது உள்ளிட்ட அதிகார துஷ்பிரயோகங்களுக்கு வழிவகுக்கிறது. செப்டம்பர் 29, 1935 இல், கூட்டுறவு அமைப்புகளின் மோசமான செயல்திறன் குறித்த கேள்வியை எழுப்பும் நிர்ப்பந்தத்திற்கு ஆளான அரசாங்கம், 'கிராமிய நுகர்வோர் சங்கங்கள் பலவற்றின் வேலையில் ஏராளமான கொள்ளை, வீண் செலவினங்கள் மற்றும் இழப்புகள் இருக்கிறது' என்பதை —இது முதன்முறையாக அல்ல— மோலோடோவ் மற்றும் ஸ்ராலினின் கையொப்பங்களின் ஊடாக ஸ்தாபித்தது. 1936 ஜனவரியில் மத்திய நிறைவேற்றுக் குழு அமர்வு ஒன்றில், நிதித்துறை மக்கள் ஆணையர், அரசு நிதிகள் முழுக்கவும் தன்னிஷ்டம் போன்ற விதத்தில் செலவிடப்படுவதற்கு உள்ளுர் நிறைவேற்றுக் குழுக்கள் அனுமதிப்பதாக புகார் கூறினார். மத்திய அமைப்புகள் குறித்து ஆணையர் வாய் திறக்கவில்லை என்றால், அவரே அந்த வட்டத்தைச் சேர்ந்தவராக இருந்தார் என்ற ஒரே காரணம் மட்டுமே அதற்கு இருந்தது.
தேசிய வருவாயில் அதிகாரத்துவம் பறித்துக் கொள்ளும் பங்கு எவ்வளவு என்பதை மதிப்பீடு செய்ய எந்த சாத்தியமும் இல்லை. அது தனது சட்டபூர்வமான வருமானங்களைக் கூட கவனமாக மறைத்து விடுகிறது என்பது மட்டும் இதன் காரணமன்று. கையாடலின் எல்லையானது, பல சமயங்களில் அதனைத் தாண்டியும் கூட சென்று விடுகின்ற நிலையில், அது முன்னெதிர்பார்த்திராத வருமானங்களைப் பரவலாய் பயன்படுத்திக் கொள்கிறது என்பது மட்டும் இதன் காரணமன்று. சமூக நலவாழ்வு, நகராட்சி பயன்பாடுகள், வசதி, கலாச்சாரம், கலை ஆகியவற்றிலான மொத்த முன்னேற்றமும் இந்த சலுகையெடுத்துக் கொள்ளும் மேல் அடுக்கினருக்கு தான், பிரத்தியேகமாக என்று ஒருவேளை சொல்ல முடியாவிடின், பிரதானமாக சேவை செய்கிறது என்பதே இதற்குத் தலையாய காரணமாகும்.
ஒரு நுகர்வோராக அதிகாரத்துவத்தைக் குறித்து கூறுவதாயின், முதலாளித்துவ வர்க்கம் குறித்து நாம் கூறக் கூடியவற்றை, அவசியமான மாற்றங்களுடன், நாம் திருப்பிக் கூறலாம். தனிநபர் நுகர்வு பொருட்கள் மீது அது கொண்டிருக்கும் வேட்கையை மிகைப்படுத்துவதற்கு நமக்கு எந்தக் காரணமோ எண்ணமோ கிடையாது. ஆனால், நாகரிகத்தின் பழைய மற்றும் புதிய வெற்றிகளை ஏறக்குறைய முழு ஏகபோகத்துடன் அது அனுபவிப்பதை கருத்தில் கொண்டு பார்க்கும்போது நிலைமை கூரிய மாற்றமடைந்து விடுகிறது. உத்தியோகபூர்வமாய், இந்த நல்ல விடயங்கள் எல்லாம் ஒட்டுமொத்த மக்களுக்கும், அல்லது குறைந்தபட்சம் நகரங்களின் மக்களுக்கேனும் கிடைக்கத்தக்கதாய் தான் காட்சியளிக்கிறது. ஆனால் யதார்த்தத்தில் இவை விதிவிலக்கான சந்தர்ப்பங்களில் மட்டுமே அணுகத்தக்கதாய் இருக்கின்றன. இதற்கு மாறாக அதிகாரத்துவமோ, ஒரு நியதியைப் போன்று, இதனை தனது சொந்த சொத்துப்போல, தான் விரும்பும் போதெல்லாம் தான் விரும்பும் அளவுக்கு பெற முடிகிறது. சம்பளங்கள், அனைத்துவகை சேவைகள், மற்றும் பாதி சட்டபூர்வமானதாக இருக்கும் துணை வருமானங்களின் அனைத்து வகைகள் ஆகியவற்றை கணக்கிடுவதுடன் நிறுத்திக் கொள்ளாமல், திரையரங்குகள், ஓய்வு மாளிகைகள், மருத்துவமனைகள், தனிச்சிகிச்சை மையங்கள், கோடை வாசஸ்தலங்கள், அருங்காட்சியகங்கள், களிப்பாட்ட நிலையங்கள், விளையாட்டு அமைப்புகள், மற்றும் இன்ன பிறவற்றில் அதிகாரத்துவம் மற்றும் சோவியத் கனவான்களின் பங்கினையும் கூட்டிப் பார்த்தால், மக்கள்தொகையில் இந்த பதினைந்து சதவீதம் பேர், அல்லது இருபது சதவீதம் கூட வைத்துக் கொள்ளலாம், எஞ்சியிருக்கும் எண்பது முதல் எண்பத்தி ஐந்து சதவீதம் பேர் அனுபவிப்பதற்கு சளைக்காத அளவிலான செல்வத்தை அனுபவிக்கிறார்கள் என்ற முடிவுக்கு வந்துசேர்வதே அநேக அவசியமாக இருக்கும்.
'நண்பர்கள்' நமது புள்ளிவிவரங்களை மறுக்க விரும்புவார்களா? அவர்கள் நமக்கு இன்னும் துல்லியமான புள்ளிவிவரங்களைத் தரட்டும். சோவியத் சமூகத்தின் வரவு-செலவுக் கணக்கை வெளியிடுவதற்கு அதிகாரத்துவத்தை அவர்கள் ஊக்கப்படுத்தட்டும். அது நடக்கின்ற வரையில், யாம் எமது கருத்திலேயே உறுதியாக நிற்போம். சோவியத் ஒன்றியத்தில் நிலப்பங்கீடானது, ஜாரிச ரஷ்யாவில் இருந்ததை விடவும், இன்னும் மேற்கின் உயர்ந்த ஜனநாயக நாடுகளில் இருப்பதை விடவும், ஒப்பிடமுடியாத அளவு கூடுதல் ஜனநாயகத்தன்மை வாய்ந்ததாய் இருக்கிறது என்பதில் எங்களுக்கு சந்தேகமில்லை. ஆனாலும் இப்போது வரையில் அது சோசலிசத்துடன் மிகக்குறைந்த சம்பந்தமே கொண்டிருக்கிறது.