அரசியல் படைப்புக்களில், ட்ரொட்ஸ்கி எழுதிய காட்டிக் கொடுக்கப்பட்ட புரட்சி புத்தகத்தைப் போன்று காலத்திற்கு தாக்குப் பிடித்து நின்றிருக்கக் கூடிய படைப்புகள் வெகு சிலவே. அது முதலில் வெளியிடப்பட்டு 50 ஆண்டுகளுக்கு அதிகமாகியும், சோவியத் ஒன்றியம் குறித்த அதன் பகுப்பாய்வு இன்னமும் விஞ்சப்படாத ஒன்றாகவே உள்ளது. சோவியத் சமூகத்தின் கட்டமைப்பையும் இயக்கவியலையும் (dynamics) புரிந்து கொள்வதில் கடந்த சில தசாப்தங்களாக பொதுமக்கள் மீது முதலாளித்துவ “சோவியத்தியல்'' சுமத்தியிருக்கும் எண்ணிலடங்கா ஆயிரக்கணக்கான எழுத்துத் தொகுதிகளை முறையாகத் திறனாய்வு செய்வதை விட ஒருமுறை காட்டிக் கொடுக்கப்பட்ட புரட்சியை படிப்பது கூடுதலான அறிவை வழங்கும். மார்க்சிச பகுப்பாய்வில் ட்ரொட்ஸ்கியின் உச்சமான படைப்பின் விஞ்ஞானபூர்வ மதிப்பையும் ஏராளமான உதவித்தொகை பெறும் கல்வியாளர்கள் மற்றும் பரிசுவெல்லும் செய்தியாளர்களின் இணக்கவாத சாதாரண படைப்புகளை ஒப்பிட்டுப் பார்ப்பதற்கான புறநிலையான வழியை கடந்த ஐந்து ஆண்டுகளின் நிகழ்வுகள் வழங்குகின்றன. கோர்பச்சேவ் அதிகாரத்தைப் பிடித்த நிலையிலும் கூட, சோவியத் அரசாங்கம் மத்திய திட்டமிடல் கோட்பாட்டை நிராகரிக்கும் என்பதை, உற்பத்தி சாதனங்கள் தனியார் சொத்தாக இருப்பதன் மீதான அனைத்து கட்டுப்பாடுகளையும் விலக்கிக் கொள்ளும் என்பதை, சந்தையை நாகரிகத்தின் உச்சமான சாதனையாக பிரகடனப்படுத்தும் என்பதை, அத்துடன் உலக முதலாளித்துவத்தின் பொருளாதார மற்றும் அரசியல் கட்டமைப்புக்குள்ளாக சோவியத் சோசலிச குடியரசுகளின் ஒன்றியத்தை முழுமையாக இணைக்க முனையும் என்பதை இவர்களில் யார் கணித்திருந்தார்கள்?
ஆனால் 1936 ஆம் ஆண்டிலேயே அரசியல் ரீதியாக நாடுகடத்தப்பட்டு நோர்வேயில் (சமூக ஜனநாயகக் கட்சி அரசாங்கத்தின் உத்தரவுகளின் கீழ் அங்கிருந்தும் அவர் வெளியேற்றப்படவிருந்தார்) அவர் தனிமைப்படுத்தப்பட்டிருந்த நிலையில் எழுதியபோது, ஸ்ராலினிச ஆட்சியின் கொள்கைகளானவை சோவியத் ஒன்றியத்தில் சோசலிசத்தின் வெற்றியை உறுதி செய்திருப்பதற்கெல்லாம் வெகு விலகி, உண்மையில் முதலாளித்துவத்தின் மீட்சிக்குத்தான் அடித்தளத்தை தயாரித்துக் கொண்டிருக்கின்றது என்று லியோன் ட்ரொட்ஸ்கி எச்சரித்தார். 1985 இல் பெரெஸ்த்ரோய்கா (புனர்நிர்மாணம்) தொடங்கப்பட்டதில் இருந்தான நிகழ்வுகளின் பாதை, 1917 அக்டோபர் புரட்சியின் அடிப்படையில் உருவாக்கப்பட்ட தேசியமயமாக்கப்பட்ட சொத்து வடிவங்கள் அழிக்கப்படுவது எந்த முறையில் நடக்கக்கூடும் என்பதற்கான நிகழ்ச்சிப்போக்கு குறித்து ட்ரொட்ஸ்கியின் அனுமான எடுத்துக்காட்டை மலைக்கவைக்கும் மட்டத்திற்கு உறுதி செய்திருக்கிறது என்பதை முரண்பாடான அச்சமுமின்றி இப்போது சொல்ல முடியும்.
காட்டிக் கொடுக்கப்பட்ட புரட்சி ஒரு மேதாவியின் படைப்பு என்று கூறுவது மட்டும் அல்ல விடயம். இந்நூலின் ஆசிரியர் செலுத்தியிருக்கும் பகுப்பாய்வு வழிமுறை தான் சோவியத் ஒன்றியத்தைப் பற்றி எழுதப்பட்டிருக்கும் மற்ற அனைத்து நூல்களில் இருந்தும் இதனைத் தனித்துவப்படுத்திக் காட்டுகிறது. மனித சிந்தனையின் அபிவிருத்திக்கு மார்க்சிசத்தின் அழிக்கமுடியாத பங்களிப்பாக திகழ்ந்த, திகழ்கின்ற சடவாத இயங்கியலின் மாபெரும் திறமையாளர்களில் ஒருவராய் ட்ரொட்ஸ்கி திகழ்ந்தார். உலக வரலாற்றில் முதல் சோசலிசப் புரட்சியின் விளைபொருளாக இருந்த ஒரு அரசின் பரிணாமத்தின் கீழமைந்திருந்த உள்முக முரண்பாடுகளை வெளிக்கொணர்வது தான் காட்டிக் கொடுக்கப்பட்ட புரட்சியின் நோக்கமாய் இருந்தது. முதலாளித்துவ அறிஞர்களும் செய்தியாளர்களும் சோவியத் ஒன்றியத்தை ஒரு “சோசலிச அரசு” என வரையறை செய்வதென்பது பொதுவாக அவர்களது படைப்புகளுக்கு அனுமானித்துக் கொள்ளப்பட்ட ஒன்றாகவும் கேள்விக்குட்படாத முதற்கோளாகவும் அமைந்திருந்தது. ஆனால் சோவியத்தின் யதார்த்தத்திற்கு “சோசலிச” என்னும் அடைமொழியை விஞ்ஞானபூர்வமற்ற வகையில் பயன்படுத்துவதை ட்ரொட்ஸ்கி நிராகரித்தார். இந்த வார்த்தையை விமர்சனமற்ற வகையில் பயன்படுத்துவது, யதார்த்தத்தை வெளிச்சம் போட்டு காட்டுவதற்குப் பதிலாக அதனை மறைப்பதற்கே சேவை செய்ததாய் அவர் கண்டித்தார். பின்தங்கிய ரஷ்யாவை, ஒரு சோசலிச சமூகமாக உருமாற்றுவதற்கான ஆரம்பகட்ட அரசியல் அடித்தளங்களை மட்டுமே அக்டோபர் புரட்சி இட்டிருந்தது என்பதை அவர் வலியுறுத்தினார். இந்த அடித்தளங்களில் இருந்து சோசலிசம் இறுதியாக எழுந்ததா இல்லையா என்பதும், எவ்வளவு கால இடைவெளிக்குள்ளாக என்பதும், தேசிய மற்றும் சர்வதேசியக் காரணிகளின் ஒரு சிக்கலான பரஸ்பர இடைத்தொடர்புகளில் தங்கியிருந்தது. எது எப்படி இருந்தபோதிலும், ஸ்ராலினிச ஆட்சியின் தற்பெருமைகளுக்கு நேரெதிரான வகையில், சோசலிசம் என்பது, மார்க்சிச அகராதியில் பாரம்பரியமாக இந்த வார்த்தை வரையறுக்கப்பட்டு வந்திருக்கும் வழியில், சோவியத் ஒன்றியத்தில் நிலவவே இல்லை என்பதை ட்ரொட்ஸ்கி பேணிவந்தார்.
ஆனால் சோவியத் ஒன்றியம் சோசலிச அரசாக இல்லையென்றால், அதனை முதலாளித்துவ அரசு என வரையறுக்க முடியுமா? ட்ரொட்ஸ்கி இந்த பிரயோகத்தையும் நிராகரித்தார், ஏனெனில் அக்டோபர் புரட்சி சந்தேகத்திற்கிடமின்றி உற்பத்தி சாதனங்களில் தனியார் சொத்துடமையை இல்லாதொழிப்பதற்கு இட்டுச் சென்றதோடு, சொத்துக்களை தொழிலாளர் அரசின் கைகளில் சேர்த்தது. எனவே தான் சோவியத் ஒன்றியத்தை வரையறை செய்வதில் முதலாளித்துவம் மற்றும் சோசலிசம் போன்ற முழுதான, நிலையான வரையறைகளைப் பயன்படுத்துவதை ட்ரொட்ஸ்கி வேண்டுமென்றே தவிர்த்தார். அதற்குப் பதிலாக, தனது இயக்கவியல் அம்சங்களை (Dynamic features) மறுஉற்பத்தி செய்த அத்துடன் அவற்றின் சாத்தியமான மேலதிக அபிவிருத்தி வடிவங்களை சுட்டிக்காட்டிய சோவியத் ஒன்றியம் என்னும் ஒரு கருத்தாக்கத்தை சூத்திரப்படுத்த அவர் முனைந்தார்.
சோவியத் ஒன்றியம் ஒரு ”இடைமருவல்நிலையிலுள்ள” சமூகம், அதன் தன்மையும் தலைவிதியும் வரலாற்றால் இன்னமும் தீர்மானிக்கப்பட்டிருக்கவில்லை என்ற முடிவுக்கு ட்ரொட்ஸ்கி வந்தார். ஸ்ராலினிச ஆட்சியைத் தூக்கியெறிந்து, சோவியத் ஜனநாயகத்தின் அடிப்படையில் அரசின் கட்டுப்பாட்டை மீட்டெடுப்பதில் தொழிலாள வர்க்கம் வெற்றிபெற்றால், சோவியத் ஒன்றியம் அப்போது சோசலிசத்தின் பாதையில் பரிணாமமுற முடியும். மாறாக, அதிகாரத்துவம் அதிகாரத்தை தக்கவைத்துக் கொள்ள முடிந்து, தனது சொந்த சிறப்புரிமையான நிலையின் நலன்களின் பொருட்டு, தேசியமயமாக்கப்பட்ட உற்பத்தி சக்திகளினதும் மற்றும் மத்திய திட்டமிடலினதும் ஆக்கபூர்வமான சாத்தியக்கூறுகளையும் தொடர்ச்சியாக நசுக்குமானால் அப்போது சோவியத் ஒன்றியம் முதலாளித்துவத்திற்குள் பேரழிவுகரமான முறையில் மறுபடியும் மூழ்குவதுடன் அழிக்கப்படுவதில் முடிவதும் சாத்தியமே என்றார்.
சோவியத் ஒன்றியத்தின் அபிவிருத்தி குறித்து, இரண்டு எதிரெதிர் மாறுபட்ட வகைகளை முன்வைத்த தனது “அனுமான வரையறை”, பொதுவான தர்க்கத்தின் கட்டளைகளால் வழிநடத்தப்படுவோரை நிச்சயம் திகைப்புக்குள்ளாக்கும் என்பதைக் குறித்து ட்ரொட்ஸ்கி அறிந்திருந்தார்.
“ஆம்-ஆம், மற்றும் இல்லை-இல்லை என்னும் வகையான திட்டவட்டமான சூத்திரங்களையே அவர்கள் விரும்புவர்” என்று அவர் குறிப்பிட்டார். ஆனால் ஒரு தர்க்கரீதியான முக்கூற்று முடிவு வாதமுறையின் (Syllogism) இறுக்கமான கட்டமைப்பினுள்ளே புரிந்து கொள்ள முடியாத முரண்பாடுகளை சமூக யதார்த்தம் கொண்டிருக்கிறது. “சமூக நிகழ்வுப்போக்குகள் எப்போதும் ஒரு நிறைவுற்ற தன்மையைக் கொண்டிருக்குமாயின் சமூகப் பிரச்சினைகள் நிச்சயமாக எளிதானதாகவே இருக்கும். எவ்வாறாயினும், வெறுமனே தர்க்கரீதியான நிறைவு கருதி இன்று உங்களின் திட்டங்களை மீறும், மற்றும் நாளை அதனை ஒட்டுமொத்தமாய் மாற்றக்கூடிய கூறுகளை யதார்த்தத்திற்கு வெளியே தூக்கியெறிவதைக் காட்டிலும் அபாயமானது வேறெதுவும் இல்லை. எமது பகுப்பாய்வில், எல்லாவற்றிற்கும் மேலாக, முன்னுதாரணமற்றதும் மற்றும் ஒப்பீடுகளும் இல்லாத ஒரு ஆற்றல்மிக்க சமூக உருவாக்கத்தில் வன்முறையை தவிர்த்திருக்கிறோம். ஒரு விஞ்ஞானபூர்வ பணியாகவும், அத்துடன் அரசியல் பணியாகவும் இருப்பது என்னவென்றால், ஒரு நிறைவுறாத நிகழ்ச்சிப்போக்கிற்கு ஒரு நிறைவுபெற்ற வரையறையைக் கொடுப்பதல்ல, மாறாக அதன் அனைத்து கட்டங்களையும் பின் தொடர்வதும், அதன் முற்போக்கான போக்குகளை பிற்போக்கான போக்குகளில் இருந்து பிரித்தறிவதும், அவற்றுக்கு இடையிலான பரஸ்பர உறவுகளை வெளிப்படுத்துவதும், அபிவிருத்தியின் சாத்தியமான வகைவடிவங்களை முன்கணிப்பதும், இந்த முன்கணிப்பில் நடவடிக்கைக்கான ஒரு அடிப்படையைக் காண்பதுமே ஆகும்”. (பக். 216-17)
காட்டிக் கொடுக்கப்பட்ட புரட்சி இல் வழங்கப்பட்ட ஆய்வினால் பெருமளவுக்கு தூண்டப்பட்டதாய் இருந்த ஒரு தத்துவார்த்த சர்ச்சையின் போது, ஜேம்ஸ் பேர்ன்ஹாம், சடவாத இயங்கியல் என்பது வரலாறு மற்றும் சமூக ஆய்வுகளுக்கான ஒரு விஞ்ஞானபூர்வ வழிமுறை அல்ல என்றும், மாறாக இது ட்ரொட்ஸ்கி ஆச்சரியமான உருவகங்களின் உருவாக்கத்திற்கு பயன்படுத்திய ஒரு இலக்கிய சாதனம் மட்டுமே என்றும் வாதிட்டார்.[1] இந்த விமர்சனத்தின் சாரமற்ற தன்மையை அம்பலப்படுத்த ட்ரொட்ஸ்கியின் பகுப்பாய்வின் கட்டமைப்பை தீவிரமாய் ஒருமுறை ஆய்வு செய்தாலே போதுமானது. இயங்கியல் தர்க்கம் என்பது திறமையான, ஆனால் முரண்பாடுகளால் பின்னப்பட்ட, புதிர்களை உருவாக்கத்தக்க திறன்படைத்தவர்களால் பயன்படுத்தப்படும் புத்திசாலித்தனமான விவாத வகை அல்ல; மாறாக அது அனைத்து இயற்கை மற்றும் சமூக நிகழ்வுபோக்குகளின் அடித்தளத்திலும் அமைந்திருக்கும் முரண்பாடுகளைப் பற்றி சிந்தனையின் தளத்தில் தோன்றும் பொதுமைப்படுத்தப்பட்ட வெளிப்பாடு ஆகும். சோவியத் சமூகத்தின் இயக்கத்தை தீர்மானிப்பதாக அமைந்த எதிரெதிரான அதேசமயத்தில் பரஸ்பர சார்புடைய பொருளாதார, சமூக மற்றும் அரசியல் போக்குகளை வெளிப்படுத்திக்காட்ட ட்ரொட்ஸ்கி முனைந்தார்.
அக்டோபர் புரட்சி என்பதே அனைத்து வரலாற்று முரண்பாடுகளினதும் உயர்ந்த விளைபொருளாகத் தான் இருந்தது. 1917ல் முதல் சோசலிசப் புரட்சியானது, மேற்கு ஐரோப்பா மற்றும் வட அமெரிக்காவின் பொருளாதாரரீதியாக முன்னேறிய நாடுகளில் ஒன்றில் ஆரம்பிக்கவில்லை, மாறாக அந்த காலகட்டத்தின் முக்கிய முதலாளித்துவ நாடுகளில் மிகவும் பின் தங்கியதாய் இருந்த ரஷ்யாவில் ஆரம்பித்தது. மலைப்பூட்டும் வகையில், பிப்ரவரி முதல் அக்டோபர் வரையான எட்டு மாத கால இடைவெளிக்குள்ளாக, ரஷ்ய வெகுஜனங்கள் ரோமனோவ் வம்சத்தின் நாடிதளர்ந்த நிலப்பிரபுத்துவ ஸ்தாபகங்களை தகர்த்தெறிந்து, உலகம் அதுவரை கண்டிருந்தவற்றில் மிகப் புரட்சிகரமான கட்சியின் தலைமையில், தொழிலாளர் சபைகளின் (சோவியத்துகள்) அடிப்படையில் ஒரு புதிய அரசு வடிவத்தை உருவாக்கினர்.
மார்க்சிசத்தின் தாராளவாத எதிர்ப்பாளர்களின் கூற்றுகளுக்கு நேரெதிராக, ஜாரிச ஆட்சிக்கு ஒரு சாத்தியமான அரசியல் மாற்றினை உருவாக்க முதலாளித்துவம் திறனற்றிருந்ததானது, போல்ஷிவிக்குகளின் தீய சூழ்ச்சிகளில் இருந்து எழுந்ததல்ல, மாறாக ரஷ்யாவில் வரலாற்றுரீதியாக முதலாளித்துவம் தாமதமாக அபிவிருத்தியுற்றதில் இருந்து எழுந்திருந்தது. இங்கிலாந்து மற்றும் பிரான்சின் “உன்னதமான” ஜனநாயகப் புரட்சிகளில் முதலாளித்துவம் நிலப்பிரபுத்துவத்திற்கு எதிரான மற்றும் தேசிய ஐக்கியத்திற்கான போராட்டத்தில் தனது அரசியல் மேலாதிக்கத்தை நிலைநாட்டியமை, பாட்டாளி வர்க்கம், இந்த வார்த்தையின் நவீன அர்த்தத்தில், இல்லாமலிருந்த அல்லது ஒரு தனித்துவமான சமூக வர்க்கமாக அது உருவாவதன் ஆரம்ப கட்டத்தில் மட்டுமே இருந்ததொரு நிலைமைகளின் கீழ் நிகழ்ந்தது. ஆயினும் ரஷ்யாவில், பத்தொன்பதாம் நூற்றாண்டின் இறுதி தசாப்தங்களில் தொழிற்துறை துரித வளர்ச்சியுற்றதால் உருவாக்கப்பட்ட பாட்டாளி வர்க்கத்தின் சமூக மற்றும் அரசியல் அபிவிருத்தியானது பூர்வீக முதலாளித்துவத்தை ஏற்கனவே விஞ்சி விட்டிருந்தது. பன்னிரண்டு வருடங்களுக்குப் பின் நடக்கவிருந்த அக்டோபர் புரட்சிக்கு மாபெரும் “இறுதி ஒத்திகை”யாய் அமைந்த 1905 புரட்சியானது வெகுஜனக் கிளர்ச்சி வேலைநிறுத்தங்களும் செயிண்ட் பீட்டர்ஸ்பேர்கில் ஒரு மாபெரும் சோவியத்தும் (அதன் தலைவராய் லியோன் ட்ரொட்ஸ்கி இருந்தார்) எழுந்ததைக் கண்டதோடு எதேச்சாதிகாரத்திற்கு எதிரான போராட்டத்தில் தொழிலாள வர்க்கத்தின் மேலாதிக்கமான பாத்திரத்தையும் உறுதிசெய்தது. 1905 எழுச்சிகளை ஒட்டி, ஜாரிச எதேச்சாதிகாரத்தை விடவும் மிக அபாயகரமான ஒரு எதிரிக்கு சோசலிச பாட்டாளி வர்க்கத்தின் வடிவத்தில், தாம் முகம்கொடுத்துக் கொண்டிருப்பதை ரஷ்ய முதலாளித்துவம் உணர்ந்தது. தொழிலாள வர்க்கத்தை அரசியல்ரீதியாக மேலாதிக்கம் செய்ய தன்னால் முடியாது என்பதை எந்த அளவுக்கு அதிகமாக முதலாளித்துவம் உணர்ந்ததோ அந்த அளவுக்கு, நிச்சயமற்ற பின்விளைவுகளைக் கொண்ட புரட்சிகர வெகுஜனப் போராட்ட வழிமுறைகளை பழைய ஆட்சிக்கு எதிராகப் பயன்படுத்துவதற்கான அதன் விருப்பம் குறைந்தது.
1917 ஆம் ஆண்டின் நிகழ்வுகள் முதலாளித்துவ வர்க்கத்தின் அரசியல் ஆற்றல் இழந்த தன்மையை துரிதமாய் அம்பலப்படுத்தியது. ஜாரின் வீழ்ச்சியில் ஏறக்குறைய எந்த பாத்திரத்தையும் ஏற்றிராத நிலையில், முதலாளித்துவமானது பல மில்லியன் கணக்கான விவசாயிகளின் கோரிக்கைகளைப் பூர்த்தி செய்கிறதான (நகர்ப்புற பாட்டாளி வர்க்க கோரிக்கைகளை கேட்கவும் கூட வேண்டாம்) ஒரேயொரு தீவிரப்பட்ட முன்முயற்சியைக் கூட செயல்படுத்தும் திறனற்றதாய் இருந்த ஒரு இடைக்கால அரசாங்கத்தை அமைத்தது. மேலும், பெரும் ஏகாதிபத்திய சக்திகளை பொருளாதாரரீதியாக சார்ந்திருக்கும் நிலை சூழ்ந்தும், ரஷ்ய முதலாளித்துவத்தின் நேர்மையற்ற பிராந்திய இலட்சியங்களைப் பூர்த்தி செய்யும் தீர்மானத்துடனும் இருந்த இடைக்கால அரசாங்கம் முதலாம் உலகப் போரில் ரஷ்யாவின் பங்கேற்பை தொடர்வதற்கு உறுதிபூண்டிருந்தது. இது, போருக்கு ஒரு முடிவு மற்றும் நாட்டுப்புறங்களில் நிலப்பிரபுத்துவ பாரம்பரியத்தை முழுவதுமாய் தகர்த்தெறிவது ஆகிய இரண்டையும் கோரிக் கொண்டிருந்த வெகுஜனங்களுடன் அரசாங்கத்தை மோதல் பாதையில் கொண்டுவந்து நிறுத்தியது. இந்த கோரிக்கைகள் எல்லாம் இறுதியாக அக்டோபரில் போல்ஷிவிக் கட்சியின் தலைமையின் கீழ் பாட்டாளி வர்க்கப் புரட்சியின் வெற்றியின் மூலமாக நனவாகின. இந்த முரண்பாடான வரலாற்று விளைபொருள், அதாவது ஜனநாயகப் புரட்சியானது தொழிலாள வர்க்கம் அரசு அதிகாரத்தை வெல்வதன் மூலம் முழுமையுறுவதென்பது, மிக தொலைதூர மற்றும் முன்னோடியில்லாதுமான விளைவுகளைக் கொண்டிராமல் இருக்க முடியாது. பாட்டாளி வர்க்கத் தலைமையின் கீழ், ஜனநாயகப் புரட்சியானது தவிர்க்கவியலாமல் ஒரு சோசலிசத் தன்மையை பெற்றது: அதாவது, கிராமப்புறங்களில் நிலப் பிரபுத்துவத்தின் அத்தனை மிச்சமீதங்களும் துடைத்தழிக்கப்பட்டதோடு இணைந்து முதலாளித்துவ சொத்து வடிவங்களுக்குள்ளாக ஒரு ஆழமான உள்நுழைவும், உற்பத்தி சாதனங்கள் சமூகமயமாகலும் சேர்ந்து வந்தன.
ஆனால் 1917 ஆம் ஆண்டின் வரலாற்றுப் பாய்ச்சலுக்கு ஒரு பெரும் விலை கொடுக்கப்பட வேண்டியிருந்தது. ரஷ்ய பாட்டாளி வர்க்கம் அதிகாரத்தை வெல்வதற்கு வழிவகுத்திருந்த அதே சூழ்நிலைகள், புதிதாக ஸ்தாபிக்கப்பட்டிருந்த தொழிலாளர் அரசில் சோசலிசக் கட்டுமான நிகழ்ச்சிப்போக்கிற்கு மலைக்கவைக்கும் தடைக்கற்களை உருவாக்கின. மிக முன்னேறிய சோசலிச வேலைத்திட்டத்தின் அடிப்படையில் ஸ்தாபிக்கப்பட்டிருந்த ஒரு ஆட்சி, தனது கைவசம், மிகக் குறைவான பொருளாதார வளங்களையே கொண்டிருந்தது. மேலும் ஜாரிச கடந்த காலத்தால் போல்ஷிவிக் ஆட்சிக்கு ஆஸ்தியாக வழங்கப்பட்டிருந்த ரஷ்ய சமூகத்தின் மிகப் பின்தங்கிய நிலைமையானது, முதலில் உலகப் போராலும் அதன்பின் 1918ல் வெடித்த உள்நாட்டுப் போராலும் உருவாக்கப்பட்டிருந்த பொருளாதார அழிவுகளால் மேலும் சிக்கலுற்றிருந்தது. ரஷ்யாவில் இருக்கும் நிலைமையின் நிலைப்பாட்டில் இருந்து மட்டும் கருதிப் பார்த்தால், போல்ஷிவிக்குகள் அதிகாரத்தை வென்றதென்பது ஒரு முரட்டுத்தனமான மூடசாகசமாகத் தோன்றியிருக்கலாம். ஆனால் லெனின் மற்றும் ட்ரொட்ஸ்கியின் கணக்குகள் தேசியக் காரணிகளை விடவும் சர்வதேசியக் காரணிகளைத் தான் பிரதான அடிப்படையாகக் கொண்டிருந்தன. இந்த உண்மை அவர்களது சமகாலத்தின் மாபெரும் தலைவரான ரோசா லுக்செம்பேர்க்கினால் ஏற்புடன் குறிப்பிடப்பட்டது. அவர்களது கொள்கைகள் மீது இவருக்கு சொந்த விமர்சனரீதியான மனோபாவம் இருந்தபோதிலும் கூட 1918ல் இவ்வாறு எழுதினார்: “ரஷ்யாவில் புரட்சியின் தலைவிதி முழுமையாக சர்வதேச நிகழ்வுகளின் மீது தான் தங்கியிருந்தது. போல்ஷிவிக்குகள் தங்களது கொள்கையை முழுமையாக உலகப் பாட்டாளி வர்க்கப் புரட்சியின் மீது அடித்தளமாய்க் கொண்டிருந்தனர் என்பது அவர்களது கோட்பாட்டின் தொலைநோக்கு மற்றும் உறுதிக்கும் அவர்களது கொள்கைகளின் துணிச்சலான விரிவெல்லைக்கும் தெளிவான ஆதாரமாய் விளங்குகிறது.” (ரோசா லுக்செம்பேர்க், ரஷ்யப் புரட்சி [Ann Arbor: University of Michigan Press, 1961], p. 28).[2]
சர்வதேச நிலைமைகள் ரஷ்ய புரட்சியின் வெடிப்புக்கு அடித்தளமாக இருந்து போல்ஷிவிக்குகளை அதிகாரத்தை எடுக்க நிர்ப்பந்தித்தது போலவே,[3] சோவியத் ரஷ்யாவில் சோசலிச மறுகட்டுமானத்திற்கான சாத்தியங்களும் பிரிக்கமுடியாத வகையில் சர்வதேச வர்க்கப் போராட்டத்துடன் பிணைக்கப்பட்டிருந்தது. உலக முதலாளித்துவத்தின் ஐரோப்பிய மையங்களில் ஒன்றில் தொழிலாள வர்க்கத்தின் வெற்றி மட்டுமே மிக அபிவிருத்தியுற்ற பொருளாதார மற்றும் தொழில்நுட்ப ஆதாரவளங்களை (இவற்றின் மீதுதான் சோசலிசம் தங்கியிருந்தது) பின்தங்கிய ரஷ்யாவிற்கு கிடைக்கூடியதாக செய்யும். போல்ஷிவிக் நம்பிக்கைகள் ஜேர்மனி நிகழ்வுகளின் மீது மையம் கொண்டதாய் இருந்தன. லெனின் மற்றும் ட்ரொட்ஸ்கியைப் பொறுத்தவரை, போல்ஷிவிக்குகள் அதிகாரத்திற்கு வந்ததென்பது உலக சோசலிசப் புரட்சியின் ஆரம்பம் மட்டுமே. அது இன்னும் முன்னேறுவதும் நிறைவுறுவதும் உலகப் பாட்டாளி வர்க்கத்தின் முயற்சிகளிலேயே தங்கியிருந்தது. முதலாளித்துவத்திற்கு எதிரான உலகப் போராட்டத்தில் கம்யூனிச அகிலம் (இதன் ஸ்தாபகத்தில் போல்ஷிவிக்குகள் தீர்மானகரமானதொரு பாத்திரத்தை ஆற்றினர்) மூலோபாயரீதியான கட்டளையிடும் மையமாக செயல்பட வேண்டியிருந்தது.
போல்ஷிவிக் வெற்றி என்பது உண்மையில் தொழிலாள வர்க்கத்தின் ஒரு பாரிய சர்வதேச எழுச்சியின் தொடக்கமாகும். ஆனால் வேறெந்த நாட்டிலும் போல்ஷிவிக் கட்சியை ஒட்டிய அரசியல் பண்புகளைக் கொண்டதொரு தலைமை இருக்கவில்லை. லெனினின் கட்சி என்பது ரஷ்ய தொழிலாளர் இயக்கத்தில் சந்தர்ப்பவாதத்தின் ஒவ்வொரு கருத்தோட்டத்திற்கும் எதிராக பல வருடங்கள் நிகழ்த்தப்பட்ட சமரசமற்ற தத்துவார்த்தப் போராட்டத்தின் விளைபொருளாகும். லெனினின் முந்தைய உழைப்பு இல்லாமல், 1917ல் ரஷ்யாவில் மற்றும் சர்வதேசரீதியாக நிலவிய சோசலிசப் போக்குகளுக்குள்ளான அரசியல் பிளவுகளின் முக்கியத்துவம் மிகத் தெளிவாக வரையறை செய்யப்பட்டிருக்க முடியாது. 1903ல் போல்ஷ்விசத்திற்கும் மென்ஷிவிசத்திற்கும் இடையிலான பிளவு என்பது, 1914ல் உலகப் போர் வெடிப்பினால் இரண்டாம் அகிலத்தில் ஏற்பட்ட பிளவினை ஒரு தசாப்தத்திற்கும் அதிகமான காலத்திற்கு முன்பாகவே முன்கணித்துக் கூறியதாய் அமைந்தது. மார்க்சிசத்திற்கும் குட்டி முதலாளித்துவ சந்தர்ப்பவாதத்தின் அனைத்து வடிவங்களுக்கும் இடையில் லெனின் விளக்கிக் காட்டிய வித்தியாசம் தான், 1917ல் முதலாளித்துவ இடைக்கால அரசாங்கத்தின் சீர்திருத்தவாத (மென்ஷிவிக்) கூட்டாளிகளுக்கு எதிராக போல்ஷிவிக்குகள் நடத்திய அர்த்தமுள்ள அரசியல் போராட்டத்தை சாத்தியமாக்கியது.
ஜேர்மனியிலும் கூட, இத்தகையதொரு தயாரிப்பு, புரட்சிகரப் போராட்டங்கள் வெடிப்பதற்கு முன்னதாக நிகழ்ந்திருக்கவில்லை. அங்கே 1918 நவம்பர் புரட்சி வெடித்ததற்கு சுமார் ஆறு வாரங்களுக்குப் பின்னர்தான் சந்தர்ப்பவாதிகளுடன் தீர்மானகரமான அமைப்புரீதியான முறிவும் கம்யூனிஸ்ட் கட்சியின் ஸ்தாபகமும் நிகழ்ந்தது. அத்துடன் அடுத்த இரண்டு வாரங்களில், ஜனவரி 15, 1919 அன்று லுக்செம்பேர்க் மற்றும் லீப்னெக்ட் சமூக ஜனநாயகக் கட்சி அரசாங்கத்தின் திரைமறைவு ஒப்புதலுடன் கொல்லப்பட்டது, ஜேர்மன் தொழிலாள வர்க்கத்திற்கு அதன் மிகச் சிறந்த தலைவர்களை இல்லாதொழித்தது. 1919 மற்றும் 1923க்கு இடையே தொழிலாள வர்க்கம் ஒரு தொடர்ச்சியான பெரும் தோல்விகளை அனுபவித்தது, ஹங்கேரியில், இத்தாலியில், எஸ்தோனியாவில், பல்கேரியாவில் மற்றும், அனைத்திலும் மோசமாய், ஜேர்மனியில். ஒவ்வொரு சந்தர்ப்பத்திலுமே, பழைய சமூக ஜனநாயகக் கட்சிகளின் துரோகமும் (இது அப்போதும் தொழிலாள வர்க்கத்தின் ஒரு கணிசமான பிரிவின் ஆதரவைப் பெற்றிருந்தது) புதிய கம்யூனிச அமைப்புகளின் அரசியல் முதிர்ச்சியின்மையுமே தோல்விக்கான காரணமாய் அமைந்தது.
அரசியல்ரீதியாகவும் பொருளாதாரரீதியாகவும் சோவியத் ஒன்றியத்தின் தனிமைப்படல் நீடிப்பதென்பது முன் எதிர்பார்த்திராத துயரமான பின்விளைவுகளைக் கொண்டதாய் இருந்தது. முதன்முதலில் தொழிலாளர் புரட்சியால் உருவாக்கப்பட்ட அரசு வீழ்ச்சியடைந்து விடவில்லை என்றாலும் அது உருக்குலைய தொடங்கியது. ரஷ்யாவில் முதலாளித்துவத்தின் தாமதமான அபிவிருத்தி தான் சோவியத் அரசு உருவாக்கத்தை சாத்தியமாக்கி இருந்த அதே சமயத்தில், உலக சோசலிசப் புரட்சியின் வெற்றிகரமான அபிவிருத்தியிலான எதிர்பாராத தாமதம்தான் அந்த அரசின் உருக்குலைவுக்கு பிரதான காரணமாய் இருந்தது. அந்த உருக்குலைவு எடுத்த வடிவம்தான் சோவியத் அரசு மற்றும் போல்ஷிவிக் கட்சியின் அமைப்பில் அதிகாரத்துவத்தின் பாரிய வளர்ச்சியும் அதன் கரங்களில் அசாதாரணமான அளவில் அதிகாரம் குவிக்கப்பட்டதும்.
சமூக நிகழ்ச்சிப்போக்குகள் மீதான பகுப்பாய்வை, தனிநபர் மற்றும் உளவியல் நோக்கங்கள் பற்றிய ஊகத்தால் பிரதியீடு செய்யும் வரலாற்று அகநிலைவாதத்தை தூக்கியெறிந்து, ட்ரொட்ஸ்கி, ஸ்ராலினின் சர்வாதிபத்திய ஆட்சியில் உச்சம் பெற்றதான அதிகாரத்துவத்தின் நச்சுத்தனமான வளர்ச்சி என்பது, ஒரு பின்தங்கிய நாட்டில் ஸ்தாபிக்கப்பட்ட ஒரு தொழிலாளர் அரசுக்கான பிரத்தியேக சடரீதியான முரண்பாடுகளில் வேரூன்றி இருந்தது என்பதை விளங்கப்படுத்தினார். சோவியத்தின் சொத்து வடிவங்களின் நிலைப்பாட்டில் இருந்து பார்த்தால், அது சோசலிச அரசு. ஆனால் சோவியத் ரஷ்யாவின் பின்தங்கிய, வறுமைப்பட்ட மற்றும் பஞ்சம் பீடித்த நிலைமைகளில் சமூகத்தின் அனைத்து உறுப்பினர்களுக்கும் முழுமையாகவும் சமமான வகையிலும் பொருளாதாய தேவைகளை பூர்த்தி செய்வதென்பது சிந்தித்துப் பார்க்கவும் முடியாத நிலையில் இருந்தது. பொருட்களின் விநியோகம் என்பது, அரசின் மேற்பார்வையின் கீழ், மதிப்பு என்ற முதலாளித்துவ அளவீட்டைக் கொண்டுதான் நடத்தப்பட வேண்டியதாய் இருந்தது, எனவே சமமற்றதாய் இருந்தது. இந்த ஏற்றத்தாழ்வு, —அல்லது, அதே விடயம் தான், ஒரு சிறுபான்மையினருக்கான சிறப்புரிமைகள்— அரசு கட்டுப்பாட்டிலான பொருளாதாரம் இயங்குவதற்கு குறைந்தபட்சம் ஆரம்பத்திலேனும் அவசியமாய் இருந்தது என்பது இந்த விநியோக வகைமுறை முதலாளித்துவ தன்மையையே கொண்டிருந்தது என்ற உண்மையை மாற்றி விடவில்லை.
தொழிலாளர் அரசின் இந்த இரண்டு ஒன்றுக்கொன்று முரண்பட்ட செயல்பாடுகளுக்கு இடையிலான பதட்டத்தை சோவியத் ஆட்சி வெளிப்படுத்தியது: உற்பத்தி சாதனங்களில் சமூக சொத்துடமையை பாதுகாப்பது, அதே சமயத்தில் விநியோகத்தில் முதலாளித்துவ முறைகளை மேற்பார்வை செய்வது, எனவே ஒரு சிறுபான்மையின் சிறப்புரிமைகளை பாதுகாப்பது. இந்த முரண்பாட்டின் அடிப்படையின் மீதுதான் அதிகாரத்துவம் உருவாகியது: “முதலாளித்துவ எதிர்ப்புரட்சிக்கு எதிராக, சமூகமயமாக்கப்பட்ட உடைமைகளை பாதுகாப்பதற்கு ‘ஆயுதபாணியான தொழிலாளர்களின் ஒரு அரசு’ முழுமையாய் தகுதியானதாக இருக்குமானால், நுகர்வுத் துறையில் சமத்துவமின்மையை ஒழுங்குபடுத்துவது என்பது ஒரு மிக வேறுபட்ட விடயமாக இருந்திருக்கும். சிறப்புரிமைகள் இல்லாதவர்கள் அவற்றை உருவாக்கிப் பாதுகாக்கும் விருப்பமின்றி இருந்தனர். பெரும்பான்மையானது சிறுபான்மையின் சிறப்புரிமைகளை பற்றி கவனமெடுத்துக்கொண்டு திரிய முடியாது. ‘முதலாளித்துவ சட்டத்தை’ப் பாதுகாப்பதற்காக தொழிலாளரது அரசானது ஒரு ‘முதலாளித்துவ’ வகை சாதனத்தை, அதாவது அதே பழைய காவற்படையை ஒரு புதிய சீருடையில் உருவாக்க நிர்ப்பந்திக்கப்பட்டது. (பக்.47)
அதிகாரத்துவமானது ஒரு சமூக “ஆயுதமேந்திய போலிஸ் அதிகாரியாக”, சமத்துவமின்மையை கண்காணிப்பவனாக செயல்பட்டதாக ட்ரொட்ஸ்கி விளக்கினார்:
“இவ்வாறாக போல்ஷிவிக் வேலைத்திட்டத்திற்கும் சோவியத் யதார்த்தத்திற்கும் இடையிலான அடிப்படையான முரண்பாட்டை புரிந்து கொள்வதை நோக்கிய முதல் அடியை நாம் எடுத்து வைத்திருக்கிறோம். அரசு உலர்ந்து உதிரவில்லை மாறாக மேலும் மேலும் கொடுங்கோன்மை பெற்றதாய் வளர்கிறது என்றால், தொழிலாள வர்க்கத்தின் முழு அதிகாரம் பெற்ற பிரதிநிதிகள் அதிகாரத்துவமயமாகி அதிகாரத்துவம் புதிய சமூகத்திற்கு மேலாய் எழுந்து நிற்கிறது என்றால், அது கடந்த காலத்தின் உளவியல் எச்சங்கள் என்பது போன்ற சில இரண்டாம் பட்சக் காரணங்களால் அல்ல, மாறாக உண்மையான சமத்துவத்தை உத்தரவாதம் செய்வது சாத்தியமற்றதாய் உள்ளவரை ஒரு சிறப்புரிமை பெற்ற சிறுபான்மைக்கு உயிர் கொடுப்பதற்கும், ஆதரவளிப்பதற்குமான இரும்புபோன்ற உறுதியான அவசியத்தின் விளைவு ஆகும்.” (பக்.47)
பாட்டாளி வர்க்க புரட்சியின் தோல்விகளால் தனிமைப்படுத்தப்பட்ட ஒரு பின்தங்கிய மற்றும் வறிய தொழிலாளர் அரசின் முரண்பாடுகளிலிருந்தே அதிகாரத்துவம் எழுந்தது. ஆனால் புறநிலை முரண்பாடுகளின் சக்தி தன்னை உடனடியாகவும் நேரடியாகவும் ஸ்ராலினிச ஆட்சியின் இழிந்த உருவங்களாக மாற்றிக்கொண்டது என்று கற்பனை செய்யக் கூடாது. பொருளாதார அடித்தளத்தில் இருந்து வெளிப்படுத்தப்படும் சமிக்கைகள், அவற்றின் மூலாதாரம் எத்தனை சக்திவாய்ந்ததாக இருந்தாலும், அரசியல் மேற்கட்டுமானத்தின் வெளி அடுக்குகளில்தான் பெறப்படுகின்றன. வரலாற்று பாரம்பரியம், கலாச்சாரம், சித்தாந்தம் மற்றும் இன்னும் தனிநபர் உளவியல் ஆகியவற்றின் முரண்பாடான செல்வாக்குகளால் மத்தியஸ்தம் செய்யப்பட்டதன் பின்னர் மட்டுமே அவை வேலைத்திட்டம் மற்றும் கொள்கையின் வடிவத்தில் பதிவு செய்யப்படுகின்றன. அதிகாரத்துவ அடுக்கு இறுதியாக போல்ஷிவிக் கட்சியைச் சிதைத்த ஒரு திட்டவட்டமான அரசியல் போக்காக வடிவமுற்றதென்பது ஒரு சிக்கலான, கடுமையான மற்றும் நெடியதொரு நிகழ்ச்சிப்போக்காக இருந்த ஒன்றாகும். அதிகாரத்துவ கன்னையின் பிரதிநிதிகளாய் ஆனவர்கள், ரஷ்யப் புரட்சியின் பணியை காட்டிக் கொடுத்து, அழிக்கும் நோக்கத்துடன் தான் ஆரம்பித்தார்கள் என்று நம்புவது தவறு. நிச்சயமாக, போல்ஷிவிக் கட்சிக்குள்ளான அரசியல் போராட்டம் உதயமானபோது, ஸ்ராலினும் அவரது ஆதரவாளர்களும் தங்களை சிறப்புரிமை மற்றும் ஏற்றத்தாழ்வை பாதுகாப்பவர்களாக, அதாவது தொழிலாளர் அரசின் முதலாளித்துவ செயல்பாட்டை பாதுகாப்பவர்களாக காணவில்லை. ஸ்ராலினின் குறுகிய அனுபவவாதமானது (நாளாந்திர நிகழ்வுகளை மிக ஆழமான சமூக நிகழ்ச்சிப்போக்குகளுடன் தொடர்புபடுத்தி பகுப்பாய்வு செய்வதற்கும் வர்க்க சக்திகளின் பயணப் பாதையை பின்பற்றிச் சென்று பார்ப்பதற்கும் அவரால் இயலாதிருந்தது) இடது எதிர்ப்பாளர்களுக்கு எதிரான அவரது போராட்டத்தின் நீண்டகால பின்விளைவுகளை அவரால் கணித்துணர முடியாத நிலையில் அதிகாரத்துவத்தின் தலைவராக ஆவதற்கு அவரை அனுமதித்தது. ட்ரொட்ஸ்கி விளக்கியதைப் போல:
“முன்னதாக வெகுஜனங்கள் அறிந்திராத ஸ்ராலின் திடீரென்று ஒரு முழுமையான மூலோபாயத் திட்டத்தைத் தாங்கி பறந்து வந்தார் என்று கற்பனை செய்வது வெகுளித்தனமானது. அவ்வாறு இருக்கவில்லை. அவர் தனது சொந்தப் பாதையை உணர்வதற்கு முன்னதாக, அதிகாரத்துவம் ஸ்ராலினை உணர்ந்து விட்டது. அவர் அதற்கு அவசியமான அனைத்து உத்தரவாதங்களையும் கொண்டு வந்தார்: ஒரு பழைய போல்ஷிவிக்கின் கௌரவம், ஒரு வலிமைபடைத்த குணாம்சம், குறுகிய பார்வை, அத்துடன் தனது செல்வாக்கிற்கான மொத்த மூலாதாரமாக அரசியல் எந்திரத்துடனான நெருக்கமான பிணைப்புகள். ஸ்ராலின் மீது சூழ்ந்த வெற்றி அவருக்கே ஆச்சரியமாக அமைந்த ஒன்று. பழைய கோட்பாடுகளில் இருந்தும் வெகுஜனங்களின் கட்டுப்பாட்டில் இருந்தும் தன்னை விடுவித்துக் கொள்ள முயன்று கொண்டிருந்த, அத்துடன் தன் உள்விவகாரங்களில் ஒரு நம்பகமான மத்தியஸ்தருக்கான அவசியத்தைக் கொண்டிருந்த, புதிய ஆளும் குழுவின் நட்புரீதியான வரவேற்புத்தான் அது. வெகுஜனங்களுக்கு முன்பாகவும் புரட்சிகளின் நிகழ்வுகளிலும் இரண்டாம் நிலையில் இருந்த ஒரு மனிதராக இருந்த ஸ்ராலின் தேர்மிடோரிய அதிகாரத்துவத்தின் சந்தேகத்திற்கிடமில்லாத தலைவராக, அதன் நடுவே முதலாம் நிலைத் தலைவராய் தன்னைத் தானே எடுத்துக் காட்டி நின்றார்.” (பக். 80-81)
காட்டிக் கொடுக்கப்பட்ட புரட்சி என்ற நூல், ட்ரொட்ஸ்கி 1923ல் ஆரம்பித்து நிகழ்த்திய அதிகாரத்துவத்திற்கு எதிரான தத்துவார்த்த மற்றும் அரசியல் போராட்டத்தின் உச்சம் ஆகும். அந்த வருடத்தின் இலையுதிர் காலத்தில், புதிய பாதை (New Course) என்ற தலைப்பின் கீழ் வெளியிடப்பட்ட தொடர்ச்சியான கட்டுரைகளை ட்ரொட்ஸ்கி எழுதியிருந்தார். அதில் சோவியத் அரசு மற்றும் போல்ஷிவிக் கட்சியின் ஊதிப்பெருத்த அமைப்புகளுக்குள் அதிகாரத்துவ போக்குகளின் வளர்ச்சி குறித்து எச்சரிக்கையுடன் குறித்தார். சோவியத் வாழ்வின் அனைத்து வட்டங்களின் மீதும் அதிகாரத்துவம் சுயாதீனமாக பெருகிய முறையில் அதிகாரம் செலுத்துவதன் அறிகுறியாக உட்கட்சி ஜனநாயகம் மூச்சுத் திணறுவதை அவர் கண்டார்.
இந்த போராட்டம் தொடங்கிய போது, ட்ரொட்ஸ்கி, போல்ஷிவிக் கட்சிக்கு உள்ளேயும் சோவியத் வெகுஜனங்களிடையேயும் பாரிய கௌரவத்தை பெற்றுக் கொண்டிருந்த நிலையில் தான் இருந்தார். அக்டோபர் புரட்சியின் மற்றும் புதிய சோவியத் அரசின் மிக அதிகாரமுள்ள தலைவராக, நோய்வாய்ப்பட்டிருந்த லெனினுடன் இவரும் இருந்தார். அவரது விமர்சனங்கள் போல்ஷிவிக் கட்சிக்குள்ளாக, குறிப்பாக புரட்சி மற்றும் உள்நாட்டுப் போரின் காலகட்டத்தில் மிகவும் சிறப்புவாய்ந்த பாத்திரத்தை ஆற்றியிருந்த அடுக்குகளிடையே, பரந்த ஆதரவைக் கண்டன. இடது எதிர்ப்பாளர் அணியின் உருவாக்கத்திற்கான ஆரம்ப தளத்தை புதிய பாதை வழங்கியது. இந்த அணி அதிகாரத்துவத்தின் வளரும் செல்வாக்கை எதிர்த்து நிற்க முனைந்தது. ட்ரொட்ஸ்கியின் கட்டுரைகள் எத்துணை அமிலத்தனமான பதிலிறுப்பிற்கு தூண்டியிருந்தது என்பதே, அதிகாரத்துவம், மார்க்சிச விமர்சனத்திற்கு எதிராக தன்னைப் பாதுகாத்துக் கொள்ளுமளவிற்கு தனது நலன்கள் குறித்து போதுமான அளவு கவனம் கொண்டிருந்த ஒரு சமூக சக்தியாக ஏற்கனவே ஆகி விட்டிருந்தது என்பதற்கான ஒரு அறிகுறியாக இருந்தது.
லெனின் 1924 ஆம் ஆண்டு ஜனவரி 21 அன்று இறந்தார்.[4] அந்த ஆண்டின் இலையுதிர் காலத்திற்குள்ளாக, சோவியத் தொழிலாள வர்க்கத்தின் நலன்களுக்கும் பெருகிய முறையில் சுய-விழிப்பைப் பெற்றிருந்த அதிகாரத்துவத்திற்கும் இடையிலான பாதைப்பிரிவு, போல்ஷிவிக் கட்சி அது தோன்றிய காலம் முதல் அடித்தளமாய்க் கொண்டிருந்த சர்வதேச வேலைத்திட்டத்திற்கும் மற்றும் முன்னோக்குகளுக்கும் நேரெதிரான ஒரு அரசியல் பாதையின் சூத்திரமாக்கலில் தனது வெளிப்பாட்டைக் கண்டது. சோவியத் ஒன்றியத்தில் சோசலிசத்தை அபிவிருத்தி செய்வது, உலக முதலாளித்துவத்தின் முன்னேறிய ஐரோப்பிய மையங்களில் சோசலிசப் புரட்சியின் வெற்றியின் மீதுதான் இறுதியாகத் தங்கியிருந்தது என்பது, நாம் ஏற்கனவே குறிப்பிட்டது போல, போல்ஷிவிக் முன்னோக்கின், அதாவது மார்க்சிச முன்னோக்கின், கேள்விக்கே இடமளிக்காத ஒரு முதற்கோளாய் இருந்து வந்திருந்தது. லெனின் உயிரோடு இருந்தவரை, ஒரு தன்னிறைவு பெற்ற சோசலிச சமூகத்தின் உருவாக்கத்திற்கு சோவியத் ஒன்றியத்தின் ஆதாரவளங்களே போதுமானவையாய் இருந்தன என்று போல்ஷிவிக் தலைமையில் இருந்த எவரொருவரும் ஒருபோதும் பரிந்துரைத்ததில்லை. உண்மையில் இத்தகைய சாத்தியங்களை ஒரு முன்னேறிய முதலாளித்துவ நாட்டிற்கும் கூட மார்க்சிச தத்துவம் அளித்ததில்லை. 1847 இல் கம்யூனிஸ்ட் கட்சி அறிக்கை எழுதப்பட்டது முதல் 70 வருடங்களுக்குப் பின்னர் அக்டோபர் புரட்சியின் வெற்றி வரையிலும், மார்க்சிச இயக்கத்தின் வழிகாட்டும் கோட்பாடாக இருந்தது என்னவென்றால், சோசலிசத்தை சாதிப்பதென்பது அனைத்து நாடுகளின் தொழிலாளர்களது ஐக்கியப்பட்ட சர்வதேச முயற்சிகளின் மீதும், உலக முதலாளித்துவத்தின் மீதான அவர்களின் வெற்றியின் மீதும்தான் தங்கியிருந்தது என்ற அதன் அசைக்கமுடியாத உறுதி தான்.
இவ்வாறாக, தனியொரு நாட்டில் சோசலிசத்தைக் கட்டுவது சாத்தியம் என்று புக்காரினின் ஊக்கத்துடன் ஸ்ராலின் பிரகடனப்படுத்திய போது, அப்பிரகடனம் மார்க்சிச தத்துவத்தின் ஒரு அடிப்படை திருத்தலுக்கும் கூடுதலான ஒன்றைப் பிரதிநிதித்துவப்படுத்தியது. ஸ்ராலின் தானே உணராமல் இருந்த நிலையிலும், சோவியத் அரசை உலக சோசலிசப் புரட்சிக்கான கோட்டை கொத்தளமாகவும் நிகழ்வுக் களமாகவும் காணாமல், தனது வருவாய்களும் சிறப்புரிமைகளும் அடித்தளமாய் கொண்டிருந்த தேசிய அத்திவாரமாகக் கண்ட விரிந்து வந்த அதிகாரத்துவத்தின் கண்ணோட்டங்களைத்தான் அவர் வார்த்தையில் வெளிப்படுத்திக் கொண்டிருந்தார்.
ஸ்ராலினிச கன்னை உலகப் புரட்சி என்னும் இலக்கை உடனேயே கைதுறந்து விடவில்லை; மாறாக இடது எதிர்ப்பாளர்களின் குற்றச்சாட்டுகளை அது கோபத்துடன் எதிர்த்தது. எப்படியிருந்த போதிலும், “தனியொரு நாட்டில் சோசலிசம்” என்ற தத்துவத்தைப் பரப்பியதானது, சோவியத் ஆட்சியின் சர்வதேச கொள்கையின் திசையிலும் மற்றும் கம்யூனிச அகிலத்தின் பாத்திரத்திலும் ஏற்பட்டிருந்த ஒரு ஆழமான மாற்றத்தை அடையாளம் காட்டியது.[5] ஏகாதிபத்திய இராணுவங்களின் தலையீடுகளால் மீண்டும் தூக்கியெறியப்படாதிருந்தால் சோவியத் ஒன்றியம் சோசலிசத்தை எட்டி விட முடியும் என்று ஸ்ராலினிஸ்டுகள் உறுதிபடக் கூறினர். இதிலிருந்து, சோவியத் சோசலிசத்தை எட்டுவதற்கு உலக ஏகாதிபத்தியத்தை தூக்கியெறிவது அவசியப்படவில்லை, மாறாக இராஜதந்திர வழிமுறைகள் மூலமாக அதனை நடுநிலைப்படுத்துவது தான் அவசியப்பட்டது என்றானது.
சோவியத் ஒன்றியத்திற்கும் முதலாளித்துவ அரசுகளுக்கும் இடையில் ஏற்பட்ட இராஜதந்திர உடன்படிக்கைகளை கோட்பாட்டளவில் இடது எதிர்ப்பாளர்கள் ஆட்சேபிக்கவில்லை. ட்ரொட்ஸ்கியின் அரசியல் செல்வாக்கு உச்சத்தில் இருந்த சமயத்தில், இராஜதந்திர வட்டத்தில் சோவியத் ஒன்றியம் வெற்றிகளைச் சாதித்திருந்தது. 1922ல் ரபலோ (Rapallo) பேச்சுவார்த்தைகளின் வெற்றிகரமான முடிவு இதில் மிகவும் குறிப்பிடத்தக்கது. ஆயினும், இந்த உடன்படிக்கைகள் வெளிப்படையாக சோவியத் ரஷ்யாவின் தந்திரோபாய வேலைகளாகவே குணாம்சம் பெற்றவை. சர்வதேச பாட்டாளி வர்க்கம் அதனை நேரடியாக பாதுகாக்க முன்வரும் வரைக்கும் தனது நிலையை ஸ்திரப்படுத்தும் நோக்கத்தையே அது கொண்டிருந்தது. தொழிலாளர் அரசின் தலைவிதி என்பது சர்வதேச சோசலிசத்துடன் பிரிக்கவியலாமல் பிணைந்திருந்தது என்பது இயல்பான ஒன்றாக புரிந்து கொள்ளப்பட்டிருந்தது. மேலும், சோவியத் ஒன்றியத்தின் இராஜதந்திர முன்முயற்சிகள் உள்ளூர் கம்யூனிஸ்ட் கட்சிகள் மீது எந்த கடமைப்பாடுகளையும் திணிக்கவில்லை. தொழிலாள வர்க்கத்தின் சுயாதீனமான புரட்சிகர நடவடிக்கையை அதிகபட்சமாய் அபிவிருத்தி செய்வதென்பது தான் அக்கட்சிகளின் பிரதான அக்கறையாக கொள்ளத்தக்கதாய் இருந்தது.
ஆனால் சோவியத் அதிகாரத்துவத்தின் செல்வாக்கின் கீழ், கம்யூனிச அகிலத்தின் பாத்திரம் மாற்றப்பட்டிருந்தது. ’தேசிய சோசலிசம்’ என்னும் புதிய தத்துவம் கம்யூனிச அகிலத்தின் மூலோபாயத்தையும் தந்திரோபாயத்தையும் பாதிக்கத் தொடங்கியிருந்தது. அனுபவமற்ற பிரிட்டிஷ் கம்யூனிஸ்ட் கட்சிக்கும் ஆங்கிலோ-ரஷ்யன் குழுவில் பங்கேற்றிருந்த தொழிற்சங்க அதிகாரத்துவவாதிகளுக்கும் இடையில் 1925ல் உருவான சந்தர்ப்பவாத கூட்டணி, இந்த செல்வாக்கு மிக்க அதிகாரிகளிடம் இருந்தான அனுதாபம், பிரிட்டிஷ் அரசாங்கத்தின் சோவியத் விரோதக் கொள்கையை பலவீனப்படுத்தி விடும் என்பதான நம்பிக்கையில் ஸ்ராலினிஸ்டுகளால் ஊக்கமளிக்கப்பட்டது. 1925க்கும் 1927க்கும் இடையில் சீன கம்யூனிஸ்ட் கட்சி சியாங் கேய்-ஷேக்கின் முதலாளித்துவ தேசியவாத அரசாங்கத்திற்கு தன்னை அடிபணியச் செய்து கொள்ள வேண்டும் என்று ஸ்ராலின் வலியுறுத்தியதற்கான தூண்டுதலின் ஆகக்குறைந்தது ஒரு பகுதியையேனும் இதேபோன்ற கருத்துப்பாடுகள் தான் வழங்கின. இரண்டு சந்தர்ப்பங்களிலும், தொழிலாள வர்க்கத்தின் அரசியல் சுயாதீனத்தைப் பலிகொடுத்து வெளிநாடுகளில் நண்பர்களை வளர்த்தெடுக்க முயன்றதானது அழிவுக்கே இட்டுச் சென்றது: பிரிட்டிஷ் கம்யூனிஸ்ட் கட்சி தொழிற்சங்க தலைவர்களைப் போற்றியது 1926ன் பொது வேலைநிறுத்தம் காட்டிக் கொடுக்கப்பட வழிவகை அளித்தது; முதலாளித்துவ கோமிண்டாங்கின் தலைமைக்கு சீனக் கம்யூனிஸ்ட் கட்சி அடிபணிந்ததானது 1927ல் அதன் காரியாளர்கள் சியாங்கின் இராணுவத்தால் உடலியல்ரீதியாக அழிக்கப்படுவதற்கு இட்டுச் சென்றது.
பிரிட்டனிலும் சீனாவிலும் ஏற்பட்ட தோல்விகளை, சோவியத் அதிகாரத்துவம் நனவுடன் விரும்பியதாக ட்ரொட்ஸ்கி ஒருபோதும் கூறவில்லை. மாறாக, துயரமான சர்வதேசப் பின்னடைவுகளை, ஸ்ராலினே, அவரது பல்வேறு கொள்கைகளின் முடிவுகளைப் போல, எதிர்பார்த்திருக்கவில்லை என்றே ட்ரொட்ஸ்கி எப்போதும் கூறி வந்தார். ஆனால் ஸ்ராலினிஸ்டுகளின் அரசியல் பாதையே பொறுப்பாகத்தக்க இந்த மற்றும் பிற தோல்விகள் சோவியத் ஒன்றியத்திற்குள்ளான வர்க்க உறவுகளின் மீது ஒரு புறநிலையான தாக்கத்தைக் கொண்டிருந்தன. சர்வதேச தொழிலாள வர்க்கம் பெற்ற தோல்விகள் சோவியத் தொழிலாளர்களை ஊக்கம் குன்றச் செய்தது, உலக சோசலிசத்தின் முன்னோக்குகள் மற்றும் வாய்ப்புவளங்களில் அவர்களது நம்பிக்கையை பலவீனப்படுத்தியது, இதன்மூலம், அதிகாரத்துவத்தை வலுப்படுத்தியது. 1927 மே மாதத்தில் சீனக் கம்யூனிஸ்ட் கட்சி நிர்மூலமாக்கப்பட்டதானது (இந்நிகழ்வு ட்ரொட்ஸ்கியால் தெளிவாக முன் எதிர்பார்க்கப்பட்டதாய் இருந்தது) இடது எதிர்ப்பாளர்களின் அரசியல் தோல்விக்கும் சோவியத் கம்யூனிஸ்ட் கட்சியில் இருந்து அவர்கள் வெளியேற்றப்படுவதற்கும் மேடை அமைத்தது என்றால், அது எந்த வகையிலும் தற்செயலானது அல்ல. இதனைத் தொடர்ந்த சில மாதங்களுக்குள்ளாக எதிர்ப்பாளர்கள் அணியின் தலைவர்கள் கைது செய்யப்பட்டு சோவியத் ஒன்றியத்தில் இருந்து கண்ணுக்கெட்டாத தூரத்திற்கு நாடு கடத்தப்படுவதும் நிகழ்ந்தது. ட்ரொட்ஸ்கி சீன எல்லையில் அல்மா-அடாவுக்கு கடத்தப்பட்டார். ஒரு வருடத்திற்குப் பின்னர், 1929 ஆம் ஆண்டு ஜனவரியில், ட்ரொட்ஸ்கி சோவியத் ஒன்றியத்தில் இருந்து துருக்கி கரையோரப் பகுதியில் இருக்கும் பிரிங்கிப்போ தீவுக்கு நாடு கடத்தப்பட்டார்.
ட்ரொட்ஸ்கியை நாடு கடத்தி விட்டால் சோவியத் ஒன்றியத்தில் எதிர்ப்பு நடவடிக்கையை அபிவிருத்தி செய்யும் சாத்தியம் அவருக்கு இல்லாது போய்விடும் என்று ஸ்ராலின் நம்பியிருந்தார். ஆனால் ஒரு உலக பார்வையாளர்களின் கவனத்தை ஈர்க்கும் திறன் ட்ரொட்ஸ்கிக்கு இருந்ததை அவர் குறைத்து மதிப்பிட்டிருந்தார். அதிகாரங்கள் பறிக்கப்பட்டிருந்த போதிலும், ட்ரொட்ஸ்கி உலக வரலாற்றில் நடந்த மாபெரும் புரட்சியின் புத்திஜீவித்தன மற்றும் அறநெறி பண்பின் உருவகமாக இருந்தார். ஒரு அதிகாரத்துவ எந்திரத்தை பிரதிநிதித்துவப்படுத்தியவராகவும் அதனைச் சார்ந்திருந்தவராகவும் இருந்த ஸ்ராலினுக்கு நேரெதிர்விதமாக, ட்ரொட்ஸ்கி, தனது எழுத்துக்களின் வழியாக அற்புதமான கலாச்சாரம்மிக்க வெளிப்பாட்டை எடுத்துக்காட்டிய ஒரு உலக-வரலாற்றுச் சிந்தனையின் வடிவமாய் திகழ்ந்தார். சோவியத் ஒன்றியத்திற்குள்ளாக கூட, ட்ரொட்ஸ்கியின் வார்த்தைகள் மூடித்திரையிட்ட எல்லைகளுக்குள் ஊடுருவுவதையோ அல்லது ஒரு நெகிழ்ச்சியான பதிலிறுப்பைத் தூண்டுவதையோ தடுப்பதற்கு ஸ்ராலினிச ஆட்சி சாத்தியமற்று இருந்தது.[6] நாடு கடத்தப்பட்டதன் அத்தனை கஷ்டங்களும் இருந்தாலும், ட்ரொட்ஸ்கியின் பேனாவில் இருந்து பாய்ந்த அரசியல் பகுப்பாய்வின் முடிவற்ற எண்ண ஓட்டங்கள், தொகுதி தொகுதியான கருத்துரையாடல்களுடன் சேர்ந்து, இடது எதிர்ப்பாளர்களை (Left Opposition) ஒரு சர்வதேச இயக்கமாக மாற்றியது.
ட்ரொட்ஸ்கி நாடு கடத்தப்பட்டிருந்த முதலாவது ஆண்டுகளில், சர்வதேச இடது எதிர்ப்பாளர்கள் அணி தன்னை கம்யூனிச அகிலத்திற்குள்ளான ஒரு கன்னையாகத்தான், சட்டவிரோதமானது தான் என்றாலும், கருதியது. அது ஒரு புதிய அகிலத்தை உருவாக்குவதற்கு அழைப்பு விடவில்லை, மாறாக கம்யூனிச அகிலத்தையும் அதன் தேசியப் பிரிவுகளையும் சீர்திருத்துவதற்காகப் போராடியது. தொழிலாள வர்க்கத்தின் மிகவும் வர்க்க நனவுடனான பிரிவுகளுக்கு அரசியல் தாயகமாக விளங்கிய கம்யூனிஸ்ட் கட்சிகளை ஒரு மார்க்சிச வேலைத்திட்டத்திற்குத் திரும்பக் கொண்டுவரும் சாத்தியத்தை அவசரப்பட்டு கைவிடுவதற்கு ட்ரொட்ஸ்கி மறுத்தார். கம்யூனிச அகிலம் தான் சோசலிசப் புரட்சிக்கான சாதனம் என்று நம்பி அதில் இணைந்திருந்த நூறாயிரக்கணக்கான தொழிலாளர்களைக் குறிவைத்துத் தான் ட்ரொட்ஸ்கியின் எழுத்துக்கள் குறிப்பாக செலுத்தப்பட்டன.
கம்யூனிச அகிலத்தை சீர்திருத்துவதற்கான சர்வதேச இடது எதிர்ப்பாளர்களின் போராட்டம் ஜேர்மனியில் மாபெரும் அரசியல் அவசர அவசியமாக இருந்தது, அங்கு தொழிலாள வர்க்கம் பாசிச பயங்கரத்துக்கு முகம் கொடுத்துக் கொண்டிருந்தது. ஜேர்மன் தொழிலாள வர்க்கத்தின் பரந்த சாத்திய சக்தி இருந்த போதிலும், தனது வெகுஜன அமைப்புகளின் கொள்கைகளால் அது நோக்குநிலை மாற்றப்பட்ட நிலையிலும் முடக்கப்பட்ட நிலையிலும் இருந்தது. சமூக ஜனநாயகவாதிகள் நாஜிக்களில் இருந்து தங்களைக் காப்பாற்ற முதலாளித்துவ அரசையும் அதன் வைய்மார் அரசியல்சட்டத்தையும் பரிதாபமாக நம்பிக் கொண்டிருந்த அதேசமயத்தில், ஸ்ராலினிஸ்டுகளோ பாசிசத்திற்கு எதிரான போராட்டத்தின் தொழிலாள வர்க்கத்தின் அனைத்து அமைப்புகளையும் ஐக்கியப்படுத்துவதற்கு போராட மறுத்தனர். சமூக ஜனநாயகக் கட்சிக்கும் நாஜிக் கட்சிக்கும் இடையில் எந்த அடிப்படை வித்தியாசமும் இல்லை என்றும் உண்மையில் சமூக ஜனநாயகக் கட்சி “சமூக பாசிஸ்ட்” என்றும் ஸ்ராலினின் ஊக்குவிப்புடன் ஜேர்மன் கம்யூனிஸ்ட் கட்சி குற்றவியல் தன்மையுடனான அலட்சியத்துடன் உறுதிபடக் கூறியது. எனவே பாசிசக் கூட்டத்திற்கு எதிராக தொழிலாளர் இயக்கத்தின் பொதுவான பாதுகாப்பினை மேற்கொள்வதற்கு சமூக ஜனநாயகக் கட்சியுடன் ஒரு “ஐக்கிய முன்னணி”க்குள் நுழைவது கம்யூனிஸ்ட் கட்சிக்கு அனுமதிக்கப்படத்தகாதது என்று ஸ்ராலினிஸ்டுகள் கூறி விட்டனர். தங்களது தலைவர்களின் கொள்கைகளை மாற்றிக் கொள்ளச் செய்வதற்கும் நாஜிக்களுக்கு எதிராக ஒட்டுமொத்த தொழிலாளர்களது இயக்கத்தின் ஒரு ஐக்கிய முன்னணியை செயல்படுத்துவதற்கும் ஜேர்மன் கம்யூனிஸ்ட் கட்சியின் பொறுப்பிலிருந்த காரியாளர்களுக்கு அழைப்பு விடுத்து பிரிங்கிபோவில் இருந்து ட்ரொட்ஸ்கி ஆவேசமான வேண்டுகோள்களை வைத்தார்.
அவர் எழுதினார்: “தொழிலாளர்-கம்யூனிஸ்டுகளே, நீங்கள் நூறாயிரக்கணக்கில் மில்லியன்களில் இருக்கிறீர்கள்; நீங்கள் எந்த இடத்திற்கும் அகன்று விட முடியாது; உங்களுக்குப் போதுமான கடவுச்சீட்டுகள் இல்லை. பாசிசம் அதிகாரத்திற்கு வருமானால், அது ஒரு படுபயங்கர டாங்கியைப் போல உங்களது மண்டையோடுகள் மற்றும் முதுகுத்தண்டுகளின் மீது ஏறிச் செல்லும். சமூக ஜனநாயகக் கட்சித் தொழிலாளர்களுடனான ஒரு ஐக்கியப்பட்ட போராட்டம் மட்டுமே வெற்றியைக் கொண்டுவர முடியும். துரிதமாய் செயல்படுங்கள், தொழிலாளர்-கம்யூனிஸ்டுகளே, உங்களுக்கு நேரம் மிகக் குறைவாய் உள்ளது!” (லியோன் ட்ரொட்ஸ்கி, ஜேர்மனி: 1931-32 [இலண்டன்: நியூ பார்க் பப்ளிகேஷன்ஸ், 1970], பக். 38).
ஜேர்மன் கம்யூனிஸ்ட் கட்சி தனது கொள்கையை மாற்றிக் கொண்டு நாஜியின் எழுச்சிக்கு எதிராக ஒரு ஐக்கியப்பட்ட போராட்டத்தை நடாத்த மறுத்தது. இவ்வாறாக ஒரு துப்பாக்கிக் குண்டு கூட சுடாமல் 1933 ஆம் ஆண்டு ஜனவரி 31 அன்று ஹிட்லர் அதிகாரத்திற்கு வந்தார். ஒரு சில மாதங்களுக்குள்ளாகவே, ஐரோப்பாவில் மிகப் பெரிய மற்றும் மிகச் சக்திவாய்ந்த தொழிலாளர் இயக்கமாக இருந்த அனைத்து தொழிற்சங்க மற்றும் அரசியல் அமைப்புகளும் சட்டவிரோதமானவையாக அறிவிக்கப்பட்டு அழிக்கப்பட்டன. இந்த முன்னுதாரணமற்ற பேரழிவுக்கு முகம் கொடுக்கையில், கம்யூனிச அகிலம் தான் பின்பற்றிய கொள்கைகளை வழிமொழிந்தும் தோல்விக்கான எந்த பொறுப்பில் இருந்தும் தன்னைக் கழற்றிக் கொள்ளும் விதமாகவும் ஒரு அறிக்கையை வெளியிட்டது. ட்ரொட்ஸ்கியைப் பொறுத்தவரை, ஜேர்மன் தொழிலாள வர்க்கத்தின் தோல்வி உலக-வரலாற்றுப் பரிமாண அளவுகளைக் கொண்ட ஒரு நிகழ்வாக இருந்தது. எப்படி 1914ல் முதலாம் உலகப் போரின் தொடக்கத்தில் போர்ச் செலவுகளுக்கு ஆதரவாக சமூக ஜனநாயகவாதிகள் வாக்களித்தமை இரண்டாம் அகிலத்தின் வீழ்ச்சியை அடையாளப்படுத்தியதோ, அதைப் போலவே ஜேர்மன் தொழிலாளர்’ இயக்கத்தின் துயரமான படுதோல்வியில் ஸ்ராலினிஸ்டுகள் உடந்தையாய் இருந்தமை மூன்றாம் அகிலத்தின் வீழ்ச்சிக்கு அடையாளமானது. ஜேர்மன் தொழிலாள வர்க்கம் பேரழிவுகரமான தோல்வியைச் சந்தித்திருந்த நிலையில், ஹிட்லர் அதிகாரத்திற்கு வருவதற்கு வழிவகை செய்தளித்த தனது கொள்கைகளுக்காக கம்யூனிச அகிலம் தன்னைத் தானே மெச்சி வாக்களித்துக் கொண்ட பின், ஸ்ராலினிச கட்சிகளை சீர்திருத்துவது குறித்து அதன்பின்னும் பேசுவதென்பது சாத்தியமற்றதானது. ஒரு புதிய, நான்காம் அகிலத்தைக் கட்டுவதற்கான வேலையை ஆரம்பிப்பது அவசியமானது.
“மாஸ்கோவின் தலைமை, ஹிட்லரின் வெற்றியை உத்தரவாதம் செய்த கொள்கை தவறானதல்ல என்று பிரகடனப்படுத்தியதோடு மட்டுமல்ல, மாறாக என்ன நடந்தது என்பது குறித்த அனைத்துக் கலந்துரையாடல்களையும் கூட தடை செய்திருந்தது. இந்த அவமானகரமான தடை மீறப்படவும் இல்லை, தூக்கியெறியப்படவும் இல்லை. தேசிய மாநாடுகள் இல்லை; சர்வதேச மாநாடுகள் இல்லை, கட்சிக் கூட்டங்களிலும் எந்த கலந்துரையாடல்களும் இல்லை; ஊடகங்களிலும் எந்த விவாதமும் இல்லை! பாசிசத்தின் இடியிலும் உலுக்கப்படாமல் மற்றும் அதிகாரத்துவத்தின் இத்தகைய அட்டூழியமான செயல்களுக்கு தன்னை அடிமைத்தனத்துடன் கீழ்ப்படிந்த ஒரு அமைப்பு, அது இறந்து போய் விட்டது என்பதையும் அதனை எதனாலும் உயிர்ப்பிக்க முடியாது என்பதையும் தான் நிரூபிக்கிறது. பாட்டாளி வர்க்கம் மற்றும் அதன் வருங்காலம் குறித்து இதனைப் பகிரங்கமாகவும் வெளிப்படையாகவும் கூறுவது நமது நேரடியான கடமையாகும். இனிவரும் நமது வேலைகள் அனைத்திலும் உத்தியோகபூர்வ கம்யூனிச அகிலத்தின் வரலாற்றுரீதியான வீழ்ச்சியை நமது ஆரம்பப் புள்ளியாக கொள்வது அவசியமானதாகும்.” (லியோன் ட்ரொட்ஸ்கி, லியோன் ட்ரொட்ஸ்கியின் படைப்புகள் [1932-33] [நியூயோர்க்: பாத்ஃபைண்டர் பிரஸ், 1972] பக்: 304-5).
ட்ரொட்ஸ்கி தனது வாழ்க்கைப் பாதையில் எடுத்த அத்தனை முடிவுகளிலும், நான்காம் அகிலத்தை ஸ்தாபிப்பது என்ற ஒன்றைக் காட்டிலும், மிகவும் மாற்றமுடியாத, தர்க்கத்துக்குரிய, ஆழமான மற்றும் தொலைநோக்குடனான ஒன்று வேறெதும் கிடையாது. சோவியத் ஆட்சியும் மற்றும் அதன் துதிபாடிகளின் சர்வதேச எந்திரமும் வெறித்தனமான கண்டனங்களுடன் பதிலளித்தன. அவை தங்களது நிறைவுபெற்ற வெளிப்பாட்டை மாஸ்கோ விசாரணைக் குற்றப்பத்திரிகைகளிலும், மற்றும் சோவியத் ஒன்றியத்தின் எல்லைகளுக்கு உள்ளேயும் வெளியேயும் GPU-NKVD நிகழ்த்திய படுகொலைகளிலும் ஒரு சில ஆண்டுகளுக்குள் கண்டன. ஆனால் ட்ரொட்ஸ்கி மீது அனுதாபம் கொண்டிருந்தவர்களாக தங்களைக் கருதியிருந்தவர்களில் பலரும் கூட நான்காம் அகிலத்திற்கான அவரது அழைப்பு முதிர்ச்சியற்றதாகவும், தவறான ஆலோசனையின் பேரிலானதாகவும் அத்துடன் இன்னும் அவசரத்தனமானதாகவும் கூட இருந்ததாய் கருதினர். இந்த விமர்சனங்கள் எல்லாம் பொதுவாக அரசியல் சூழ்நிலையின் வெளித்தோற்ற “யதார்த்தங்களை” அடிப்படையாகக் கொண்டிருந்தன: ட்ரொட்ஸ்கி ஒரு அகிலத்தைக் கட்ட முடியாத அளவுக்கு தனிமைப்படுத்தப்பட்டிருந்தார், அவரது அழைப்பு கவனிப்பாரற்றுப் போய்விடும், சர்வதேச தொழிலாள வர்க்கத்திற்குள்ளாக கம்யூனிச அகிலத்தின் கௌரவம் இன்னும் மிகப் பெருமளவினதாகவே இருக்கிறது, ஒரு வெற்றிகரமான புரட்சியின் அடிப்படையில் மட்டுமே ஒரு புதிய அகிலம் கட்டப்பட முடியும், இன்ன பிற யதார்த்தங்கள். ஆனால், சந்தர்ப்பவசமான சிக்கல்களை அனுபவவாதரீதியாகப் பட்டியலிடுவதற்கு அதிகமாக ஒன்றுமில்லை என்று கூறத்தக்க இத்தகைய “யதார்த்தவாதம்” உண்மையில் ஒரு மேலோட்டமான குணாம்சத்தையே கொண்டதாய் இருந்தது.
ட்ரொட்ஸ்கியைப் பொறுத்தவரை, அரசியல் யதார்த்தவாதத்திற்கான அளவுகோல் என்பது வேலைத்திட்டத்தையும் கொள்கையையும் வர்க்கப் போராட்டத்தின் முக்கியமான மற்றும் விதியால் ஆளப்படும் அபிவிருத்தியுடன் பொருத்திப் பார்ப்பது என்பதுதான். ஜேர்மன் தொழிலாள வர்க்கத்தின் தோல்வியில் சோவியத் அதிகாரத்துவம் ஆற்றிய பாத்திரமும் இந்த பெருந்துயரத்திற்கான அதன் எதிர்வினையும் ஸ்ராலினிச ஆட்சியின் அரசியல் மற்றும் சமூக பரிணாம வளர்ச்சியில் —அல்லது, நாம் இதனை சீரழிவு என்று அழைக்கலாம்— ஒரு திருப்பு முனையைக் குறித்தது என்பதை ட்ரொட்ஸ்கி உணர்ந்தார். நான்காம் அகிலத்திற்கான ட்ரொட்ஸ்கியின் அழைப்பு என்பது, அதிகாரத்துவமும் கம்யூனிச அகிலமும் ஆற்றியிருந்த சமீபத்திய மற்றும் மிகப் பயங்கர குற்றத்திற்கான தண்டனையாக அல்ல; மாறாக ஸ்ராலினிச ஆட்சியும் சோரம்போன கம்யூனிச அகிலமும் சீர்திருத்துவதற்கு அப்பாற்பட்டுச் சென்று விட்டன என்ற உண்மைக்கான அவசியமான அரசியல்ரீதியான பதிலிறுப்பு தான் அது. ஜேர்மன் தொழிலாளர்களின் இயக்கத்தின் அழிவுக்கு இட்டுச் சென்றிருந்த கொள்கைகளுக்கு தனது ஒப்புதலைக் கொடுத்தன் மூலம், கம்யூனிச அகிலமானது இனியும், சற்று சிறிதளவும் கூட, சர்வதேச சோசலிசத்தின் நலனுக்கு சேவை செய்யவில்லை என்பதை விளங்கப்படுத்தி விட்டது. கம்யூனிச அகிலத்துடன் இணைப்புக் கொண்ட கம்யூனிஸ்ட் கட்சிகளின் தலைவர்கள் GPU-NKVD பணியமர்த்திய கேள்விகேட்காத வேலையாட்களாக இருந்தனர். கிரெம்ளினில் இருந்து பெறும் எந்த கட்டளைகளையும் செய்வதற்கு அவர்கள் தயாரிக்கப்பட்டிருந்தனர். கம்யூனிச அகிலத்தை சீர்திருத்துவதன் மூலமாக சர்வதேச மார்க்சிசத்திற்கு புத்துயிரூட்ட முடியாது, மாறாக அதற்கு எதிரான ஒரு ஈவிரக்கமற்ற போராட்டத்தின் மூலமே முடியக் கூடியதாய் இருந்தது. இவ்வாறாய், உலக சோசலிசத்தின் நலனுக்கு அர்ப்பணித்துக் கொண்டவர்களுக்கு திறந்திருந்த எஞ்சிய ஒரே “யதார்த்தமான” நடவடிக்கைப் பாதை என்பது, ஒரு புதிய, நான்காவது, அகிலத்தைக் கட்டுவதுதான்.
பழைய அகிலம் சீர்திருத்துவதைக் கடந்து சென்று விட்டிருந்தது என்றால், யாருடைய உத்தரவுகளை அது சிரத்தையுடன் எடுத்து மேற்கொண்டதோ அந்த ஆட்சியும் அவ்வாறே சென்றுவிட்டிருந்தது. கம்யூனிஸ்ட் கட்சி அரசு அதிகாரத்தைப் பிடித்திருந்த சோவியத் ஒன்றியத்தில், நான்காம் அகிலமானது, ஆளும் அதிகாரத்துவத்திற்கு எதிரான அரசியல் புரட்சி என்ற பதாகையை உயர்த்தியது. ஸ்ராலினிச ஆட்சி புரட்சிகரமாய் தூக்கியெறியப்படுவதென்பது அவசியமாக இருந்தது ஏனென்றால் அது ஒரு தனித்துவமான சமூக அடுக்காக அதிகாரத்துவத்தின் சடரீதியான நலன்கள் தொழிலாள வர்க்கத்தின் நலன்களில் இருந்து மிகவும் ஆழமாய் அந்நியப்பட்டதாக இருந்தது. சோவியத் சமூகத்தின் மீதான அதன் மேலாதிக்கம் ஒரு தொழிலாளர்களது அரசாக சோவியத் ஒன்றியம் உயிர் வாழ்வதுடனேயே இணக்கமற்றதாய் ஆகும் மட்டத்திற்கு அது இருந்தது.
காட்டிக் கொடுக்கப்பட்ட புரட்சி என்ற படைப்பின் மூலம், ட்ரொட்ஸ்கி, நான்காம் அகிலத்தை ஸ்தாபிப்பதற்கான அழைப்பிற்கு அடித்தளமாய்க் கொண்டிருந்த அரசியல் முடிவுகள் தத்துவார்த்த நிரூபணத்தைப் பெற்றதோடு ஒரு நிறைவுபெற்ற வேலைத்திட்ட வடிவமும் அளிக்கப் பெற்றிருந்தது. இங்குதான் இந்தப் படைப்பின் அத்தியாவசியமான முக்கியத்துவம் தங்கியிருக்கிறது: எப்படி சமூக ஜனநாயகத்தின் காட்டிக் கொடுப்பு என்பது தொழிலாளர்’ இயக்கத்தில் சர்வதேச மூலதனத்தின் முகமையாக அது சமூகப் பரிணாம வளர்ச்சியுற்றிருந்தன் அரசியல் வெளிப்பாடு என்பதை 1916ல் லெனினின் ஏகாதிபத்தியம் என்ற படைப்பு விளங்கப்படுத்தியிருந்ததோ, அதேபோல் ட்ரொட்ஸ்கியின் காட்டிக் கொடுக்கப்பட்ட புரட்சி ஸ்ராலினிச ஆட்சியின் குற்றங்கள் எதன் அவசியமான வெளிப்பாடாக அமைந்ததோ அந்த சமூக உறவுகளையும் சடத்துவ நலன்களையும் எடுத்துக் காட்டியது. சமூக ஜனநாயகம் போலவே, ஸ்ராலினிசமும் “சீர்திருத்தப்பட” முடியாததாய், அதாவது தொழிலாள வர்க்கத்தின் நலன்களுக்கு சேவை செய்யும்படி செய்ய இயலாததாக ஆகியிருந்தது. ஏனென்றால் அதன் சொந்த நலன்கள் ஏகாதிபத்தியத்தின் நலன்களோடு கட்டப்பட்டிருந்ததாயும் சோவியத் மற்றும் சர்வதேசப் பாட்டாளி வர்க்கத்திற்கு குரோதமானதாயும் இருந்தது.
ட்ரொட்ஸ்கியின் மதிப்பீடு நிகழ்வுகளால் உறுதி செய்யப்படுவதற்கு அதிக காலம் எடுக்கவில்லை. ஹிட்லரின் வெற்றிக்குப் பின்னர், ஸ்ராலினிச ஆட்சியும் கம்யூனிச அகிலமும் வலது நோக்கி தள்ளாடின. லெனின் “திருடர்களின் சமையலறை” என்று குணாம்சப்படுத்தியிருந்த தேசங்களின் சங்கத்தில் (League of Nations) அங்கத்துவம் கோரியது தான் பாசிச வெற்றிக்கு சோவியத் அதிகாரத்துவத்தின் எதிர்வினையாக இருந்தது. சர்வதேச தொழிலாளர் இயக்கத்தில் ஏகாதிபத்தியத்தின் ஒரு அரசியல் முகமையாக சோவியத் அதிகாரத்துவம் உருமாறியிருந்ததன் அடையாளமாக இந்த முடிவு இருந்தது. 1933 முதல், சோவியத் ஒன்றியத்தைப் பாதுகாப்பதற்கும் உலக சோசலிசப் புரட்சியின் நலனுக்கும் இடையில் இருந்த அத்தியாவசியமான இணைப்பு மறுதலிக்கப்பட்டது. அதற்குப் பதிலாய், முன்னெப்போதையும் விடக் கூடுதலான சிடுமூஞ்சித்தனத்துடன், ஸ்ராலினிச ஆட்சியானது சோவியத் ஒன்றியத்தின் பாதுகாப்பை, ஏகாதிபத்திய உலக ஒழுங்கைப் பாதுகாப்பதன் மீது அடிப்படையாகக் கொண்டது. ஜேர்மனியில் ஒரு பாசிச ஆட்சிக்கு (அதன் இருப்பே கிரெம்ளினின் குற்றவியல் கொள்கைகளின் விளைபொருளாகவே இருந்தது) முகம் கொடுத்த நிலையில் ஸ்ராலினிச அதிகாரத்துவமானது சோவியத்-ஏகாதிபத்திய ”கூட்டுப் பாதுகாப்பின்” மூலமாக பாதுகாப்புத் தேட முனைந்தது. கிரெம்ளினுடன் முதலாளித்துவ ஆட்சிகள் செய்து கொள்ளும் இராஜதந்திர உடன்படிக்கைகளுக்கு பிரதிபலனாக, அவ் ஆட்சிகளை கிளர்ச்சி செய்யும் பாட்டாளி வர்க்கத்தின் அச்சுறுத்தலுக்கு எதிராகப் பாதுகாக்க உறுதியளிக்கும் சோவியத் வெளியுறவுக் கொள்கையின் ஒரு நேரடியான சாதனமாக, கம்யூனிச அகிலம் மாற்றப்பட்டது.
1935ல் கம்யூனிச அகிலத்தால் அறிமுகம் செய்யப்பட்ட “மக்கள் முன்னணி” கொள்கையின் அத்தியாவசியமான நோக்கம் இதுதான். சோவியத் ஒன்றியத்தை நோக்கி நட்புடன் இருப்பதாயும் நாஜி ஜேர்மனியை நோக்கிய குரோதத்தை பகிர்ந்து கொள்வதாயும் காட்டிக் கொண்ட முதலாளித்துவ அரசாங்கங்கள் உள்ளூர் கம்யூனிஸ்ட் கட்சிகளிடம் இருந்து ஆதரவைப் பெறத்தொடங்கின. முதலாளித்துவ கட்சிகள் மற்றும் ஆட்சிகளை நோக்கி புரட்சிகர தொழிலாளர்’ இயக்கத்தின் மனோபாவத்தை பாரம்பரியமாக தீர்மானித்து வந்திருந்த அடிப்படையான மார்க்சிச அளவுகோல்கள் அனைத்தும் தூக்கிவீசப்பட்டன. கட்சிகளும் அரசுகளும் வர்க்க நலன்களின் அடிப்படையிலும், அவை பாதுகாக்கும் சொத்து வடிவங்களின் அடிப்படையிலும் இனியும் மதிப்பீடு செய்யப்படுவதில்லை என்றானது; அதற்குப் பதிலாக மார்க்சிசத்தின் விஞ்ஞானபூர்வ வார்த்தைப் பிரயோகங்கள் எல்லாம் “அமைதி-விரும்பும்” மற்றும் “பாசிச-விரோத” போன்ற நழுவுகின்ற வெற்று அடைமொழிகளைக் கொண்டு இடம்பெயர்த்தப்பட்டன. அரசாங்கங்களுக்கு எதிரான தொழிலாள வர்க்கத்தின் போராட்டங்களை ஒடுக்கும் பொறுப்பினை கிரெம்ளின் சார்பாக உள்ளூர் கம்யூனிஸ்ட் கட்சிகள் கையிலெடுத்துக் கொண்டன. “ஜனநாயக” ஏகாதிபத்தியவாதிகளுடன் —இந்த நாமகரணமே பிரிட்டன், பிரான்ஸ், பெல்ஜியம், ஹாலந்து மற்றும் இன்ன பிற நாடுகளின் காலனித்துவ அடிமை நாடுகளின் நிலைமைக்கு கண்ணை மூடிக்கொண்டதாய் இருந்தது— கூட்டணிகளை எதிர்நோக்கிய சோவியத் அதிகாரத்துவமானது, ஏகாதிபத்தியத்தின் உள்ளபடியான நிலையைப் பாதுகாப்பதற்கு தான் உறுதிபூண்டிருப்பதை நிரூபிப்பதற்கு தன்னால் இயன்ற அனைத்தையும் செய்தது. ஏகாதிபத்தியவாதிகளின் தொடர்ந்த கவலைகளை [7] தணிக்கும் விதமாக, ஸ்ராலின், மார்ச் 1, 1936 அன்று ஸ்கிர்ப்ஸ்-ஹோவார்ட் செய்தித்தாள் தொடருக்கு வழங்கிய ஒரு பிரபலமான நேர்காணலில், சோவியத் ஆட்சியின் சர்வதேசப் புரட்சிகர நோக்கங்கள் குறித்த அச்சங்கள் ஒரு “பரிதாபகரமான நகைப்பிற்குரிய தவறான புரிதல்” என்றார். சர்வதேசப் பாட்டாளி வர்க்கத்தின் புரட்சிகரப் போராட்டங்களுக்கு எதிரான சோவியத் அதிகாரத்துவத்தின் இரகசிய சதியாலோசனை ஸ்பெயினில் தனது முழு நிறைவான மற்றும் இரத்தம் தோய்ந்த வெளிப்பாட்டைக் கண்டது. இங்கு முதலாளித்துவ சொத்துகளைப் பாதுகாக்கும் நலன்களின் பேரில் பாசிஸ்டுகளுக்கு எதிரான போராட்டத்தை கம்யூனிஸ்ட் கட்சி கைவிட்டது. 1937 மே மாதத்தில் நடந்த கட்டலோனிய (ஸ்பெயின்) தொழிலாள வர்க்கக் கிளர்ச்சியை முதலாளித்துவ-தாராளவாத அரசாங்கம் GPU வின் உதவியுடன் ஒடுக்கி, அதன்மூலம் பிராங்கோவின் இறுதி வெற்றியை உத்தரவாதம் செய்தது.
சர்வதேச முதலாளித்துவத்துடன் நேரடிக் கூட்டை நோக்கி சோவியத் ஒன்றியம் திரும்பியதானது உருக்குலைந்த தொழிலாளர் அரசின் எல்லைகளுக்குள் அரசு அடக்குமுறை தீவிரப்பட்டதன் மூலம் துணைப்பங்களிப்பு செய்யப்பட்டது. இந்த இரண்டு சமாந்தர நிகழ்ச்சிப்போக்குகளுக்கும் இடையிலமைந்த உட்தொடர்பு பொதுவாக முதலாளித்துவ வரலாற்றாசிரியர்களால் உதாசீனப்படுத்தப்படுகிறது. மக்கள் முன்னணி வாதத்தின் கொண்டாட்ட காலம் (ஸ்ராலினிசம், புத்திஜீவித்தன பாதை அமைப்பாளர்களின் கூடங்களில் கொண்டாடப்பட்டுக் கொண்டிருந்த காலம்) சோவியத் ஒன்றியத்திற்குள்ளாக அக்டோபர் புரட்சியில் மற்றும் உள்நாட்டுப் போரில் ஒரு தலைமைப் பாத்திரத்தை ஆற்றியிருந்த ஏறக்குறைய அனைவரையும் ஒட்டுமொத்தமாய் இல்லாதொழிப்பதுடன் ஏககாலத்தில் ஏன் நடந்தது என்பதை ஆராய்வது இந்த வரலாற்றாசிரியர்களுக்கு அரசியல்ரீதியாய் அசௌகரியமானதாய் இருக்கிறது. 1936 ஆகஸ்டில் மாஸ்கோ விசாரணைகளின் முதல் சுற்றின் தொடக்கத்துடன் ஆரம்பிக்கப்பட்ட இரத்தம்தோய்ந்த களையெடுப்புக்கள், அதிகாரத்துவத்துக்கான புரட்சிகர எதிர்ப்பின் மையக் கவனமாக ஆகத்தக்க அனைவரையும் இல்லாது செய்வதென்பதை மட்டும் நோக்கமாகக் கொண்டிருக்கவில்லை, மாறாக ஸ்ராலினிச ஆட்சி, 1917 இன் மரபியத்துடன் திரும்பவியலாமல் முறித்துக் கொண்டு விட்டது என்பதை உலக முதலாளித்துவத்திற்கு விளங்கப்படுத்துவதற்கும் அது நோக்கம் கொண்டிருந்தது. இப்போது போல்ஷிவிசத்திலிருந்து ஸ்ராலினிசத்தை இரத்த ஆறு ஒன்று பிரிக்கிறது.
மாஸ்கோவில் சினோவியேவ் மற்றும் காமனேவ் மீதான விசாரணை தொடங்குவதற்கு வெறும் இரண்டு வாரங்களுக்கு முன்னதாகத் தான், நோர்வேயில் வாழ்ந்து கொண்டிருந்த ட்ரொட்ஸ்கி, காட்டிக் கொடுக்கப்பட்ட புரட்சி இன் அறிமுக உரையை முடித்து விட்டு கையெழுத்துப் பிரதியின் இறுதிப் பகுதிகளை வெளியீட்டாளர்களுக்கு அனுப்பி வைத்திருந்தார். காலப் பொருத்தம் ரொம்பவும் தற்செயலாய் அமைந்தது: விசாரணை முடிந்து பிரதிவாதிகள் 16 பேருக்கும் தூக்குத்தண்டனை வழங்கப்பட்டதற்கு ஒருநாளைக்குப் பின், நோர்வேயின் சமூக ஜனநாயக அரசாங்கமானது, கிரெம்ளினில் இருந்து வந்த அழுத்தத்திற்கு அடிபணிந்து, சமகால அரசியல் நிகழ்வுகள் குறித்து, அதாவது மாஸ்கோவின் இட்டுக் கட்டப்பட்ட விசாரணை குறித்து, வெளிப்படையாகக் கருத்துக் கூறும் உரிமையை ட்ரொட்ஸ்கி கைவிட வேண்டும் என்று கோரியது. இதனை கோபத்துடன் ட்ரொட்ஸ்கி மறுத்து விட்டபோது, நோர்வே சமூக ஜனநாயகவாதிகள் அவரைக் கைது செய்யவும் பாதுகாப்புக் காவலில் வைக்கவும் உத்தரவிட்டனர். ட்ரொட்ஸ்கி தனது அரசியல் உதவியாளர்களுடன் நேரடித் தொடர்பு கொள்வதற்கு போலிஸ் மறுத்தது, அவரது கடிதப் போக்குவரத்துக்களை நிறுத்தியது, அவரது கையெழுத்துப் பிரதிகளைப் பறிமுதல் செய்தது, வெளியில் உடற்பயிற்சி செய்வதற்கு அவருக்கு அளிக்கப்பட்டிருந்த நேரத்தையும் கூட சுருக்கியது. இந்த கட்டுப்பாடுகள் எல்லாம் அவை கொண்டிருந்த நோக்கத்தை நிறைவேற்றின: நான்கு அதிமுக்கிய மாதங்களுக்கு, ஸ்ராலினிச ஆட்சியால் ட்ரொட்ஸ்கிக்கு எதிராகக் கூறப்பட்டிருந்த பிரம்மாண்டமான குற்றச்சாட்டுகளுக்கு மக்கள் மத்தியில் பதிலளிப்பதில் இருந்து அவர் தடுக்கப்பட்டிருந்தார்.[8]
நோர்வே அரசாங்கத்தின் நடத்தை, அது ட்ரொட்ஸ்கியை நாட்டை விட்டு வெளியேற்றுவதற்கு ஏற்பாடு செய்யச் சென்றபோது, இன்னும் இகழ்ச்சியுற்றதாய் ஆனது. முன்னதாக ஆகஸ்ட் மாதத்தில், நோர்வேயின் பாசிச அமைப்பின் தலைவரான குவிஸ்லிங்கின் ஆதரவாளர்கள் ட்ரொட்ஸ்கியின் வீட்டை உடைத்து உள்ளே புக முயன்று தோற்றிருந்தனர். பிடிபட்டபின் அந்த கன்னத் திருடர்கள் கூறுகையில், ட்ரொட்ஸ்கி நோர்வே நாட்டில் அரசியல் தஞ்சமடைந்தோருக்கான விதிமுறைகளை மீறியிருந்ததை நிரூபணம் செய்கின்ற விடயங்களைத் தாங்கள் கண்டறிந்திருந்ததாய் கூறினர். அவர்களது கூற்றுகளை எல்லாம் போலிஸ் ஆரம்பத்தில் விநோதமானவை என்று நிராகரித்து விட்டது. ஆனால், சினோவியேவ் மற்றும் காமனேவ் விசாரணையின் பின் கிரெம்ளினால் முன்வைக்கப்பட்ட அழுத்தங்களுக்கு பதிலிறுப்பாக, பாசிச கன்னத் திருடர்களின் பொய்களை சந்தர்ப்பத்திற்கேற்ற வகையில் பயன்படுத்துவதற்கு நோர்வே அரசாங்கம் முடிவு செய்தது. கன்னக் கொள்ளையை விசாரிப்பதற்காக கூட்டப்பட்டிருந்தாய் கூறப்பட்ட ஒரு கூட்டத்தில் சாட்சியம் அளிக்கத் தோன்றிய ட்ரொட்ஸ்கி, அதற்குப் பதிலாக, நோர்வே ஜனநாயகத்தின் “விருந்தோம்பலை” துஷ்பிரயோகம் செய்திருந்ததாக நிரூபிக்கும் நோக்கத்துடனான தீவிர விசாரணையின் இலக்காக தான் ஆக்கப்பட்டிருப்பதைக் கண்டார். டிரைகிவ் லி (எதிர்காலத்தில் ஐக்கிய நாடுகளின் பொதுச் செயலர்) மற்றும் அவரது துணை அதிகாரிகளுக்கு முன்பாக நீதித்துறை அமைச்சகத்தில் நின்று கொண்டிருந்த ட்ரொட்ஸ்கி, தன்னை நோர்வேயில் இருந்து வெளியேற்றுவதற்கான ஒரு சட்டபூர்வமான சாக்காக பாசிச முரடர்களின் சாட்சியத்தைப் பயன்படுத்திக்கொண்டு அஞ்சி நடுங்கிக்கொண்டிருந்த சமூக ஜனநாயக அதிகாரிகளை எதிர்கொண்டார்.
விசாரணையின் போதும் அதன் முரண்நகையான பின்நடந்தவைகளின் போதும் சாட்சியாக நின்றவர்களின் ஞாபகங்களில் இருந்தான ஒரு குறிப்பு இவ்வாறு கூறுகிறது: “இந்த தருணத்தில் தான், ட்ரொட்ஸ்கி அமைச்சகத்தின் கூடங்களிலும் வளாகங்களிலும் எதிரொலிக்கும் வகையில் தனது குரலை உயர்த்தினார். ‘இது உங்கள் சொந்த நாட்டில் நாஜிசத்திற்கு அடிபணியும் உங்களது முதல் நடவடிக்கை. இதற்கான விலையை நீங்கள் கொடுப்பீர்கள். ஒரு அரசியல் தஞ்சம் புகுந்தவரை உங்கள் இஷ்டம் போல் கையாளுமளவுக்கு பாதுகாப்பாகவும் சுதந்திரமாகவும் இருப்பதாக நீங்கள் கருதிக் கொண்டிருக்கிறீர்கள். ஆனால் நாள் நெருங்கிக் கொண்டிருக்கிறது —நினைவில் வைத்துக் கொள்ளுங்கள்!— நாஜிக்கள் உங்கள் காலணியணிந்த-ஜனாதிபதியையும் சேர்த்து உங்கள் எல்லோரையும் நாட்டை விட்டுத் துரத்தும் நாள் வெகு அருகில் இருக்கிறது.’ இந்த சம்பந்தமற்ற ஆருடத்தைக் கண்டு டிரைகிவ் லி தோள்களைக் குலுக்கினார். ஆயினும் நான்கு வருடங்களுக்கும் குறைவான காலத்திற்குப் பின் இதே அரசாங்கம் உண்மையில் நாஜி ஆக்கிரமிக்கும் முன்னதாக நோர்வேயில் இருந்து ஓடும் நிலை தோன்றியது; அமைச்சர்களும் அவர்களது வயதான அரசரான ஹாகோன் அரசரும் ஒருவரையொருவர் அணைத்தபடி கரையோரத்தில் நின்று கொண்டு, அவர்களை இங்கிலாந்துக்கு எடுத்துச் செல்லவிருக்கும் ஒரு படகுக்காக பதட்டத்துடன் காத்திருந்து கொண்டிருந்த சமயத்தில், ஒரு தீர்க்கதரிசியின் சாபம் உண்மையானதாக ட்ரொட்ஸ்கியின் வார்த்தைகளை அவர்கள் திகைப்புடன் நினைவுகூர்ந்தனர்.” (ஐஸாக் ட்டொச்சர், தீர்க்கதரிசி: ட்ரொட்ஸ்கி; 1929-40 [நியூயோர்க்: விண்டேஜ் புக்ஸ், 1963], பக். 341-42).
1936 டிசம்பரில் நோர்வேயில் இருந்து வெளியேற்றப்பட்ட பின்னர், ட்ரொட்ஸ்கி நோர்வே சமூக ஜனநாயகவாதிகளின் கோழைத்தனத்தின் மீதான தனது வெறுப்பை மறைத்து வைக்கவில்லை: “இந்த பாதுகாப்புக் காவல் காலத்தை இன்று திரும்பிப் பார்க்கும் போது, நான் கூறியாக வேண்டும், எனது ஒட்டுமொத்த வாழ்க்கையிலும் —இதில் பல விடயங்களை வாழ்ந்து கடந்திருக்கிறேன்— வேறெங்கிலும் நோர்வேயின் ‘சோசலிஸ்ட்’ அரசாங்கம் செய்ததைப் போன்ற ஒரு வருந்தத்தக்க சிடுமூஞ்சித்தனத்துடன் நான் துன்புறுத்தலைச் சந்தித்ததில்லை. நான்கு மாதங்களாக இந்த அமைச்சர்கள், ஜனநாயக இரட்டைவேடத்துடன், வரலாறு அறியத்தக்க மாபெரும் குற்றத்திற்கு எதிர்ப்பு தெரிவிப்பதில் இருந்து என்னைத் தடுப்பதற்காக ஒரு கழுத்துப் பிடி போட்டு வைத்திருந்தனர்.” (லியோன் ட்ரொட்ஸ்கி, லியோன் ட்ரொட்ஸ்கியின் படைப்புக்கள் [1936-37] [நியூயோர்க்: பாத்ஃபைண்டர் பிரஸ், 1970], பக்.36).
காட்டிக் கொடுக்கப்பட்ட புரட்சி எழுதப்பட்டிருந்த நிலைமைகளை ஒருவர் கருத்தில் கொள்ளாவிடினும் கூட, இந்நூல் ஒரு மலைக்க வைக்கும் இலக்கிய மற்றும் புத்திஜீவித்தன சாதனையாக தீர்மானிக்கப்பட வேண்டிய ஒன்றாகும். ஏற்கனவே ஒரு மூலையில் இருக்கும் நோர்வேயில் உள்ள ஒரு மூலைக் கிராமத்தில் வாழ்ந்து கொண்டு, சோவியத் குடிமக்களுடன் அனைத்து நேரடித் தொடர்புகளும் துண்டிக்கப்பட்டு, ஊடகங்களின் மூலம் எவ்வளவு சிறப்பாய் முடியுமோ அவ்வளவு மட்டும் நிகழ்வுகளைப் பின்பற்றத் தள்ளப்பட்டு இருந்தபோதிலும், ட்ரொட்ஸ்கியால் சோவியத் ஒன்றியம் குறித்த அற்புதமான விவரவிளக்கங்களுடனான, திறம்பட்ட மற்றும் காலத்திற்கு தாக்குப் பிடிக்கின்ற ஒரு பகுப்பாய்வை உருவாக்குவதில் வெற்றிபெற முடிந்தது. யதார்த்தத்தின் ஒரு ஆழமான விமர்சனரீதியான தன்மை ட்ரொட்ஸ்கியின் படைப்புக்கு அசைவூட்டியது. இப்படைப்பு ஒரு பின்தங்கிய நாடு பாட்டாளி வர்க்கப் புரட்சியின் அடிப்படையில் சோசலிசத்தைக் கட்டுமானம் செய்யப் புறப்பட்டு ஆனால் அவசியமான பொருளாதார, தொழில்நுட்ப மற்றும் கலாச்சார ஆதாரவளங்கள் இல்லாத நிலையில் எதிர்கொண்ட பிரச்சினைகளை வெளிக்கொணரவும் விளக்கவும் முனைந்துள்ளது. கம்யூனிச விரோத இலக்கியங்களுக்கு எதிரான வகையில், காட்டிக் கொடுக்கப்பட்ட புரட்சி ஆனது சோவியத் அரசால் அது உருவாக்கப்பட்ட இரண்டு தசாப்தங்களுக்குள்ளாக எட்ட முடிந்த உண்மையான மற்றும், பல துறைகளில் மலைக்க வைக்கும் முன்னேற்றங்களை கவனத்துடன் சுருக்கமாய் எடுத்துரைத்தது. இந்த முன்னேற்றங்கள் பாட்டாளி வர்க்கப் புரட்சியின் படைப்பாக்க சாத்தியக்கூறுகளையும் மத்திய திட்டமிடல் கோட்பாட்டில் உட்பொதிந்திருக்கும் பரந்த முற்போக்கான சாத்தியத்திறனையும் நிரூபித்தன என்று ட்ரொட்ஸ்கி வலியுறுத்தினார். ஆயினும் (இங்கே அவர் கிரெம்ளினின் எண்ணிலடங்கா புத்திஜீவித துதிபாடிகளுக்கு பதிலிறுப்பு செய்கிறார்) ஸ்ராலினிச ஆட்சியின் கொள்கைகள், அதன் குறுகிய கால வெற்றிகள் எல்லாம் இருந்தபோதிலும், சோவியத் அரசின் முரண்பாடுகளைத் தீவிரப்படுத்திக் கொண்டிருந்தன, அதன் அழிவை நோக்கி இட்டுச் சென்று கொண்டிருந்தன.
இன்று ஸ்ராலினிச ஆட்சியின் திக்கற்ற நெருக்கடியை முதலாளித்துவ வர்க்கம் ”சோசலிசம் தோல்வியுற்றிருக்கிறது” என்பதற்கான இறுதியான மற்றும் தீர்மானமான ஆதாரமாக பற்றிக் கொண்டிருக்கிறது. ஆயினும் இந்தப் பிரகடனங்களின் மதிப்பு எல்லாம் சிறந்த வகையில் தீர்மானிக்கப்படுவது அவை சொல்வதைக்கொண்டோ அல்லது அவை சொல்லத் தவறுவதைக் கொண்டோ அல்ல. முதலாளித்துவ ஊடகங்களிலும் சரி அல்லது “மரியாதைக்குரிய” ஏட்டுக் கல்வி அணுகுமுறைகளிலும் சரி சோவியத் பொருளாதாரத்தின் மீதான ஸ்ராலினிச கீழறுப்பு வேலை குறித்த ட்ரொட்ஸ்கிச, அதாவது, மார்க்சிச விமர்சனம் குறித்த எந்த குறிப்பையும் காண்பதென்பது ஏறக்குறைய சாத்தியமற்றதாய் உள்ளது. ஆயினும் ட்ரொட்ஸ்கியின் கூர்ந்த கவனிப்புகள் மலைப்பூட்டும் வகையில் தூரதிருஷ்ட்டி பெற்றவையாய் இருந்தன. இப்போது முற்றுமுடிவான வடிவத்தை எடுத்திருக்கக் கூடிய ஏறக்குறைய அத்தனை பிரச்சினைகளையும் அவர் முன்னெதிர்பார்த்திருந்தார். அத்துடன் சோவியத் பொருளாதாரத்தின் வெற்றிகள் மேற்கத்திய புத்திஜீவித் தட்டின் பரந்த பிரிவுகளில் விமர்சனமற்ற போற்றுதலைப் பெற்றதொரு சமயத்தில் அவர் இதனைச் செய்தார். உழைப்பின் உற்பத்தித்திறன், சோசலிசக் கட்டுமானத்தில் பணத்தின் பங்கு, பணவீக்கத்தின் அபாயங்கள், மற்றும் அதிகாரத்துவ திட்டமிடலின் மட்டுப்படுத்தப்பட்ட தன்மைகள் ஆகிய பிரச்சினைகளில் ட்ரொட்ஸ்கியின் ஆழ்ந்த பார்வையே மார்க்சிசத்தை அதிகாரத்துவத்தின் திவாலாகிப்போன அறியாமையுடனான கொள்கைகளை கொண்டு அடையாளம் காண்பது ஒரு அவதூறு என்பதற்கு அதிகமானதல்ல என்பதை நிரூபிக்கிறது.
'நிர்வாக-உத்தரவுப் பொருளாதாரத்தின்” தீமைகளை சோவியத் ஊடகங்கள் கண்டறிவதற்குப் பல தசாப்தங்களுக்கு முன்பாய் ட்ரொட்ஸ்கி எழுதினார்:
“நிர்வாகத் திட்டமிடல் தனது சக்தியைப் போதுமான அளவிற்கு வெளிப்படுத்தியுள்ளது —ஆனால் அதே அளவுக்கு அதன் சக்தியின் வரம்புக்குட்பட்ட தன்மையையும் தான். ஒரு முற்கூட்டி திட்டமிட்ட பொருளாதார வேலைத்திட்டம், அதிலும் 170 மில்லியன் மக்கள்தொகை கொண்ட நகரத்திற்கும் கிராமத்திற்கும் இடையில் ஒரு ஆழமான முரண்பாட்டை உடைய ஒரு பின்தங்கிய நாட்டில், ஒரு நிலையான தேவவாக்கு அல்ல, மாறாக ஒரு தோராயமாய் இயங்கக்கூடிய அனுமானக் கொள்கை தான். அது நிறைவேற்றப்படும் நிகழ்ச்சிப்போக்கில் அது சரிபார்க்கப்படவும் மறுகட்டுமானம் செய்யப்படவும் வேண்டும். சொல்லப் போனால் ஒரு விதியாகவே நாம் கொள்ளலாம்: ஒரு நிர்வாகப் பணி எவ்வளவு கூடுதலாய் “துல்லியமாக” நிறைவேற்றப்படுகிறதோ, பொருளாதாரத் தலைமை அவ்வளவு மோசமாக உள்ளது என்பதை. திட்டங்களைக் கட்டுப்படுத்தவும் செயல்படுத்தவும் இரண்டு நெம்புகோல்கள் அவசியப்படுகின்றன: ஆர்வமுள்ள மக்கள் தலைமையில், தாங்களே உண்மையாய் பங்கேற்பதன் வடிவிலான ஒரு அரசியல் நெம்புகோல்; இன்னொன்று முற்கூட்டி திட்டமிட்ட கணக்குகளை ஒரு உலகளாவிய சமமதிப்பின் உதவியுடன் உண்மையாய் சரிபார்க்கும் வடிவிலான நிதியியல் நெம்புகோல், ஒரு ஸ்திரமான பண அமைப்புமுறை இல்லாமல் இது சிந்தித்துப் பார்க்கவும் முடியாதது.” (பக். 58-59)
நிர்வாக அதிகாரிகள் (nomenklatura) என்ற வார்த்தை சர்வதேச சமூகவியல் மற்றும் அரசியல் அகராதியில் நுழைவதற்குப் பல ஆண்டுகளுக்கு முன்பாகவே, காட்டிக் கொடுக்கப்பட்ட புரட்சி, அதிகாரத்துவ உயரடுக்கின் சமூகத் தட்டுகளைக் குறித்த ஒரு இரத்தினச்சுருக்கத்தை வழங்கி விட்டது. ஸ்ராலினிச ஆட்சியின் உண்மையான சமூக அடித்தளத்தை ட்ரொட்ஸ்கி அடையாளம் காட்டினார்: அரசு நிர்வாகம், தொழிற்சங்கங்கள், மற்றும் கூட்டுறவு நிர்வாகங்களின் பெருமிதம் பீடித்த பொது ஊழியர்கள்; எண்ணிலடங்கா நகர, மாவட்ட மற்றும் பிராந்திய சோவியத்துகளைச் சேர்ந்த பத்தாயிரக்கணக்கிலான தலைவர்கள் மற்றும் நிர்வாகக் குழு உறுப்பினர்கள்; இராணுவம், கடற்படை மற்றும் இரகசிய போலிசின் மேல் அடுக்குகள், இவை போன்றவை. சமூக ஒட்டுண்ணிகளின் பரந்த அடுக்கினால் கொள்ளையிடப்படும் சோவியத் ஆதாரவளங்களின் பங்கினை மதிப்பிட ட்ரொட்ஸ்கி முயன்றார்: “சம்பளங்கள் மற்றும் அனைத்து வகை சேவை வடிவங்கள், மற்றும் பாதி சட்டபூர்வமான துணை வருவாய் ஆதாரங்களின் அனைத்து வகை ஆகியவற்றை மட்டுமன்றி, திரையரங்குகள், ஓய்வு அரண்மனைகள், மருத்துவமனைகள், உடல்நல இல்லங்கள், கோடை ஓய்விடங்கள், அருங்காட்சியகங்கள், மனமகிழ்வு மன்றங்கள், உடற்பயிற்சி ஸ்தாபனங்கள், போன்றவற்றிலும் அதிகாரத்துவத்தின் மற்றும் சோவியத் கனவான்களின் பங்கையும் கூட்டிப் பார்த்தால், மக்கள் தொகையில் 15, அல்லது, 20 சதவீதம் என்று வைத்துக் கொள்ளுங்கள், எஞ்சிய 80 முதல் 85 சதவீத மக்கள் அனுபவிக்கும் சொத்திற்குக் குறையாமல் அனுபவிக்கிறார்கள் என்பதான முடிவுக்குத் தான் அவசியமாய் வர வேண்டியிருக்கும்.” (பக். 121-22)
சோவியத் ஒன்றியத்தின் அன்றாட வாழ்வின் யதார்த்தங்களுடன் ட்ரொட்ஸ்கி அற்புதமாய் ஒன்றிய நிலை கொண்டிருந்தார். ஸ்ராலின் வெகுஜனங்களின் மீது கொடையளிக்கப்பட்டதாய் கூறப்பட்ட “மகிழ்ச்சியான வாழ்க்கை” குறித்தான உத்தியோகபூர்வ போற்றுதல்களுக்கு முரண்பட்டதாய் நின்ற வீடின்மை, விபச்சாரம், ஒரு கூடுதல் அறைக்காக செய்து கொள்ளப்படும் திருமணங்கள் போன்ற சோவியத் ஊடகங்களிலும் பதவி பெற்ற தலைவர்களின் அறிக்கைகளிலும் இலேசாய் தலைநீட்டும் மற்றும் மறைமுகமான குறிப்புகளை அவர் எடுத்துக் கொண்டார். சமூக சமத்துவமின்மையின் வளர்ச்சியை அம்பலமாக்கிய வாழ்க்கையின் இந்த “சிறு சிறு விவரங்கள்”, ஏடுகளில் அவை அவ்வப்போது தலைகாட்டியபோது, அசாத்தியமான உணர்திறனுடன் அவர் குறிப்பிட்டார்: அதிகாரியைக் குறிப்பிடுகையில் தொழிலாளி “நீங்கள்” என்கிறார், அதே சமயத்தில் அதிகாரியோ தனது பதிலில் “நீ” என்றே வழமையான மொழியைப் பயன்படுத்துகிறார்; தொழிலாளிகள் மார்ஜரினையும் மகோர்காவையும் வைத்து சமாளிக்கிறார்கள், அதிகாரிகளோ வெண்ணெய், தூய புகையிலை, மற்றும் ஆடம்பரவாகனங்களை (லிமோசின்களை) அனுபவிக்கிறார்கள். ஒரு குணாம்சமான பத்தியில், “வீட்டில் செய்த தொப்பிகளை அல்லது பருத்திச் சட்டைகளை தெருவில் விற்பனை செய்யும் உணவுக்காக போராடும் பெண்களை” கைது செய்வது குறித்து கடுங்கோபத்துடன் கருத்துக் கூறும் ட்ரொட்ஸ்கி, சோவியத் ஒன்றியத்தில் ஊகவணிகத்தின் அடிப்படையே அழிக்கப்பட்டு விட்டது என்றும் “வர்க்க கண்காணிப்பு இல்லாததால்” தான் அது இன்னும் தென்பட்டுக் கொண்டிருக்கிறது என்றும் தெரிவித்த ஸ்ராலினின் பகட்டான சிடுமூஞ்சித்தனமான கூற்றினை கோபத்துடன் நிராகரித்தார்.
“ஊக வணிகத்தின் பொருளாதார அடிப்படை அழிக்கப்பட்டிருக்கிறதா?” என்று அவர் முரண்நகையுடன் வினவினார். “அப்படியானால் எந்த கண்காணிப்புக்கும் எந்த அவசியமும் இல்லையே. உதாரணமாய் மக்களுக்குப் போதுமான அளவில் கண்ணியமான தொப்பிகளை ஒரு அரசால் வழங்க முடிந்ததென்றால், அந்த துரதிர்ஷ்டவசமான வீதி வணிகர்களைக் கைது செய்யும் அவசியம் இருக்கப் போவதில்லையே” (பக்.104).
சோசலிசப் பார்வை ஸ்ராலினிசத்தால் மதிப்பிழக்கச் செய்யப்படுவதற்கு எதிரான ட்ரொட்ஸ்கியின் கோபமான எதிர்ப்பு, இந்த படைப்பின் பக்கங்களில் எதிரொலிக்கிறது. “மாணவனின் பள்ளியும் சமூக வாழ்க்கையும் ஒழுங்குமுறைவாதத்தாலும் இரட்டைவேடத்தாலும் நிரம்பியதாய் இருக்கிறது” என்று அவர் எழுதினார். (பக்:137) விமர்சன சிந்தனையின் அனைத்து வடிவங்களும் மூச்சுத்திணறடிக்கப்படுகின்றன: “தம்மால் எவ்விதமான வன்முறையையும் செய்யமுடியாத திறமையுள்ள எழுத்தாளர்கள், வெட்கங்கெட்டதனத்தையும் டசின் கணக்கிலான மேற்கோள்களையும் மட்டும் சுமந்து திரியும் ஒரு கட்டளையிடுவோர் கூட்டத்தால் பின்தொடரப்படுகிறார்கள். மிகப் புகழ்பெற்ற கலைஞர்கள் ஒன்றில் தற்கொலை செய்து கொள்கிறார்கள், அல்லது தங்களது விடயத்தை எங்கோ கடந்த காலத்தின் மூலையில் காண்கிறார்கள், அல்லது அமைதியாகி விடுகிறார்கள்” (பக்.156). சோவியத் ஒன்றியத்தை உள்ளடக்கி இருந்த தேசங்களின் மரபியம் மற்றும் அபிவிருத்தி மீதான மிருகத்தனமான அடக்குமுறையை ட்ரொட்ஸ்கி வெளிப்படையாகக் கண்டித்தார்: “அதே நடத்துநரின் குச்சிதான், அல்லது இன்னும் தெளிவாய்ச் சொன்னால் அதே போலிஸ் லத்திதான், சோவியத் ஒன்றியத்தின் அனைத்து மக்களின் புத்திஜீவித்தன நடவடிக்கைகளையும் கட்டுப்படுத்த பொறுப்பேற்கிறது எனும்போது யதார்த்தத்தில் தேசியக் கலாச்சாரத்தின் தனித்துவம் குறித்து அங்கு பேசுவதற்கே இடமில்லை. உக்ரேனிய, வெள்ளை ரஷ்ய, ஜோர்ஜிய, அல்லது தியுர்க்கிய செய்தித்தாள்கள் மற்றும் புத்தகங்கள் எல்லாம், அதிகாரத்துவ உத்தரவுகளை அந்தந்த நாட்டின் மொழியில் மொழிபெயர்க்கப்பட்டதாக மட்டுமே உள்ளன. (p. 150)
ஜோர்ஜ் பேர்னார்ட் ஷா மற்றும் விடாப்பிடியான சிட்னி மற்றும் பெயாட்ரிஸ் வெப் (அதிகாரத்துவத்தின் அழைப்பின் பேரில் சோவியத் ஒன்றியத்திற்குப் பயணம் செய்த இவர்களது நாடகத்தனமான சுற்றுப்பயணங்களின் ஒவ்வொரு கட்டத்திலும் மிக உயர்ரக வசதிகள் வழங்கப்பட்டிருந்தன) போன்ற ”தீவிர சுற்றுலாப் பயணிகள்” வழங்கிய சோவியத் வாழ்க்கை குறித்த முட்டாள்தனமான விமர்சனரீதியற்ற விவரிப்புகளை எதிர்த்த ட்ரொட்ஸ்கி, “சமூக முரண்பாடுகளின் வளர்ச்சிக்குத் தங்களது கண்களை மூடிக் கொண்டு, வருங்கால இலட்சியங்களை கொண்டு தங்களை ஆசுவசப்படுத்திக் கொள்கிறவர்களின் (அதன் சாவியையும் அதிகாரத்துவத்தின் கரங்களில் மரியாதையுடன் அளித்து விடுவதற்கு அவர்கள் ஆலோசனை கூறுகிறார்கள்) செயலற்ற அத்துடன் அடிப்படையாய் உணர்ச்சியற்ற நம்பிக்கை குறித்து கோபம் கொள்ளாமல் இருப்பதென்பது சாத்தியமில்லை” என்றே தான் கண்டதாக ஒப்புக் கொள்கிறார். (பக். 135)
சோவியத் ஒன்றியம் உயிர்வாழ்வும் மற்றும் சோசலிச வழியில் அதனது முன்னேற்றமும் இரண்டு ஒன்றோடொன்று தொடர்புபட்ட அபிவிருத்திகளில் தங்கியிருந்ததாக ட்ரொட்ஸ்கி வலியுறுத்தினார்: உலக ஏகாதிபத்தியத்தின் முக்கிய மையங்களில் தொழிலாள வர்க்கத்தின் புரட்சிகர இயக்கம் எழுச்சியுறுவது மற்றும் சோவியத் தொழிலாள வர்க்கத்தால் அதிகாரத்துவம் புரட்சிகரமாய் தூக்கியெறியப்படுவது. ஆனால் இந்த சாதகமான அபிவிருத்திகள் இல்லாத நிலையில், சோவியத் ஒன்றியத்தின் வீழ்ச்சியும் முதலாளித்துவம் மீண்டும் ஸ்தாபிக்கப்படுவதும் தவிர்க்கவியலாதது என்பது நிரூபணமாகும்.
சோவியத் ஒன்றியத்துக்குள்ளாக, அதிகாரத்துவம்தான் எதிர்ப்புரட்சிக்கான முதன்மையான சமூக மூலவளமாய் இருப்பதாய் ட்ரொட்ஸ்கி எச்சரித்தார். அதிகாரத்துவம் குறித்த அவரது சமூகவியல் மதிப்பீட்டை கவனத்திற்கு எடுத்துக்கொள்வதும் இங்கே அவசியமாகும். அதிகாரத்துவத்தை ஒரு புதிய ஆளும் வர்க்கமாய் ஜனரஞ்சக வரையறைகள் செய்யப்படுவதை ஏராளமான சந்தர்ப்பங்களில் அவர் கண்டனம் செய்திருந்தார். ட்ரொட்ஸ்கியைப் பொறுத்தவரை, வர்க்கம் என்ற வார்த்தை ஒரு விஞ்ஞான கருத்தாக்கமே தவிர, ஒரு வாய்வழக்காய் அழைக்கும்பெயர் அல்ல. மார்க்சிசத்தின் நிலைப்பாட்டில், ஒரு வர்க்கம் என்பது, சமூகத்தின் பொருளாதாரக் கட்டமைப்பில் கொண்டிருக்கும் அதன் சுயாதீனமான வேர்களில் தான் முக்கியமாக அடையாளம் காட்டப்படுகின்றது. அதன் இருப்பானது வரலாற்றுரீதியான குறிப்பிட்ட சொத்துடமை வடிவங்கள் மற்றும் உற்பத்தி உறவுகளுடன் பிணைந்துள்ளது, அவை தம்மளவில் இந்த சமூக அடுக்கின் நடவடிக்கைகளில் வடிவம் பெற்றுத் திகழ்கின்றன. ஆனால், சோவியத் ஒன்றியத்திற்குள்ளாக, அதிகாரத்துவம், அது அரசியல் அதிகாரத்தை பெற்றிருந்தாலும், இத்தகையதொரு வரலாற்று சக்தியை பிரதிநிதித்துவப்படுத்தவில்லை. சோவியத் ஒன்றியத்தில் நிலவிய சொத்து வடிவங்கள் ஒரு பாட்டாளி வர்க்கப் புரட்சியால் உருவாக்கப்பட்டிருந்தன; புதிய சொத்து வடிவங்களுக்கான வெகுஜன அடித்தளத்தை வழங்கியிருந்தது பாட்டாளி வர்க்கமே தவிர, அதிகாரத்துவம் அல்ல. அதிகாரத்துவம், இந்த புதிய சொத்து வடிவங்களுடன் தன்னை இணைத்துக் கொண்டது, அத்துடன் அது அரசியல் அதிகாரத்தை தட்டிப்பறித்துக் கொண்டதன் அடிப்படையில் அவற்றிடம் இருந்து தனது சிறப்புரிமைகளை பெற்றுக் கொண்டது.
ஒரு வர்க்கமாக இல்லாதபோதும் சோவியத் அதிகாரத்துவத்தை வெறுமனே மற்ற சமுதாயங்களுக்குள் உள்ளிருக்கும் அரசு அதிகாரத்துவங்களுடன் வெறுமனே ஒப்பிட்டுவிட முடியாது என்பதை ட்ரொட்ஸ்கி ஒப்புக் கொண்டார்: “உற்பத்தியின் மிக முக்கியமான சாதனங்கள் அரசின் கைகளில் குவிந்துள்ள ஒரு நாட்டில், அது அரசியல் அதிகாரத்தைக் கைப்பற்றியிருந்தது என்ற அடிப்படையான உண்மை, அதிகாரத்துவத்திற்கும் நாட்டின் செல்வந்தர்களுக்கும் இடையில் ஒரு புதிய இதுவரை அறிந்திராத உறவை உருவாக்குகிறது. உற்பத்தி சாதனங்கள் அரசுக்குச் சொந்தமானவை. ஆனால் அரசோ, சொல்வதானால், அதிகாரத்துவத்திற்குச் ‘சொந்த’மாய் இருக்கிறது. இந்த முற்றிலும் புதிய உறவுகள் இன்னும் கெட்டியாகுமானால், இயல்பு நிர்ணயமாகி சட்டபூர்வமாக்கப்படுமானால் (அது தொழிலாளர்களிடம் இருந்து எதிர்ப்புகளை சந்திக்கும் நிலையிலோ அல்லது எதிர்ப்புகள் அற்ற நிலையிலோ) அவை, நீண்டகாலப் போக்கில், பாட்டாளி வர்க்கப் புரட்சியின் சமூக வெற்றிகள் முற்றிலுமாய் கலைக்கப்படுவதற்கு இட்டுச் செல்லும்” (பக்கம். 211).
“சிறப்புவகை சொத்து வடிவத்தில் தனது ஆதிக்கத்திற்கான சமூக ஆதரவை” முதலில் உருவாக்காமல் அதிகாரத்துவம் தன்னை ஒரு ஆளும் வர்க்கமாக மாற்ற முடியாது என்பதை ட்ரொட்ஸ்கி வலியுறுத்தினார். (பக். 211-12). ஆனால் ஆளும் அடுக்கின் சமூகப் பரிணாமம் அந்த திசையில் எதிர்ப்பின்றி முன்னேறிச் சென்றதைக் குறித்து அவர் எச்சரித்தார். சோவியத் ஒன்றியத்தின் நடப்பு அரசியல் சூழ்நிலையை பல தசாப்தங்களாய் எதிர்பார்த்திருந்த ட்ரொட்ஸ்கி, “இப்போதைய அதிகாரத்துவத்தினர், நிர்வாகிகள், தொழில்நுட்ப பணியாளர்கள், இயக்குநர்கள், கட்சிச் செயலர்கள் மற்றும் பொதுவாக உயர் வட்டங்களில் இருக்கும் சிறப்புரிமைபெற்றோர் ஆகியோரிடையே முதலாளித்துவ மீட்சி வேலைத்திட்டத்திற்கு சேவைசெய்ய ஆயத்தமாய் இருப்போரின் எண்ணிக்கைக்குப் பஞ்சமிருக்காது” என்று அறிவித்தார். (பக்கம். 216)
எதிர்ப் புரட்சியின் உடனடியான விளைவுகளை ட்ரொட்ஸ்கி கணித்தார்: “சோவியத் ஆட்சியின் வீழ்ச்சி தவிர்க்கமுடியாதவகையில் திட்டமிட்ட பொருளாதாரத்தின் உருக்குலைவுக்கு இட்டுச் செல்லும், அதன் மூலம் அரசு சொத்துடைமைகள் அழிக்கப்படும். டிரஸ்டுகளுக்கும் தொழிற்சாலைகளுக்கும் இடையிலான நிர்ப்பந்தமான பிணைப்பு கழன்று விடும். மிகவும் வெற்றிகரமான நிறுவனங்கள் சுதந்திரமான பாதைக்கு வருவதில் வெற்றிபெறும். அவை தங்களை பங்கு நிறுவனங்களாக மாற்றிக் கொள்ளலாம், அல்லது வேறு ஏதோ இடைமருவு சொத்து வடிவத்திற்கு (உதாரணத்திற்கு, தொழிலாளர்கள் இலாபங்களில் பங்கு பெறுவதான ஒன்றைக் கூறலாம்) தங்களை மாற்றிக் கொள்ளும். அதே நேரத்தில் இன்னும் எளிதாக கூட்டுப் பண்ணைகள் சிதைந்துவிடும். நடப்பு அதிகாரத்துவ சர்வாதிகாரத்தின் வீழ்ச்சி ஒரு புதிய சோசலிச சக்தியால் இடம்பெயர்க்கப்படாது போனால், அது பொருளாதாரம் மற்றும் கலாச்சாரத்தின் பெருந்துயரகரமான வீழ்ச்சியுடன் முதலாளித்துவ உறவுகளுக்குத் திரும்புவதையே அர்த்தப்படுத்தும்”. (பக். 212-13)
நாம் காண்பதுபோல், ட்ரொட்ஸ்கி, சோவியத் ஒன்றியம் எதிர்கொண்டிருந்த அபாயங்களை ஒருபோதும் குறைத்து மதிப்பிடவில்லை என்ற அதே சமயத்தில், முதலாளித்துவத்தின் மீட்சி ஏற்கனவே சாதிக்கப்பட்டு விட்டது என்றோ அல்லது அது அமைதியான முறையில் ஜனநாயகரீதியாக சாதிக்கப்பட முடியும் என்றோ கூறப்பட்ட கருத்தை தீவிரமாய் நிராகரித்தார். இத்தகையதொரு அளவிலான ஒரு சமூக எதிர்ப்புரட்சி என்பது, அதன் அபிவிருத்தியின் ஆரம்ப வடிவங்கள் என்னவாய் இருந்தாலும், இரத்தக்களரியான மிகவும் மிருகத்தனமான வழிமுறைகளின் மூலமாக மட்டுமே எட்டப்பட முடியும். சோவியத் தொழிலாள வர்க்கத்தை நசுக்காமல் முதலாளித்துவம் மீட்சி செய்யப்பட முடியாது. இவ்வாறாக, சோவியத் ஒன்றியத்தின் தலைவிதி —முதலாளித்துவத்தை நோக்கியோ அல்லது சோசலிசத்தை நோக்கியோ— “தேசிய அரங்கிலும் மற்றும் உலக அரங்கிலும் வாழும் சமூக சக்திகளின் ஒரு போராட்டத்தில்” தங்கியிருந்தது என்பதை ட்ரொட்ஸ்கி தெளிவான தூரதரிசனமாய் கண்டார்.
காட்டிக் கொடுக்கப்பட்ட புரட்சியை பூரணப்படுத்தியதோடு ட்ரொட்ஸ்கி ஸ்ராலினிசத்தின் மீதான ஒரு வரலாற்று வெற்றியை பெற்றார். தோற்றப்பாட்டில் ஸ்ராலின் சர்வவல்லமையின் உச்சத்தில் இருந்த ஒரு சமயத்தில், மார்க்சிசத்தின் அடிப்படையில் அந்த கொடுங்கோலரது ஆட்சியின் திவால்நிலையையும் அதன் வீழ்ச்சியின் தவிர்க்கவியலா தன்மையையும் ட்ரொட்ஸ்கி விளங்கப்படுத்தினார். ஆனால் அதன் வீழ்ச்சியின் முடிவு தொழிலாள வர்க்கத்தில் புரட்சிகரத் தலைமை அபிவிருத்தியுறுவதன் மீதும் அத்துடன் வர்க்கப் போராட்டத்தின் பாதையில் செல்வாக்கு செலுத்தத்தக்க அதன் திறன் மீதும்தான் ஒரு மிகப்பெரும் மட்டத்திற்கு தங்கியிருந்தது. சோவியத் ஒன்றியத்திற்கு வெளியே, சமூக ஜனநாயகத்தின் மற்றும் ஸ்ராலினிசத்தின் ஊழலடைந்த மற்றும் பிற்போக்குத்தனமான அதிகாரத்துவங்கள் தொழிலாள வர்க்கத்தின் பரந்துபட்ட அமைப்புகள் மீதான தங்களது கட்டுப்பாட்டை தக்கவைத்துக் கொள்ள முடிந்து தொடர்ந்து முதலாளித்துவத்திற்கு எதிரான போராட்டத்தை கீழறுத்துக் கொண்டிருக்குமானால், அதே சமயத்தில் சோவியத் ஒன்றியத்துக்குள்ளாக, தொழிலாள வர்க்கம் ஒரு புதிய புரட்சிகர அமைப்பை உருவாக்கி, அதிகாரத்துவத்தை தூக்கியெறியவும் சோவியத்துகளை பாட்டாளி வர்க்க சர்வாதிகாரத்தின் உண்மையான அங்கங்களாக புத்துயிரூட்ட இயலாது இருக்குமேயானால், அப்போது முதலாவது தொழிலாளர் அரசானது ஸ்ராலினிசத்தின் சிதைவுகளுக்குக் கீழே தானும் மறைந்துபோகும். அரசியல் மற்றும் வரலாற்று மாற்றீடுகளை அடுத்தடுத்து நிறுத்தி எடுத்துக் காட்டியவகையில், நான்காம் அகிலத்தின் பணியாக இருந்தது என்னவென்றால், தொழிலாள வர்க்கத்தின் பழைய அமைப்புகளின் காட்டிக் கொடுப்புகளால் உருவாக்கப்பட்ட முட்டுக்கட்டையான நிலையில் இருந்து தொழிலாள வர்க்கம் வெளியே வருவதற்கான வழியைக் காட்டுவதும், புரட்சிகரத் தலைமையின் நெருக்கடியைத் தீர்ப்பதும் தான்.
நான்காம் அகிலத்தின் ஸ்தாபக காங்கிரசுக்கு முன்வந்த மாதங்களில், ட்ரொட்ஸ்கிச இயக்கத்தின் தலைமைக் காரியாளர்களை இல்லாதொழிக்கும் நோக்கத்துடன் தொடர்ச்சியான படுகொலைகளை GPU நடத்தியது. லியோன் ட்ரொட்ஸ்கியின் ஒரு அரசியல் செயலராக இருந்த ஏர்வின் வொல்ஃப், GPUவில் இருந்து விலகி ஸ்ராலினைக் கண்டனம் செய்து நான்காம் அகிலத்திற்கான தனது விசுவாசத்தைப் பிரகடனம் செய்த இக்னாஸ் ரீய்ஸ், நான்காம் அகிலத்தின் செயலரான ருடோல்ஃப் கிளெமெண்ட், ட்ரொட்ஸ்கியின் மகனான லியோன் செடோவ் ஆகியோர் இதில் பலியானார்கள். இந்த குற்றங்கள் எல்லாம் நடந்த போதிலும், 1938, செப்டம்பர் 3 அன்று பாரிஸின் புறநகர்ப் பகுதியில் ஸ்தாபக காங்கிரஸ் நடத்தப்பட்டது. காங்கிரசில் நிறைவேற்றப்பட்ட வேலைத்திட்டம் (இது ட்ரொட்ஸ்கியால் எழுதப்பட்டிருந்தது) காட்டிக் கொடுக்கப்பட்ட புரட்சி இன் தத்துவார்த்த கருத்தாக்கங்களை இரத்தினச் சுருக்கமாகக் கொண்டிருந்தது:
அது விளக்கியது: “அக்டோபர் புரட்சியில் இருந்து சோவியத் ஒன்றியம் ஒரு தொழிலாளர்’ அரசாய் எழுந்தது. சோசலிச அபிவிருத்திக்கான ஒரு அத்தியாவசிய முன்நிபந்தனையாக இருந்த, உற்பத்தி சாதனங்கள் அரசுடைமையாய் இருப்பதென்பது, உற்பத்தி சக்திகளின் துரிதமான வளர்ச்சிக்கான சாத்தியங்களைத் திறந்து விட்டது. ஆனால் அதே சமயத்தில், தொழிலாளர்’ அரசின் எந்திரமோ ஒரு முழுமையான சீரழிவுக்குச் சென்றது: தொழிலாள வர்க்கத்தின் ஒரு ஆயுதமாக இருந்ததில் இருந்து தொழிலாள வர்க்கத்திற்கு எதிரான அதிகாரத்துவ வன்முறையின் ஒரு ஆயுதமாகவும், அத்துடன் மேலும் மேலும் நாட்டின் பொருளாதாரத்தைக் கீழறுக்கும் ஒரு ஆயுதமாகவும் மாற்றப்பட்டது. ஒரு பின்தங்கிய தனிமைப்பட்ட தொழிலாளர்’ அரசு அதிகாரத்துவமயமாக்கப்பட்டதும் அத்துடன் அதிகாரத்துவம் சர்வவல்லமை படைத்த சிறப்புரிமை பெற்ற சாதியாக உருமாறியதும் தனியொரு நாட்டில் சோசலிசம் என்னும் தத்துவத்திற்கான தத்துவார்த்தரீதியில் மட்டுமல்ல இம்முறை நடைமுறைரீதியாகவும் மிக வலிமையான மறுப்புரையை கொண்டிருக்கின்றன.
“இவ்வாறாக, சோவியத் ஒன்றியம் படுபயங்கர முரண்பாடுகளை கொண்டுள்ளது. ஆயினும் அது இன்னும் ஒரு உருக்குலைந்த தொழிலாளர்’ அரசாகத் தான் உள்ளது. இதுதான் சமூக ஆய்வுறுதியாகும். அரசியல் முன்கணிப்பு ஒரு மாற்றீட்டு தன்மையைக் கொண்டுள்ளது: ஒன்று தொழிலாளர் அரசில், உலக முதலாளித்துவ வர்க்கத்தின் அங்கமாக மேலும் மேலுமாகி வரும் அதிகாரத்துவம், சொத்துகளின் புதிய வடிவங்களை தூக்கியெறிந்து நாட்டை மீண்டும் முதலாளித்துவத்திற்குள் மூழ்கடிக்கும்; இல்லையெனில் தொழிலாள வர்க்கம் அதிகாரத்துவத்தை நசுக்கி சோசலிசத்திற்கான பாதையைத் திறக்கும்.” (லியோன் ட்ரொட்ஸ்கி, முதலாளித்துவத்தின் மரண ஓலமும் நான்காம் அகிலத்தின் பணிகளும்:இடைமருவு வேலைத்திட்டம் [நியூயோர்க்: லேபர் பப்ளிகேஷன்ஸ், 1981] பக். 32-33).
அதிகாரத்துவத்திற்குள்ளும் பிளவுகள் இருந்தன என்பதைச் சுட்டிக் காட்டிய ட்ரொட்ஸ்கி, அமைதியாகவெனினும் தொழிலாள வர்க்கத்தின் நலன்களை பிரதிபலித்த ஒரு “வெகு சிறிய சிறுபான்மை” இருந்து கொண்டு தான் இருந்தது என்பதை ஏற்றுக் கொண்டார். ஆனால் மிகக் கூடுதல் சக்தி படைத்தவையாக செல்வாக்கு படைத்தவையாக “பாசிச எதிர்ப்புரட்சிக் கூறுகள் தடையின்றி வளர்வதையும், உலக ஏகாதிபத்தியத்தின் நலன்களை முன்னெப்போதையும் விட பெரும் தொடர்ச்சியுடன் வெளிப்படுத்துவதையும்” கூறி அவர் எச்சரித்தார். புதிய ஆளும் தட்டு ‘மேற்கத்திய நாகரிகத்தை’ (அதாவது முதலாளித்துவத்தை) உள்ளீர்த்துக் கொள்வதான பேரில் தேசியமயமாக்கம், கூட்டுறவுமயமாக்கம் மற்றும் வெளிநாட்டு வர்த்தகத்தின் மீதான ஏகபோகம் ஆகியவற்றை நிராகரிப்பதன் மூலமாக மட்டுமே தங்களது சிறப்புரிமை நிலைகளை உறுதி செய்து கொள்ள முடியும் என்று தரகு முதலாளித்துவத்தின் பங்கினை வகிக்கவிரும்பும் இந்த நபர்கள் கருதுகிறார்கள் என்றால் அதில் காரணமில்லாமல் இல்லை.” (அதே பக்கங்கள், பக்.33)
அதன்பின் ஸ்ராலினிச ஆட்சியை புரட்சிகரமாய் தூக்கியெறிவதற்கு தொழிலாள வர்க்கத்தை அணிதிரட்ட நான்காம் அகிலத்தின் ஒரு சோவியத் பிரிவு முன்வைக்கக் கூடிய இடைமருவு கோரிக்கைகளை ட்ரொட்ஸ்கி சுருக்கமாய் வரைந்தார்: தொழிற்சங்கங்கள் மற்றும் தொழிற்சாலைக் குழுக்களுக்கான சுதந்திரம், சோவியத் ஜனநாயகத்தின் மீளுருவாக்கம், சோவியத் கட்சிகளின் சட்டபூர்வமாக்கல், சோவியத்துக்களில் இருந்து அதிகாரத்துவத்தை வெளியேற்றல் மற்றும் அதன் சிறப்புரிமைகளை தடை செய்தல், தொழிலாளர்கள் மற்றும் நுகர்வோரின் நலன்களில் திட்டமிட்ட பொருளாதாரத்தை புதுப்பித்தல், தொழிலாளர்களின் நலன்களின்பேரில் கூட்டுறவுப் பண்ணைகளை மறுசீரமைப்பு செய்தல், மற்றும் உலக ஏகாதிபத்தியத்துடனான அதிகாரத்துவத்தின் கூட்டை, பாட்டாளி வர்க்க சர்வதேசியவாதத்தின் மார்க்சிச வேலைத்திட்டத்தைக் கொண்டு பிரதியீடு செய்தல். இந்த கோரிக்கைகள், “ஒடுக்கப்பட்ட மக்களின் வெற்றிகரமான புரட்சிகர எழுச்சியின் மூலமாக மட்டும்தான் பாதுகாக்கப்பட முடியும்” என்பதையும் “சோவியத் வெகுஜனங்களை கிளர்ச்சிக்கு இட்டுச் செல்லும்” பணி நான்காம் அகிலத்தின் மீது விழுகிறது என்பதையும் அவர் வலியுறுத்தினார்.
நான்காம் அகிலம் ஸ்தாபகமாகி ஒரு வருட காலம் தான் கடந்திருந்த நிலையில், ஸ்ராலின்-ஹிட்லர் ஒப்பந்தம் கையெழுத்தானது, இரண்டாம் உலகப் போர் வெடித்தது, பின்லாந்து மீதான சோவியத்தின் ஆக்கிரமிப்பு ஆகியவையெல்லாம் காட்டிக் கொடுக்கப்பட்ட புரட்சி இல் வழங்கப்பட்டிருந்த பகுப்பாய்வின் செல்தகைமை குறித்து ட்ரொட்ஸ்கிச இயக்கத்திற்குள்ளேயே ஒரு கூர்மையான மோதலுக்கு இட்டுச் சென்றது. 1939 ஆகஸ்டுக்கு முன்னதாக ஸ்ராலினிச ஆட்சியை நோக்கி தாராளவாத புத்திஜீவித் தட்டின் மனோநிலை தீர்மானகரமாய் அனுதாபப் பார்வை கொண்டதாய் இருந்தது. அமெரிக்காவில் கூட, 1937 வசந்த காலத்தில் வயதான மற்றும் மிகப் பிரபலமான மெய்யியல் அறிஞரான ஜோன் டுவி, லியோன் ட்ரொட்ஸ்கிக்கு எதிரான மாஸ்கோ விசாரணைக் குற்றச்சாட்டுகளை விசாரணை செய்வதற்கு உருவாக்கப்பட்ட ஒரு குழுவிற்கு தலைவராய் பொறுப்பேற்க முடிவு செய்தது ஒரு முக்கியமான உடல்ரீதியான, புத்திஜீவித்தனரீதியான, மற்றும் தார்மீகரீதியான தீரத்தைக் குறித்த ஒரு நடவடிக்கையாக இருந்தது, அந்த மட்டத்திற்கு ஸ்ராலினிஸ்டுகளின் செல்வாக்கு மிகப் பெரிதாய் இருந்தது.[9] மக்கள் முன்னணி வாதம் என்பது முதலாளித்துவ ஜனநாயகத்திற்கும் GPU க்கும் இடையிலான கூட்டணி என, ட்ரொட்ஸ்கி நியாயமாக, ஒருவித ஏளனம் தொனிக்க வரையறை செய்திருந்தார். ஸ்ராலினிஸ்டுகள் ரூஸ்வெல்டை ஆதரித்து அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் ஜனநாயக பாசாங்குகளை வழிமொழிந்தனர்; பிரதிபலனாய், மாஸ்கோவில் பழைய போல்ஷிவிக்குகளை GPU படுகொலை செய்தபோது, ஸ்பெயினில் புரட்சிகரவாதிகளை சித்திரவதை செய்து கொலை செய்தபோது, பாரிஸில் ட்ரொட்ஸ்கிசவாதிகளை கடத்தி தலையைச் சீவியபோது தாராளவாத முதலாளித்துவ வர்க்கமும் நடுத்தர வர்க்க ஜனநாயகவாதிகளும் மறுபக்கம் முகத்தைத் திருப்பிக் கொண்டனர். ஆயினும், ட்ரொட்ஸ்கி எதிர்பார்த்திருந்ததைப் போல, ஸ்ராலின் ஹிட்லருடனான தனது “வலிந்து தாக்காத” ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டு பின்னர் பின்லாந்தை ஆக்கிரமித்தபோது, தாராளவாதிகளது மனோநிலை சோவியத் ஒன்றியத்திற்கு எதிராய் கூர்மையாய் திரும்பியது. தொழிலாள வர்க்கத்தின் மீதான புதிய காட்டிக்கொடுப்பினால், தாராளவாத ஜனநாயகவாத பொதுஜன கருத்து வெறுப்பூட்டப்பட்டிருக்கவில்லை; பதிலாக சோவியத் ஒன்றியம் ஜனநாயக ஏகாதிபத்திய முகாமை விட்டு வெளியேறி விட்டது, அதன் மூலம் அமெரிக்காவின் வெளியுறவுக் கொள்கைக்கு எதிர்முகாமில் தன்னை வைத்துக் கொண்டது என்பதுதான் அந்த மனஎரிச்சலுக்கு காரணமாகும்.
பொதுஜன கருத்தில் ஏற்பட்ட மாற்றம் நான்காம் அகிலத்தின் அமெரிக்க பிரிவிற்குள்ளும் (அப்போது சோசலிச தொழிலாளர் கட்சி –SWP- என அறியப்பட்டது) அதனது அரசியல் எதிரதிர்வை உருவாக்கியது. ஸ்ராலின்-ஹிட்லர் ஒப்பந்தத்தினை அடுத்து சோவியத் ஒன்றியத்தை அது உருக்குலைந்த ஒன்றாகவெனினும், ஒரு தொழிலாளர் அரசாக கருதுவது இனியும் சாத்தியமில்லை என ஜேம்ஸ் பேர்ன்ஹாம், மக்ஸ் சாக்ட்மன் மற்றும் மார்ட்டின் ஏபர்ன் ஆகியோரால் உருவாக்கப்பட்ட ஒரு கன்னை அறிவித்தது. ஆகவே, ஒரு முதலாளித்துவ அரசுடனான போரில், நான்காம் அகிலம், சோவியத் ஒன்றியத்தை நிபந்தனையின்றிப் பாதுகாப்பதைக் கைவிட வேண்டும் என்று அவர்கள் கோரினர்.
நான்காம் அகிலத்தின் வேலைத்திட்டத்தில் பேர்ன்ஹாம், சாக்ட்மன் மற்றும் ஏபர்ன் முன்மொழிந்த திருத்தத்தை ட்ரொட்ஸ்கி நிராகரித்தார். அதிகாரத்துவத்தின் மிக சமீபத்திய குற்றங்களுக்கு தண்டித்துக் கொள்வதற்காக மார்க்சிஸ்டுகள் சோவியத் அரசின் வர்க்கத் தன்மை குறித்த தங்கள் வரையறையை மாற்றுபவர்களல்லர் என்பதை அவர் சுட்டிக் காட்டினார்.[10] அவர்கள், சோவியத் சமூகத்தின் பொருளாதாரக் கட்டமைப்பை ஆராய்ந்து, அக்டோபர் புரட்சியின் அடிப்படையில் உருவாக்கப்பட்ட சொத்து வடிவங்கள் இன்னும் இருக்கிறதா அல்லது அவை தூக்கியெறியப்பட்டனவா என்பதைத் தீர்மானிக்க முனைந்தனர். அதிகாரத்துவத்தின் குற்றங்கள் எல்லாம் இருந்தபோதிலும், ஒரு அதிர்ச்சிதரக்கூடிய உருக்குலைவுக்கு உட்சென்றிருந்த நிலையில் என்றாலும், அரசு சொத்து வடிவங்களும் மத்தியப்படுத்தப்பட்ட திட்டமிடலும் இன்னும் இருந்ததென்றால், சோவியத் ஒன்றியம் ஒரு தொழிலாளர் அரசாய் தான் இருந்தது, அதிகாரத்துவத்தை தூக்கியெறியும் ஒரு புரட்சிகர எழுச்சி இன்றி அந்த அரசின் மறுஉருவாக்கம் சாத்தியமற்றது என்பது உண்மையே. ஆனால் அத்தகையதொரு புரட்சி, அதன் தன்மையில் சமூகப் புரட்சியாய் இருக்காது, அரசியல் புரட்சியாகவே இருக்கும்; ஏனென்றால் அதிகாரத்துவத்தை தூக்கியெறிந்த பின் வெற்றிபெற்ற பாட்டாளி வர்க்கத்திற்கு 1917 அக்டோபரில் இடைக்கால அரசாங்கம் தூக்கியெறியப்பட்டதற்குப் பின் சொத்து உறவுகளில் ஏற்பட்ட ஒரு மாற்றத்தைப் போன்ற ஒன்றை மேற்கொள்ளும் நிர்ப்பந்தம் இருக்காது. புத்துயிரூட்டப்பட்ட சோவியத்துக்கள் பொருளாதாரப் பாதையில் நீண்டகாலத்திற்கான அற்புதமான மாற்றங்களை செயல்படுத்தும்; அரசு நிதிநிலை அறிக்கையில் இருந்து அதிகாரத்துவ ஊதாரித்தனம் மற்றும் பச்சோந்தி தனங்களை அவை ஈவிரக்கமின்றிக் களையும், தேசிய ஆதார வளங்களின் மீதான கண்டிப்பான கணக்குவழக்கை நிறுவும், அத்துடன் வீட்டு வசதி, வேலை நிலைமைகள், மருத்துவப் பராமரிப்பு, கல்வி, சுற்றுச்சூழல் பாதுகாப்பு மற்றும் நுகர்வுப் பொருட்கள் ஆகிய துறைகளில் வெகுஜனங்களின் நெருக்கும் சமூகத் தேவைகளை நிவர்த்தி செய்யும். ஆனால் தொழிலாளர்’ அதிகாரத்திற்கான ஜனநாயக அங்கங்களினால் செலுத்தப்படத்தக்க இந்த அத்தியாவசியமான மாற்றங்கள் எல்லாம் இப்போதைய தேசியமயமாக்கப்பட்ட சொத்துக்களின் அடிப்படையில் தான் நடைபெறும்.
சோவியத் அரசின் பொருளாதாரக் கட்டமைப்பின் நிலையில் இருந்து கருதிப் பார்த்தால், ஒரு முதலாளித்துவ அரசுடனான ஒரு போரானது, அதிகாரத்துவவாதிகளின் தலைகளை விட மிக அதிக முக்கியமான ஒன்றை பணயத்தில் வைக்கும். எனவேதான், ஸ்ராலினிஸ்டுகளுடன் எதிர்ப்பு இருந்தபோதிலும், ஏகாதிபத்தியத்திற்கு எதிராக உருக்குலைந்த தொழிலாளர்’ அரசினை நான்காம் அகிலம் நிபந்தனையின்றி பாதுகாத்தது. அதற்கான துல்லியமான காரணம் என்னவென்றால், ஒரு இராணுவரீதியான தோல்வி, அக்டோபர் புரட்சியின் எஞ்சியிருந்த சமூக வெற்றிகளையும் முழுமையாய் இல்லாது அழித்து விடும் அபாயத்தை எழுப்பியது.
ட்ரொட்ஸ்கி எழுதினார்: “நாம் சோவியத் ஒன்றியத்தின் எதனைப் பாதுகாக்கிறோம் (அரசு சொத்துகள் மற்றும் திட்டமிட்ட பொருளாதாரம்), மற்றும் யாருக்கு எதிராக தளர்ச்சியற்ற போராட்டத்தை நடத்திக் கொண்டிருக்கிறோம் (ஒட்டுண்ணித்தனமான அதிகாரத்துவம் மற்றும் அதன் கம்யூனிச அகிலம்) என்பதைத் தொழிலாளர்கள் தெளிவுபடக் காணும் வகையில் சரியாக நமது சுலோகங்களை நாம் உருவாக்க வேண்டும். சோவியத் அதிகாரத்துவத்தை தூக்கியெறிவதான கேள்வி நம்மைப் பொறுத்தவரை சோவியத் ஒன்றியத்தில் உற்பத்தி சாதனங்களில் அரசு உடைமையைப் பாதுகாப்பதான கேள்வியின் கீழ் தான் வருகிறது; சோவியத் ஒன்றியத்தில் உற்பத்தி சாதனங்களில் அரசு உடைமையைப் பாதுகாப்பதான கேள்வி நம்மைப் பொறுத்தவரை உலகப் பாட்டாளி வர்க்கப் புரட்சி குறித்த கேள்வியின் கீழ் தான் வருகிறது என்ற உண்மையில் இருந்து ஒரு கணம் கூட நாம் பார்வையை தவற விட்டுவிடக் கூடாது.” (ட்ரொட்ஸ்கி, மார்க்சிசத்தை பாதுகாத்து, பக். 26) [11]
சோவியத் ஒன்றியத்தின் வர்க்கத் தன்மை குறித்த விவாதத்தில் இன்னுமொரு மிக ஆழமான அம்சம் இருந்தது. ட்ரொட்ஸ்கியால் முன்வைக்கப்பட்ட பகுப்பாய்வில், ஸ்ராலினிச ஆட்சி என்பது, “முதலாளித்துவ சமுதாயத்தை ஒரு சோசலிச சமுதாயமாக மாற்றுகின்ற நிகழ்ச்சிப்போக்கில் வெறுக்கத்தக்கதொரு பின்வாங்கலாகும்”. (அதே புத்தகம், பக்.11). இந்த பின்வாங்கல் என்பது 1917க்குப் பிந்தைய சோவியத் ரஷ்யா எதிர்கொண்ட குறிப்பிட்ட நிலைமைகளின் விளைபொருளாய் இருந்தது: அதாவது பின்தங்கிய தன்மை என்னும் மரபுரிமை அம்சம், ஏகாதிபத்திய சுற்றிவளைப்பு, ஐரோப்பிய பாட்டாளி வர்க்கத்தின் தோல்விகள் மற்றும் உலக சோசலிசப் புரட்சியின் நெடிய தாமதம் ஆகியவை. ஸ்ராலினிச ஆட்சி பொதுவான சோசலிச முன்னோக்கின் திவால்நிலையை பிரதிநிதித்துவப்படுத்தவில்லை, மாறாக “தனியொரு நாட்டில் சோசலிசம்” என்னும் திருத்தல்வாத வேலைத்திட்டத்தின் திவால் நிலையைத்தான் பிரதிநிதித்துவம் செய்தது. மேலும், சர்வதேசப் பாட்டாளி வர்க்கத்தின் மறுஎழுச்சி, அக்டோபர் புரட்சிக்கு புதுஊக்கமளிக்கும், சோவியத் சமூகத்தில் இருந்து ஸ்ராலினிச கழலையை வெளியேற்றும் என்று ட்ரொட்ஸ்கி உறுதியாய் நம்பினார்.
சோசலிச தொழிலாளர் கட்சியின் (SWP) சிறுபான்மையினரின் தலைவர்கள் இதனை அந்நேரத்தில் உணரவில்லை என்றாலும், அவர்களது வாதங்களின் தர்க்கரீதியான அபிவிருத்தி, ட்ரொட்ஸ்கி உடனடியாய் உணர்ந்து கொண்டதைப் போல, மார்க்சிச வரலாற்று முன்னோக்கின் செல்தகைமையை மறுப்பதற்கே இட்டுச் சென்றது.[12] சோவியத் ஆட்சி, சுரண்டல் சமூகத்தின் ஒரு புதிய வடிவத்தின் பிறப்பினைக் குறித்தது என்றால், இதில் புதிய சொத்து வடிவங்களைக் கையில் கொண்டிருந்ததாய் அதிகாரத்துவம் செயல்பட்டது என்றால், அப்போது பாட்டாளி வர்க்கத்தின் புரட்சிகரப் பாத்திரம் ஏற்கனவே தீர்ந்து போய் விட்டது என்றோ அல்லது ஆரம்பத்திலிருந்தே அது ஒரு தத்துவார்த்தப் பிரமையாக இருந்திருக்கிறது என்றோதான் அர்த்தமாகும். அப்படித்தான் இருந்ததென்றால், முதலாளித்துவத்தின் சிதைவானது சோசலிசத்திற்கு இட்டுச்செல்லாது, மாறாக முன்னெதிர்பார்த்திராத ஒரு “அதிகாரத்துவ கூட்டுறவுவாதத்திற்கு”, அதாவது பேர்ன்ஹாம் சொன்னதைப் போல, பாட்டாளி வர்க்க அடிமைகள் ஒரு தொழில்நுட்பத் திறம்படைத்த உயரடுக்கால் சுரண்டப்படுவதன் அடிப்படையிலான “நிர்வாக சமூகம்” உருவாக்கப்படுவதற்குத் தான் இட்டுச் செல்லமுடியும் என்பதை ஒப்புக்கொள்ள வேண்டியது அவசியமாகி விடும். இந்தக் கண்ணோட்டத்தின் படி, ஸ்ராலினின் சோவியத் அமைப்பு, ஹிட்லரின் மூன்றாம் குடியரசு, முசோலினியின் பெருநிறுவன அரசு, இன்னும் ரூஸ்வெல்டின் புதிய ஒப்பந்தம் ஆகியவை எல்லாமே இந்த தோன்றியெழுந்த முதலாளித்துவத்திற்குப் பிந்தைய உலக ஒழுங்கின் வடிவங்களே. பாட்டாளி வர்க்கத்தின் இக்கட்டானநிலையதனது, அது எத்தனை பரிதாபகரமானதாய் இருந்தாலும், சமூக மறுசீரமைப்பில் ஒரு சுயாதீனமான வரலாற்றுப் பாத்திரத்தை ஆற்றுவதற்கு அது இயல்பாகவே திறம்படைத்ததாய் இல்லாதிருந்ததன் விளைவேயாகும்.
ஸ்ராலினிச மற்றும் சமூக ஜனநாயக தொழிலாளர் அதிகாரத்துவங்களின் காட்டிக் கொடுப்புகளில் இருந்து தொழிலாள வர்க்கத்தின் புரட்சிகரமற்ற தன்மையை தொடர்புபடுத்திக் காட்ட முனைந்த இந்த ஆரோக்கியமற்ற முடிவுகளை ட்ரொட்ஸ்கி நிராகரித்தார். பாட்டாளி வர்க்கம் பிறப்பிலேயே ஒரு ஆளும் வர்க்கமாய் ஆகும் திறனற்று இருந்தது என்றால், அப்போது முதலாளித்துவத்தின் முரண்பாடுகளுக்கு ஒரு முற்போக்கான தீர்வுக்கான சாத்தியமே அங்கு இருந்திருக்கவில்லை. ஆக சர்வாதிபத்திய ஆட்சிகளால் நடத்தப்பட்ட முன்னெப்போதையும் விடப் படுபயங்கரமான போர்கள் எல்லாம் மனிதகுலத்தின் தலைவிதி என்றாகின்றது. வேறு வார்த்தைகளில் சொல்வதானால், மனித சமூகம் ஒரு முன்நகர முடியாத நிலைக்கு வந்திருந்தது. குட்டி முதலாளித்துவ வர்க்கத்திடையே மிகப் பரவலாய் இருந்த இத்தகைய முடிவுகள் எல்லாம், ட்ரொட்ஸ்கியின் கண்ணோட்டத்தில், தொழிலாள வர்க்கத்தின் சமீபத்திய தோல்விகளுக்கும் மற்றும் வெற்றிபெற்ற சமூக பிற்போக்குத்தனத்தின் சக்திக்கும் முன்னால் தார்மீக ரீதியாகவும் புத்திஜீவித்தன ரீதியாகவும் சரணாகதி அடைவதின் ஒரு வெளிப்பாடு தான். பழைய நம்பிக்கைகள் தகரும்போது பல சமயங்களில் உடன்வரும் கடுமையான வெறுப்பின் பிடியில் சிக்கியிருந்த, விரக்தியுற்றிருந்த அத்துடன் பிரமை விலக்கப்பட்டிருந்த குட்டி முதலாளித்துவ புத்திஜீவிகள் தொழிலாளர்’ இயக்கத்திற்குள்ளாக இருந்த முரண்பாடான போக்குகளின் போராட்டம் உட்பட தோல்விகளுக்கு முன்நிகழ்வாக இருந்த அரசியல் நிகழ்ச்சிப்போக்குகளினை ஆராய்வதற்கான பலத்தை கண்டுகொள்ள முடியவில்லை. யாருடைய கொள்கைகள் பேரழிவுக்கு இட்டுச் சென்றிருந்ததோ, அந்த சக்திவாய்ந்த சமூக ஜனநாயக மற்றும் ஸ்ராலினிச அதிகாரத்துவங்களுக்கு எதிரான அரசியல் போராட்டத்தைத் தொடர்வதைக் காட்டிலும், தோற்கடிக்கப்பட்டிருந்த, அமைதியாக இருந்த, துன்புற்றுக் கொண்டிருந்த பாட்டாளி வர்க்கத்தைக் கண்டிப்பது எளிதாக இருந்தது.
தொழிலாள வர்க்கத்தினுள் புரட்சிகரத் தலைமையை அபிவிருத்தி செய்வதென்பது, ஒரு அசாதாரண சிக்கலான பணி என்பதை ட்ரொட்ஸ்கி உடனடியாய் ஒப்புக்கொண்டார். ஆயினும் அத்தகைய ஒரு தலைமை உருவாக்கப்பட முடியும் என்பதை ரஷ்யப் புரட்சியின் வரலாறு விளங்கப்படுத்தியிருந்தது என்பதை அவர் வலியுறுத்தினார். எப்படி ரஷ்ய மார்க்சிஸ்டுகள் பிற்போக்குத்தனத்தின் மற்றும் நாடுகடத்தப்பட்ட சமயத்தின் பல காலகட்டங்களில், முதலில் 1871 இல் பாரிஸ் கம்யூனிலும் பின்னர் 1905 இல் ரஷ்யப் புரட்சியிலும் வெளிப்பட்ட வரலாற்று சாத்தியங்களின் மீது தங்களை அடித்தளமாகக் கொண்டார்களோ, அந்த வகையிலேயே நான்காம் அகிலமானது, 1917 இல் தொழிலாள வர்க்கத்தால் வெளிப்படுத்தப்பட்ட உலகை உலுக்குகின்ற மற்றும் வரலாற்றை உருவாக்குகின்ற சக்தியின் அடித்தளத்தின் மீது, தனது சொந்த புரட்சிகர நம்பிக்கையைக் கொண்டுள்ளது.
இரண்டாம் உலகப் போரின் ஆரம்ப கட்டங்களைக் காணும் அளவுக்கு மட்டுமே ட்ரொட்ஸ்கி உயிர்வாழ்ந்தார். 1940, ஆகஸ்ட் 21 அன்று முந்தைய நாளில் ஒரு GPU முகவரால் தலையில் தாக்கப்பட்ட படுகாயத்தினால் மெக்சிக்கோ நகரில் அவர் உயிரிழந்தார். பத்து மாதங்கள் கழித்து, ட்ரொட்ஸ்கி முன்னெதிர்பார்த்திருந்ததைப் போல, ஹிட்லர் சோவியத் ஒன்றியத்திற்கு எதிராகத் தனது படைகளை அனுப்பினார். பேர்ன்ஹாம் கணித்திருந்த சர்வாதிபத்திய “அதிகாரத்துவ கூட்டுடைமை” அரசுகளின் கூட்டணிக்குப் பதிலாக, உலகம் அதுவரை கண்டிருந்தவற்றில் மிகப் பயங்கரமான திகைப்பூட்டும் இராணுவ மோதல் ஏகாதிபத்திய ஜேர்மனிக்கும் சோவியத் ஒன்றியத்திற்கும் இடையில் கட்டவிழ்ந்தது. ஹிட்லரும் அமெரிக்காவில் பல நிபுணர்களும் எதிர்பார்த்ததைப் போல தொழிலாளர் அரசு துரிதமாய் வீழ்ச்சியடைவது நடக்கவில்லை. சோவியத் பொருளாதாரத்தின் செறிந்த உற்பத்தித் திறனையும் (ஜேர்மனியை விடவும் மிக உன்னதமான நிலையில் இருந்தது விரைவில் நிரூபணமானது) ஸ்ராலினிச ஆட்சியாக இருந்தாலும் வெகுஜனங்களுக்கும் சோவியத் ஒன்றியத்திற்கும் இடையிலிருந்த ஆழமான பிணைப்பையும் போர் வெளிப்படுத்தியது.[13]
சோவியத் படைகள் ஜேர்மன் ஏகாதிபத்தியத்தின் மீது ஒரு அற்புதமான வெற்றியைப் பெற்றன; 1945 மே மாதத்தில் பாசிச ஆட்சி நிலைகுலைந்ததை அடுத்து சோவியத் ஒன்றியத்தின் சர்வதேச கௌரவம் எப்போதையும் விட உயர்ந்த நிலைக்கு சென்றது. மேலும், கிழக்கு ஐரோப்பாவை சோவியத் ஆக்கிரமித்ததானது கொஞ்சம் கொஞ்சமாய் (ஸ்ராலினே ஆரம்பத்தில் எதிர்ப்பு காட்டியிருந்தபோதிலும்) உள்ளூர் ஸ்ராலினிசக் கட்சிகள் அதிகாரத்தை ஏற்பதற்கும், முதலாளித்துவ வர்க்கத்தின் சொத்துகளை பறிமுதல் செய்வதற்கும் உற்பத்தி சக்திகளை அரசுமயமாக்குவதற்கும் (statification) இட்டுச் சென்றது.
இந்த அபிவிருத்திகளின் தாக்கத்தின் கீழே, காட்டிக் கொடுக்கப்பட்ட புரட்சியில் ட்ரொட்ஸ்கி வழங்கியிருந்த பகுப்பாய்வுக்கான ஒரு புதிய சவால் எழுந்தது. ட்ரொட்ஸ்கி, ஸ்ராலினிச ஆட்சியைக் கண்டிப்பதில் மிகவும் திட்டவட்டமாய் இருந்தார் என்றும் அதன் எஞ்சியிருந்த புரட்சிகர ஆற்றலை ஊக்குவிக்க தவறினார் என்றும் அது வாதிட்டது. ‘சோவியத் அதிகாரத்துவத்தின் தவறுகள் இன்னும் குற்றங்களும் கூட இருந்தாலும், அது இன்னும், தனது சொந்த மிருகத்தனமான நடைமுறைவாத வழியில் தான் என்றாலும், அக்டோபர் புரட்சியின் மற்றும் போல்ஷிவிக் கட்சியின் வரலாற்று பாரம்பரியத்தையே செயல்படுத்திக் கொண்டிருந்தது.’ ஸ்ராலினிசத்திற்கான இந்த தத்துவார்த்தரீதியான மற்றும் அரசியல்ரீதியான வக்காலத்து 1949 ஆம் ஆண்டில் இஸாக் ட்டொய்சர் (Isaac Deutscher) எழுதிய ஸ்ராலின் வாழ்க்கை வரலாறு ஒன்றில் முன்னெடுக்கப்பட்டது. போலந்து நாட்டில் இருந்து புலம் பெயர்ந்து வாழ்ந்து வந்த இவர், ஒரு சமயத்தில் சர்வதேச இடது எதிர்ப்புக் குழுவில் மும்முரமாய் இயங்கி, ஆனால் நான்காம் அகிலத்தை ஸ்தாபிப்பதான ட்ரொட்ஸ்கியின் முடிவினால் ட்ரொட்ஸ்கியிடம் இருந்து முறித்துக் கொண்டவராவர்.[14] நான்காம் அகிலம் ஸ்தாபிக்கப்படுவதற்கு ட்டொய்சர் காட்டிய எதிர்ப்பு, அவர் அச்சமயத்தில் கூறிவந்தது போன்று, அத்திட்டத்தின் வெற்றிச்சாத்தியம் குறித்த தந்திரோபாய கருத்து வேறுபாடுகளில் இருந்து விளைந்த பொருள் அல்ல என்பதை அவரது ஸ்ராலின் புத்தகம் தெளிவாக்கியது. ஸ்ராலினிச ஆட்சியின் தன்மை குறித்த, ஒட்டுமொத்தமாய் நேரெதிரான ஒரு மதிப்பீட்டில் அந்த எதிர்ப்பு வேரூன்றியிருந்தது.
ஸ்ராலினிச ஆட்சியின் எதிர்ப்புரட்சி தன்மை குறித்த ட்ரொட்ஸ்கியின் வலியுறுத்தலை ட்டொய்சர் நிராகரித்தார். சோவியத் மற்றும் சர்வதேச தொழிலாளர்’ இயக்கத்திற்குள்ளாக, ஏகாதிபத்தியத்தின் ஒரு கருவியையே அது பிரதிநிதித்துவம் செய்தது என்பதையும் அவர் நம்பவில்லை அல்லது ஸ்ராலினிச அதிகாரத்துவமானது சோவியத் ஒன்றியத்தில் முதலாளித்துவத்தின் மீட்சிக்கு களத்தைத் தயாரித்துக் கொண்டிருந்தது என்பதையும் அவர் நம்பவில்லை. இன்னும் கூடுதலாய், ட்ரொட்ஸ்கி பிரகடனம் செய்திருந்ததைப் போல ஸ்ராலின், “புரட்சிக்குக் கல்லறை தோண்டுபவர்” அல்ல. ஸ்ராலின், “குரோம்வெல், ரொபேஸ்பியர், மற்றும் நெப்போலியன் ஆகியோர் கொண்ட மாபெரும் புரட்சிகர எதேச்சாதிகாரிகளின் வரிசையில் வருபவர்.... அவரது முயற்சிகளின் விரிவெல்லை, அவரது நடவடிக்கைகளின் தொடுதூரம், அவர் மேலாதிக்கம் செய்த அரங்கின் பரந்தநிலை ஆகியவற்றைக் கொண்டு கணக்கிட்டால், அவரது மதிப்பைக் கணக்கிட்டால், அவர் ஒரு மாமனிதராய் நிற்கிறார். அவர் புரட்சிகரவாதி, புரட்சியின் அனைத்து ஆரம்ப சிந்தனைகளுக்கும் அவர் உண்மையாய் திகழ்ந்தார் என்ற அர்த்தத்தில் அல்ல, மாறாக சமூக ஒழுங்கமைப்பின் ஒரு அடிப்படையான புதிய கோட்பாட்டை அவர் நடைமுறையில் புகுத்திய காரணத்தினால்” என்று ட்டொய்சர் எழுதினார். (ஐஸாக் ட்டொய்சர், ஸ்ராலின்: ஒரு அரசியல் வாழ்க்கை வரலாறு [நியூ யோர்க்: ஆக்ஸ்போர்ட் பல்கலைக்கழக அச்சகம், 1949], பக். 565-66).
இரண்டாம் உலகப் போருக்குப் பிந்தைய காலத்தில் ட்ரொட்ஸ்கிச இயக்கம் எதிர்கொண்ட சிக்கலான மற்றும் கடினமான சூழ்நிலையின் பின்னணியில், ஐஸாக் ட்டொய்சரின் கண்ணோட்டங்கள் ஒரு பதிலிறுப்பைக் கண்டன, அவை ஐரோப்பாவில் நான்காம் அகிலத்தின் சர்வதேச செயலகத்தின் (International Secretariat) முதன்மைத் தலைவர்களாய் இருந்த மிஷேல் பப்லோ மற்றும் ஏர்னெஸ்ட் மண்டேலினால் வேலைத்திட்டரீதியாக சூத்திரப்படுத்தப்பட்டன. போருக்குப் பிந்தைய அபிவிருத்திகளின் வெளிச்சத்தில் மரபுவிலகாத ட்ரொட்ஸ்கிச முன்னோக்கு அவர்களுக்கு கடும் பிரச்சினைக்குரியதாய் தோன்றியது. சோவியத் ஆட்சியின் மற்றும் உள்ளூர் கம்யூனிஸ்ட் கட்சிகளது அதிகாரத்தின் சர்வதேசப் பெருமை என்பது, அவற்றின் குற்றங்கள் மற்றும் காட்டிக் கொடுப்புகளையும் தாண்டி, முன்னெப்போதையும் விட மிக உயர்ந்த மட்டத்தில் உள்ளது உண்மையில்லையா? என்று அவர்கள் வினவினர். ’கிழக்கு ஐரோப்பாவில் முதலாளித்துவ சொத்துடைமை தூக்கியெறியப்பட்டது 1917 மாதிரியான பாட்டாளி வர்க்கப் புரட்சிகளினால் அல்ல, மாறாக செம்படையின் தலையீட்டால் தான் என்பதும் உண்மையில்லையா? சோவியத் அதிகாரத்துவம் இன்னும் ஒரு வரலாற்றுரீதியாய் முற்போக்கான மற்றும் இன்னும் புரட்சிகரமான பாத்திரத்தை ஆற்ற முடியும் என்பது இதன் அர்த்தம் இல்லையா?’. இந்த தோற்றப்பாட்டுவாத மற்றும் ஐயுறவான ஊகங்களின் விளைவு, காட்டிக் கொடுக்கப்பட்ட புரட்சியின் அடிப்படையில் அபிவிருத்தி செய்யப்பட்டிருந்த ட்ரொட்ஸ்கிச வேலைத்திட்டத்தில் ஒரு அடிப்படையான திருத்தலைச் செய்வதாகியது. அவர்கள் தீர்மானித்தனர்: (1) சோவியத் அதிகாரத்துவம், தொழிலாளர்’ இயக்கத்திற்குள்ளாக ஏகாதிபத்தியத்தின் ஒரு முகமை அல்ல, மாறாக அதன் புரட்சிகர விரோதி; (2) ஸ்ராலினிச ஆட்சி, சர்வதேசப் பாட்டாளி வர்க்கத்தின் தோல்விகளால் உருவாக்கப்பட்ட ஒரு வரலாற்று பின்னோக்கிய திருப்பம் அல்ல, மாறாக சோசலிசத்தின் அபிவிருத்தியில் ஒரு அவசியமான மற்றும் அங்கீகரமான வடிவம்; மற்றும் (3) சோவியத் அதிகாரத்துவத்தின் பாதுகாப்புக் கவசத்தின் கீழ் உருவாக்கப்பட்ட கிழக்கு ஐரோப்பிய ஆட்சிகள் “ஊனமுற்ற தொழிலாளர் அரசுகளின்” வரலாற்று மாதிரிகள், இவற்றின் வழியே பல நூற்றாண்டுகளின் காலத்தில் சோசலிசம் அடையப்படும்.
பப்லோவும் மண்டேலும் வரைந்த நடைமுறைரீதியான அரசியல் தீர்மானங்கள் எல்லாம், தோற்றப்பாட்டில், ஒரு தசாப்தத்திற்கு முன்னதாக பேர்ன்ஹாம் மற்றும் சாக்ட்மன் உருவாக்கியவற்றில் இருந்து சற்று மாறுபட்டவையாகத் தோன்றினாலும், அவற்றின் கீழமைந்த வரலாற்று முன்னோக்கு, ஒரு ஆழமான அளவில், வியத்தகு ஒற்றுமையை கொண்டிருந்தது. இரண்டு தத்துவங்களுமே மார்க்சிசம் தொழிலாள வர்க்கத்திற்கு வழங்கியிருந்த சுயாதீனமான மற்றும் படைப்பாற்றல் மிக்க வரலாற்றுப் பாத்திரத்தை நிராகரித்தன. “முதலாளித்துவத்திற்கு பிந்தைய” சமூகத்தின் தன்மை குறித்து மாறுபட்ட கருத்தாக்கங்களை (சர்வாதிபத்திய-கூட்டுடைமை “நிர்வாக சமூகங்கள்” (பேர்ன்ஹாம்-சாக்ட்மன்) அல்லது சோசலிச தன்மையுடனான “ஊனமுற்ற தொழிலாளர்’ அரசுகள்” (பப்லோ-மண்டேல்) அவர்கள் முன்னெடுத்த அதே சமயத்தில், அந்த வரலாற்று உருமாற்றத்திற்கான கருவியாய் அதிகாரத்துவ உயரடுக்கினை இருதரப்புமே ஒப்புக் கொண்டது.
குறிப்பிட்ட அரசியல் நிகழ்வுகளில் இருந்து, அவற்றின் சர்வதேச மற்றும் வரலாற்று உள்ளடக்கத்தை செயற்கையாகப் பிரித்தெடுத்து விட்டு அவற்றில் இருந்து பெரும் தத்துவார்த்த பொதுமைப்படுத்தல்களை வரையும் தவறினை பப்லோவும் மண்டேலும் தங்களது சூத்திரமாக்கலை உருவாக்கும்போது செய்தனர். இவ்வாறாக, கிழக்கு ஐரோப்பாவில் முதலாளித்துவ சொத்துடைமை ஸ்ராலினிஸ்டுகளால் பறிக்கப்பட்டதற்கு மகத்தான முற்போக்கு முக்கியத்துவத்தை வழங்கிய அவர்கள், அதேசமயத்தில் ஞாபகமறதி போன்று, அல்லது சொல்லப்போனால் வசதியான வகையில், இரண்டாம் உலகப் போர் முடியும் காலகட்டத்திலும் முடிந்த உடனடிக் காலத்திலும் மேற்கு ஐரோப்பிய பாட்டாளி வர்க்கத்தின் புரட்சிகர இயக்கத்தை கீழறுப்பதில் கிரெம்ளின் ஆற்றிய பாத்திரத்தை அலட்சியம் செய்தனர். கிழக்கு ஐரோப்பாவில் அதிகாரத்துவரீதியாக மேற்கொள்ளப்பட்ட சொத்து உறவுகளிலான மாற்றங்கள், யால்டாவிலும் போட்ஸ்டாமிலும் ரஷ்யாவிற்கும் ஏகாதிபத்தியவாதிகளுக்கும் இடையில் உடன்பாடான அரசியல் ஒப்பந்தங்களை முக்கியமாக சவால் செய்யவில்லை, பல அம்சங்களில் அவற்றை வலுப்படுத்தின என்னும் உண்மையை அவர்கள் கண்டுகொள்ளாமல் விட்டனர். இன்னும் முக்கியமாக, சோவியத் இராணுவத்தால் ஆக்கிரமிக்கப்பட்ட பிராந்தியங்களில் முதலாளித்துவ வர்க்கத்தின் சொத்துகளை அதிகாரத்துவம் பறிமுதல் செய்ததானது தொழிலாள வர்க்கத்தின் அனைத்து சுயாதீன மற்றும் புரட்சிகர அரசியல் நடவடிக்கையையும் இரக்கமின்றி ஒடுக்குவதுடன் கைகோர்த்து வந்தது.
கிழக்கு ஐரோப்பிய நிலைமைகளின் கட்டமைப்பிற்குள் மட்டிலுமே வைத்துப் பார்க்கையில், அதாவது சர்வதேச மற்றும் வரலாற்று உள்ளடக்கத்தை பிரித்து விட்டுப் பார்க்கையில், கிரெம்ளினின் தூண்டுதலின் பேரில் மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகள் ஒரு முற்போக்கான தன்மையைக் கொண்டதாக இருந்தன. ஆனால் இரண்டாம் உலகப் போரைத் தொடர்ந்து கிழக்கு ஐரோப்பாவில் ஸ்ராலினிஸ்டுகள் ஸ்தாபித்த ஆட்சிகள், ஹங்கேரியில் ஹோர்த்தி, போலந்தில் பில்சுட்ஸ்கி, மற்றும் ருமேனியாவில் அண்டோனெஸ்கு (இன்னும் மற்ற பல உதிரி பால்கன் முடியாட்சிகள் பற்றிச் சொல்லவும் வேண்டாம்) ஆகியோரது இராணுவ-பாசிச ஆட்சிகளை விட சந்தேகத்திற்கிடமில்லாமல் மேம்பட்டவையாய் இருந்தன என்ற உண்மையானது, அவை உண்மையான பாட்டாளி வர்க்கப் புரட்சிகளுக்கு ஒரு அங்கீகாரமான வரலாற்று மாற்று என்றோ அல்லது மனித குலத்தின் சமூக அபிவிருத்தியில் ஒரு புதிய ஆரம்பப் புள்ளி என்றோ அர்த்தமளிக்கவில்லை. உண்மையில், கிரெம்ளினின் போருக்குப் பிந்தைய கொள்கைகள், சர்வதேசரீதியாக தொழிலாள வர்க்கத்தின் புரட்சிகர முன்முயற்சிகளைக் கீழறுத்து, அதன்மூலம் உலக முதலாளித்துவ ஒழுங்கை ஸ்திரப்படுத்துவதற்கு அவை பங்களித்தன, கிழக்கு ஐரோப்பிய நிகழ்வுகளின் இருப்புநிலை மதிப்பீடு தீர்மானகரமாய் எதிர்மறையாய் தான் நின்றது.
போருக்குப் பிந்தைய சூழலை அற்புதமாய் முன்கூட்டிக் கணித்திருந்த ட்ரொட்ஸ்கி, 1939ன் பிற்பகுதியில் போலந்து ஆக்கிரமிப்பைத் தொடர்ந்து சோவியத் இராணுவத்தால் ஆக்கிரமிக்கப்பட்ட பிராந்தியத்தில் மேற்கொள்ளப்படும் பறித்தெடுப்புகளின் அரசியல் தாக்கங்களை அவர் மதிப்பீடு செய்தபோது, இந்தப் புள்ளியைத் துல்லியமாக சுட்டிக் காட்டியிருந்தார்:
“ஹிட்லருடன் ஒரு இராணுவ உடன்பாட்டின் மூலம் போலந்தை ஆக்கிரமிக்கும் சாத்தியத்தைப் பெறுவதற்காக, நீண்ட காலமாகவே கிரெம்ளின் சோவியத் ஒன்றியத்திலும் மற்றும் மொத்த உலகத்திலும் இருக்கும் வெகுஜனங்களை ஏமாற்றியது, தொடர்ந்து ஏமாற்றியும் வருகிறது, இதன்மூலம் தனது சொந்த கம்யூனிச அகிலத்தின் அணிகளில் முழுமையான ஒழுங்கின்மையை கொண்டுவந்திருக்கிறது. நம்மைப் பொறுத்தவரை, இந்தப் பகுதி அல்லது இன்னொரு பகுதியில் சொத்து உறவுகளில் மாற்றம் ஏற்படுத்துவது என்பது, அவை தன்னளவில் எவ்வளவு முக்கியத்துவம் படைத்தவையாக இருந்தாலும், பிரதான அரசியல் அளவீடு அல்ல, மாறாக உலகப் பாட்டாளி வர்க்கத்தின் நனவிலும் ஒழுங்கமைப்பிலும் மாற்றங்களை ஏற்படுத்துவதும், முந்தைய வெற்றிகளைப் பாதுகாப்பதற்கும் புதிய வெற்றிகளைச் சாதிப்பதற்குமான அவற்றின் செய்திறனை உயர்த்துவதும் தான் பிரதானமான அளவீடாகும். இந்த ஒரு, மற்றும் ஒரே தீர்மானகரமான நிலைப்பாட்டுக் கோணத்தில் இருந்து பார்த்தால், மாஸ்கோவின் அரசியலானது, மொத்தமாய் பார்க்கையில், தனது பிற்போக்குத்தன தன்மையை முழுமையாக தக்கவைத்துக் கொண்டிருப்பதோடு உலகப் புரட்சிக்கான பாதையில் முக்கிய முட்டுக் கட்டையாய் தொடர்கிறது...
“நாம் கூறியது போல உற்பத்தி சாதனங்களை அரசுமயமாக்குவது ஒரு முற்போக்கான நடவடிக்கை. ஆனால் அதன் முற்போக்குத்தன்மை சார்புரீதியானது, அதன் விஷேட எடையானது அனைத்து மற்ற காரணிகளின் கூட்டுமொத்தத்தைச் சார்ந்துள்ளது. இவ்வாறாக, அதிகாரத்துவ எதேச்சாதிகாரத்தாலும் ஒட்டுண்ணித்தனத்தாலும் ஆதிக்கம் செலுத்தப்படுகின்ற, “சோசலிச” நடவடிக்கைகளால் மேம்படுத்தப்படுகின்ற, பிராந்தியத்தின் நீட்சி கிரெம்ளினின் பெருமையை உயர்த்தலாம், பாட்டாளி வர்க்கப் புரட்சியை அதிகாரத்துவ மதிநுட்பங்களைப் பயன்படுத்தி இடம்பெயர்க்கும் சாத்தியம் குறித்த பிரமைகளை உற்பத்தி செய்யலாம், இன்னும் போய்க் கொண்டே இருக்கலாம் என்பதை முதலாகவும் முதன்மையாகவும் நாம் நிறுவியாக வேண்டும். போலந்தில் இதுவரை இந்தத் தீமையானது, ஸ்ராலினிச சீர்திருத்தங்களின் முற்போக்கு உள்ளடக்கத்தை விஞ்சியே நிற்கிறது. ஆக்கிரமிக்கப்பட்ட பகுதிகளிலும், அதேபோல் சோவியத் ஒன்றியத்திலும், தேசியமயமாக்கப்பட்ட சொத்துக்கள் உண்மையான முற்போக்கான, அதாவது சோசலிச அபிவிருத்திக்கு ஒரு அடிப்படையாக ஆக வேண்டும் என்றால், மாஸ்கோவின் அதிகாரத்துவத்தை தூக்கியெறிவது அவசியமாகும். எனவே, நமது வேலைத்திட்டம் தனது அத்தனை செல்தகைமையையும் தக்கவைத்துக் கொள்கிறது.” (ட்ரொட்ஸ்கி, மார்க்சிசத்தை பாதுகாத்து, பக் 23-24).
ட்ரொட்ஸ்கி இந்த வரிகளை எழுதிய சமயத்தில், அதிகாரத்துவ எதேச்சாதிகாரத்தின் மற்றும் ஒட்டுண்ணித்தனத்தின் நீட்சியானது ஸ்ராலினிசத்தின் “முற்போக்கான” தன்மை குறித்த பிரமைகளை நான்காம் அகிலத்தின் தலைமைக்குள்ளாகவே உண்டாக்கும் என்று அவர் எதிர்பார்த்திருக்கவில்லை. பப்லோவும் மண்டேலும் 1950களின் ஆரம்பத்தில் எழுதிய “புறநிலை சோசலிச யதார்த்தம்” ”அத்தியாவசியமாக முதலாளித்துவ ஆட்சியையும் ஸ்ராலினிச உலகையும்” கொண்டிருந்தது, இதன்மூலம் தொழிலாள வர்க்கமும் அதன் வர்க்கப் போராட்டமும் வரலாற்று நிகழ்ச்சிப்போக்கில் முக்கியமான காரணிகளாக —சுயாதீனமான மற்றும் தீர்மானகரமான காரணிகள் என்பதைக் கூட விடுவோம்— கருதப்படாது நிராகரிக்கப்பட்டன. சோசலிச யதார்த்தம் குறித்த இந்த கண்ணோட்டம் மனித குலத்தின் வருங்காலம் தொழிலாள வர்க்கத்தில் ஒரு வெகுஜனப் புரட்சிகர கட்சியைக் கட்டுவதில் தங்கியிருந்தது என்ற கருத்தாக்கத்துடன் இணக்கமற்றதாய் இருந்தது. ஊனமுற்ற தொழிலாளர்’ அரசுகளை உருவாக்குவதில் ஸ்ராலினிசக் கட்சிகளுக்கு உத்தியோகபூர்வமற்ற திரைமறைவு ஆலோசகராக வேலை செய்வதான மட்டத்திற்கு ட்ரொட்ஸ்கிச இயக்கத்தின் அரசியல் பாத்திரத்தை பப்லோவும் மண்டேலும் குறைமதிப்பிற்குட்படுத்தினர். இந்த நம்பவியலாத முன்னோக்கின் (சோவியத் ஒன்றியத்திற்கும் அமெரிக்காவிற்கும் இடையிலான ஒரு அணு ஆயுதப் போரில் இருந்து சோசலிசம் எழும் என்ற ஒரு அழிவுத் தத்துவத்தில், இது தனது விநோதமான வெளிப்பாட்டைக் கண்டது) அடிப்படையில் பப்லோவும் மண்டேலும், சர்வதேச செயலகத்திற்குள் தாங்கள் செலுத்திய அரசியல் அதிகாரத்தை துஷ்பிரயோகம் செய்து, நான்காம் அகிலத்தின் பிரிவுகளை ஒழுங்குமுறையாக அழிக்கத் தொடங்கினர். உதாரணமாக, பிரெஞ்சுப் பிரிவின் தலைமை பிரெஞ்சு கம்யூனிஸ்ட் கட்சிக்குள் அந்த அமைப்பை கலைத்து விடுவதற்கு சர்வதேச செயலகம் வழங்கிய உத்தரவுகளை செயல்படுத்த மறுத்தபோது, பப்லோவும் மண்டேலும் அந்தப் பிரிவின் பெரும்பான்மையினரை ஒருதலைப்பட்சமாய் நான்காம் அகிலத்தில் இருந்து வெளியேற்றினர்.
1953 மார்ச்சில் ஸ்ராலின் மரணத்தைத் தொடர்ந்து கிரெம்ளினுக்குள் நிகழ்ந்த அரசியல் கொந்தளிப்பில் பப்லோவும் மண்டேலும் ட்ரொட்ஸ்கிச வேலைத்திட்டம் மீதான அவர்களது திருத்தல்களுக்கும் நான்காம் அகிலத்தைக் கலைப்பதற்கான அவர்களது யோசனைக்கும் கூடுதலான காரணநியாயத்தைக் கண்டனர். சோவியத் அதிகாரத்துவம், உலக ஏகாதிபத்தியத்திற்கு எதிரான தனது “புரட்சிப் போரை” நடத்திச் செல்வதற்கு தயாரித்துக் கொண்டிருப்பதாக அவர்கள் வலியுறுத்தியதோடு மட்டுமல்லாமல்; ஒரு முற்போக்கான சுயசீர்திருத்த நிகழ்ச்சிப்போக்குக்கும் அது முன்முயற்சியளித்திருந்ததாக வாதிட்டனர். பப்லோ-மண்டேல் ஆல் கூறப்பட்ட வரலாற்றுப் பணியை மேற்கொள்வதில், குருச்சேவ் அல்லது மிகோயன் போன்ற சீர்திருத்த எண்ணம் கொண்ட கூறுகள் தலைமையிலான அதிகாரத்துவம், தன்னிடமிருந்த குறிப்பான ஸ்ராலினிசக் கூறுகளை களையெடுத்து ஒரு போல்ஷிவிக் அமைப்பாக மறுபிறவி எடுக்கும்! பப்லோ-மண்டேல் கன்னையால் அளிக்கப்பட்ட மற்ற யோசனைகளைப் போலவே இந்த அற்புதமான கருத்தாக்கமும், காட்டிக் கொடுக்கப்பட்ட புரட்சியில் ட்ரொட்ஸ்கியால் வழங்கப்பட்டிருந்த ஸ்ராலினிச ஆட்சி மீதான விஞ்ஞானபூர்வ பகுப்பாய்வுக்கு முற்றிலும் அந்நியமானதாய் இருந்தது. ட்ரொட்ஸ்கியை பொறுத்தவரை, ஸ்ராலினிசத்தின் சாரம் என்பது, அதிகாரத்துவத்தால் பயன்படுத்தப்பட்ட அரசியல் ஆட்சியின் குறிப்பிட்ட வழிமுறைகளில் அடங்கியிருக்கவில்லை; அரசியல் அதிகாரத்தை ஏகபோகமாக்கிக் கொள்வதில்தான் தனது சிறப்புரிமைகள் தங்கியிருக்கும்படி கொண்டிருக்கும் ஒரு சாதியாக, அதிகாரத்துவத்தின் சமூகத் தன்மைதான் அந்த ஏகபோகத்தைப் பராமரிப்பதற்கு அது பயன்படுத்திய குறிப்பிட்ட வழிமுறைகளை தீர்மானித்தது. ஆக, அதிகாரத்துவத்திற்கு தன்னை ஒரு அடிப்படையான வகையில் சீர்திருத்திக் கொள்வதென்பதும் அதாவது தனது சொந்த சமூக சாரத்தை மாற்றி ஒரு சிறப்புரிமை பெற்ற சாதியாக இருப்பதில் இருந்து விலகுவதும் அரசியல்ரீதியாக சிந்திக்க முடியாதது. தாங்கள் வாசிப்பதுடன் உடன்படாதவர்களை தவிர, மற்றவர்களுக்கு எந்த தவறான பொருள்விளக்கத்திற்கும் இடம்தரா வார்த்தைகளில் ட்ரொட்ஸ்கி எழுதினார்: “அபிவிருத்தியின் எதிர்காலப் பாதையானது, மக்களின் கலாச்சாரரீதியாய் அபிவிருத்தியுற்ற சக்திகளுக்கும் அதிகாரத்துவ சிலவராட்சிக்கும் இடையிலான ஒரு மோதலை நோக்கி தவிர்க்கவியலாமல் இட்டுச் சென்றாக வேண்டும் என்பதில் அனைத்து அறிகுறிகளும் ஒப்புக்கொள்கின்றன. இந்த நெருக்கடியில் இருந்து அமைதியாய் தப்பிப்பதற்கு வழியே இல்லை. எந்த ஒரு அரக்கனும் தானாக முன்வந்து தனது சொந்த நகங்களை வெட்டிக் கொண்டதில்லை. சோவியத் அதிகாரத்துவமும் போராட்டமில்லாமல் தனது நிலைகளை கைவிடப்போவதில்லை. அபிவிருத்தியானது வெளிப்படையாக புரட்சியின் பாதைக்கே இட்டுச் செல்கிறது.” (பக். 245).
நான்காம் அகிலத்தில் இருந்த மரபுவழுவாத ட்ரொட்ஸ்கிசவாதிகள், பப்லோ-மண்டேல் திருத்தல்களின் அரசியல் தாக்கங்கள் நன்கு தெளிவாகிக் கொண்டிருந்த நிலையில், ஸ்ராலினிசத்திற்கு சர்வதேச செயலகத்தின் அடிபணிவுக்கு எதிரான போராட்டத்திற்கு தலைமை கொடுக்க அனைத்துலகக் குழுவை ஸ்தாபித்தனர். அமெரிக்காவில் ட்ரொட்ஸ்கிச இயக்கத்தை ஸ்தாபித்திருந்த ஜேம்ஸ் பி.கனன் இப்போராட்டத்திற்கு முன்முயற்சியளித்தார். 1953 நவம்பரில் “உலக ட்ரொட்ஸ்கிச இயக்கத்திற்கு எழுதிய பகிரங்கக் கடிதம்” ஒன்றில் நான்காம் அகிலத்தின் ஸ்தாபகத்திற்கு ட்ரொட்ஸ்கி கொண்டிருந்த அடிப்படைக் கோட்பாடுளை மீழஉறுதிப்படுத்தினார். “சோவியத் ஒன்றியத்திற்கு உள்ளேயும் வெளியேயும் ஸ்ராலினிசத்தை புரட்சிகரமாய் தூக்கியெறிவதை நான்காம் அகிலம் அது ஸ்தாபிக்கப்பட்டதில் இருந்தே தனது முக்கிய கடமைகளில் ஒன்றாய் கொண்டிருந்தது” என்பதை கனன் உலக இயக்கத்தின் காரியாளர்களுக்கு நினைவூட்டினார். ”1917 அக்டோபர் புரட்சியின் பெருமையைச் சுரண்டி தொழிலாளர்களை கவர்ந்து, பின் அவர்களது நம்பிக்கையை காட்டிக் கொடுத்து, அவர்களை மீண்டும் சமூக ஜனநாயகத்தின் கரங்களுக்குள், அக்கறையற்ற நிலைக்குள், அல்லது மீண்டும் முதலாளித்துவத்தின் பிரமைகளுக்குள் எறிகிறதாய்” இருந்த ஸ்ராலினிசம் தான் ஒரு உண்மையான புரட்சிகர வேலைத்திட்டத்தின் அடிப்படையில் தொழிலாள வர்க்கத்தை ஒழுங்குபடுத்துவதற்கு பிரதான தடையாக இருந்தது என்று அவர் வலியுறுத்தினார். (கிளிவ் சுலோட்டர், ட்ரொட்ஸ்கிசம் Vs திருத்தல்வாதம்:ஒரு ஆவணப்பட்ட வரலாறு [இலண்டன்: நியூ பார்க் பப்ளிகேஷன்ஸ், 1974], தொகுதி. 1, பக்.300).
17 வருடங்களுக்கு முன்பு வெளிவந்த காட்டிக் கொடுக்கப்பட்ட புரட்சியில் விளக்கிக் காட்டப்பட்ட தத்துவார்த்த கருத்தாக்கங்களின் மீது முழுவதுமாய் அடித்தளம் அமைத்துக் கொண்ட அனைத்துலகக் குழுவை ஸ்தாபித்த மரபுவழுவா ட்ரொட்ஸ்கிசவாதிகள் இரண்டாம் உலகப் போர் மற்றும் ஸ்ராலினின் மறைவுக்குப் பிந்தைய காலத்தில் ஸ்ராலினிசத்தின் மீதான ஒரு பகுப்பாய்வை உருவாக்குவதில் வெற்றி கண்டனர். இவர்களது அற்புதமான தூரதிருஷ்டி சமீபத்திய அபிவிருத்திகளின் வெளிச்சத்தில் சிறந்த வகையில் மதிக்கப்படுவதாய் அமைந்திருக்கிறது. இரண்டாம் உலகப் போர் நிறைவுபெற்ற சமயத்தில் சோவியத் அதிகாரத்துவத்தின் பாத்திரம் அடிப்படையாய் பிற்போக்குத்தனமானது என்பதை அவர்கள் வலியுறுத்தினர். “உதாரணமாக, ஐரோப்பாவில் முக்கிய நாடான ஜேர்மனியை நோக்கிய கிரெம்ளினின் போருக்குப் பிந்தைய கொள்கையானது (அதன் பிரிப்பில் பங்கேற்றது, கிழக்கு ஜேர்மனி மீதான அதன் ஆட்சி, மேற்கு ஜேர்மனி விடயத்தில் அதன் இராஜதந்திர தந்திரவகைகள்) முதலாளித்துவ பிற்போக்குத்தனத்திற்கே உதவுகிறது ஏகாதிபத்திய நோக்கங்களுக்கே வழிவகை செய்கிறது” என்று அவர்கள் விளக்கினர்.
அதிகாரத்துவரீதியாக உருவாக்கப்பட்ட சோசலிசத்தின் ஒரு புதிய உலக ஒழுங்கிற்கான அரசியல் முன்மாதிரிகளாய் கிழக்கு ஐரோப்பாவின் ஸ்ராலினிச ஆட்சிகளை பப்லோவாதிகள் போற்றியதற்கு நேரெதிராய், இந்த வெறுப்புக்குள்ளான ஆட்சிகள் வரலாற்றுரீதியாக தாக்குப்பிடிப்பவை அல்ல என்பதையும் தொழிலாள வர்க்கத்தின் புரட்சிகர இயக்கத்திற்கு அவை தானாகவே பலியாகும் என்பதையும் மரபுவழுவா ட்ரொட்ஸ்கிசவாதிகள் அறிவித்தனர். 1953 ஜூனில் ஸ்ராலினிச ஆட்சிக்கு எதிராக கிழக்கு ஜேர்மன் தொழிலாளர்களின் எழுச்சி ஒட்டுண்ணித்தனமான அதிகாரத்துவத்திற்கும் பாட்டாளி வர்க்கத்திற்கும் இடையிலிருந்த சமரசமற்ற மோதலை மட்டும் விளங்கப்படுத்தவில்லை, மாறாக கிழக்கு ஐரோப்பாவிலும் மற்றும் சோவியத் ஒன்றியத்திற்குள்ளாகவும் எதிர்காலத்தில் நிகழவிருக்கும் நிகழ்வுகளின் வடிவத்தையும் வெளிப்படுத்தின என்று அவர்கள் தெரிவித்தனர். “அதிகாரத்துவ அமைப்பிற்கும் உழைக்கும் மக்களுக்கும் இடையில் முதிர்ச்சியடையும் முரண்பாடுகளின் மீது ட்ரொட்ஸ்கிசவாதிகள் தங்களது புரட்சிகர முன்னோக்குகளுக்கு அடித்தளம் அமைக்கின்றனர். இவை தொழிலாள வர்க்கத்தை சர்வாதிபத்திய சர்வாதிகாரத்துடன் ஒரு திட்டவட்டமான மோதலுக்கு இட்டுச் செல்லும். இந்த விடயத்தில் கிழக்கு ஜேர்மன் நிகழ்வுகள் சோவியத் ஒன்றியத்திற்குள்ளான அபிவிருத்திக்கு முன்னறிகுறிகளாய் திகழ்கின்றன” என்று அவர்கள் எழுதினர்.
பப்லோ-மண்டேல் போக்கினால் செய்யப்பட்ட ட்ரொட்ஸ்கிசத்தின் மீதான திருத்தல்களுக்கு எதிராக அனைத்துலகக் குழுவால் நிகழ்த்தப்பட்ட அரசியல் மற்றும் தத்துவார்த்தப் போராட்டம் வரலாற்று நிகழ்வுகளால் சரியென நிரூபணம் பெற்றுள்ளன. உண்மையில், மிக சமீபத்திய அபிவிருத்திகள் பப்லோ-மண்டேல் திருத்தல்வாதிகளுக்கு பாரிய அடியை கொடுத்துள்ளன. கிழக்கு ஐரோப்பாவில் ஸ்ராலினிச ஆட்சிகள் சிதறலுற்ற நிகழ்வு, “ஊனமுற்ற தொழிலாளர்’ அரசுகள்” தான் சோசலிசத்திற்கான அவசியமான இடைமருவல் வடிவத்தை குறித்ததாய் கூறிய திருத்தல்வாதக் கூற்றுக்கு மிக நேர்த்தியான மறுப்பாக அமைந்தது. உலகெங்கும் பரவி பல நூற்றாண்டுகள் நீடிக்கும் என்று சொல்லப்பட்டதற்கு மாறாக, ஸ்ராலினிச ஆட்சிகள் வெறும் நான்கு தசாப்த காலங்கள் மட்டுமே நீடித்தன. [15]
ஆனால் வரலாறு வெறுமனே மண்டேலை மறுப்பதுடன் திருப்தி கொண்டு விடவில்லை. அவரது சொந்த உதவியுடன், அவரை மண்டியிடச் செய்வதில் அது வெற்றி பெற்றிருக்கிறது. மிக சமீபத்தில் 1988ல், பெரெஸ்த்ரோய்காவிற்கு அப்பால் (Beyond Perestroika) என்ற தலைப்பில் மிக்கைல் கோர்பச்சேவுக்கு ஊக்கத்துடன் மரியாதை செலுத்துகின்ற ஒரு புத்தகத்தை எழுதி மண்டேல் தனது 40 வருட கால ஸ்ராலினிச-ஆதரவு வக்காலத்துகளை ஒரு பரிதாபகரமான உச்சக் காட்சிக்கு கொண்டுவந்தார். இருபதாம் நூற்றாண்டின் மாபெரும் அரசியல் தலைவர்களில் ஒருவராய் கோர்பச்சேவை புகழ்ந்த மண்டேல், “சோவியத் ஒன்றியத்திற்குள் இந்த சோவியத் தலைவர் முதலாளித்துவத்தை மறுஅறிமுகம் செய்ய முயலுகிறார் என்ற அபத்தமான தத்துவ”த்தைக் கண்டித்தார். (ஏர்னெஸ்ட் மண்டேல், பெரெஸ்த்ரோய்காவிற்கு அப்பால் [நியூ யோர்க்: வெர்சோ, 1988], பக். 129). கிரெம்ளினின் கொள்கைகளுக்கு அரசியல் ஆதரவை அறிவித்த மண்டேல் உறுதிபடக் கூறினார்: “கோர்பசேவின் சீர்திருத்தங்கள் தொடர்வதற்கு அனுமதிக்கப்பட்டு இந்த உந்துசக்தி தொலைந்து போகாமலோ அல்லது தலைகீழாகாமலோ இருந்தால் பின் ஒரு குறிப்பிட்ட காலத்திற்குப் பின் பெரெத்ஸ்ரோய்கா பலனளிக்கத் தொடங்கும் அத்துடன் மக்களின் வாழ்க்கைத் தரமும் மேம்படும். அத்தகையதொரு சந்தர்ப்பத்தில், கோர்பசேவ்வின் அனுபவம் வெற்றி பெறும்.” (அதே புத்தகம், பக்: xv).
கோர்பசேவ் முதலாளித்துவத்தை மீட்சி செய்து கொண்டிருக்கிறார் என்ற குற்றச்சாட்டிற்கு எதிராக மண்டேல் கோர்பச்சேவை பாதுகாத்துப் பேசியதற்கு பதிலளிக்க ஏறக்குறைய இப்போது அவசியமின்றி போய்விட்டது. சோவியத் அதிகாரத்துவத்தின் கொள்கைகள், முதலாளித்துவத்தின் மீட்சியை நோக்கித்தான் சமரசமின்றி அழைத்துச் செல்கிறது என்ற “அபத்தமான தத்துவ”த்தை உருவாக்கியவர் லியோன் ட்ரொட்ஸ்கி தான் என்பதை நாம் ஏற்கனவே சுட்டிக் காட்டியிருக்கிறோம். ஆனால் கோர்பசேவுக்கு அதிகாரம் கிட்டியதில் இருந்து, இந்த பகுப்பாய்வு ஒரு பொதுவான வரலாற்றுப் போக்கின் வடிவத்தில் ஒரு தத்துவார்த்த நிரூபணத்தை மட்டும் கண்டு வரவில்லை. தேசியமயமாக்கப்பட்ட சொத்துகளையும் சோவியத் பொருளாதாரத்தின் மத்திய திட்டமிடல் அடித்தளங்களையும் திட்டமிட்டு கொஞ்சம் கொஞ்சமாய் அழித்ததானது சோவியத் ஒன்றியத்தை ஏற்கனவே முழுமையான பொருளாதார உருக்குலைவின் விளிம்பிற்குக் கொண்டு வந்திருக்கிறது. மிக்கைல் கோர்பச்சேவின் நெருங்கிய ஆலோசகர்கள், மில்டன் ஃபிரைட்மன் தத்துவங்களுக்கும் மார்கரெட் தாட்சரின் கொள்கைகளுக்குமான தமது அபிமானத்தை வெளிப்படையாக ஒப்புக் கொள்கின்றனர். புதிய சோவியத் சொத்துச் சட்டங்கள் முதலாளித்துவ பேராசிரியர்களின் மேற்பார்வையின் கீழ் தயாரிக்கப்பட்டிருக்கின்றன; அத்துடன் கோர்பச்சேவ் ஆட்சியால் வடிவமைக்கப்படும் பொருளாதார “அதிர்ச்சி வைத்தியங்கள்” எல்லாம் சர்வதேச நாணய நிதியத்தால் திறனாய்வு செய்யப்பட்டு, திருத்தப்பட்டுக் கொண்டிருக்கின்றன. சோவியத் ஒன்றியம் உலக ஏகாதிபத்தியத்தின் பொருளாதார மற்றும் அரசியல் கட்டமைப்பிற்குள் ஒருங்கிணைவதென்பது மிகவும் முன்னேறிச் சென்று விட்டிருக்கிறது. இவ்வாறாக ஸ்ராலினிசத்தின் அனைத்து எதிர்ப்புரட்சி தாக்கங்களும் கோர்பச்சேவின் பெரெஸ்த்ரோய்காவில் நடைமுறைரீதியாக உணரப்பட்டுக் கொண்டிருக்கின்றன.
இந்த வரிகளை எழுதப்பட்டு காட்டிக் கொடுக்கப்பட்ட புரட்சி இன் புதிய பதிப்பை வெளியிடுவதற்கான இறுதித் தயாரிப்புகள் செய்யப்பட்டு வரும் நேரத்தில், சர்வதேச ஊடகங்கள் மாஸ்கோவின் மிக சமீபத்திய அபிவிருத்திகளில் மும்முரமாய் ஆர்வம் செலுத்தி வருகின்றன. அங்கே மக்கள் பிரதிநிதிகளின் “ஜனநாயக” காங்கிரஸ் கோர்பசேவுக்கு சோவியத் ஒன்றியத்தின் நெருக்கடியைக் கையாளுவதற்கு ஏறக்குறைய வரம்பற்ற அதிகாரத்தைக் வழங்கிக் கொண்டிருக்கிறது. முதலாளித்துவ வர்க்கத்திடம் இருந்து அதன் மிகவும் பெருமைக்குரிய கௌரவங்களில் ஒன்றைப் பெற்றதற்கு பல மாதங்களுக்குப் பின்னர் தான், இந்த நோபல் பரிசு வென்ற மனிதர் கிளர்ச்சி செய்யும் மக்களை நோக்கி கோபத்துடன் முட்டியை உயர்த்திக் காட்டிக் கொண்டிருக்கிறார், அத்துடன் “சட்டம் ஒழுங்கை” மீட்கவும் அச்சுறுத்துகிறார். கிளாஸ்னோஸ்டின் (வெளிப்படைத்தன்மை) ஜனநாயக வேடங்களின் திடீர் நிலைகுலைவு என்பதெல்லாம் ட்ரொட்ஸ்கி கணித்திருந்த இன்னுமொன்றையே நிரூபணம் செய்கிறது: சோவியத் ஒன்றியத்தில் முதலாளித்துவம் அமைதியாகவும் ஜனநாயகரீதியிலும் மீட்சி செய்யப்பட முடியாது, அதேபோல், சோவியத் ஒன்றியத்தில் உண்மையான, அதாவது சோவியத் ஜனநாயகத்தை மீட்சி செய்வதென்பது அதிகாரத்துவ விரோத அரசியல் புரட்சியின் அடிப்படையில் மட்டுமே சாத்தியமாகும். அல்லது, ட்ரொட்ஸ்கி இரத்தினச் சுருக்கமாய் கூறியதைப் போல, “முதலாளித்துவத்தை நோக்கிய பாதையில், எதிர்ப்புரட்சியானது தொழிலாளர்களின் எதிர்ப்பை தகர்க்க வேண்டியிருக்கும்; சோசலிசத்தை நோக்கிய பாதையில், தொழிலாளர்கள், அதிகாரத்துவத்தை தூக்கியெறிய வேண்டியிருக்கும்.”
• • •
நூல்கள் தங்கள் சொந்தத் தலைவிதியைக் கொண்டிருக்கின்றன, காட்டிக் கொடுக்கப்பட்ட புரட்சி இன் தலைவிதி அது தழுவிய கோட்பாடுகள் மற்றும் இலட்சியங்களின் தலைவிதியோடு பிணைந்திருக்கிறது. சோவியத் ஒன்றியத்திற்குள்ளும் ஸ்ராலினிசக் கட்சிகளால் ஆட்சி செய்யப்பட்ட மற்ற நாடுகளிலும், ட்ரொட்ஸ்கியின் மற்ற அனைத்து எழுத்துக்களையும் போலவே, இதுவும் தடைசெய்யப்பட்டிருந்த்து. ஸ்ராலின் காட்டிக் கொடுக்கப்பட்ட புரட்சிக்குப் பதிலாக வாதங்களை முன்வைக்க முயற்சிக்கவில்லை; பதிலாக மெக்சிக்கோவுக்கு ஒரு கொலைகாரரை அனுப்பினார். ஸ்ராலின் இறந்ததற்குப் பின்னர் கூட ட்ரொட்ஸ்கியை நோக்கிய விரோதத்தைக் கைவிடுவதென்பது நடக்கவில்லை. ஸ்ராலினிஸ்டுகளுக்கு ட்ரொட்ஸ்கியை படுகொலை செய்வது மட்டுமே போதுமானதாய் இருக்கவில்லை; அவரது சிந்தனைகளையும் கொல்வதற்கு அவர்கள் முனைந்தனர். பல தலைமுறை சோவியத் மாணவர்களுக்கு ட்ரொட்ஸ்கியின் வாழ்க்கை குறித்த மிக அடிப்படையான உண்மைகளை திட்டமிட்ட வகையில் பொய்த்துக் கூறுகின்ற அவரது அரசியல் கருத்துகளை அவலட்சணமாய்த் திரித்துக் கூறுகின்ற பாடநூல்கள் வழங்கப்பட்டிருந்தன. 1987 நவம்பர் அளவு சமீபத்தில் கூட, புரட்சியின் எழுபதாவது ஆண்டை அனுசரிக்கும் விதமாக ஒரு தொலைக்காட்சி உரையை வழங்கிய மிக்கையில் கோர்பச்சேவ், அதில் 1917ல் ட்ரொட்ஸ்கியின் பாத்திரம் குறித்தும் சோவியத் அரசின் ஆரம்ப வருடங்கள் குறித்தும் வெட்கமின்றி பொய்யுரைப்பதில் இருந்து குறைத்துக் கொள்ளவில்லை. ஒருகாலத்தில் சோவியத் தொழிலாள வர்க்கத்திற்குள்ளும் சோசலிச புத்திஜீவித்தட்டிற்குள்ளும் கோலோச்சிய மார்க்சிச அரசியல் கலாச்சாரத்தின் பாரிய கருத்துக் கட்டமைப்பை ஒட்டுமொத்தமாய் அழிப்பதன் பாகமாக ட்ரொட்ஸ்கியின் எழுத்துகள் மீதான இருட்டடிப்பு அமைந்தது. இப்போது ஸ்ராலினிச ஆட்சி அரசியல்ரீதியாக சிதறிக் கொண்டிருப்பதன் முதல் கட்டங்களில் எதிர்ப்பணி கம்யூனிசவிரோத ஜம்பம் பேசுபவர்களால் ஆதிக்கம் செலுத்தப்பட்டிருக்கிறது என்றால், அதற்கு ஒரே காரணம் அதிகாரத்துவத்திற்கு எதிரான மார்க்சிச போராட்டத்தின் மாபெரும் பாரம்பரியம் இந்த நாள் வரையிலும் சோவியத் மக்கள் பெருமளவில் அறிந்திராததாய் இருப்பது தான் (ஆனால் இந்நிலை இனியும் நீண்டநாள் தொடராது என்பதில் நாங்கள் மிகுந்த நம்பிக்கை கொண்டிருக்கிறோம்). சோவியத் தொழிலாளர்களிடம் இருந்தும் புத்திஜீவிகளிடம் இருந்தும் ஏறக்குறைய ஒவ்வொரு நாளும் நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவின் அலுவலகங்களுக்கு வந்துசேரும் தகவல் பகிர்வுகளை ஸ்ராலினிச இருண்ட காலங்களில் இருந்து மீண்டு சோவியத் வெகுஜனங்கள் அரசியல் மறுமலர்ச்சி பெறுவதன் அறிகுறியாகக் கொள்ளலாம் என்றால், அப்போது சோவியத் புரட்சியின் மறுஎழுச்சியில் காட்டிக் கொடுக்கப்பட்ட புரட்சி ஒரு பிரம்மாண்டமான பாத்திரத்தை ஆற்றவிருக்கிறது என்பதில் எந்த சந்தேகமும் இருக்க முடியாது.
ஆனால் காட்டிக் கொடுக்கப்பட்ட புரட்சியின் தாக்கம் சோவியத் ஒன்றியத்தின் எல்லைகளைக் கடந்து வெகுதூரம் வரை உணரப்படுவதாய் இருக்கும். பல தசாப்தங்களாக அமெரிக்காவில் பொதுக் கருத்தை உற்பத்தி செய்யும் உயர்திறன் படைத்தோர் தொழிலாள வர்க்கத்தையும் புத்திஜீவித் தட்டின் முக்கியமான கூறுகளையும் மார்க்சிசத்தில் இருந்து பிரித்து வைக்க முனைந்தனர், அதில் அவர்கள் வெற்றிகளும் காணாமலில்லை. அவர்களின் வெற்றி நேரடியான அடக்குமுறையைக் காட்டிலும் கிரெம்ளினின் அதிகாரத்துவம் மற்றும் அதன் அரசியல் முகவர்களின் நடவடிக்கைகளின் மீது தான் அதிகமாய் தங்கியிருந்தது. ஸ்ராலினிச குண்டர்களை “மார்க்சிஸ்டுகள்” என்றும் “கம்யூனிஸ்டுகள்” என்றும் முதலாளித்துவ வெகுஜன ஊடகங்களில் எப்போதும் விவரிக்கப்படுகிறதென்றால் அது வெறுமனே தவறான புரிதலால் நேர்ந்ததல்ல. உலக ஏகாதிபத்தியத்திற்கு ஸ்ராலினிசம் வழங்கியிருக்கும் அத்தனை சேவைகளிலும், தொழிலாள வர்க்கத்தின் பரந்த பிரிவுகளின் கண்களின் சோசலிசத்தின் மீதான நம்பிக்கையை இழக்கச் செய்ததை விடவும் முக்கியமான சேவை வேறெதுவும் இல்லை. ஸ்ராலினிஸ்டுகளால் மார்க்சிசம் பொய்மைப்படுத்தப்பட்டதும் மதிப்புக் குறைக்கப்பட்டதும் முதலாளித்துவ நாடுகளில், எல்லாவற்றிற்கும் மேலாய் உலக ஏகாதிபத்தியத்தின் மையங்களில், தோன்றிய புத்திஜீவித்தன மற்றும் அரசியல் வறுமையில் தீர்மானமான பாத்திரத்தை ஆற்றியிருக்கிறது.
ஆனால், உலக முதலாளித்துவ ஒழுங்கின் மோசமடையும் நெருக்கடியும், அத்துடன் சோவியத் ஒன்றியம், கிழக்கு ஐரோப்பா மற்றும் சீனாவிலான அரசியல் உலுக்கல்களின் தாக்கமும் இணைந்து, செவ்வியல் மார்க்சிசத்தின் மீதான ஒரு புதுப்பித்த ஆர்வத்திற்கு தவிர்க்கவியலாமல் இட்டுச் செல்லும். ஸ்ராலினிசம் சோசலிசத்தைக் குறிக்கிறது, மற்றும் முதலாளித்துவம், குறைந்தபட்சம் அதன் பெருநகர மையங்களிலேனும், அமைதி மற்றும் ஜனநாயகத்துடன் இணங்கிப் போகிறது ஆகிய இரண்டாம் உலகப் போருக்குப் பிந்தைய சகாப்தத்தின் இரண்டு மாபெரும் பொய்கள், நிகழ்வுகளின் தாக்கங்களின் கீழ் தகர்க்கப்பட்டுக் கொண்டிருக்கின்றன. வெகுஜன ஊடகங்களால் ஒளிபரப்பப்படுகின்ற நடைமுறைவாத முதலாளித்துவ நாட்டுமருந்துகளும் சரி அல்லது பல்கலைக்கழகங்களின் மூலம் வளர்க்கப்படுகிற உணர்ச்சியற்ற இருப்பியல் விதிவசவாதமும் சரி முதலாளித்துவம் இட்டுச் சென்று கொண்டிருக்கும் ஒரு பேரவல நிலையிலிருந்து வெளிவர ஒரு வழியை காட்டுவதற்கான உழைக்கும் மக்களின் கோரிக்கைகளைப் பூர்த்தி செய்யும் திறனற்றவையாக உள்ளன.
இந்த தொகுதியில் மிக அற்புதமாக வழங்கப்பட்டுள்ள லியோன் ட்ரொட்ஸ்கியினதும் நான்காம் அகிலத்தினதும் கோட்பாடுகள் உலக வரலாற்றின் வருங்காலப் பாதையில் ஆழமான செல்வாக்கினைச் செலுத்தும் தலையெழுத்தைக் கொண்டுள்ளன.
டேவிட் நோர்த்
டெட்ராயிட், மிச்சிகன்
டிசம்பர் 29, 1990
இறுதியாய் அமெரிக்க வலதுசாரியின் ஒரு சித்தாந்தத் தலைவராய் அமெரிக்காவில் அரசியல் புகழ் ஈட்டி அத்துடன் சோவியத் ஒன்றியத்தின் மீது ''ஒரு தலைப்பட்சமான'' அணுஆயுத தாக்குதலுக்கு ஆலோசனை வழங்கிய ஜேம்ஸ் பேர்ன்ஹாம் (1905-1987) 1930 களில் ஒரு சோசலிஸ்டாக இருந்தார். அந்த தசாப்தத்தின் பிந்தைய பாதியில் ட்ரொட்ஸ்கிச இயக்கத்தில் ஒரு தலைமை அங்கத்தவராய் இருந்தார். நியூயோர்க் பல்கலைக்கழகத்தின் மெய்யியல் துறை பேராசிரியராக தர்க்கம் மீதான அவரது கண்ணோட்டங்கள் சிட்னி ஹூக்கின் பாதிப்புகளை பெருமளவில் கொண்டிருந்தன. கொஞ்ச காலத்திற்கு பேர்ன்ஹாம், ட்ரொட்ஸ்கியின் கருத்துகளுக்கான அவரது அரசியல் அனுதாபத்தை இயங்கியல் சடவாதத்தின் அரசியல் செல்தகைமை குறித்த தனது பெருத்த குரோத மனப்பான்மையைக் கொண்டு சமரசம் செய்து கொள்ள முயன்றார். ஆனால் 1940 மே மாதத்தில், சோசலிச தொழிலாளர் கட்சிக்குள்ளாக நடந்த ஒரு விவாதவியல் போராட்டத்திற்குப் பின்னர் பேர்ன்ஹாம் மார்க்சிசத்துடனான தனது முறிவை அறிவித்தார். 1942ல், நிர்வாகநிலைப் புரட்சி (The Managerial Revolution) புத்தகத்தை இவர் வெளியிட்டார். இத்தொகுதி பெரும் புகழ் பெற்றது (இதன் ஆய்வு, ஒரு தசாப்த காலத்திற்கு முன்னதாக புரூனோ ரிசி எழுதிய உலகின் அதிகாரத்துவமயமாக்கம் (The Bureaucratization of the World) என்பதில் இருந்து எடுக்கப்பட்டதாய் இருந்தது என்றாலும்). தீவிர வலதை நோக்கித் துரிதமாய் நகர்ந்த பேர்ன்ஹாம் வெகுவிரைவில் வில்லியம் பக்லியின் நேஷனல் ரிவ்யூவின் ஒரு அரசியல் ஆலோசகராய் மாறினார். பேர்ன்ஹாம் இறப்பதற்குச் சற்று காலத்திற்கு முன்னதாக அவருக்கு ரொனால்ட் ரீகனிடம் இருந்து சுதந்திரப் பதக்கமும் வழங்கப்பட்டது. பேர்ன்ஹாமின் அரசியல் பரிணாமம் 1939-40 விவாத சமயத்தில் அவர் ட்ரொட்ஸ்கியிடம் இருந்து பெற்ற பின்வரும் எச்சரிக்கைக்கு நிரூபண உறுதியானது: “சந்தர்ப்பவாதத்தின் முகாமுக்கும், இன்னும் முதலாளித்துவ பிற்போக்குத்தனத்தின் முகாமுக்கும் கூட ஓடுவது என்பது அநேக சமயங்களில் இயங்கியலை நிராகரிப்பதில் இருந்துதான் தொடங்கியது என்பது தொழிலாளர்களது கட்சிகளுக்குள்ளான போக்குகளின் போராட்டங்களின் வரலாற்றுக்குப் பரிச்சயமுள்ள எவரொருவருக்கும் தெரியும்.”
லுக்செம்பேர்க்கின் விமர்சனரீதியான குறிப்புகளை அவற்றின் முறையான அரசியல் மற்றும் வரலாற்று உள்ளடக்கத்தில் இருந்து பிரித்தெடுத்து அவரை போல்ஷிவிக்குகளுக்கு எதிரானவராய் நிறுத்துவதற்கு எண்ணற்ற முயற்சிகள் நடந்து வந்திருக்கின்றன. அந்த மாபெரும் புரட்சிகரவாதிக்கான நினைவஞ்சலியாக, போல்ஷிவிசத்தின் வரலாற்று முக்கியத்துவம் குறித்த அவரது இறுதித் தீர்ப்பை நினைவு கூர்வதற்கு அனுமதியுங்கள்: “போல்ஷிவிக்கின் கொள்கைகளின் அத்தியாவசியமானவற்றை அத்தியாவசியமானதல்லாதவற்றில் இருந்தும், மைய உட்கருவை தற்செயலான சதைவளர்ச்சிகளில் இருந்தும் பிரித்துப் பார்ப்பதே சாலச் சிறந்ததாகும். தற்போதைய காலகட்டத்தில், உலகம் முழுவதும் தீர்மானமான இறுதிப் போராட்டங்களுக்கு நாம் முகம்கொடுக்கும் போது, சோசலிசம் என்னும் மிக முக்கியமான பிரச்சினை தான் நமது காலத்தின் மிகப் பற்றியெரியும் பிரச்சினையாக இருந்தது, இருக்கிறது. இது, இந்த அல்லது அந்த தந்திரோபாயம் குறித்த இரண்டாம்பட்ச பிரச்சினை விடயம் அல்ல, பாட்டாளி வர்க்கத்திற்கு செயல்படுவதற்குள்ள திறன், நடவடிக்கை எடுப்பதற்கு உள்ள வலிமை, சோசலிசத்தின் சக்திக்கான விருப்பம் இவை போன்ற விடயங்கள் குறித்ததாகும். இந்த விடயத்தில், லெனின், ட்ரொட்ஸ்கி மற்றும் அவர்களது நண்பர்கள்தான் முதலாவதாக, உலகப் பாட்டாளி வர்க்கத்திற்கான ஒரு உதாரணமாக நடந்து சென்றார்கள்; இவர்கள் மட்டும்தான் இன்று வரை “நான் துணிந்து செய்தேன்” என்று உரக்கக் கூறும் தகுதி படைத்தவர்களாய் இருக்கிறார்கள். “இதுதான் போல்ஷிவிக் கொள்கையில் அத்தியாவசியமானதும் நீடித்து நிற்கக் கூடியதும் ஆகும். இந்த அர்த்தத்தில், சர்வதேசப் பாட்டாளி வர்க்கத்தின் தலைமையில் அமர்ந்து அரசியல் அதிகாரத்தைக் கைப்பற்றி சோசலிசத்தை எட்டுவது என்னும் பிரச்சினையை நடைமுறையில் கொண்டு நிறுத்தியதிலும், ஒட்டுமொத்த உலகத்திலும் மூலதனத்திற்கும் உழைப்புசக்திக்கும் இடையிலான கணக்குத் தீர்ப்பை வலிமையுடன் முன்னெடுக்கச் செய்ததிலும் அவர்களது வரலாற்றுச் சேவை மரணமில்லாதது. ரஷ்யாவில் அந்தப் பிரச்சினை முன்வைக்கப்பட மட்டுமே முடிந்திருந்தது. ரஷ்யாவில் அது தீர்க்கப்பட முடியவில்லை. இந்த அர்த்தத்தில், ஒவ்வொரு இடத்திலும் வருங்காலம் ‘போல்ஷிவிசத்திற்கு’ சொந்தமானதாய் இருக்கிறது”. (லுக்செம்பேர்க், ரஷ்யப் புரட்சி, பக்.80)
1917ல் ஒரு பாட்டாளி வர்க்கப் புரட்சியா? அல்லது பிரிட்டன், பிரான்ஸ், அல்லது அமெரிக்காவை மாதிரியாகக் கொண்ட ஒரு தாராளவாத ஜனநாயக ஆட்சியா? என்ற தெரிவை ரஷ்யா எதிர்கொண்டிருந்ததாகக் கூறுவது ஒரு அரசியல் புனைவுக் கற்பனையே. அக்டோபரில் போல்ஷிவிக்குகள் அதிகாரத்தைக் கைப்பற்றத் தவறியிருந்தால், ஆகஸ்டில் ஜெனரல் கோர்னிலோவ் முயற்சி செய்திருந்த ஒரு எதிர்ப்புரட்சியின் வெற்றிகரமான மறுபதிப்பாகத் தான் 1917ன் நிகழ்வுகள் முடிந்திருக்கும். குறைந்தபட்சம் ஒரு குறிப்பிட்ட காலகட்டத்திற்கேனும், தொழிலாளர்’ இயக்கத்தை அடித்து நொருக்கக் கூடிய ஒரு இராணுவ சர்வாதிகாரத்தின் அடிப்படையில் முதலாளித்துவத்தின் உயிர்பிழைப்பு உறுதி செய்யப்பட்டிருக்கும். சோசலிசப் புரட்சி மட்டுமல்ல ஜனநாயகப் போராட்டமும் கருக்கலைந்திருக்கும். உலகப் போரின் முடிவில் ரஷ்யா ஏகாதிபத்திய சக்திகளால் துண்டாடப்பட்டு அவற்றில் தங்கியுள்ள ஒரு அரைக் காலனித்துவ நாடாக தரமிறக்கப்பட்டிருந்திருக்கும். அதன் பொருளாதார, சமூக மற்றும் கலாச்சார அபிவிருத்தியின் மட்டம் இன்று இந்தியா கொண்டிருக்கக் கூடிய மட்டத்திற்கு —இங்கு நூறு மில்லியன்கணக்கான விவசாயிகள் படிப்பறிவில்லாதவர்களாகவும் பட்டினியின் விளிம்பில் உள்ளவர்களாகவும் உள்ளனர்— இருந்திருக்கும். 1917ல் லெனினும் ட்ரொட்ஸ்கியும் “மரியாதைக்குரிய” சமூக ஜனநாயகவாதிகளாக நடந்து கொண்டிருந்து, இடைக்கால அரசாங்கத்துடன் ஒத்துழைத்து வேலை செய்து, கோர்னிலோவின் வெற்றிக்குப் பாதை ஏற்படுத்திக் கொடுத்து, பின் ஒரு பாசிசப் படுதோல்வியில் இறந்து போயிருப்பார்களேயானால், அப்போது இன்றைய தாராளவாத வரலாற்றாசிரியர்கள் சல்வடோர் ஆலண்டே குறித்து எழுதுவதைப் போல இவர்கள் மீதும் அனுதாபத்துடன் எழுதுவார்கள் என்பதில் எந்த சந்தேகமுமில்லை என்பதையும் நாம் கூறியாக வேண்டும்.
கட்சிக்குள்ளாக ட்ரொட்ஸ்கிக்கு எதிராக செலுத்தப்படும் ஆவேசமான தாக்குதல்கள் பெருகுவதன் மீது கொண்ட கவலைதான் லெனினுக்கு உயிருக்கு ஆபத்தைக் கொண்டுவந்த பக்கவாதத்திற்குக் காரணமாக இருக்கலாம் என்பதற்கான ஆதாரத்தை சோவியத் வரலாற்றாசிரியரான ராய் மெட்வடேவ் மேற்கோள் காட்டுகிறார். மெட்வடேவ் எழுதுகிறார், “குருப்ஸ்கயா [லெனினது துணைவியார்] 1924 ஜனவரி 19 மற்றும் 20ம் தேதிகளில், ட்ரொட்ஸ்கியுடனான விவாதத்தின் முடிவுகளை சுருக்கமாக கொண்டு அப்போதுதான் வெளியிடப்பட்டிருந்த பதின்மூன்றாவது கட்சி மாநாட்டின் தீர்மானங்களை லெனினுக்குப் படித்துக் காட்டியதாக எங்களிடம் கூறுகிறார். மிகவும் கடுமையாய் உருவாக்கப்பட்டு நியாயமற்ற முடிவுகளுக்கு வரப்பட்டிருந்த அந்த தீர்மானங்களை செவிமடுத்த லெனின் மீண்டும் தீவிரமாய் கோபமுற்றவரானார். அவருக்கு அமைதி ஏற்படுத்தும் என்ற நம்பிக்கையில், இந்த தீர்மானங்கள் கட்சி மாநாட்டில் ஒருமனதாக ஏற்றுக் கொள்ளப்பட்டன என்று குருப்ஸ்கயா கூறினார். ஆயினும், இது லெனினுக்கு அவ்வளவு அமைதியைக் கொடுக்கவில்லை, அவர் தனது மரணசாசனம் (Testament) குறிப்பில் வெளியிட்டிருந்த படுபயங்கர அச்சங்கள் உண்மையாகத் தொடங்கியிருந்தன. இத்தகைய நிலையில் தான், அடுத்த நாளில், கடும் மன உளைச்சல் அழுத்தத்துடன், லெனின் இறந்தார்.” (ஸ்ராலின் மற்றும் ஸ்ராலினிசம் குறித்து [ஆக்ஸ்போர்ட்: ஆக்ஸ்போர்ட் பல்கலைக்கழகம், 1979], பக். 32).
கோமின்டேர்ன் என்பது, மூன்றாம் அகிலம் அல்லது கம்யூனிச அகிலம் என பொதுவாக அறியப்படும் பெயராகும்.
உதாரணமாக, மாஸ்கோவில் படித்துக் கொண்டிருக்கும்போது ட்ரொட்ஸ்கியின் கருத்துகளுக்கு வென்றெடுக்கப்பட்ட ஒரு இளம் சீன மாணவர், 1929ல் தன் மீது ஆட்சி சுமத்திய அவதூறுகளை மறுப்பதற்கு சோவியத் தொழிலாளர்களுக்கு ட்ரொட்ஸ்கி எழுதிய பகிரங்கக் கடிதம் குறித்து இவ்வாறு விவரித்தார்: “அவரது பகிரங்கக் கடிதம் வெகுஜனங்களிடையே பரவலாய் விநியோகிக்கப்பட்டது. அற்புதமாக உணர்ச்சி ததும்ப எழுதப்பட்டிருந்த அது, பரிவுடன் வரவேற்கப்பட்டது. அதனை நான் சீன மொழியில் மொழிபெயர்த்தேன். மொழிபெயர்ப்பில் அதன் மூலமொழியின் வெம்மையும் அழகும் நிறையக் குறைந்திருந்தாலும் கூட அப்போதும் அது பெரும் ஈர்ப்பைக் கொண்டிருந்ததோடு எங்களது சீனத் தோழர்களை நெகிழச் செய்தது. இவர்களில் சிலர் அதனைப் படிக்கையில் அழத் தொடங்கி விட்டனர்”. (வாங் பான்-ஸீ, சீனப் புரட்சி (ஆக்ஸ்போர்ட்: ஆக்ஸ்போர்ட் பல்கலைக்கழக அச்சகம், 1980], பக். 93).
இந்த நேர்காணல் குறித்து கருத்து தெரிவிக்கையில் ட்ரொட்ஸ்கி, ஸ்ராலின் சர்வதேசத் தொழிலாள வர்க்கத்தின் கூடுதல் நனவான பிரிவுகளிடையே தனது வார்த்தைகளின் தாக்கத்தை கணக்கிலெடுக்காமல், முழுக்க வெளிப்படையாய் பேச முடிந்திருக்குமானால் அவர் பின்வருமாறு கூறியிருக்கக் கூடும் என்றே, தான் கருதுவதாய் தெரிவித்தார்: “லெனினின் பார்வையில் தேசங்களின் சங்கம் என்பது உழைக்கும் மக்களை குருதிகொட்ட ஒடுக்குவதற்கான ஒரு அமைப்பாக இருந்தது. ஆனால் அதில் நாங்கள் அமைதிக்கான ஒரு சாதனத்தைக் காண்கிறோம். லெனின் புரட்சிகரப் போர்களின் தவிர்க்கவியலாத் தன்மை குறித்து பேசினார். ஆனால் நாங்கள் புரட்சியை விஸ்தரிப்பு செய்வதை அபத்தமெனக் கருதுகிறோம். லெனின், பாட்டாளி வர்க்கத்திற்கும் தேசிய முதலாளித்துவத்திற்கும் இடையிலான கூட்டணியை ஒரு காட்டிக்கொடுப்பு என்று முத்திரை குத்தினார். ஆனால் நாங்கள் பிரெஞ்சுப் பாட்டாளி வர்க்கத்தை இந்தப் பாதையில் செலுத்துவதற்குத்தான் எங்கள் சக்திக்குட்பட்ட அனைத்தையும் செய்து கொண்டிருக்கிறோம். முதலாளித்துவத்தின் கீழ் ஆயுதக்குறைப்பு என்ற சுலோகத்தை உழைக்கும் மக்கள் மீதான ஈனத்தனமான சூழ்ச்சி என்று கண்டித்தார் லெனின். ஆனால் அந்த சுலோகத்தின் மீதுதான் எங்களது ஒட்டுமொத்தக் கொள்கையையுமே நாங்கள் கட்டியிருக்கிறோம். நீங்கள் போல்ஷிவிசத்தின் தொடர்ச்சியாளர்களாய் கருதுகிறீர்கள், ஆனால் நாங்களோ அதற்கு சவக்குழிதோண்டுவோர் என்ற உண்மையில் தான் உங்களது நகைச்சுவையான தவறான புரிதல் அடங்கியிருக்கிறது (இப்படித்தான் ஸ்ராலின் முடித்திருக்கக் கூடும்)” (லியோன் ட்ரொட்ஸ்கி, லியோன் ட்ரொட்ஸ்கியின் படைப்புக்கள் [1935-36] [நியூயோர்க்: பாத்ஃபைண்டர் பிரஸ், 1970] பக். 277).
ட்ரொட்ஸ்கி வீட்டுக் காவலில் வைக்கப்பட்டு அவர் மீது குற்றம்சாட்டியவர்களுக்குப் பதில் கூற முடியாத நிலையில் விடப்பட்டிருந்த சமயத்தில், மாஸ்கோ விசாரணைகளை அம்பலப்படுத்தும் பொறுப்பு அவரது மகனான லியோன் சடோவ் மீது விழுந்தது. ஒரு சில வாரங்களிலேயே, மாஸ்கோ விசாரணைகள் குறித்த சிவப்புப் புத்தகத்தை (Red Book) அவர் வெற்றிகரமாய் வெளியிட்டார். அப்புத்தகம் அக்குற்றச்சாட்டுகளை நார் நாராய் கிழித்தது. பின், ஸ்ராலினிச படுகொலைகாரர்களின் கரங்களில் சிக்கி 1938 பிப்ரவரியில் சடோவ் உயிரிழந்ததற்குப் பின்னர், பின்னொரு நாளில் அப்புத்தகத்தின் பிரதியை தான் வாசித்தபோது கிட்டிய மகிழ்ச்சியை நினைவுகூர்ந்த ட்ரொட்ஸ்கி கூறினார்: “இந்த சூழ்நிலைகளில் கிரெம்ளின் பொய்யுரையாளர்களுக்கு கடுமையான முதல் பதிலடியாக அமைந்த லியோனின் புத்தகம் நமக்கு எத்தனை விலைமதிப்பற்ற புத்தகமாய் அமைந்திருக்கிறது. முதல் சில பக்கங்கள் வெளிறித் தோன்றியதாகவே எனக்கு ஞாபகம். சோவியத் ஒன்றியத்தின் பொதுவான நிலைமை குறித்து ஏற்கனவே செய்யப்பட்டிருந்த ஒரு அரசியல்ரீதியான மதிப்பீட்டை மீண்டும் அப்பக்கங்கள் வாசித்ததே அதன் காரணம். ஆனால் அந்த விசாரணைகள் குறித்த ஒரு சுயாதீனமான பகுப்பாய்வை அந்த ஆசிரியர் கையிலெடுக்கும் அந்தத் தருணத்தில் இருந்து நான் முழுவதுமாய் ஆட்கொள்ளப்பட்டு விட்டேன். அடுத்தடுத்த ஒவ்வொரு அத்தியாயமும் முந்தையதைக் காட்டிலும் சிறந்ததாய் எனக்குத் தோன்றியது. ‘பேர் சொல்லும் பிள்ளை, லெவுசியாட்கா!’ என்று நானும் எனது மனைவியும் கூறினோம். “எங்களைப் பாதுகாக்க ஒருவர் உண்டு?” (லியோன் ட்ரொட்ஸ்கி, லியோன் சடோவ்: மகன், நண்பன், போராளி [நியூயோர்க்: லேபர் பப்ளிகேஷன்ஸ், 1977], பக். 21-22).
டுவி கமிஷன் லியோன் ட்ரொட்ஸ்கியை விசாரிக்க கோயோயகானுக்குச் சென்றது. அவர் தனது அனைத்து ஆவணங்களையும் பரிசோதிக்க அனுமதித்தோடு ஒரு வார காலத்திற்கும் அதிகமாய் நீண்டதொரு சோதனைக்கும் உடன்பட்டார். 1937 டிசம்பரில் டுவி கமிஷன் தனது அறிக்கையை வெளியிட்டது. ட்ரொட்ஸ்கி குற்றமற்றவர் என்று அது கண்டதோடு மாஸ்கோ விசாரணைகள் போலியாக இட்டுக் கட்டப்பட்டவை என்று கண்டனம் செய்தது.
ட்ரொட்ஸ்கி எழுதினார்: “இப்போது சோவியத்-ஜேர்மன் ஒப்பந்தமானது சோவியத் அரசு குறித்த நமது மதிப்பீட்டை மாற்றுகின்றதென நிரூபணம் செய்ய தலைப்படுவோர், அடிப்படையில், கோமின்டேர்னின் நிலையில் இருந்து, இன்னும் சரியாகச் சொன்னால் கோமின்டேர்னின் நேற்றைய நிலையில் இருந்து, தங்கள் நிலைப்பாட்டை எடுக்கின்றனர். இந்த தர்க்கத்தின் படி, தொழிலாளர்’ அரசின் வரலாற்று இலட்சியமே ஏகாதிபத்திய ஜனநாயகத்திற்கான போராட்டம் என்றாகும். பாசிசத்திற்கு சாதகமாக ஜனநாயகங்களைக் ‘காட்டிக் கொடுப்பது’ சோவியத் ஒன்றியத்திற்கு தொழிலாளர் அரசாக கருதப்படும் நிலையை அகற்றி விடுகிறது. உண்மையில் பார்த்தால், ஹிட்லருடன் ஒப்பந்தம் கையெழுத்தாகியிருப்பது சோவியத் அதிகாரத்துவத்தின் சீரழிவின் அளவையும், கோமின்டேர்ன் உட்பட சர்வதேச தொழிலாள வர்க்கத்திற்கு அது காட்டும் அலட்சியத்தின் அளவையும் அளப்பதற்கு ஒரு கூடுதல் மதிப்பீட்டை மட்டுமே வழங்குகிறது, மாறாக சோவியத் ஒன்றியம் குறித்த சமூகவியல் மதிப்பீட்டை மறுமதிப்பீடு செய்வதற்கான எந்தவொரு அடிப்படையையும் அது வழங்கவில்லை”. (லியோன் ட்ரொட்ஸ்கி, மார்க்சிசத்தைப் பாதுகாத்து [இலண்டன்: நியூ பார்க், 1975], பக். 3-4).
போர் இன்னும் வளர்ச்சியுற்றது, ட்ரொட்ஸ்கியின் நிலைப்பாட்டை நிரூபணம் செய்தது. ஸ்ராலின்-ஹிட்லர் ஒப்பந்தம் திடீரென நிலைகுலைந்ததும் 1941 ஜூனில் நாஜி படையெடுப்பும் சோவியத் ஒன்றியத்தின் இருப்பையே கேள்விக்குறியாக்கியது. நான்காம் அகிலம் தயாரிப்பில்லாமல் இருந்து மாட்டிக் கொள்ளவில்லை. ஸ்ராலினிச அதிகாரத்துவத்தை நோக்கிய சமரசமற்ற விரோதத்தில் இருந்து பின்வாங்காமல் அல்லது திருத்திக் கொள்ளாமல், உலக ஏகாதிபத்தியத்தின் பாசிச முனைக்கு எதிராக சோவியத் ஒன்றியத்தை நிபந்தனையின்றிப் பாதுகாக்க தொழிலாள வர்க்கத்திற்கு அது அழைப்பு விடுத்தது.
தங்களது கண்ணோட்டங்களை மார்க்சிச-விரோதமானவை என்று ட்ரொட்ஸ்கி கூறியதற்கு சிறுபான்மைக் குழுவின் தலைவர்கள் ஆவேசத்துடன் எதிர்ப்புத் தெரிவித்தனர். பேர்ன்ஹாம் ட்ரொட்ஸ்கியுடனான தனது பெரும் கடுமையான விவாதத்தில், தான் இயங்கியல் சடவாதத்தின் மெய்யியல் அங்கீகாரத்தை மறுத்த போதிலும் மார்க்சிச அரசியல் கட்சியில் உறுதி படைத்த நபராகவே தொடர்வதாக வலியுறுத்தினார். ஆயினும், 1940 மே மாதத்தில், SWPயில் இருந்து அவர் முறித்துக் கொண்டு ஆறு வாரங்கள் கூட ஆகியிராத நிலையில், பேர்ன்ஹாம் வெளியிட்ட ஒரு அறிக்கையில் அவர் மார்க்சிசத்தையும் சோசலிசத்தையும் நிராகரித்ததை அறிவித்தார். அதேபோல வலதை நோக்கிய சாக்ட்மனின் அரசியல் பரிணாம வளர்ச்சியும் சற்று நெடியதொரு நிகழ்ச்சிப்போக்காக இருந்தது, ஆயினும் அவர் தனது வாழ்நாளின் இறுதி நாட்களில் ஜனநாயகக் கட்சியின் ஆதரவாளராகவும் வியட்நாமில் அமெரிக்க ஆக்கிரமிப்புக்கு ஆதரவளித்தவராகவும் இருந்தார்.
1934ல், சோவியத் ஒன்றியத்திற்கும் ஜேர்மனிக்கும் இடையே போர் வெடிப்பதற்கு ஏழு வருடங்களுக்கு முன்பாக, ட்ரொட்ஸ்கி போரின் சாத்தியவளங்கள் குறித்தும் சோவியத் இராணுவ வலிமை குறித்துமான தனது இந்த மதிப்பீட்டை வழங்கினார்: “செம்படையின் வலிமையை மதிப்பீடு செய்ய, விடயங்களை உள்ளபடியே புனிதப் போற்றுதலுக்கு உள்ளாக்க கொஞ்சமும் அவசியமில்லை. குறைந்தபட்சமாய் கூற வேண்டுமாயின் சோவியத் ஒன்றிய மக்களின் வளமையைப் பற்றிப் பேசுமளவுக்கு இன்னும் காலம் வந்து விடவில்லை. இன்னும் ஏராளமான ஆசை, துன்பம் மற்றும் அநீதி மற்றும் அதனால் அதிருப்தி இருந்து கொண்டுதான் இருக்கின்றன. ஆனால் சோவியத் தேசிய வெகுஜனங்கள் மிகாடோ அல்லது ஹிட்லரின் இராணுவங்களிடம் இருந்தான உதவிக்காக காத்திருக்கவே முனைகின்றனர் என்பதான கருத்து பிதற்றல் என்றுதான் சொல்ல முடியும். இடைமருவல் ஆட்சியின் சிக்கல்கள் எல்லாம் இருந்தாலும், மக்களுக்கும் சோவியத் ஒன்றியத்திற்கும் இடையிலான அரசியல் மற்றும் தார்மீகப் பிணைப்புகள் போதுமான அளவு வலிமையுடனேயே உள்ளன; எந்த வகையிலும் அவை சோவியத் ஒன்றியத்தின் சாத்தியமான எதிரிகளிடம் இருப்பதை விட கூடுதல் வலிமையுடன் தான் இருக்கின்றன. மேலே கூறியதை வைத்து ஒரு போர், அது ஒரு வெற்றிகரமானதாய் இருந்தாலும், சோவியத் ஒன்றியத்தின் நலன்களின் பேரிலானதாகவே இருக்கும் என அர்த்தமல்ல. மாறாக, அப்போர் சோவியத் ஒன்றியத்தை மிகப் பின்னால் தூக்கியெறியும். ஆனால் அமைதியைப் பாதுகாப்பது என்பது, குறைந்தபட்சம், இரண்டு தரப்புகளைச் சார்ந்திருக்கிறது. உண்மைகள் உள்ளபடியே எடுக்கப்பட வேண்டும்: போர் விலக்கப்பட்டிருக்கவில்லை என்பது மட்டுமல்ல அது ஏறக்குறைய தவிர்க்கமுடியாததாகவும் இருக்கிறது. 1905 முதலாய் ஏறக்குறைய 30 ஆண்டுகளுக்கு தொடர்ந்து மேலெழவும் கீழ்வரவுமாய் இருக்கின்ற ரஷ்யப் புரட்சியானது தனது வேகத்தைப் போர்ப் பாதையில் செலுத்த நிர்ப்பந்திக்கப்படுமேயானால் அது ஒரு பயங்கர மூழ்கடிக்கும் சக்தியைக் கட்டவிழ்த்து விடும் என்பதை வரலாற்றுப் புத்தகங்களை வாசிக்கும் திறமும் ஆர்வமும் கொண்ட ஒருவர் முன்கூட்டிப் புரிந்து கொள்ள முடியும்.” (லியோன் ட்ரொட்ஸ்கி, லியோன் ட்ரொட்ஸ்கியின் படைப்புக்கள் [1933-34] [நியூயோர்க்: பாத்ஃபைண்டர் பிரஸ், 1972], பக். 258-59).
1938 மாநாட்டில் நான்காம் அகிலத்தின் ஸ்தாபகத்திற்கு எதிராக போலந்தின் இரண்டு பிரதிநிதிகளால் முன்னெடுக்கப்பட்ட வாதங்களை தயாரித்துக் கொடுத்திருந்தது தானேதான் என்பதை ட்ரொட்ஸ்கி குறித்த தனது பிந்தைய வாழ்க்கை வரலாற்றின் நிறைவுத் தொகுதியில் டொய்ச்சர் ஒப்புக் கொண்டார். [See The Prophet Outcast, Vintage, p. 421.]
கிழக்கு ஐரோப்பாவின் நிகழ்வுகள் பல்தரப்பட்ட “புதிய வர்க்கம்” மற்றும் “அரசு முதலாளித்துவம்” குறித்த தத்துவங்களை நசுக்கியெறிவதற்கு சளைக்காத மறுப்பாக அமைந்திருக்கின்றன என்பதையும் நாம் கூறியாக வேண்டும். ஸ்ராலினிச ஆட்சிகளின் உருக்குலைவால் வெளிப்படையாய் ஒன்று தெளிவாகி இருக்கிறது என்றால், அது, அவை அரசு-செலுத்தும் முதலாளித்துவத்தின் ஒரு சிறப்பான வடிவத்தையும் குறித்திருக்கவில்லை அல்லது அதிகாரத்துவத்தால் செதுக்கப்பட்ட சொத்துக்களது வரலாற்றுரீதியாய் தனித்துவமான வடிவங்களின் அடிப்படையிலமைந்த ஒரு புதிய சுரண்டல் சமூக வடிவத்தையும் குறித்திருக்கவில்லை என்பதுதான். பல்வேறு “அரசு முதலாளித்துவ” தத்துவங்களின் அடிப்படையில் இப்போது கிழக்கு ஐரோப்பாவில் மேற்கொள்ளப்பட்டு வரும் சொத்து உறவுகளிலான மாற்றங்களை விளக்குவது சாத்தியமில்லாதது. கிழக்கு ஜேர்மன் அரசு கலைக்கப்பட்டதன் பின்னர், அதன் பொருளாதாரக் கட்டமைப்பு எளிதாய் மேற்கு ஜேர்மனியுடையதனோடு இணைக்கப்படவோ ஒருங்கிணைக்கப்படவோ முடியாது. அரசு சொத்துகளை முறைப்படி அழிப்பதன் அடிப்படையில் முதலாளித்துவம் மறுஅறிமுகம் செய்யப்பட்டுக் கொண்டிருக்கிறது. அதிகாரத்துவத்தின் ஆட்சி என்பது ஒரு புதிய ஆளும் வர்க்கமாக அதன் சொந்த சுயாதீனமான வரலாற்று இலட்சியத்தை பிரதிநிதித்துவப்படுத்திய சொத்து வடிவங்களில் வேர் கொண்டிருக்கவில்லை என்பதும் தெளிவாகிறது. அவற்றுக்கு சோவியத் அதிகாரத்துவத்தின் ஆயுதப் படைகளின் ஆதரவு இல்லாமல் போகும் போது, கிழக்கு ஐரோப்பிய ஆட்சிகளுக்கு தங்களது ஆட்சியைக் காப்பாற்றிக் கொள்வதற்கான அத்தனை சுயாதீனமான வழிகளும் இல்லாது போய் விடுகிறது. மேலும், பழைய தேசியமயமாக்கப்பட்ட சொத்து உறவுகளுடன் அதிகாரத்துவம் கொண்டிருந்த சந்தர்ப்பவாத, ஒட்டுண்ணித்தனமான, அத்துடன் ஒரு பெருமளவுக்கு,விரோதப்பட்ட உறவுமுறையானது அதிகாரத்துவ உயரடுக்கின் பெரும் பிரிவுகள் எத்தனை வேகமாய் முதலாளித்துவ சந்தையை தழுவிக் கொண்டிருக்கின்றன என்பதன் மூலம் விளங்கப்படுத்தப்பட்டிருக்கிறது. வரலாற்றில், எந்தவொரு ஆளும் வர்க்கமும் தனது சொந்த இருப்புக்கு, தான் சார்ந்திருந்த சொத்து வடிவங்களையும் சமூக உறவுகளையும் அழிப்பதை, இத்தனை சுறுசுறுப்புடன் ஒப்புக் கொண்டதில்லை.